Sunday, 7 April 2019

அவனருளால் அவன் தாள் வணங்கி ....

கடந்த பங்குனி உத்திர திருநாளில் 3 1/2 நாட்களுக்கு  நண்பர்களின் குடும்பங்களுடன் ஆரம்பமானது எங்கள் ஆன்மீக சுற்றுலா .

சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பேருந்து. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு கார். காலையில் 7 மணியளவில் கிளம்பி காலை உணவு முடித்து கொண்டு கோவில்களை காண ஆரம்பித்தால்  12 மணிக்கு இடைவேளை. (12-4 கோவில்களை மூடிவிடுவார்கள் என்பது நீங்கள் அறிந்ததே .) அந்த இடைவெளியில் மதிய உணவை முடித்துக் கொண்டு அடுத்த ஊருக்கு பயணம் செய்தோம் . மீண்டும் இரவு 9 - 9.30 முடிய .....

ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் என் அனுபவங்களை மட்டுமே இங்கே சொல்லப் போகிறேன். 

பாண்டிச்சேரியில்  நண்பரது இல்லத்திற்கு அருகில் இருந்த ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சகித ஸ்ரீ அய்யனார் கோவிலில் ஆரம்பித்து வரிசையாக அன்றே 3 கோவில்கள். பங்குனி உத்திர நாளானதால் கடவுளருக்கு திருமணம் வீதி ஊர்வலம் என ஊரின் பல பகுதிகளிலும்  கலகலப்பு. (மணக்குள விநாயகர் ஆலய யானையின் கால்களில் கொலுசு அணிவித்திருந்தார்கள்).  

மறுநாள் காலை கிளம்பி பாண்டிச்சேரியின் அருகிலிருக்கும் சிங்கிரிக்குடி (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த இடம்), பூவரசன்குப்பம் (ஹிரண்யனுக்கு நரசிம்மர் காட்சி அளித்த இடம், தென் அஹோபிலம் என்று அழைக்கிறார்கள் இந்த ஊரை ) மற்றும் பரிக்கல் நரசிம்மன் கோவில்களுக்கு சென்று வணங்கினோம். 

மேற்கண்ட ஊர்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பவை . ஒரே நாளில் மூன்று கோவில்களுக்கும் செல்வது சிறப்பு என்று கூறினார்கள். சென்றோம்.  

சிங்கிரிக்குடி கோவில் மிகப் பழமையானது. ஒரே அர்ச்சகர் தான் சிறிய ஊர் கோவில்களில் . அவர் வரும்வரை கோபுரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். 

கோபுரத்தின் ஒரு பக்கம் சீதா கல்யாணம் ராமர் பட்டாபிஷேகம் இன்னபிற சுப நிகழ்வுகள் , மற்றொரு பக்கம் ஒவ்வொரு நிலைக்கும் (கொலுப்படியில் மேலே கடவுள், தேவர்கள் என ஆரம்பித்து கடைசியில் பூச்சி புழுக்கள் என வைப்பது போல ) கஜேந்திர மோட்சத்தில்   ஆரம்பித்து ஒவ்வொரு நிலைக்கும் மேலே மேலே போகப்போக மாக்களிலிருந்து மக்கள் கந்தர்வர்கள் தேவர்கள் என கடவுள் மோட்சம் கொடுக்கும் காட்சிகள் நிலைப்படுத்த பட்டுள்ளன. 

மிகப் பொறுமையாக நானும் என் உடன் வந்த தோழியும் ஒவ்வொரு கோவிலிலும் கோபுர பொம்மைகளின் theme என்னவென்று பொறுமையாக பார்த்து விட்டே வந்தோம் (நேரமாகுது வாங்கம்மா ....)

வழியில் நாயனார் சுந்தரர் பிறந்து வாழ்ந்த ஊரான திருநாவலூர் பக்தஜனேஸ்வரரையும் வரதராஜ பெருமாளையும் (ஒரே கோவிலில் தனித்தனி வாசல்கள் சந்நிதிகள்) வணங்கி விட்டு திருநள்ளாறு சென்றடைந்தோம்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி இருந்த காலத்தில் கட்டப்பட்டவை நாங்கள் சென்ற கோவில்கள் அனைத்துமே . சைவ கோவில் வைணவ கோவில் என்று தனித்துவமாக எதுவுமே இல்லை. வைணவ கோவிலின் வாசலிலேயே பிள்ளையார் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் அமர்ந்திருக்கிறார். சிவன் கோவிலில் மஹாலட்சுமிக்கென தனி சந்நிதி மற்றும் சிவன் சன்னதியின் நிலைப்படியிலேயே மஹாலக்ஷ்மி இருக்கும்படி அமைந்துள்ளது .  அநேக கோவில்களில் பெருமாளுக்கு தனி சந்நிதி .

திருநள்ளாறில் கால் வைத்த அந்தக்கணமே மனது அமைதி நிலைக்கு சென்று விட்டது . வேறெந்த நினைவும் மனதில் ஏற்படவில்லை. 
ஊரெங்கும் திருவிழா போல ஒரு வித தயார் நிலையில் ....சரஸ்வதி குளம் நளன் குளம் என நன்கு பராமரிக்கப்பட்ட நீர்நிலைகள். 

 சனீஸ்வரர் சன்னதி இருக்கும் இடத்தின் மேலே NASA வின் துணைக்கோள்கள் கூட செயலிழந்து போவதாக சொல்வார்கள். அந்த கோவிலில் உள்ளே மட்டுமின்றி அந்த ஊரில் இருந்த மொத்த நேரமும் சொல்லவொண்ணாத மன அமைதி. (என்னவோ சக்தி இருக்கு அங்கே) மரகத லிங்க அபிஷேகம் காணும் அரிய வாய்ப்பும் கிடைத்தது .வெள்ளியன்று இரவே தர்பாரண்யேஸ்வரரையும் சனீஸ்வரரையும் (கூட்டமில்லாத நேரம் ) பொறுமையாக வணங்கி விட்டு 5 கிலோமீட்டரில் உள்ள காரைக்காலுக்கு சென்று அங்குள்ள கோவில்களை தரிசித்தோம்.

மறுநாள் காலையில் சிக்கில் சிங்காரவேலரையும் நவநீதேஸ்வரரையும் (ஒரே கோவில்) தரிசித்து விட்டு ஆபரணதாரி என்ற ஊரில் அமைந்த கோலவண்ண வாமன பெருமாளை தரிசிக்க சென்றோம்.  108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ணங்குடி என்னும் ஊரின் அபிமானஸ்தலம் இந்த ஊர். ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கம்  திருவனந்தபுரம் போல ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் கோலம் . மிகப்பெரிய சிலை . சிலையை வடித்த பிறகு சுற்றி சன்னதி கட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

[21 அடி நீளமாக, தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம் நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும். திருமேனி முழுதும் புரளும் ஆபரணங்களை மிக நுணுக்கமாக காட்டியிருக்கும் அழகில் மனம் கரையும்.

ஏழுதலை ஆதிசேஷனும், அந்தக் கூர்மையான பார்வையும், மெல்ல தலை தாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருக்கும். ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்ட மேகம் போன்ற மேனி. தைலக்காப்பில் மின்னுகிறார். சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். எப்போதும் புன்னகை உதிர்க்கும் பவளவாய். திருமார்பில் நலங்கிளர் எனும் ஹாரம், உத்தரியம், தண்டை என அணிந்து சாந்த ஸ்வரூபியாக உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாளின் அந்த சயனத் திருக்கோல அழகு காணுதற் கரியது . [Courtesy :http://templeservices.in/temple/அழியா-புகழ்தரும்-ஆவராணி/  ] 

இந்த சுற்றுலாவின் "HIGHLIGHT" இவர்தான் . சிற்பத்தின் precision அற்புதம் .  படைத்த சிற்பி யாரோ தெரியவில்லை அற்புதமான கைவண்ணம் . பொதுவாக பகவான் மேலே பார்த்தவண்ணம் படுத்திருப்பார் இங்கே ஒருக்களித்து பக்தர்களைப் பார்த்தவண்ணம் .... அவரது வாய் நம்மை பார்த்து எதோ சொல்வது போல ....மிக துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. 

நேரில் கண்டால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும் . 

திருக்கண்ணங்குடி 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று.( தாமோதர பெருமாள் கோவில்). பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று . கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அற்புதமான அழகான கோவில். (Courtesy : Wikipedia )

அடுத்து  திருவாரூர் தியாகேசர் கோவில். 11.30 மணியளவில் சென்றதால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . மிகப்பெரிய கோவில். கமலாம்பிகையை தரிசிக்க எண்ணி கருங்கல் பிராகாரத்தில் ஓட்டமாக ஓடி பாதங்கள் கொப்பளிக்க கண்ணில் நீர் வர.....தரிசித்தோம். இந்த கோவிலின் குளத்தின் பரப்பளவு கோவிலின் பரப்பளவிற்கு சமமாக உள்ளது என்று கூறினார்கள். பெரிய்ய்ய கோவில் பெரிய்ய்ய குளம் .

[ஈஸ்வரனை விட்டு அம்மா என் இவ்வளவு தள்ளி இருக்கிறார்? _  தோழி 1 
கோவித்துக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ? _ தோழி 2]

எங்கள் சிரமங்கள் வீணாகவில்லை. அன்னை தவக்கோலத்தில் இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைத்து அதன் மேல் வலது காலை வைத்து வித்தியாசமான தவக் கோலத்தில் காட்சி தருகிறார் . 
[ கோவித்து கொண்டு வரவில்லை தவம் செய்ய வந்திருக்கிறார் _ தோழி 2]

அம்மனை தரிசித்து விட்டு பிரகாரத்தில் நிற்கையில் ஷிலாசாஸனம் எனப்படும்  கல்வெட்டில் முத்துசாமி தீட்சிதர் கமலாம்பிகையை பற்றி இயற்றிய பாடல்களை கண்டோம் .  

முன்பொரு முறை சமஸ்க்ருத பயிற்சி வகுப்பில் ஒரு சகோதரி சொன்னது நினைவுக்கு வந்தது ..பூர்வ ஜென்ம ஞாபகம் போல ..

ஆம்... அந்த பாடல்கள் சமஸ்க்ருத மொழியில்(ன்) விபக்தி எனப்படும் வேற்றுமை உருபுகளை ஆரம்ப வார்த்தைகளாக வைத்து இயற்றப்பட்டவை . 
 கமலாம்பா , கமலாம்பாம் , கமலாம்ப்யா, கமலாம்ப்யை ..... ( 2 வருடங்களாக சமஸ்க்ருதம் படிப்பதற்கு ஒரு சின்ன பயன்பாடு.... மகிழ்ச்சி )

வெயிலோடு வெய்யிலாக மன்னார்குடி சென்று அங்கிருந்த கடைவீதியில் இரும்பு தோசைக்கல் etc வாங்கி 4.30 மணியளவில் ராஜகோபால ஸ்வாமியை தரிசித்தோம்.  

இரவில் மீண்டும் திருநள்ளாறு கோவில். சனிக்கிழமை கூட்டம் சற்றே குறைந்த இரவு 9 மணிக்கு சென்று தரிசித்தோம். சயன பூஜையை கண்டு களித்தோம். ஸ்படிக லிங்க அபிஷேகம் கண்டோம் . அமைதியான அனுபவம் .

பயணத்தின் கடைசி கட்டமாக திருவிடைக்கழி (சிவன் /முருகர்) கோவில் (எப்படி இந்த கோவிலை பற்றி  தெரியும்?_ தோழி ) திருக்கடையூர் கோவிலுக்கு ஏற்கனவே ஒரு முறை சென்றிருந்தாலும் மீண்டும் புதிதாகக் காணும் அனுபவம்   பழைய நினைவுகளுடன் கதம்பமாக .

நாகப்பட்டினம், காரைக்கால், மன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் ஆங்காங்கே நீர்நிலைகளில் நீர் தென்பட்டது. வழியெங்கும் பசுமை . ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது.

1999 ல் சென்ற போது கோவிந்தராஜரை தரிசிக்க முடியவில்லை திரை சார்த்தி விட்டார்கள். இம்முறை அந்த குறை நீங்கியது. உச்சி கால ஸ்படிகலிங்க அபிஷேகம் கண்டு களித்து கோவிந்தராஜரை சுற்றி சுற்றி வந்து ....பிரகாரத்தில் அமர்ந்து  உண்டு .... (சிவகாமி அம்மை எங்கே இருக்கிறார் . ?
நானே இது வரை பார்த்ததில்லை பல முறை வந்தபோதும் நடராஜரையும் பெருமாளையும் வணங்கி விட்டு சென்று விடுவேன் _ பாண்டிச்சேரி தோழி ) 

அனைத்துக் கோவில்களிலும் பல பிரகாரங்கள் பல கோபுரங்கள். முழுவதும் காண பல நாட்கள் தேவைப்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் . நுணுக்கமான சிற்பங்கள். தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள். காண கண் கோடி வேண்டும் . 

பல்லவர்களும் சோழர்களும் சிற்ப, கட்டிடக் காலையில் மிகத் திறமையானவர்கள்  என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. 

எப்படி இவ்வளவு கோவில்களுக்கு உங்களால் செல்ல முடிந்தது ? _ நட்பு வட்டம் 

பெரியாழ்வாரின் வார்த்தைகளில் ......."அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்(தோம்)!"








No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...