22 -27, December 2024
ஏழாவது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக சற்றும் எதிர்பாராத ஒரு cruise பயணம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தியாவிலிருந்து கிளம்பும் முன்பு ஒரு நாள் மகள் Royal Caribbean appஐ download செய்து account தயார் செய்ய பணித்தார். அதைப் பார்த்த பிறகே எங்கே எப்போது செல்லப் போகிறோம் எனத் தெரிந்தது. உங்களுக்கும் அந்த சஸ்பென்ஸ் வேண்டாம் என்பதால் இப்போதே கூறி விடுகிறேன்.
Caribbean நாடுகளில் ஒன்றான Bahamas நாட்டிற்கு உலகின் பிரசித்தி பெற்ற கப்பல் நிறுவனங்களில் ஒன்றான Royal Caribbean நிறுவனத்தின் மிகப் பெரிய உல்லாசக் கப்பல் ஒன்றில் டிசம்பர் இறுதி வாரத்தில் அந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் ஆவலுடன் இந்தப் பயணத்தை நான் எதிர்பார்த்திருந்தேன் என்று கூறினால் மிகையாகாது.
Caribbean நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள நான் தினமும் கூகிளைப் பார்க்கத் தொடங்கினேன். மேலும் ஆவலைத் தூண்டும் வகையில் பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே Royal Caribbean நிறுவனம் தங்கள் App மூலம் நம் பயணம் பற்றிய விவரங்கள் மற்றும் பயண நாட்களில் கப்பலுக்குள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள், என்னென்ன விளையாட்டுக்கள், ரெஸ்டாரண்டுகள் போன்றவற்றிற்கு முன்பதிவு செய்தல் பற்றிய அறிவிப்புகள் என விதம் விதமாக வெளியிட்டது.
கிளம்பும் முன்பாக இந்த கரீபியன் நாடுகளைப் பற்றிய சில விவரங்களை அறிந்து கொள்வோமா?
Pirates of the Caribbean என்னும் திரைப்படம் மூலம் அறியப்பட்ட கடல் கொள்ளைக்காரர்களுக்குப் பிரசித்தி பெற்றது இந்தக் கடல் பகுதி என்பதைத் தவிர வேறெந்தத் தகவலும் எனக்குத் தெரியாது.
இந்த நாடுகள் வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட பகுதியில் வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் (Atlantic Ocean) கரீபியன் கடலைச் சுற்றிய பகுதியாகும். கரீபியன் நாடுகளில் சில இன்னும் பிரிட்டன், ஹாலந்து போன்றவைகளின் காலனிகளாக இருந்தாலும் பல நாடுகள் சுதந்திர நாடுகளாக உள்ளன. ஆயிரக்கணக்கான பெரிய தீவுகளையும் (islands), சிறு தீவுகளையும் (islets), நீருக்கு அருகில் உள்ள பாறை போன்ற அமைப்புகள் (reefs), மற்றும் சற்று உயரமான மேடுகள் (cays) ஆகியவைகளால் அமைந்தவையே இந்த நாடுகள். பல நாடுகளின் பெயர்கள் நமக்குப் பரிச்சயமானவைகளே. [பஹாமாஸ், க்யூபா, பனாமா, கேய்மன் தீவுகள்]. கிரிக்கெட் பிரியர்களுக்குப் பரிச்சயமான West Indies தீவுகள், எந்தக் கப்பல் சென்றாலும் மாயமாக மறைந்து போகும் Bermuda triangle ஆகியவையும் கரீபியன் பகுதியில் தான் உள்ளன.
இந்த நாடுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் உள்ள ஆர்வத்தில் வெளிநாட்டு முதலீடுகளையும் (offshore finance) சுற்றுலாத் துறையையும்(Tourism) ஊக்குவிக்கின்றன. மேலும் இங்கே வருமான வரி செலுத்தத் தேவை இல்லை; இங்குள்ள வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் விவரங்கள் மிக ரகசியமாகப் பராமரிக்கப் படுகின்றன; வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலை நிலவுவது போன்றவை இவைகளின் சிறப்புக்கள். இந்தப் பகுதி கடற்கொள்ளைக் காரர்களுக்குப் பிரசித்தி பெற்று விளங்கியது. தற்சமயம் அந்த பிரசினை இல்லை.
இந்தியக் குடிமக்களான எங்களுக்கு வட அமெரிக்கா செல்வதற்கு மட்டுமே விசா உள்ளது. எப்படி மற்றொரு நாட்டுக்குள் சுற்றுலாப் பயணியாக நுழைவது?
இந்தியாவிலிருந்து பஹாமாஸ் நேரடியாகச் செல்ல வேண்டுமானால் முறையாக Visa பெற வேண்டும். USA, UK போன்ற நாடுகளுக்குச் செல்லும் விசா வைத்திருப்பவர்களுக்கு பஹாமாஸ் செல்ல விசா தேவையில்லை. மேலும் நாங்கள் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள Fort Lauderdale நகரிலிருந்து கிளம்பி பஹாமாஸ் சென்று விட்டு மீண்டும் அதே நகரத்திற்குத் திரும்பும் Closed loop cruiseல் சென்றதால் எந்தப் தடையும் இல்லை. வேலை நிமித்தமாக வட அமெரிக்காவில் வசிப்போரும் விசா, driving license இருந்தால் பஹாமாஸ் செல்லலாம். எங்கு எப்போது சோதனை நடத்தினாலும் அது தான் நம்முடைய photo ID பாஸ்போர்ட் தான்.
கப்பல் நிறுவனத்திற்கு நம்முடைய பாஸ்போர்ட் விவரங்களை Scan செய்து பயணச் சீட்டு வாங்கும் போதே அனுப்ப வேண்டும். விவரங்களைப் பரிசோதிப்பது மற்றும் எந்த நாட்டுக்குச் செல்கிறோமோ அந்த நாட்டு Embassy யுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்து அனுமதி பெறுவது கப்பல் நிறுவனத்தின் பொறுப்பு.
கப்பல் நிறுவனம் தன் Appல் பயண நேரத்தில் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. பயணத்தில் ஒரு நாள் மாலை Formal evening என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் ஆண்கள் கருப்பு நிற பேன்ட் சூட், முழுக்கை வெள்ளை சட்டை அணிய வேண்டும். பெண்கள் மேலை நாடுகளில் Dress எனப்படும் Party gowns அணிய வேண்டும். அநேகமாக கருப்பு வண்ணமே. ஒரு நாள் மாலை வெள்ளை நிற ஆடை, நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சல் உடை, சாப்பாட்டுக் கூடங்களில் No shorts, No sleeveless shirts/blouses. மொத்தத்தில் மக்கள் கூடும் இடங்களில் நாகரிகமாக உடலை மூடியே ஆடைகளை அணிய வேண்டும். பஹாமாஸ் நாட்டிற்குள் செல்லும் போது யாரும் camouflage வண்ண/டிசைன் போட்ட ஆடைகளை அணியக் கூடாது. (அந்த நாட்டின் ராணுவ உடை அது என்பதால் தண்டனைக்கு உள்ளாவோம்)
Ship terminology – கப்பல் சார்ந்த சில வார்த்தைகளையும் பயணிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என app வலியுறுத்தியது. அவற்றில் சில: Port side, Nautical mile, Starboard, Deck
பயணத்திற்கு முதல் நாள் appல் நம் ஆரோக்கியம் குறித்தும் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி இருந்தது கப்பலிலேயே முதல் தளத்தில் மருத்துவமனை உண்டு. (24*7) ஆனாலும் அவசர கால மருந்துகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும். கப்பல் ஆடி அசைந்து செல்வதால் ஏற்படக் கூடிய sea sickness என்னும் வயிற்றுப் பிரட்டல், வாந்தி போன்றவை வரக் கூடும்.
Dec 22/12/2024
பயண நாளும் வந்தது. பல முன்னேற்பாடுகளுடன் இரவு ஆறு மணிக்கு Uberல் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குப் பயணித்தோம். ஒவ்வொரு பயணத்திற்கும் நாங்களே திட்டமிடுவதற்கும் மற்றவர்கள் பயணத் திட்டத்தின்படி நாம் பயணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. எப்போதும் aircraft company, aircraft type என அனைத்து விவரங்களையும் முன்பே தெரிந்து கொண்டு பயணிக்கும் நான் எத்தனை மணிக்கு எந்த விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பும் (San Francisco, Oakland & San Jose) என எந்தத் தகவலும் தெரியாமல் அப்பிராணியாகப் பயணித்தோம். டிசம்பர் மாதத்தில் பொதுவாக பருவநிலை காரணமாக விமான தாமதங்கள் உண்டு என்பதால் அடுத்த நாள் மதியம் 12 க்கு Florida மாகாணத்தில் உள்ள Fort Laudardaleல் கப்பல் ஏற முதல் நாள் இரவே கலிபோர்னியா மாகாணத்தின் Livermore நகரிலிருந்து கிளம்பினோம். Day light saving மாதமானதால் மாலை ஐந்து மணிக்கே கும்மிருட்டாக இருந்தது.
முக்கால் மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 17 miles bridge எனப்படும் கடலுக்கு மேலான பாலத்தை எங்கள் வாகனம் கடந்த போது தான் என் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. Oakland செல்லும் பாதை இது இல்லையே என யோசித்து மகளிடம் கேட்டபோது தான் SFO விமான நிலையம் செல்கிறோம் என்றார். விமான நிலயத்திலேயே கையில் எடுத்துச் சென்ற இட்லியை உண்டு விட்டு அரை மணி நேரத் தாமதத்தில் இரவு 9.30 மணிக்குக் கிளம்பிய விமானத்தில் (Boeing 373-900 Alaska Airlines) எங்கள் விடுமுறைப் பயணம் தொடங்கியது. 5.30 மணி நேரப் பயணம். மற்றவர்கள் உறங்க நான் வழக்கம் போல் மப்பும் மந்தாரமுமான நிலையில்; உறக்கம் வரும் போது Fort Lauderdale வந்து விட்டது. இந்த ஊர் வட அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளதால். விமானம் தரையிறங்கியபோது அந்த ஊர் நேரம் காலை 5.30 (பசிபிக் நேரப்படி அதிகாலை 2.30)
23/12/2024
விமான நிலையத்திலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ள Port Evergladesல் மதியம் 12.30 மணிக்கு க்ரூஸ் கப்பலில் ஏற வேண்டும். காலை ஆறு மணி தான் ஆகியிருந்தது. உறக்கம் கலையாத நிலையில் பெட்டிகளை எடுத்து கொண்டு, அனைவரும் அங்கேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அடுத்து என்ன எனக் காத்திருந்(தேன்)தோம். அடுத்து என்ன என்பது பயணம் முழுவதும் suspense தான்.
மகளிடம் சில நிமிடங்களுக்கு பிறகு கேட்டதில் வாடகைக்கு ஒரு காரை (Rental car) எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் மியாமி கடற்கரைக்கு செல்லப் போகிறோம் என்றார். மனதிற்குள் மழை. எதிர்பாராத திருப்பம் அது.[சில வருடங்களுக்கு முன்பு மகன் இங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் Tempe என்னும் ஊரில் தங்கி வேலை செய்து கொண்டு இருந்தார். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற Everglades சதுப்பு நிலங்கள்( முதலைகளை ஆயிரக்கணக்கில் காணலாம்), மியாமி கடற்கரை, Orlando NASA museum என சுற்றிப் பார்க்க விரும்பிய போது மகன் வேறு ஊருக்கு மாறி விட்டார்] Google செய்து பார்த்ததில் 30 நிமிடங்களில் மியாமி செல்ல முடியும் எனத் தெரிந்தது. மியாமியிலிருந்தும் உல்லாசக் கப்பல்கள் கிளம்புகின்றன என்றாலும் Fort Lauderdale துறைமுகத்தில் இருந்து தான் எங்கள் கப்பல் கிளம்பியது. தற்சமயம் மியாமி செல்லும் ஆசை பூர்த்தி ஆகி விட்டது.
நிற்க. மியாமி பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.
பல தீவுகளால் ஆன மியாமி கடற்கரை நகரம் (Miami beach city) நகரத்துடன் பல பாலங்களால் இணைக்கப் பட்டுள்ளது. ஏறக்குறைய 13.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கடற்கரை உலகின் முதலாவது Longest urban beach எனப் பிரசித்தி பெற்றது. (மெரினா 12 கி.மீ) வெள்ளை மணல், குறைவான அலைகள் என மக்களை அதிகம் கவரும் இடம் இது. பல விதமான நீர் சார்ந்த விளையாட்டுக்கள் இங்கே விளையாடப் படுகின்றன. இரவு நேரக் கேளிக்கைகளுக்கும், நிதி சார்ந்த தொழில்களுக்கும் பிரசித்தி பெற்றது இந்த ஊர்.
கூட்டம் சற்றுக் குறைவான South beach கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்துக் கிளம்பினோம். வழியெங்கும் தென்னை, பனை மரங்கள் வரிசையாகத் தென்பட்டன. நடுவில் அடர்த்தியான மரங்களுடன் காடு போன்ற பகுதிகளும் இருந்தன. நாங்கள் சென்ற South Beach பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கடலை நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ளன. செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரிசையாக அடுத்தடுத்து 15-20 பிரம்மாண்டமான cruise ships நின்று கொண்டிருந்தன. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தும் அமைதியாக இருந்தது. இந்த மாநிலம் Tornado, Typhoonகளுக்கும் பிரசித்தி பெற்றது என்பதால் அடுக்கு மாடிக் கட்டிடங்களின் ஜன்னல்களுக்கு வலை போல வித்தியாசமாக அமைத்துள்ளார்கள்.
Florida மாநிலம் மிதமான வெயிலுக்குப் பிரசித்தி பெற்றது என்பதால் அமெரிக்க மக்களின் retirement haven இந்த ஊர். சுற்றுலா துறை இதன் முக்கிய வருமானம். அந்த இளம் காலை நேரத்திலேயே மக்கள் மிகக் குறைந்த உடைகளுடன் ஜாகிங், நடைபயிற்சி, சைக்கிள் என சுறுசுறுப்பாக இருந்தார்கள். Sweater குல்லாய் என இருந்த எங்களை மக்கள் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
கடற்கரையில் வெள்ளை மணலில் சிறிது தொலைவு நடந்து சென்று , தண்ணீரில் கால் நனைத்து, கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன். திரைப்படங்களில் கண்டது போல மிக நீண்ட முடிவில்லாத கடற்கரை. கரையை ஒட்டி அடுக்குமாடிக் கட்டிடங்கள். கடற்கரையில் watch tower, guards, நிழற்குடைகள், நாற்காலிகள், பெஞ்சுகள் என Bay Watch அமைப்பில் காட்சிகள். (Dreamy) கடற்கரை மணலில் தனியார் அமைப்புக்கள் குடைகள் மற்றும் பெஞ்சுகள், பீச் நாற்காலிகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் பணம் கொடுத்து உபயோகிக்கலாம் எனக் கூறப்பட்டது. நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டமாக வரத் தொடங்கினர். கலிபோர்னியாவில் மகள் அழைத்துச் சென்ற கடற்கரைகளை சுவாரசியமில்லாமல் பார்த்தபோது அவர் என்னை நோக்கிக் கூறியது: “அம்மா, நீ மெரினா கடற்கரையில் சுண்டல் தின்று வளர்ந்தவள் வேறெந்தக் கடற்கரையும் உன்னைக் கவராது” ஆனால் மியாமி என்னைக் கவர்ந்தது.
அட்லாண்டிக் சமுத்திர நீரைத் தலையில் தெளித்து கொண்டு (என் பாட்டியார் கற்றுத் தந்த வழக்கம்) சிறிது ஓய்வெடுத்த சமயம் உறவினர் குடும்பம் Seattle நகரிலிருந்து வந்து சேர மீண்டும் கடற்கரை, புகைப்படம் எடுத்தல் என சிறிது நேரம் கழிந்த பிறகு அருகிலிருந்த ஒரு Italian restaurantல் வெயில் படும்படியான நாற்காலிகளில் அமர்ந்து avocado toast சாப்பிட்டோம். அந்த சாலையில் உள்ள பல நாட்டு உணவு விடுதிகளிலும் வாசலில் வெயில் படும்படி மேசை நாற்காலிகள் போடப்பட்டு உணவு வழங்கப் படுகிறது. மேலை நாட்டவர்களுக்கு குளிரிலிருந்து விடுபட்டு வெயிலில் இருப்பது மிக விருப்பமானது என முன்பே கூறியுள்ளேன். எங்களால் அந்த மிதமான வெயிலையே தாங்க முடியவில்லை. சுள்ளென உறைத்தது. குடையை விரிக்கச் சொன்னோம். [ஐரோப்பியப் பயணத்தில் எங்கள் tour guide வெயில் படும்படியான நாற்காலிகள் உள்ள உணவகத்தில் உணவுகள் விலை அதிகமாக இருக்கும் என்றார். எதிர் திசை உணவகத்தில் விலை குறைவு]
அடுத்ததாக Port Everglades நோக்கிப் பயணித்து 12.30 மணிக்கு Royal Caribbean என்னும் நிறுவனத்தால் இயக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான 18 தளங்களை உடைய Liberty at the seas என்னும் கப்பலில் ஏறி பஹாமாஸ் செல்ல வேண்டும். மிகவும் busyயான துறைமுகம் என்பதால் ட்ரக்குகளும் கப்பல்களுக்குச் செல்லும் பயணிகளின் கார்களுமாகச் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சில துறைமுகங்களை நேரில் கண்டிருக்கிறேன் என்றாலும் இது போல மிகவும் பரபரப்பான துறைமுகத்தைக் கண்டதில்லை. இதற்கிடையில் எங்களை 12 மணியளவில் துறைமுகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் விமான நிலையம் சென்று Rental காரை ஒப்படைத்து விட்டு மருமகன் Uberல் திரும்பி வர வேண்டி இருந்தது. அரை மணி நேரத்திற்குள் திரும்பி வர வேண்டும் என்பதால் அனைவருக்கும் மனதில் டென்ஷன்.
துறைமுகத்தின் வெளியே நம்முடைய அறை எண், தளத்தின் எண் (Deck Number) போன்ற விவரங்கள் அடங்கிய Tag ஐ பெட்டிகளில் கட்டி/ஒட்டி விமானப் பயணம் போல அங்கிருக்கும் கப்பல் ஊழியர்களிடம் பெட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிறகு உள்ளே செல்லும் வரிசையில் நின்றால் அங்கிருக்கும் கேமராவில் நம் புகைப்படம் எடுக்கப் படுகிறது. நம் முகம் passport உடன் ஒத்து போனால் பின் பகுதியில் ஒரு விளக்கு எரிகிறது. Security officer passportஐ பரிசோதித்து விட்டு உள்ளே அனுமதிக்கிறார். (Immigration) இந்தப் பகுதியைக் கடந்ததும் security videoவைக் காணப் பணிக்கப்பட்டது. பார்த்து முடித்து விட்டோம் என app ல் ok கொடுத்து விட்டு,(6 முறை short horn 1 முறை long horn கேட்டால் ஆபத்து எனக் கருத்தில் கொண்டு முக்கியமான ஆவணங்கள், மருந்துகள், குளிராடைகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அவசர காலப் படகு நிற்கும் இடத்தில் கூடுங்கள்) அங்கிருந்த photo boothல் புகைப்படம் எடுத்துக் கொண்டு மருமகனுக்காகக் காத்திருந்தோம். திக் திக் நிமிடங்கள்.
சரியான நேரத்திற்கு அவரும் வந்து சேர (விமானத்தில் ஏற பாலம் உள்ளது போல) இருந்த இணைப்புப் பாலத்தின் வழியாகக் கப்பலுக்கு உள்ளே சென்றோம்.
அன்றைய தினம் பெரிய பேரனின் பிறந்த நாள் என்பதால் அனைவரும் ஒரே குரலில் Happy Birthday...எனக் கூவி கொண்டே பாலத்தில் ஏறினோம்.
கப்பல் பயணத்தில் தொலைபேசி/இன்டர்நெட் வேலை செய்யாது என்பதால் Royal Caribbean நிறுவனமே விற்பனை செய்யும் Wi-Fi packageஐ விலை கொடுத்து (ஏற்கனவே வாங்கி இருந்ததை) activate செய்து கொண்டோம். கப்பலுக்கு உள்ளேயும் வெளியுலகிற்கும் தொடர்பு கொள்ள இது மிக அவசியம்.
ஆறாம் தளத்தில் இரண்டு குடும்பங்கள், ஏழாவதில் மகள் குடும்பம் என Staterooms எனப்படும் பால்கனியுடன் கூடிய முன்பதிவு செய்யப்பட்ட எங்களுக்கான அறைகளுக்கு சென்றோம். அறை வாசலில் ஒரு கவரில் கதவைத் திறக்க ID cards வைக்கப் பட்டிருந்தது. (ஓருவருக்கு ஒரு கார்ட்) இந்த கார்டை கப்பலில் இருந்து இறங்க, மீண்டும் உள்ளே வர, கடைகளில் அண்ணாச்சி கடை போல account ற்கு காப்பி குடிக்க, பஞ்சு மிட்டாய் சாப்பிட என எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம். இறங்கும் முன்பு நம்மிடம் வாங்கிய முன் பணத்தில் இருந்து கழித்து கொள்வார்கள். சிறுவர்கள் காணாமல் போகாமல் இருக்க கழுத்தில் இந்த அட்டையைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். அடையாள அட்டையில் எந்த தளத்தில் எந்த நேரத்தில் எந்த dining Hallல் எந்த மேசையில் (எண் தரப்பட்டிருக்கும்) சாப்பிட வேண்டும் , ஆபத்து காலத்தில் எந்த இடத்தில் கூட வேண்டும் என்பன போன்ற தகவல்களும் இருந்தன.
அறை வாசலுக்கு நம் பெட்டிகள் வந்து சேர சில மணி நேரங்களாகும் என்பதால் அறை கார்டை எடுத்துக் கொண்டு நேரே 11ஆவது தளத்தில் உள்ள Buffet முறை உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு ஆபத்துக் காலத்தில் கூட வேண்டிய இடத்தில் கூடி எங்கள் கார்டை அங்கிருந்த உதவியாளரிடம் ஸ்கேன் செய்து கொண்டோம். மொத்தம் பத்து ஆபத்துதவிப் படகுகளே கப்பலில் உள்ளன. First come first served முறையில் அந்தப் படகுகளில் பயணிகளை ஏற்றிச் சென்று காப்பாற்றுவார்கள் போல. (நீச்சல் தெரியாது என்பதால் பயணம் முடியும் வரை இது பற்றிய எண்ணம் வந்த போது சற்று பயமாக இருந்தது)
கப்பல் துறையை விட்டுக் 4 மணிக்குக் கிளம்யது. எந்த அசைவும் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து ஆரம்பித்தது எங்கள் விடுமுறைக் கொண்டாட்டம். முதலில் 11ஆம் தளத்தின்(திறந்த வெளி) மற்றொரு பகுதியில் உள்ள சிறுவர்களுக்கான நீச்சல் குளம் , jacuzzi , water slide என பேரக் குழந்தைகள் நேரம் செலவழிக்க பெரியவர்கள் அங்கே தரப்பட்ட இலவச cone ice creamஐ வாங்கி உண்டோம். இந்த பகுதியில் சுற்றிலும் Beach chairs போடப்பட்டு மக்கள் அமர்ந்து/படுத்து இருந்தார்கள்.
12 ஆம் தளத்திலும் இதே போல நாற்காலிகள், running walking track, bar, எதிர்த் திசையில் பெரிய ஸ்க்ரீனில் திரைப்படம், 13ஆம் தளம் செல்ல படிக்கட்டுகள் என உள்ளன. நிதானமாக மாலை 5.30 அளவில் சூரியன் மறையும் காட்சியைக் கண்டு களித்தோம். கடற்காற்று வீசியதில் குளிரத் தொடங்கியது. எப்போதெல்லாம் 11ஆம் தளத்தைத் தாண்டிச் செல்கிறோமோ அப்போதெல்லாம் அனைவரும் cone ice cream (vanilla, chocolate or mixed) என ஒரு நாளுக்கு குறைந்தது 3-4 வாங்கி உண்டோம். (இலவசம் தான், நம் பயணக் கட்டணத்தில் சேர்ந்தது)
ஒரு சிறு நகரமே நகர்வது போலக் கப்பல் நிதானமாக சென்றது. இந்தச் சுற்றுலாவில் நாம் பார்க்கப் போகும் இடங்களை விட இந்தக் கப்பல் பயணம் தான் முக்கியமானது என்பதால் இந்தக் கப்பலைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம். 40 நாடிகல் மைல் வேகத்தில் செல்லக் கூடிய இந்தக் கப்பல் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பகல் நேரங்களில் மிக மெதுவாகவும் (ஏறக்குறைய 4-5 நாடிகல் மைல் - அறை தொலைக்காட்சியில் கண்ட தகவல்) இரவு நேரங்களில் வேகமாகவும் செல்கிறது.
Royal Caribbean International என்னும் நிறுவனத்தால் இயக்கப்படும் Liberty of the seas என்னும் பெயருடைய இந்த 18 அடுக்கு (பயணிகளுக்கானது 15 அடுக்குகள் மட்டும்) பிரம்மாண்ட உல்லாசக் கப்பல் ஏறக்குறைய 209 அடி உயரமானது. 2007ஆம் ஆண்டு முதல் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் கப்பலில் பல்வேறு வசதிகள் உள்ளன. கப்பல் நகர்வதும் அசைவதும் தெரியாமல் மக்கள் பயணிக்க 6-10 தளங்களில் மக்கள் தங்கும் அறைகள் உள்ளன. Staterooms எனப்படும் அறைகளும் Executive அறைகளும் உள்ளன. பால்கனியுடன் கூடிய அறைகளுக்கு உள்பக்க அறைகளை விட வாடகை அதிகம். மொத்தம் 3798 பயணிகளும் 1300 ஊழியர்களும் பயணிக்கும் அளவிலானது இந்தக் கப்பல். வாலி பால், பேஸ்கட் பால், ஐஸ் ஸ்கேடிங், நீச்சல் குளம், water slide எனப் பல விளையாட்டுக்களும் இங்கே விளையாடலாம். ஒரு Fitness center 12ஆம் தளத்தில் உள்ளது. Formal dining, buffet ரெஸ்டாரன்டுகள், பார்கள், கடைகள், small auditoriums, casino, photo studio, நூலகம் என பல வசதிகளும் உள்ளன. மொத்தத்தில் அனைத்து வயதினரையும் கவரும் வண்ணம் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டு, பயண நாட்களில் காலை 6.30 முதல் இரவு 3 மணி முடிய பல நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அறைக்குத் திரும்பிச் சென்று பெட்டிகளை உள்ளே எடுத்து வைத்து விட்டு ஓய்வெடுத்தோம். King size bed, bathroom, balcony, tv என அனைத்து வசதிகளும் உடைய அறை. பால்கனியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்த போது பின்புறம் தெரிந்த Fort Lauderdale & Miami நகரங்கள் மிக அழகாகக் காட்சியளித்தன.
அனைவரும் அவரவர் விருப்பபடி கப்பலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில்(age appropriate) கலந்து கொள்ளலாம், அடுத்தவர் நம்முடன் வர வேண்டும் என எண்ணக் கூடாது என முன்பே தீர்மானிக்கப்பட்டபடி room card, கைபேசியுடன் என அவரவர் விரும்பப்படி பிரிந்து சென்றோம். இடையில் நானும் மகளும் கப்பலில் இலவசமாக வழங்கப்படும் souvenir braceletகளை வரிசையில் நின்று வாங்கினோம்.
ஒவ்வொரு தளமாக explore செய்வது என்ற ஆவலில் ஐந்தாம் தளத்திற்குச் சென்றோம். ஐந்தாம் தளத்தின் பின் பகுதியில் ஒரு சிறிய கடைவீதியே உள்ளது. (முன் பகுதி formal dining) உடைகள், ஆபரணங்கள், உணவு, காபி, கப் கேக், பாப்கார்ன், நினைவுப் பொருட்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை விற்கும் கடைகள் உள்ளன. அங்கே ஆறு மணியளவில் ஒரு நாடகம் நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் மேடை அப்படியே மேலெழும்பிச் சென்றது. அதை தூரத்திலிருந்து கண்டு விட்டு மீண்டும் நானும் என் கணவரும் 12 ஆம் தளத்திற்குச் சென்று சூரிய மறைவதையும் தூரத்தில் தெரிந்த Fort Lauderdale & Miami நகரங்களையும் குளிர்ந்த கடற்காற்றை அனுபவித்தபடி வேடிக்கை பார்த்தோம். மற்றவர்களும் வந்து சேர photoshoot, ice cream என நேரம் கடந்தது.
மாலை7.30 மணியளவில் மீண்டும் 11இல் Windjammer உணவகத்தில் கூடினோம். குறிப்பிட்ட நேரமே உணவகம் திறந்திருக்கும் என்பதாலும் கடைசியாகச் சென்றால் உட்கார்ந்து உண்ண இடம் கிடைக்காது என்பதாலும் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் கூடினோம். Buffet உணவகத்தில் தான் இந்திய உணவுகள் கிடைத்தன. ஒரு பகுதி இந்திய சைவ அசைவ உணவுகள், மற்றொரு பகுதியில் பாஸ்தா, bread வகைகள், மற்றொரு பகுதியில் வெளிநாட்டு அசைவ உணவுகள், பழங்கள், லெமன் சோடா, தண்ணீர், iced tea என பல உணவுகள் இருந்தன. ஒவ்வொரு வேளையும் பூண்டு வெங்காயம் இல்லாத ஒரு ஜெயின் உணவுப் பதார்த்தம் இருந்தது. நாள் முழுவதும் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் நாங்கள் sweet sixteen வயதாகும் பேரனுக்கு Happy birthday சொல்லி அவரை வெட்கப் பட வைத்தோம். மறுநாள் முழுவதும் கப்பல் கடலிலேயே தான் இருக்கும் என்பதால் அன்று இரவு ஒன்பது மணியளைவில் நாங்களிருவரும் உறங்கச் சென்றோம். கப்பலின் அனைத்துத் தளங்களையும் சுற்றிப் பார்க்கும் இரண்டு மணி நேர tour ஒன்றும் உண்டு. குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே அதில் கலந்து கொள்ள முடியும் என்பதால் முயற்சி செய்தும் முடியவில்லை. [கப்பலின் உள்ளே ஒரு சிறிய சிறை மற்றும் mortuary யும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?]
24/10/2024
வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு விழிப்பு வந்து விட எழுந்து பால்கனியில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டோம். முதல் நாள் பேசியபடி காலை 7 மணி முதல் Fitness centreல் நடைபெறும் aerobics பயிற்சிக்கு செல்ல என்னைத் தவிர யாருமில்லை என்பதால் அந்தப் பக்கமே செல்லவில்லை. [க்ரூஸ் பயணத்தில் என்னென்ன activities இருக்கும் அதற்கேற்ற உடைகள் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பது சரியாகத் தெரியாததால் பலவற்றில் பங்கெடுக்க முடியவில்லை. வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது]
அறையின் உள்ளேயே இருந்த குளியலறையில் குளித்து விட்டு காலை உணவிற்காக வெளியில் வந்தபோது வழியில் சில அறைகளின் வாசலில் Sleeping off the holidays, DO NOT DISTURB என்ற வாசகங்கள் தென்பட்டன. கப்பல் பயணத்தை ஓய்வெடுக்கும் பயணமாகவும் சிலர் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு அறையின் வாசலில் Happy Birthday to …. என்ற போஸ்டரும் சீரியல் பல்புகளும் இருந்தன. வெளியில் இறங்கி ஊர் சுற்றிப் பார்க்கும் நாட்களில் கூட காலை 6.30 முதல் நள்ளிரவு 3 மணி வரை கப்பலில் தொடர்ந்து ஏதேதோ நிகழ்ச்சிகள் இருப்பதாக App காட்டியதன் காரணம் ஓய்வுக்காக வரும் பலரும் கப்பலை விட்டுக் கீழே இறங்குவதில்லை அவர்களுக்காகத் தான் இது போன்ற நிகழ்வுகள் என்பது பயணம் முடிந்த பிறகு தான் புரிந்தது.
சர்வதேச ஹோட்டல்களைப் போல இங்கும் Continental breakfast தான். இந்திய சைவ, அசைவ உணவுகள் என ஒரு பகுதி, Waffles, toppings என ஒரு பகுதி, பால் வகைகள், பழங்கள், அசைவ உணவுகளுக்கு ஒரு பகுதி, cereals, அதனுடன் கலந்து உண்ண dry / fresh fruits, ஆம்லெட், avocado டோஸ்ட்களுக்கு live counter, mango apple juiceகள், டீ, காப்பி, மது வகைகள் என ஏராளமான உணவு வகைகள்.(6.30-8.30). Vegetable rice, சப்பாத்தி, கூட்டு, காய்கறிகள், பழங்கள், பச்சடி, ரொட்டிகள், strawberry jam, grape jam, peanut butter, salted butter, முழுப் பழங்கள், துண்டாக்கிய பழங்கள், whole milk, chocolate milk, low fat milk, avocado, wheat, plain breads, plain, flavored தயிர், hash browns போன்றவை நாங்கள் சாப்பிடும் வகையில் இருந்தன. அறையிலிருந்து நடந்து lift ஏறி deck 11 வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குச் சென்றால் ஏறக்குறைய 3/4 கிலோமீட்டர் (1100 + steps என்றது smart watch)
பேரன்கள் திட்டமிட்டு வைத்திருந்த Rock climbing, Ice skating போன்றவற்றில் வயது காரணமாக அவர்களால் பங்கெடுக்க முடியவில்லை. மீண்டும் அங்கிருந்த நீர் சார்ந்த விளையாடுக்களை விளையாடச் சென்றார்கள். மற்றவார்கள் ஓட்ட பயிற்சி, நடைப் பயிற்சி, aerobics, ஓய்வு, நீச்சல், கப்பலின் ஒவ்வொரு தளமாக explore செய்தல், அவ்வப்போது cone ice cream வாங்கி உண்ணுதல், jacuzziயில் குளித்தல், கண்ணில்படும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுதல் என மதிய உணவு வரை சுற்றினோம். மீண்டும் Deck 11 Windjammer restaurantல் கூடினோம்.
Formal dining பகுதியில் எங்களுக்கு மேசை ஒதுக்கப் பட்டிருந்த போதும் அங்கே அசைவ உணவுகளே வழங்கப்படும் என்பதால் இந்த buffet உணவு விடுதியிலேயே உண்டோம். உள்ளே நுழையும் போதே நம்மை வரவேற்று hand sanitizerஐ கையில் விடுவார் ஒரு ஊழியர். (கப்பலில் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள் என ஆரம்பத்திலேயே கூறப்பட்டது. எல்லாத் தளங்களிலும் ஆங்காங்கே hand sanitizer வைக்கப் பட்டிருந்தது)
உணவுகளை எடுக்க வரிசையில் நின்ற நேரங்களில் பல இந்தியக் குடும்பங்களைக் கண்டோம். ஓரிருவரைத் தவிர யாரும் பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொள்ளவோ, புன்னகை செய்யவோ கூட முயற்சி செய்யவில்லை. பேசும் மொழியை வைத்து தமிழர்கள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள் மற்ற பிற வட மாநிலத்தவர்களை அடையாளம் காண முடிந்தது. ஒரு மூதாட்டி பயணம் முழுவதும் புடவை அணிந்து காணப்பட்டார்.
கப்பலின் முன் பாதியில் இந்த உணவகம் இடையில் lifts பின் பாதியில் சிறுவர்களின் நீர் விளையாட்டுப் பகுதி. சுற்றிலும் Bar, TV screen, ஓய்வெடுக்க நாற்காலிகள் என இந்தத் தளம் இருந்தது. சுற்றிலும் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் (திறக்க முடியும், சிலவை திறந்தே இருந்தன) வழியாகக் கடலை வேடிக்கை பார்க்கலாம்.
மதிய உணவிற்கு சாதம், கூடுதலாக அப்பளம். எல்லா நேரமும் மாங்காய் ஊறுகாய், வெள்ளரிக்காய் பச்சடி இருந்தது. மதியம் தயிர் கிடையாது. கேட்டால் தருவார்கள் என்பதை பயணத்தின் கடைசி நாள் தான் தெரிந்து கொண்டோம். அன்று Christmas தினமாதலால் பல வகையான pastries வைத்திருந்தார்கள். (முட்டை கலக்காத வகை எதுவும் இல்லை :( என்பதால் எதையும் உண்ணவில்லை. அவரவருக்குப் பிடித்த உணவுகளை உண்டோம். ஒவ்வொரு வேளையும் பூண்டு வெங்காயம் கலக்காத ஜெயின் உணவுப் பதார்த்தம் ஒன்று இருந்தது.
மதியம் சிறிது ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு ஐந்தாம் தளத்தில் உள்ள கடையில் காபி/hot chocolate, அரட்டை என முடித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு கடையில் இலவசமாக pizza வழங்குகிறார்கள் என அறிந்து (சின்ன பேரன் மற்றும் பேத்தி கொடுத்த தகவல்) மகள் அதை வாங்கி வந்து சிறுவர்களுக்குத் தந்தார். முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு தகவல். இலவசம் என்று எதுவும் இல்லை. நம் பயணத் தொகையில் pizzaவுக்கான பணம் முன்பே செலுத்தப்பட்டு விட்டது. காபி/டீயும் இலவசமாக நாமே தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் அது கழுநீர் போல மணம் குணம் இல்லாமல் இருந்தது. பணம் கொடுத்து வாங்கினால் மட்டுமே சுவையாகக் கிடைத்தது.
கப்பல் பயணங்களில் ஒரு மாலை நேரம் Formal evening எனப்படும் நிகழ்வு உண்டு. அப்போது பயணிகள் அனைவரும் Formal உடைகளை அணிந்து வருவார்கள். கறுப்பு, வெள்ளை நிறங்களில் மட்டுமே உடைகள் இருக்க வேண்டும் என்பது பொது விதி என்றாலும் வட இந்திய பெண்மணிகள் பல வண்ணங்களில் மிக அழகான சேலைகளை அணிந்து காட்சியளித்தார்கள். காபி குடித்து விட்டு, கப்பல் நிறுவனமே ஏற்பாடு செய்திருந்த photographer ஒருவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்றிருந்த மிக நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டோம். முக்கியமான இடங்களில் ஆங்காங்கே பல photographers வெவ்வேறு தளங்களிலும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். (ஏறக்குறைய நாலாயிரம் பயணிகளை சமாளிக்க வேண்டுமே?)
உலகத்தில் எத்தனை விதமான மக்கள் இனம் உள்ளதோ அத்தனை பேரையும் அந்தப் பகுதியில் காண முடிந்தது. எத்தனை விதமான உடைகள் எனப் பிரமிக்க வைக்கும் அளவிற்கு மக்கள் சிறப்பாக அணிந்திருந்தார்கள். கப்பல் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்கள் தென்பட்டன.
கப்பலின் ஓட்டத்தால் எப்போதாவது ஒரு முறை, அதுவும் 11,12 தளங்களில் நடக்கும் போது லேசாக நடை தள்ளாடி, தலை சுற்றுவது போலத் தோன்றியது. மற்றபடி எந்தத் தொல்லையும் இல்லை. இரவு நேரங்களில் மட்டுமே வேகமாகச் சென்றது. இரவு உணவிற்குப் பிறகு 11,12 தளங்களில் சிறிது நேரம் இருந்து விட்டு அறைக்குத் திரும்பினோம். Dance floor சென்று நடனம் ஆடவிட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு Bahamas நாட்டின் தலைநகரான Nassauவை கப்பலிலிருந்து இறங்கி சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதால் இரவு 10.30க்கு படுக்கச் சென்று விட்டதாக மகள் கூறினார்.
புதுப் புது நாடு/ஊர்களைக் காண்பதில் எப்போதும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் மனதில் உற்சாகத்துடன் உறங்கச் சென்றேன்.
அனுபவங்கள் தொடரும்…
No comments:
Post a Comment