24/10/2024
நைமிசாரண்யம்
அதிகாலை
1.30 மணிக்கு காளி பீட் (பீடம்) என்ற பெயருடைய தங்குமிடத்தினை அடைந்தோம். பேருந்து
வாசலிலேயே நின்றது மகிழ்ச்சியாக இருந்தது. இரவு பத்து மணியளவில் சுவாமிகளின் ஆடியோ
(மறுநாளுக்கான நிகழ்ச்சி நிரல்) அனைவருக்கும் பகிரப் பட்டது. நைமிசாரண்யம் என்பது வனம்
சூழ்ந்த சிறிய ஊர் என்பதால் பெரிய கட்டிடங்களோ தங்குமிடங்களோ இல்லை இருக்கும் வசதியில்
அனைவரும் தங்கி கடவுளை வணங்கி செல்வோம் எனக் கூறியிருந்தார்.
முன்புறம் காளியின்
சந்நிதியுடன் கூடிய அந்த விடுதியில் எங்களுடன் வந்திருந்த ஒரு பேருந்தினருக்கு ஒரு
Dormitary. மற்றொரு பேருந்தினருக்கு முதல் மாடியில் அறைகள் (நால்வர் தங்குவது போல)
என ஒதுக்கப்பட்ட நிலையில் கடைசியாக உள்ள தம்பதிகள் நீங்கள் தான் சற்றுப் பொறுங்கள்
அறை ஒன்றை ஒதுக்குகிறேன் என எங்கள் வாலன்டியர் கூறக் காத்திருந்தோம். சுற்றிலும் பெரிய
புல்வெளியுடன் கூடிய மைதானத்தை ஒட்டிய பகுதியில் சில நிமிடங்களில் தரைத் தளத்தில் அருகிலேயே
ஒரு அறையை ஒதுக்கினார். எங்களுடன் தங்க இருந்தவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டதால்
பிரயாக்ராஜ் போல இங்கும் நாங்கள் இருவர் மட்டும் ஒரு அறையில் தங்கினோம். வனப்பகுதி
என்பதால் அறையைத் திறந்ததும் பட்டாம்பூச்சி போல ஒன்று பறந்தது. அதை விரட்டி விட்டு
அதிகாலை ஐந்து மணியளவில் காப்பி வரும்வரை தூங்கினோம். பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்ததால்
அதிகக் களைப்பு தெரியவில்லை.
விடிவதற்குள் இந்த ஊரின் சிறப்பியல்புகளைத் தெரிந்து கொள்வோமா? சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்.
உத்தரப்பிரதேசதில்
அயோத்திக்கு வடமேற்கு திசையில் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். கோமுகி
(அ) கோமதி நதி இங்கே பாய்கிறது.
இந்த ஊருக்கான
பெயர்க்காரணங்களைப் பார்ப்போமா? மிகவும் அர்த்தபூர்வமாக உள்ளன அவை என்றால் மிகையாகாது.
1. 1. இந்த
வனத்தில் ரிஷிகளுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருமால் ஒரு நிமிஷத்தில் அழித்தாராம்.
நிமிஷம்- நைமிஷ+ அரண்யம்
2. 2 தவம்
புரிய விரும்பிய ரிஷிகள் நான்முகனை அணுக அவர் ஒரு சக்கரத்தைக் கொடுத்து எங்கு இது உருண்டு
சென்று நிற்கிறதோ அந்த இடமே தவம் புரியச் சிறந்த இடம் எனக் கூறினாராம். [நேமி- சக்கரத்தின்
வெளிப்புறம்] சக்கரம் இந்தக் காட்டில் நின்றதால் நேமிஷ அரண்யம்
3. 3 நிமிஷம்
என்னும் ஒரு வகையான தர்ப்பைப் புல் வளர்ந்திருக்கும் அரண்யம் என்பதால் நைமிசாரண்யம்.
(முன்பொரு காலத்தில்)
இறைவன் இங்கே
வனரூபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காடுகளை, வனங்களை அழிக்க வேண்டாம் என மக்களுக்கு
உணர்த்தவே மரரூபத்தில் இருக்கிறார். இந்த ஊரின் மற்றொரு சிறப்பு ராமர் இந்த ஊரின் சிறப்புக்
கருதி அஸ்வமேத யாகம் இங்கே செய்தார் எனக் கூறப்படுகிறது.
எங்கெங்கே சுற்றிப்
பார்க்கப் போக வேண்டும் என முன்பே கூறப்பட்டபடி காலை ஆறு மணியளவில் ஆட்டோவில் நண்பர்களுடன்
கோமதி நதியில் நீராடக் கிளம்பினோம். (மொத்தம் 5 பேர்). ஒரு குழுவுக்கு ஒரு ஆட்டோ எனப்
பேசிக் கொண்டு காலை முதல் மாலை வரை எங்கு சென்றாலும் அதிலேயே செல்ல வேண்டும். ஓட்டுநருக்கு
எங்கெங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வரிசை தெரியும் என்பதால் அனைவருக்கும் நலம்.
கோமதி நதியின் அருகே மக்களும் மாக்களுமாக ஒரே கூட்டம். பலர் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதால்
மண் கலங்கி தண்ணீர் சேற்றின் நிறமாகி…
நண்பர்களின் துணிமணிகளை நாங்கள் வைத்துக் கொள்ள அவர்கள் (இரண்டு பெண்கள் ஒரு ஆண்) முதலில் குளித்து விட்டு வர, பின் நாங்கள் குளித்து வந்தோம். ஆற்றின் நடுவே சென்றாலும் ஆழம் அதிகமில்லை என்பதால் மக்கள் குறைவான பகுதிக்கு நடந்து சென்று அமைதியாக நீராடி, கடவுளை வணங்கி விட்டுக் கரைக்கு வந்தோம். வரும்போதே ஒரு காலி பாட்டிலில் நீரை முகர்ந்து எடுத்து வந்தோம். (எல்லா நதிக் கரையிலும் பூக்கள், தண்ணீர் கேன்களை விற்பனை செய்கிறார்கள்)
மீண்டும் காளி
பீடத்திற்குச் சென்று துணிகளை அலசி கொடி கட்டிக் காய வைத்து விட்டு அறைக்கு எதிரில்
இருந்த மைதானத்தில் அளிக்கப்பட்ட காலை உணவினை உண்டு விட்டு ஆட்டோவில் நண்பர்களுடன்
ஊர் சுற்றக் கிளம்பினோம். இம்முறை 2000 பேருக்குமே இங்கே தான் காலை உணவு)

அடுத்து நாங்கள் சென்ற இடம் தேவராஜப் பெருமாள் கோவில். ஆட்டோ அருகில் செல்ல முடியாததால் சில நிமிடங்கள் நடந்து கோவிலை அடைந்தோம். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஊர். இங்கே நாராயணர் அரண்ய (காடு) ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். கோவிலின் முகப்பு, பிராகாரம் போன்றவை தென்னிந்திய முறைப்படி இருந்தாலும் உட்புறம் ஒரு கூடம் அருகருகில் சந்நிதிகள் என வட இந்திய முறைப்படி
அமைந்துள்ளது. இங்கும் நுழைவாயில் அருகிலேயே மாடுகளும் கன்றுகளும் தென்படுகின்றன. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீஹரிலக்ஷ்மி, புண்டரீகவல்லி என்னும் தாயார்களுடன் உள்ளார். பெருமாளை நிதானமாகத் தரிசித்து
விட்டு கோவிலின் பிராகார சுவற்றில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் நானும் என் கணவரும் கூறி வணங்கி விட்டு அடுத்ததாக வியாச சுகதேவ மந்திருக்குக் கிளம்பினோம்.
இந்தக் கோவிலின்
உள்ளே சுகதேவரின் திருவுருவமும் வெளியில் ஆல மரத்தின் கீழே வியாசரின் பீடமும் உள்ளது.
வியாசர் சுகரின் தந்தையாவார்.
व्यासं
वसिष्टनप्तारं शक्ते: पौत्रमकल्मशम् I
पराशरात्मजं
वन्दे शुकतातं तपोनिधिम् I
(vyAsam
vasishta-naptAram Sakteh pautram akalmasham
parAsarAtmajam
vande Suka-tAtam tapo-nidhim.)
vyAsa
is the great-grandson of vasishta and the grand-son of Sakti. He is the son of
parAsara and the father of Suka. I offer my obeisance to that vyAsa who is free
from all defects and is a mine of austerities)
பகவான்
என்று அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம்
ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வைணவ சமய இலக்கியம் ஆகும்.
நாரதமுனிவர்
ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரீஷித்து மன்னனுக்குச்
சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று.
இந்த ஆலமரத்தின் நிழலிலே தான் முற்காலத்தில் 18 புராணங்களும் ஓதப்பட்டன என அறிகிறோம். ஸூத பௌராணிக ஸ்தானம் என்பதும் இந்தக் கோவிலின் ஒரு பகுதி.
ரோமஹர்ஷணர் என்பவர் புராணம் சொல்வதில் வல்லவர். கதை சொல்லும் சுவாரசியத்தில் பலராமர் வந்ததைக் கவனிக்கவில்லை. கோபமுற்ற பலராமர் தன் கலப்பையால் தட்ட அவர் இறந்து விடுகிறார். கதை கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் வருந்தினார்கள். பலராமரும் வருந்துகிறார். ரோமஹர்ஷணரின் புதல்வரான ஸூதர் என்பவருக்கு இனிமையாக எளிமையாகக் கதை சொல்லும் ஆற்றலை அளித்தார் இங்கு அமர்ந்து கொண்டுதான் ஸூத பௌராணிகர் 18 புராணங்களையும் உபதேசித்தார்..jpeg)
இங்குள்ள ஒரு
பெரிய மண்டபத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஏழு நாட்கள் பாகவதம் படித்துச்
செல்கிறார்கள். (பாகவத சப்தாஹம்) நாங்கள் சென்ற தினத்தில் வட இந்திய மக்கள் இரண்டு
பேருந்துகளில் வந்து படித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கெனத் தனியாக பெரிய கூடம் உள்ளது.
இந்தக் கோவிலின்
உள்ளேயே மிகப் பெரிய அனுமன் சிலையும் உள்ளது. இதனை அஹிமஹி ராவண ஸ்தானம் என்கிறார்கள்.
இவர்களைப் பற்றிய கதை உத்தரபாரதத்தில் உள்ளது. இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றவுடன் ராவணன்
தன் சகோதரனான அஹிராவணனின் உதவியுடன் அவனது தேசமான பாதாள லோகத்திற்கு ராம லட்சுமணர்களைக்
கடத்திச் சென்றதாகவும் அகஸ்தியர் அந்த ரகசியத்தை வெளியிட அனுமன் விரைந்து பாதாள லோகம்
சென்று அஹிமஹி ராவணர்களை அழித்து ராம லட்சுமணர்களை மீட்டதாகவும் கதை. இங்கு ராம லட்சுமணர்களைத்
தோளில் சுமந்தபடி அனுமன் காட்சியளிக்கிறார்.
இந்தக் கோவில்
என்றில்லை எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் கடவுளின் பாதரட்சை அல்லது சிறு துடைப்பம்
போன்ற ஒரு பொருளை பக்தர்கள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டோம் பணம் கொடுங்கள்
எனத் தங்களை கோவில் பூஜாரிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் கேட்டுக் கேட்டு வாங்கினார்கள்.
முக்கியமாக சற்று ஏமாந்த தோற்றம் கொண்டவர்களுக்கு செருப்பு/விளக்குமாறு ஆசீர்வாதம்
நிச்சயம் உண்டு. எங்களுடன் வந்திருந்த தம்பதிக்கு ஒவ்வொரு இடத்திலும் ஆசீர்வாதம் கிடைத்தது.
கண்டிப்பாக வேண்டாம் எனக் கூறியவர்களுக்கு ஆசீர்வாதம் இல்லை. பகல் கொள்ளை.
அடுத்ததாக சக்கரத்
தீர்த்தம் சென்றோம்.
இது பற்றிய வரலாறை முன்பே கூறி விட்டேன். நடுவில் ஒரு வட்டம் சுற்றிலும் தடுப்புச் சுவர். வெளிப்புறம் பெரிய வட்டம். அங்கே தான் பக்தர்கள் குளிக்க முடியும். உள்வட்டத்தில் இன்றளவும் நீர் ஊற்று பொங்கிக் கொண்டே இருக்கிறது. வெளிவட்டத்தில் நாம் நின்றாலே நீரின் ஓட்டத்தில் நாம் நடந்தபடியே வெளி வட்டத்தைச் சுற்றி வரும்படி இருக்கும். நாங்கள் படிக்கட்டில் இருந்தபடியே நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு நண்பர்களை விடுதியில் இறக்கி விட்டு விட்டு பிறகு பிரவசனம் நடக்கும் சிறு வனப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்தோம். அவர்கள் விடுதியிலிருந்து காட்டுப் பாதையில் சென்றால் ஐந்தே நிமிடங்களில் சென்று விடலாம் எனக் கூறப்பட்டதால் நடந்து சென்று வனத்தை அடைந்தோம்.
தரையில் அமரும் வண்ணம் ஜமுக்காளங்கள் போடப்பட்டு ஒலியமைப்பு அனைவருக்கும் கேட்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஒரு மரத்தைச் சுற்றியிருந்த மேடையில் சுவாமிகள் அமர வகை செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் கூடிய பின் மதியம் ஒரு மணிக்கு யுவதிகள் இருவரின் பக்திப் பாடல்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி ஏறக்குறைய மூன்று மணிக்கு முடிந்தது. பாகவத புராணத்தின் முக்கியப் பாடல்களுக்கும் திருமங்கையாழ்வாரின் பத்து திவ்வியப் பிரபந்தப் பாடல்களுக்கும் மிக அருமையாக விளக்கம் அளித்தார் சுவாமி. நடையும் தளர தேகம் ஒடுங்க நாவது குளர கண்கள் சொருக…இந்த நிலையை அடைந்த பிறகு நம்மால் வீட்டை விட்டு நகர முடியாது. உடலில் தெம்பிருக்கும்போதே நைமிசாரண்யம் வந்து தேவராஜப் பெருமாளை தரிசியுங்கள் என்பதே அவரது பாடல்களின் சாரம்.
Drone அங்குமிங்கும்
பறந்து பறந்து வீடியோ எடுத்தது. எல்லா தினத்தின் பிரவசனங்களும் ஆரம்பித்த உடனேயே
YouTubeல் ஒளிபரப்பப் பட்டன. (நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே நானும் உறவினர்களும் இருந்த
frame edit செய்யப் பட்டு புகைப்படமாக உலாவத் தொடங்கி விட்டது.)
ஒரு இளம் வயதுப்
பிரமுகர் சிறு வனத்தைத் தன் வசம் வைத்துப் பாதுகாத்து வருவதால் அந்தப் பகுதி காப்பாற்றப்
பட்டுள்ளது. அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்
பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும்
வனத்திலேயே உணவு வழங்கப் பட்டது. பின்னர் அனைவரும் அவரவர் விடுதிக்குச் சென்று பெட்டிகளை
எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடத்தை நோக்கிக் கிளம்பினோம். மாலை 4.30 மணியளவில்
அயோத்தியை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது.
இது வரை ஆனந்தமாக
இருந்த பயணம் கீழ்க் கண்ட காட்சிகளைக் கண்ட பிறகு சற்றே வருத்தத்திற்குள்ளானது
மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஊர் தற்சமயம் நகரமயமாகி வருகிறது. நாங்கள் சென்ற சிறு வனம் தவிர எங்கெங்கும் கட்டிடங்கள் செங்கல் சூளைகள். சற்றுத் தொலைவில் முக்கிய சாலை, அதன் பராமரிப்புப் பணிகள் என சுற்றுச் சூழல் மாசுக்கு எல்லையே இல்லை. கோமதி நதியின் நிறமே தெளிவாக இல்லை. வழியெங்கும் வீடுகளின் வெளிப்புறம் பூசப்படாமல் செங்கல் தெரியும் படி உள்ளது. மரம் செடி கொடிகள் அவ்வளவாக இல்லை. கடவுளே பார்த்து இந்த அழிவுச் செயல்களை நிறுத்தினால் தான் உண்டு.
இரவு உணவு பேருந்திலேயே
ஏற்றப்பட்டு எங்களுடன் வந்தது. வழியில் ஓரிடத்தில் நிறுத்தி உணவை உண்டு விட்டுப் பயணத்தைத்
தொடர்ந்தோம். அயோத்தியை அடைந்து, பொது மைதானத்திலிருந்து எங்கள் விடுதிக்குக் சென்று
மூன்றாம் மாடியில் உள்ள Non-A/C அறையைச் சென்று சேர 11.30 ஆனது. (உங்களைப் போல அனைவரும்
ஒத்துழைத்தால் மிக நன்றாக இருக்கும் _ எங்கள் வாலன்டியர்) இம்முறை எங்களுடன் திருப்பூரைச்
சேர்ந்த ஒரு தம்பதியினரும் தங்கினார்கள். வழக்கம் போல எந்த seasonல் எந்தப் பெரிய ஊருக்குச்
சென்றாலும் குளிர் இல்லை. கூட்டம் காரணமாக ஒரு விதமான கதகதப்பு. சூடு.
பயணக் களைப்பு.
அசதியில் மின் விசிறி முழு அளவில் சுற்றாதது கூட எங்களைப் பாதிக்கவில்லை மறுநாளைய நிகழ்ச்சி
நிரல் வாட்சப்பில் வந்து சேர ராம் லல்லாவை தரிசிக்கப் போகிறோம் என்பதை நினைத்த வண்ணம்
நிம்மதியாக உறங்கத் தொடங்கினோம்.
அனுபவங்கள் தொடரும்…
No comments:
Post a Comment