Friday, 14 February 2025

திரைகடலோடி...(பகுதி 2)


25/12/2024

Nassau, Capital city of the commonwealth of the Bahamas

வட அமெரிக்க நாட்டின் Fort Lauderdale துறைமுகத்திலிருந்து ஏறக்குறைய 1.5 நாட்கள் உல்லாசக் கப்பல் பயணம் முடிந்து, மூன்றாவது நாள் காலை நேரெதிரில் பஹாமாஸ் நாட்டின் தலைநகரான Nassau (NASS-aw) தெரிந்தது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் சில கட்டிடங்களிலும் துறைமுகத்திலும் Holiday lighting ஜொலிக்க அந்த நகரைக் கண்ட போது உலகின் மற்றொரு நாட்டில் கால் வைக்கப் போகிறோம் என மிக மகிழ்ச்சியாக இருந்தது. பால்கனியில் நின்றபோது அந்த நேரத்திலேயே நம் தமிழக ஊர்களைப் போல சற்றே வெப்பம் கலந்த காற்றடித்தது. அன்றைய தினம் அதிகபட்ச வெயில் 72 டிகிரி பாரன்ஹீட் என weather.com காட்டியது.

சில வருடங்களுக்கு முன்பு Netflixல் கண்ட ஒரு துப்பறியும் தொடரில் லண்டனிலிருந்து ஒரு துப்பறிவாளர் கரீபியன் தீவு ஒன்றிற்கு ஒரு கொலையைக் கண்டு பிடிக்க வருவார். Suit அணிந்த படி வியர்க்க விறுவிறுக்க வலம் வரும் அவரைக் கண்டு போலீசாரும் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கும் தீவு மக்களும் கேலி செய்வார்கள். அங்குள்ள தொலைகாட்சியில் 90, 92, 94 ,95 டிகிரி வெயில் என வரும். அந்தத் தொடரைக் கண்ட பிறகே மேலை நாட்டு மக்கள் மிதமான வெயிலுக்காகத் தான் கூட்டம் கூட்டமாக கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன்.(தென்னிந்தியாவிற்கு வாருங்கள், வருடம் முழுவதும் 90-100 டிகிரி வெயில் இருக்கும் என மனதில் நினைத்துக் கொண்டேன்) நாமும் என்றாவது ஒரு நாள் அங்கே செல்வோம் என எண்ணியதே இல்லை.

முதள் நாளிரவே பேசி முடிவு செய்தபடி காலை 7.30க்கே உணவகத்தில் கூடி காலை உணவை முடித்துக் கொண்டு நாள் முழுவதற்கும் தேவையான உடைகள், கடலில் குளித்தால் துடைத்துக் கொள்ள துண்டுகள், தொப்பி, தண்ணீர் பாட்டில்கள், பாஸ்போர்ட் மற்றும் Room cardகளுடன் கப்பலை விட்டுக் கீழிறங்கி சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். முன்பே கூறியபடி இந்த கார்ட் தான் நாம் கப்பலை விட்டு இறங்கவும் மீண்டும் கப்பலுக்குள் ஏறவும் உதவும்; பாஸ்போர்ட் செல்லாது. Deck 1ல் நம் கார்டைக் காட்டி துண்டுகளை வாங்கிக் கொண்டு கப்பலை விட்டுக் கீழிறங்கினோம். கப்பலிலிருந்து எந்த விதமான உணவுப் பொருட்களையும் வெளியில் கொண்டு செல்லவோ, உள்ளே வரும்போது கொண்டு வரவோ கூடாது. (சர்வ தேச விமானப் பயணத்திற்குரிய அதே விதிகள் தான் இங்கும்)

நகரின் உள்ளே செல்வதற்கு முன்பாக இந்த நாடு/நகரம் பற்றிய சில விவரங்களைப் பகிர்கிறேன்.

பஹாமாஸ் நாடு பல தீவுகளால் ஆனது. கரீபியன் கடலில் இவைகள் இல்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் காரணமாக கரீபியன் நாடுகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பின்னர் இங்கே உள்ள வயல்களில் விவசாயம் செய்ய அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளின் வம்சாவளியினரே ஆவர். அவர்களுக்கு அடுத்ததாக ஆங்கிலேயர்கள். பிரிட்டனின் காலனியாக இருந்து விடுதலை பெற்று தற்போது Charles III என்னும் அரசரின் கீழ் பிரிட்டனின் பார்லிமெண்ட் அமைப்பு போல Governor Generalன் தலைமையில் உள்ளது. நாங்கள் கண்ட வரையில் ஆப்பிரிக்க மக்களும் mixed race மக்களும் அதிகம் தென்பட்டனர். வட அமெரிக்கா கியூபா நாட்டிற்குச் சுற்றுலா செல்வதற்குத் தடை விதித்த பிறகு பஹாமாஸ் நாட்டிற்கு மக்கள் செல்லத் தொடங்கினர். மேலும் இந்த நாடு வட அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதி நகரங்களான மியாமி/Fort Lauderdale போன்றவற்றிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவே உள்ளது. இங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு USA, UK, Canada போன்ற நாடுகளிலிருந்து தினசரி விமான சேவையும் உள்ளது.

Nassau நகரம் இந்த நாட்டின் முக்கியமான பெரிய நகரம் ஆகும். 200 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் உள்ள Island of New Providence என்னும் தீவில் அமைந்துள்ள இந்த நகரம் கலை, கலாச்சாரம் தொழில் மற்றும் சுற்றுலாவிற்குப் பிரசித்தி பெற்றது.

இந்த நகரின் Prince George Wharf துறைமுகம் உல்லாசக் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் வந்து செல்ல வசதியாக உள்ளது. வேறு ஊர்களுக்குச் செல்லும் கப்பல்கள் இடையில் நிறுத்தி பொருட்களை இறக்கி விட்டுச் செல்லவும் சுற்றுலாப் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அழைத்துச் செல்லவும் நிறுத்தப்படுவதால் இது Port of call என அழைக்கப் படுகிறது.

எங்களுக்கு முன்பே ஏற்கனவே மூன்று பிரம்மாண்டமான பெரிய குரூஸ் கப்பல்கள் அங்கே நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்று கொண்டிருந்தன. அதில் Disney கண்ணைக் கவரும் வகையில் இருந்தது. கப்பலில் இருந்து சிறிய பாலத்தில் நடந்து அருகில் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் இறங்கி சிறிது தொலைவு நடந்து சென்றால் ஊருக்குள் செல்லலாம்.
இந்த ஊரின் சிறப்பு அதன் கடற்கரைகளும் சிறு தீவுகளும் அங்கு நடைபெறும் நீர் சார்ந்த விளையாட்டுக்களும்தான் என்பதால் மக்கள் ஊருக்குள் அதிகம் செல்வதில்லை. ஊருக்குள் சுற்றிப் பார்க்க வாடகைக்குக் கிடைக்கும் மோட்டார் சைக்கிள்/சாதாரண சைக்கிள்களை வாங்கிக் கொண்டு செல்லலாம். ஆனால் கப்பல் நிர்வாகம் கண்டிப்பாக அது போல் செல்லக் கூடாது, Guided tour மட்டுமே செல்லலாம் என அறிவுறுத்தி இருந்தது. மேலும் அங்கே குறிப்பிட்டுப் பார்க்கும்படி பார்லிமென்ட் கட்டிடம், விமான நிலையம், கடைவீதி தவிர பெரிதாக எதுவும் இல்லை.

இந்தப் பகுதியில் 17 தீவுகள் உள்ளன. நகரை/துறைமுகத்தை ஒட்டி உள்ள Paradise islandல் 5 பெரிய ஹோட்டல்கள் மற்றும் கேஸினோ உள்ளன. சில தீவுகளில் உணவு விடுதிகள் மற்றும் பொழுது போக்கு/ ஓய்வுக்கான அம்சங்களை அமைத்து சுற்றுலாப் பயணிகளைப் படகுகளில் அழைத்துச் செல்கிறார்கள். துறைமுகத்திலேயே அவர்களின் ஏஜென்டுகள் கப்பலிலிலிருந்து இறங்கும் பயணிகளிடம் பேசி அவரவருக்கு என ஒதுக்கப் பட்டிருக்கும் படகுகளில் அந்தந்த தீவிற்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் மாலையில் அழைத்து வருகிறார்கள். நாங்கள் மாட்டியது(?!) அரசு அனுமதி பெற்று Rose Islandல் கட்டப்பட்ட Sand dollar beach resort என்னும் தனியாரின் கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் குழுவிடம்.

10-2 p.m. தீவில் இருந்து விட்டு துறைமுகம் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்து விட்டு, அருகிலிருந்த பெஞ்சுகளில் அமர்ந்து/நடந்து என எங்களின் படகுக்காக Disney கப்பலின் மிக அருகில் காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் Disney கப்பலை எப்படி நங்கூரம் போட்டு நிறுத்தி இருக்கிறார்கள் என வேடிக்கை பார்த்தேன்.

குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் மோட்டார் படகு பாதுகாப்பு விவரங்கள் கூறப்பட்டு கிளம்பியது. இந்த tour package படகுப் பயணம், உணவு மற்றும் சில விளையாடுக்களை உள்ளடக்கியது. Rose Island
45 நிமிடப் பயண நேரத்தில் இருந்தது. துறைமுகத்தில் வெப்பமாக இருந்தாலும் படகுப் பயணம் ஆரம்பித்த சில நொடிகளில் ஜில்லென்ற காற்று வீசத் தொடங்கியது. நகரக் கட்டிடங்கள் பிரிட்டனின் காலனி என்பதை நிரூபிக்கும் வகையில் Victorian modelல் கட்டப் பட்டுள்ளன. வழியில் இடது
பக்கத்தில்
Paradise Islandல் Hotels, Casino, அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் Oprah Winfreyயின் வீடு என சற்றே பெரிய மாறுபட்ட அமைப்பிலான கட்டிடங்கள் தெரிந்தன. பின்புறம் திரும்புகையில் வரிசை கட்டி நிற்கும் கப்பல்கள், சுற்றிலும் செல்லும் சிறு படகுகள், இன்னும் முன்னேறி செல்ல செல்ல இரு பக்கமும் சிறு தீவுகள், அவற்றில் பச்சைப் பசேலெலென்ற தென்னை மரங்கள், சில தீவுகளில் ஒற்றை வீடு(தனியார்) எனக் காட்சிகள் விரிந்து கொண்டே சென்றன. [இங்கே யார் வேண்டுமானாலும்
ஒரு
தீவையே விலைக்கு வாங்க முடியும். Seattleலில் ஒரு பெரிய தீவையே Microsoft நிறுவனர் விலைக்கு வாங்கி தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டை hi-tech வசதிகளுடன் கட்டியுள்ளதை படகில் சென்ற போது காண நேர்ந்தது]



மேலும் செல்லச் செல்ல கடலின் நிறம் அடர் நீலத்திலிருந்து aqua marine நிறத்திற்கு மாறி மிக அழகாகக் காட்சியளித்தது. கண்ணெட்டும் தூரம் வரையிலும் அதே நிறத்தில் தெளிவாக கடல் நீர் தென்பட்டு மனதைக் கொண்டது. குளிர்ந்த காற்று வீசி ஸ்வெட்டரை மீண்டும் அணிய வைத்தது.

நாங்கள் செல்லவிருந்த தீவைச் சுற்றிலும் தென்னை மற்றும் பல வித மரங்கள் தென்பட்டன. மித வெப்ப நாடுகள் என்பதால் இந்தியாவைப் போல அங்கும் தென்னை, பனை
போன்ற
மரங்களும் அடர்த்தியான மற்ற tropical மரங்களும் உள்ளன. தீவிற்குச் சென்றதும் எங்களைப் போல வேறு சிலரும் அங்கிருப்பதைக் கண்டோம். கூட்டமே இல்லை. [17 தீவுகள், ஊர் என மக்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். மேலும் ஓய்வுக்காக மட்டும் என கப்பலில் வந்தவர்கள் பலரும் பயணி கப்பலை விட்டே கீழிறங்க மாட்டார்கள் எனக் கேள்விப் பட்டேன். 15,000 பேர் [தலா3500-4000 * 4 கப்பலின் பயணிகள்) அன்று இறங்கி ஊர் சுற்றிப் பார்த்திருந்தால் நிற்கக் கூட இடம் இருந்திருக்காது இல்லையா?]

தீவு என்பது நடந்தே முழுவதும் சுற்றிப் பார்க்க்கும் அளவில் மிகச் சிறியது. நாள் முழுவதும் எல்லா வயதினரும் பொழுது போக்கும் வகையில் a full bar, flat screen TVs, buffet lunch, hammocks, lounge chairs, day beds, umbrellas, kayaks, paddle boards, snorkel gear, beach volleyball, ping pong/pool table, observatory tower, music, & restrooms, free Wi-Fi என அனைத்து வசதிகளும் கூடிய சிறு தீவு இது.

கடற்கரையை ஒட்டி hammocks, lounge chairs, day beds, umbrellas ஆகியவைகள் போடப்பட்டிருந்தன. எடுத்துச் சென்றிருந்த துண்டை விரித்து அமர்ந்து கொண்டு and crystal-clear ஆக இருந்த கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். Serene, clear, marvelous beach சொன்னால் மிகையாகாது.

பலர் நீச்சல் உடையில் day bedல் படுத்து sun bath எடுக்க எங்களுக்கு வெயில் காய்ந்த உணர்வு. மார்கழி மாத சென்னை வெயில் போல வெப்பநிலை அப்போது. மரம்/குடை நிழலில் அமர்ந்தாலும் நமக்கு வெயில் தான். அங்கிருந்த ரெஸ்டாரண்டில் நம் packgeல் உள்ளபடி விதம் விதமான குளிர்பானங்களை வாங்கிக் குடித்து விட்டு Snorkeling செய்ய பேரன்கள், பேத்தி, மருமகன்கள் என கிளம்பிச் சென்றார்கள். அங்கிருந்த ஊழியர் ஒருவர் அனைவர் கையிலும் இரண்டு கேரட்களைத் தந்து அரை வட்டமாக நிற்கச் சொன்னார்கள். நாங்கள் இது இந்தத் தீவுகளின் ஒரு விளையாட்டு போல என நினைத்திருக்க திடீரென பல பன்றிகளை அவிழ்த்து விட்டார்கள். கடலை நோக்கி அவை ஓடி வர மக்கள் கையிலிருந்த கேரட்டை அவற்றிற்குத் தர, அவைகள் நீந்தி(?!) அங்கும் இங்கும் சென்று கேரட் துண்டுகளை வாங்கி உண்ணபன்றிகளுடன் நீந்தும் இந்த நிகழ்வு பஹாமாஸ் தீவுகளில் மிகப் பிரசித்தம். [கப்பல் நிகழ்ச்சி நிரலில் பன்றிகளுடன் நீந்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். பயணிகள் யாரும் சரியாக படிக்கவில்லை போலும் :) சிலர் பன்றிக் குட்டியை தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். [இந்த நிகழ்ச்சி முடிந்து மேலேறி வந்த குடும்ப உறுப்பினர்களை sanitizer, தண்ணீர் என ஊற்றி கை கழுவ வைத்து....]
Exuma மாவட்டத்தில் (பஹாமாஸ்) உள்ள Pig beach (or) Big Major Cay என்னும் தீவு நீந்தும் பன்றிகளுக்குப் பிரசித்தி பெற்றது. இவைகள் எப்படி இந்தத் தீவுக்கு வந்து சேர்ந்தன என்பது யாருக்கும் தெரியாது. சாதாரண பன்றிகள் தற்சமயம் வனத்தில் வசிக்கும் பன்றிகளாக உள்ளன. இந்தத் தீவு தற்சமயம் முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது. Nassauவிலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு மணி நேரப் படகுப் பயணத்தில் உள்ளது. [நாங்கள் இந்தத் தீவுக்குச் செல்லவில்லை]

நிற்க.

நீச்சல் தெரியாதது மிகப் பெரிய drawback. வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. கடலை ஒட்டிய நாற்காலியில் அமர்ந்து நீல வானையும் பச்சை வண்ண நீரையும் காணக் கண் கோடி வேண்டும் என மனதில் நினைத்தபடி வேடிக்கை பார்த்தேன். [வேறு வழி?!] அடுத்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தேன். 360 டிகிரி நிதானமாகச் சுற்றியது ரசிக்கும் வண்ணம் இருந்தது. மற்றவர்கள் Fanta, Coca cola எனக் குடிக்க மருமகன் இந்த ஊரின் விசேஷமான பானமான Pinacoladaவை குடியுங்கள் என வாங்கித் தந்தார். அது Cocktail அல்லவா என நான் தயங்க, Coconut cream, அன்னாசிப் பழச் சாறு, Rum மூன்றையும் Frozen ice உடன் கலந்தால் Pina Colada. கேட்டால் மட்டுமே Rum சேர்ப்பார்கள். இதை தாராளமாகக் குடிக்கலாம் எனக் கூறவே கையில் வாங்கினேன். சுவை நன்றாகவே இருந்தது. [அங்கிருந்து கிளம்புவதற்குள் மூன்று கப் குடித்தேன்]

Snorkeling, kayaking செய்து முடித்து அனைவரும் ஒன்று சேர்ந்ததும் உணவு விடுதியில் order செய்திருந்த சைவ உணவுகள் வந்து சேர்ந்தன. நானும் என் கணவரும் கையில் எடுத்துச் சென்றிருந்த readymade சப்பாத்திகளை உண்டோம். மகளிர் மட்டும் விடுதிக்குப் பின் புறம் இருந்த observation deckல் ஏறி தீவைக் கண்டோம். தீவின் ஒரு புறம் அடர் நீல நிறத்திலும் மறு புறம் அகுவா மரைன் நிறத்திலும் கடல் காட்சியளித்தது கண்கொள்ளாக் காட்சி. கையில் கைபேசி இல்லாததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. வழியில் பன்றிக் கொட்டிலைக் கடக்கும் போது துர்நாற்றம் வீசியது. [இந்தத் தீவில் feral pigs எனப்படும் நீந்தும் பன்றிகளை தீவிற்கு வரும் உல்லாசப் பயணிகளை உற்சாகப் படுத்த வளர்க்கிறார்கள்]

தீவின் ஒரு பகுதியில் நாற்காலிகள், விடுதி, விளையாட்டுக்கள் என இருக்க மற்றொரு பகுதி மரங்களடர்ந்த வனம் போல உள்ளது. நடந்து சென்று தீவைச் சுற்றிப் பார்ப்பது இயலாத காரியம் என்று தோன்றியதால் நடமாட்டம் இருந்த பகுதியிலேயே இருந்தோம். Sand dollar beach resort என்பது Rose Islandல் உள்ள விடுதியின் பெயர். [தங்கும் வசதி இருப்பது போல தெரியவில்லை. விடுதி ஊழியர்கள் சிலர் அங்கே தங்கும் வகையில் சிறு வீடுகள் தென்பட்டன] Sand dollar என்பது கடல்வாழ் உயிரினம் ஒன்றின் skeleton. பலவித வடிவங்களில் நகைகளில் உள்ள டாலர்களைப் போல வடிவத்தில் உள்ளவை. பெயருக்கு ஏற்றார்போல கடற்கரை மணலில் இது போல சங்கு எங்கும் தென்படவில்லை.

மாலை 4.30 மணிக்குள் கப்பலுக்குள் இருக்க வேண்டும் என்பதால் 2 மணிப் படகில் துறைமுகத்தை நோக்கிக் கிளம்பினோம். [10-2 மணிக்குள் மட்டுமே படகுகள் தீவுக்கு வந்து செல்லும்] விடுதி ஊழியர்களும் (5 பெண்கள் 1 ஆண்) வேலை முடிந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஆப்பிரிக்கர்/mixed race சேர்ந்தவர்கள். அன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் கேக்குகள் மிட்டாய்கள் என விற்பனை ஆகாதவற்றை எடுத்து வந்து மதிய உணவாக உண்டார்கள்.

கரீபியன் பகுதி கடல் ஆமைகளுக்குப் பிரசித்தி பெற்றது. வழியில் ஓரிடத்தில் நிறுத்தி ஆமைகள் (Sea turtle) தெரிகின்றனவா எனப் பார்க்கச் சொன்னார் எங்கள் guide. ஒரே ஒரு ஆமை எங்கள் படகருகில் வந்தது. அருகில் வேறு படகுகளும் வேடிக்கை பார்க்கவென (Sea turtle watching) நிறுத்தப்பட்டன.
சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்ததும் கரையை நோக்கிப் பயணித்தோம். துறைமுகம் வந்ததும் ஊரைச் சுற்றிப் பார்க்கலாமே என்ற என் ஆவலை நிறைவேற்ற சற்று தூரம் நடந்து சென்றோம். எங்கும் immigration office தென்படவில்லை. யாரும் நம்முடைய passport கேட்கவில்லை.

பஹாமாஸ் ஓலையில்(straw) செய்த பொருட்களுக்குப் பிரசித்தி பெற்றது. Straw market என்னும் பெயர்பலகையுடன் மிகப் பெரிய கட்டிடம் ஒன்று துறைமுகத்தில் இருந்தது. பண்டிகை காரணமாக விடுமுறை விட்டிருந்தார்கள். துறைமுகத்தின் அருகிலேயே உள்ள ஒரு சிறிய கடைவீதியில் தொப்பிகள், பைகள் மற்றும் பல கைவினைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். மனதைக் கவரும் வகையில் எதுவும் தென்படவில்லை. மேலும் விலை அதிகம். வழக்கம் போல Fridge magnet வாங்கிக் கொண்டு கப்பலை நோக்கி நடந்தோம். நான்கு கப்பல்களும் மாலையே கிளம்பும் என்பதால் மக்கள் வேகவேகமாகக் கப்பலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் காணாமல் போக வாய்ப்பு இருந்தாலும் கையில் Room card இருப்பதால் பயமில்லை.

முன்பே அறிவிக்கப்பட்டபடி மாலை 4.30 மணியளவில் கப்பலின் வாசலில் Room card Security Officerஇடம் காட்டி அனுமதி பெற்று உள்ளே சென்று முதல் தளத்தில் காலையில் இரவல் வாங்கிச் சென்ற துண்டுகளை ஒப்படைத்து விட்டு அவரவர் அறைக்குச் சென்றோம். Security Officerகள் அணிந்திருந்த Name batch ல் அவர்கள் பெயர், Philippines என்றிருந்தது. எங்கள் அறைக்கு in charge ஆக இருந்த ஊழியர் முதல் உணவுக் கூட ஊழியர்கள், Security Officer என நான் பார்த்த வரை Philippines நாட்டைச் சேர்ந்தவர்களே. (பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு மக்கள் குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வருவார்கள், உழைப்பிற்கும் அஞ்ச மாட்டார்கள் என என் அலுவலக நாட்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்)

சிறிது நேரம் பால்கனியில் நின்று ஊரையும் மக்கள் அவசரமாகக் கப்பல்களுக்குச் செல்வதையும் வேடிக்கை பார்த்தோம். நானும் என் கணவரும் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த நங்கூரத்துடன் சேர்ந்த் கயிறை எப்படி விடுவித்து கப்பலை நகர்த்துகிறார்கள் எனப் பார்க்க விரும்பி ஐந்தாம் தளத்தின் பின் பகுதிக்குச் சென்றோம். அது ஆபத்துக் காலங்களில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் தளம். அங்கே ஓரங்களில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. 5 மணிக்கு மேலாகியும் பயணிகள் கப்பலை நோக்கி வந்து கொண்டே இருந்தார்கள். 5.30 மணியளவில் நடைமேடைக்கு அருகிலிருந்த பாலத்தில் இரண்டு ஊழியர்கள் நடந்து சென்று கப்பலைக் கட்டியிருந்த கயிறை மேலெடுத்து விட கப்பலுக்குள் உள்ள இயந்திரந்தின் உதவியால் அந்தக் கயிறை கப்பலுக்குள் இழுத்த பிறகு கப்பலின் தொடர் ஹாரன்(Horn) ஒலிக்க கப்பல் Nassau துறைமுகத்தை விட்டுக் கிளம்பியது.

அடுத்த சில நிமிடங்களில் எங்களை 12 ஆவது அடுக்குக்கு வருமாறு மகள் தொலைபேசினார். Liftல் மேலேறிச் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கப்பலின் அருகில் நின்றிருந்த மற்றொரு கப்பலும் கிளம்பிச் சென்றது. எங்கள் கப்பலை விட பெரியதாக இருந்தது. மாலை மங்கும் நேரத்தில் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அந்தக் கப்பலின் அசைவு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதைத் தொடர்ந்து பேரக் குழந்தைகள் பங்கேற்ற Flow rider நீர் விளையாட்டை வேடிக்கை பார்த்தோம். அதற்கடுத்த அடுக்குகளுக்கும் சென்று வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் 11ஆம் Deck வந்தோம் நானும் என் கணவரும். நேராக கோன் ஐஸ் பூத் அருகில் வரிசையில் நின்றேன்.

அங்கிருந்த இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் சலிக்காமல் கோன் ஐஸை விநியோகம் செய்து கொண்டிருந்தார். மாலை 4-9 இவர் duty போல. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் முகம் சுளிக்காமல் வேலை செய்த அந்தப் பெண்ணைப் பார்த்து It’s nice to have you here on this Christmas day, Thank you என்று கூறி விட்டுச் சென்றேன். (மறுநாள் சாப்பிடும் நேரம் என்னை அடையாளம் கண்டு பிடித்து என்னிடம் உனக்கு ஐஸ் கிரீம் ரொம்பப் பிடிக்குமா என விசாரித்தார். அதை விட உன் attitude பிடித்தது எனக் கூறனேன். அதைத் தொடர்ந்து மறுநாள் எப்போது காண நேர்ந்தாலும் புன்னகைத்தார். கிளம்பும் முன்பு அவருக்கு $10 டிப்ஸ் தந்தேன். செல்பியும் எடுத்துக் கொண்டோம். Renalyn from Philippines என அறிமுகப்படுத்திக் கொண்டார்)

இரவு உணவில் அன்றைய தினம் Vegan vanilla cake வைத்திருந்தார்கள். Pastry பகுதியில் வைக்கப்படும் கேக்குகள் ஒரு வாய் அளவே இருந்தன என்பதால் நாங்கள் 2,3 என எடுத்து வந்து உண்டோம். Iced water, iced tea, lemonade, coffee, tea ஒவ்வொரு வேளையும் இருந்தன. நாங்கள் அநேகமாக lemonade மட்டுமே குடித்தோம். காலையில் orange, mango juice உண்டு. பயணிகளில் சிலர் முழுதாக வைக்கப்பட்டிருந்த ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், வாழைப்பழம், கிவி போன்றவற்றில் விருப்பமானதை அறைக்கு/வேறிடங்களுக்கு எடுத்துச் சென்று உண்டார்கள்.

மறுநாள் காலையும் 9 மணிக்கு கப்பலை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்பதால் எத்தனை மணிக்குக் கூடுவது என்ற விவரங்களுடன் அவரவர் அறைக்குப் பிரிந்து சென்றோம். கிறிஸ்துமஸ் தினம் என்பதால் கப்பல் முழுவதுவே கொண்டாட்டமாக வண்ண விளக்குகளுடன் ஜொலித்தது. அன்றைய மாலை பயணியர் வெள்ளை நிற உடை அணிய வேண்டும் என கப்பலின் app குறிப்பிட்டிருந்தாலும் வெகு சிலரே வெள்ளை நிற உடை அணிந்திருந்தார்கள். அன்றும் பல அடுக்குகளில் photoshoot நடைபெற்றது.

கப்பல் பயணம் முடிய ஒரே ஒரு நாள் மட்டுமே மீதி இருந்ததால் பயணிகள் கப்பலில் ஏறியது முதல் அன்று வரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் தங்களுக்குத் தேவையானவற்றை Print/Digital copy ஆக விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என App கூறியது. Deck 4ல் உள்ள Studioவில் உள்ள கம்ப்யூட்டர்களில் பார்த்து தேர்ந்தெடுத்துப் பணம் கட்டினால் போதும். [யானை விலை குதிரை விலை என்பது போல digital copies 10 வாங்கினாலே $100-120]

பல விவாதங்கள்/ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து தேவையான புகைப்படங்களைத் தேர்வு செய்து பணம் கட்டினோம். Studioவின் அருகிலேயே casino. இங்கு சில slot machineகளே உள்ளன. [இந்தப் பகுதியில் மட்டும் 24/7 எந்தத் தடையும் இன்றி புகைப்பிடிக்கவும் மது அருந்தவும் அனுமதி உண்டு. துறைமுகத்தில் கப்பல் நிற்கும் போது, பொதுவாக Port of callல் எரிபொருள் சேமிப்பு நடைபெறும். (fueling) கப்பலில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே புகைப்பிடிக்க அனுமதி உண்டு என்றாலும் fueling நேரத்தில் கூட இந்தப் பகுதியில் புகைப்பிடிக்க அனுமதி உண்டு என சமீபத்தில் படித்தேன்]

பால்கனியில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த உல்லாசக் கப்பல் ஒன்றின் விளக்கலங்காரங்களைக் கண்டு ரசித்தேன். பகலில் சற்றே வெப்பமாக இருந்தது என முன்பே குறிப்பிட்டிருந்தேன். இரவில் சிலுசிலுவெனக் காற்று வீசும்; பயணத்தை பால்கனியில் அமர்ந்து ரசிக்கலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுந்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் பால்கனியில் உட்கார முடியவில்லை. சென்னையின் ஆகஸ்டு மாத வெயிற்காலம் போல இருந்தது. அறைக்குள்ளே AC
இருந்ததால்
உள்ளேயே அமர்ந்து கண்ணாடி ஜன்னல் வழியாக வேடிக்கப் பார்த்தோம்.

தினமும் முடிந்த போதெல்லாம் இந்தியாவில் இருக்கும் என் உறவினரின் வேண்டுகோளின்படி வீடியோ காலில் கூப்பிட்டுக் கப்பலின் பல பகுதிகளையும்/நிகழ்வுகளையும் காட்டினேன். அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் கப்பலின் பயண விவரங்களை Live ஆகக் காட்டியதைப் பார்த்தேன். மணிக்கு 4-5 knots வேகத்திலேயே கப்பல் சென்றது. இரவு நேரத்தில் வேகமாக சென்று மறுநாளுக்கான இடத்தை அடையும் என எண்ணிக் கொண்டு BBC, CNN செய்திகளை பார்த்து விட்டு உறங்கினோம்.

மீண்டும் காலையில் சந்திப்போம்.

அனுபவங்கள் தொடரும்...



No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...