Sunday, 22 December 2024

அயோத்தி(யா) சென்றோம் (பகுதி-3)


25/10/2024

அயோத்யா

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி

அவந்திகா புரீ துவாரவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா

                                                                                                -கருட புராணம் 

மேற்கண்ட ஏழு ஊர்களுக்கும் சென்றாலே நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

முக்தி தரும் ஏழு முக்கியத் தலங்களில் முதன்மையாகக் கூறப்பட்டுள்ள ஊரான இதன் முற்காலப் பெயர் சாகேதம் (சா- உடன்/ ஆல், அகேதன் – அழகான கட்டிடங்கள்) அழகான கட்டிடங்களை உடைய இந்த ஊரானது ராமரது பிறந்த ஊர் என இதிகாசங்களிலும் புராணங்களிலும் போற்றப் படுகிறது. தற்போதைய பெயர் அயோத்யா. (அ+ யோத்யா – வடமொழியில் யாராலும் வெல்ல முடியாத, தகர்க்க முடியாத என்று பொருள்) சரயு நதிக் கரையில் அமைந்துள்ளது இந்த ஊர். ராமர் அயோத்யர்களைத் தம்முடன் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு வெறிச்சோடிய இந்த நகரம் அவரது மகன் குசனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது.

சூரிய வம்சத்தைச் சேர்ந்த ராமர் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டார் அவரது தந்தையார் வசித்த மாளிகை, ராமர் லக்ஷ்மணர், பரதர் போன்றோர் வசித்த மாளிகைகள் போன்றவற்றை இன்றளவும் புதுப்பித்துப் பராமரித்து வைத்துள்ளார்கள். தசரதரின் காலத்தில் கட்டப்பட்டவைகள் இவை எனக் கூறப்படுகிறது.

அதிகாலை நாலரை மணியளவில் விடுதியிலேயே காப்பியைக் குடித்து விட்டு எங்களுடன் தங்கியிருந்த தம்பதியினர் மற்றும் ஒரு குடும்பத்தாருடன் ஆட்டோவில் கிளம்பி சற்றே அகலமான இருபுறமும் கடைகள் நிறைந்த சாலையில் பயணித்து சரயு நதியை அடைந்தோம்.

அரசு விளம்பரப் படுத்தியபடியே குளிக்கும் துறை சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு, உடை மாற்றும் அறை, ஒப்பனை அறை போன்றவைகள் ஆண், பெண், பொதுப் பாலினம் எனத் தனித்தனியாக இருந்தது. நதிக்கரையில் பூக்கள் விளக்குகள் என விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். கூட்ட நெரிசலில்லை என்பதால் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தோம். அங்கே ஓரிடத்தில் சற்றே உயரமான சுழலும் மேடை அமைக்கப்பட்டு, மொபைல் தொலைபேசி வைக்கும் tripod பொருத்தப் பட்டிருந்தது. விரும்பியவர்கள் ராம, லக்ஷ்மண சீதாவாக வேடம் தரித்து நம்முடைய தொலைபேசியிலேயே புகைப்படம்/ வீடியோ எடுத்துக் கொள்ளலாம். அவர்களே make up செய்து விடுகிறார்கள்.

கரையோரத்தில் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பாக மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். தடுப்பைத் தாண்டி ஆழத்திற்குச் சென்று குளிக்க முடியாது. அங்கே காணப்பட்ட படகுகளில் இரண்டை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தள்ளி குளிக்கும் துறையின் ஆரம்பத்திற்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் படகில் திரும்பி வந்தோம். (ஒருவருக்கு போக வர் 200+200) டெல்டா பகுதி என்பதால் ஊரில்/ ஆறில் என எங்கெங்கும் வண்டல் மண். ஆறுகளில் காலை வைத்தவுடன் மண் மேலெழும்பி நீரின் நிறத்தை மாற்றியது. நடு ஆற்றில் படகில் பயணம் செய்த போது காலிப் புட்டிகளில் நீரை முகர்ந்து வந்தோம். சரயுவும் கங்கையைப் போல மிக அகலமாக நல்ல நீர்ப்பெருக்குடன் வேகமாகச் செல்கிறாள்.

அறைக்கு வந்து ஈர உடைகளை மாற்றிக் கொண்டு ராம் மந்திரார்த்த பவன் (ராம மந்திரத்திற்கான இடம் என்பது பொருள்) என்னும் இடத்திற்குச் சென்று காலை உணவை முடித்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினோம். (சரயு சென்ற அதே குழு) அயோத்யாவில் தங்கியிருந்த 2.5 நாட்களும் அதே இடத்தில் தான் உணவு. சுவாமியின் பிரவசனம்.

முதலில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே உள்ள “வால்மீகி (ராமாயண்) பவன்”. இதனுள்ளே வால்மீகி, லவ குசர்களின் உருவச் சிலைகள் உள்ளன. சுவற்றில் ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களும் வடமொழியில் கிரானைட் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளன.

அடுத்ததாக சற்று மேடான இடத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டு அங்கிருந்து நடந்து “கனக பவன்” சென்று விட்டு ராம் மந்திருக்குச் செல்லுங்கள் எனக் கூறப்பட்டது. குறுகலான மேடான சாலையில் காலணிகள் இல்லாமல் சிரமப்பட்டு மேலேறி கனக பவனத்தில் ராமரை தரிசித்தோம். திரைபடங்களில் காட்டுவது போல பெரிய மாளிகையின் மையப் பகுதியில் பெரிய்ய்ய்ய்ய தொட்டி முற்றம் போன்ற பகுதியைச் சுற்றி அறைகள் உள்ளன..  ராம, லக்ஷ்மணர்களின் அந்தப்புரம் இந்த மாளிகை.

வெளியில் வந்து மேலும் நடந்து…இருபக்கமும் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே கோவிலுக்குள் நுழையும் பகுதிக்குச் சென்று சேர்ந்தோம். ஆங்காங்கே இருக்கும் லாக்கர்களில் நம்முடைய செருப்பு, மொபைல் தொலைபேசி போன்றவற்றை வைத்து விட்டுச் செல்ல வேண்டும். இல்லையென்றால் கோவில் உள்ளே security checkல் மாட்டிக் கொள்ளும். கோவிலுக்குள் நுழையும் வாசல் ராம் லல்லா கோவிலுக்குள் நுழையும் வழி என்ற வாசகங்களுடன் மிகச் சாதாரணமாக உள்ளது. மற்ற கோவில்களைப் போல வெளியிலிருந்து பார்த்தால் கோவில் தெரிவதில்லை. உட்புறமாகத் தள்ளிக் கட்டப்பட்டுள்ளது.

வயதில் மூத்தோருக்கு (senior citizens) ஆதார் அட்டையைக் காண்பித்தால் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று தரிசனம் செய்விக்கிறார்கள். எங்கள் குழுவினர் யாருமே ஆதார் அட்டை எடுத்துச் செல்லாததால் எங்கள் குழுவினர் அனைவரும் உள்ளே சென்றதும் நடந்து சென்று தரிசிக்கும் வரிசைகளுக்குச் செல்ல ஆரம்பித்தோம். சுவாமி எப்போதும் அரசாங்க அடையாள அட்டையைக் கையில் வைத்திருங்கள் எனக் கூறியிருந்த போதும் அதன் மதிப்பு அவர் கூறிய போது புரியாததால் வயதானவர்களும் சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்த முடியவில்லை.

பக்தர்கள் கூட்டம் திருப்பதி போல இல்லையென்றாலும் நிறைய இருந்தது. 6,7 வரிசைகளில் எங்கும் தேக்கம் இல்லாமல் நடந்து சென்று அதிக பட்சமாக 30 நிமிடங்களில் ராமரைத் தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வலப்புறம் கடைசி வரிசை சக்கர நாற்காலிக்கானது. அங்கே நாங்கள் சென்ற சமயம் எங்களுடன் வந்த மூன்று பெண்மணிகள் சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவிய கோவில் ஊழியர்கள் இவர்களுடன் மூன்று பேர் வரலாம் எனக் கூறவே நானும் எங்கள் ரூம்மேட்களும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்டோம். பத்தே நிமிடங்களில் ராமருக்கு அருகில் சென்று விட்டோம்.

உயரமான பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் சிறு பாலகனாக நாம் இதுவரை கண்டிராத வித்தியாசமான தோற்றத்தில் அருமையாக தரிசனம் தருகிறார் ராமர். கண்ணனின் சிறுவயதுத் தோற்றம் பற்றி மட்டுமே நாம் அறிவோம். பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பு தொடங்கி ஒவ்வொரு நிலையையும் மிக அழகான பாசுரங்களால் பாடியுள்ள போதிலும் ராமருக்கு யாருமே தாலாட்டு கூடப் பாடப் படவில்லையே எனக் கவலை கொண்டு சேர மன்னராய் இருந்து அடியவர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனையே ராமனாக எண்ணி தாலாட்டாய் பத்துப் பாசுரங்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னிநன் மாமதில்சூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! ராகவனே! தாலேலோ!


பொருள்: நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ!

[நன்றி: https://kannansongs.blogspot.com/2007/09/68.html]

குலசேகராழ்வாரின் கருத்தை ஒட்டி ராம் லல்லாவின் திருவுருவச் சிலை இங்கே அமைக்கப்பட்டுள்ளது. கருணையே வடிவான கண்களுடன் ராம் லல்லா(பாலகன்) பக்தர்கள் அனைவருக்கும் காட்சியளித்து அருள் புரிகிறார்.

பெரிய கூடம் அதன் முடிவில் சந்நிதி போன்ற அமைப்பு. ஐந்து நிமிடங்கள் போல நின்று நிதானமாக தரிசித்து விட்டு பக்தர்கள் அனைவருக்கும் தரப்படும் கல்கண்டு பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு வெளிப் பகுதியில் பல நிமிடங்கள் நின்று நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களை ரசித்து விட்டு மெதுவாக வெளியில் வந்தோம்.

கோவிலின் உட்புறமும் வெளிபுறமும் இன்னும் வேலைகள் முடிவடையவில்லை. ஒவ்வொரு சிற்பமும் மிக நுணுக்கமாக செதுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. வெளிபுறத்தில் மண்டபங்கள் கட்டப் படுகின்றன. இன்னும் ஓரிரண்டு வருடங்களில் முழுமை அடைந்து விடும்.

நாங்கள் சீக்கிரமே வெளியில் வந்ததால் மற்றவர்களுக்காகக் காத்திருந்து அழைத்துக் கொண்டு வழியில் ராமர் பொம்மைகள் (பிளாஸ்டிக்), fridge magnets, வளையல், மாலைகள், எலுமிச்சை சாறு குடித்தல் என எங்கள் குட்டி ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்குக் கிளம்பினோம்.

வழியில் தசரத பவன். இந்த மாளிகை மிகச் சிறப்பு வாய்ந்தது. தசரதர் தன் நான்கு மகன்களுக்கும் திருமணம் முடித்து மருமகள்களுடன் நேரே இங்கு வந்தாராம். நாங்கள் சென்ற சமயம் மூடி இருந்தது. கண்ணில் பட்ட சாரங்கள் புதுப்பித்தல் வேலை நடைபெறுவதை உணர்த்தியது. வெளியில் லஸ்ஸி வாங்கிக் குடித்து விட்டு ஆட்டோவில் கிளம்பினோம்.

அடுத்ததாக “அம்மாஜி மந்திர்” என்னும் கோவிலுக்குச் சென்றோம். தென்னிந்திய வைணவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும் இந்த ராமர் கோவில் நம் ஊர் கோவில்களைப் போன்ற அமைப்பில் உள்ளது. நாங்கள் அங்கிருந்து வெளியில் கிளம்பும் போது பேட்டரி ஆட்டோவில் வந்திறங்கி திரு வேளுக்குடி சுவாமியும் அவரது துணைவியாரும் கோவிலுக்குள் சாப்பாட்டு மூட்டையுடன் உள்ளே நுழைவதைக் கண்டோம். சுவாமி கண்டிப்பான பள்ளிக்கூட ஆசிரியர் போல. கண்டிபானவர். அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ராம் மந்திரார்த்த பவனுக்குச் சென்று மதிய உணவை உண்டு விட்டு 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் பிரவசனத்தில் அமர வேண்டும். சுவாமி வருவதற்குள் சென்று விட முடிவு செய்து கிளம்பினோம்.

சிறு குன்று போல 60 படிகளுடன் கூடிய ஓரிடத்தில் ஹனுமான் கடீ என்னும் கோவில் உள்ளது. நாங்கள் அங்கே செல்ல விரும்பினாலும் கூட்டம்/நேரமின்மை காரணமாக அங்கே செல்லவில்லை. 27 ஆம் தேதி காலை தான் அங்கே செல்ல முடிந்தது.

மதிய உணவை முடித்துக் கொண்டு உறவினர் எங்களுக்காக ரிசர்வ் செய்திருந்த நாற்காலிகளில் அமர ராம பஜனை தொடங்கியது. முன்வரிசை மாமிகள், மாமாக்கள் பாடல்களை பின் வாங்கிப் பாட, மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள். வெயிலின் தாக்கம் ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும் (பந்தலுக்குள் தான்) சிறிது நேரத்தில் மின் விசிறிகளின் செயல்பாட்டால் சமநிலைக்கு வந்தது. பஜனை முடிந்து உபன்யாசம் ஆரம்பிக்கும் என நாங்கள் காத்திருக்க சுவாமிகள் 750 /1850 மட்டுமே இங்கே கூடியுள்ளீர்கள். அனைவரும் வந்து சேரும் வரை பஜனை தொடரும் எனக் கூறி அமர்ந்து விட்டார்.


ஒரு வழியாக 3.45க்கு பிரவசனம் ஆரம்பித்து 5 மணிக்கு முடிந்தது. மீண்டும் 7.30 மணிக்கு திரு விஸ்வநாத பாகவதர் குழுவினரின் “சீதா கல்யாணம்” நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. முதல் நாள் நிகழ்ச்சி நிரலின் படி 2.30 – 4 பிரவசனம் பிறகு நாம் காலையில் விட்டுப் போன கோவில்கள், கடைத் தெரு, சரயு ஆரத்தி எனச் செல்லலாம் என இருந்தது. தாமதமாக முடிந்ததால் நேராக அறைக்குச் சென்று காலையில் வாங்கிய சாமான்களை அறையில் வைத்து விட்டு மீண்டும் சீதா கல்யாண நிகழ்ச்சியைக் காணச் சென்றோம். சரயு ஆரத்தியைக் காண நேரமில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் ஏற்கனவே ஹரித்வாரில் கங்கா ஆரத்தியைக் கண்டிருக்கிறோம் என்பதால் சுவாரசியமில்லை. (ஓம் ஜெய் ஜகதீச ஹரே, ஓம் ஜெய் கங்கே மாதா, ஓம் ஜெய் பகவத் கீதே-ஆரத்திப் பாடல்கள் எல்லாவற்றுக்கும் ராகம் ஒன்றே 😊)

சீதா கல்யாணம் பஜனை, சுவாமிகளின் விளக்கவுரை அதைத் தொடர்ந்து திருமணச் சடங்குகள் என மாறி மாறி நடைபெற்றது. ராம, லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் நால்வருக்கும் திருமணம் நடைபெற்றது. வனமாலீ வாசுதேவா என பாகவதர் பாட ஆரம்பித்ததும் ஆண்களும் பெண்களும் எழுந்து நடனமாடினார்கள். நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்தால் ஆட்டோ கிடைக்காது என்பதால் காதால் கேட்டுக் கொண்டே இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியில் நின்று காத்திருந்தோம். அப்படியும் 45 நிமிடக் காத்திருப்புக்குப் பிறகே ஆட்டோ கிடைத்தது. கல்லூரிகள் எதிரில் மாணவர்கள் ஒரு நிறுத்தம் முன்னாடியே சென்று அங்கிருந்து ஏறி வருவது போல நம் மக்கள் ஆட்டோவில் ஏறி வந்தார்கள். அயோத்யா நகரின் முக்கிய சாலையான “ராம் கதா மார்க்” சாலையின் இருபக்கமும் ராமாயணத்தின் காட்சிகள் நிறுவப் பட்டுள்ளன. இரவின் விளக்கொளியில் அற்புதமான காட்சி. தெரு விளக்குகள் வில்லைப் போல உள்ளன. நான்கு தெருக்கள் கூடும் இடத்தில் மிகப் பெரிய வீணை, சூரிய வம்சத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் விளக்குகள், சிலை என நம்மை ராமர் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

26/10/2024

சுமாரான உறக்கத்திற்குப் பிறகு காலை 4.30 மணிக்கு காபிக்காகக் கண் விழித்தோம். அன்றைய தினம் அயோத்தியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள “குப்தார் காட்” என்னும் இடத்திற்கும் அதையடுத்து “நந்திக் கிராமம்” என்னும் ஊருக்கும் செல்வதாக இருந்தது. “குப்தார் காட்” செல்லும் வழியெங்கும் நம் ஊர் எல்லைக் காவல் தெய்வமாக கருப்பண்ண சாமி சிலைகள் இருப்பது போல ராமர், அனுமான், சிவன் போன்றோரின் சிலைகள் உள்ளன. நகருக்கு உள்ளேயும் வெளியேயும் சாலைகள் நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன.

குப்தார்காட் பகுதிக்கு ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் முன்பே பேருந்துகள் நிறுத்தப் பட்டன. அங்கிருந்து அனைவரும் நடந்து வர காவலர்கள் உடன் நடந்து வந்தார்கள்.

இந்த இடத்தில் சரயு நதியில் ராமர் தன்னுடன் வர விரும்பிய அனைத்து ஜீவராசிகளையும் உடன் அழைத்துச் சென்று முக்தியளித்தார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக நதியில் குளியல். முதல் நாள் மதியத்திலிருந்தே எனக்குத் “தொண்டையில் கிச் கிச்” தலை முழுகாமல் கழுத்து வரை முழுகி தலைக்கு நீரை தெளித்துக் கொள்வது என முடிவு செய்து அதன் படியே குளித்து உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் நதிக் கரையில் உள்ள கோவில் வாசலில் பிரவசனம் தொடங்க இருந்தது. குளிப்பதற்கு ஏற்ற வகையில் துறைகள் கட்டப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் உள்ளது. சரயு அயோத்யாவில் உள்ளது போல இங்கும் அதே அகலமாக வேகமாக ஓடுகிறாள். படகு சவாரியும் இங்கே உண்டு. காலை உணவுக்காகச் சென்ற பகுதியில் அயோத்யா கோவில் ராமரின் சிலை என மணலில் செய்து வைத்திருப்பதைக் கண்டோம். சுவர்களிலும் ஓவியங்கள் தென்பட்டன. குப்தார் காட் என்னும் பெயர்ப்பலகையில் சீன, ரஷ்ய மொழிகளும் தென்பட்டன.

அவசரமாக காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று ராமரை வணங்கி விட்டு லேசான வெயிலில் பிரவசனம் கேட்க அமர்ந்தோம். இடையே ஒரு medical camp நடந்து கொண்டிருந்தது. முதல் உதவியாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அயோத்யா மக்களுக்கு முக்தி, சகோதர்களின் குழந்தைகளுக்கு ராஜ்ஜியத்தின் எந்தெந்தப் பகுதிகளை அளித்தார் ராமர்…சுவாமிகளின் பிரவசனம் நீண்டு கொண்டே சென்றது. என் உடல் நலம் குறையத் தொடங்கியது. காய்ச்சல் வருவது போலத் தோன்றவே அங்கு தென்பட்ட ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்தை அடைந்தோம். சில நிமிடங்களில் அனைவரும் வந்து சேர நந்திக் கிராமத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

அயோத்யாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நந்திக் கிராமம். பரதன் ராமனது பாதுகைகளை வைத்துப் பூஜித்து இங்கிருந்த படியே அவருடைய பிரதிநிதியாக நாட்டை ஆண்டார். ராமன் சீதையுடன் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூறிய அனுமனை பரதன் கட்டித் தழுவியதும் இந்த ஊரில் தான். ராமர் ஓரிரவு தங்கி ஜடா முடியைக் களைந்து நல்ல ஆடைகளைத் தரித்து அயோத்யா சென்றார்.

நந்திக் கிராமத்திலும் ஊருக்கு வெளியே பேருந்து நிறுத்தப்பட்டது. மதிய வெயில் சுள்ளென உறைத்தது. அது பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவது போலத் தெரியவில்லை. வேகமாக நடந்து சென்று விட்டார்கள். என்னால் நடக்கவே முடியவில்லை என் கணவரும் முன்னால் சென்று விட நிதானமாக நடந்து உணவு வழங்கப்பட்ட இடத்தை அடைந்தேன். வெயில் சுட்டெரித்தது. அன்று புளி சாதம், தயிர் சாதம். பசி என்ற உணர்வில்லாததால் சாப்பிடாமல் வெளியில் வந்து நேரெதிரில் இருந்த பிரவசனம் நடக்கும் இடத்தை அடைந்து நாற்காலியில் அமர்ந்தேன். படுக்க வேண்டும் போல இருந்ததால் நண்பர்கள் வந்ததும் சொல்லிவிட்டு நேரே வெளியில் வந்து எதிரிலிருந்த பரதன்-ஹனுமான் கட்டித் தழுவியபடி காட்சி தரும் கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டு வெளியில் வந்து கையில் எடுத்துச் சென்றிருந்த துப்பாட்டாவை விரித்து கோவில் வாசலிலேயே (car parking) படுத்து விட்டேன். ஒரு கார் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் எழுந்து அருகிலிருந்த குளக்கரை பெஞ்சிற்குச் சென்று அதில் அமர்ந்திருந்த பெண் காவலர்களை எழுப்பி விட்டு அதில் படுத்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள்) சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாத மயக்கம். [பயண நேரத்தில் நைமிசாரண்யத்தில் 70 வயது மதிக்கத் தக்க ஆடவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் வனத்தில் அமர்ந்திருக்க அவருடன் வந்திருந்த பெண்டிர் கை கொடுத்து எழ சொல்லிக் கொண்டிருந்ததைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் சிரமப் பட்டதாகத் தெரியவில்லை] மாலை 4.30 மணியளவில் எங்கள் அறைத் தோழர்களும் மேலும் சிலரும் அங்கே வந்து சேர அனைவரும் இப்படிப் பட்ட தீர்த்த யாத்திரைகளுக்கு வருவதன் சாதக பாதகங்களை அலசிக் கொண்டிருந்தார்கள். விவாதிக்கத் தெம்பில்லாததால் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அன்றைய பிரவசனம் நடந்த பந்தலில் வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த தொண்டர்களும் அவர்களது குருவும் (காவியணிந்த சாமியார்) ஒருவரும் தென்பட்டனர். அவர்கள் ஒரு மணி நேரம் நமக்காக ஒதுக்கி இருந்ததாகவும் நேரம் முடிந்ததும் வேளுக்குடி சுவாமிகள் எதிரில் உள்ள சிறிய கோவிலில் மீதிப் பிரவசனத்தைச் செய்து முடித்த பிறகு காப்பி, சுண்டல் வழங்கப்பட்டு, சுமார் 6.30 மணியளவில் அனைவரும் பேருந்தை நோக்கி வர நாங்களும் சேர்ந்து கொண்டோம். [ஆசிரமத்தின் பெயர் அதன் குருவின் பெயர் எதுவும் நினைவில் இல்லை. யூடியூப் வீடியோவிலும் சில எழுத்துக்களே தெரிகின்றன]

ராமனும் பரதனும் கட்டித் தழுவிய கோவில், ராமன் ராவணனைக் கொன்ற பிறகு வெற்றியைக் கொண்டாடக் குளித்த குளம் எனப் பல சிறப்பு வாய்ந்த இடங்கள் இந்த ஊரில் உள்ளன. குளம் சுத்திகரித்துப் பராமரிக்கப் படாமல் உள்ளது. ராமரின் காலத்தில் மிக அருமையாக இருந்திருக்கக் கூடியது இந்த ஊர். [வீடு திரும்பிய பிறகு கேட்காமல் விட்ட பிரவசனங்களைக் கேட்டோம்]

27/10/2024

மறுநாள் காலை 7-9.30 அயோத்யாவில் வழக்கமான இடத்தில் ராமர் பட்டாபிஷேகம் (பூஜை + பிரவசனம்) நடைபெறும். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து உண்டு விட்டு 11 மணி முதல் வெவ்வேறு ஊர்களுக்கும் கிளம்பும் பேருந்துகளை அடைந்து எங்கு செல்ல வேண்டுமோ செல்லுங்கள் என முதல் நாளே சுவாமிகள் கூறிவிட்டார். காலை என்னால் எழுந்திருக்க முடியாத அளவில் காய்ச்சல், தொடர் இருமல். [accuweather.com வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே அயோத்யாவில் கடுமையான காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறுகள் ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை செய்திருந்தது]

அதிகாலை ஐந்து மணிக்கே வழக்கம் போல காப்பி வந்தது. சரயு சென்று குளித்து விட்டு ராம் லல்லாவை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் மண். மற்ற மூவரும் அறையிலேயே குளித்துத் தயாராகி கோவிலுக்குச் சென்றனர். என்னுடன் இருக்க விரும்பிய என் கணவரை நான் ராம் லல்லாவை இன்று விட்டால் மீண்டும் எப்போது காண்போமோ சென்று வாருங்கள் என அனுப்பி வைத்தேன். விடுதி அறைகளில் என்னைத் தவிர யாரும் இல்லை. ORSஐ தண்ணீரில் கரைத்து குடித்தவண்ணம் நேரத்தைப் போக்கினேன். கோவில், ஹனுமான் கடீ சென்று விட்டு பட்டாபிஷேக பிரவசனம் கேட்ட பிறகு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்.

கணவர் கொண்டு வந்த தயிர் சாதத்தை உண்டு விட்டு அறையைக் காலி செய்து விட்டு லக்னோ செல்லும் பேருந்தை அடைந்தோம். மதியம் ஒரு மணிக்குப் பேருந்து கிளம்பியது. வழியிலேயே இரவுக்கான சப்பாத்தி தயிர் சாதம் தரப்பட்டது. மறுநாள் காலை 8.30க்கு எங்களுக்கும் உறவினருக்கு மாலை 6.30க்கு தான் விமானம். முன்பே ஏற்பாடு செய்து வைத்திருந்த லக்னோ விடுதிக்கு இரவு 7.30 மணியளவில் சென்று சேர்ந்தோம். இதற்குள் என் தொண்டை வலி lung infection ஆக மாறி இருந்தது. மூச்சு விடுதல் சிரமமாக இருந்ததால் அருகிலிருந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து மருந்துகள் வாங்கி சாப்பிட்டு விட்டு சற்று நேரம் உறங்கி எழுந்தேன்.

இரவுக்குள் என் கணவருக்கும் என்னைப் போல உடல் நலம் கெடத் தொடங்கி இருந்தது. காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திற்குக் கிளம்பினோம். பெங்களூரு சென்று அங்கே ஐந்து மணி நேர இடைவெளிக்குப் பிறகு மாலை 4.30க்கு சென்னை விமானம். லக்னோ விமான நிலையத்தில் வெந்நீர் குழாயில் வந்தது வசதியாக இருந்தது. [விடுதிகளில் நாங்கள் கொண்டு சென்ற சிறிய கெட்டிலில் சுட வைத்து பிளாஸ்கில் ஊற்றிக் கொண்டோம்] விமானம் ஏறும் சமயம் பிளாஸ்கை நான் மறந்து விட்டேன். என் கணவர் விமானப் பணிப் பெண்ணிடம் கூற வெளியிலிருந்து ஒருவர் எடுத்து வந்து தந்தார். (நன்றி சகோதரா)

விமானத்தில் தண்ணீர் கூட கேட்டால் மட்டுமே கிடைக்கும் என்றாலும் Indigo விமானங்களில் கால் வைக்க அகலமான இடம், வசதியான இருக்கைகள், அருமையான take off & landing எனப் பயணம் மிகவும் சுகமே. [airlines தர வரிசையில் இண்டிகோவின் பெயர் இல்லை என்பதால் அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளதாக சமீபத்தில் செய்தியில் படித்தேன்] பெங்களூருவில் இறங்கியதும் என் கணவர் தன் கைபேசியை எடுக்கையில் அவரது கைகள் நடுங்கின. அவருக்கும் காய்ச்சல் தொடங்கி விட்டது புரிந்தது. இருவரும் தள்ளாடியபடி நடந்து எதேனும் உணவகம் இருக்குமா எனத் தேடினோம். Transit பகுதிக்கு சென்று விட்டால் சுலபம் என உறவினர் கூற விமான நிலைய ஊழியர் ஒருவர் departure க்கு வெளியில் சென்று உண்டு விட்டு பொறுமையாக மீண்டும் உள்ளே வாருங்கள் எனக் கூற, வெளிப்பகுதிக்குச் சென்று ஆளுக்கு மூன்று இட்லி வாங்கி ஒன்றரை இட்லி மட்டும் உண்டு விட்டு, மீண்டும் security check முடித்து, lounge இருக்கும் பகுதியை அடைந்தோம். 3.30 மணி நேரங்களைக் கடத்த வேண்டுமே?

Waiting lounge ஊழியர் எங்களிடம் இருந்த debit/credit கார்டுகள் எதைக் காட்டினாலும் செல்லாது இரண்டாயிரம் பணம் கட்டுங்கள் என்றார். இரண்டே மணி நேரங்கள்தான் என்பதால் வெளியில் இருந்த நாற்காலியிலேயே அமர்ந்திருந்தோம். மேற்கூரையின் கண்ணாடியில் வெயில் பட்டு நாங்கள் இருந்த பகுதி சற்று சூடாக இருந்தது. காத்திருக்கும் நேரத்தில் இந்த யாத்திரை பற்றிய என் சில கருத்துக்கள்.

1800 பேரை 45 பேருந்துகளில் அழைத்துச் சென்று நேரத்திற்கு உணவளித்து [கையில் எடுத்துச் சென்ற snacksக்கு வேலையே இல்லை] தங்குமிடங்களை ஏற்பாடு செய்து, ஆங்காங்கே பிரவசனமும் செய்து…பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மீண்டும் திருப்பி அனுப்புவது என்பது மிகக் கடினமான செயல். சுவாமிகள், வாலன்டியர்கள் மற்றும் சமையல் வேலையை இடைவிடாமல் செய்த அன்பர்களுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் என் நன்றிகள். பேருந்துகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப் பட்டு எங்கும் பழுதாகாமல் சென்றன.

தங்குமிடங்களுக்குச் செல்லவும் ஊருக்குள் பயணிக்கவும் எங்கெங்கும் பேட்டரி ஆட்டோக்கள் இருந்தன; சென்னை போல அல்லாமல் குறைந்த கட்டணத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு குழுவாக (5 பேர்) காலை ஒரு ஆட்டோவை பேசிக் கொண்டால் அவரே நாள் முழுவதும் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டு இறுதியாக ஒரு நாளுக்கு 500 /1000 எனப் பெற்றுக் கொண்டார்கள். (நடு இரவிலும் ஆட்டோக்கள் கிடைத்தன)

பவானி/காவிரி நதிகளின் கரையில் பிறந்து அவற்றில் குளித்து வளர்ந்திருந்தாலும் சென்னைவாசியான 40 வருடங்களில் வீட்டுக் குளியல் மட்டுமே என்ற நிலையில் நான்கு நாட்கள் தொடர்ந்து நதிகளில் நீராடியது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. திரிவேணி சங்கமக் குளியல் அனுபவம் எதிர்பார்க்காத ஒன்று.

யாத்திரிகர்கள் அனைவரும் சுவாமிகளைக் கண்டதும் மிகுந்த மரியாதையுடன் தரையில் விழுந்து வணங்கினர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மதமாற்றம் மிகுந்த அளவில் நடைபெறுவதை தவிர்க்கும் வண்ணம் volunteersகளை ஏற்பாடு செய்து கிராமங்களைத் தத்தெடுத்து வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பிரபந்தப் பாடல்கள் மற்றும் பல ஆன்மீக விஷயங்களை சிறுவர் சிறுமியருக்கு போதிக்கும் போற்றுதற்குரிய செயலை ஏற்பாடு செய்துள்ளார் சுவாமிகள் என எங்கள் வாலன்டியர் கூறினார்.

சிறு ஊர்களில் எங்கள் பேருந்துகள் சென்றவுடன் காவலர்கள் எங்களுடன் நடந்து வந்து பாதுகாப்பளித்தனர். உணவருந்தும் இடங்களில் கை கழுவத் தண்ணீர் குழாய்கள் இல்லாத இடங்களில் ட்ராக்டர்களில் நீர் வழங்கப்பட்டது. ஆங்காங்கே மர நிழலில் பிரவசனமும் இடம் பெற்றது. எந்தப் பேருந்தில் 40 பேரும் ஏறுகிறார்களோ அது முதலில் கிளம்பும். குறிப்பாக இரண்டிரண்டு பேருந்துகள் ஜோடியாகக் கிளம்பும்.

ஒவ்வொரு நாள் பிரவசனமும் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் YouTubeல் live ஆக ஒளிபரப்பப் பட்டது. உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் லிங்க் அனுப்பினேன். அவர்களும் கேட்டு/பார்த்து மகிழ்ந்ததாகக் கூறினார்கள். கிரிக்கெட் போட்டி சமயத்தில் அந்தந்த ஊரின் காட்சிகளையும் அவ்வப்போது காட்டுவார்கள் தொலைக்காட்சியில். அது போல இங்கும் clippings ஐ சேர்த்துக் காட்டினால் நேரில் பங்கேற்க முடியாதவர்களும் கண்டு மகிழலாம்.

முன்பே சுவாமிகளுடன் இது போன்ற யாத்திரைக்குச் சென்றவர்கள் எங்களைப் போன்ற first timersகளை விட சுறுசுறுப்பாக smart ஆக இருந்தார்கள். உதாரணமாக ராம் ஷய்யா (Ram Shayya) என்ற இடத்தில் வழக்கம் போல ஒரு கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நின்றது. எங்களுக்கு முன்பாகப் பல பேருந்துகள் ஏற்கனவே இருந்தன. பேட்டரி ஆட்டோவில் ஏறி குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கே வழங்கப்பட்ட உப்புமா காப்பியை உண்டு விட்டு கோவிலை அடைந்து பிரவசனத்தைக் கேட்கத் தொடங்கி இருந்தார்கள். நானும் என் கணவரும் நடந்தே சென்று உப்புமா, காப்பி, தட்டு கழுவும் தனித் தனி நீண்ட வரிசைகளில் நின்று ஒரு வழியாகக் கோவிலை அடைந்து மீண்டும் வரிசையில் நின்று ராமரை வணங்கி விட்டு பிரவசனம் கேட்கத் தயாரான சில நிமிடங்களில் பல்லாண்டு பல்லாண்டு.. எல்லாரும் பேருந்துக்குச் செல்லலாம் என சுவாமிகள் பிரவசனத்தை முடித்தார்.. அதற்குள் நம் செருப்பை விட்ட இடத்தில் கண்டு பிடிக்க வேண்டிய கவலை. வேகமாகச் சென்று செருப்பை மாட்டிக் கொண்டு, இம்முறை ஒரு ஆட்டோவைப் பிடித்துப் பேருந்துக்கு சென்றோம்.


இரண்டு ஊர்களில் எனக்கும் என் கணவருக்கும் மட்டும் ஒரு அறை அயோத்யாவில் மற்றொரு தம்பதியினருடன் சேர்ந்து தங்க வேண்டி இருந்தது. அருமையான அறை. அவர்களும் அருமையான மக்கள். திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. (நாங்க கொங்கு நாடுங்கோ) பலருக்கும் dormitory, சரியாகப் பூசப்படாத கட்டிடங்கள் எனத் தங்குமிட அசௌகரியங்கள் இருந்தன என்றாலும் யாரும் எந்தக் குறையும் கூறாமல் அமைதியாகப் பயணித்தது மகிழ்ச்சிக்குரியது.

புண்ணிய நதிகளில் நீராடி, கோவில்களுக்குச் சென்று, அந்தந்த ஊரைப் பற்றிய விவரங்களைக் கேட்டவாறு பயணித்தது வித்தியாசமான அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. பசி, தாகம், தூக்கம், வலி போன்றவற்றைக் கடந்து கடவுளையே நினைத்துப் பயணிக்கும் மனப் பக்குவத்தை இன்னும் நான் அடையவில்லை என்பதை இந்தப் பயணம் உணர்த்தியது.

தெரிந்தவர்கள் நண்பர்கள் என ஒன்றாக ஒரே பேருந்தில் பயணிக்க/தங்க நினைத்தால் application அனுப்பும் போதே சேர்த்து அனுப்புங்கள். நாங்கள் ஒன்பது பேரும் 5,9,15 என மூன்று பேருந்துகளில். போது இடங்களில் மட்டுமே சந்திக்க முடிந்தது.

சில பல வசதிக் குறைவுகள் இருந்தாலும் 1800 பேரா சென்றோம் என்னுமளவுக்கு organized ஆக இருந்தது.

நிற்க.

சென்னை செல்லும் விமானத்திற்கான அழைப்பு கேட்கிறது…

குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னை விமானம் கிளம்பியது. சுகமான பயணம். எங்களுக்காகக் காத்திருந்த வாடகைக் காரில் ஏறுவதற்குள் ஒரு திருப்பம். வருகைப் பகுதியில் தற்போது கார்கள் வரமுடியாது என்பதால் பேட்டரி காரில் பயணிகளை Aerohub west பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து தான் தற்போது வாகனங்கள் கிளம்ப வேண்டும் எனக் கூறப்பட்டது.

இரவு 7.45க்கு வளர்புரத்தில் உள்ள எங்கள் இல்லத்தை அடைந்ததும் சாதம் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு, வாலன்டியருக்கு வீடு வந்து சேர்ந்ததை WhatsAppல் தெரிவித்து விட்டு எங்கள் அயோத்யா தீர்த்த யாத்திரையை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

ஜெய் ஸ்ரீராம்!!

பயணங்கள் தொடரும்…

Courtesy:

1.திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் கையேடு மற்றும் பிரவசனங்கள்(YouTube - kinchitdharmam channel)

2.விக்கிபீடியா

3. என் முன்னோர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, 21 December 2024

அயோத்தி(யா) சென்றோம் (பகுதி-2)


24/10/2024

நைமிசாரண்யம்

அதிகாலை 1.30 மணிக்கு காளி பீட் (பீடம்) என்ற பெயருடைய தங்குமிடத்தினை அடைந்தோம். பேருந்து வாசலிலேயே நின்றது மகிழ்ச்சியாக இருந்தது. இரவு பத்து மணியளவில் சுவாமிகளின் ஆடியோ (மறுநாளுக்கான நிகழ்ச்சி நிரல்) அனைவருக்கும் பகிரப் பட்டது. நைமிசாரண்யம் என்பது வனம் சூழ்ந்த சிறிய ஊர் என்பதால் பெரிய கட்டிடங்களோ தங்குமிடங்களோ இல்லை இருக்கும் வசதியில் அனைவரும் தங்கி கடவுளை வணங்கி செல்வோம் எனக் கூறியிருந்தார்.

முன்புறம் காளியின் சந்நிதியுடன் கூடிய அந்த விடுதியில் எங்களுடன் வந்திருந்த ஒரு பேருந்தினருக்கு ஒரு Dormitary. மற்றொரு பேருந்தினருக்கு முதல் மாடியில் அறைகள் (நால்வர் தங்குவது போல) என ஒதுக்கப்பட்ட நிலையில் கடைசியாக உள்ள தம்பதிகள் நீங்கள் தான் சற்றுப் பொறுங்கள் அறை ஒன்றை ஒதுக்குகிறேன் என எங்கள் வாலன்டியர் கூறக் காத்திருந்தோம். சுற்றிலும் பெரிய புல்வெளியுடன் கூடிய மைதானத்தை ஒட்டிய பகுதியில் சில நிமிடங்களில் தரைத் தளத்தில் அருகிலேயே ஒரு அறையை ஒதுக்கினார். எங்களுடன் தங்க இருந்தவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டதால் பிரயாக்ராஜ் போல இங்கும் நாங்கள் இருவர் மட்டும் ஒரு அறையில் தங்கினோம். வனப்பகுதி என்பதால் அறையைத் திறந்ததும் பட்டாம்பூச்சி போல ஒன்று பறந்தது. அதை விரட்டி விட்டு அதிகாலை ஐந்து மணியளவில் காப்பி வரும்வரை தூங்கினோம். பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்ததால் அதிகக் களைப்பு தெரியவில்லை.


விடிவதற்குள் இந்த ஊரின் சிறப்பியல்புகளைத் தெரிந்து கொள்வோமா? சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்.

உத்தரப்பிரதேசதில் அயோத்திக்கு வடமேற்கு திசையில் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். கோமுகி (அ) கோமதி நதி இங்கே பாய்கிறது.

இந்த ஊருக்கான பெயர்க்காரணங்களைப் பார்ப்போமா? மிகவும் அர்த்தபூர்வமாக உள்ளன அவை என்றால் மிகையாகாது.

1.  1. இந்த வனத்தில் ரிஷிகளுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருமால் ஒரு நிமிஷத்தில் அழித்தாராம். நிமிஷம்- நைமிஷ+ அரண்யம்

2. தவம் புரிய விரும்பிய ரிஷிகள் நான்முகனை அணுக அவர் ஒரு சக்கரத்தைக் கொடுத்து எங்கு இது உருண்டு சென்று நிற்கிறதோ அந்த இடமே தவம் புரியச் சிறந்த இடம் எனக் கூறினாராம். [நேமி- சக்கரத்தின் வெளிப்புறம்] சக்கரம் இந்தக் காட்டில் நின்றதால் நேமிஷ அரண்யம்

3. 3 நிமிஷம் என்னும் ஒரு வகையான தர்ப்பைப் புல் வளர்ந்திருக்கும் அரண்யம் என்பதால் நைமிசாரண்யம். (முன்பொரு காலத்தில்)

இறைவன் இங்கே வனரூபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காடுகளை, வனங்களை அழிக்க வேண்டாம் என மக்களுக்கு உணர்த்தவே மரரூபத்தில் இருக்கிறார். இந்த ஊரின் மற்றொரு சிறப்பு ராமர் இந்த ஊரின் சிறப்புக் கருதி அஸ்வமேத யாகம் இங்கே செய்தார் எனக் கூறப்படுகிறது. 

எங்கெங்கே சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என முன்பே கூறப்பட்டபடி காலை ஆறு மணியளவில் ஆட்டோவில் நண்பர்களுடன் கோமதி நதியில் நீராடக் கிளம்பினோம். (மொத்தம் 5 பேர்). ஒரு குழுவுக்கு ஒரு ஆட்டோ எனப் பேசிக் கொண்டு காலை முதல் மாலை வரை எங்கு சென்றாலும் அதிலேயே செல்ல வேண்டும். ஓட்டுநருக்கு எங்கெங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வரிசை தெரியும் என்பதால் அனைவருக்கும் நலம். கோமதி நதியின் அருகே மக்களும் மாக்களுமாக ஒரே கூட்டம். பலர் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதால் மண் கலங்கி தண்ணீர் சேற்றின் நிறமாகி…

நண்பர்களின் துணிமணிகளை நாங்கள் வைத்துக் கொள்ள அவர்கள் (இரண்டு பெண்கள் ஒரு ஆண்) முதலில் குளித்து விட்டு வர, பின் நாங்கள் குளித்து வந்தோம். ஆற்றின் நடுவே சென்றாலும் ஆழம் அதிகமில்லை என்பதால் மக்கள் குறைவான பகுதிக்கு நடந்து சென்று அமைதியாக நீராடி, கடவுளை வணங்கி விட்டுக் கரைக்கு வந்தோம். வரும்போதே ஒரு காலி பாட்டிலில் நீரை முகர்ந்து எடுத்து வந்தோம். (எல்லா நதிக் கரையிலும் பூக்கள்,  தண்ணீர் கேன்களை விற்பனை செய்கிறார்கள்)

மீண்டும் காளி பீடத்திற்குச் சென்று துணிகளை அலசி கொடி கட்டிக் காய வைத்து விட்டு அறைக்கு எதிரில் இருந்த மைதானத்தில் அளிக்கப்பட்ட காலை உணவினை உண்டு விட்டு ஆட்டோவில் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பினோம். இம்முறை 2000 பேருக்குமே இங்கே தான் காலை உணவு)

காலையில் சென்ற அதே நண்பர்கள் குழு மற்றும் ஆட்டோதான். ஓட்டுநரிடம் எங்கெங்கே செல்ல வேண்டும் என கூறி விடுங்கள் எந்த வரிசையில் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என அவருக்கு நன்றாகத் தெரியும் என சுவாமி கூறி இருந்தார். முதலில் நாங்கள் சென்ற இடம் நரசிம்மர் கோவில். தென்னிந்திய முறைப்படி அஹோபில மடத்தினரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலத்தில் உள்ளது போல ஒன்பது நரசிம்மர் சந்நிதிகள் உள்ளன. கோவில் திருப்பணிகள் இன்னும் முற்றிலுமாக முடிவு பெறவில்லை. கிரானைட் மற்றும் பளிங்குக் கற்களால் பிராகாரம் அலங்கரிக்கப் படுகிறது. பளிங்குத் தூண்களில் ராமர், கிருஷ்ணர் வாழ்க்கை நிகழ்வுகள், தசாவதாரம் எனப் பல சிற்பங்களை நுணுக்கமாகச் செதுக்கி உள்ளார்கள்.







அடுத்து நாங்கள் சென்ற இடம் தேவராஜப் பெருமாள் கோவில். ஆட்டோ அருகில் செல்ல முடியாததால் சில நிமிடங்கள் நடந்து கோவிலை அடைந்தோம். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஊர். இங்கே நாராயணர் அரண்ய (காடு) ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். கோவிலின் முகப்பு, பிராகாரம் போன்றவை தென்னிந்திய முறைப்படி இருந்தாலும் உட்புறம் ஒரு கூடம் அருகருகில் சந்நிதிகள் என வட இந்திய முறைப்படி

அமைந்துள்ளது. இங்கும் நுழைவாயில் அருகிலேயே மாடுகளும் கன்றுகளும் தென்படுகின்றன. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீஹரிலக்ஷ்மி, புண்டரீகவல்லி என்னும் தாயார்களுடன் உள்ளார். பெருமாளை நிதானமாகத் தரிசித்து
விட்டு கோவிலின் பிராகார சுவற்றில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் நானும் என் கணவரும் கூறி வணங்கி விட்டு அடுத்ததாக வியாச சுகதேவ மந்திருக்குக் கிளம்பினோம்.

இந்தக் கோவிலின் உள்ளே சுகதேவரின் திருவுருவமும் வெளியில் ஆல மரத்தின் கீழே வியாசரின் பீடமும் உள்ளது. வியாசர் சுகரின் தந்தையாவார்.

व्यासं वसिष्टनप्तारं शक्ते: पौत्रमकल्मशम् I

पराशरात्मजं वन्दे शुकतातं तपोनिधिम् I

(vyAsam vasishta-naptAram Sakteh pautram akalmasham

parAsarAtmajam vande Suka-tAtam tapo-nidhim.)

vyAsa is the great-grandson of vasishta and the grand-son of Sakti. He is the son of parAsara and the father of Suka. I offer my obeisance to that vyAsa who is free from all defects and is a mine of austerities)

பகவான் என்று அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம் ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வைணவ சமய இலக்கியம் ஆகும்.

நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரீஷித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று.

இந்த ஆலமரத்தின் நிழலிலே தான் முற்காலத்தில் 18 புராணங்களும் ஓதப்பட்டன என அறிகிறோம். ஸூத பௌராணிக ஸ்தானம் என்பதும் இந்தக் கோவிலின் ஒரு பகுதி.

ரோமஹர்ஷணர் என்பவர் புராணம் சொல்வதில் வல்லவர். கதை சொல்லும் சுவாரசியத்தில் பலராமர் வந்ததைக் கவனிக்கவில்லை. கோபமுற்ற பலராமர் தன் கலப்பையால் தட்ட அவர் இறந்து விடுகிறார். கதை கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் வருந்தினார்கள். பலராமரும் வருந்துகிறார். ரோமஹர்ஷணரின் புதல்வரான ஸூதர் என்பவருக்கு இனிமையாக எளிமையாகக் கதை சொல்லும் ஆற்றலை அளித்தார் இங்கு அமர்ந்து கொண்டுதான் ஸூத பௌராணிகர் 18 புராணங்களையும் உபதேசித்தார்.

இங்குள்ள ஒரு பெரிய மண்டபத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஏழு நாட்கள் பாகவதம் படித்துச் செல்கிறார்கள். (பாகவத சப்தாஹம்) நாங்கள் சென்ற தினத்தில் வட இந்திய மக்கள் இரண்டு பேருந்துகளில் வந்து படித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கெனத் தனியாக பெரிய கூடம் உள்ளது.

இந்தக் கோவிலின் உள்ளேயே மிகப் பெரிய அனுமன் சிலையும் உள்ளது. இதனை அஹிமஹி ராவண ஸ்தானம் என்கிறார்கள். இவர்களைப் பற்றிய கதை உத்தரபாரதத்தில் உள்ளது. இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றவுடன் ராவணன் தன் சகோதரனான அஹிராவணனின் உதவியுடன் அவனது தேசமான பாதாள லோகத்திற்கு ராம லட்சுமணர்களைக் கடத்திச் சென்றதாகவும் அகஸ்தியர் அந்த ரகசியத்தை வெளியிட அனுமன் விரைந்து பாதாள லோகம் சென்று அஹிமஹி ராவணர்களை அழித்து ராம லட்சுமணர்களை மீட்டதாகவும் கதை. இங்கு ராம லட்சுமணர்களைத் தோளில் சுமந்தபடி அனுமன் காட்சியளிக்கிறார்.

இந்தக் கோவில் என்றில்லை எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் கடவுளின் பாதரட்சை அல்லது சிறு துடைப்பம் போன்ற ஒரு பொருளை பக்தர்கள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டோம் பணம் கொடுங்கள் எனத் தங்களை கோவில் பூஜாரிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் கேட்டுக் கேட்டு வாங்கினார்கள். முக்கியமாக சற்று ஏமாந்த தோற்றம் கொண்டவர்களுக்கு செருப்பு/விளக்குமாறு ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு. எங்களுடன் வந்திருந்த தம்பதிக்கு ஒவ்வொரு இடத்திலும் ஆசீர்வாதம் கிடைத்தது. கண்டிப்பாக வேண்டாம் எனக் கூறியவர்களுக்கு ஆசீர்வாதம் இல்லை. பகல் கொள்ளை.

அடுத்ததாக சக்கரத் தீர்த்தம் சென்றோம்.

இது பற்றிய வரலாறை முன்பே கூறி விட்டேன். நடுவில் ஒரு வட்டம் சுற்றிலும் தடுப்புச் சுவர். வெளிப்புறம் பெரிய வட்டம். அங்கே தான் பக்தர்கள் குளிக்க முடியும். உள்வட்டத்தில் இன்றளவும் நீர் ஊற்று பொங்கிக் கொண்டே இருக்கிறது. வெளிவட்டத்தில் நாம் நின்றாலே நீரின் ஓட்டத்தில் நாம் நடந்தபடியே வெளி வட்டத்தைச் சுற்றி வரும்படி இருக்கும். நாங்கள் படிக்கட்டில் இருந்தபடியே நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு நண்பர்களை விடுதியில் இறக்கி விட்டு விட்டு பிறகு பிரவசனம் நடக்கும் சிறு வனப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்தோம். அவர்கள் விடுதியிலிருந்து காட்டுப் பாதையில் சென்றால் ஐந்தே நிமிடங்களில் சென்று விடலாம் எனக் கூறப்பட்டதால் நடந்து சென்று வனத்தை அடைந்தோம்.

தரையில் அமரும் வண்ணம் ஜமுக்காளங்கள் போடப்பட்டு ஒலியமைப்பு அனைவருக்கும் கேட்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஒரு மரத்தைச் சுற்றியிருந்த மேடையில் சுவாமிகள் அமர வகை செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் கூடிய பின் மதியம் ஒரு மணிக்கு யுவதிகள் இருவரின் பக்திப் பாடல்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி ஏறக்குறைய மூன்று மணிக்கு முடிந்தது. பாகவத புராணத்தின் முக்கியப் பாடல்களுக்கும் திருமங்கையாழ்வாரின் பத்து திவ்வியப் பிரபந்தப் பாடல்களுக்கும் மிக அருமையாக விளக்கம் அளித்தார் சுவாமி. நடையும் தளர தேகம் ஒடுங்க நாவது குளர கண்கள் சொருக…இந்த நிலையை அடைந்த பிறகு நம்மால் வீட்டை விட்டு நகர முடியாது. உடலில் தெம்பிருக்கும்போதே நைமிசாரண்யம் வந்து தேவராஜப் பெருமாளை தரிசியுங்கள் என்பதே அவரது பாடல்களின் சாரம்.

Drone அங்குமிங்கும் பறந்து பறந்து வீடியோ எடுத்தது. எல்லா தினத்தின் பிரவசனங்களும் ஆரம்பித்த உடனேயே YouTubeல் ஒளிபரப்பப் பட்டன. (நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே நானும் உறவினர்களும் இருந்த frame edit செய்யப் பட்டு புகைப்படமாக உலாவத் தொடங்கி விட்டது.)

ஒரு இளம் வயதுப் பிரமுகர் சிறு வனத்தைத் தன் வசம் வைத்துப் பாதுகாத்து வருவதால் அந்தப் பகுதி காப்பாற்றப் பட்டுள்ளது. அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப் பட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் வனத்திலேயே உணவு வழங்கப் பட்டது. பின்னர் அனைவரும் அவரவர் விடுதிக்குச் சென்று பெட்டிகளை எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடத்தை நோக்கிக் கிளம்பினோம். மாலை 4.30 மணியளவில் அயோத்தியை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது.

இது வரை ஆனந்தமாக இருந்த பயணம் கீழ்க் கண்ட காட்சிகளைக் கண்ட பிறகு சற்றே வருத்தத்திற்குள்ளானது

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஊர் தற்சமயம் நகரமயமாகி வருகிறது. நாங்கள் சென்ற சிறு வனம் தவிர எங்கெங்கும் கட்டிடங்கள் செங்கல் சூளைகள். சற்றுத் தொலைவில் முக்கிய சாலை, அதன் பராமரிப்புப் பணிகள் என சுற்றுச் சூழல் மாசுக்கு எல்லையே இல்லை. கோமதி நதியின் நிறமே தெளிவாக இல்லை. வழியெங்கும் வீடுகளின் வெளிப்புறம் பூசப்படாமல் செங்கல் தெரியும் படி உள்ளது. மரம் செடி கொடிகள் அவ்வளவாக இல்லை. கடவுளே பார்த்து இந்த அழிவுச் செயல்களை நிறுத்தினால் தான் உண்டு.

இரவு உணவு பேருந்திலேயே ஏற்றப்பட்டு எங்களுடன் வந்தது. வழியில் ஓரிடத்தில் நிறுத்தி உணவை உண்டு விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். அயோத்தியை அடைந்து, பொது மைதானத்திலிருந்து எங்கள் விடுதிக்குக் சென்று மூன்றாம் மாடியில் உள்ள Non-A/C அறையைச் சென்று சேர 11.30 ஆனது. (உங்களைப் போல அனைவரும் ஒத்துழைத்தால் மிக நன்றாக இருக்கும் _ எங்கள் வாலன்டியர்) இம்முறை எங்களுடன் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும் தங்கினார்கள். வழக்கம் போல எந்த seasonல் எந்தப் பெரிய ஊருக்குச் சென்றாலும் குளிர் இல்லை. கூட்டம் காரணமாக ஒரு விதமான கதகதப்பு. சூடு.

பயணக் களைப்பு. அசதியில் மின் விசிறி முழு அளவில் சுற்றாதது கூட எங்களைப் பாதிக்கவில்லை மறுநாளைய நிகழ்ச்சி நிரல் வாட்சப்பில் வந்து சேர ராம் லல்லாவை தரிசிக்கப் போகிறோம் என்பதை நினைத்த வண்ணம் நிம்மதியாக உறங்கத் தொடங்கினோம்.

அனுபவங்கள் தொடரும்…





































 

 

 

 

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...