கடந்த இரண்டு வாரங்களாக எங்களது கீழ்ப்பாக்கம் தபால் ஊழியர்கள் குடியிருப்பு எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ்த் தளத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பென்றால் இதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
ஒரு ஆறுதல், ஆரம்பித்த சில நாட்களில் எங்கள் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து அட்டை தபாலில் வந்து சேர்ந்தது, பிறந்த நாள் முடிந்து பல நாட்களுக்குப் பின். ஆயினும் இன்று வரை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஈமெயில் எறும்பு மெயில் எல்லாம் இல்லாத காலத்தில் காலையும் மாலையும் தபால்காரரின் வருகைக்காய் காத்திருப்போம்.
மணி ஆர்டர் மூலம் சகோதரர்கள் பொங்கல் பண்டிகைக்கு அனுப்பிய ரூ10 கையில் கிடைத்ததும் சகோதரர்களை நேரில் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும்.
என் தோழி ஆன்லி இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் தவறாது கடிதம் , கிறிஸ்துமஸ், புது வருட வாழ்த்து அட்டைகள் அனுப்பி , இத்தனை வருடங்களும் என் தொடர்பு எல்லைக்குள்ளேயே இருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து வரும் தபால்கள், வாழ்த்து அட்டைகள் வந்து சேர குறைந்தது ஒரு மாதம் ஆகும். ஆயினும் அதில் எழுதியவர் வெளிப்படுத்திய உணர்வுகள் அன்று நம்மிடம் சொன்னது போல இருக்கும். புது ஊர்களுக்கோ புது நாட்டுக்கோ சென்றால் அங்கிருந்து வாழ்த்து அட்டை மற்றும் அந்த ஊரைப் பற்றிய விவரங்கள், உணவுப் பழக்கங்கள், மக்கள் என்று சகல விவரமும் தாங்கி கடிதம் நட்பு வட்டத்திலிருந்தும் உறவுகளிடமிருந்தும் வரும். நாமே அங்கு சென்று வந்த அனுபவமாக அது இருந்தது. [அப்படி எனக்கு வந்து சேர்ந்த வாழ்த்து அட்டைகளை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.]
அமெரிக்காவின் சால்ட் லேக் சிடி என்றழைக்கப்படும் நகரின் பெயர் "உடா", மிக அழகான பனி மலைகள் சூழ்ந்த ஊர், சிங்கப்பூரில் பறவைகள் பூங்கா நன்றாக இருக்கும், ஜப்பான் நாட்டின் கோபே நகரின் பூகம்ப நிகழ்வு மிகவும் மோசமாக இருந்தது, வியட்னாமின் கிம்சி என்ற உணவு நம் ஊர் ஊறுகாய் போல இருக்கும். அரபு நாடுகளில் பாலைவனத்தை சோலையாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி பல தகவல்கள்.
என் பாட்டனார் (என் அம்மாவின் அப்பா) அனைவருடனும் கடிதத் தொடர்பில் இருந்தார். அவரது தினக்குறிப்புகள் வளவளவென்று இருக்காது. கடிதங்களும் அப்படியே. அவரது குறிப்புகள் இன்றும் பல நிகழ்வுகளுக்கு சான்றாக இருக்கிறது.
என் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எங்கள் தலை தீபாவளிக்கு எங்கள் ஊருக்கு செல்ல நீலகிரி எக்ஸ்பிரசில் பதிவு செய்து பின் மறுநாள் கோவை எக்ஸ்பிரசில் சென்றதாகவும். [இது பற்றி Run & Catch the train என்னும் தலைப்பில் பதிவு செய்திருக்கிறேன்]. எனது அண்ணனின் மூத்த மகள் 1984 அக்டோபர் திங்களில் தீபாவளிக்கு சில தினங்கள் முன்பாகப் பிறந்தார் என்பதும் அதில் உள்ளது.
குழந்தை பிறந்து 3ஆவது நாள் தாய்க்கு பத்தியம் ஆரம்பித்து குழந்தைக்கு புது தொட்டில் கட்டி, பின்பே உறவுகளுக்கு குழந்தை பிறந்த தகவலுக்குக் கடிதம் போடுவார்கள். இந்த உடனடி வீடியோ காலத்தில் அந்த சுவாரசியம் இல்லை என்பதே உண்மை.
[1.5 வருடங்களுக்கு முன்பு எங்கள் அத்தை ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து எனக்கு கொள்ளுப்பேரன் பிறந்திருக்கிறான் என்றார். பார்த்தேன் அத்தை என்றேன். எங்கே எப்படி யார் சொன்னது என்று ஆச்சரியமாக வினவினார். என் பதில்: அது தான் குழந்தை தலையை கண்டதுமே பேஸ் புக்ல போட்டுட்டங்களே.... என் அத்தையின் சிரிப்பு அடங்க வெகு நேரமானது]
9.9.99 - இது நான் முதன் முதலாக ஈமெயில் கணக்கு துவங்கிய நாள். (ஹாட் மெயில்). அன்றுடன் கடிதம் எழுதும் வழக்கம் முற்றுப் பெற்றது.
ஆரம்ப நாட்களில் ஈமெயில் மூலமாவது தகவல்கள் வந்தன. கடந்த சில வருடங்களாக எதுவும் இல்லை.
ஸ்கைப் மூலம் பேசுவதில், நேரில் சந்திக்கும் உற்சாகமும் ஆர்வமும் குறைந்து போனதென்னவோ உண்மை. பல வருடங்கள் முன்பு, நள்ளிரவில் விமான நிலையம் சென்று காத்திருந்து வெளி நாட்டிலிருந்து வரும் உறவினர்களை, நண்பர்களை வரவேற்று அழைத்து வருவோம். குடும்பமே கிளம்புவோம். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழியும். இந்த நிலை தற்சமயம் இல்லை.
2 வயது குட்டி பேரன் என்னையும் என் கணவரையும் எங்கள் பெயருடன் இது பாட்டி அது தாத்தா என்று மிக சாதாரணமாக கூறினார், கூடவே இருப்பது போல. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் பார்ப்பதற்கே இந்த பலன்.
தொழில் நுட்பம் பல வகையில் முன்னேறி இருந்தாலும், ஒருவர் தம் கைப்பட எழுதி அனுப்பிய கடிதத்தில் இருந்த மன நெருக்கம் வேறு வகை தகவல் பரிமாற்ற முறைகளில் இல்லை.
கைகடுதாசி என்று குறிக்கப்பட்ட கடிதங்கள் நம்மை வந்து சேர்ந்த நாட்கள் மனதுக்கு நெருக்கமான நாட்களை இழக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயமே!
Whatsapp? Nothing!!
Very true.... The only person who wrote me letter, is your daughter. .. Letters are always words recording, the moments cherished... It's valuable than any sms/chat/post/emails....
ReplyDeleteஉண்மை......
ReplyDelete