2001-2003 க்குள் ஏதோ ஒரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி. அன்று எங்கள் பக்கத்து வீட்டு தம்பதியினரின் திருமண நாள். [அதனால் தேதி மறக்கவில்லை]12 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் தரைத் தளத்தில் எங்கள் இல்லங்கள். .
காலை 6.30 மணியளவில் எங்கள் குடியிருப்பின் வீட்டு வேலைகளில் உதவுபவர் தன்னுடன் ஒரு 16 வயது மதிக்கத் தக்க இளம் பெண்ணை அழைத்து வந்தார். யார் என்னவென்று விசாரித்தோம். தாம் பேருந்திலிருந்து இறங்கி வருகையில் அந்தப் பெண் தெருவோரம் ஒரு டீக்கடை பக்கத்தில் நின்று அழுது கொண்டிருந்ததாகவும் பல ஆண்கள் அவரை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்தப் பெண்ணை காப்பாற்றும் விதமாக அழைத்து வந்ததாகவும் கூறினார். அப்படி நினைத்திருந்தால் மிக அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குத் தானே நீ போயிருக்க வேண்டும் எதற்கு எங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தாய் என்று கடிந்து கொண்டோம். காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் பிறகு நம்மால் அந்தப் பெண் என்ன ஆனார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது பாவம் பெண் பிள்ளை , அண்ணன்மார்களே அக்காமார்களே பார்த்து உதவுங்கள் என்று கூறிவிட்டு தம்முடைய வேலைகளைப் பார்க்க சென்று விட்டார்.
அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச்சுக் கொடுத்து அவரைப் பற்றிய விவரங்களை அறிந்தோம். 12 ஆம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் படிப்பவர். காவல் துறையில் சேர்ந்து பணி புரியும் ஆர்வம் உடையவர். பெற்றோர் மறுத்ததால் வீட்டை விட்டு வந்து விட்டார். ஆள் இல்லை என்றால் அந்தப் பெண் மீண்டும் எங்காவது சென்று விட்டால்? மாற்றி மாற்றி காவல் இருந்தோம். உணவு கொடுத்தோம். [நான் காமர்ஸ் டீச்சர் என்பதால் என்னை அந்தப் பெண்ணுக்கு அக்கௌண்டன்சி கற்று தர சொல்லி சிபாரிசு வேறு. [Partnership accounts - Sacrificing ratios & Gaining ratios கற்றுத் தந்தேன். சூட்டிகையான பெண்]
மீண்டும் பேச்சுக் கொடுத்து அறிவுரை கூறி அவரது வீட்டின் தொடர்பு விவரங்களை அறிய மதியம் ஆகிவிட்டது. உடனே குடியிருப்பில் உள்ள மற்றொரு நண்பர் அப்பெண்ணின் இல்லம் இருக்கும் ஊரான (பவானி) குமாரபாளையத்தை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாரை நேரில் வந்து அழைத்து செல்லுமாறு ஏற்பாடு செய்தார். ஈரோடு அருகிலிருந்து அவர்கள் வந்து அழைத்து செல்ல நள்ளிரவாகி விட்டது. அவர்கள் இல்லத்தை தொடர்பு கொண்ட நண்பரே அவரது பெற்றோர் வரும் வரை தன்னுடைய வீட்டில் வைத்திருந்து ஒப்படைத்தார்.
வீட்டை விட்டு வெளியில் வருவது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது படிக்காத எங்கள் வீட்டு உதவியாளருக்குத் தெரிந்த அளவு கூட படித்த அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை.சேலையில் முள் கிழித்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத் தான். தம்முடைய நோக்கம் நிறைவேற பெற்றோர்களிடன் எடுத்து சொல்லி ஜெயிக்க வேண்டுமே தவிர , வீட்டை விட்டு வரக் கூடாது. பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தபடி தான் நம்முடைய லட்சியங்களை அடைய போராட வேண்டும்.வீட்டில் இருக்கும் நம்முடைய பெற்றோர் உடன் பிறந்தாரையே வெல்ல முடியாதவர்கள் உலகை எப்படி வெல்ல முடியும்?? நல்ல உள்ளங்கள் உதவியதால் பத்திரமாக வீடு போனார் இல்லை என்றால்??? பாலியல் வன் கொடுமைகள் எக்காலத்திலும் உண்டு. இக்காலத்தில் பெண்கள் வெளி உலகுக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள் என்பது பெரிய முன்னேற்றம்.
பெற்றோர்களே !பிள்ளைகள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் ஆசைகள் கோரிக்கைகள் நியாயமாக இருப்பின் அவை நிறைவேற உதவுங்கள். உங்கள் கருத்துக்கள் ஆசைகளைப் பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள். பிள்ளைகளை கடுமையாகக் கண்காணிக்காதீர்கள். இதுவே பல தவறுகளுக்கும் காரணமாகிறது. இளம் பிள்ளைகள் பெற்றோரின் அக்கறையைத் தவறாகப் புரிந்து கொண்டு , எதிர்பாலர் யாரேனும் நட்புடன் பழகினால் அதை காதல் என்ற பெயரில் நினைத்து வழி தவறுவதும் நடக்கிறது. பொறுப்புகளைப் புரிய வைத்து, சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகள். வழி நடத்தி செல்லுங்கள்.
பிள்ளைகளே, பெற்றோர்கள் உங்கள் எதிரிகள் அல்லர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அருமையான பதிவு....
ReplyDeleteவீட்டு வேலைகளில் உதவுபவர் - Janitor - அழகான சொல்லாடல்