Friday, 4 August 2023

ஆறாவது வட அமெரிக்கப் பயணம் - பகுதி 3 (இறுதிப் பகுதி)


22/01/2023

Mountain Vista Medical Center, Mesa.

மருத்துவமனைக்குக் காலை எட்டு மணியளவில் பல விதமான உணர்வுகளுடன் சென்று சேர்ந்தோம். பாலைவனத்தின் நடுவே அமைந்த ஊரில் உள்ள மருத்துவமனை என்பதால் அவசரகால உதவிக்குத் தேவையான Air ambulance helicopter உடன் கூடியது.

மருத்துவமனையில் எங்களுக்கான அறை தயாராக இருந்தது. Normal delivery என அழைக்கப்படும் இயற்கை முறை பிரசவத்திற்கு ஏற்றபடி அமைக்கப் பட்டிருந்த அறையில் தங்கி (காத்துக் கொண்டு) இருந்தோம் அறையில் அனைத்து விதமான வசதிகளும் (ஆக்சிஜன் உட்பட) இருந்தன. 24 மணி நேரங்களும் centralised aircondtioner ஓடிக் கொண்டிருக்க Five Star விடுதி அறை போல வசதியாக இருந்தது.

8 am - 8 pm கணவனைத் தவிரக் கூடுதலாக ஒருவர் இருக்கலாம் என்பதால் நானும் இருந்தேன். மருத்துவர் உத்தரவுப்படி பிரசவ வலியை செயற்கையாக ஏற்படுத்தும் மருந்தினை ஆறு மணி நேரங்களுக்கு ஒரு முறை தரத் தொடங்கினார்கள்.

தாயின் pulse, bp, oxygen level மற்றும் இடுப்பு வலியின் அளவு (ஈசிஜி போலத் திரையில் ஓடிக் கொண்டே இருந்தது) போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. நம் அறையில் தெரியும் விவரங்கள் reception பகுதியிலும் செவிலியர் பார்க்கும் வண்ணம் திரையில் தெரிந்து கொண்டே இருக்கிறது திரையைப் பார்த்தே யாருக்கு வலி அதிகரிக்கிறது எனக் கண்டு உடனே உள்ளே வந்து கண்காணிக்கிறார்கள்.

இந்நகரின் வெப்பநிலை காரணமாக வெயிலோ மழையோ குளிரோ ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3-4 லிட்டர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதால் உதவியாளர்களின் உணவு அறைக்கு சென்று கிரான்பெர்ரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், ஹாட் சாக்லேட், தண்ணீர் என அறைக்கு எடுத்து வந்து குடித்துக் கொண்டே இருந்தேன் (தோம்)

சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து விமானத்தில் கிளம்பி வந்து சேர்ந்த மகள் மதியமும் இரவும் சமைத்து எடுத்துக் கொண்டு வர நான் காலை உணவை எடுத்து வருவேன். 22, 23 தேதிகள் எதிர்பார்ப்புடன் கழிந்தது.

சில techinical காரணங்களால் இயற்கை முறை பிரசவம் அசாத்தியம் என்பதால் 24 ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பிரசவிக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவர் அறிவித்தார். அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்தால் இறைவன் அருள் எனக் கூறி மருமகளுக்கு counselling செய்து விட்டுச் சென்றார்.

முதலில் மனம் தளர்ந்த மருமகள் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டார். அவர் கொண்டு வந்த புத்தகங்களில் / என் அனுபவங்களின் அடிப்படையில் இயற்கை முறை பிரசவம் பற்றியே நான் அதிகம் அறிந்துள்ளேன். சிசேரியன் செய்தால் நோயாளியை / குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என நான் அறிந்திருக்கவில்லை. மிகுந்த கவலைக்குள்ளானேன்.

மேலும் இவர் என் மருமகள். இவருடன் நான் ஏறக்குறைய 3-4 மாதங்களே செலவழித்துள்ளேன் என்ற நிலையில் இவரின் உடலுக்கு என்ன ஒத்துக் கொள்ளும் என்ன சாப்பிடுவார் என ஒன்றும் தெரியாத குழப்பமான மனநிலையில் பேரனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் மகன் குட்டிப் பாப்பாவின் புகைப்படத்தை அனுப்பினார்.
ஆவலுடன் அறைக்கு உள்ளே வந்து அமர்ந்த சில நொடிகளில் நகரும் தொட்டிலில் குட்டிப் பாப்பாவை மகன் அழைத்து வந்தார். கண்களை உருட்டி, நாக்கை வெளியில் நீட்டி நீட்டி மடக்கிக் கொண்டே அழாமல் வந்து சேர்ந்தார் கொள்ளை அழகான அந்த நிகழ்வை பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததில் அந்தக் கணத்தை புகைப்படம்/ வீடியோ எடுக்கத் தவறி விட்டேன்.

[கொங்கு நாடு எனப்படும் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பெண் குழந்தைகளைப் பா
ப்பா எனவும் ஆண் குழந்தைகளை "தம்பி" எனவும் அழைப்பது வழக்கம். எங்கள் வீட்டில் இருப்பது பாப்பாங்ளா தம்பீங்ளா?]

மகன் உறவினர்களுக்கு வீடியோ காலில் அழைத்து பாப்பாவைக் காண்பித்து முடித்ததும் செவிலி பாப்பாவின் எடை (2.498kg), உயரம் போன்றவற்றைக் கணக்கெடுத்தார்.

மேலை நாடுகளில் பிள்ளைப் பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே குழந்தை ஆணா பெண்ணா என்ன பெயர் என எழுதித் தர வேண்டும். அவர்கள் வரவேற்பு மடல், கால் அச்சு பதிக்கும் காகிதம் போன்றவற்றை குழந்தையின் பெயரை எழுதி நம் அறையில் வைத்து விடுவார்கள். எங்கள் மகன் குழந்தை பிறந்த பிறகே பெயரைக் கூறுவோம் எனக் கண்டிப்பாகக் கூறி விட்டார். நாங்களும் என்ன பெயர் எனக் கேட்கவில்லை. 25ஆம் தேதி உறவினர் ஒருவர் என்ன பெயர் எனக் கேட்ட பிறகு தான் அடடே... நம் தங்கக் குடத்தின் பெயரைக் கேட்கவே இல்லையே எனத் தோன்றியது.

NEAL (நீல்). இந்தப் பெயருக்கு Champion, Compassion எனப் பொருள்களும் உண்டு.
(நம் நீலவண்ணன் தான் அமெரிக்கா சென்ற பிறகு நீல் ஆகி விட்டார். கீசவ் -Keshav, ஈதி- Ethirajan, வீவீக்- Vivek, நாண்டி-Nandhini களைக் கேட்டு அலுத்து அமெரிக்கர்களும் சுலபமாக உச்சரிக்கும் வகையில் வைக்கப்பட்ட monosyllable பெயர்)

ஒரு நாள் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்த தாயும் சேயும் ஜனவரி 26ஆம் தேதி மதியம் வீட்டிற்கு அனுப்பப் பட்டார்கள். மருத்துவமனையில் தரப்பட்ட discharge summary யில் நோயாளி தன்னுடைய வலியின் அளவு 1-10 அளவுகோலில் 5/10 இருந்தது எனக் கூறினார். மற்ற எல்லா விவரங்களுக்கும் நோயாளி அப்படிக் கூறினார் இப்படிக் கூறினார் என எந்த வித commitmentம் இல்லாமல் இருந்தது.

மூன்று நாட்கள் தொடர்ந்து 8 am - 8pm மருத்துவமனையில் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததில் நான்காவது நாள் அதுவரை நான் அனுபவித்திராத வகையில் கடுமையான இடுப்பு வலி. ஓய்வெடுக்க நேரமில்லை சந்தர்ப்பமும் இல்லை. யாரிடமும் பகிரவும் இல்லை.

வட அமெரிக்காவில் குழந்தை மருத்துவரை நாமே தேடித் கண்டு பிடித்துப் பதிவு செய்து கொண்டு பிரசவம் நடந்த மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தை பிறந்தது முதலான சரித்திரத்தை onlineல் குழந்தை மருத்துவருக்கு ஒப்பித்து விடுவார்கள் வீட்டிற்கும் மகனது அலுவலகத்திற்கும் அருகிலேயே ஒரு மருத்துவரைக் கண்டு பிடித்தோம் [தற்சமயம் மகன் work from home என்றாலும் பின்னாளில் தேவைப்படலாம்]

நான்காவது நாள் குழந்தை மருத்துவருடன் appointment. ஏற்கனவே எடை குறைவாக இருந்தவர் மேலும் 100gm குறைந்து இருந்தார். Small baby என முத்திரையிடப்பட்டு உடனடியாக Formula milk வாங்கிக் கொடுத்து எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து மீண்டும் அழைத்து வாருங்கள் எனக் கூறி அனுப்பினார் மருத்துவர்.

இந்தியக் குழந்தைகளின் சராசரி பிறப்பு எடை 2.5 - 3 கிலோ தான். ஆனால் அமெரிக்காவில் குறைந்தது நான்கு கிலோ எடை இருந்தால் தான் normal baby. இந்தப் பாப்பாவிற்கு சில மாதங்கள் முன் பிறந்த எங்கள் community தோழிகள் இருவரின் பேரன் பேத்தியும் (IOWA , Toronto) small baby கணக்கில் சேர்க்கப்பட்டு Formula milk தர அறிவுறுத்தப் பட்டதாகக் கூறினார்கள். (அங்கே இதெல்லாம் சகஜமப்பா ..)

பாப்பாவிற்கு ஏற்கனவே பரிசாக வந்திருந்த feeding bottleகளைக் கண்டெடுத்து sterilise செய்ய ஒரு சாதனத்தை order செய்து, அது வருவதற்குள் பாரம்பரிய முறைப்படி அடுப்பில் சுடுநீரில் கொதிக்க வைத்து…எனக் காலையும் மாலையும் நானும் மகனும் போர்க்கால அவசரத்தில் நடவடிக்கை எடுத்தோம்.

முதல் சில நாட்கள் மகளும் உடன் இருந்து உதவியதால் சமாளித்து மீண்டோம் தாயாரின் மருந்துகளின் உதவியால் குட்டிப் பாப்பா அதிகம் விழித்திருக்காமல் தூங்கியதால் சற்றே சுதாரிக்க முடிந்தது 4-7 நாட்கள் Formula பால் குடித்த பாப்பா எட்டாவது நாள் காலை வேண்டாம் எனத் துப்பியதும் தினசரி வாழ்க்கை சற்றே நிதானத்திற்கு வந்தது.

இம்முறை குழந்தை வளர்ப்பு பற்றி புதிதாக ஒரு தகவலை மகன் மூலம் தெரிந்து கொண்டேன். குழந்தை தாயின் வயிற்றை விட்டு பூமியின் சூழல் பழகி, அமைதியாக உறங்க ஆரம்பிக்கும் வரை தாயின் வயிற்றுக்குள் ரத்தக் குழாய்களில் ரத்தம் பாயும் சத்தம் போல "உஷ்" என நிதானமாகக் குழந்தையைக் கைகளில் ஏந்தியவண்ணம் கூறினால் குழந்தை அமைதியாக பயமின்றி உறங்கும் எனச் செவிலி கூறியதாகக் கூறினார். முதல் சில நாட்கள் வாயால் "உஷ்". வாய் வலி தான் மிச்சம் பாப்பா தூங்குவதாகத் தெரியவில்லை. இருக்கவே இருக்கிறது YouTube. அதைத் தொடர்ந்து வீட்டில் எந்நேரமும் "உஷ்....." தான்.

சில நாட்களில் அந்த சத்தத்திற்குத் தூங்கப் பழகி விட்டார் பாப்பா. அடுத்த கட்டமாக பாடினால் தூங்குவது என ஆரம்பித்தார். மகன் எட்டு வருடங்கள் கற்றுக் கொண்ட கர்நாடக இசையும், நான் வயலினுடன் நான்கு வருடங்கள் கற்ற வாய்ப்பட்டும் என் கணவர் தானே சொந்தமாக இசையமைத்துப் பாடிய திருமங்கையாழ்வாரின் "மாணிக்கம் கட்டி" எனத் தொடங்கும் பாசுரங்களும் பெரிதும் உதவின. Peppy ஆன பாடல்களை அமைதியாகக் கேட்பார். (என் கணவர் பாடும் அதே ராகத்தில் பாட நினைத்து என் மகன் You Tubeல் தேட, அப்பா தானே இசையமைத்துப் பாடி இருக்கிறார் என அறிந்து இளையராஜா இசை போல அனைவரும் பின்பற்றி படும் வகையில் மிக எளிமையாக உள்ளது என மிகவும் பாராட்டினார்)

அடுத்த டென்ஷன் பாப்பாவின் தொப்புள் கொடி எப்போது காய்ந்து விழும் என மிகக் கவனமாக பார்த்தல். அதுவரை குளித்து விடக் கூடாது எனக் கூறியிருந்தார்கள் செவிலியர்கள். பத்து நாட்களுக்குப் பிறகு விழுந்ததும் குளியல் படலம் ஆரம்பம்.

தாயாருக்கும் முறையான பத்திய உணவுகளை சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன் எங்கள் முன்னோர்கள் செய்து வந்த உணவுகளின் பட்டியலில் எந்த உணவு பாப்பாவிற்கும் ஏற்றதாக இருக்கும் என trial and error முறையில் செய்து ஒரு வாரத்தில் ஒரு ஒழுங்கு முறைக்கு வந்தோம்.

பிப்ரவரி 18, 2023 அன்று பாப்பாவை தொட்டிலில் இட்டு, பெயர் சூட்டும் விழா நடத்த ஏற்பாடு செய்தோம். கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களாக யாரையும் அழைக்கவில்லை. அழைத்த மகள் குடும்பத்தினரும் உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை. 1.30 மணி நேரப் பயண நேரத்தில் உள்ள மஹாகணபதி கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர்/புரோகிதர் சரியாக ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அதற்குள் அனைவரும் தயாராக இருந்தோம். தூங்கும் பாப்பாவைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்தேன்.

வந்திருந்த நண்பரின் மகளும் பேத்தியும் தான் விருந்தினர்கள்/ புகைப்படக்காரர்கள்/ தொட்டிலிட்டு காப்பு அணிவிக்கும் அத்தைகள். YouTubeல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது நிகழ்ச்சி.

நிகழ்ச்சி முடிந்து புரோகிதர் நான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என் shift இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்கிறது சாப்பாடு போடுங்கள் என்றார். இதோ ... என சமையலறைக்குச் சென்றேன். Rice cookerஐ ஆன் செய்யவே மறந்து விட்டேன் பாயசம் மட்டும் குடித்து விட்டுக் கிளம்பினார். வருத்தமாக இருந்தது.

பாப்பா தூங்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் குளியல் படலத்தை ஆரம்பிக்க வேண்டும். நான் உடம்பிற்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் நேரத்தில் என் கணவர் உடம்பு தேய்க்கும் பொடி, துண்டு, வெந்நீர், சட்டை, சாம்பிராணி எனத் தயார் செய்வார். "ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு" என்று முதல் வகுப்பில் கற்ற வாய்ப்பாட்டைப் பாடிய படியே பாப்பாவின் கால் கால்களுக்குப் பயிற்சியும் செய்விப்பேன் குழாயில் சூடாக வரும் வெந்நீர் வாளியில் விழுந்த சில நொடிகளில் ஆறி விடும் என்பதால் கெட்டிலில் வெந்நீர் வைத்து அவ்வப்போது வாளியில் சேர்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வரும் பெரியாழ்வாரின் "நீராட்டம்" என்னும் தலைப்பின் கீழ் உள்ள கண்ணனை நீராட யசோதை அழைக்கும் பாசுரங்களைப் பாடிய படியே தாத்தா தண்ணீர் விட பாப்பா அமைதியாகக் குளிப்பார். குளித்தால் அப்பா எங்கெங்கே அழைத்துச் செல்வார் எனவும், கண்ணன் கதையும் கூறினால் சமர்த்தாகக் கேட்பார் Octopus துண்டா Bear துண்டா எனக் கேட்டதும் குளியல் முடிந்து விட்டது எனப் புரிந்து கொண்டு அமைதியாக சிணுங்காமல் இருப்பார். (Bathtub உள்ளே கால் நீட்டி அமர்ந்து குளித்து விட வேண்டும். இது தனி வித்தை)

இடைப்பட்ட நேரத்தில் என்னுடைய நடைப் பயிற்சி மற்றும் என் பயணக் கட்டுரைகள் மற்றும் இதர கட்டுரைகளைப் புத்தக வடிவில் மாற்றும் வேலையையும் தொடர்ந்து செய்து வந்தேன். அவ்வப்போது மகனுடன் நூலகம் சென்று Large print (பெரிய எழுத்து) புத்தகங்களை எடுத்து வந்து படித்தேன். Jane Poynter எழுதிய The Human Experiment Two years and twenty minutes inside Biospehere 2 என்ற புத்தகம் தவிர எதுவும் என் மனதைக் கவரவில்லை. என்ன படித்தேன் என்பதே நினைவில்லை.

பீனிக்ஸ் நகரின் ஒரு பகுதியில் contonment எனப்படும் ராணுவப் பகுதியும் உண்டு என்பதற்கு அடையாளமாக மகனது குடியிருப்புப் பகுதியில் US Marine Serviceன் ஜீப்கள் தென்பட்டன.

பிரதி சனியன்று காலை மகனுடன் கிளம்பி காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி வருவேன் குறைந்த விலையில் கிடைத்த காய்களை வற்றலாக மாற்றினேன்.(குளிராக இருந்தாலும் வெயிலும் வரும் ஊர் பீனிக்ஸ்)

மதியம் 3-6 மின்சார உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதால் இந்த மூன்று மணி நேரங்கள் மகனைத் தவிர எங்கள் மூவருக்கும் ஓய்வு நேரம். குளிர் காலம் என்பதால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

ஆறு வாரங்கள் முடிய சாதாரணமாக மலம் கழிக்கும் குழந்தை அதற்குப் பிறகு மலச்சிக்கலுக்கு ஆளாகும் எனக் கூறப்பட்டது போல அதுவரை தினசரி 4-5 முறைகள் என்று இருந்த பழக்கம் தினசரி ஒரு முறை என மாறியது. கூடுதலாக colic எனப்படும் வயிற்று வலியும் சேரவே சில வாரங்கள் மீண்டும் வீடு பரபரப்பானது.

Colic வயிற்றுவலி குப்புறப் படுக்க ஆரம்பித்தால் வயிறு அழுந்தி சரியாகி விடும் அது வரை சமாளிக்க வேண்டியது தான் எனக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நடந்த சுவையான சம்பவத்தையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

வீட்டிற்கு மிக அருகில் உள்ள சாயிபாபா கோவிலுக்கு பிரதி வியாழன் சென்று வருவோம் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். பக்தர்கள் சமைத்து எடுத்து வரும் உணவுகளையும் கடவுளுக்கு நிவேதனம் செய்து To go பெட்டிகளில் போட்டுப் பிரசாதமாகத் தருவார்கள் மருமகள் ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து பிரசாதம் செய்து தருவதாக வேண்டிக் கொண்டதாகவும் சுண்டல், பாயசம், தயிர்சாதம் என என்னால் எது முடியுமோ சிறிய அளவில் செய்து தருமாறு வேண்டினார்.

Patel Brothersல் குறைந்த விலையில் கிடைத்த காய்கறிகளும் பழங்களும் நிறைய வாங்கி வந்திருந்தேன். முதல் வியாழக்கிழமை காய்கறிகளை கதம்ப சாதமாக மாற்ற முடிவு செய்தேன்

என் சமையலை எப்போதும் கிண்டல் செய்யும் என் மகனது முதல் விமர்சனம்: "சாயிபாபா பாவம்"
சமையல் வேலை தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் குட்டிப் பாப்பாவுடன் வந்தார் பாப்பாவும் எட்டிப் பார்த்து விட்டு தன்னுடைய வழக்கமான gesture ஆன நாக்கை நீட்டி நீட்டி மடக்கினார். (நாம் தூ தூ சொல்வது போல இருக்கும்)

என் மகன் பாப்பாவிடம் : பாப்பா ...தூ தூ சொல்லக் கூடாதுப்பா (மறைமுகமான கிண்டல்)

அன்று மாலை என் கணவரும் மகனும் கோவிலுக்கு பிரசாதத்தை எடுத்து சென்ற பதினைந்து நிமிடங்களில் பாப்பா வயிற்று வலியால் அழுது அலற எங்கள் இருவராலும் சமாளிக்க முடியாமல் போக, மருமகள் சீக்கிரம் வாருங்கள் மருத்துவமனைக்குச் செல்லலாம் எனத் தொலைபேச, அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கையில் பிரசாத டப்பாக்களுடன் வீடு வந்து சேர்ந்தார்கள். பாப்பா அதற்குள் அமைதியாகி விட்டார்.

சாப்பிட அமர்ந்து டப்பாக்களைத் திறந்தால் ...நம் வீட்டு கதம்ப சாதம். மருமகள் சிரிக்க ...மகன் என்னம்மா இது என சோகப்பட ..

இதற்கிடையே பாப்பாவின் ஆ ஊ சத்தங்களும், ஒரு பக்கமாக சாயும் முயற்சிகளும், vaccinationகளும் நடைபெற்றன தாத்தா தோளில் சாய்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் குழந்தை முதல் மூன்று மாதங்களுக்குத் தொடுதலை வைத்தே அடையாளம் கண்டு பிடிக்கும். அதன் பார்வை "Black and white inverted image" ஆக இருக்கும் முதலில் தாயை அடையாளம் கண்டு கொண்டு எங்கே நகர்ந்தாலும் கண்களால் தொடர்ந்தார். இமைகளை சிமிட்டத் தொடங்கினார் தொடர்ந்து வந்த நாட்களில் எங்களையும் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். (பாப்பா ... உன் அம்மா milk factory என்றால் நான் diaper factory என்னையும் கண்டு கொள்ளேன் _ மகன்)

ஊருக்குத் திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகன் மருமகளுக்கு பாப்பாவுக்கு குளித்து விடுதல் எப்படி எனப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம் சிறு குழந்தைகள் ஆள் மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் சிறிய அளவில் ஆரம்பித்து முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தோம்.

பாப்பாவுடன் செலவிடும் சிறிது நேரமும் என் கையை விட்டுப் போனதில் எனக்கு வருத்தம். அது புரிந்ததும் மருமகள் எப்போதும் போல் நீங்கள் எண்ணெய் மசாஜ் செய்யுங்கள் நான் குளித்து விடுகிறேன் எனக் கூற …மீண்டும் ஆரம்பமானது "ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு"

கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களில் மகன் மற்றும் நண்பரின் மகளுடன் IKEA, Dollartree, Walmart, Costco, கோவில், Gilbert பூங்கா, Coffee shop எனச் சென்று வந்தோம் சிறு பரிசுப் பொருட்களும் வாங்கிச் சேகரித்தோம். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மீண்டும் மகள் குடும்பம் பாப்பாவைக் காண வந்து சேர வீடு திருவிழாக் கோலம் பூண்டது அண்ணன்களைக் கண்ட பாப்பா கையைக் காலை ஆட்டி வரவேற்றார்.

இவர்கள் அனைவரும் சந்திக்கும் நேரங்களில் நடக்கும் சில ரசனையான நிகழ்வுகளையும் இங்கே பகிர்கிறேன்.

இந்தியாவில் கிரிக்கெட் போல அமெரிக்காவில் கால்பந்தாட்டம் மிகப் பிரபலம் (கையால் விளையாடுவார்கள் ஆனால் கால்பந்து என்பார்கள் ஏனென்று எனக்கு புரியவில்லை) அங்கே மக்கள் தங்களுக்குப் பிடித்த அணியின் uniform சட்டை/ குல்லாய் என அணிந்திருப்பார்கள் தங்கள் விருப்ப அணியின் ரசிகர் எனத் தெரிந்தால் போதும் ஊர் பேர் தெரியாதவராக இருந்தாலும் ஓடிப் போய் பேசுவார்கள்.(அக்கா ... உங்கள் வீட்டு வாசலில் packers ரசிகர் ஒருவரை பார்த்தேன், பேசினேன்)

Sanfransciscoவில் 49ers என்னும் அணி பிரபலம் மகள் குடும்பம் 49ers ரசிகர்கள். மகன் Greenbayயில் வசித்ததால் Greenbay packers ரசிகர் SFO வில் தங்கிப் படித்து வேலைக்கு சென்று எனச் சில வருடங்களை இங்கே கழித்த நீங்கள் எப்படி Greenbay packers அணியை ஆதரிக்கலாம் இது அநியாயம்_பேரன்கள்

யாராவது(?!) 49ers சட்டை வாங்கி வந்தால் சுருணைத் துணியாகப் போடு என மனைவிக்கு கட்டளையிடுவார் மகன். தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு Go pack go சொல்லு எனப் பயிற்சி தருவார். பாப்பாவிற்கும் 27$ விலையில் ஒரு Greenbay packers சட்டை வாங்கினார்.(கீழே போட pants கூட இல்லை சட்டைக்கு மட்டும் அந்த விலை) அக்கா குடும்பத்தினர் வந்தால் குட்டிப் பாப்பாவுக்கு தினமும் அதே சட்டை தான் துவைத்து உடனே போட்டு விடுவார். எதிரணியினர் பாப்பா தூ தூ சொல்லி கக்கி விடு, சட்டையைக் கழட்டி விடு என்பார்கள்.

மகன் அக்கா மகனிடம் Greenbay packers பொம்மையைக் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு “இவர் எங்கள் அணியின் Secret agent" எனத் தலைப்பிடுவார் எப்படி நீ அந்த மாதிரி போஸ் கொடுத்தாய் என அவரின் தாயார் திட்ட... வீடு இரண்டு படும். குட்டிப் பாப்பாவிற்கு ரகசியமாக 49ers Tshirt போட்டு புகைப்படம் எடுப்பார்கள் எதிரணியினர்.

வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் மரங்களில் இலைகளும் பூக்களுமாக எங்கும் பசுமையாக இருந்தது. ஒரு வகை மரத்தில் பச்சை இலைகளே தெரியாத வண்ணம் மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்திருந்தன மக்கள் குளிராடைகளை விடுத்து மெல்லிய ஆடைகளை அணிந்து வேகாத வெயிலில் நடக்கத் தொடங்கி இருந்தனர்.

குடியிருப்புப் பகுதியில் மூன்று நீச்சல் குளங்கள் & ஒரு Gymnasium உண்டு. ஒரே ஒரு நாள் மட்டுமே gym சென்றேன். மக்கள் வார இறுதியில் நீச்சல் குளத்திற்கு சென்று விட்டு அங்கேயே புல்வெளியில் உள்ள Barbeque அடுப்பில் செய்து உண்ண ஆரம்பித்திருந்தார்கள் குளிர்காலத்தில் நாய்களும் பூனைகளுமே வெளியில் அழைத்து வரப்பட்ட நிலை மாறி பல சிறுவர்கள் அங்கே குடி இருக்கிறார்கள் என உணர முடிந்தது.

காலை மதியம் இரவு என மூன்று வேலைகளும் பத்திய சமையல் தனி, மற்றவர்களுக்குத் தனி என காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு முடிய மீண்டும் மாலை ஆறு முதல் 8.30 முடிய என சமையல்கட்டிலேயே ஏறக்குறைய 80 நாட்கள் கழிந்தன சகோதரிக்கு சமஸ்க்ருதம் கற்றுத் தரும் நோக்கில் புத்தகங்களை எடுத்து வந்தும் அவர் என்னை விட பிசி என்பதால் புத்தகங்களைக் கையால் கூடத் தொடவில்லை. என் அனைத்துப் பதிவுகளையும் ஐந்து புத்தகங்களாக மாற்ற பிப்ரவரி மாத இறுதி ஆனது.

இந்தப் பயணத்தில் எனக்கேற்பட்ட மற்றொரு அனுபவத்தையும் பகிர விரும்புகிறேன். பொதுவாகப் பயண நேரங்களில் படிக்க என பேரன்கள் புத்தகங்களை எடுத்து வருவார்கள்

இந்த முறை Biosphere 2 (Oracle , Arizona) சென்ற போது நானும் புத்தகம் எடுத்துச் சென்றேன். திரும்பும் போது வெளியில் வேடிக்கை பார்க்க எதுவும் இல்லை என்ற நிலையில் (பாலைவனம்) படிக்க ஆரம்பித்தேன். கண்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் அமைதியாகப் படித்த வண்ணம் பயணித்தேன். அங்குள்ள சாலைகளில் பயணம் செய்தது அந்த அளவு smooth ஆக இருந்தது. புத்தகத்தை ரசித்ததை விட அந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது.

குளிர் காலத்தில் Phoenix நகருக்கு சென்னையிலிருந்து விமானங்கள் செல்வதில்லை என்பதால் Sanfranscisco மார்க்கமாக இந்தியா திரும்ப வேண்டி இருந்தது. ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு ஒன்பது மணி விமானத்தில் சான் பிரான்ஸிஸ்கோ செல்லும் பயணம் முடிவானது.

சென்னை திரும்பும் நாள் நெருங்கத் தொடங்கியதும் அடுத்த பெற்றோர் வரும் காலஇடைவெளியான பதினைந்து நாட்களுக்கான சில உணவுகளைத் தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கினேன்.

பிரதி தினமும் காலை நடைப்பயிற்சி நேரத்தில் குடியிருப்புப் பகுதியையும் நீச்சல்குளத்தையும் சுத்தம் செய்யும் பெரியவரைக் கடைசி பத்து நாட்களுக்கும் மேலாகக் காண முடியவில்லை. (அந்த ஊரில் எனக்கு கிடைத்த ஒரே நண்பர் அவர் தான். தினமும் Hi , How are you சொல்லிக் கொள்வோம்) அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியது சற்றே வருத்தம் தான்.

குட்டிப்பாப்பாவும் வந்து வழியனுப்ப பிரியா விடை பெற்று மகளின் ஊருக்குக் கிளம்பினோம்.

மீண்டும் சான்பிரான்சிஸ்கோ...

Southwest Airlinesல் நள்ளிரவு Oakland விமான நிலையத்தை அடைந்து மருமகனுடன் வீடு சென்று சேர்ந்தோம்.

மீண்டும் கடும் குளிர். அன்றைய இரவு நேர வெப்பநிலை 0 deg. பெட்டிக்குள்ளே சென்ற குளிராடைகள் அனைத்தும் ஓக்லாண்ட் விமான நிலையத்திலேயே வெளியில் வந்தன. பீனிக்ஸ் நகரில் வசந்த காலம் எனப்படும் வெயிற்காலத்தின் தொடக்கம் ஏற்கனவே தொடங்கி இருக்க இங்கே குளிர் காலமே முடியவில்லை நாங்கள் இருந்தவரை அதிக பட்ச இரவு நேர வெப்பநிலை 8 deg Celcius.

விடிந்ததும் வீட்டின் வெளியே வந்து பார் என என் கணவர் கூறியதும் நான் அங்கே கண்ட காட்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வீட்டைச் சுற்றிலும் பல வண்ண மலர்கள் கொள்ளை அழகுடன் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தன. வளைத்து வளைத்துப் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தோம். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தின் நீர் வெளியில் உள்ளதை விட 10 டிகிரி குறைவாகவே இருந்தது.

என் ஒவ்வொரு அமெரிக்கப் பயணத்தின் போதும் ஏதேனும் ஒரு twist கண்டிப்பாக உண்டு. ஏப்ரல் 18ஆம் தேதி மாலை எங்கள் பயணம் என்றிருக்க மகள் தன் இளைய மகனுடன் 15ஆம் தேதி மாலை விமானத்தில் சென்னை செல்லவிருந்தார். முதல் மூன்று நாட்களுக்கு மகள் என்னை உட்கார வைத்து சாப்பாட்டை கையில் கொடுத்து உபசரித்ததில் சற்றே சுதாரித்துக் கொண்டேன்.

ஒரு நாள் மாலை சிறிய பேரனின் ஓட்டப் பயிற்சிக்காக Sherwood Way, San Ramon ல் அமைந்திருக்கும் Sports park சென்றோம். இந்தத் தெரு முழுவதும் பூங்காக்கள் தான். 14.8 acre பரப்பளவுள்ள இந்தப் பூங்காவில் Soccer Field, Baseball/Softball Field, Basketball Court, Restroom,Trail Access, Picnic Area என அனைத்தும் உள்ளன. சிறுவர்கள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள நாங்கள் நடைப்பயிற்சி செய்தோம். ஒரு முறை சுற்றி வந்தால் 2.5 km. பச்சைப் பசேலென்ற புல்வெளியும் விதம் விதமான மரங்களுமாக இந்தப் பூங்கா கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது.

சில நாட்களே இருந்தாலும் நடைப்பயிற்சி, சின்ன பேரனுடன் பள்ளி செல்லுதல் என எதையும் விட்டு வைக்கவில்லை வசந்த காலத் தொடக்கம் என்பதால் எங்கெங்கும் பசுமையோ பசுமை பல வண்ணங்களில் பூக்கள் எங்கெங்கும் தென்பட்டன. ஆயினும் மகள் வீட்டின் முந்தைய சொந்தக்காரர்கள் மிகுந்த ரசனையுள்ளவர்கள் என்பதை வீட்டின் தோட்டத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். வெளியில் ஜாதி மல்லிக் கோடி 4-5 ஆயிரம் மொட்டுக்களுடன் இருந்தது. மலர ஆரம்பித்திருக்கவில்லை.

மகள் இந்தியா கிளம்பியதும் அடுத்த மூன்று நாட்களும் பெரிய பேரனுக்குத் தேவையானதை சமைத்து பள்ளிக்கு அனுப்புதல், அவருடன் நேரம் செலவிடுதல் எனக் கழிந்தது இவர்களுக்கும் என்னால் முடிந்த வரை 4-5 நாட்களுக்கான உணவுகளை செய்து வைத்து விட்டு விமான நிலையம் கிளம்பினோம்.

நாங்கள் சென்ற சமயத்தில் கலிபோர்னியா மற்றும் அரிசோனா மாகாணங்களில் wild flowers எனப்படும் காட்டுப் பூக்கள் மலைப்பகுதிகளில் பூத்துக் குலுங்கியதால் மக்கள் சாரிசாரியாக வாகனங்களில் சென்று கண்டு வருவதாக செய்திகள் வெளியாகின. விமான நிலையம் செல்லும் வழியெங்கும் மஞ்சள் ஆரஞ்சு வண்ணப் பூக்கள் வழியெங்கும் பூத்திருந்ததைக் கண்டேன்.

18ஆம் தேதி மாலை 4.30 மணி British Airways விமானத்தில் லண்டன் மார்க்கமாக சென்னை பயணத்தைத் தொடங்கினோம்.

விமானத்தில் ஏறியதும் பயண நேரம் முழுவதும் "அமாவாசை" என்பதால் வீடு போய் சேரும் வரை எந்த உணவும் உண்ண மாட்டேன், சாப்பிட சொல்லி வற்புறுத்தக் கூடாது எனக் கூறினார். 18 ஆம் தேதி மலை கிளம்பினால் 20 ஆம் தேதி காலையில் சென்னை வந்து சேருவோம்; மேலும் வழியெங்கும் 10 வெவ்வேறு time zones. எப்படி அமாவாசை எனக் கணக்கிடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது அப்படித் தான் _ என் கணவர்.

10 மணி நேரம் லண்டன். அங்கிருந்து சென்னை 10 மணி நேரம். ஒவ்வொரு 10 மணி நேரத்திற்கும் இரண்டு முறை உணவு தந்தார்கள். என் கணவர் ஜூஸ் மட்டும் குடித்தார். பழங்கள் தேவை எனக் கேட்டதற்கு பதில் இல்லை. அருகில் அமர்ந்திருந்த இளம் பெண் தான் கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தைக் கொடுத்து சாப்பிட சொன்னார். இரண்டாவது 10 மணி நேரத்தில் உணவுடனேயே fruit salad தரப்பட்டது.

நான் மகள் வாங்கி வைத்திருந்த ready made சப்பாத்தியை மீண்டும் வாட்டி எடுத்து வந்திருந்தேன். நம் பசி நேரத்திற்கு உணவு தர மாட்டார்கள். (லண்டனின் dinner நேரத்திற்கு தருவோம் என்பார்கள். நாம் அமெரிக்காவில் இருப்போம். பசி உயிர் போகும்) இரவு உணவாக அதை உண்டு விட்டு அரை குறையாக உறங்கினேன். அதிகாலையில் லண்டன் வந்திறங்கினோம்.

போகும் போது ஒரு விதக் குழப்பம் என்றால் வரும் போது வேறு மாதிரி. Tube train பிடித்து B gates செல்லுங்கள் என்கிறார்கள். ரயில் நின்ற இடத்தில் Gates எதுவும் தென்படவில்லை. அங்கே இங்கே அலைந்து விசாரித்து ஒரு வழியாக எங்களுக்கான Gate ஐ சென்று சேர்ந்தோம். மீண்டும் குழப்பம். ஒரே விமானத்திற்குப் பல எண்கள். (Connecting flights) இந்த விமான நேரம் அமெரிக்காவின் பகல் நேரமென்பதால் தூக்கமில்லை.

அதிகம் சிரமம் இல்லாமல் uneventful ஆக அதிகாலை இரண்டு மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்து மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்தில் காலை ஐந்து மணியளவில் எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்.

Home sweet home !!




























No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...