பசுமையான மலைகளும் ஆறும் வாய்க்காலும் நன்செய் புன்செய் வயல்களும் ஐதர் அலி திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம், கோவை மற்றும் சேலம் மாவட்ட சுற்றுப் புறங்களும் தான் என் இளமை கழிந்த நாட்கள்.
என் இளமைக் காலங்களை சற்றே அசைபோட , கிடைத்தவைகள் தான் கீழ்க்கண்ட மலரும் நினைவுகள் ....... ( 3 ~ 6 வயது)
1.கிராமத்து வயல் வெளிகளில் நடந்து விளையாடி அங்கிருக்கும் மரங்களில் உள்ள தூக்கணாங்குருவி கூடுகளைக் கண்டு மகிழ்வோம்(.அப்பாவின் கைபிடித்து நடந்து சென்று கிராமத் திருவிழாவும், அருகில் செல்லும் தொடர்வண்டிகளையும் கண்ட நினைவுகள் இனிமையிலும் இனிமை... ஒழுங்கா குதிக்காம நடந்து வா...._அப்பா
)
2. இயற்கையோடு இணைந்த விளையாட்டுக்களான தென்னை ஓலை ஊது குழல், பனை நுங்கு வண்டி, கிட்டிப்புள், கவண்கல் வைத்து விளையாடுதல் மரங்களின் மேலும் அவைகளைச் சுற்றிலும் விளையாடுதல்,
3.அருகிலிருக்கும் வயற்காட்டிற்கு சென்று பம்ப்செட் தண்ணீரில் குளித்தல்,வாய்க்காலில் விடியற்காலையில் குளித்தல், வாய்க்கால் மேட்டில் விழாமல் நடக்கும் போட்டிகள் என கும்மாளம் தான்
4 தெருவோரங்களில் குவிந்து கிடந்த காக்காபொன் (கறுப்பு நிறத்தில் தகதகன்னு தங்கம் போல மின்னுவதால் அந்தப் பெயர்) வைத்து விளையாடுவோம். வெங்காயம் போல் ஒவ்வொரு இழையாக எடுப்போம் (பின்னாளில் அது மைக்கா என தெரிந்து கொண்டேன்- நம்பியூர் என்னும் சிற்றூரில்)
5.பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலாவில் கண்ட கேசவன் என்னும் யானை(உம்மாச்சி பார்த்த ஞாபகமே இல்லை), திருச்சூரில் கண்ட மிருகக் காட்சி சாலை, மலம்புழா அணைக்கட்டு, அங்கு போகும் வழியில் முதன் முதலாக கண்ட ஆலங்கட்டி மழை... கூடவே என் குட்டித் தங்கை (சி ஐ ஏ ஏஜண்ட்- தப்பு பண்ணினா அம்மா கிட்டே போட்டு வேற குடுத்திடும்ல?) ....அம்மா சுட்டு அனுப்பிய இட்டிலி, புளிசாதம் ....என மனசுக்குள் மத்தாப்பூ.......
6.வீட்டின் பின்புறம் இருக்கும் பவானி ஆற்றிற்கு சென்று குளித்தல்,ஆடிப் பெருக்கு, காணும் பொங்கல் தினங்களில் அங்கே சென்று உணவருந்தி மகிழ்தல், கரையில் பூத்திருக்கும் மலர்களை பறித்தல் (இதை பூப்பறிக்கும் நோம்பி - பண்டிகை என்றே அழைப்பார்கள்.)
7.ஒரு புறம் கர்னாடகா மறுபுறம் கேரளம் என எல்லைகள் கொண்ட பகுதி. அவர்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். உகாதி, புது வருஷ பிறப்பு , ஆயுர்வேத மருத்துவம் , இனிப்பும் தேங்காயும் சேர்த்த சமையல் என எல்லாம் உண்டு. (இல்லி பா வும் , இவிட வரூ வும் சர்வ சகஜமாய் காதில் விழும்)
8. பண்டிகை நாட்களில் தோட்டத்திலிருந்து வரும் நெல் , நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை ,துவரை, சிறு தானியங்கள், பரங்கிக்காய்கள் என எல்லாவற்றையும் உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்வோம்.( நானும் என் சகோதரியும் கைவலிக்க சுமந்து போய் கொடுத்திருக்கிறோம்)
9.ஓய்வாய் அமரும் போது, வீட்டுத் தோட்டத்தில் பூத்த பூக்களைப் பறித்துத் தொடுத்தல், கோலம் போடுதல் , கை வேலைகள், செடிகளுக்கு நீர் விடுதல் என சின்ன சின்ன வேலைகளை சொல்லித் தருவார்கள்
10. வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டில் ....... 4 மாடுகள். படிபடியாக பாலும், தயிரும் நெய்யும். தெருவே வந்து பாலும் தயிரும் வெண்ணையும் சாணமும் வாங்கி செல்வார்கள். மாட்டுப் பொங்கல் மிக சிறப்பாகக் கொண்டாடுவோம்(மாமாவுடன் மாட்டைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு யார் போவது, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசும் போது யார் பக்கத்தில் நின்று உதவுவது என்று சகோதரிகள் எங்களுக்குள் ஒரு குருக்ஷேத்திரப் போரே நடக்கும்)
11. விளையாட்டிலேயே எண்கள் , மாதங்களின் பெயர்களை கற்றோம்..... ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்ததாம்..ரெண்டு குடம் தண்ணி விட்டு ரெண்டு பூ பூத்ததாம் என எண்களும் பத்து வரை சொல்லி ஆடுவோம் சுற்றி சுற்றி.......
பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் என ஒரு குழு சொல்ல எதிர் குழு எந்த மாதத்தில் என கேட்கும் அதற்கு இவர்கள் சித்திரை மாதத்தில் என ஒவ்வொரு மாதமாக சொல்லிக் கொண்டே முன் நோக்கி நகர்வார்கள், இது மாதங்களுக்கான பாடல் விளையாட்டு
12. நல்ல பழக்கங்களைக் கற்றுத்தரும் பாடல்களைப் பள்ளியில் கற்றோம்.....
சுத்தம் சுத்தம் சோறு போடும் சுகாதாரம் ஆகுமே ,
நித்தம் இதை மறவாது நேர்மையுடன் வாழ்வீரே,
ஈ மொய்த்த பண்டங்களைத் திங்கவே கூடாது
எச்சில் கண்ட இடமெல்லாம் துப்பவே கூடாது,
மலஜலம் தூரம் கழித்திட வேண்டுமே
மாசில்லா நீரை பருகிட வேண்டுமே - (சுத்தம்)
காகித துண்டுகள் காகித துண்டுகள் தரையிலே பார் ,
அசுத்தப் படுத்துது பொறுக்கி எடு என பாடிக் கொண்டே சுத்தம் செய்வோம்
13. சுதந்திர தினம் , குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் நாள் ஆகியவைகளில் பள்ளியில் மிகச் சிறப்பாக விழா நடத்துவார்கள். பிள்ளைகள் கையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்வோம். பின்னர் தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்(நாங்கள் இல்லாமலா?)
14. கோவில் திருவிழாக்கள், நவராத்திரி ஆகியவைகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்வோம். (திருவாதிரை அன்று ஈஸ்வரர் அரச மரத்தை சுற்றி வரும் போது நாங்களும் மகிழ்ச்சியுடன் பின்னாலேயே செல்வோம். அக்கம் பக்கம் வாழ்பவர்கள் பிள்ளைகளை அழைத்து திருவாதிரை களி தருவார்கள்.
மீனாட்சி கல்யாணத்தன்று (இன்றும்) தாய் வீட்டு சீதனமாக மணமக்களுக்கான உடைகள் எங்கள் வீட்டிலிருந்து தான் செல்லும். நம்முடைய உறவினரது திருமணம் போல ஆத்மார்த்தமாய்
கடவுளர்களின் திருமணத்தில் பங்கு கொள்வோம்.
மொத்தத்தில் எங்கள் இளவயது வாழ்க்கை மிகுந்த மன நிறைவுடனும், இயற்கையுடனும் இணைந்தே இருந்தது..........