Thursday, 2 October 2014

நல்லாக் கேட்டாய்ங்கப்பா (நான்) டீட்டெய்லு..........

அன்றும் இன்றும் [என்றும்???] மாணவர்களைத் துன்புறுத்துவது நான் டீடெய்ல்(Non - Detail) எனப்படும் துணைப்பாடங்கள்.

டீடெய்ல் எனப்படும் பாடங்களை ஆசிரியர்கள் பயிற்றுவிக்க , இந்த துணைப் பாடங்களை நாமே படித்துத் தெரிந்து கொண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.

(1) தமிழ்

11 ஆம் வகுப்பில் வீரேசலிங்கம் பந்துலு மற்றும் சில கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். தேர்வில் ஏதேனும் ஒரு கவிஞரின் பெயரை கொடுத்து கட்டுரை எழுத சொல்லப்படும்.

(வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு இலக்கியங்களில் சிறந்தவர். சிறுவர் இலக்கியம் படைத்தவர். )"கோத்தி பெட்டுன தெந்துகுரா கொம்மலு விரிசே தந்துகுரா" என அவர் தெலுங்கில் எழுதியதை அப்படியே தமிழில் அச்சடித்து அதற்கு விளக்கம் வேறு........ மொத்த கட்டுரையும் இரண்டிரண்டு வரிகளுக்கு ஒரு முறை தமிழில் எழுதப் பட்ட தெலுங்குப் பாடல்கள் , அதற்கான விளக்கம் என இருக்கும். அப்படியே மனப்பாடம் செய்து பரீட்சையில் எழுதினேன், (வேறு வழி???) மற்ற தலைப்புக்கள் இதை விட மோசம்..... (மொத்தப் புத்தகமும் இதே நடையில்..... ஸ்ஸ்ஸப்பா….இப்ப நெனைச்சாலும் கண்ணக் கட்டுது.....)

துணைப்பாடம் தான் இந்த கதின்னா, முக்கிய பாடங்களை கற்றுத் தந்த ஆசிரியை  தமிழில் கம்ப ராமாயணத்தையும் அரிச்சந்திர புராணத்தையும் விளக்கி விட்டு, எங்களைப் பார்த்து "தெலிசுதா?? புருசுதா?? என்று கேட்பார்.(தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்)

12 ஆம் வகுப்பு துணைப்பாடம் ஒரு சிறு கதைத் தொகுப்பு. ராஜாஜி போன்றோர் எழுதியது. சுமார் சுவாரசியமாக இருக்கும். நம்மளைக் காப்பாற்றின கதை வைவா வோஸ் (viva voce). கடந்த 5 வருட கேள்விகளை ஆராய்ச்சி செய்ததில் இந்த கதை நிறைய தடவை கேட்கப்பட்டிருந்தது.

(ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒவ்வொரு முறையும் டிபார்ட்மெண்டல் தேர்வுகளில் தேர்ச்சி பெற மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம் எழுத்து பரீட்சையில் தேறிட்டேன் வைவா வோஸ்ல தேறலை.கடைசி வரை அவர் ஆபீசர் ஆகவே மாட்டார்.)

(2) ஆங்கிலம்

ஆங்கில துணப்பாடத்தில் இது போல பிரச்சினை இல்லை.ஒரே கதை.......... எங்கிருந்தாவது ஒரு பத்தி தருவார்கள். அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். குத்து மதிப்பா கதை தெரிந்திருந்தாலே போதும்.

11 ஆம் வகுப்பில் Three men in a Boat  by "Jerome K Jerome" ..... இதில் முக்கியமான பகுதி Uncle Podger hangs a picture ( ஆங்கில பாடமாக ஏதாவது ஒரு வகுப்பில் நாம் அனைவருமே படித்திருப்போம்,  Uncle Podger தம்முடைய மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் சேர்ந்து ஒரு படத்தை சுவரில் ஆணி அடித்து மாட்ட அலட்டும் அலட்டலே கதை...கடைசியில் படம் கோணலாக  இருக்கும்) இதை வைத்து சமாளித்தேன். 

[பல வருடங்களுக்கு பிறகு என் தந்தையாரின் சிபாரிசின் பேரில் அந்த புத்தகத்தைப் படித்தேன்(இன்றும் என்னிடம் உள்ளது).  நல்ல காமெடி கதை.. குறைந்த பட்சம் புன்னகையாவது வரும் ...........]

12 ஆம் வகுப்பில் Treasure Island.....by Robert Louis Stevenson. இன்று வரை கதை தெரியாது...... எங்களின் தலைமை ஆசிரியை ஸ்ரீவள்ளி தியேட்டரில் அந்த படத்தை பார்க்க அழைத்து சென்றார். (அப்போதாவது இவங்களுக்கு சுவாரசியம் வந்து படிக்க மாட்டங்களான்னு ஒரு அல்ப ஆசை தான்)
ம்ஹூம்.... 

இது துணைப்பாடம் இல்லீங்கோ........கடைசி வரை துணைக்கே வராத பாடம் ......

பின் குறிப்பு : நானே ஆசிரியை ஆன பின்பு என்னிடம் படிக்க வந்த மாணவர்களுக்கு கற்றுத் தரும் பொருட்டு நான் படித்த துணைப்பாட நூல் Scarlet Pimpernal..... பிரஞ்சு புரட்சி நடந்த கால கட்டத்தில் சிற்றரசர்களையும் பிரபுக்களையும்  கில்லட்டினில் சாகாமல் எப்படி இங்கிலாந்துக்கு கூட்டி சென்றார்கள் என்பது பற்றிய கதை ....... மேரி அண்டாய்னெட்டும், 16 ஆம் லூயி மன்னனும், சர் பெர்சி ப்ளேக்னியும் மார்கரெட்டும், ஷாவலினும் மனதைக் கொள்ளை கொண்டனர்.கடைசி வரை யார் காப்பாற்றுகிறார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பார் கதாசிரியர். 

இன்றளவும் மனதில் நிற்கும் சம்பவங்களின் கோர்வை.....அருமையான கதை......

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...