ஜூலை 2023ல் ஒரு நாள் என் கணவரின் அலுவலக நண்பர் "மேகமலை போகலாமா? எனக் குறுந்தகவல் அனுப்பியதன் விளைவே இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்றழைக்கப்படும் "வாகமண்" பயணம்.(Vagamon என்கிறது கூகிள்)
மேகமலை வேண்டாம் அதை விட அருமையான இயற்கை எழில் கொஞ்சும் வாகமண்ணுக்கு (Vagamon) ஆகஸ்ட் 4-8 செல்வது என முடிவு செய்தோம். இப்படி ஒரு ஊர் இருப்பதே எனக்குத் தெரியாது என்பதால் கூகிள் ஐயனாரை அணுகினேன். கண்ணில் பட்ட முதல் தகவல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் அங்கே கனமழை பெய்யும் என்பதே. Accuweather.com காட்டிய படத்தை நண்பருக்குப் பகிர்ந்த போது தென் மேற்குப் பருவ மழை அதற்குள் நின்று விடும் எனக் கூறி என் கணவரை பயணத் திட்டத்தைத் தொடரும்படி கூறினார். (ஹூம் ..)
சென்னையிலிருந்து ரயிலில் மதுரை சென்று அங்கிருந்து இன்னோவா அல்லது Maxicabல் செல்ல முடிவு செய்யப்பட்டது. வேனுக்கு மட்டும் 19 ஆயிரம் ஆகும் என்பதால் ஆறு பேர் மட்டும் செல்லாமல் ஒரு குழுவாகச் செல்லலாம் என முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து மேலும் சில நண்பர்களையும் உடன் சேர்த்துக் கொண்டோம். கிளம்பும் தினம் மூவர் வராததால் எட்டு பேர் மட்டுமே பயணத்தை மேற்கொண்டோம்.
மூணாரில் சரியான சாப்பாடு கிடைக்கவிட்டால்? மழை வந்து விட்டால்? என யோசித்துக் கையில் பருப்புப் பொடி, குடையுடன் தற்சமயம் நாங்கள் வசிக்கும் சென்னைக்கு மிக அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளர்புரத்திலிருந்து இரவு ஏழு மணிக்கு(கே) ஒரு ஆட்டோவில் பயணித்து 20 கிலோமீட்டர் அருகிலுள்ள திருவள்ளூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து புறநகர் ரயிலில் 1.15 மணி நேரம் பயணித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சேர்ந்தோம். இந்த ரயில் ஓடிய நேரத்தை விட ஸ்டேஷன்களில் நின்ற நேரமே அதிகம் எனத் தோன்றியது. ஆவடியைச் சுற்றியே நான்கு நிறுத்தங்கள். (இந்தப் பயண நேரத்தைப் பற்றித் தனிப் பதிவே போடலாம்)
நண்பர்களைச் சந்தித்ததும் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு, தூங்கி எழுந்ததும் மதுரை. ஏற்கனவே திட்டமிட்டபடி Maxicab ரயில் நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்லக் காத்திருந்தது. மதுரையில் காபியை முடித்துக் கொண்டு முன்னேறினோம்.
போகும் முன்பாக வாகமண்ணைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?
வாகமண் மதுரையிலிருந்து 175 கிமீ பயண தூரத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம். தரை மார்க்கமாகச் சென்றால் தேனி, கம்பம், குமுளி ஆகிய பெரிய ஊர்களைத் தாண்டிப் பயணிக்க வேண்டும். திரைத் துறையினரால் பிரபலப்படுத்தப்பட்ட உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டிகளும் இதில் அடக்கம். மதுரையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள தேனி நகரம் மாவட்டத் தலைநகரம். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்நகரம். மாவட்டத் தலைநகரமாதலால் எங்கும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என வளர்ச்சியடைந்த நகரம். "பெரியார்" நதியால் செழிப்புற்று, பச்சைப் பசேலென உள்ளது. சுற்றிலும் தேயிலை, காபி, ஏலக்காய், திராட்சை, வாழைத் தோட்டங்கள்.
தேனியில் காலை உணவை முடித்துக் கொண்டோம். செல்லும் வழியில் மேகமலைக்கு மிக அருகில் சென்ற போதும் எங்கள் பயணத் திட்டத்தில் அந்த மலை இல்லாததால் அங்கே செல்லாமல் நேராக வாகமண்ணை நோக்கியே பயணித்தோம்.
செல்லும் வழியெங்கும் சபரிமலை 190 கிமீ, 150 கிமீ எனப் பெயர்ப்பலகை கண்ணில் தென்பட ஓ…சபரிமலை இந்தப் பகுதியில் தான் இருக்கிறதா?. அந்த மலை கேரள மாநிலத்தில் உள்ளது; பம்பை நதி மற்றும் அடர்ந்த வனப்பகுதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றபடி சபரிமலை எந்தத் திசையில் உள்ளது என்பதே அந்த தினம் வரை எனக்குத் தெரியாது.
மதுரையிலிருந்து சிறிது தொலைவு பயணப்பட்டதுமே வலப்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தென்படத் தொடங்கின. அதை ஒட்டிய பசுமையான சுற்றுப் புறங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி ஊரில் பிறந்த எனக்குப் பழகிய காட்சிகளாகவே தோன்றின.
கம்பம் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் குமுளி, மேகமலைப் பகுதிகளில் தன் குழுவினருடன் மிதிவண்டி (சைக்கிள்) ஓட்ட சென்னையிலிருந்து வந்திருந்த எங்கள் சகோதர் எங்கே இருக்கிறீர்கள் எனத் தொலைபேசினார். [அவர் சென்னை நகரின் மிதிவண்டி ஓட்டும் குழுவின் active member. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் என உடற்பயிற்சிக்காகச் செல்கிறார்கள். உலகின் அனைத்து நகரங்களிலும் இது போன்ற குழுக்கள் உள்ளன] அன்று அவர்கள் பம்பைக்கு ஜீப்பில் Periyar Reserve Forest வழியாகச் சென்று அங்கே மிதிவண்டி ஓட்டுவதாகக் கூறினார். யானை, மான், மயில், குரங்கு எனப் பலவிதமான வன விலங்குகள் உள்ள பகுதி அது. சந்தர்ப்பம் சரியாக இருந்தால் சந்திக்கலாம் எனக் கூறினார். கடைசி வரை அந்த சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ☹
சிறிது தூரத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி என்ற ஊரை அடைந்தோம். Checkpostல் நின்ற நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் 10, 20 கிலோ கோணிகளில் நேந்திரம்பழ வறுவலை வைத்திருந்ததைக் கண்டு வியந்தோம். அங்கேயே வாங்கி உண்ணவும் வசதியாகக் குவித்து வைத்திருந்தார்கள். (கொஞ்சமாக வாங்கி சூடாக உண்டோம்) குமுளியைத் தாண்டியதும் அடுக்கடுகான மலைகளின் மேலமைந்த மலைப்பாதை ஆரம்பம். எங்கெங்கும் பசுமையாக, மேகமூட்டத்துடன் காணப்பட்ட சுகமான பருவநிலையுடன் பயணம் நன்றாக இருந்தாலும் மலைப்பாதையில் சுற்றிச் சுற்றி எங்கள் வாகனம் பயணப்பட்டதில் தலை, வயிறு என உள்ளேயும் சுற்றியது.
வாகமண்ணிற்கு 12 கிமீ தொலைவில் உள்ள திருப்பத்தில் தான் சபரிமலைக்குச் திரும்பிச் செல்ல வேண்டும். அந்தப் பகுதியை நெருங்கிச் செல்லச் செல்லப் பெயர்ப்பலகையில் அம்புக் குறியுடன் ஐயப்பனின் படம் மட்டுமே இருந்தது வித்தியாசமாக இருந்தது. ஏறக்குறைய 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நாங்கள் பயணித்த பல ஊர்களிலும் இதே போலப் பெயர்ப்பலகைகள் தென்பட்டன. (சர்வதேச விமானப் பயண சமயங்களில் என் கண்ணில் தென்பட்ட இது போன்ற ஒரு செய்தியைப் பகிர்கிறேன். Emirates, Ethihad போன்ற ஐக்கிய அரபு நாட்டு விமான நிறுவன விமானங்களில் உள்ள in-flight entertainment TV திரையில் தெரியும் வரைபடத்தில் மெக்காவை மையமாக வைத்தே ஊர்களின் / நாடுகளின் தூரம் குறிப்பிடப் பட்டிருக்கும். (மெக்கா – இஸ்லாமியர்களின் புனிதத் தலம்) உதாரணமாக சான் பிரான்சிஸ்கோ மெக்காவிற்கு…….திசையில் …….கிலோமீட்டர்/மைல்களில் உள்ளது என்பது போலக் காட்டும்)
5.30 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மதியம் 1.30 மணியளவில் வாகமண்ணை அடைந்தோம். எல்லையி லேயே ஊரைச் சுற்றிக் காண்பிக்கும் ஜீப்கள் பல நின்று கொண்டிருந்தன. Rs 2,000 கொடுத்தால் போதும் எனக் கூறினார்கள். ஊரின் நிலவரம் எதுவும் எங்களுக்குத் தெரியாது என்பதுடன் பசி நேரம் என்பதால் முதலில் விடுதிக்குச் சென்று விட முடிவு செய்தோம். நாங்கள் தங்கவிருந்த Copper Castle என்னும் விடுதி சாலையிலிருந்து பள்ள்ள்ள்ள்ளத்தில் இருந்தது. (mini roller coaster ride)
விடுதியின் முகப்புத் தோற்றம் வெனிஸ் போல சிறு வாய்க்கால், பாலம் என அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. மலைப் பிரதேசம் என்பதால் ஆங்காங்கே படிக்கட்டுக்களில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டியிருந்தது. நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு தம்பதி என மூன்று அறைகளில் தங்கினோம். (ஒரே இரவு தான் அங்கே தங்கினோம்)
விடுதியிலேயே மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தோம். நம் தமிழக முறைப்படி செய்யப்பட்ட பொன்னி அரிசி, சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், பாயசம் என unlimited சாப்பாடு Rs 120/- விடுதியின் சாப்பாட்டுக் கூடமும் வித்தியாசமாக குகை வடிவில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருந்தது.
மதிய உணவுக்குப் பிறகு 3.30 மணியளவில் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். எங்கள் வாகனத்தில் கிளம்பி ஜீப்கள் நின்றிருந்த பகுதிக்கு சென்றோம்.
வாகமண்ணின் சுற்றுப் பகுதிகளைக் காணக் குறுகிய மண் சாலைகளில் செல்ல வேண்டும் ஜீப்களில் மட்டுமே செல்ல முடியும் என்பதால் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறினார் எங்கள் ஓட்டுநர். போகும்போது இரண்டாயிரம் நாங்கள் கேட்டபோது 2,500 என்றார்கள். நாங்கள் அதைக் குறிப்பிட்டதும் சரி இரண்டாயிரம் என்கிறார்கள்.(Jeep safari)
கரடுமுரடான பாதைகளில் பயணிக்க ஏற்ற வகையில் உள்ள அந்த ஜீப்பில் ஏறி அவர்கள் சுற்றிக் காட்டவிருந்த ஐந்து இடங்களையும் பார்க்கத் தயாரானோம். முன்பக்கம் நால்வரும் பின்பக்கம் நால்வரும் அமர்ந்து ஜீப்பில் பயணம் செய்தது ஒரு விதமான adventure என்றாலும் உள்ளூர பயமாகவே இருந்தது. Rough terrain rideக்கு ஏற்ற வகை ஜீப் என்றாலும் பிடித்துக் கொள்ள ஒரு கைப்பிடி கூட இல்லாத ஆபத்தான பயணம் என்பதால் நிம்மதியாக சுற்றுப்புறத்தை அனுபவிக்க முடியவில்லை.
பள்ளங்களில் முன்தினங்களில் பெய்த மழையால் நீர் நிரம்பி சேறும் சகதியுமாக இருந்தது எங்கள் பயம் அறிந்த இளம் வயது ஓட்டுநர் அதிவேகமாக ஆனால் லாவகமாக ஓட்டிச் சென்றார். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். (ஒரு கையால் ஜீப்பின் உட்பகுதியையும் மறுகையால் உயிரையும் பிடித்தபடி)எங்கெங்கும் தேயிலை, காப்பித் தோட்டங்கள், சுற்றிலும் மேகமூட்டத்துடன் கூடிய மலைகள், கையெட்டும் தூரத்தில் மிளகுக் கொடிகள், வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலைகள் எனக் காட்சிகள் பலவும் கண்ணில் தென்பட்டன.
முதல் இரண்டு இடங்கள் view points தான். மூன்றாவது இடம் தூ...ரத்தத்தில் தெரிந்த இடுக்கி அணையின் நீர்த்தேக்கம். நான்காவதாகச் சென்ற இடம் ஒரு நீர்வீழ்ச்சி. Marmala falls எனப்படும் இந்த நீர்வீழ்ச்சி பெரியார் என்னும் நதியில் உண்டாகிறது. சாலைக்குக் கீழே குகை போன்ற அமைப்புடன் நதி இரண்டாகப் பிரிந்து செல்லும் இடத்தில் வாலிபர்கள் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அத்துடன் முதல் நாள் சுற்றுலா நிறைவுற விடுதிக்குத் திரும்பினோம். வெனிஸ் நகர அமைப்பு போன்ற முன்தோற்றம் கொண்ட விடுதியின் பாலத்தில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து விட்டு(நான் மட்டும்) இரவு உணவுக்குச் சென்றோம். மதிய உணவு நேரத்தில் நாங்கள் வேண்டிய சப்பாத்தி, சட்னி, மசால் போன்றவற்றை செய்து கொடுத்தார்கள். சுவையான கடலைக்கறியும் இருந்தது.
ஆகஸ்ட் மாதம் மழைக்காலம் என்பதால் எப்போது மழை வரும் என்று ஊகிக்க முடியவில்லை. மறுநாள் அதிகாலையில் கண் விழித்த போது மழை பெய்து கொண்டிருந்தது. எட்டு மணியளவில் மழை நின்றதும் காலை உணவான புட்டு, கடலைக்கறி, பூரி, கிழங்கு, ரொட்டி, வெண்ணை(நேயர் விருப்பம் தான்) என அவரவர் விருப்பப்படி உண்ட பிறகு விடுதியைக் காலி செய்து விட்டுக் கிளம்பினோம்.
வாகமண் சுற்றுலா தொடர்ந்தது. வழியில் "தங்கல் பாரா" என்னும் இடத்திற்குச் சென்றோம். எங்களுக்குக் காட்டப்பட்ட படத்தில் இருந்த மகாபலிபுரத்தில் உள்ள கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை (krishna's butter ball) போல ஒரு நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பாறை ஒன்றை எதிர்பார்த்துச் சென்றோம். அப்படி எதுவும் இல்லை. சிறு குன்றுகளின் மேலேறிப் பார்த்தால் அருமையான இயற்கைக் காட்சிகளைக் காணலாம் எனக் கூறப்பட்டது. சிலர் மேலேற மற்றவர்கள் கீழேயே அமர்ந்து சுற்றுப் புறங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். (பள்ளி நாட்களில் #Guide வகுப்பில் பாடிய கரடி மலை மேலேறி கரடி மலை மேலேறி கரடி மலை மேலேறி என்ன செய்தது மலையின் அந்தப் பக்கம் மலையின் அந்தப் பக்கம் மலையின் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தது என்ற round song தான் நினைவில் வந்தது). மலையின் அந்தப் பக்கம் இயற்கைக் காட்சிகள் தான். [# சிறுவர்க்கு – Scout சிறுமியர்க்கு – Guide]
நல்ல இடமாக அழைத்துச் செல்லுமாறு ஓட்டுனரை வேண்டியதில் கோட்டயம் வனப்பகுதியைச் சேர்ந்த "எருமேலி" என்னும் இடத்தில் உள்ள பைன் காட்டிற்கு (Pine forest) அழைத்துச் சென்றார். உயரமான பைன் மரங்களால் ஆன அந்தப் பகுதியில் ஒரு சிறு ட்ரெக்கிங் செய்து கண்டோம். அந்தப் பகுதியில் என்னென்ன பறவைகள், மிருகங்கள், மரங்கள் காணப் படுகின்றன எனப் படம் வரைந்து தனித் தனிப் பலகைகளை வைத்திருந்தார்கள். மிருகங்களில் காலடித் தடங்களுக்கு தனிப் பலகை சுலபமாக நடந்து செல்வதற்கான படிக்கட்டுகள் (ramp) கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் புகைப்படக் கலைஞர்கள் ஒரு படத்திற்கு Rs 300 கேட்டார்கள் (உடனடி பிரிண்ட்) செல்லும் வழியெங்கும் சிறு கடைகளில் விதம் விதமான பொம்மைகள், சாக்கலேட்டுகளை விற்பனை செய்கிறார்கள்.
அடுத்து நாங்கள் சென்ற இடம் Meadows எனப்படும் புல்வெளிகள். சிறு குன்றுகளில் பச்சைப் பசேலென்ற புல்வெளியில் அமர்ந்து ஓய்வு/புகைப்படங்கள் எடுத்தோம்.
வாகமண்ணைச் சுற்றிப் பார்த்து விட்டு, இடுக்கி அணை வழியாக இரவுக்குள் மூணாறைச் சென்றடைவது எங்கள் திட்டம். இடுக்கியை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கையில் வழியில் பெரியாரின் துணை ஆறு ஒன்றின் கரையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைக் தொடர்ந்தோம். இயற்கையின் மடியில் இருப்பது எப்போதும் சுகமே.
வழியில் கட்டப்பனா என்னும் பெயருடைய சற்றே பெரிய ஊரில் "ஹோட்டல் ஆர்யாஸ்" தென்படவே மதிய உணவை அங்கே உண்டோம். மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த நகரம் பார்க்க அழகாக இருந்தது. கேரளாவின் சிவப்பு அரிசி சாதம் மற்றும் பலவகையான காய்கறி குழம்பு வகைகள் எனச் சுவையான உணவு. அளவுக்கதிகமாக அளிக்கப்பட்ட சாதத்தைத் திருப்பித் தந்து விட்டுக் காய்கறிகளை அதிகமாக உண்டோம் நானும் ஒரு சகோதரியும். மற்றவர்களுக்கு வயிற்று வலி வந்து விடும் என பயம். தோசை மட்டுமே சாப்பிட்டார்கள். (எங்கள் பருப்புப் பொடிக்கு வேலையே இருக்கவில்லை) இந்த ஊர் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது.
Idukki Hydro Electric Project என்னும் பெயர்ப்பலகை தாங்கிய இடத்திற்கு எங்களை அழைத்து சென்று இது தான் இடுக்கி அணை என்றார் ஓட்டுநர். “குறவன் குறத்தி” என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இரண்டு மலைகளை ஒன்றாகச் இணைத்து நடுவில் ஒரு மாபெரும் சுவர் எழுப்பி உள்ளார்கள் நாங்கள் சென்ற பகுதி அணைக்கட்டின் Concave side of Idukki Arch dam. நீர்த்தேக்கம் அந்தப் பகுதியின் பின்புறம் இருக்கிறது போலும். தண்ணீர் கண்ணுக்குத் தெரியவில்லை. பெரியார் நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் இந்த அணை நீரிலிருந்து மின்சாரம் எடுக்கப் படுகிறது.(780 MW மின்சாரம்) Arch அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த அணையானது நீரின் வேகத்தை வெகுவாகத் தடுக்கும் என்கிறது விக்கிபீடியா.
பொதுவாக அணைக்கட்டுகள் நேர் கோடு போலவே கட்டப்பட்டிருக்கும் இந்த அணை வளைவாகக் கட்டப்பட்டுள்ளது (The dam type is a concrete, double curvature parabolic, thin arc dam)
(டிசம்பர் 2022ல் நாங்கள் கண்ட வடஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் Theodere Roosevelt அணைக்கட்டும் இது போன்றே அமைக்கப்பட்டுள்ளது. அது பற்றி விரிவாக “கள்ளிக் காட்டுக் கதைகள்” என்னும் தலைப்பின் கீழ் பதிவிட்டுள்ளேன்)
நீர்த்தேக்கத்தைக் காண ஊரைச் சுற்றிச் சுற்றி வெவ்வேறு கோணங்களில் சென்று பார்த்தும் நாம் எதிர்ப்பார்க்கும் வகையில் அணைக்கட்டிலிருந்து நீர் வெளியேறும் காட்சியைக் காண இயலவில்லை. பல்வேறு துணையாறுகள் பெரியாருடன் சேர்வதை மட்டுமே காண முடிந்தது. அவற்றுக்கு நடுவிலும் சிறு அணைக்கட்டுகள் பாலங்கள் என அந்தப் பகுதியே பசுமையாக அழகாக இருந்தது.
வழியில் மலைகளுக்கிடையே கம்பியில் பயணிக்கும் zipline எனப்படும் adventure விளையாட்டினை விளையாடும் இடத்தை அடைந்தோம். எங்களில் இருவர் மட்டும் இரண்டு மலைகளுக்கிடையே கம்பியில் தொங்கியபடி சென்று திரும்பினார்கள். உயரம் பற்றிய பயம் காரணமாக மற்றவர்கள் செல்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்தோம். நாங்கள் ஆகஸ்டு 6 அங்கே பயணித்தோம்; செப்டம்பர் 6 வாகமண்ணில் வெளிநாடுகளில் இருப்பதைப் போல 40 மீட்டருக்கு மலையின் மேல் உயரத்தில் கண்ணாடிப் பாலம் (a cantilever skywalk glass bridge) ஒன்றை சுற்றுலாப் பயணியருக்காக ஏற்படுத்தி இருக்கிறார்கள் என அறிந்தோம். இது போன்ற கண்ணாடிப் பாலத்தில் Grand Canyon மலைகளின் மேல் நான் நடந்திருக்கிறேன் என்றாலும் மற்றவர்களும் அனுபவித்திருக்கலாமே என சற்றே வருத்தமாக உள்ளது. (Just missed by 30 days ☹)
நாங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறோம். வெளிநாடுகளைப் போல் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சுற்றுலா செல்லும் மக்களைக் கவரும் வண்ணம் அமைத்திருக்கவில்லை. விதிவிலக்காக வாகமண், மூணார் பகுதிகளில் மிகச் சாதாரண இடங்களைக் கூட மக்களைக் கவரும் படி பலகைகள், விளக்குகள் என அமைத்து கவருகிறார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தற்சமயம் கூடுதலாக கண்ணாடிப் பாலம் வேறு.
அடுத்ததாக கேரளப் புடவைகள் எனப் பிரசித்தி பெற்ற வெள்ளை நிறப் புடவைகள் (முண்டு) விற்கப்படும் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார் எங்கள் ஓட்டுநர். முண்டுகள் மட்டுமல்லாமல் சுடிதார், சேலைகள், வேட்டிகள் எனப் பலவும் இருந்தன. முண்டுகள் நூதனமான டிசைன்களுடன் வடிவமைக்கப் பட்டிருந்தன. விலை அதிகம் என்பதால் எதுவும் வாங்கவில்லை.
பொதுவாக மலைப் பிரதேசங்களில் சாக்லேட் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. கொக்கோ மலைப் பிரதேசங்களில் விளைவதாலா? வழியில் ஆங்காங்கே சாக்லேட் கடைகள் தென்பட்டன. வண்ண வண்ண சாக்லேட்டுகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு கடைக்குச் சென்று sample சாக்லேட்டுகளை உண்டு பார்த்து வாங்கினோம். Spicy Chocalate என ஒரு வகை. ஒரு துண்டை சாப்பிடக் கொடுத்தார்கள். லேசான இனிப்புடன் கா…ரச் சுவையுடன் இருந்தது.(என்ன கொடுமை சரவணன் இது) காரச் சுவையிலிருந்து மீள மீண்டும் இனிப்பு சாக்லேட் உண்டோம். அதே கடையில் மூன்று வண்ணங்களில் கிவி, வாழை, பலா, திராட்சை போன்றவற்றின் உலர் பழங்களையும் விற்பனை செய்கிறார்கள்.
தொடர்ந்து பயணித்து மாலை ஆறு மணியளவில் மூணாரின் புற நகர்ப் பகுதியைச் சென்றடைந்தோம். நாங்கள் தங்கவிருந்த விடுதி எங்கே இருக்கிறது எனத் தேடும் படலத்தை ஆரம்பித்தோம். மூணாறு 13 கிலோமீட்டர் என ஒரு பலகை தென்பட்டது. நகரின் மையப்பகுதியைக் கடந்து மற்றொரு எல்லைக்குச் சென்ற பிறகும் (விடுதியினர் அனுப்பி, கூகிள் காட்டிய வழியில்) விடுதி தென்படவில்லை. விடுதிக் காப்பாளரைத் தொடர்பு கொண்டால் அவர் நாங்கள் வந்த திசையிலேயே மீண்டும் பயணித்து மற்றொரு பாதையில் 15 கிலோமீட்டர் பயணித்து வாருங்கள் என்றதும் அனைவருக்கும் டென்ஷன் அதிகரித்தது. Online booking செய்யும் போது நகரின் மையத்தில் ஒரு முகவரியைத் தந்து விட்டு நேரில் சென்றதும் புறநகரில் இருக்கும் அவர்களின் மற்றொரு கிளைக்கு மாற்றி அனுப்பி விடுகிறார்கள். (இது ஒரு வியாபார உத்தி)
அலுத்துச் சலித்து ஒரு வழியாக இரவு ஒன்பது மணியளவில் விடுதியை அடைந்தோம். விடுதி புத்தம் புதிதாக இருந்தது. காப்பாளரிடம் சண்டையிட்டு விட்டு அறைக்குச் சென்று உறங்கினோம்.
மூணாறில் அட்டைப் பூச்சிகள் நிறைய இருக்கும் என அங்கு ஏற்கனவே சென்றவர்கள் எச்சரித்திருந்தார்கள். கல் உப்பு, தீப்பெட்டி ஆகியவற்றை கைவசம் வைத்திருக்குமாறு கூறி இருந்தார்கள். எங்கள் குழுவினர் யாரும் அது பற்றிக் கவலையே படவில்லை. அட்டைப் பூச்சிகள் பற்றிய பயத்துடனேயே அதிகாலை கண் விழித்தேன். (அங்கிருந்த சமயத்தில் ஒரு பூச்சி கூடக் கண்ணில் தென்படவில்லை)
மறுநாள் காலை எழுந்து பால்கனி வழியாகத் தெரிந்த மூணாறின் அழகைப் பார்த்தோம். நான்கு மாடி உயரத்திற்கு சுற்றிலும் மரங்கள், முன்னே தேயிலைத் தோட்டம் என அழகாக இருந்தது. ரொட்டி, பூரி எனக் காலை உணவை உண்டு முடித்ததும் (மீண்டும் அவர்களால் வீணான எங்கள் நேரத்திற்கும் மன உளைச்சலுக்கும் நஷ்ட ஈடு கேட்டு விவாதித்து 600 ரூபாய்களை மட்டுமே குறைக்க முடிந்தது) காலை எட்டு மணியளவில் ஊர் சுற்றிப் பார்க்க் கிளம்பினோம்.
ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பும் முன்பாக மூணாறு பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்து கொள்வோமா?
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த நகரம். “தென்னகத்தின் காஷ்மீர்” என அழைக்கப் படுகிறது. முதிரப்புழா, நல்லதண்ணி, குண்டலி என்ற மூன்று ஆறுகள் சங்கமம் ஆகும் இடமாதலால் மூணாறு என்பது காரணப் பெயர். (பிரிட்டிஷாரின் கோடை வாசஸ்தலங்களுள் ஒன்றான இந்த ஊரை அவர்களின் கொச்சை மொழியில் முன்னார் – Munnar என அழைத்து அதுவே இன்றளவும் நிலைத்து விட்டது) இடுக்கி மாவட்டத்தில் ஆனைமுடி சிகரத்தின் அருகில் அமைந்துள்ள சிறு நகரம் இது. சுற்றிலும் பல wildlife sanctuariesஐக் கொண்டது இந்த ஊர். தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில். தேயிலைத் தோட்டங்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இந்நகரின் சிறப்பியல்புகள்.
முதலில் நாங்கள் “மட்டுப்பெட்டி” என்ற இடத்தில் உள்ள Sun moon valley boating center சென்றோம். Boating, Mini Zipline என சிறுவர்கள் பெரியவர்களுக்கென தனித்தனியான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இடம் இது.
செயற்கையாகத் தேநீர்த் தோட்டங்களை ஒட்டி அமைக்கப் பட்ட ஏரியில் Speed boat ல் எங்களுக்கு முன்னால் சென்றவர்கள் திரும்பி வரவே ஏறக்குறைய முக்கால் மணி நேரம் ஆகி விட்டது.
எங்களுக்கு முன்பு YouTuber ஒருவர் தனியாகப் படகில் சென்று வீடியோ எடுத்து வந்தில் மேலும் தாமதம். நாங்கள் செல்ல வேண்டிய படகு பழுதானதில் மேலும் தாமதம். Life jacket அணிந்து அந்த ஏரியைச் சுற்றி வந்தது அருமையான அனுபவம். சுற்றிலும் டீ செடிகளும் உயரமான மரங்களுமாக நீரின் நிறமே பசுமையாக மாறி இருந்தது. பணம் கட்டும் போது 15 நிமிடங்கள் எனக் கூறி விட்டு பாதி சென்றதும் மேலும் சில நிமிடங்கள் சவாரி செய்யக் கூடுதலாக ₹.…. தந்தால் அழைத்துச் செல்கிறேன் என்றார் படகோட்டி. எங்களுக்கு முன்னால் சென்றவர்கள் கூடுதலாகப் பயணித்ததால் தான் தாமதம் எனப் புரிந்தது. Life jacket இல்லாமல் பயணம் செய்ய முடியாதே!
இங்கேயே நேரமாகி விட்டதால் எங்கள் mini zipline adventureஐ மறந்து விட்டுக் கிளம்பினோம். ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே இரவு ஒன்பது மணி தாம்பரம் ரயிலைப் பிடிக்க மதுரைக்குச் செல்ல வேண்டும் என்பது அன்றைய பயணத் திட்டம்.
வழியில் குதிரையேற்றம், யானையேற்றம் எனப் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. யானையேற்றப் பகுதிக்குச் சென்றபோது ஏறக்குறைய நண்பகல். கடும் வெயில். அடர்ந்த கானகம் போன்ற பகுதியில் 7-8 யானைகளின் மேல் சவாரி செய்ய வைக்கிறார்கள். எங்களுக்கு முன்னால் 30 பேர் காத்திருந்தார்கள். காத்திருக்கப் பொறுமை இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். (யானை நடை நடந்து…கம்பீரம் என ஒரு பொருள் , ஆடி அசைந்து நிதானமாக என மற்றொரு பொருள் இல்லையா?)
அதையடுத்து கேரள மாநில அரசால் நடத்தப்படும் பூத்தோட்டத்திற்குச் சென்றோம். (Flower garden) பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் பல வண்ணப் பூக்களை அங்கே காண முடிந்தது. பூக்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. புகைப்படங்களைப் பகிர்கிறேன். விதம் விதமான நாற்றுக்களையும், பல வகையான கள்ளிகளையும் விற்பனை செய்கிறார்கள். நேரெதிரில் சிறு கடைகளில் தேங்காய் ஓடு, நாரினால் செய்த தூக்கணாங்குருவிக் கூடுகளைத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். வாங்கினோம். Plastic மயிற்பீலியினால் செய்த விசிறி ஒன்றும் வங்கினோம். (எங்கள் வீட்டில் தற்சமயம் குட்டிப் பாப்பா இருக்கிறாரே)
மூணாறு பகுதியில் தான் டாடா நிறுவனத்தின் கண்ணன் தேவன் டீ எஸ்டேட் உள்ளது. அவர்களின் தயாரிப்புக்களை ஆங்காங்கே கடைகள் வைத்து விற்பனை செய்கிறார்கள். Green tea, Tea leaf போன்றவைகளை இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என விற்பனை செய்கிறார்கள். அங்கேயே சூடாகத் தேனீரும் அருந்தினோம். (அங்கே வாங்கி வந்த தேயிலையில் நம் வீட்டில் தேநீர் தயாரித்தால் ஏனோ அதே மணமும் குணமும் இல்லை)
மூணாறு சரவண பவனில் மதிய உணவை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள் தான் தென்பட்டன. மலைப்பாதை என்பதால் சாலையின் குறுக்கே மேகங்கள் சென்ற காட்சி அற்புதமாக இருந்தது. ஆங்காங்கே சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மலை மேலிருந்து கீழிறங்க கொண்டை ஊசி வளைவுகளில் (40) சுற்றிச் சுற்றி இறங்கினோம். சமதளத்திற்கு வந்துதம் மீண்டும் வெயிலின் தாக்கம் தெரிந்தது.
மலையை விட்டிறங்கியதும் போடி என்னும் ஊர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஊர் என்பதால் வழியெங்கும் பசுமையோ பசுமை. வழியில் ஓரிடத்தில் மாலை நான்கு மணியளவில் தேநீர் ஓய்வு (tea break) எடுத்துக் கொண்டு மீண்டும் பயணிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் மேகம் கருக்கத் தொடங்கியது.
மதுரைக்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது பெருமழை பெய்யத் தொடங்கியது. மதுரை மழையில்லாமல் காய்ந்து கிடந்தது. நீங்கள் வந்த நேரம் நல்ல நேரம் என்றார் எங்கள் ஓட்டுநர். (நாங்கள் நல்லவர்கள் அதனால்தான் என உடனே பெருமை பேசினோம்) இடையில் எங்களுக்கு முன்புறமாகத் தெரிந்த வானவில்லின் அழகை ரசித்தவாறே முன்னேறி இரவு ஏழரை மணியளவில் விடாது பெய்த மழைக்கு இடையில் மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு வாசலில் இறக்கி விடப்பட்டோம். Escalator, Lift எதுவும் செயல்படவில்லை.
மழை சற்றே குறைந்ததும் பெட்டிகளைச் சுமந்து கொண்டு படிக்கட்டுகளில் ஏறி பாதியில் நின்று எங்கள் ரயில் எந்தப் பிளாட்பாரத்தில் வரும் எனப் பார்த்து விட்டு, இடையில் கீழிறங்கி ரயில் நிலைய கான்டீனில் இட்லி சாப்பிட்டு விட்டு ரயிலேறினோம்.
நாங்கள் சென்ற ஊர்கள் மூன்று பகல், இரண்டு இரவுகளுக்கான ஊர்கள் இல்லை. ஹனிமூன் மற்றும் ஓய்வுக்காகச் செல்பவர்களுக்கானது. பார்க்கப் பல இடங்கள் இருந்தாலும் அமைதியாக ஓரிடத்தில் தங்கி அந்த ஊர்களின் குளிரான கால நிலையை அனுபவித்துக் கொண்டே சுற்றிப் பார்க்க வேண்டும். பழைய நாட்களைப் போல சிவப்பரிசி சாப்பிடத் தேவை இல்லை. பொன்னி அரிசி சாதமே கிடைப்பதால் உணவுக்கும் சிரமமில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு தாம்பரம் வர வேண்டிய ரயில் 3.45க்கே வந்து விட்டது. தாம்பரம் முடிய செல்லும் ரயில் அது என்பதால் நிலையத்திலும் சாலையிலும் அந்த நேரத்திலும் கூட்டமான கூட்டம். Skywalk எனப்படும் சாய்வு நடைபாதையில் நடந்து சாலைக்கு மறுபுறம் வந்து சேர்வதற்குள் சோர்ந்து போனோம். ஓலா உபயத்தில் சாலிக்கிராமத்தில் உள்ள எங்கள் இல்லத்திற்குச் சென்று சேர்ந்தோம்.
குறைந்த நேரமாக இருந்தாலும் நண்பர்களுடன் பயணித்ததால் பயணம் சுகமாக இருந்தது.
பச்ச மதுரமாணு… (பசுமை இனிமை)
பின் குறிப்பு :
தற்சமயம் தேங்காய் எண்ணைய் தடவித் தலை குளித்த சேச்சிகளையும், வேட்டி கட்டிய சேட்டன்களையும் கேரளாவில் கூட அதிகம் காண முடியவில்லை. சற்றே வருத்தமாக இருந்தது. மேற்கத்திய நாகரிகமும் திரைப்படங்களும் நம் nativityயை மாற்றி விட்டன என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment