Sunday, 28 February 2021

இரண்டாவது வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 1]

 

October 16, 2012

சென்னை - ஹாங்காங் - சான்பிரான்சிஸ்கோ

[Cathay pacific airlines]

இரண்டாவது அமெரிக்க பயணமும் தனியாக செல்லும் வண்ணம் அமைந்தது.

முதல் பயணத்தில் ஏற்பட்ட தவறுகள் ஏற்படாமல் மிகுந்த முன்னேற்பாடுகளுடன் மிக விரைவில் (24 மணி நேரங்களில்)  சென்னை - ஹாங்காங் - சான்பிரான்சிஸ்கோ மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது . பயண நோக்கம் மகளின் இரண்டாவது பிரசவம்.

[நியூயார்க் நகரில் தொடர்பு விமானத்தை அக்கா தவற விட்டபோது , அங்கே நம் உறவினர் இருந்தார் . ஹாங்காங் நகரில் ஜாக்கி சானை  தவிர வேறு யாரையும் தெரியாதே ...அவரும் தற்சமயம் எந்த ஊரில் இருக்கிறாரோ _ என் சகோதரர்]

நீண்ட நாட்கள் அங்கிருக்கும் நோக்கத்தில் சென்றதால் அலுவலகத்திலும் வீட்டிலும் வேலைப்பளு மிக அதிகமாக இருந்த சமயம். முதல் நாள் வரை அலுவலகம் செல்ல நேர்ந்தது. கணவர் இரண்டு மாதங்கள் முன்பே கிளம்பி சென்று விட, மகன் மறுநாள் பெங்களூர் கிளம்பும் எண்ணத்தில் இருக்க ...இரவு 11 மணிக்கு விமான நிலையம் கிளம்பும் வரையில் வேலைகள். மூச்சு விட நேரமில்லை.

பிரசவத்திற்கு செல்வதால் வத்தல், லேகியம், நாட்டு மருந்துகள் , பொடி வகைகள் (அமெரிக்க சட்டத்திற்கு உட்பட்ட பொருட்கள் மட்டும்) என சேகரித்துக் கொண்டு, முதல் நாள் அவசரமாக கடைக்கு சென்று அளவு கூட பார்க்காமல் உடைகளை வாங்கி கொண்டு , பெட்டிகளை அடுக்கி எடை பார்த்து ...வீட்டை ஒழுங்கு படுத்தி .....

விமானத்தில் ஏறி அமர்ந்தால் தூங்கலாமே என்ற எண்ணம் வருமளவுக்கு நெருக்கடி. இதற்கிடையில் வீட்டிற்குள் ஒரு சுண்டெலி புகுந்து விட்டது. வெளியில் சென்று விட்டது என்றெண்ணி கொண்டு ஊருக்கு கிளம்பி விட்டேன்.

மறுநாள் என் மகன் அண்டை வீட்டாரின் உதவியுடன் அந்த சுண்டெலியை மிகுந்த சிரமப்பட்டு விரட்டியதாக அண்டை வீட்டார் நான் 6 மாதங்கள் கழித்து வந்த பிறகு கூறினார்கள். இன்றளவும் சுண்டெலிக்கான நடவடிக்கை எடுக்காமல் கிளம்பி சென்றது குறித்து வருந்துகிறேன். மன்னித்துக் கொள் மகனே!

வழியனுப்ப வந்த மகன், அமெரிக்காவிலிருக்கும் மகள், என் கணவர், நான்  விமானம் ஏறிய அதே நேரத்தில் உள்நாட்டு விமான நிலையத்தில் வேறு ஊருக்கு செல்ல காத்திருந்த அலுவலக நண்பர் என யாரும் "ஊருக்கு சென்று வருகிறேன்" என்ற SMS ற்கு பதிலே போடவில்லை. மிகுந்த சோகத்துடன் விமானத்தில் ஏறினேன். நள்ளிரவில் பதில் அனுப்பவில்லை என்று feel பண்ணியது நியாயமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது

விமானம் இரவு 1.30 க்கு கிளம்பியது. Cathay Pacific Airlines ஹாங்காங் நகரை தலைமையிடமாகக் கொண்டது என்ற காரணத்தால் பணியாளர்கள் அநேகமாக அந்த நாட்டை சேர்ந்தவர்களாகவே  இருப்பார்கள், இருந்தார்கள். சென்னையில் கிளம்பிய போது ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்ததை கேட்டபோது அது ஆங்கிலம் போலவே இல்லை. ஒரு வார்த்தை கூட புரியவில்லை. Mandarin accent.

சிறிது நேரத்தில் சாப்பிட கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்தபோது ஹாங்காங். (5.30 மணி நேரங்கள்). அங்கே விடிந்து விட்டது. மிக நீண்ட தரைத்தளம் மட்டுமே கொண்ட விமான நிலையம். இந்திய முகங்கள் கண்ணில் தென்படவில்லை.  Gate எண் எங்கே இருக்கிறது என்று பார்த்து travelatorல் 45 நிமிடங்கள்  நடையாய் நடந்து  Gate அருகில் போய் சேர்ந்தேன். செக்யூரிட்டியை விசாரித்து, display board 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்த்து கொண்டு ...என மிக மிக சுதாரிப்பாக காத்திருந்தேன். செக்யூரிட்டி பொறுமை கடந்து, நீங்கள்  செல்ல வேண்டிய விமானம் இங்கே தான் நிற்கிறது அமைதியாக காத்திருங்கள் என்கிறார்.

அந்த காலகட்டத்தில் என்னிடம் smartphone கிடையாது, touchphone மட்டுமே. விமான நிலைய WIFI உபயோகிக்க முடியவில்லை. ஹாங்காங் மற்றும் சீனாவில் Facebook போன்ற சோசியல்  மீடியாக்களுக்கு (social media)  அனுமதி இல்லை. (இன்றளவும் கிடையாது. Baidu தான் அங்கே. சமீபத்தில் பார்த்த சீன நாட்டு சீரியல் ஒன்றில் இது குறித்து ஒரு வசனம் வந்தது. Courtesy _ Netflix) Internet booth ஒன்றை தேடி gmail மூலம் நான் எங்கிருக்கிறேன் என்ற தகவலை என் குடும்பத்தினருக்கு தெரிவித்தேன். இங்கும் யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை. சோகமாக மீண்டும் அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறினேன். (எப்படியும் வீடு வந்து சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கையாக கூட இருக்கலாம்.)

கடந்த முறை ஏற்பட்ட அனுபவம் இம்முறை சுதாரிப்பாக இருக்க வைத்தது.வேடிக்கை பார்க்காமல் பசியுடன் விமானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

விமானம் சான்பிரான்சிஸ்கோ நகரை நோக்கி கிளம்பியது. ஜன்னல் இருக்கையில் நான் நடு இருக்கை காலி Aisle இருக்கையில் ஒரு தெற்காசிய பெண்மணி. நட்புடன் இருந்தார். அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

சான்பிரான்சிஸ்கோ நகரைஅடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னாள் கடுமையான turbulence. விமானம் கச்சா சாலையில் செல்லும் mofussil பேருந்து போல ஒரு மணி நேரம் குலுங்கி கொண்டே சென்றது.

seatbelt இடுப்பை சுற்றி மட்டுமே இருக்கும் என்பதால் மொத்த உடம்பும் வலப்புறமும் இடப்புறமும் அசைந்து கொண்டே  இருக்க, எனக்கு ரத்த கொதிப்பு அதிகரித்து கடுமையான தலை வலி , வாந்தி வருவது போன்ற உணர்வு.

தண்ணீர் தாகம். Dehydration. உதவி கேட்டு அழுத்தும் பட்டனை (Button) பல முறை அழுத்திய பிறகும்  ஏர்ஹோஸ்டஸ் வரவே இல்லை. மயக்கம்  வருவது போன்ற நிலை.

[விமானத்தில் பறக்கும் போது  சாதாரணமாகவே dehydration ஏற்படும் என்ற காரணத்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் மற்றும் ஜூஸ் தருவார்கள் . அவர்கள் தரவில்லை என்றாலும் நாம் கேட்டு வாங்கி குடிக்க வேண்டும்.]

எழுந்து நானே pantry செல்லலாம் என்றால் seatbelt sign சிவப்பில் இருக்கும் போது எழக்கூடாது என்றார்கள்.

அருகிலிருந்த பெண்மணியிடம் எனக்கு மிகவும் சுகவீனமாக இருக்கிறது தண்ணீர் கொண்டு வர சொல்லுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறினேன். அவர் சீன மொழியில் கூற, ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து ஒரு சிறிய டம்ளரில்  தண்ணீர் கொடுத்தார் பணிப்பெண். [அவருக்கும் turbulence தானே]

சிறிது நேரத்தில் எழுந்து சென்று வாந்தி எடுத்து விட்டு வந்த பிறகு தான் நிலைமை ஓரளவு சீராகியது. கண்ணாடியில் பார்த்த போது என் கண்கள் விஜயகாந்த் படத்தில் வருவது போல செக்க சிவந்து கோவைப்பழம் போல இருந்தன.

22 மணி நேரங்கள் பயணம் செய்து விடலாம் கடைசி 2 மணி நேரங்கள் எப்போது தரையிறங்குவோம் என்ற அலுப்பு தோன்றி விடும். Vegetarian Meal என்பதால் தனியாக வைத்திருந்து முதலில் கையில் கொண்டு வந்து தந்தார் ஒரு பணியாளர். (Jain, Indian Vegetarian, Eggetarian, Vegan, Child meal என குறிப்பிட்டு கேட்பவர்களுக்கு கையில் கொண்டு வந்து தருவார்கள். மற்றவர்களுக்கு cart ல் வைத்து தள்ளிக் கொண்டு வருவார்கள்.) எனக்கு ஜூஸ் மட்டும் போதும் என்று கூறி விட்டு கண்ணை மூடிக் கொண்டு தரையிறங்கக் காத்திருந்தேன்.

சான்பிரான்சிகோ நகரின் விமான நிலைய runway கடலை ஒட்டி இருக்கும், தரையிறங்கஅனுமதி கிடைக்கும் வரை Bay, Golden gate bridge, Bay bridge, San francisco நகரம் என விமானம் சுற்றி சுற்றி வரும். தாழப் பறப்பதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக பொதுவாக எல்லாருக்கும் காது அடைக்கும், சிலருக்கு வலிக்கும், சிறு குழந்தைகள் அழ ஆரம்பித்தால் SFO வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மதியம் 11.30 (pacific time) லேசான குளிருடன் கூடிய வெய்யில். சக அமெரிக்க பயணியர் என் பயணத்தின் கா ரணம் என்ன என்று கேட்டு விட்டு, “It’s a sunny day! Have a good day” என்று வாழ்த்தி விட்டு இறங்கினார்கள்.

https://manjooz.blogspot.com/2014/09/aawwwwits-hat-sorry-hot.html

(மேற்கண்ட உரையாடலை inspiration ஆக வைத்து எழுதிய பதிவு)

சமைத்த பொருட்கள், செடிகள், விதைகள்(நிலக்கடலை கூடாது நிலக்கடலை burfi ok), பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல கூடாது. condiments எனப்படும் ஊறுகாய் அப்பளம் வற்றல் வடகம் சாம்பார் பொடி போன்றவைகளுக்கு தடை இல்லை. Immigration form விமானத்த்திலேயே தருவார்கள் . அதில் மேற்கண்டவைகள் இருக்கும் . பணம் உட்பட என்னென்ன எடுத்தது செல்கிறீர்கள் எதை எடுத்து செல்லவில்லை என்று அதில் குறிப்பிட்டு கையெழுத்து இட வேண்டும் பணம் குறிப்பிட்ட அளவே கொண்டு செல்ல முடியும். 

விமான நிலையம் Immigration counter.

உணவு பொருட்கள் ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். வழக்கமான கேள்வி தான்.

அமெரிக்க accent புரியவில்லை ஒரு நொடி தயங்கி விட்டு இல்லை என்று கூறினேன். உடனே என்னை சந்தேக லிஸ்டில் சேர்த்து விட்டார் அந்த அலுவலர். A என கோட்டை எழுத்தில் எழுதி தந்து விட்டார். Customs counter க்கு சென்றேன். மிகப்பெரிய பெட்டிகள் இரண்டு (23*2 kgs) மற்றும் 7 kg கைப்பெட்டி (இழுத்தால் கூடவே வருவதால் நாய்க்குட்டி பெட்டி என்று செல்லமாக அழைப்பப்படும் Roll on aka Cabin luggage) களை எடுத்து ஒரு மேசையில் வைக்க சொன்னார்கள். மூச்சை பிடித்துக் கொண்டு ஒரு பெட்டியை எடுத்து வைத்து திறந்து காண்பித்தேன். மிக பெரிய உருவில் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி தான் அங்கே அலுவலர். பார்க்கவே பயமாக இருந்தது .

மீண்டும் Are there any food items? No. Then you can go.

சொல்லி முடிப்பதற்குள் trolley நகர்த்திக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியில் சென்றேன். (திரும்பவும் கூப்பிட்டால் ??)

மகளின் பிரசவ கால உதவிக்காக சென்றதால் ஊர் சுற்றி பார்க்க நேரமில்லை. ஆயினும் 6 மாதங்களில் கிடைத்த அனுபவங்களுக்கு குறைவில்லை.

மகளின் பிரசவம், என் கால் முறிவ , பேரன்களின் உடல்நிலை என பல மருத்துவமனைகளுக்கு செல்ல நேர்ந்தது வித்தியாசமான அனுபவம்.

சென்ற மறுநாளே மகளுக்கு சூடாக சமைத்து தரும் எண்ணத்தில் Rab ne bana di jodi என்னும் படம் ஆரம்பித்த சமயம் அங்கும் power cut. அங்கே Pacific Gas and Electric company தான் gas மற்றும் மின்சாரத்திற்கு பொறுப்பு. மின்சாரம் போனால் அடுப்பும் எரியாது. [[அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது மின்சார தடை ஏற்பட்டால் தொடர்ந்து அடுப்பு எரியும். கடந்த பயணத்தில் அடுப்பை அணைக்காமல் அடுத்தடுத்து சமைத்து முடிக்க கற்று கொண்டேன்.]

https://manjooz.blogspot.com/2014/12/blog-post.html

(மேற்கண்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய பதிவு)

அனுபவங்கள் தொடரும் ...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...