Thursday, 25 June 2015

தொடர்பு எல்லைக்கு வெளியே ....

சில நாட்களுக்கு முன் ஒரு நீத்தார் நினைவு நாள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் சென்றிந்தேன். பிரார்த்தனை நானும் மற்றொரு மூத்த உறவினர் மட்டுமே வெளியாட்கள்.சாப்பிட இலை போட்டவுடன் திமு திமுவென்று பத்து பேர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.(அதே அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள்)

10 வயதான ஒரு பெண் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வேறு இலையில் அமர, அவரது தாயார் அங்கே வந்தார். அருகில் அமர்ந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி, ஏன் உங்கள் மகள் அங்கே சென்றாள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்ணின் தாயார், அவள் ஓல்டீஸ் கூட உட்கார மாட்டாளாம் என்றார். இதைக் கேட்டதும் அப்பெண்ணின் முகம் ஒரு கணம் சுருங்கியது. பின் சமாளித்து பேசினார். 

இந்த நிகழ்வு, அந்த குட்டி பெண்ணின் வீட்டு மூத்த உறவினர்கள் அவரது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பது தெளிவாகப் புரிந்தது.

பல வருடங்கள் முன்பு, ஒரு உறவினரின் 4 வயது மகனிடம் உங்க தாத்தா பாட்டி நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். அதற்கு அவரது பதில் "அவங்களை நேத்து தான் தனிக் குடித்தனம் வெச்சுட்டு வந்தோம்" 
அந்த பதில் தந்த அதிர்ச்சி பல வருடங்களாகியும் இன்னும் தீரவில்லை. இது போன்ற சூழலில் வளரும் குழந்தை, முதுமையிலும் தனியாகத் தான் வசிக்க வேண்டும் போல என்று எண்ணத்துடன் வளராதா?

எங்கள் இல்லத்தின் மூத்த உறவினர் ஒரு முறை, "மருமகள் தன்னால் மாமியாரை எதிர்த்துப் பேச முடியவில்லை என்பதால், தன்னுடைய சிறு பிள்ளைகள் பாட்டியை எதிர்த்துப் பேசுவதை ஊக்குவிக்கிறாள், தப்பு என்று கண்டிப்பதில்லை. பிற்காலத்தில் தனக்கு எதிராகத் தன் பிள்ளைகள் இதே வழியில் பேசப் போவது அவளுக்குப் புரியவில்லை" என்றார். உண்மை. இன்று அப்படித் தான் நடக்கிறது அந்த மருமகளுக்கு. 

பல பெண்மணிகள் தன்னுடைய பெற்றோரை மட்டும் ஆதரித்து, கணவரது பெற்றோரை தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். அதுவும் சரியன்று. அனைத்துத் தரப்பு மூத்த உறவினர்களையும் நாம் ஆதரித்து அன்பாக நடந்து கொள்வதைப் பார்த்தே, நம் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்துள்ள இந்த காலத்தில், வயதான உறவினர்களை பிள்ளைகளுக்கு பரிச்சயப் படுத்தல் மிக அவசியம்.
முதுமை பற்றி அவசியம் சிறு பிள்ளைகளுக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு நாள் நமக்கும் வயதாகும் தள்ளாமை வரும், இளமைத் தோற்றம் மாறும் என்ற புரிதல் மிக மிக அவசியம். பெற்றோர்கள் தான் இதை சொல்லித் தர முடியும்.

அதன் பயனாளிகள் நான் தான்..நாம் மட்டுமே தான். 

ஹலோ... தாத்தா, எப்படி இருக்கீங்க??

1 comment:

  1. thought provoking... Nowadays , I rarely see people living with elderly persons... sad to note...

    ReplyDelete

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...