26-27 ஏப்ரல்,2018
ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய பயணத்தின் இறுதி நாள்.
தங்கும் விடுதியிலேயே காலை உணவை முடித்துக் கொண்டு Scenic World, Blue Mountainsஐ நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.

பயண நேரத்தில் அங்கே என்ன இருக்கிறது என்ன செய்ய போகிறோம் என்பதை அறிந்து கொண்டே செல்லலாம்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Blue mountainsல் உள்ள கடூம்பா(Katoombaa) என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த Scenic World National Park. உலகின் புராதன சின்னங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்றது இந்த இடம். (World Heritage Site -UNESCO)
சிட்னி நகருக்கு மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி 1880களில் நிலக்கரி மற்றும் கனிம சுரங்கமாக தனியாருக்கு சொந்தமான இடமாக இருந்தது. தற்போது பொது மக்களின் பார்வைக்காக உள்ளது.
Jamison valley, Katoomba falls, Three Sisters (Sand stone hills) போன்றவைகளுடன் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த மழைக்காடுகளை உடையது இந்தப் பகுதி. இதுவும் வித்தியாசமான நிலப் பரப்பு என்றே சொல்லலாம். அடர்த்தியான யூக்கலிப்டஸ் மரங்களை இங்கே காணலாம்.
இந்த Scenic Worldஐ நாம் நான்கு விதமாகக் காணலாம். ரயில், Skywalk, Cable car மற்றும் நடை. புராதனமான இந்த மழைக்கு காடுகளை நடந்து சென்று காண்பதற்காகவே நல்ல பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன.முன்னாட்களில் நிலக்கரி சுரங்கமாக இருந்த பகுதி என்பதால் ஆழமான ரயில் பாதை அமைக்கப் பட்டு வேலை செய்பவர்கள், கரி போன்றவற்றின் போக்குவரத்துக்காக அமைக்கப் பட்ட 52 டிகிரி கோணத்தில் அமைக்கப் பட்ட ரயில் பாதை தற்போது உல்லாச பயணிகள் Jamison பள்ளத் தாக்கை கடந்து சென்று காண உதவுகிறது. அந்த மலையின் மிக உயரமான பகுதியான Eagle way Look out. அங்கே மூன்றுக்கும் பொதுவாக ஒரு ஸ்டேஷன் உள்ளது.
பேருந்தில் அந்த இடத்தை அடைந்ததும் சிறிது தொலைவு நடந்து சென்று முதலில் நாங்கள் ரயிலில் உயரத்திலிருந்து பள்ளத்திற்கு பயணிக்க உட்கார்ந்தோம். இந்த ரயில் Winch முறையில் செயல்படுகிறது. Steepest Funicular எனப் பெயர் பெற்றது இந்த ரயில் பாதை.Seat belt அணிந்து நாங்கள் அமர்ந்ததும் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் மூடப்பட்டன. Roller Coaster போல சர சரவெனப் பள்ளத்தை நோக்கி 310 மீட்டர்கள் (1020 அடி) இறங்கி சென்றது அந்த ரயில். பயந்து கொண்டே ஜன்னலில் தெரிந்த காட்சிகளை கண்ட வண்ணம் பயணித்தோம்.
அடிவாரத்தில் Jamison பள்ளத்தாக்கில் உள்ள நிலையத்தில் இறங்கினால் அருகிலேயே Broadwalk என்றழைக்கப் படும் நடை பாதை. 2.4 கிலோமீட்டர்களுக்கு நடந்து சென்று வனத்தையும் அதிலுள்ள Lyre போன்ற பறவைகளையும் மற்ற செடிகளையும் விலங்குகளையும் மிக அருகில் கண்டு வரலாம்.தற்சமயம் இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு விட்டன. Cable car நிலையம் அருகிலேயே உள்ளது. அங்கே நடந்து செல்லும் வழியில் நிலக்கரி வெட்டி எடுக்க பயன்பட்ட ஆயுதங்கள், மற்ற விவரங்களை அங்கங்கே வைத்துள்ளார்கள்.

அவற்றை படித்தவாறே சிறிது தொலைவு நடந்து சென்றால் மீண்டும் மேலே ஏறி செல்ல Cable car நிலையம் உள்ளது. 84 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான இந்த கேபிள் காரில் ஏறி பள்ளத் தாக்கின் மேல் பகுதிக்கு சென்றோம். Orphan rock, சுண்ணாம்பு பாறை படிவங்கள் போன்றவற்றை கண்டவாறே மேலேறினோம்.
அங்கே உள்ள Restaurantல் இந்திய உணவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சப்பாத்தி, பரோட்டா போன்றவைகளுடன் சில கூட்டு வகைகளும் பழங்களும் வழங்கப்பட்டன.

மீண்டும் சிறிது தொலைவு நடந்து வந்து Eagle Lookout ஸ்டேஷனில் Scenic Skywalk Cabinல் ஏறி கடூம்பா நீர்வீழ்ச்சி, Three sisters என அழைக்கப் படும் மூன்று சுண்ணாம்புக்கல் குன்றுகள் ஆகியவற்றை அடர்ந்த யூகலிப்டஸ் போன்ற மரங்களிடையே கண்டு மகிழ்ந்து கீழிறங்கினோம்.
இந்த skywalk cabin கண்ணாடியால் ஆன 72 பேர் செல்லக் கூடிய ஒன்று. தூரம் செல்ல செல்ல இதன் கூரைப் பகுதி transparent ஆக மாறி கீழுள்ள காட்சிகளை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது.
நின்று கொண்டே பயணம் செய்யும் வகையில் அமைந்த கண்ணாடி கூடு போன்றது இந்த கேபின்.

இங்குள்ள மூன்று ரைடுகளுமே "திக் திக்" ஒற்றைக் கம்பி வகை தான். கீழிறனும் வரை உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை
கடூம்பா என்பது Aborigines எனப்படும் பழங்குடி மக்களின் மொழி வார்த்தை. இந்தப் பகுதியில் பழங்குடி மக்கள் வசிப்பதாக அறிகிறோம். அவர்கள் நாகரிக வாழ்க்கையை தவிர்த்து விட்டு காடுகளில் ஒளிந்து வாழ்கிறார்கள்.
Blue Mountains பகுதிக்கு செல்லும் வழியெங்கும் பழங்குடி மக்களின் மொழியிலேயே ஊர்களின் பெயர்கள் காணப்பட்டன

வழியெங்கும் தென்பட்ட அடர்ந்த காடுகளும், சிவப்பு, மஞ்சள் நிற பூக்களுடன் கூடிய மரங்களும் கலிபோர்னியா மாகாணத்தின் இலையுதிர் காலத்தை நினைவு படுத்தின.
இந்த மூன்று பயணங்களையும் முடித்துக் கொண்டு வெளியில் காத்திருந்த பேருந்தில் ஏறி Featherdale Wildlife Park ஐக் காண சென்றோம்.
ஏறக்குறைய ஒரு மணி நேரப்பயணத்தில் அந்த இடத்தை அடைந்தோம். ஆஸ்திரேலிய கண்டத்திற்கே உரித்தான பறவைகள் விலங்குகள் ஆகியவற்றிற்கான சிறப்பிடம் இந்த வனவிலங்குப் பூங்கா.

கங்காரு, கோலா கரடி, Pharma Wallaby, Kookaburra, Emu போன்ற வித்தியாசமான பறவைகள் மிருகங்களைப் களைப் பார்த்தோம்.
கங்காருக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் சென்ற சமயம் கங்காரு குட்டி ஒன்று தன் தாயின் வயிற்றிலிருந்து யார் வந்திருக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டி பார்த்தது. அதன் தாய் தன் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ என பயந்து தலையை உள்ளே அழுத்தி மறைத்து வைத்தது.

மனிதக் குழந்தைகளை போல தான் அவைகளும். தாய் சொல்லை கேட்காமல் எட்டி எட்டி பார்க்கவே தாய் நன்றாக அதன் தலையை தன்னுடைய வயிற்று பைக்குள் அழுத்தி விட்டு நகர்ந்து சென்றது.
கோலா கரடியுடன் புகைப்படம் எடுத்து கொள்ள 20A$. கோலா கரடியை தொடுவது அங்கே சட்டப்படி குற்றம்.
கோலா கரடி சோம்பேறி தனமாய் அமர்ந்து கொண்டும் நிதானமாய் நகர்ந்து கொண்டும் இருந்தது.
[அதை பார்த்ததும் பெரிய பேரன் தன் சிறு வயதில் தினமும் இரண்டு முறையாவது கேட்டு விட்டு தூங்கிய சிறுவர்களுக்கான "Curious George went to the zoo " கதை தான் நினைவுக்கு வந்தது.

குரங்கு கோலா கரடியை காண பூங்காவுக்கு சென்று தன்னுடைய curiosity (ஆர்வக் கோளாறு ?!) காரணமாக என்னென்ன செய்கிறது அங்கே என கதை. கோலா கரடியின் பழக்க வழக்கங்கள் பற்றி கதையில் வரும்.]
பறவைகளுக்கு நாம் கொண்டு செல்லும் உணவுகளை அளித்து துன்புறுத்தாமல் அவைகள் எப்போதும் உண்ணும் உணவுகளை பூங்காவிலுள்ள கடையில் விற்பனை செய்கிறார்கள். நாம் அதை வாங்கி பறவை, விலங்குகளுக்கு அளிக்கலாம்.

சிட்னிக்கு திரும்பும் வழியெங்கும் சிற்றூர்கள்; அங்கங்கே சாலைகள் கூடுமிடங்களில் ரௌண்டனாக்கள் இருந்தன.
மாலை 4.30 மணியளவில் சிட்னி ஓபரா ஹவுஸ் அருகில் இறக்கி விடப் பட்டோம். வழக்கம் போல் சீக்கிரம் பார்த்து விட்டு வாருங்கள், Night Cruise செல்ல நேரமாகி விடும் என அவசரப் படுத்தினார்கள் பயண அமைப்பாளர்கள்.

இந்த opera house ஒரு multi venue performing arts centre. இது ஓபரா நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல் வேறு பல நிகழ்வுகளும் நடை பெறும் இடமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக கருதப் படுகிறது.
இந்தக் கட்டிடம் 20 அக்டோபர், 1973 அன்று எலிசபெத் மகாராணியால் திறந்து வைக்கப் பட்டது. சிட்னி துறைமுகத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தை ஒட்டி CBD, Sydney Harbour bridge , Royal Botanic gardens ஆகியவை உள்ளன.
இந்த கட்டிடத்தின் அமைப்பு தூரத்திலிருந்தும் வானிலிருந்தும் பார்க்கையில் இதழ்கள் விரிந்த வெண் தாமரை மலரைப் போல உள்ளது. அருகில் சென்று பார்க்கையில் வித்தியாசமாக வெளிர் மர வண்ணத்தில் அடர் மர வண்ணக் கோடுகளுடன் இருக்கிறது. (Brown color)

ஓபரா நிகழ்ச்சி எதாவது பார்த்தீர்களா என்று பலரும் வினவினார்கள். அது போன்ற நிகழ்ச்சி நடைபெறும் நாளில் நாம் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்து அனுமதி சீட்டு முன் பதிவு செய்திருக்க வேண்டும். நடை முறையில் சாத்தியமே இல்லை.
[ஓபரா என்றதும் "Penthouse" என்னும் கொரிய தொலைக்காட்சி சீரியலில் ஓபரா நிகழ்ச்சிகளில் பாடுவதற்காகவே சிறப்பு பள்ளிகள் எப்படி மாணவர்களை திறமை அடிப்படையில் சேர்க்கை நடத்துகின்றன, பாடங்களை எப்படி நடத்துகிறார்கள், பாடுபவரின் குரல் வளம் எப்படி இருக்க வேண்டும் என படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

உச்ச பட்ச சுருதியில் கீச்சு கீச்சென்று புரியாமல் பாடுகிறார்களே என நான் முன்பு நினைப்பேன். இந்த தொடரை பார்த்து முடித்த பிறகு ஓபரா பாடகர்கள் மேல் என் மதிப்பு கூடி விட்டதென்னவோ உண்மை. உச்ச குரலில் கமகங்கள் எனப்படும் நெளிவு சுளிவுகளுடன் பாடுவது தனிக் கலை. வித்தியாசமான, நமக்கு இது வரை தெரியவே தெரியாத பல அரிய தகவல்கள் கிடைத்தன]
இந்த இடத்திலிருந்து பார்த்தாலே பாலம் நன்றாக பின்னணியில் தெரிகிறது. இந்தியன் திரைப்படத்தில் இந்த பாலத்தின் மேல் "டெலிபோன் மணி போல்" எனத் தொடங்கும் பாடல் காட்சியை படமாக்கி இருப்பார்கள்.

இந்த Steel Arch பாலம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றிருந்தால் பாலத்தின் மேலடுக்கில் நடந்து சென்று நகரையும் சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். இந்த பாலத்துக்கு அருகிலேயே துறைமுகம் இருப்பதால் harbour bridge என பெயர். தினமும் நடைபெறும் இந்த பாலத்தின் மேலேறும் வைபவம் கிழக்கு பக்கமாக ஆரம்பித்து மேற்கில் முடிகிறது. இந்த பாலத்தின் மேலடுக்கில் ஏறி இறங்கி கடந்து செல்ல 3.30 மணி நேரங்களாகும். ஏற விரும்புபவர்களை கிளம்பும் முன் பாலத்தோடு சேர்ந்து இணைத்து விடப்படுகிறார்கள்.
1932 ஆம் ஆண்டு திறக்கப் பட்ட இந்த பாலத்தில் ரயில், சைக்கிள், மற்ற வாகனங்கள், பாதசாரிகள் என அனைத்து விதமான போக்குவரத்தும் உண்டு.
இந்த பாலத்தை ஓபரா ஹவுஸ் அருகிலிருந்து மாலை சூரிய ஒளியில் கண்டு மகிழ்ந்து விட்டு ஓபரா ஹவுஸை வெளியிலிருந்தே சுற்றி பார்த்து, தொட்டு பார்த்து, புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

நிதானமாக நான் கூறிய மேற்கண்ட சம்பவங்கள் 20 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து நாங்கள் பேருந்திற்கு திரும்பி வந்திருந்தோம் .
அங்கிருந்து கிளம்பி சிட்னி Darling ஹார்பரில் படகுகள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பகுதி CBD யில் அமைந்துள்ளதால் சுற்றிலும் உலகின் பிரசித்தி பெற்ற வங்கிகளும் சாப்ட்வேர் நிறுவனங்களும் உள்ளன.
தொலைவில் தெரிந்த Sydney Tower Eye மற்றும் பல முக்கியமான கட்டிடங்கள் இரவு நேர வண்ண விளக்கொளியில் ஜொலித்தன.
சிட்னியில் வருடம் ஒரு முறை வண்ண விளக்கு திருவிழா நடைபெறுகிறது. இரவு நேர சிட்னியை வேடிக்கை பார்த்தவாறே படகில் ஏறினோம்.
சரி ...cruise படகில் செல்லலாமா ?

பயண நேரம் முழுவதும் நடன நிகழ்ச்சியும், உணவக வசதியும் உடைய மிகப் பெரிய cruise படகு அது.
ஏறிய சிறிது நேரத்தில் திரைப்படங்களில் பார்ப்பது போல மேடையில் நடனக் குழுவினர் ஆடுவதை பார்த்து ரசித்துக் கொண்டே உணவை உண்ண ஏற்பாடு செய்யப் பட்டது.
நடனம் என்பது சுவாரசியமாக இல்லை என்பதால் சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டு படகின் வெளிப்புறமாக சென்று சிட்னியின் இரவு காட்சிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.
பாலத்திற்கு அடியில், ஓபரா ஹவுஸ் அருகில் என அங்கும் இங்குமாக அந்த துறைமுகத்தில் 2.30 மணி நேரங்கள் சலிக்க சலிக்க சுற்றி காட்டினார்கள்.
அருகிலிருக்கும் சில தீவுகளுக்கு அருகிலும் படகு சென்றது. சற்றே இருட்டான பகுதிகளிலும் சென்றது. வெளியில் பார்க்க எதுவும் இல்லாத போது உள்ளே வந்து நடனத்தை பார்த்தோம்.

இந்தியர்களான எங்களுக்காக இந்திய நடனம் என ஒரு ஹிந்தி பாடலுக்கு நம் கலாச்சாரத்திற்கு சம்மந்தமே இல்லாத உடைகளை அணிந்து வந்து சம்மந்தமே இல்லாத அசைவுகளை கொடுத்து நடனம் ஆடினார்கள்.
ஒரு வழியாக 2.30 மணி நேரங்கள் கழித்து துறை முகத்தில் இறக்கி விடப்பட்டோம். தலையே சுற்றுவது போல இருந்தது.
இரவு ஓய்வுக்கு பிறகு மறுநாள் காலை 27 ஏப்ரல்,2018 Kualalumpurஐ நோக்கி கிளம்பினோம்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் போது கோலாலம்பூர் சிட்னி மார்க்கத்தில் எங்களுக்கான சைவ உணவை உடன் வந்தவர்கள் யாரோ எடுத்துக் கொண்டதால் எங்களுக்கு உணவில்லாமல் போனது என கூறியிருந்தேன். அதை தவிர்க்க திரும்பி செல்லும் போது சரியான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு Tour மேனேஜர் பெண்மணியிடம் குறிப்பிட்டு சொல்லி இருந்தேன்.

சீக்கிரம் செக் இன் செய்தால் சைவ உணவு கிடைக்கும் என்கிறார். கௌண்ட்டரில் கேட்டால் 25 உணவுகளும் ஏற்கனவே தீர்ந்து விட்டது என்றார்கள். பலருக்கும் இந்த பிரச்சினை.எனக்கு கடும் கோவம் Tour மேனேஜர் பெண்மணியை திட்டி தீர்த்து விட்டேன். ஒழுங்கான உணவு எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக கூறினேன்.

அவருடன் வந்த உதவியாளர் நாங்கள் எங்களுக்காக Fruit palette ஏற்பாடு செய்திருக்கிறோம், அதை உங்களிடம் தந்து விடுகிறோம் என்றார். (மீண்டும் ஏகாதசி ?!)
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சகோதரி ஒருவர், என்னுடைய சைவ உணவை உங்களுக்கு தருகிறேன் , கணவருடன் பகிர்ந்து உண்ணுங்கள் என்று கூறினார்.( நன்றி சகோதரி)
என் கோபத்தின் ஆயுள் எப்போதும் மிக சில நிமிடங்களே. உடனே மறந்து விட்டு அடுத்த வேளையில் கவனம் செலுத்த தொடங்கி விடுவேன்.

சிட்னி விமான நிலைய காத்திருப்பு நேரத்தில் அங்கிருந்த duty free கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது Opal நகைகளை ஒரு கடையில் விற்றுக் கொண்டிருந்ததை கண்டு அருகில் சென்று விசாரித்தேன்.
நகருக்குள், கடை வீதிகளில் A $ 200-300 என்று கூறப்பட்ட opal pendant உடன் கூடிய சங்கிலியை இங்கே A $ 60 க்கு கொடுத்தார்கள். ஏற்கனவே நான் கூறியுள்ளபடி ஒரு opal கல்லை போல மற்றது இருக்காது என்பதால் சங்கிலிக்கு ஏற்ற தோடுகளை இன்றளவும் வாங்க இயலவில்லை.

விமானத்தின் கேமராவில் தெரிந்த காட்சிகளைக் காண ஆரம்பித்தேன். நிலப்பரப்பு முடிந்து கடல் தொடங்கும் இடத்தை திரையில் கண்ட நேரம் ஜன்னல் வழியே தரையை பார்த்தேன். நிலப்பரப்பு முடிந்து கடல் தொடங்கிய இடத்தை புகைப்படம் எடுத்தேன். அரிய காட்சியை document செய்ததில் இன்றளவும் மகிழ்ச்சி.
புவியின் தென் அரைக்கோளத்திலிருந்து வட அரைக்கோளத்தை கடக்கும் இடத்தையும் திரையில் கண்டேன்.
ஐரோப்பிய பயணத்தை போல ஆஸ்திரேலியபயணத்தில் உணவுக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப் படவில்லை. பயண நேரத்தில் உணவு சுமாராகவேனும் இருந்தால் தான் பயணம் இனிக்கும் என்பது என் கருத்து.

பருப்பு பொடியும் இதயம் நல்லெண்ணையும் போகுமிடமெல்லாம் உடன் எடுத்து சென்று ஊர் சுற்றி பார்ப்பதை போன்ற அசௌகரியம் எதுவும் இல்லை. தயிர் என Mayonnaise தந்தார்கள். அரை குறை பட்டினியுடன் ஆஸ்திரேலியப் பயணம் நிறைவுற்றது.
பயண நேரங்களில் பல அசௌகரியங்களை கடந்து தான் செல்ல வேண்டும் என்றாலும் அதுவே பிரதானமாக இருந்தால் ??
இந்தப் பயணத்தில் குறை என்று பார்த்தால் இது மட்டும் தான். மற்றவை நிறைகளே.
ஆஸ்திரேலியப் பயண நேரங்களில் நான் காண நேர்ந்த சில விவரங்களையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

மரங்கள் இருக்கும் அளவுக்கு பூக்கள் அதிகம் காணப்படவில்லை. சாலைகளுக்கு நடுவில் உள்ள median களில் கூட மரங்களை தான் நட்டு வைத்துள்ளார்கள். ஒரே ஒரு வீட்டில் மட்டும் ரோஜா பூக்களை பார்த்தேன்.
மக்கள் குடும்பம் குடும்பமாக தென்படுகிறார்கள். தாத்தா பாட்டியுடன் பேரக் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக என Family Oriented ஆக உள்ளார்கள். எங்களை இந்தியர்கள் என புரிந்து கொண்டவர்கள் எங்களை பார்த்து புன்னகைத்தார்கள்.
பல நாடுகளிலிருந்தும் குடியேறிய மக்கள் இந்தக் கண்டத்தில் வசிக்கிறார்கள்.
[நம் நாட்டிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு நெருங்கிய தொடர்பு எப்படி ஏற்பட்டது என சில வருடங்களுக்கு முன் Madras Musings என்னும் பெயரில் சென்னையின் வரலாறு பற்றிய குறும் பத்திரிகையில் படிக்க நேர்ந்ததை உங்களுடன் இங்கே பகிர விரும்புகிறேன்.
டாக்டர் திரு A.ராமன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட காரணத்தால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகவும் தொடர்புடையதாக இருந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து குற்றவாளிகள் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டிலேயே இந்திய மக்கள் அங்கு குடியேற தொடங்கி இருக்கிறார்கள்.

1838ல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் (An early migration of a more formal nature took place in 1838 when the Government of New South Wales agreed to take seven boys, not less than 12 years of age, and of ‘pure European descent’, from the Madras Military Male Asylum.) அங்கே குடியேற்றப் பட்டிருக்கிறார்கள்.
எட்வர்ட் ராய் ராம்சாமி என்பவர் மும்பையிலிருந்து அங்கே குடியேறியுள்ளார். ராம்சாமி தமிழ்ப் பெயர் என்பதால் அவர் மதராசிலிருதே சென்றிருக்க வேண்டும் என்பது அனுமானம்.[சென்னையிலிருந்து எனக்குத் தெரிந்த பலரும் குடும்பம் குடும்பமாக அங்கே குடியேறியுள்ளார்கள். காரணம் இப்போது தான் புரிகிறது.]
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆங்கிலேயர்களுக்குத் தேவையான குதிரைகள் நியூ சௌத் வேல்ஸிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது.
http://www.madrasmusings.com/]
எல்லா ஊர்களிலும் பழங்கள், காய்கறிகள் நிறைய உள்ளன .சில இடங்களில் திராட்சை கொடிகளை பார்த்தேன். ஆஸ்திரேலியாவில் பேரிக்காய் அதிகளவில் காணப்பட்டது.

எல்லா இடங்களிலும் இந்திய உணவுகள் கிடைத்தன.
பால் பொருட்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில் இங்கே அதிகம். Australia Cement Factories/ Container lorries அடிக்கடி கண்ணில் தென்பட்டன.
டாஸ்மேனியாவில் பழ மரங்கள் நிறைய உண்டு என்று சொன்னார்கள்.
IT companyகளும் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன.
பெருநகரங்களுக்கு நடுவே ஆறு ஓடுகிறது. பல ஆறுகள் கடலை நோக்கி சென்று கலக்கின்றன. டெல்டா பகுதிகள் வளமையாக உள்ளன.
வேறெந்த கண்டத்திலும் இதுவரை கண்டிராத வகையில் கடற்கரை பகுதிகளிலும் சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் பறவைகளும் விலங்குகளும் தன்னிச்சையாக மனிதர்களை பற்றிய பயம் இல்லாமல் அங்கங்கே அலைந்து கொண்டும் பறந்தும் கொண்டும் இருப்பதை கண்டோம்.
நம் நாட்டில் கோழி, ஆடு மாடுகள் தெருக்களில் நடந்து செல்வது போல கங்காருக்களும் மற்ற பறவைகளுடன் பயமில்லாமல் நடந்து கடந்து செல்கின்றன.
அங்கங்கே தென்பட்ட பெயர்பலகைகளில் வேறு மொழி வார்த்தைகள். உதாரணமாக கடூம்பா (Katoomba). பழங்குடியினரின் மொழி? Boomerang வடிவ கலைப்பொருட்கள் கடைகளில் தென்பட்டன.
விடுதியில் Tv பார்க்க எண்ணியபோது கண்ணில் பட்டவை Blacklist (US), Mike & Molly (US), MasterChef Australia, Australia’s next top model போன்ற நிகழ்ச்சிகளே. இவற்றில் பல நிகழ்ச்சிகளை Australia Plus என்னும் சானலில் சென்னையில் என் வீட்டிலேயே காண்கிறேன். உலகம் மிக சிறியதாகி விட்டது.
ஆஸ்திரேலியா நாம் நினைக்கும் வண்ணம் பாலைவனம் மட்டும் அல்லாமல் பலவகையான நில அமைப்புக்களை கொண்டுள்ளது.

Great Barrier Reef எனப்படும் பிரசித்தி பெற்ற பவழப் பாறைகள் இந்தக் கண்டத்தின் வட கிழக்கு பகுதியில் உள்ளன. சிறந்த சுற்றுலா தலம் என்றாலும் underwater diving தெரிந்தவர்களால் மட்டுமே அதை அருகில் சென்று காண முடியும்.
தற்சமயம் அங்கே செல்வது சுலபமாகி விட்டது.
சுற்றுலாப் பயணிகளுக்கும் 1-2 வருட multiple entry visa வழங்கப் படுகிறது.
சிறந்த பல கல்விக் கூடங்களும் பல்கலைக் கழகங்களும் இங்கே உள்ளதால் உலகெங்கிலிருந்தும் மக்கள் கல்வி கற்க செல்கிறார்கள்.
விளையாட்டு துறையும் இங்கே சிறப்பாக செயல்படுகிறது.

சிட்னி நகரின் போக்குவரத்து கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.
Park Long, Park Short, Street park, Stadium களில் இரவு நேரங்கள் மட்டும் பொது மக்களுக்கு பார்க்கிங் செய்யும் வசதி என பலவும் உள்ள போதும் பார்க்கிங் கட்டணம் ஒரு நாளுக்கு 50A$ என்ற காரணத்தால் மக்கள் public transport களையே முடிந்த வரை உபயோகிக்கிறார்கள். Sydney Cricket Ground ஐ காண சென்ற போது stadium parking பொது மக்களுக்கு வாடகைக்கு விடப் படுவதைக் கண்டோம்.
இப்படி மேலும் பல செய்திகளை கூறிக் கொண்டே போகலாம்.

பயண நேரத்தில் அவ்வப்போது Fruit palatteல் இருந்த பச்சை ஆப்பிள் சிவப்பு ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய், கிவி. ஸ்ட்ராபெரி, தர்ப்பூசணி துண்டு, பப்பாளி, டிராகன், பம்பளிமாஸ் பழங்களையும், எங்களுடன் வந்த சகோதரி பகிர்ந்து கொண்ட ஒரு உணவையும் உண்டு சமாளித்து 8.15 மணி நேரப் பகல் பயணம் முடிந்து கோலாலம்பூரில் மாலை வந்திறங்கினோம்.
சில மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னையை நோக்கிய பயணத்தை 27 ஏப்ரல்,2018 இரவு தொடர்ந்து அதிகாலை சென்னையை வந்தடைந்தோம். [இந்த பயண நேரத்தில் நல்ல உணவு விமானத்தில் வழங்கப் பட்டது.]
மற்றொரு புதிய இனிய பயண அனுபவம்.



































