எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருந்த குட்டி பேரனுக்கு ப்ளீஸ் ..... தாங்க என்று கேட்க சொல்லி கொடுத்திருந்தேன். அவரும் ஆசையாக பப்பப் (பாட்டி தான் ...) பீஷ் தான்னோ என்று ஆசையாக கேட்டது என் பாஸ்பபோர்ட்.
மீண்டும் சென்னை நோக்கி பயணம். Newyork - Brussels -Chennai
1.5 வயதான குட்டி பேரனின் சுட்டித்தனங்கள், Foster city என்ற சிறிய ஊரில் இலவச பேருந்தில் ஏறி நூலகம் சென்று கதை நேரங்களில் கலந்து கொண்டது (என் சிறுவயதில் நம் நாட்டு பேருந்துகளில் ஒரு கயிறு இருக்கைக்கு அருகே இருக்கும் அதை இழுத்தால் மணி அடிக்கும் அதே போல அங்கேயும் ...மணி அடித்து Next stop please என்றால் பேருந்து நிற்கும்), வசந்த கால முடிவும் இலையுதிர் கால ஆரம்பமுமான அந்த சமயத்தில் பச்சை பசேலென்ற
ஊரை நடந்தே சுற்றி பார்த்தது, மருமகனின் 7 அடுக்கு அலுவலகத்தின் மேல் தளத்திலிருந்து சான் பிரான்ஸிஸ்கோ நகரின் downtown எனப்படும் நகரின் மையப்பகுதி மற்றும் Golden gate bridge ஐ இரவு நேரத்தில் பார்த்தது, பகல் நேரத்தில் Golden gate bridge ஐ படகில் சென்று பார்த்தது
என பல பசுமையான நினைவுகளுடன் நியூயார்க் விமானத்தில் ஏறினோம் .
நியூயார்க் வரை விமானத்தில் உணவு கிடையாது. வாட(ர்) வாட(ர்) மட்டுமே உணவை நாம் கையில் எடுத்து கொண்டு வர வேண்டும். நாங்கள் மிளகாய் பொடியில் தோய்த்தெடுத்த இட்டிலிகளைக் கொண்டு வந்தோம். எனக்கு பிடிக்காத உணவு. அதை உப்புமாவாக செய்து கொள்கிறேன் என்ற போது மகள் கூறினார், "அம்மா ...security யில் இது என்ன என்று கேட்டால் rice cake என்று சொல்லலாம். இட்லி உப்புமா என்பதற்கு செய்முறை விளக்கம் சொல்ல வேண்டும். தேவையா இது போல பிரச்சினைகள்?"
நியூயார்க் வரும் வரை ஜன்னல் வழியே கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே வந்தேன். உள்நாட்டு விமானங்கள் 20,000 அடி உயரத்தில் பறப்பதால் நிலப்பரப்பை காண முடியும்.
[வெளிநாட்டு விமானங்கள் 30,000 அடியில் பறக்கின்றன. Traffic Jam அங்கேயும் உண்டு. விமானங்களுக்கென பாதைகளும் உண்டு. அதை பின்பற்றியே அனைத்து விமானங்களும் செல்கின்றன. Live Flight Tracker app களில் பார்த்தால் விமானங்களின் நிலை தெரியும். பொதுவாக யாராவது பயணம் செய்யும் சமயம் விமானம் எந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிமிடம் உலகெங்கிலும் எவ்வளவு விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன என்ற Live Satellite படத்தை Birla Planetarium, Chennai யில் காணலாம்.]
7 ஆம் வகுப்பில் படித்த பூகோளப் பாடம் உண்மை என்று உணரும் வகையில் இருந்தது நிலப்பரப்பு. முதலில் கலிபோர்னியா மாகாணத்தின் Bay, ஆங்காங்கே சாலைகளில் தென்பட்ட பச்சை சிவப்பு சிக்னல் விளக்குகள் வாகனங்கள், அரிசோனா மாகாணத்தின் செங்கல் நிறத்தில் காணப்பட்ட பாலைவனம் மற்றும் ராக்கி
மலைத்தொடர்கள், பிறகு Prairies (புல்வெளிகள்), [ உலகின் புல்வெளிகள் வெவ்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. Steppes - ஆசியா, Prairies - வட அமெரிக்கா, Pampas - தென் அமெரிக்கா, Savannas - ஆப்பிரிக்கா, Downs, Rangelands - ஆஸ்திரேலியா - உபயம் நான் ஏழாம் வகுப்பில் படித்த பூகோளப் பாடம்], அதை அடுத்து பல நூறு மைல்களுக்கு தொடர்ந்து ஓடிய ஆறு, Great Lakes எனப்படும் நன்னீர் ஏரிகளை தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்த நியூயார்க் நகரம், அதன் புகழ்பெற்ற புரூக்ளின் பாலம் என என்னுடைய நிகான் டிஜிட்டல் கேமராவில் படமெடுத்து கொண்டே வந்தேன்.
நியூயார்க் நகரிலிருந்து மீண்டும் Jet Airways. Immigration counter ல் எங்கள் விசா காகிதத்தை (அந்நாட்களில் ஒரு துண்டு காகிதத்தில் அங்கு தங்கும் தேதிகளை முத்திரையிட்டு பாஸ்ப்போர்ட்டுக்குள் வைத்து தருவார்கள்) வாங்கிக்
கொண்டு கிளப்ப சொன்னார்கள்.
காத்திருந்த நேரத்தில் ...என் கணவரிடம் ... starbucks இங்கே இருக்கிறது ...அவரது பதில் ...வரிசையில் நின்று வாங்கி வருகிறேன் ஆனால் அதை யார் குடிப்பது??
விமான நிலையங்களில் பொது தொலைபேசியிலிருந்து call card எனப்படும் digital card உபயோகித்தே வெளிநாடுகளுக்கு பேச பேசமுடியும். ஆனால் அமெரிக்காவின் எந்த மாகாணத்திற்கும் Quarter எனப்படும் 25 cent நாணயங்கள் நான்கினை
போட்டு விட்டு +1 என்ற எண்ணை முதலில் அழுத்தி விட்டு பேசவேண்டிய எண்ணை அழுத்தினால் தொடர்பு கிடைக்கும். 4 quarter நாணயங்களை தான் போட வேண்டும் ஒரு டாலர் நாணயம் வேலை செய்யாது. [2010ல் எங்களிடம் இருந்த Nokia 1010 விலிருந்து வெளிநாடுகளுக்கு பேசும் வசதி இல்லை.]
[பின்னாளில் மகனின் நண்பர்கள் யார் வடஅமெரிக்கா சென்றாலும் சீர் வரிசையாக quarter நாணயங்களை கொடுத்து விடுவது வழக்கம். மகனின் நண்பர்களிடம்.நான் quarter கொடுத்தேன் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் என்று விளையாட்டாக கூறுவேன்.]
ப்ரஸ்ஸஸ் விமான நிலையத்தில் Call card வாங்கி கொண்டு இந்தியாவிற்கு தொடர்பு கொள்ள முயன்றோம். 4/5 பேர் தொலைபேசியை எடுத்து பேசவே இல்லை. எங்கள் வீட்டின் முதல் கைபேசி என் சகோதரரால் வாங்கப்பட்ட இன்றளவும் நினைவில் உள்ள எண்ணை அழைத்து பேசினோம்.
அமெரிக்கா - சென்னை பயணித்த தமிழக பயணிகளோடு கலந்துரையாடும் அனுபவமும் ப்ரஸ்ஸஸ் விமான நிலையத்தில்
கிடைத்தது. அங்கே எல்லா காய்கறிகளும் பெரிய அளவில் இருக்கிறது. (கத்திரிக்காய் என்னங்க இவ்வளவு பெருசா இருக்கு?) ,மருத்துவ செலவு மிக அதிகம். மகன் இந்தியாவில் போய் வைத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார், தனியாக எங்கும் செல்ல முடிவதில்லை இப்படி பல தகவல்களை அறிய நேர்ந்தது.
அதற்குள் விமானத்தில் ஏற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
சென்னை விமானத்தில் 80% தமிழர்கள். திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிப்பது போன்ற உணர்வு. எங்கெங்கும் தமிழ் குரல்கள். (வணக்கம். ஜெட் ஏர்வேஸ் ...)
நள்ளிரவு 12.30 மணியளவில் தரையிறங்கி 2 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.
[மேற்கு நோக்கி பயணிக்கும் போது கிளம்பிய தேதியிலேயே சென்று சேர்வோம். (6 ஆம் தேதி திங்களன்று கிளம்பினால் அமெரிக்காவின் 6 ஆம் தேதி திங்களன்று சென்று சேர்ந்து விடுவோம்) ஒரு நாள் அதிகம் கிடைக்கும். திரும்பி வரும்போது ஒரு நாளை இழப்போம். 6 ஆம் தேதி திங்களன்று கிளம்பினால் 8 ஆம் தேதி புதனன்று இங்கே வந்து சேர்வோம்.
அதே போல பூமியின் சுழற்சி அச்சின் காரணமாக போகும் போது பயண நேரம் 15 மணி நேரங்கள் என்றால் வரும் போது 16 மணி நேரங்களாக இருக்கும்.]
என் சகோதரனுடன் வரவேற்க வந்திருந்த எங்கள் மகன் பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு விடிந்ததும் அவர்கள் வீட்டிலிருந்து என் பெட்டியை எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி சென்று விட்டார்,
Jet lag ஆரம்பம். பசி, தாகம். வீட்டில் குடிநீர் இல்லை சாப்பிட எதுவும் இல்லை .விடியும் வரை காத்திருந்து அண்டை வீட்டாரிடம் தண்ணீர் வாங்கி அருந்தினோம் .
நீ ஏன் எதுவும் வைக்கவில்லை என்ற என் கேள்விக்கு மகனின் பதில், "நீங்கள் விமானத்திலேயே சாப்பிட்டு விட்டு வந்துவிடுவீர்கள் என்று நினைத்தோம்." (இதில் கூட்டு யார் என்று நான் சொல்லாமலே புரிந்திருக்குமே?)
முதல் வெளிநாட்டுப் பயணம் இவ்வாறாக இனிதே நிறைவுற்றது.
பின் குறிப்பு:
சான்பிரான்சிஸ்கோ நகரில் விமானம் ஏறும் சமயம் என் சகோதரி தொலைபேசி, எங்கள் பெரியப்பாவின் உடல்நிலை கவலைக்கிடம் என்று கூறியிருந்தார்.
மருத்துவமனையில் விசிட்டர் நேரம் 4-5 pm. தினமும் அந்த நேரத்தில் தூங்கி விடுவேன் [என்னையும்
அறியாமல் தான், jet lag]. ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு ஞாயிறன்று அவரை காண சென்றோம். ...
என்னை கண்டதும் அவரது கேள்வி...
வா வா. அமெரிக்காவில் விமானத்தை தவற விட்டுட்டியாமே?
No comments:
Post a Comment