Monday, 17 July 2023

கள்ளிக் காட்டுக் கதைகள்


கடந்த அக்டோபர் 2022ல் மகன் வசிக்கும் வடஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் தலைநகரான Phoenix நகரில் ஏறக்குறைய நான்கு மாதங்கள் வசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இந்நகரில் நான் காண நேர்ந்த இடங்களையும் பெற்ற அனுபவங்களையும் உங்களுடன் பகிரும் நோக்கில் அமைந்துள்ளது இந்தப் பதிவு.

முதலில் இந்நகரைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பிப்போம்.

பாலைவனத்தின் நடுவில் அமைந்ததுள்ள இந்த ஊரின் தட்பவெப்ப நிலை.Hot desert climate எனப்படும் கடும் குளிரும் கடும் வெயிலும் தான் பனி இல்லாத ஊர் என்பதால் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நகரங்களில் இதுவும் ஒன்று.
இந்நகரத்தின் பொருளாதாரம் முன்பு "5Cs" எனப்படும் Copper, Cattle, Climate, Cotton, and Citrus ஆகியவைகளால் ஆனது. தற்சமயம் Carகளுடன் சேர்த்து 6Cs எனக் கொள்ளலாம் சமீப வருடங்களில் Waymo, Uber, General motors, Nicola Motor Company போன்ற பிரபல நிறுவங்கள் தங்கள் ஆராய்ச்சிக் கூடம் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவி ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் கார்களைப் (Driverless cars) பரிசோதனைகள் செய்கிறார்கள். யாருமற்ற பாலைவனப் பகுதியில் பரிசோதனைச் சாலைகள் அமைக்கப்பட்டு மேற்படி நிறுவனங்கள் ரகசியப் பரிசோதனைகள் செய்கின்றன. (See you in my 19th life என்னும் தென் கொரியத் தொடரில் இது போன்ற Automated car ஆராய்ச்சி மற்றும் அவைகளை ஓட்டிப் பார்க்கும் பரிசோதனை சாலைகளை எப்படி அமைத்துப் பரிசோதிக்கிறார்கள் எனக் கண்டேன்-Netflix)

Waymo robotaxi இந்நகரில் பிரபலமான ஒன்று. வடஅமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை உபயோகிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். Walmart கூட driverless truckகளை உபயோகிக்கிறன. சாலையில் taxi மற்றும் truckஐக் கண்டேன். புகைப்படம் எடுக்க ஏதுவான வேகத்தில் எங்கள் கார் செல்லவில்லை. மற்றவர்கள் 60 மைல் வேகத்தில் செல்ல இவைகள் மணிக்கு 40 மைல் வேகத்தில் செல்வதாகப் படித்தேன். (இந்தப் பதிவினை நான் வெளியிடும் சமயத்தில் வடஅமெரிக்கா பறக்கும் கார்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்தியில் கண்டேன்.)


மற்றொரு முக்கியத் தொழில் semiconductor உற்பத்தி. 1949 ஆம் ஆண்டு முதல் semiconductor chip உற்பத்தியில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. (Leader of semi conductors) இந்நகரில் ஒவ்வொரு வருடமும் 9000 மாணவர்கள் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி அடைகிறார்கள்.

Phoenix நகரம் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பிரசித்தி பெற்றது. புகழ் பெற்ற University of Phoenix (Phoenix), Arizona University (Tempe) என்னும் பகுதியில் உள்ளது. பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் மக்களே அதிகம் உள்ள ஊர் இது. ஸ்பானிஷ் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் இங்கே வசிக்கிறார்கள். மிகச் சில தெற்காசியர்களே கண்ணில் தென்பட்டனர்.

கொரோனா காலத்தில் கலிபோர்னியாவிலிருந்து பலரும் இம்மாநிலத்திற்கு (குறிப்பாக இந்த நகரத்திற்கு) குடி பெயர்ந்துள்ளார்கள். காரணம் அங்கே cost of living (விலைவாசி) அதிகம். அங்கே தரும் வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அரிசோனாவில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட தனி வீடே வாங்க முடியும் என்பது தான். மக்கள் இங்கே அதிகம் குடிபெயர்வதால் தற்சமயம் இந்நகரிலும் சமீப வருடங்களில் விலைவாசி பல மடங்கு கூடி விட்டது. Real estate மதிப்பும் கூடி விட்டது.


இந்நகருக்கு Salt, Gila மற்றும் Colorado நதிகளிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது. கூடுதலாக நகருக்குள் கால்வாய்கள் அமைக்கப்பட்டுத் தண்ணீர் தடையில்லாமல் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி (2023) மாதத்தில் இந்நகரின் 500 தனி வீடுகள் கொண்ட ஒரு பகுதியில் குடிதண்ணீர் வழங்குதல் நிறுத்தப்பட்டுக் குறைந்த அளவு நீரையே அவர்கள் உபயோகிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டது. அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகப் பேட்டி வீடியோ வெளியிட்டனர் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு நிகழ்வு இது.

மேற்கண்ட தகவல்கள் யாவையும் சில தினங்களுக்கு முன்பு நான் கண்ட ஒரு டாக்குமென்டரியில் அரிசோனா மாநில கவர்னர் கூறியவைகளே. (அவரும் கூகுளைப் பார்த்துத் தான் கூறி இருக்கிறார் 😊)

RIPARIAN RESERVE AT WATER RANCH, GILBERT

மேலை நாடுகளில் Holidays என்றழைக்கப்படும் Thanks giving day தொடங்கி புத்தாண்டு முடிய உள்ள நாட்களில் வீடுகளிலும் பொது இடங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்வார்கள் என முன்பே பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு வார இறுதியில் வீட்டிற்கு அருகில் உள்ள Riparian reserve at water ranch, Gilbert என்ற இடத்திற்கு $5 சீட்டு வாங்கி கொண்டு இரவில் விளக்கு அலங்காரங்களைக் கண்டு வந்தோம். ஒரு ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள நடைபாதையின் இருபக்கமும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள். நடந்து சென்று வேடிக்கை பார்த்தோம்.


JAPANESE FRIENDSHIP GARDEN OF PHOENIX & TEMPE TOWN LAKE

ஒரு வார இறுதியில் Japanese friendship garden of Phoenix என்னும் நகரின் முக்கியமான ஒரு இடத்திற்குச் சென்றோம். இதற்கும் அனுமதிக் கட்டணம் உண்டு($10). இது Phoenix மற்றும் அதன் sister city என அழைக்கப்படும் Himeji, Japan உடன் இணைந்து கலை கலாச்சாரம் பண்பாடு அரசியல் எனப் பலவற்றையும் வெளிப்படுத்தும் வண்ணம் இந்தத் தோட்டத்தை நிறுவியுள்ளனர் 3.5 ஏக்கர் நிலத்தில் அமைந்த இதை ஜப்பானிலிருந்து தோட்டக்கலை நிபுணர்கள் வந்து அமைத்திருக்கிறார்கள். 1500 டன் எடை கொண்ட கையினால் பொறுக்கப் பட்ட கற்களைக் கொண்டு பாலங்கள், சிற்றோடை, செயற்கை நீரோடை, நடைபாதைகள் என அமைக்கப்பட்டுள்ளது பாலைவனத்திற்கு ஏற்ற வகையில் 50 வகையான தாவரங்களை ஜப்பானிலிருந்து கொண்டு வந்து வளர்க்கிறார்கள். இங்குள்ள Tea house பிரபலமானது. வாடகைக்கு விடுகிறார்கள். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. வேகமாக நடந்தால் 10 மெதுவாக நடந்தால் 20 நிமிட நேரத்தில் கடக்கக் கூடிய சிறிய தோட்டம். பச்சைப் பசேலென உள்ளது.

ஜப்பானிய வழிகாட்டி ஒருவர் ஐம்புலன்களுக்கும் தீனி போடும் வகையில் இந்தத் தோட்டம் அமைந்துள்ளது என எங்களுக்கு விளக்கினார். உதாரணமாக சற்றுத் தொலைவிலிருந்து நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்கிறது அருகில் வந்தால் பார்க்க முடிகிறது. செடிகளின் இலைகள் வெவ்வேறு பச்சை நிறத்தில் உள்ளன. See... Light green to dark green. Sunlight coming. That tree no leaf. (பனிக் காலம் என்பதால் மரத்தில் இலைகள் இல்லை, இலையின் நிறத்தில் மாற்றங்களும் அதனால் தான்) வழிகாட்டி 20 நிமிடங்களுக்கு இது போல் கூறிக் கொண்டே வந்தார்.

மறுபக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம். நகரின் மையத்தில் உள்ளதால் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. அவர்களின் balconyயில் விலை உயர்ந்த சோபாக்கள் தென்பட்டன.(யாரும் அமர்ந்திருக்கவில்லை)

அதே தினத்தில் அடுத்து நாங்கள் சென்ற இடம் Tempe town lake. Salt நதியின் நீரை அணைகட்டித் தடுத்து அதில் மேலும் நீர் சேர்த்து நகரின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மைல் நீளமுள்ள செயற்கை ஏரி. நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தடுப்பதற்காகக் கட்டப்பட்டது இந்த ஏரி. (பீனிக்ஸ் நகரின் வருடாந்திர சராசரி மழையளவு ஐந்து சென்டிமீட்டர்களே 😊) https://www.tempe.gov/government/community-services/tempe-town-lake

சுற்றிலும் மக்கள் walking, jogging, cycling செய்ய ஏற்ற வகையில் பூங்காவுடன் கூடிய நடை பாதை. நாமே ஓட்டிச் செல்லும் வகைப் படகு மற்றும் பாட்டரி சைக்கிளை App மூலம் பணம் செலுத்தி ஓட்டினோம். Tempe river walk என இந்த ஊர் மக்களால் கொண்டாடப்படும் சுற்றுலாத் தலம் இது. இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதன் மற்றொரு சிறப்பு இந்த ஏரியின் மிக அருகில் சர்வதேச விமான நிலையம் உள்ளதால் 10 வினாடிகளுக்கு ஒரு விமானம் ஏறி, இறங்கி கொண்டே இருக்கிறது. கண்கொள்ளாக் காட்சி எடுத்துச் சென்ற மதிய உணவை உண்டு முடித்து விட்டு அங்கிருந்து அவதார் 2 திரைப்படம் பார்த்து விட்டு வீடு வந்தோம். (அது பற்றித் தனிப் பதிவு வெளியிட்டுள்ளேன்)

Phoenix downtown பகுதியைக் கடந்து மேற்கண்ட இடங்களுக்கு சென்ற போது வீதிகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டேன் (Cactus road, Camelback Road, Thunderbird road, Raintree road, Talking stick way, Indian bend, Price road, Baseline road, Lemontree road) வழியெங்கும் Road accident lawyersகளின் விளம்பரப் பலகைகள். Rafi மற்றும் Husband and Wife போன்ற சட்ட நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் (Digital display boards) முக்கிய சாலைகளிலும் சட்ட நிறுவனங்களின் பேருந்துகளிலும் தென்பட்டன. சாலை விதிகள் இந்நகரில் கடுமையாகப் பின்பற்றப்படாததே இது போன்ற சட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறப்பட்டது நாங்கள் அங்கே இருந்த தினங்களில் எந்த நேரத்தில் பயணம் செய்தாலும் சாலையில் ஒரு விபத்தையாவது காண நேர்ந்தது.

மற்றொரு வார இறுதியில் வீட்டிலிருந்து ஏறக்குறைய 40 மைல் தொலைவில் (35-40 நிமிட கார் பயணம்) அமைந்துள்ள OM INDIAN BISTRO என்னும் உணவு விடுதிக்குப் பகல் உணவிற்குச் சென்றோம். இந்தியாவில் உண்பது போன்ற தரத்தில் மிகச் சுவையாக இருந்தது. செல்லும் வழியெங்கும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தென்பட்டன.

டிசம்பர் விடுமுறைக்குயின் கடைசி வாரத்தில் மகளது குடும்பம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து திடீரென யோசித்து ஒரு நாள் மாலை காரில் Phoenix வருகிறோம் எனக் கூறினார்கள்.

மகள் குடும்பம் வந்து சேர்ந்ததும் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள Flagstaff என்னும் பனிப் பொழிவு உள்ள இடத்திற்குச் செல்லலாமா, Grand Canyon செல்லலாமா என விவாதம் நீண்டு கொண்டே போனது

பனிப்பொழிவு உள்ள இடங்களுக்குச் செல்ல நான்கு சக்கரங்களும் break பிடிக்கும் வண்ணம் உள்ள (4WD - Four Wheel Drive) tyreகளில் சங்கிலி கட்டி ஓட்டிச் செல்லக் கூடிய வகை காரை வாடகைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். ஆனால் அந்த ஊரில் அதிகப் பனி காரணமாக விபத்து ஏற்பட்டு இறப்புக்கள் நேர்ந்ததாக அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு செய்யப்பட்டு முதலில் Phoenix நகருக்குள் சுற்றிப் பார்ப்பது என முடிவானது.


YOGURTLAND

டிசம்பர் 27ஆம் தேதி மாலை Yogurtland சென்று உறைநிலையில் பலவித flavourகளில் விற்கப்படும் தயிரை வாங்கி உண்டு எங்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் வைபவத்தை ஆரம்பித்தோம். (கலிபோர்னியாவிலும் Yogurtland செல்வதுண்டு) இங்கே தயிரை விதம் விதமான flavour களில் ஐஸ்கிரீம் போல உறைய வைத்து வரிசையாக வைத்திருப்பார்கள். என்னென்ன flavour வேண்டுமோ எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்துக் கொண்டு topping செய்து கொள்ள வைக்கப்பட்டிருக்கும் dry fruits, chocalate chips, சீரக மிட்டாய் இன்னபிறவற்றில் தேவையானதை மேலே தூவி எடுத்துக் கொண்டு எடை போடும் இடத்திற்குச் செல்ல வேண்டும் எடைக்குத் தகுந்தவாறு கூறப்படும் விலையைத் தந்து விட்டு உண்ண ஆரம்பிக்க வேண்டியது தான். கடும் குளிரில் ஜில்லென்ற ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்பது வாய்ப்பாட்டு பயிலும் சிறுவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சலுகை என்பதால் பேரன்கள் மகிழ்ச்சியுடன் உண்டார்கள்.


TOPGOLF

அடுத்ததாக Gilbert என்னும் பகுதியில் உள்ள Topgolf எனப்படும் Indoor Golf Complex சென்றோம்.(Topgolf is the premier golf entertainment complex where the competition of sport meets your favorite local hangout. Challenge your friends and family to addictive point-scoring golf games that anyone can play year-round) செல்லும் வழியெங்கும் வீதிகளில் விளக்கு அலங்காரங்கள் தென்பட்டன. அரங்கம் நுழைவாயில் தொடங்கி வண்ண விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடன் குழுவாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு பேர் உள்ள குழுவாக நம் பெயரைப் பதிவு செய்த சிறிது நேரத்தில் நமக்கான Bay ஒதுக்கப்பட்டு அழைப்பு வரும் வரிசையாக உயரமான இடத்தில் ஏறக்குறைய 25 Bayக்கள். ஒவ்வொருவராகப் போய் பந்தை அடிக்கவேண்டும் பந்து எவ்வளவு தொலைவு செல்கிறது, என்ன வேகத்தில் அடிக்கப் பட்டது போன்ற விவரங்கள் மற்றும் அதற்குண்டான points திரையில் தெரியும். அடிக்கப்படும் பந்துகள் தரையில் சென்று விழ விழ ஒரு சிறிய பந்து பொறுக்கும் truck பொறுக்கிக் கொண்டே வந்து குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க அவைகள் மேலே வந்து சேர்கின்றன.

எங்களுக்கான Bayயில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தபடி Chips, French fries தொட்டுக்கொள்ள Salsa, Hummus என சாப்பிட்டுக் கொண்டே ஒவ்வொருவராக மாறி மாறி ஒரு மணி நேரம் விளையாடினோம். என் முறை இல்லாத நேரத்தில் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் ஏறி இறங்கிய விமானங்களை வேடிக்கை பார்த்தேன். (Hummus - கடலைப்பருப்பு, எள், பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துச் செய்த சட்னி Salsa - தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, பச்சை மிளகாய் போன்றவற்றால் செய்த சட்னி)
குடும்பத்தினர் அனைவரும் பங்கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த Top Golf .

ROOSEVELT DAM
மற்றொரு நாள் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் Roosevelt damஐக் காண மகள் குடும்பத்துடன் கையில் உணவு கட்டி எடுத்துக் கொண்டு நானும் என் கணவரும் சென்றோம். மகன் வசிக்கும் Chandlerலிருந்து சிறிது தூரத்திலேயே பாலைவனம் ஆரம்பம். குட்டைக் கள்ளிகள், உயரமான கள்ளிகள், பலவிதமான மரங்கள் எனப் பகுதிவாரியாகத் தென்பட்டன. நாம் நினைப்பது போல பாலைவனம் எங்கும் எல்லா விதமான கள்ளிகளும் வளர்வதில்லை.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு உணவு இடைவேளை. கள்ளிகளும் கருவேல முட்செடிகளும் இருந்த ஓரிடத்தில் நின்று உணவை முடித்துக் கொண்டு சற்று நேரம் அங்கே உலாவி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் அணையை நோக்கிக் கிளம்பினோம்.

பல மைல் தொலைவுக்கு ஊரே கிடையாது. Sunflower எனப் பெயர்ப் பலகை காட்டிய ஊரில் நான்கு சிறு வீடு/கடை போன்ற அமைப்பும் நம் ஊர் puncture கடை போல ஒன்றும் இருந்தது. மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு பெரிய ஏரி சாலையை ஒட்டித் தென்பட்டது. அதனைத் தாண்டி அணையை அடைய ஒரு பாலம். இந்த ஏரியின் பெயர் Theodore Roosevelt Lake.

"Longest two-lane, single-span, steel-arch bridge in North America" என்ற சிறப்பை உடைய இந்தப் பாலத்தின் பெயர் Theodore Roosevelt Lake Bridge. Theodore Roosevelt ஏரிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் கலிபோர்னியாவின் Golden Gate bridge, நியூயார்க்கின் Brooklyn bridge போலப் பிரசித்தமானது என்கிறது கூகிள். இரண்டு Ford Model-T automobiles ஒரே நேரத்தில் செல்லும் வகையில் இரண்டு lane பாலமாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட இதில் தற்போது அனைத்து வகை வாகனங்களும் செல்லும் வகையில் One way பாலமாகச் செயல்படுகிறது.

இந்த அணை TONTO National Forestல் உள்ள Tonto creek பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதி வித்தியாசமான காட்சிகளைக் கொண்டுள்ளது. பாலைவனம், canyons, அடர்ந்த மரங்கள், பல்வெளிகள் எனப் பலவற்றையும் கொண்டுள்ளது. வழியெங்கும் வித்தியாசமான vegetation கண்ணில் தென்பட்டது என முன்பே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். பாலைவனத்தின் நடுவில் பசுமையோ பசுமை என்பது நினைத்துப் பார்க்க இயலாத ஒரு காட்சி.

இந்த 357 அடி உயரமுள்ள அணை பீனிக்ஸ் நகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள Salt நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டு Theodore Roosevelt Lake என்னும் ஏரியில் அமைந்துள்ளது. குடிநீர், வெள்ளத் தடுப்பு மற்றும் மின்சார உற்பத்தி (36 மெகாவாட்) ஆகியவையே இந்த அணையின் பயன்கள். இது கற்களாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட உயரமான அணைகளுள் ஒன்று (masonry dam) என்கிறது கூகிள்.(உலகிலேயே இது போல கட்டப்பட்ட உயரமான அணை இந்தியாவின் தெலிங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்ஜுன சாகர் அணை)

பலவித எதிர்பார்ப்புக்களுடன் அங்கே சென்ற போது உருப்படியாக எதுவும் இல்லை அணைக்கட்டு தான் இருக்கிறது அணைக்கட்டு என்பது நீரை திறந்து விடும் வகையில் இடையிடையே கதவுகளுடன் அமையப் பெற்ற ஒரு தடுப்புச் சுவர் என்பதாகத் தான் நான் அறிவேன் அந்த இலக்கணத்துக்குட்பட்டதாக இருக்கவில்லை இந்த அணைக்கட்டு அதில் தண்ணீர் மிகச் சிறிதளவே இருந்தது. எங்களைத் தவிர ஒரே ஒரு பார்வையாளர் (பெண்மணி) வந்து சில நிமிடங்கள் பார்த்து விட்டு திரும்பினார். அவரும் எங்களைப் போல எதையோ எதிர்பார்த்து வந்திருப்பார் போல)

சுற்றிச் சுற்றிப் பார்த்தோம். பாலத்தைத் தவிரப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. பேரன்களை கட்டாயமாக காரிலிருந்து இறங்கச் சொல்லி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

சில நிமிடங்கள் அங்கே இருந்த விவரப் பலகைகளைப் படித்து விட்டு நாங்களும் கிளம்பினோம்.
திரும்பி வரும் போது மாற்று வழியில் வந்தோம். கடல் மட்டத்தை விட உயரமான பகுதியில் இந்த அணை அமைந்திருப்பதால் திரும்பி வரும் வழியில் முதலில் பரந்த ஏரி, அதனை ஒட்டிய குடியிருப்புக்கள், உல்லாசப் படகுகள் (சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் போலும்) என்பதைத் தொடர்ந்து canyon வகை மலைத் தொடர்களை வழியெங்கும் சில மைல்களுக்குக் கண்டோம். அவைகள் எரிமலை வெடித்து ஏற்பட்ட பாறைகள். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அரிப்பினால் படிப்படியாக மடிப்பு மடிப்பாக சிவப்பாக இருந்தன.

வழியில் Miami என்னும் ஊர் ஒன்றே பெரிய ஊராக இருந்தது. ஆனால் அமெரிக்க standard படி ஒரு Starbucks கூட இல்லை. ஆக இது சற்றே பெரிய கிராமம்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்னும் வழக்கு போல பாலைவனத்தில் ஒரு வனம், அதில் ஒரு நதி, அதற்கு ஒரு அணை என்பதெல்லாம் மிகப் பெரிய தகவலாகக் கூறப்பட்டு மக்கள் சென்று பார்க்கிறார்கள்.

அதற்கடுத்த இரவு மீண்டும் Tempe lake river walk சென்றோம். இரவு நேரக் காட்சிகள் கண்ணைப் பறித்தன.

முன்பே இந்த ஏரியைப் பற்றி விவரித்துள்ளேன் என்பதால் தற்சமயம் எதுவும் விளக்கப் போவதில்லை. ஏறி இறங்கும் விமானங்களின் பிரதிபலிப்பு ஏரியில் தெரிவதை வேடிக்கை பார்ப்பதில் நேரம் போனதே தெரியவில்லை. 

ஒரு நாள் பீனிக்ஸ் நகரிலிருந்து ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Oracle என்னும் ஊரில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள மிகப் பெரிய ஆராய்ச்சிக் கூடமான Biosphere2வைப் பார்க்கக் கிளம்பினோம். இந்தப் பயண நேரத்தில் வழியெங்கும் பச்சைப் பசேலென்ற வயல்களைக் காண முடிந்தது. 5Cல் ஒன்றான பருத்தி இந்தப் பகுதியில் விளைகிறது. வாய்க்கால் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி செய்யப் பட்டிருந்தது.

பூமி Biospehere 1; அதை போலவே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிரினங்களை ஓரிடத்தில் வைத்து, மனிதர்களும் அவற்றுடன் வாழ்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சிக் கூடம் தான் இந்த Biosphere2. Oracle என்னும் ஊருக்கு அருகிலிருக்கும் Tucson என்னும் அரிசோனாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் அமைந்துள்ள University of Arizonaவின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையம் இது.(Closed ecological system)

Ecological balance என்பதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். புல்-> மாடு-> வன விலங்குகள்/ மனிதன்-> நுண்ணுயிரிகள்-> பூச்சி புழுக்கள்-> புல் ..இப்படி ஒரு வட்டமே ecological balance.
பூமியில் nuclear war ஏற்பட்டால் எப்படி தப்பித்து மீண்டும் உயிரினங்களை உருவாக்குவது மற்றும் செவ்வாய் போன்ற வேற்றுக் கிரகங்கள் மற்றும் வான்வெளியில் வாழ்வது எப்படி என்பது பற்றியும் அறிய ஆவலான மிகப் பெரிய பணக்காரர்/ஆராய்ச்சியாளர் ஒருவருக்குத் தோன்றியதன் விளைவே இந்த Biosphere 2. 1987-1991 முடிய உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் (கனவின்) விலை $150 மில்லியன் டாலர்கள்.

மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு:


அதை விட விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு:

The Human Experiment: Two Years and Twenty Minutes Inside Biosphere 2 by Jane Poynter

இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் Biomes எனப்படும் கூடு போன்ற பகுதிகளை வெவ்வேறு கண்டங்களின் தன்மைகள் உள்ள செடிகள் விலங்குகளுடன் சேர்த்து அமைத்துள்ளார்கள். மக்கள் வசிக்கும் பகுதியும் இங்கே உண்டு.
(1.Rainforest, 2.ocean with a coral reef, 3. mangrove wetlands, 4.savannah grassland, 5.fog desert, and 6 & 7 two anthropogenic biomes: an agricultural system and a human habitat with living spaces, laboratories and workshops. Below ground was an extensive part of the technical infrastructure).

Sep 26, 1991 - Sep 26, 1993 எட்டு பேர் கொண்ட குழு ஒன்று இந்த ஆராய்ச்சிக் கூடத்துக்குள் இரண்டு வருடங்கள் தங்கி அவர்களே பயிர் செய்த உணவுகளை சமைத்து உண்டு, ஆராய்ச்சி செய்தார்கள். High calorie low fat உணவு முறையைப் பின்பற்றியதில் ஆரோக்கியமாகவே இருந்தார்கள் என அறிகிறோம்.

உள்ளே நுழைந்ததுமே அங்கே தங்கி ஆராய்ச்சி செய்தவர்கள் பதிவு செய்த தினசரிப் பதிவுகளைக் காட்சிப் படுத்தி வைத்துள்ளதைக் கண்டோம். நம்முடைய கைபேசியில் அவர்களுடைய App மூலம் ஒவ்வொரு இடத்தைப் பற்றிய வர்ணனையையும் கேட்டபடியே சுற்றிப் பார்க்க வசதி இருந்ததால், அதைக் கேட்ட படியே ஒவ்வொரு ஒவ்வொரு Biome ஆகச் சுற்றிப் பார்த்தோம் தனித்தன்மையுடன் கூடிய கண்ணாடி, இரும்பு போன்றவற்றால் சூரிய ஒளியைத் தடையில்லாமல் உள்ளே செலுத்தும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. இரண்டு வருடமும் வெளியில் செல்ல முடியாது என்பதால் முழுவதுமாக அடைக்கப்பட்ட இடம் இது.
செடி கொடிகள் வெளிவிடும் ஆக்சிஜனை மக்கள் சுவாசித்து அவர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை பயிர்கள் ஏற்க வேண்டும். Ecological balance அடிப்படையில் செடி கொடி மரங்கள் பூச்சிகள் விலங்குகள் போன்றவைகளும் உள்ளே வசித்தன.

ஆராய்ச்சியாளர்களுக்கு (நான்கு ஆண்கள் , நான்கு பெண்கள்)தனித்தனி அறைகள், சமையலறை, நூலகம், அலுவலகம், ஆராய்ச்சி அறை, கடற்கரை, மலை என எல்லாமே உள்ளேயே இருக்கின்றன. குளிர் நீர், வெந்நீர், குளிர்/சுடு காற்று, மின்சாரம் ஆகியவற்றிற்கு அங்கேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (தற்சமயமாக இருந்தால் Solar panel கள் அமைந்தது மின்சாரம் எடுத்திருப்பார்கள்) கடலில் செயற்கையாக அலைகள் வரும்.பவழங்களை வளர்த்து இன்றளவும் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

முக்கியமாக காற்றழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம் என்பதால் Lung என்னும் பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள். அழுத்தம் குறைந்தால் குடை போன்ற அமைப்பு கீழே இறங்கும் அளவை வைத்துக் கணக்கிட்டார்கள். (தற்சமயம் கதவைத் திறக்கும் வசதி உண்டே)

ஆராய்ச்சி சமயத்தில் சில செடி கொடிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொண்டதில் மக்களால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதால் நீர்ம நிலையில் ஆக்சிஜனை வெளியிலிருந்து உள்ளே செலுத்த வேண்டி இருந்ததாம். எட்டு பேருக்கு வேண்டிய உணவினை அவர்களால் 83% மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்ததால் முதல் வருடத்தில் அனைவர்க்கும் எப்போதும் பசித்துக் கொண்டே இருந்ததாம்.

இந்த ஆராய்ச்சி தோல்வியில் முடிந்தது என்றாலும் உலகளவில் மிகச் சிறந்த ஒன்று என அறியப் படுகிறது. ஆரம்பத்தில் கேலிக்குள்ளான இந்த ஆராய்ச்சி, அவர்களின் பரிசோதனை முடிவுகளைக் கண்டதும் NASA போன்ற முக்கிய நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராட்டைப் பெற்றது. தனியாரால் ஆரம்பிக்கப் பட்ட இந்த ஆராய்ச்சிக் கூடம் பல்வேறு காரணங்களால் தற்சமயம் University of Arizona வின் பொறுப்பில் ஆராய்ச்சி மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கும் விடப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சுற்றுலா வழிகாட்டி மீண்டும் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விவரமாகக் கூறினார். குறிப்பாக Lung என்னும் காற்றழுத்தக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மிக விவரமாக அதன் செயல் முறைகளைக் காட்டினார். நம் நுரையீரல் போன்ற அமைப்பில் உள்ளது இந்தப் பகுதி.

மொத்தத்தில் பூமியை, அதன் நீர்நிலைகளை, உயிரினங்களை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்னும் வகையில் ஆராய்ச்சி செய்கிறார்கள் தற்சமயம்.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் soveneir கடையில் கண்ட Jane Poynter எழுதிய புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தேன்.

ஆசிரியர் Biosphere 2 வில் வாழ பயிற்சி எப்படித் தரப்பட்டது என்று விளக்குகிறார்.

ஏற்கனவே அந்த இடத்தை நேரில் கண்டதால் புத்தகத்தைப் படிக்கும் போது நாமே அங்கு வசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

Oracle மற்றும் Tucson (டூசான்) பகுதிகளில் கூட சென்னைக்கு மிக அருகில் அரக்கோணத்தில் ஒரு கிரௌண்ட் நிலம் விற்பனைக்கு வருகிறது என்பது போன்ற விளம்பரங்கள் கண்ணில் தென்பட்டன. (Tucson பெரிய நகரம்) Biosphere 2 அமைந்திருக்கும் பகுதி கடும் பாலைவனம் என்றாலும் real estate தொழில் அமோகமாக உள்ளது. அங்கும் பல வீடுகளைக் கண்டேன்.

திரும்பி வரும் வழியில் Maricopa county யில் இந்து ஆகம விதிமுறைகளின் படி கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மஹாகணபதி கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டோம். இந்தியக் கோவில்களின் வடிவமைப்பில் உள்ள இந்தக் கோவில் பாலைவனத்தின் நடுவில் (பீனிக்ஸ் நகரிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ளது. கோவிலுக்கு அருகில் ஒரு சிற்றூர் தவிர மனித நடமாட்டமே இல்லை. இருப்பினும் இந்திய மக்கள் பூஜைகள் விழாக்கள் என இங்கே வந்து கொண்டாடிச் சிறப்பிக்கிறார்கள்.
சூரியன் மறையும் நேரத்தில் இந்தப் பகுதியைக் காண அற்புதமாக இருந்தது. பாலைவன சூரிய உதயமும் மறைவும் எப்போதும் கண்கொள்ளாக் காட்சிதான். மேகங்களின் அமைப்புக்களும் வித்தியாசமாக அரிசோனாவில் காணப்பட்டன.

ஸ்ரீ வேங்கட கிருஷ்ண க்ஷேத்ர கோவில் என்னும் பெயருடைய இந்துக் கோவில் Tempe என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கும் அனைத்து விதமான பூஜைகளும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. போகிப் பண்டிகையன்று காலை மகனுடன் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தக் கோவிலில் ஆளுயர வெங்கடாசலபதி, லட்சுமி, சிவன், கணபதியின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

நாங்கள் சென்ற சமயத்தில் ஒரு நடனப் பள்ளியின் ஆசிரியையும் மாணவர்களும் திருப்பாவைப் பாசுரங்களுக்கு விளக்கம் கூறி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். பிரசித்தி பெற்ற Arizona State University Tempe யில் தான் உள்ளது என்பதால் வழியெங்கும் பல மைல்களுக்கு மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் அபார்ட்மெண்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

மற்றொரு முறை எங்கள் நண்பரின் மகளுடன் Gilbert Regional Park செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. 272 ஏக்கர் பரப்பளவுள்ளது இந்தப் பூங்கா.


மக்கட்தொகை குறைவான பகுதி என்பதால் பீனிக்ஸ் நகரப் பூங்காக்கள் மிக அதிகப் பரப்பளவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. ஒரு ஏரி, ஒரு சிறு குன்று, வயதுக்கு ஏற்றாற்போல் அமைக்கப் பட்டுள்ள விளையாட்டுச் சாதனங்கள், ஊஞ்சல்கள், mini zipline Amphitheatre, restroom பகுதி, water splash பகுதி, நடைப்பயிற்சி செய்யும் பாதைகள் என இந்தப் பூங்கா அமைந்துள்ளது. Amphitheatreல் பொது மக்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களை நடத்த அனுமதி உண்டு. நாங்கள் சென்ற தினம் எங்கள் நண்பரின் மகளது நடனப் பள்ளியின் பயிற்சி வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்நகரம் கடுமையான கோடைகாலத்தை கொண்டது என்பதால் பூங்காக்களில் குளிர் முடிந்து வசந்த காலம் ஆரம்பித்ததுமே சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் water splash எனப்படும் நீரை உயரத்திலிருந்து வாரி இறைக்கும் வசதியை செய்திருக்கிறார்கள். தண்ணீரில் நனைவது அனைவருக்குமே பிடித்த செயல் இல்லையா?

ஈஸ்டர் தினத்தன்று Phoenix premium outlets என்னும் காலணிகளுக்கான கடைகள் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தது. விதம் விதமான Designer brands செருப்புக்கள் மற்றும் ஷூக்கள் இங்கே விற்பனை செய்யப் படுகின்றன. கணிசமான discount இங்கே கிடைப்பது தான் இதன் சிறப்பு. மகனுடன் சில பல கடைகள் ஏறி இறங்கி என் நடைப்பயிற்சிக்கான Nike ஷூக்களை வாங்கி வந்தோம்.

இந்நகரில் தங்கியிருந்த நாட்களில் விதம் விதமான மரங்கள் மற்றும் செடிகளைக் காண நேர்ந்தது. இலையுதிர் காலத்தில் சில வகைப் பூக்கள், கடும் குளிர் காலத்தில் சில வகைப் பூக்கள், பொங்கல் பண்டிகை முடிந்த சில தினங்களில் அங்கங்கே கள்ளிச் செடிகளும் மொட்டு விட்டுப் பூக்க ஆரம்பித்தன. ஏப்ரல் மாதம் வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் மரங்கள் அனைத்திலும் இலைகள் துளிர் விட்டு பச்சைப் பசேலென்ற காட்சி எங்கும் தென்படத் தொடங்கியது ஒரு மரத்தில் இலையே தெரியாத வண்ணம் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. Bougainvillea
பீனிக்ஸ் நகரம் பூங்கா நகரம் இல்லையென்றாலும் ஆங்காங்கே பசுமையை ஏற்படுத்திக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மாற்றியுள்ளார்கள். விமான நிலையத்தின் வெளிப்புறம் தொடங்கி அழகுக்காக மிக உயரமான கள்ளிச்செடிகளை நட்டு வைத்துள்ளார்கள். இளம் பச்சை நிற ஊசி இலைகளை உடைய மரங்களை சாலைகளின் நடுவேயும் ஓரத்திலும் நட்டு Boulevard என்னும் பெயருக்குப் பொருள் சேர்த்துள்ளார்கள். என அழைக்கப்படும் (காகிதப் பூ என சிறுவயதில் கூறுவோம்) பூக்கள் எல்லாப் பருவங்களிலும் பூத்திருந்தது. சாலையோரங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கியது எனக் கூறலாம். அரளிப் பூக்களும் பூத்திருந்தன.

நகரின் சாலைகள் மிக நீளமாக (ஒரு சாலையே குறைந்தபட்சம் பத்து மைல்) உள்ளன. சதுரமான வடிவமைப்பில் உள்ளன. நூறு வருடங்களுக்கு முன் அமைக்கப் பெற்ற நகரம் என்பதால் Town planning நன்றாக உள்ளது. (நானும் என் கணவரும் நடந்து சென்று பல இடங்களையும் explore செய்தோம்) ஆங்காங்கே முக்கிய சாலைகளுக்கு நடுவில் மிகப் பெரிய farms உள்ளன. அங்கே சென்று strawberry picking போன்ற செயல்களை செய்ய சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்து நூலகங்களில் அறிவித்திருந்தார்கள். சிறு குன்றுகள் நகரெங்கும் காரில் பயணிக்கும் போது தென்படுகின்றன.

ஆங்காங்கே ஏரிகளை அமைத்து அதன் இரு கரையிலும் வீடுகளைக் கட்டி உள்ளார்கள். குட்டி வெனிஸ் போல சிறு படகுகளுடன் அழகாக உள்ளது நகரின் சில பகுதிகள். Holidays சமயத்தில் வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் ஜொலித்ததைக் கண்டபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த ஊரில் ஆங்காங்கே தென்பட்ட ஈச்ச மரங்களுக்கும் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. 😊

புது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்கி ஊரின் தன்மையை அனுபவிக்கும் என் ஆர்வத்திற்கு தீனி போட்டது இந்த ஊர் என்று தாராளமாகக் கூற முடியும்.

பாலைவனச் சோலை.

பார்த்தேன் ரசித்தேன். 

Saturday, 8 April 2023

ஆறாவது வட அமெரிக்கப் பயணம் (பகுதி-2)

டிசம்பர் 10, 2022. 

SFO சர்வதேச விமான நிலையத்திலிருந்து Southwest airlines விமானம் மூலம் Phoenix நகருக்குக் காலை ஐந்து மணிக்குக் கிளம்பினோம்.  

அதிகாலை நேரப் பயணம் என்பதால் சூரிய உதயக் காட்சி காணக் கண்கொள்ளாத ஒன்றாக இருந்தது. விமானத்தில் தரப்பட்ட சூடான சுவையான hot chocalateஐக் குடித்த வண்ணம் ஜன்னல் இருக்கையில் அமர்ந்த படி மேற்கண்ட காட்சியைக் கண்டது இன்னும் இனிமை.

நகரின் ஆரம்பத்தில் தொழிற்சாலைகள், warehouses போன்ற கட்டிடங்கள் நிறையத் தென்பட்டன. இந்நகரம் ஒரு தொழில்நகரமாக இருக்க வேண்டும் என நினைத்து மகனிடம் கேட்டேன். அவரது பதில் எப்போதும் போல "may be". இதற்குப் பொருள் உன் கையில் உள்ள தொலைபேசியில் கூகிள் செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளவும் என்பது தான்.

6.25க்கு இந்த நகரில் தரையிறங்கி விட்டோம். விமான நிலையம் நகரின் மத்தியில் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் பகுதி புறநகராக இருந்திருக்கலாம். 

நகருக்குள் நுழைவதற்குள் ஒரு சிறு அறிமுகம்.

வட அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் தலைநகர் இது. 

Colorado நதியின் ஓட்டத்தினால் பல மில்லியன் ஆண்டுகளாக அரிக்கப்பட்ட Grand Canyon எனப்படும் மலைத் தொடர்களுக்கு இந்த மாநிலம் மிகவும் பிரசித்தம்.

நிற்கவிமான நிலையத்தை விட்டு வெளியில் வந்து விட்டோம்.

கலிபோர்னியாவை விடக் குளிர் சற்று குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டாலும் திறந்த வெளியில் காலை நேரத்தில் நின்றபோது Uber வருவதற்குள் குளிர் ஊசி போல உடலைக் குத்தியது. Tempeயைக் கடந்து மகன் வசிக்கும் Chandler என்னும் பகுதியை 20 நிமிடப் பயண நேரத்தில் வந்தடைந்தோம்.

2017லேயே அரிசோனா மாநிலத்தின் Grand Canyon மற்றும் Las Vegasஐக் கண்டிருக்கிறேன் என்றாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுப் புது விஷயங்கள் கண்ணில் படத் தவறுவதில்லை.

வழியெங்கும் மிக உயரமான சப்பாத்திக் கள்ளிகளை அலங்கார மரமாக நட்டுள்ளார்கள். ஈச்ச மரங்களும், கள்ளி வகைகளும், காட்டு மரங்களும், செடிகளும் எங்கெங்கும் தென்பட்டன. ஊரைச் சுற்றிலும் மலைத் தொடர்கள் தென்படுகின்றன. (வெயிற்காலத்தில் புழுதிப் புயல் வீசும் என்று கூறினார்கள்)

சாலையோரங்களிலும் வீடுகளிலும் முடிந்தவரை செடிகள், மரங்களை நட்டுப் பசுமையாக வைத்திருக்கிறார்கள். குளிர்காலம் என்பதால் மரத்தில் இலைகள் அவ்வளவாக இல்லை.

ஆங்காங்கே செயற்கையாகக் கால்வாய்களை வெட்டியும் ஏரிகளை அமைத்தும் குடியிருப்புக்களை


அவைகளையொட்டிக் கட்டியுள்ளார்கள். வெனிஸ் போல வீட்டுக்கு வீடு சிறு படகுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

Chandler - Gilbert எல்லையில் மகன் வசிக்கும் அபார்ட்மெண்ட் உள்ளது. Greenbay packers என்னும் கால்பந்துக் குழுவின் ரசிகர் என்பதால் அதன் கொடியை balconyயில் தொங்க விட்டுள்ளார். 😊(எங்கள் வீடு எது என்று கண்டு பிடியுங்களேன் மருமகள்)

மிகப் பெரிய நிலப்பரப்பில் 310 அபார்ட்மெண்ட்களை உள்ளடக்கிய ஒரு காலனி இது  இங்கும் ஈச்ச மரங்கள்பலன் தராத இலைகள் மட்டுமே உள்ள மரங்கள்முள் செடிகள்கள்ளிகள்காகிதப் பூச்செடிகள் என நட்டுப் பசுமையை ஏற்படுத்தி உள்ளார்கள்  வீட்டின் எதிரிலேயே பச்சைப் பசேலென்ற புல்வெளி.  காலனி முழுவதும் loop போல் நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளது. தினமும் முதல் தள வீட்டிலிருந்து கீழிறங்கிக் காலனியை ஒரு முறை சுற்றி வந்தால் 1.5 km.

இருந்த ஒரே ஒரு இந்தியக் குடும்பமும் நாங்கள் சந்திக்கும் முன்பே காலி செய்து விட்டார்கள் காலனியில் 90%க்கு மேல் ஸ்பானிஷ், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் தென்படுகிறார்கள். நாங்கள் இந்த ஊரில் இருந்த நாட்களில் தெற்காசிய மக்கள் ஓரிருவரே கண்ணில் தென்பட்டனர்.

இந்த காலனி ஒரு சிறிய பறவைகள் சரணாலயம் போல உள்ளது. தினமும் காலையும் மாலையும் கீகீயென சத்தமிட்டவாறு பல்வேறு பறவைகள் இங்குள்ள மரங்களில் அங்குமிங்கும் தாவிச் செல்கின்றன.

காக்காபுறாசிட்டுக் குருவிமிகச் சிறிய இறக்கையுடன் கூடிய ஒரு பறவை (பறக்கும் போது இதன் இறக்கை ஹெலிகாப்டரின் இறக்கை போல விரிந்து கொள்கிறது)மரம் கொத்திப் பறவைமற்றொரு பறவையின் இறக்கை பின் பக்கம் விசிறி போல கருப்பு வெள்ளை நிறத்தில் மிக அழகான patternல்விரிகிறது. மேலும் சில பறவைகளையும் காண முடிகிறது. என் சிற்றறிவுக்கு தென்படும் பறவைகள் எல்லாமே குருவியின் பல வகைகள் போலவே தோன்றுகின்றன😊

திருமணமாகி மனைவியுடன் 2022 மே மாதம் புதுக் குடித்தனத்தைத் தொடங்கிய மகனது இல்லத்தின் பொருட்களைச் சீராக்கி ஒழுங்குபடுத்துவதில் முதல் சில நாட்கள் கழிந்தன. அதன் பிறகு கூகிள் ஐயனாரின் உதவியுடன் எங்கள் நடைப் பயிற்சி மற்றும் ஊரை explore செய்தலை ஆரம்பித்தோம்.

அதிக பட்சமாக 60-75 நிமிடங்கள் மட்டுமே நடைபயிற்சிக்குச் செல்வோம். 

காலை நேர நடைப்பயிற்சியின் (நான் மட்டும்) போது காலனியின் All-in-all அழகு ராஜாவான ஒரு பெரியவரை அவரது buggyயிலோகையில் குப்பை பொறுக்கும் fork அல்லது நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்யும் வலையுடனோ காண்பேன். பரஸ்பரம் Hi , Good morning கூறிக் கொள்வோம். 

சென்னையில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பரின் மகள் இரண்டரை மைல் தொலைவில் வசிக்கிறார். காரில் சென்றால் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்றாலும் என் கணவர் நடந்து சென்று பார்த்து வருவார். ஒரு நாள் அவர் இல்லத்தில் மதிய உணவு அளித்தார்.

குளிர் வாட்டி எடுத்தாலும் பனி இல்லை. பகலில் சூரியனார் எட்டிப் பார்த்தாலும் வெயில் உரைப்பதில்லை. காற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் வெயிற்காலத்தைப் போல ஒரு நாளுக்கு குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லிட்டர்கள் நீர் அருந்த வேண்டி உள்ளதுதவறினால் மருத்துவமனை சென்று glucose ஏற்றிக் கொள்ள வேண்டும்.

சென்ற முதல் நாளே இது பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் என் உடல் இந்த ஊரின் தட்ப வெப்பநிலையை ஏற்றுக் கொள்ளாமல் ஆரம்ப நாட்களில் அடிக்கடி நீர்க் கடுப்பு வருவது போன்ற நிலைக்கு சென்று மீண்டு வந்தேன். (Las Vegas பயணத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வந்து தானாகவே உறைந்து மூச்சு விட முடியாமல் மூக்கடைத்துக் கொண்ட அனுபவமும் உண்டுஅன்று முதல் கடும் குளிரோமலையோபாலைவனமோ எங்கு சென்றாலும் மருத்துவரின் அறிவுரைப்படி saline solutionஐக் கையோடு எடுத்துச் செல்கிறேன்)

மே 2022ல் மருமகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு (dehydration) மருத்துவமனை சென்றதற்கான தொகையாக வந்த invoice $16,000 என்று காட்டியது இன்சூரன்ஸ் $12,500 போக மீதியை மாதம் $ 250தவணை முறையில் செலுத்தவும் என இருந்தது.

அதைக் கண்டவுடன் காலனியின் அருகில் உள்ள CVS pharmacyயில் rehydration liquid, Trader Joe'sலிருந்து Cranberry juice, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஒன்றை ஒரு ஜக் தண்ணீரில் கலந்து அதில் உப்பு சர்க்கரை சேர்த்துத் தயாரித்த நீர் எனக் குடித்து நாட்களைக் கடத்தினேன்.

-2 டிகிரி குளிராக இருந்தாலும் எங்கு சென்றாலும் குடிநீர் பாட்டில் இல்லாமல் செல்ல முடியாது.

நடைப்பயிற்சி நேரங்களில் எங்கெங்கே பூங்காக்கள் உள்ளனஅவற்றில் என்னென்ன வசதிகள் உள்ளனவழியில் எங்கெங்கே ஆரஞ்சுஎலுமிச்சைஈச்சை போன்ற மரங்கள் காய்த்து தரையில் விழுந்து கிடக்கின்றனஎந்தச் சாலையில் போனால் எத்தனை கிலோமீட்டர்கள்எங்கெங்கே பள்ளிகள் உள்ளன இப்படிப் பலவற்றையும் பார்த்து வந்து சொல்வோம்.

இங்குள்ள முக்கிய சாலைகள் அநேகமாக சதுர வடிவில் பல மைல்களுக்கு நீண்டு செல்கின்றன. (குறைந்தது பத்து மைல்கள்)

நம் ஊர்களைப் போலத் தெருக்களில் பழ மரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்து உள்ளார்கள். குத்தகைக்கு விடுவார்கள் போல. சில நாட்களில் மொத்தப் பழங்களும் காணவில்லை. ஒரு நாள் Walmart வாசலில் உள்ள பேரீச்சை மரத்திலிருந்து தரையில் பழங்கள் கொட்டிக் கிடந்தனசிலவற்றை எடுத்து வந்தோம்  இங்கு யாரும் எடுக்க மாட்டார்கள். (சுவையாக இருந்ததாக மகன் கூறினார்)

நிறைய barber shops, pizza shops, coffee shops, private storages இந்தப் பகுதியில் உள்ளனஅருகில் ரயில்வே தண்டவாளம் சாலையின் குறுக்கே செல்கிறதுரயிலின் விசில் சப்தம் வீட்டிலிருந்தே கேட்பதை காலை நடைபயிற்சியின் போது கவனித்தேன். (காலையில் தினமும் இரண்டுமதியம் ஒன்று தவறாமல் வருவதாக என் கணவர் கூறினார்)

இந்த ஊரில் பயணியரை ஏற்றிச் செல்லும் ரயில் இல்லை. சரக்கு ரயில்கள் தான்.  

அதனை ஒட்டியே ESPEE PARK”. South Pacific (espee) பூங்கா பெரும் தனவந்தர் குடும்பம் ஒன்றால் நகருக்கு தானமாக அழைக்கப்பட்ட 33 ஏக்கரா பரப்பளவுள்ள பூங்கா. ஒரு முறை நடந்தாலே கால்கள் ஓய்ந்து போகின்றன. 

(Home to Chandler’s first official bike park, refreshing spray gardens, and sports fields Espee Park is a recreational paradise. The 33-acre park offers over four miles of thrilling bike courses at varying levels for all rider's abilities. Not for the faint of heart, the bike park features a jump box, double roller, molehill, Hubba ledge, and vertical surface that is taller than a basketball hoop.

The park is also known for its spray pad, ideal for splashing around and cooling off during Arizona’s hot days. Park-goers can enjoy a water tower, three candy cane-shaped showers, four spray rings, and a ground spray. The park also includes three lighted baseball and softball fields as well as covered awning seating for spectators)

நவம்பர் டிசம்பர் மாதங்கள் இங்கே holiday season என முன்பே அறிவீர்கள் (Thanks giving - New yearஐ Holiday season என்கிறார்கள் அமெரிக்கர்கள்)

அதனையொட்டி நகரில் எங்கெங்கும் வண்ண விளக்குகள். ஈச்ச மரத்திற்கும் விளக்குகள் உண்டு. :) ஏரிக்கரை வீடுகள் விளக்கலங்காரத்தில் ஜொலித்தன. 

மற்றொரு திசையில் நடந்தால் மிகப் பெரிய செயற்கை ஏரியுடன் கூடிய தனியார் பூங்கா. அங்கும் வண்ண விளக்கு அலங்காரங்களைக் கண்டோம்பகலில் நடைப்பயிற்சி நேரத்தில் கண்ட இடங்களை இரவில் காரில் சென்று வேடிக்கை பார்த்தோம். (குளிரோ குளிர்)

Holiday seasonல் ஏரிகள்ஆறுகள் போன்ற இடங்களைச் சுற்றிப் பெரிய அளவில் அலங்காரம் செய்து அனுமதி சீட்டு விற்றுப்  பார்வையாளர்களை அனுமதிப்பார்கள்.

(குளிர்காலத்தில் வட அமெரிக்கா வரும்போது ஒவ்வொரு முறையும் ஹாலோவீன்கிறிஸ்துமஸ் அலங்காரங்களை இரவில் காரில் சென்று வேடிக்கை பார்ப்பது வழக்கம்  இம்முறை லிவர்மோர்பீனிக்ஸ்)

 வார இறுதி நாட்களில் மருத்துவமனை / வீட்டிலிருந்து அதிக பட்சம் 30 - 60 நிமிடப் பயண நேரத்தில் உள்ள இடமாகத் தேர்ந்தெடுத்து இந்த ஊரில் உள்ள மிகச் சில பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வந்தோம். (மிகச் சில = இந்த ஊரில் மிகச் சிலவே உள்ளன)

நிற்க… மருமகளுக்கு உதவி செய்வதாகக் கூறி விட்டு ஊர் சுற்றிக் கொண்டா இருந்தீர்கள் என்ற உங்கள் mind voice கேட்கிறது. அதற்கு பதில் சொல்லி விட்டு மேலே தொடர்கிறேன். 

பிப்ரவரி ஐந்தாம் தேதி தான் due date என்றாலும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மருமகளுக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய சூழல். பிரதி செவ்வாய் scan வெள்ளி குழந்தையின் vitals, contraction checkup. 

செவ்வாய் காலை ஆறு மணிக்கு எழுந்து (நடுக்கும் குளிரில்) விரைவாக மற்றும் மருமகளுக்கு வாந்தி வராமல் உண்ணக் கூடிய ஒரே உணவான நான் செய்யும் இட்லியைக் காலை உணவாக எடுத்துக் கொண்டு 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு மகனும் மருமகளும் (எட்டு மணிக்கு முதல் appointment) செல்வார்கள். Scan முடிந்ததும் 9.30 மணியளவில் பெண் மருத்துவருடன் சந்திப்பு.

Phoenix சென்ற முதல் வாரம் scan செய்யும் நாளன்று மருமகள் வருந்தி அழைத்த காரணத்தால் அவருடன் சென்று குட்டிப் பேரனின் முகம் (கையை கண்களின் மேல் வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்)கை, கால் என 4D scan திரையில் கண்டேன்.

மருத்துவமனை வாசலிலேயே அலுவலக மீட்டிங் இருந்தால் பேசி முடித்து விட்டு, காருக்குள்ளேயே காலை உணவை முடித்துக் கொண்டு10.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்த அடுத்த நொடி மகன் ஓட்டமாக ஓடி அலுவலகக் கணினியை login செய்வார். விட்ட மணித்துளிகளைப் பிடிக்க இரவு ஏழு முடிய வேலை செய்வார்.

பிரதி வெள்ளிக்கிழமை மீண்டும் இட்லிஎட்டு மணி appointment. மருத்துவரைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதால் சீக்கிரமாக வீடு திரும்புவார்கள்.

மருமகளுக்குப் பிடித்த வகையில் சமைத்து தருவேன்அவரால் முடிந்த உதவிகளைச் செய்வார்.

நால்வரும் தரையில் பாய் போட்டு அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் (மருமகளின் விருப்பம்) பார்த்துக் கொண்டே உண்போம். தொலைக்காட்சியில் செய்திகள்டாக்குமெண்டரி மட்டுமே பார்க்கும் ரக மான நானும் என் கணவரும் இந்த இரண்டு மாதங்களில் "நாய் சேகர்" உட்பட OTTயில் வெளியான அனைத்துத் தமிழ் மற்றும் வேற்று மொழித் திரைப்படங்களையும் பார்த்தோம்எந்தப் படமும் மனதில் நிற்கவில்லை.

தினமும் நடைப்பயிற்சிவாரம் இரண்டு நாட்கள் யோகா வகுப்புக்கள்மருத்துவமனையில் நடத்தப்பட்ட birthing வகுப்புக்கள் எனச் சென்று வந்தார்கள் மகனும் மருமகளும். (அங்கே தரப்பட்ட புத்தகங்களை நான் தான் படித்தேன்)

தினமும் மாலையில் விஷ்ணு ஸஹஸ்த்ரநாமம் (ஸஹஸ்த்ரம் = ஆயிரம்) சொல்வோம். காலையிலும் என் கணவர் திவ்வியப்பிரபந்த பாசுரங்களைக் கூறிப் பிரார்த்தனை செய்வார்.

கருவின் திருவில் எந்த மாற்றமும் இல்லாததால் ஒரு வித எதிர்பார்ப்புடன் நாட்கள் சென்று கொண்டிருந்தன.

இடையில் Avatar-2, வாரிசுதுணிவு போன்ற திரைப்படங்களைப் மருமகள் பார்க்க விரும்பியதால் திரையரங்கில் சென்று பார்த்தோம். அவர் செல்ல விரும்பிய இடங்களுக்கு நாங்களும் உடன் சென்றோம்.

இது தொடர்பாக என் நினைவில் நிற்கும் ஒரு சம்பவத்தையும் இங்கே பகிர விரும்புகிறேன். 

40, 50 வருடங்களுக்கு முன் வளைகாப்புசீமந்தம் முடிந்து தாய் வீடு சென்றுவிட்டால் குழந்தை பிறந்து 90 நாட்கள் கழித்தே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டது. கோவில்கள்உறவினர் வீடுகள் என எங்கும் செல்ல அனுமதியில்லை. (காரணத்தை நான் விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்)

10 வருடங்களுக்கு முன்பு...

மகளது இரண்டாவது பிரசவத்திற்கு 15 நாட்கள் முன்பு தான் சான் பிரான்ஸிஸ்கோ வந்தேன். (ஜெனரல் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டிருந்த சமயம் அது) பிரசவத் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் மகள் அம்மா எனக்கு கோமள விலாஸில் சாப்பிட வேண்டும் அனுமதிப்பாயா என்றார். சம்மதித்து அவருடன் நானும் சென்றேன்.

அந்நாட்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும் திருவல்லிக்கேணி ரத்னா கபே போல நீண்ட பெஞ்சுகளில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள் முருங்கைக்காய் அரைத்து விட்ட சாம்பார்உருளைக்கிழங்கு பொரியல்கூட்டுஅப்பளம்தயிர் என unlimited meals. ஒரு ஆங்கிலேயப் பெண்மணி தான் பரிமாறினார்பையனா பெண்ணா எனக் குசலம் விசாரித்துபையனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்கிறது போல என பார்த்துப் பார்த்துப் பரிமாறினார். (தாயின் கருவை விட்டு வெளியில் வந்ததும் அவருக்கு அந்தக் காய் பிடிக்கவில்லை :) இன்றளவும் விரும்பி உண்ண மாட்டார்)

நாங்கள் மருமகன் வருவதற்காகக் வெளியில் காத்திருந்த கணத்தில் அந்த ஹோட்டலின் மேனேஜர் (தமிழர்) என் மகளிடம் என்று due date எனக் கேட்டார்  நாளை என்றதும் அவருக்கு மிகுந்த கோபம் வந்து இன்னும் எதற்கு அம்மா ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறாய் ஓடு வீட்டிற்கு என்று விரட்டினார். என் தாயார் உடன் இருக்கிறார் கணவர் வந்தவுடன் கிளம்பி விடுகிறேன் எனப் பதவிசாக பதில் கூறியதும் "சரி சீக்கிரம் கிளம்பு" எனக் கூறிச் சென்றார்.

எதற்கு மருமகள் சென்ற இடமெல்லாம் உடன் சென்றேன் என இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.

மகனுடன் வார இறுதியில் இந்தியர்களால் நடத்தப்படும் ஒவ்வொரு கடையாகச் சென்று காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி வந்தேன். (என் கணவர் தண்ணீர்பால் வாங்க மகனுடன் செல்வார். வெளி உலகை எட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்)

இடையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அமெரிக்காவில் கோதுமை மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. உக்ரைன் போர் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் இந்திய அரசாங்கம் கோதுமை ஏற்றுமதியை அந்த நாட்டுக்கு திருப்பி விட்டதே காரணம்.

இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் கலிபோர்னியாவின் Bay area எனப்படும் சான் பிரான்ஸிஸ்கோ மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கூடக் கோதுமை கிடைக்கவே இல்லை. இந்த ஊரில் விலை அதிகமாக இருந்தாலும் சில நாட்களுக்குக் கிடைத்தது. எங்களுக்கும், மகள் மற்றும் நண்பர் ஒருவருக்குமாக மூன்று பைகள் (20 lbs) ஒவ்வொன்றும் $25 என்ற அசாத்திய/ அநியாய விலைக்கு வாங்கி வந்தோம்.

அடுத்த சில நாட்களில் ஒருவருக்கு ஒரு பை மட்டுமே என நோட்டீஸ் ஒட்டி விட்டார்கள். அடுத்த சில நாட்களில் அதுவும் இல்லை.    

Patel Brothers என்னும் இந்தியரால் நடத்தப்படும் கடையில் அனைத்துக் காய்கறிகளும் கிடைக்கின்றன. மளிகை சாமான்களின் விலை அதிகம் என்பதால் மற்றொரு கடையில் வாங்குவோம். (வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கடைகளின் பெயர்கள் அநேகமாக Cloves, Turmeric என்பது போலவே இருக்கும்)


Patel Brothersல் ஒரு சனிக்கிழமையன்று கடை திறக்கும் நேரமான காலை பதினோரு மணிக்குச் சென்ற போது முன்தினம் விற்பனையாகாத காய்கறிகளை 2-3 kg அளவில் (நம் ஊர் கணக்குப்படி)  எடை போடாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். வெண்டைக்காய்பாகற்காய்கத்திரிக்காய்பச்சைமிளகாய், Jalapino, பீர்க்கங்காய்புடலங்காய், Capsicum (பச்சைமஞ்சள்சிவப்பு)மாங்காய் இஞ்சிவெந்தயக் கீரைகொத்துமல்லிகொத்தவரைக்காய், ஆப்பிள் ஆகியவற்றை  $2 - $3.50 என்ற விலையில் விற்கிறார்கள். (ஒவ்வொரு வாரமும் காய்கறிகள் மாறும்) வாங்கி வந்து வற்றல்துவையல்பொரியல் என விதம் விதமாக சமைத்தேன். (ஒவ்வொரு பையிலும் 3.5 - 4lb அளவுள்ள காய்கறிகள் இருக்கும். வீட்டில் எடை பார்த்தேன். 1lb =543 gms)

உதாரணமாக counterல் கொத்துமல்லி ஒரு கட்டு $1.49 என்றால் இந்தப் பையில் 15 கட்டுக்கள் $1.99 என விற்கப்பட்டன. சில வாரங்கள் பயன்படுத்தினோம். வெந்தயக் கீரை ஒரு கட்டு $1.99இதில் ஐந்து கட்டுக்கள் $1.99.

ஆரம்பத்தில் இப்படி விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமாக இருக்காதுஓரிரண்டு நாட்களில் சமைத்து விட வேண்டும் என்று கூறிய என் மருமகள் அவைகள் தரமாக இருப்பதைக் கண்ணால் கண்டதும் மற்றவர்களுக்கும் இது பற்றிய தகவலைப் பகிர்ந்தார்.

பிரதி வியாழக்கிழமை இரவு அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று வருவோம். காலனிக்கு வெளியே மெயின் ரோடு. அதைத் தாண்டினால் கோவில். (தூரம் அதிகமில்லை gentlemen, 1.5 கிலோமீட்டர் தான்)

கோவில் நம் ஊர் கோவிலைப் போல இல்லை. ஒரு பெரிய ஹாலில் சாய்பாபாஹனுமான்ராதா கிருஷ்ணர்சிவலிங்கம் ஆகிய தெய்வங்களின் சிலைகள் உள்ளன. முக்கியமான பண்டிகை நாட்களில் கடவுளின் திருவுருவச் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீனிவாச கல்யாணம்  போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன இந்திய மக்களின் கூட்டத்தை இங்கே காண முடியும். யாரும் மற்றவர் முகம் பார்த்துச் சிரிப்பது கூட இல்லை.

பொதுவாக வெளிநாடுகளில் கோவிலில் பிரசாதம் நம் ஊரைப் போல ஒரு ஸ்பூன் தருவதில்லை. To go box எனப்படும் பெட்டியில் நிறையத் தருவார்கள். ஒருவர் தாராளமாக வயிறு நிறைய உண்ணலாம்.

வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையலுக்கு விடுமுறை. எடுத்து வரும் பிரசாத்துக்கு ஈடாக அரிசிபருப்புபழங்கள்காய்கறிகள் என நம்மால் என்ன முடியுமோ அதைத் தந்து விட்டு வருவோம்.

(நாமும் சமைத்து எடுத்துச் சென்று கோவிலில் தந்தால் கடவுளுக்குப் படைத்து விட்டு பக்தர்களுக்குத் தருவார்கள்ஒரு முறை நாங்கள் சமைத்துத் தந்த சாம்பார் சாதம் எங்களுக்கே வந்தது)

ஓரிரு வாரங்களுக்குப் பிறகு என் கணவரும் மகனும் மட்டும் சென்று வந்தார்கள்.

கார்த்திகைப் பண்டிகையை பீனீக்ஸில் கொண்டாடுவோம் என எண்ணிப்  புது விளக்குகள்ஆடைகள் போன்றவற்றை ஒரு பெட்டியில் போட்டு மகன் சென்ற போது  கொடுத்தனுப்பி விட்டோம். குறித்த நேரத்தில் கிளம்ப முடியாததால் மகள் தந்த புது விளக்குகளை மருமகள் ஏற்ற டிசம்பர் 7ஆம் தேதி லிவர்மோரிலேயே கொண்டாடினோம். கார அப்பம்வெல்ல அப்பம் எனச் செய்துபூஜைகளை தடபுடலாகச் செய்தோம்.

மார்கழி பிறந்ததும் கடந்த வருடம் எங்கள் வில்லா வாசலில் தினமும் விதம் விதமாக வண்ணப் பொடிகளைக் கொண்டு கோலமிட்டதை நினைத்துக் கொள்வதைத் தவிர எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தேன்.

கடவுளுக்கு தினமும் கோலமிட என 1' X 1ஒரு பலகையும் வண்ணக் கோலப் பொடிகளும் கொண்டு வந்தது நினைவுக்கு வரவேகடைசி பத்து நாட்கள் மட்டும் தினமும் அந்தக் குட்டிப் பலகையில் வண்ணக் கோலங்கள் போட்டேன்.

டிசம்பர் மாத இறுதி வாரத்தில் Seattle செல்லும் திட்டத்தில் இருந்த மகளது குடும்பம்அந்த ஊரில் கடும் பனிப் புயல் காரணமாக விமானங்கள் பல நாட்கள் செல்லாத காரணத்தால் திடீர் முடிவெடுத்து காரில் புறப்பட்டு பீனிக்ஸ் வந்து சேர்ந்தார்கள். (750 மைல்கள் 11 மணி நேரம்)

அவர்களுடன் சில நாட்கள் ஊருக்கு உள்ளேயும் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள வெளி ஊர்களையும் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு நாளிரவு வீட்டிற்கு அருகிலிருக்கும் 3D mini golf என்னும் உள்விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று விளையாடினோம். அரங்கத்தை 3D effectல் அமைத்திருக்கிறார்கள். 3D கண்ணாடி அணிந்து கொண்டு விளையாட வேண்டும். ஒவ்வொரு bayவாகச் சென்று பந்தை குழிக்குள் தள்ள வேண்டும். யார் ஒரே முறையில் தள்ளுகிறாரோ அவருக்கு அதிக மதிப்பெண்கள். ஒரு காகிதத்தில் ஸ்கோரைக் குறித்துக் கொண்டே முன்னேறினால் (15-20) வெற்றி பெற்றவரை அறியலாம். குழு விளையாட்டு இது.

பந்து தள்ளுதல் ஆரம்பத்தில் சுலபமாகவும் அடுத்தடுத்து கடினமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. சுற்றிலும் நாம் நீருக்குள் இருப்பது போலத் தோன்றும் வகையில் அழகான murals வரையப்பட்டுள்ளன.

என் மகனின் வார்த்தைகளில் சொல்வதானால்: Time pass; என் வார்த்தைகளில்: ஆலையில்லா ஊருக்கு ...

போகிப் பண்டிகையன்று மருமகளின் வேண்டுகோளின் படி மகனுடன் Tempeயில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். Tempeயும் Phoenix நகரின் ஒரு பகுதி தான்.

Tempeயில் தான் Arizona State University உள்ளது. வழியெங்கும் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக இந்தப் பகுதி முழுவதும் அபார்ட்மெண்டுகளைக் கட்டி இருப்பதைக் கண்டேன்.

நாங்கள் சென்ற சமயம் கோவிலில் ஒரு நடனப் பள்ளியின் ஆசிரியையும் சிறுமிகளும் திருப்பாவைப் பாசுரங்களுக்கு விளக்கம் கூறி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் ஆங்கிலத்தில் விளக்கம் கூறப்பட்டது. நடனமாடும் சிறுமிகளின் பெற்றோர்களைத் தவிரப் பார்வையாளர்கள் யாரும் இல்லை என்று தோன்றியது. (கோவிலுக்கு வந்த ஓரிருவரையும் உஷ் உஷ் என விரட்டினார்கள்)

கோவில் என்பது ஒரு பெரிய கூடம். அதில் கடவுளர்களின் ஆளுயர திருவுருவச் சிலைகள் உள்ளன. அவற்றிற்கு முன்பாக நடனம் அடிக்க கொண்டிருந்ததால் தொலைவிலிருந்தே வழிபட்டு விட்டுக் கிளம்பினோம்.

இடையில் பொங்கல் பண்டிகையையும் கொண்டாடி முடித்தோம். தலைப் பொங்கல்அபார்ட்மெண்ட் வாசலில் பெரிய கோலம் வரைந்து வண்ணப் பொடியால் அலங்கரித்தேன்.

Stainless steel பாத்திரத்தில் மஞ்சள் கிழங்கைக் கயிற்றில் கட்டிப் பாலைக் காய்ச்சிகுக்கரில் பொங்கல் செய்தோம். நாங்கள் எங்கே மஞ்சள் ,கரும்புஇஞ்சி கிடைக்கிறது என்று துப்பு கிடைத்துச் செல்வதற்குள் தீர்ந்து விட்டது. வாழைப்பழம் எப்போதும் கிடைக்கும். நடுங்கும் குளிரில் மறுநாள் பால்கனியில் கனு வைத்தோம்நான்கு வெற்றிலைகள் $1 அல்லது $2 என விற்கப்படுகிறது.

பொங்கல் முடிந்த சில நாட்களில் காய்கறிகள் வாங்கக் கடைக்குச் சென்ற போது மாங்காய் இஞ்சிமஞ்சள்கரும்புசேனைக்கிழங்கு என அனைத்தும் இருந்தன. சேனை 1lb (pound) $6.99, மாங்காய் இஞ்சி 1lb = $5.99, முருங்கைக்கீரை ஒரு பெரிய பை $5.99 எனவும் விற்கப்படுகிறது. (1lb =453.500 கிராம்)

எங்கள் நடைப்பயிற்சியும்மருமகளது மருத்துவமனைப் பயணங்களும் மேலும் தொடர்ந்தன.

இடையில் குட்டிப் பாப்பாவை வரவேற்கும் நோக்கில் Registry பதிவு செய்திருந்தார் மகன். Crib, stroller, bibs, rubber sheet, rocking chair, car seat என ஒவ்வொன்றாகக் கூரியரில் வந்திறங்கின.

(ரமணி vs ரமணி தொடரில் ஒரு எபிசோடில் வருவது போல புதுமனை புகுவிழா என்றால் அனைவரும் கடிகாரம் வாங்கிப் பரிசளித்திருப்பார்கள். அது போல அல்லாமல் திருமணம்காது குத்து என எந்த விழாவாக இருந்தாலும் நமக்கு என்ன தேவையோ அவைகளை ஒரு பட்டியலாகத் தயார் செய்து அமேசான்/வால்மார்ட் போன்ற கடைகளில் பதிவு (Registry) செய்து வைத்து விட்டு அந்த linkஐ விழா அழைப்பிதழுடன் உறவினர் நண்பர்களுக்குப் பகிர வேண்டும்.

பரிசளிக்க விரும்புபவர்கள் அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ற பொருளுக்கான பணத்தைக் கடையில் செலுத்தி விட்டால் அந்தப் பொருள் நம் வீட்டை வந்தடையும். யாரும் வாங்கித் தராத பொருட்களை நாம் கடைசியில் வாங்கிக் கொள்ளலாம்மேல் நாடுகளில் இம்முறை மிகவும் பிரபலம்)

ஒரு நாள் எங்கள் மகனின் நண்பர் அனுப்பிய Green bay packers bib, socks ஆகியவைகளும் வந்தனCrib ஐத் தயார் செய்து அதன் மேல் Green bay துண்டை விரித்து ...  

நாம் தொடர்ந்து பொருட்கள் வாங்கும் கடைகளிலிருந்து பாப்பாவுக்கான feeding bottle, vitamin D, bib, பால் பவுடர், wet wipes போன்றவைகளும் gift ஆக வரத் தொடங்கின. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பெட்டிகளும் காரில் தயாராக வைக்கப்பட்டன.

மொத்தத்தில் நாங்கள் தயார்.    

பொங்கல் பண்டிகை முடிந்த ஒரு வாரத்தில் அங்கங்கே பூக்கள் பூக்கத் தொடங்கினகுளிர் குறையவில்லை என்றாலும் ஜனவரி இறுதி வாரத்தில் காகிதப்பூஆரஞ்சு மஞ்சள் சிவப்பு வண்ணப் பூக்கள் எல்லா இடங்களிலும் தென்படத் தொடங்கினசப்பாத்திக் கள்ளி கூடப் பூக்க ஆரம்பித்தது.

என் அமெரிக்கப் பயண நோக்கம் எதுவாக இருந்தாலும் முக்கிய உள்நோக்கம் இங்குள்ள நூலகங்களுக்குச் சென்று Large type எனப்படும் பெரிய அச்சில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படிப்பது. இம்முறை நிறையப் புத்தகங்களைப் படிக்க முடியவில்லை. 

இங்குள்ள நூலகங்களில் அந்தந்தப் பகுதியில் (county) உள்ள மக்கட்தொகைக்குத் தகுந்தவாறு பல்வேறு மொழிப் புத்தகங்களை வைத்திருப்பார்கள்இம்முறை ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மட்டுமேForeign languages என்ற பகுதி இல்லை (கலிபோர்னியாவின் லிவர்மோர் நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிப் புத்தகங்களே இருந்தன)

கடந்த வருடம் என் ஐரோப்பியப் பயணக் கட்டுரைகளை Photobook ஆக மகனது உதவியுடன் அச்சிட்டேன். அதற்கு நண்பர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக நான் 2013ஆம் ஆண்டிலிருந்து என் facebook மற்றும் blogல் வெளியிட்ட பதிவுகள் அனைத்தையும் Photobook ஆக இந்த ஆறு மாதங்களில் அச்சிட விரும்பினேன்.

தலைப்பு வாரியாகக் கணினியில் ஏற்கனவே பிழை திருத்தம் செய்து சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களை மீண்டும் ஒரு முறை பிழை திருத்தி வண்ண மயமாக்கி jpeg fileகளாக மாற்றி photobook ஆக மற்றும் வேலையை அக்டோபர் கடைசி வாரத்தில் இங்கு வந்திறங்கிய நாளிலிருந்தே ஆரம்பித்தேன்.

பகல் நேரத்தில் கனடாகலிபோர்னியா வந்திருக்கும் தோழிகளுடனும் நடைபயிற்சி நேரத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்களுடனும் குறிப்பாக என் தாயாருடனும் பேசுவேன்.

பொங்கலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு சென்ற check upல் மருமகளது ரத்தக் கொதிப்பு ஒரே சீராக இல்லை எனக் கூறப்பட்டது. Blood, urine எனப் பரிசோதனைகள் செய்தார்கள். இங்கே முடிவுகள் சாதாரணமாக இருந்தால் ஈமெயில் மட்டும் அனுப்புவார்கள். ஏதேனும் பிரச்சினை என்றால் மட்டுமே தொலைபேசியில் அழைத்துக் கூறுவார்கள்.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகும் இரண்டு நாட்களுக்கு யாரும் தொடர்பு கொள்ளாததால் நாங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

38ஆவது வாரம் ஆரம்பித்து விட்ட நிலையில் மருமகளின் உடல் நிலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை . ரத்தக் கொதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டதே தவிர அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் நாங்களும் அவருக்காக உணவில் உப்பைக் குறைத்து உண்டோம்.

24/7 எப்படி இருக்கிறாய் உடல்நிலையில் மாற்றம் தெரிகிறதா என அவ்வப்போது மருமகளை விசாரித்துக் கொண்டே இருப்போம்.

ஜனவரி 22, 2023. அதிகாலை 5.30 மணிக்கு மகன் அறையிலிருந்து எழுந்து வந்து எல்லா விளக்குகளையும் போட்டதும் என் கணவர் பதறி எழுந்து என்னவோ வித்தியாசமாக நடந்திருக்கிறது எழுந்திரு என என்னையும் எழுப்பினார்.

பரிசோதனை முடிவுகள் வெளி வந்து மூன்று நாட்களாகியும் அதைக் கண்ணால் கூடக் கண்டிராத மருத்துவர் அன்று அதிகாலை தான் பார்த்துள்ளார் போலும். முடிவுகள் சரியாக இல்லை. காலை எட்டு மணிக்கு மருத்துவமனையில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

எப்போதும் பேசாத மருத்துவரின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததால் தெரியாத எண் என மகன் பேசாமல் விட்டிருக்கிறார். மருத்துவர் வாய்ஸ் மெயில் போட்டு திருப்பி அழைக்கச் சொல்லவே பேசி இருக்கிறார். மருத்துவர் இந்தியர். மனிஷா ...... (Second name வேண்டாமே)

செயற்கையாகப் பிரசவ வலியை ஏற்படுத்தப் போகிறோம். 24 - 72 மணி நேர முயற்சி இது. தயாராக வாருங்கள் என மருத்துவர் கூறவே சாப்பாட்டு மூட்டைகளுடன்மகளுக்குத் தகவல் அனுப்பி விட்டுகாலை 7.30 மணிக்கு -1 டிகிரி குளிரில் (ஆனால் சூரியனார் தென்பட்டார்) மருத்துவமனையை நோக்கிக் கிளம்பினோம்.

Mountain Vista Medical Center, Mesa.

அனுபவங்கள் தொடரும்