Saturday, 23 March 2024

LTC பயணங்கள் – பத்ரிநாத், கேதார்நாத்[பகுதி -1]


சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி

1994ல் கல்கத்தா பயணம் வந்த என் கணவரின் அலுவலக நண்பர்கள் குடும்பங்களுடன் மேலும் சிலரும் இணைந்து கொள்ள அடுத்த சுற்றுலாப் பயணம் முடிவு செய்யப் பட்டது. (நான்கு வருடங்களுக்கொரு முறை செல்லலாம்)

ஸ்ரீரங்கத்திலிருந்து பக்திச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று கொண்டிருந்த எங்கள் உறவினர் (பெரியப்பா மறைந்த திரு கோவிந்தராஜன்) தான் சுற்றுலா ஏற்பாட்டாளர். உணவுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் அவரே பொறுப்பு என்பதால் கடுகு எண்ணெய் பூரிகளும், மண் குடுவைத் தேநீரும், அநாவசியக் காத்திருத்தலும் இந்தப் பயணத்தில் இல்லை.

1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் மாலை Grand trunk expressல் சென்னையிலிருந்து ஆக்ராவை நோக்கிக் கிளம்பினோம். நாங்கள் Three tier AC கோச்சில் பயணிக்க பெரியப்பா மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் Second class sleeper கோச்சில் பயண நேரத்தில் ஆங்காங்கே சமைக்கத் தேவையான பொருட்கள், அடுப்பு, துடுப்பு என நிறைய சாமான்களைத் தங்களுடன் எடுத்து வந்தார்கள். சமைத்த உணவுகள் கெடாமல் இருக்க AC கோச்சில் எங்களுடன் பயணித்தன.

புளி சாதம், தயிர் சாதம், snacks என ஒவ்வொரு வேளையும் விதம் விதமான உணவுகள் வழங்கப்பட்டன. பகலில் இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கு பெரியப்பாவைக் காணச் சென்ற போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சில நிமிடங்களுக்கு மேல் அங்கே நிற்கவே முடியவில்லை. (பெரியப்பா குழுவினரை மாறி மாறி எங்களுடன் வந்து பயணிக்கக் கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர்) மறுநாள் முழுவதும் பயணம் செய்து அதற்கடுத்த நாள் காலை ஆறு மணியளவில் ஆக்ரா நகரை அடைந்தோம்.

இந்தப் பயணம் முழுவதும் காலை, இரவு டிபன், மதியம் சாப்பாடு, இரண்டு நேரம் காபி/பால், மாலை snacks என உணவு வழங்கப் பட்டது. சில நாட்களுக்குப் பிறகு மாலை snacks தேவைப்படவில்லை. ஒவ்வொரு ஊரிலும் தங்கும் இடமும் முன் கூட்டியே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தீர்த்த யாத்திரை + பொதுச் சுற்றுலா என்பதால் தங்குமிடம் ஹோட்டல், Dormitory, கோவில்கள், மடங்கள் எனக் கலந்து இருந்தது. மூன்று வேளையும் வயிறு வாடாமல் தேவையற்ற காத்திருத்தல் அலைச்சல் இல்லாமல் பயணம் சுகமாக இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் என்ன சாப்பிட்டோம் எங்கே தங்கினோம் போன்ற விவரங்களை அதிகமாகக் கூறவில்லை இந்தக் கட்டுரையில்.

ஆக்ரா

ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் நேரே ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். (அந்தப் பேருந்தில் தான் இமாலயம் முழுவதும் பயணித்தோம்) அந்த நேரத்திலேயே வெயிலின் தாக்கம் தெரிந்தது. விடுதியிலேயே குளித்துத் தயாராகி, காலை உணவிற்குப் பிறகு அனைவரும் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலைக் காணப் புறப்பட்டோம்.

முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாக விளங்கிய இந்த நகரம் இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹான் அவர்களால் தன் மனைவி மும்தாஜிற்காகாக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் இந்த புது ஏழு உலக அதிசயங்களுள் (New seven wonders of the world) ஒன்றான தாஜ்மஹால். தவறு, ஐஸ்வர்யா ரையுடன் சேர்த்து உலக அதிசயங்கள் எட்டு இல்லையா?😉[மங்களூரைச் சேர்ந்த துளுவ Bunt வகுப்பைச் சேர்ந்தவர்களின் Surname Rai. நமக்குப் பரிச்சயமான மற்றொருவர் பிரகாஷ் ரை (ராஜ்)]

யமுனை நதிக்கரையோரம் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் மற்ற மூன்று பக்கங்களிலும் பூங்காவினால் சூழப்பட்டுள்ளது. இதைக் கட்டி முடிக்க 30 ஆண்டு காலம் ஆனது. முழுவதும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னம் முகலாயக் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. உலகெங்கும் போற்றப்படும் இது UNESCO world heritage site ஆகவும் விளங்குகிறது.

பேருந்து சற்று தொலைவிலேயே நிறுத்தப்பட நடந்து தாஜ்மஹாலை அடைந்த போது ஏறக்குறைய பன்னிரண்டு மணி இருக்கும். வழியெங்கும் குறுகலான சாலைகள், அவற்றின் இருபக்கமும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் கடைகள், மக்கள் கூட்டம் என உலகின் மிகச் சிறந்த ஒரு நினைவுச் சின்னத்தை அடையும் சாலைகளாக இல்லாமல் ஏதோ பெயர் தெரியாத சிற்றூருக்குள் செல்வது போல இருந்தது. வெயிற்காலம் என்பதால் நண்பகல் வெயில் மிகக் கடுமையாக மண்டையைப் பிளந்தது. [ஆங்கிலேயர்களின் வார்த்தைகளில்: It was a sunny day] மிக அழகான சுற்றுச் சுவருடன் கூடிய சிவப்புக் கற்களால் ஆனது இந்த complex. அங்கே நுழைந்ததும் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தாஜ்மஹால் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்க்க அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். இந்தியக் குடிமக்களுக்கு அப்போதைய கட்டணம் ₹10/- வெளிநாட்டவருக்கு ₹150/-

முகலாய மக்கள் வணங்கும் மசூதியும் இதனுள்ளே உண்டு என்பதால் செருப்பணிந்து செல்ல அனுமதியில்லை. வெளி நாட்டவர்கள் வாடகைக்குக் கிடைத்த socksஐ வாங்கி அணிந்து கொண்டு சென்றார்கள். நாங்கள் அனைவரும் கொதிக்கும் வெயிலில் சிறு குழந்தைகளுடன் தாஜ்மஹாலுக்கு உள்ளே செல்ல மேலே சில படிகளில் ஏறி ஓடிச் சென்றோம். (தரை மட்டத்திலிருந்து மிக உயரத்தில் கட்டியுள்ளார்கள்) பளிங்குக் கல் சூரியனின் வெப்பத்தை மிக அதிக அளவில் ஈர்க்கிறது.

வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கல் காலத்தின் கோலத்தால் சற்றே நிறம் மாறி அழுக்கு படிந்தது போல இருந்தது. 1998 -2023க்குள் இன்னும் நிறம் மங்கி இருக்கும் என நினைக்கிறேன். காற்று மாசு காரணமாக வெள்ளை நிறக் கற்கள் அதன் பொலிவினை இழந்து வருவது வருத்தத்திற்குரியது.

உள்ளே சென்றதும் சற்றே வெளிச்சக் குறைவான பகுதியில் மசூதி. அதையடுத்து பள்ளமான பகுதியில் இரண்டு சமாதிகள் உள்ளன. அவைகள் dummy. கீழ்த் தளத்தில் தான் ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன எனக் கூறினார்கள். கட்டிடத்தின் வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து நிதானமாக வேடிக்கை பார்த்து ரசித்தோம். மிக அழகான கட்டமைப்பு. திருக்குரானின் வாசகங்களை சுவரில் கண் மட்டத்தில் உள்ள எழுத்துக்களை சிறிய அளவிலும் மேலே செல்லச் செல்ல படிக்க வசதியாகப் பெரிய அளவிலும் செதுக்கி உள்ளார்கள். (படிக்கத் தெரியாதே…பார்த்து ரசித்தோம்). அங்கேயே அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (தாஜ்மஹாலின் முன்னால் நின்று குடும்பம் குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாத காலம்😊) வெளியில் உள்ள நீரூற்றுக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். சிறுவர்களை தாஜ்மஹாலின் நேரெதிரில் இருந்த பெஞ்சில் அமர வைத்து group photo எடுத்தோம். அப்பாடா! நாங்களும் உலகத் தலைவர்கள் போல ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என இப்போது தோன்றுகிறது.


(ஊருக்குத் திரும்பியதும் கேமராவிலிருந்து புகைப்படச் சுருளை ஸ்டுடியோவில் கொடுத்து எடுக்காமல் தானே எடுக்கும் முயற்சியில் என் கணவர் expose செய்து விட்டார். தாஜ் பற்றிய அருமையான நினைவுகள் காற்றோடு கரைந்து விட்டன. எங்கள் மகள் பல நாட்கள் மிகவும் வருந்தி அழுதார். சமீபத்தில் சந்தித்தபோது நினைவு கூர்ந்தார்)

அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் அமைந்த இந்தக் கட்டிடத்தைப் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம். தாஜ்மஹாலைப் பற்றிய பல விவரங்களும் உங்கள் அனைவருக்கும் பரிச்சயம் என்பதால் நிறைய விவரிக்கவில்லை. CBSE மாணவி ஒருவரின் Ancillary Social Studies புத்தகத்தில் தாஜ் மஹால் எப்படி Symmetric ஆன வடிவங்களில் கட்டப்பட்டுள்ளது எனப் படித்த போது மிகவும் வியந்தேன். Square, rectangle, parallelogram என எந்த வடிவமாக இருந்தாலும் இரு பக்கமும் சமமாக இருக்கும் படி அமைந்த கட்டிடம் இது.

அதன் பிறகு தாஜ் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். இதில் மூன்று கலைக் கூடங்கள் உள்ளன 121 தொல்பொருட்கள் முகலாயர் காலத்திய சிறு ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், அரச கட்டளைகள், சித்திர மொழிகளின் வகைபடிவங்கள், போர்க் கருவிகள், பாத்திரங்கள், தாஜ் மஹாலின் கட்டிட வரைபடங்கள், ஓவியங்கள், பளிங்குத் தூண்கள் முதலியன இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள. இது தவிர ஷாஜஹான் மும்தாஜ் ஆகியோரின் தந்ததாலான சிற்பங்களும் ஷாஜஹான் கையொப்பமிட்ட அரச முத்திரை போன்றவையும் உள்ளன். (நன்றி: விக்கிபீடியா)

பிருந்தாவனம்

மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் ஆக்ராவிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிருந்தாவனத்தை நோக்கிப் பயணித்தோம். இந்த ஊர் இந்துக்களின், குறிப்பாக வைணவர்களின் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. Vrundaavan என்பதே பிருந்தாவனமாக மருவியுள்ளது. சமஸ்க்ருத மொழியில் Vrunda என்றால் துளசி Van என்றால் வனம். துளசிச் செடிகள் அடர்ந்த வனம் என்பது பொருள். (பிருந்தாவனமும் நந்குமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ) புராணக் கதைகளின்படி கிருஷ்ணர் தம் இளமைக் காலத்தில் இங்கு தான் வளர்ந்தார் எனக் கூறப் படுகிறது. ராதா & கிருஷ்ணருக்குப் பல கோவில்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இந்த ஊர் விதவைகளின் நகரம் எனவும் அழைக்கப் படுகிறது. விதவைகள் பெருமளவில் இங்கே வந்து தங்கி கண்ணனை வணங்கித் தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர். இவர்களைப் பேணிக் காப்பாற்றப் பல சங்கங்கள் உள்ளன என்கிறது விக்கிபீடியா. இந்த ஊரில் அமைந்துள்ள ISKON அமைப்பினர் கட்டியுள்ள கோவிலில் கண்ணனை தரிசித்து விட்டு மதுரா நகரை அடைந்த போது மாலை மங்கி விட்டது. கோவில் அளவில் சற்றே சிறியது தான்.

மதுரா

தென்னிந்தியக் கோவில்களின் அமைப்பில் உள்ள கிருஷ்ணரின் கோவிலை அடைந்த போது மாலை 6.30 இருக்கும். இரவு 7 மணிக்கு கோவில் நடை சாத்தி விடுவார்கள் என என் பெரியப்பா கூறவே உயரமான மதில் சுவரையும் நீண்ட பிரகாரங்களை உடைய அந்தக் கோவிலின் உள்ளே குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓ...டி 6.45க்கு கண்ணனை தரிசித்தோம். சின்னக் கண்ணன் நின்று கொண்டு அருள் பாலிக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அதனையடுத்து கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படும் ஊர்களில் ஒன்றான மதுரா நகரை நோக்கிக் கிளம்பினோம். மதுரா மாவட்டத்தின் தலைநகரான இது ஆக்ராவிற்கு வடக்கில் உள்ளது. (கோகுலம், கோவர்தனம், மதுரா ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள பகுதிகள் கிருஷ்ண ஜென்ம பூமி)

கோவிலில் இருந்து தங்குமித்திற்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை யமுனை நதிக்குச் சென்று குளித்துக் காலை உணவிற்குப் பிறகு மதுராவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா

புரி த்வாரவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:”

                                    _ கருட புராணம் XVI .14

அயோத்தியா, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி (வாரனாசி), காஞ்சி (காஞ்சீபுரம்), அவந்திகா (உஜ்ஜயினி), த்வாரவதி (துவாரகா) ஆகிய ஏழு நகரங்கள் மோட்சத்தைத் தரும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். அத்தனை சிறப்புடைய மதுராவில் தான் கண்ணன் பிறந்ததாக் கூறுகிறார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 வைணவத் தலங்களுள் இதுவும் ஒன்று.

மறுநாள் காலை Krishna janmasthaan temple complex என்னும் இடத்தில் அமைந்துள்ள கண்ணன் பிறந்த இடத்தைக் காணச் சென்றோம். நேர் பின்னால் யமுனை நதி பாய்கிறது இந்த complex உள்ளே புராணக் கதை விவரப்படி கண்ணனின் தாய்மாமனான கம்சன் தன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று விடும் என அறிந்து சகோதரி தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறை வைக்கிறான் சிறையின் உள்ளே அவர்களுக்குப் பிறக்கும் முதல் ஏழு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். எட்டாவதாகப் பிறந்த கண்ணன் கடவுளின் அவதாரம் என்பதால் தன் மாயையால் அனைவரையும் உறங்கச் செய்கிறான். வசுதேவர் பலத்த மழையில் ஒரு கூடையில் கண்ணனை மூடி எடுத்துக் கொண்டு யமுனை நதியின் குறுக்கே நடந்து யசோதையும் நந்தகோபரும் வசித்த பிருந்தாவனத்திற்குச் செல்கிறார். யமுனை கண்ணனுக்காக வழி விட்டது புராணக் கதைகள் கூறுகின்றன. இந்தக் கோவிலுக்கு “கேசவ் தேவ் கோவில்” எனப் பெயரிட்டுள்ளனர். [குழந்தை கண்ணனின் மேல் ஒரு சொட்டு கூட மழை நீர் விழவில்லையாம். காரணம் ஆதிசேஷன் என்னும் ஐந்து தலை நாகம் வசுதேவரின் கூடையில் அமர்ந்து குடை போலக் காப்பாற்றியதாம். அதற்கும் மேலே கருடன் தன் இறக்கையை விரித்தவாறு பறந்ததால் இரண்டுடக்குப் பாதுகாப்பு குட்டிக் கண்ணனுக்குக் கிடைத்ததாம் என ஒரு பிரவசனத்தில் கேட்டேன்]

நிற்க. இந்தப் புராணக் கதையில் வரும் சிறைச் சாலை தான் இந்த complex உள்ளே இருக்கிறது. தற்போது சந்நிதிகளாக மாற்றப்பட்டுக் கடவுளின் திருவுருவங்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த complexஐ ஒட்டினாற்போல ஒரு பெரிய மசூதியும் உள்ளது. அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி போல இந்த கிருஷ்ண ஜென்ம பூமியிலும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு.

நாங்கள் சென்ற சமயம் AK47 துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர் சுற்றிக் கொண்டிருந்தனர். எப்போது கலவரம் வெடிக்கும் எனப் பயந்தபடியே பீதியுடன் மக்கள் கோவிலுக்கும் மசூதிக்கும் சென்று கொண்டிருந்தனர். கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தெருக்களெங்கும் சிறு கடைகள் (souvenir கடைகள்), ஆங்காங்கே சிவப்பு நிற ஜரிகை கொடிகள் எனத் தென்பட்டன.

கோவிலின் உள்ளே சென்றதும் சிறு சிறு அறைகள் தென்பட்டன. (முன்னாள் சிறை) இங்கு தான் கண்ணன் பிறந்தார் எனப் பூஜை செய்பவர் கண்ணனின் கதையைக் கூறக் கேட்டதும் கண்ணன் பிறந்த அந்தக் காலத்திற்கே சென்றது போல இருந்தது. யமுனை எப்படி வசுதேவருக்கு வழிவிட்டாள் என்பது போலப் பல கற்பனைகளும் மனதில் ஓடின. சுகமான நினைவுகள்.

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு, அக்குழந்தை இறைவனின் அம்சம் என்று உணர்ந்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடுவதாக பெரியாழ்வாரால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்.உங்களுக்காக…


ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் திருவாய்ப்பாடி பெரும் திருவிழாவைப் போலிருந்தது என்பதாகப் பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பைப் பற்றிய நிகழ்வினை ரசனையாக மனதில் நிற்கும் வண்ணம் கூறுகிறார்.

கோவர்தன்

கண்ணன் பிறப்பை நேரில் கண்டது போன்ற அந்த அனுபவத்திலிருந்து ஒரு வழியாக மீண்டு
கண்ணன் இந்திரனின் கோபத்திலிருந்து (கடும் மழையிலிருந்து) மலையைக் குடையாகத் தன் சுட்டு விரலால் ஏந்தி மக்களையும் மாக்களையும் காப்பாற்றியதாகப் புராணக் கதைகளில் கூறப்படும் “கோவர்தன்” என்னும் ஊரை அடைந்தோம். கோவர்தன் பூஜா என்பது இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருநாளாகும். 21 கிலோமீட்டர் சுற்றளவுள்ள இந்த மலையை மக்கள் தீபாவளிக்கு மறுநாள் கிரிவலம் வருகிறார்கள். மலையைக் கண்ணன் ஒரே விரலால் தூக்கியதாகக் கதைகளில் வருகிறது.

ந்த ஊரை நாங்கள் அடைந்த நேரம் நண்பகல். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிறிய ஊர். குறுகலான சாலைகளில் நடந்து சென்று கண்ணனைத் தரிசித்தோம். வழியெங்கும் மாடுகள், அவற்றிற்கான தாழிகள் எனத் தெருக்களில் தென்பட்டன. வழியில் தென்பட்ட லஸ்ஸி கடையில் கெட்டித் தயிரில் எங்கள் கண்ணெதிரில் கடைந்து தரப்பட்ட குளுமையான லஸ்ஸியை வாங்கிக் குடித்தோம். கண்ணன் காலத்து ஆயர்பாடிக்கே சென்றது போன்ற உணர்வினை அந்த லஸ்ஸி ஏற்படுத்தியது. அவ்வளவு அருமையான சுவையுடன் இருந்தது. கண்ணனை வணங்கி விட்டுப்  புது தில்லியை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

புது தில்லி

157 கிலோமீட்டர் இரவுப் பயணம் செய்து அதிகாலையில் தில்லியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லோதி தெரு ராம் மந்திரை அடைந்தோம். (அருகிலேயே ஒரு சாய்பாபா கோவிலும் உள்ளது) கோவிலின் உள்ளேயே இருந்த தங்கும் இடத்தில் அனைவரும் படுத்து உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு குளித்துத் தயாராகி கோவில் பூஜையில் கலந்து கொண்டோம். மிக அருமையான தென்னிந்திய உணவுகள் பிரசாதமாக வழங்கப் பட்டன. தில்லியில் வசிக்கும் தமிழ் நாட்டவர்கள் பலரும் கோவிலுக்கு வந்து சென்றார்கள். மதியப் பூஜையிலும் கலந்து கொண்டோம். இரவு உணவிற்குப் பிறகு பேருந்தில் ஏறி இமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் என்னும் ஊரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். 

அனுபவங்கள் தொடரும்...




Monday, 20 November 2023

LTC பயணங்கள் – வடகிழக்கு இந்தியா [பகுதி -2]

(1994 ஆகஸ்ட்-செப்டம்பர்)

[புவனேஸ்வர், கொல்கத்தா, டார்ஜீலிங் & கேங்டாக்]

கேங்டாக் (சிக்கிம் மாநிலத் தலைநகரம்)

நகரை அடைவதற்குள் சில முக்கியத் தகவல்களை அறிந்து கொள்வோம்.

சிக்கிம் மாநிலத் தலைநகரான கேங்டாக் கடல் மட்டத்திலிருந்து 5410 அடி உயரத்தில் உள்ள ஒரு நகரம். (முனிசிபாலிடி). சிக்கிம், நேபாள் மக்களைத் தவிர பிற மாநிலத்தவர்களும் வசிக்கும் ஊர் இது. இந்தியாவின் வட கிழக்குப் பகுதி என்பதால் மக்கள் சற்றே மஞ்சள் கலந்த வெள்ளை நிறம், சிறிய கண்கள், சப்பை மூக்கு எனத் தென்படுகிறார்கள். (Mangoloids என Anthropologistsகளால் வகைப்படுத்தப்பட்ட தெற்காசிய மக்களின் சாயல்). புத்த மதத்தினரின் புண்ணியத் தலமாகக் கருதப்படும் இந்த ஊரில் பிரபலமான Enchey Monastry (மடாலயம்), Rumtek Monastry போன்ற பிரபலமான புத்த மடாலயங்கள் உள்ளன. 1840 ஆண்டு Enchey Monastry கட்டப்பட்ட பிறகே அதைத் சார்ந்து இந்த நகரம் தோன்றியதாகவும் கூறுகிறார்கள்.ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கல்கத்தாவிலிருந்து திபெத்தில் உள்ள லாசாவிற்கு நாதுலா கணவாய் (Nathula pass) வழியாகத் தான் சென்றார்கள். (Trade route)

இந்த ஊர் டீஸ்டா நதி மற்றும் இமய மலையிலிருந்து பெருகி வரும் ஓடைகள், சுற்றிலும் பனி படர்ந்த மலை என அமைந்துள்ளதால் வருடம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகம் இல்லை. ஜூன் – செப்டம்பர் இங்கே பருவமழைக் காலம். மலைப் பகுதியாக உள்ளதால் அடிக்கடி நிலச்சரிவுகளுக்கு உட்படும் பகுதி இது.

நாங்கள் சென்ற சமயத்தில் ஊர் அவ்வளவாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. சிறிய ஊராக ஒரே ஒரு முக்கிய சாலையுடன் இருந்தது. (மஹாத்மா காந்தி மார்க்) ஆங்காங்கே சாலையைக் கடக்க குறுக்கே skywalk இருந்தது. தபால் நிலையத்துக்கு நேரெதிரில் அது போன்ற நடைப்பாலம் ஒன்றிற்கு அருகில் ஒரு சத்திரத்தில் (choultry) தங்கி இருந்தோம். புட்டபர்த்தி சாய்பாபா சமிதி மூலம் கிடைத்த சத்திரம் அது. மூன்று அறைகள் தீப்பெட்டி போல அருகருகே, அவற்றிற்கு இரண்டு புறமும் கதவுகள். பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடி மகிழவும் நாங்கள் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து அரட்டை அடிக்கவும் வசதியாக இருந்தது.

தென்னிந்தியர்களான நம் கருத்துப்படி இமய மலைப் பகுதிகளில் ஆப்பிள் மற்றும் பிற பழங்கள் அபரிமிதமாகக் கிடைக்கும். தெருக்களில் குவித்து விற்பார்கள் என்பதே. அனைத்துப் பழங்களும் பூக்களும் பிற மாநிலங்கள்/ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. கடை வீதியில் சிறுவர்களுக்கு ஆப்பிள் வாங்கித் தர விரும்பினேன். நெல்லிக்காயை விடச் சற்றே பெரிய அளவிலான ஆப்பிள்களே கிடைத்தன. சுவையும் சுமார்தான். வேறு பழங்களே இல்லை.

விடுதிக்கு நேரெதிரில் ஒரு பள்ளமான சாலையில் இருந்த உணவகத்தில் இட்லி, தோசை, சாம்பார் (unlimited) கிடைத்தது. பல நாட்களுக்குப் பிறகு நமக்கேற்ற உணவைக் கண்டதில் கிண்ணியில் சாம்பாரை வாங்கிக் குடிக்கும் அளவுக்கு அனைவருக்கும் மகிழ்ச்..ச்..சி. என் குழந்தைகள் எங்கே சென்றாலும் எதையும் சரியாக சாப்பிட மாட்டார்கள். என் மகன் எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என அழுது அடம் பிடித்ததை சமீபத்தில் மூணாறுக்கு வந்திருந்த ஒரு சகோதரி ஒருவர் நினைவில் இருத்திக் கூறினார். 😊 மற்றொரு சகோதரி. முதல் நாள் பால் பவுடரைக் கரைத்துக் கொடுத்த போது என் குழந்தைகள் மட்டும் சாப்பிடாமல் ஓட நான் துரத்த… அதைத் தவிர்க்க மறுநாள் கடைக்குச் சென்று பால் வாங்கி வந்து உடன் எடுத்துச் சென்றிருந்த மின்சார அடுப்பில் காய்ச்சி எல்லாக் குழந்தைகளுக்கும் தந்தார். அதற்கும் என் குழந்தைகள் தெறித்து ஓடினார்கள் என்பது தனிக்கதை.
மூன்று இரவுகள் இரண்டு பகல்கள் அந்த ஊரில் தங்கி இருந்தோம். மிகச் சிறிய ஊராக இருப்பதால் இதன் முக்கியமான போக்குவரத்து சாதனம் டாக்சி மற்றும் அவரவர் சொந்த இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடராஜா சர்வீஸ் மட்டுமே. அரசாங்க/தனியார் பேருந்துகள் மிகக் குறைவே. தொலைதூரப் போக்குவரத்திற்கு மட்டுமே இவைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். மலைமேல் வசிக்கும் மக்கள் முதுகில் ஒரு பெரிய மூங்கில் கூடையைச் சுமந்து கொண்டு செல்கிறார்கள்.

மறுநாள் காலை உணவுக்குப் பின் நாங்கள் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஜீப் ஓட்டுநர் அருகிலிருந்த உயிரியல் பூங்கா மற்றும் சில பூங்காக்களுக்கும் அழைத்துச் சென்றார். நாங்கள் சென்ற சமயம் சீசன் இல்லாததால் நோ ப்ரூட்ஸ் நோ பிளவர்ஸ் என்றார். பூக்கள் இல்லாவிட்டலும் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் புறங்கள் பசுமையாக இருந்தன. இமய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் வெப்பநிலை குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மிதமாக இருந்தது. சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். விளையாடிக் கொண்டிருந்த போது பூங்காவில் ஒரு பெரிய தொட்டியில் (மூடி இல்லாமல்) தண்ணீர் இருந்ததைக் கவனிக்காமல் நண்பரின் குட்டிப் பையன் விழுந்து விட்டான். அலறி அடித்து ஓடி அந்தக் குழந்தையை வெளியே எடுத்தார் நண்பர். அத்துடன் பூங்காவை விட்டுக் கிளம்பி 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Rumtek Monastry யைக் காணச் சென்றோம். ஏறக்குறைய 1.30 மணி நேரப் பயணம்.

தொலைதூரத்திலிருந்தே சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமாகத் தெரிந்து நம் ஆவலை அதிகரித்தது அந்த மடாலயம். 1966 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து வந்த 16ஆம் கர்மபா(karmapa- Guru)வால் கட்டப்பட்ட மடாலயம் இது. சுற்றிலும் பெருகும் ஓடைகள், முன்னால் நதி, பின்னால் மலைத் தொடர்கள், பனி படர்ந்த சிகரங்கள் என ஒரு மடாலயம் அமைக்க மிகச் சாதகமான இடமாக இதைக் கருதியதால் இந்த இடத்தில் நிறுவியதாக் கூறுகிறார்கள். சிக்கிம் அரச குடும்பம் மற்றும் சாமானிய மக்களின் பொருளுதவியால் கட்டப்பட்ட இந்த மடாலயம் மிகுந்த கலையழகுடன் உள்ளது .

நாங்கள் அங்கே சென்ற போது கண்ட காட்சி எங்களைத் திகிலுக்கு உள்ளாக்கியது. சுற்றிலும் ராணுவ வீரர்கள் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் (எனக்குச் சிறுவயது தொடங்கி இன்று வரை ராணுவம், காவல் துறை சேர்ந்தவர்களைப் பார்த்தாலே நெஞ்சு படபடக்கும். பயம் 😊)

அந்த மடத்தில் 4 வயது முதல் 90 வயது வரையிலான புத்த பிட்சுக்களைக் காண நேர்ந்தது. குழுக்களாக மடாலயத்தின் அங்குமிங்கும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு எங்களைப் பார்த்ததும் (கேட்டதும்??) மிகுந்த மகிழ்ச்சி. அவர்களின் துணையுடன் மடாலயத்தைச் சுற்றி பார்த்தோம். மடாலயத்தின் உட்புறத்தில் உள்ள புத்தரை வணங்கினோம். [இதைத் தான் ராணுவ மரியாதை என்கிறார்களோ??] என்ன காரணமாக ராணுவம் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது என்று விசாரித்த போது, அங்கே இருந்த புத்த பிட்சுக்கள் 17ஆம் குருவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து இருப்பதாகவும், வரும் புத்த பௌர்ணிமாவை எந்தக் குழு எடுத்து நடத்துவது என்பதில் அவர்களுக்குள் பிரச்சினை.என்றும் எந்த நேரமும் அங்கே கலவரம் ஏற்படலாம் என எதிர்பார்த்து அரசாங்கம் 1992 முதல் ராணுவத்தை அங்கே குவித்திருப்பதாகவும் அறிந்தோம். நாங்கள் சென்றது 1994ல்.இன்றளவும் அங்கே ராணுவம் இருப்பதாக கூகிள் ஐயனார் கூறுகிறார். (என்ன கொடுமை சரவணன் இது???)

அதைக் கேட்டதும் என்றோ படித்த கவிதை என் நினைவுக்கு வந்தது.

ஆசையே துன்பத்திற்கு காரணம்
புத்தர் சிலை அதிக விலை

தமிழக வீரர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு நகரை நோக்கித் திரும்பினோம். ராணுவ வீரர்களின் சுயநலமற்ற சேவையை சிலாகித்துப் பேசிய படியே நகரை அடைந்தோம். மாலை மங்கும் வேளையில் சாலையில் நடந்து சென்று வேடிக்கை பார்த்து விட்டு அறைக்குத் திரும்பும் வேளையில் மீண்டும் எங்கள் மகனைக் காணவில்லை. பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித் தேடிய போது Skywalk மேல் அமைதியாக நின்று கொண்டிருந்தவரைக் கண்டு பிடித்து அழைத்து வந்தோம். இரவு உணவுக்கு மீண்டும் அதே உணவகம், இட்லி, தோசை, சாம்பார் தான். ஆப்பிள் சாப்பிடுங்கள் எனக் கெஞ்சியும் என் பிள்ளைகள் தொடவே இல்லை. (வெளியில் சாப்பிடும் உணவு ஒவ்வாமையால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலும் ஆப்பிள் அதை முறித்து விடும் என்பதாக ஒரு குழந்தை மருத்துவர் கூறினார்)

மறுநாள் காலை நகரின் மையப் பகுதியிலிருந்து Lake Changu என அழைக்கப்படும் Lake Tsongmo செல்ல முடிவு செய்தோம். கேங்டாக் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நாதுலா (Nathula pass) கணவாய் செல்லும் Gangtok-Nathu la highwayயில் 12,310 அடி உயரத்தில் நீள் வட்ட வடிவில் (Oval) அமைந்துள்ள ஏரி இது. சுற்றிலும் உயரமான பனி படர்ந்த மலைச் சிகரங்களைக் கொண்ட இந்த ஏரி பனிக் காலத்தில் முற்றிலும் உறைந்து விடும். வெயிற்காலத்தில் பனி உருகி வரும் நீரே ஏரியாகிறது. இதன் வடக்குப் பகுதியில் நாது லா செல்லும் சாலை மற்றும் வடகிழக்குப் பகுதியில் ஐந்து (5) கிலோமீட்டர் தொலைவில் சீன எல்லை.என்ற காரணத்தால் இந்த ஏரியைக் காண அரசாங்க அனுமதி (permit) வாங்கிய பிறகே செல்ல முடியும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியருக்கு இன்னும் கடுமையான விதிமுறைகள் உண்டு.

புத்த பூர்ணிமா, ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகள் இந்த ஏரிக் கரையில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. சிக்கிம் மக்களால் புனிதமான ஏரியாக இது கருதப் படுகிறது. பனி மலைகளுக்குக் கீழே அல்பைன் காடுகள் (Alpine forest). இந்த ஏரிப் பகுதியில் வித்தியாசமான வாத்துக்கள், சிவப்பு பாண்டா கரடி போன்றவைகள் உள்ளன. (எங்கள் கண்ணில் எதுவும் தென்படவில்லை). மே – ஜூலை மாதங்களில் பல விதமான பூக்கள் பூக்கும். இப்படி ஏரியைப் பற்றிப் பல செய்திகளை கூகிள் ஐயனார் கூறுகிறார்.

மிகவும் ஆபத்தான சாலைப் பயணம் என்பதால் பல கார்கள், ஜீப்கள் மற்றும் மினி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் கிளம்பிச் சென்று திரும்பி வரும் என்பதால் மிகச் சரியாக காலை ஒன்பதுக்குக் கிளம்ப வேண்டி இருந்தது மினி பஸ் ஒன்றில் கிளம்பி குறுகிய சாலையில் பயணம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் அதள பாதாளத்தில் டீஸ்டா நதி. சாலையில் தடுப்புச் சுவர் எதுவும் சரியாக இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.

1.30 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 2743 அடி உயரத்தில் உள்ள அந்த ஏரியை அடைந்தோம். மழை மேகங்கள் தூரத்தில் தென்பட, லேசான வெயில். சுற்றிலும் பனி படர்ந்த மலைகளுக்கிடையே உள்ள அந்த ஏரியின் நீர் வெயிற்காலமாக இருந்தபோதும் அனேகமாக உறைந்தே காணப்பட்டது. அந்த ஏரியின் கரையில் சில பெட்டிக் கடைகளும் ஒரு சிறு சிவன் கோவிலும் இருந்தன. ஏரியின் வடக்குப் பகுதியில் யாரும் செல்ல முடியாதபடி ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். ஏரியின் அருகில் இருந்த பனி படர்ந்த மலைகளை நடந்து போய் பார்த்து விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட வேண்டும் எனக் கூறினார் ஓட்டுநர்.

ஏரியின் மறுபுறம் சுற்றுலாப் பயணிகளைக் கவர Yak (பனிப் பிரதேசத்திற்கு ஏற்ற வகையில் முடிகள் அடர்ந்த காட்டெருமை), Mule(கோவேறு கழுதை) போன்றவற்றை நிறுத்தி இருக்கிறார்கள். அதன் மேலேறி பிள்ளைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அனைவரும் சிறிது தொலைவு நடந்து சென்று பனியின் மேல் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பனியை உருட்டி மற்றவர் மேல் வீசி எறிந்து விளையாடினோம். முதன் முதலாக உறைபனியை அவ்வளவு அருகில் அன்று தான் பார்த்தேன். பதினைந்தே நிமிடங்கள் தான். எதிர்பாராத வண்ணம் மழை பொழியத் துவங்கியது. 12 ஆயிரம் அடி உயரம் என்பதால் நீர் உறைந்து பனிக் கட்டி மழையாகப் பெய்யத் தொடங்கியது. நம் ஊர்களைப் போல சாதாரண ஆலங்கட்டி மழை இல்லை. பெரிய பாறை அளவில் விழத் தொடங்கியதும் அனைவரும் அவரவர் வாகனத்தை நோக்கி ஓட்டமாக ஓடி ஏறினோம். வெளியில் நிற்க இடமில்லை.
கடும் பனி மழை. பேருந்துக் கூரையின் மேல் “டொம்” டொம்” எனச் சத்தத்துடன் விழுந்தது. சீக்கிரம் இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட வேண்டும். பனிப்புயல் வரப் போகிறது என ஓட்டுநர் அவசரப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் காலையில் கிளம்பி வந்த வாகனங்கள் அனைத்தும் கிளம்பின (Convoy of vehicles). நம் மக்கள் கடவுளின் பெயரை உரக்கக் கூறத் தொடங்கியதும் இளம் வயது ஒட்டுநர் யாரும் சத்தம் போடக் கூடாது என் கவனம் திசை திரும்பினால் ஊர் போய்ச் சேர முடியாது என்று கூறவும் வாயை மூடிக் கொண்டு என்ன நடக்குமோ எனப் பயந்தபடி பயணித்தோம்.


ஏற்கனவே சாலை எப்படி இருக்கும் எனக் கூறி உள்ளேன் இல்லையா? அந்தச் சாலையும் கண்ணில் தெரியாதபடி கடும் பனி மூட்டம் வழியெங்கும். ஓட்டுநர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபடி, முன் பக்கக் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டே முன்னேறினார். உடன் வந்த மற்ற வாகனங்களும் அதே போல் வந்தன. திக் திக் நிமிடங்கள். பனி மூட்டம் சற்றே குறைந்ததும் நாங்கள் கீழிறங்கிப் பார்க்க விரும்பினோம். ஓட்டுநர் எங்களிடம் நிலைமை மிக ஆபத்தானது, பனிப் புயல் வந்தால் 24 மணி நேரம் அதே இடத்தில் நிற்க வேண்டி இருக்கும் எனக் கூறியும் எங்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு வண்டி நிறுத்தப் பட்டது. Adventure விரும்பிகள் சிலர் மட்டும் கீழிறங்கி அந்தப் பனிக் காற்றை அனுபவித்து விட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம். குளிராடைகள் யாரிடமும் இருந்தது போல் எனக்கு நினைவில்லை.

கேங்டாக் நகரை நெருங்குவதற்கு அரை மணி நேரம் முன்னால் உயரக் குறைவு காரணமாகப் பனியானது நீராக மாறிப் பெருமழையாகப் பொழியத் தொடங்கியது. நகரை அடைந்து தங்கியிருந்த இடத்தை அடைந்த பிறகும் அடுத்த அரை மணி நேரத்திற்கு மழை நிற்கவே இல்லை. ஆபத்தானதாக இருந்தாலும் இன்றளவும் நினைவில் நிற்கும் அனுபவங்களில் அந்தப் பயணமும் ஒன்று.

மறு நாள் காலை அரசாங்கப் பேருந்தில் கிளம்பி நியூ ஜல்பாய்குரி நோக்கிய நான்கு மணி நேரப் பயணத்தைத் தொடங்கினோம். கேங்டாக் சாம்பார் தன் வேலையைக் காட்டத் தொடங்கியதால் என் குழந்தைகளுக்கு LM ஆரம்பித்து விட்டது. மீண்டும் ரொட்டி, ஆப்பிள் வாங்கிக் கொண்டு பயணித்தோம். (கையில் முதலுதவிக்கு மருந்துகள் எடுத்துச் செல்ல வேண்டும் என அறியாத ஞான சூன்ய நாட்கள் அவை) மதிய உணவு நேரத்தில் நியூ ஜல்பாய்குரி பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்த ஒரு உணவகத்திற்குள் சென்ற போது அங்கே அசைவம்/சைவம் எனக் கலந்து இருந்தது. இரவு பத்து மணிக்குத் தான் கல்கத்தா செல்லும் பேருந்து கிளம்பும் என்பதால் எங்கள் குடும்பம் மட்டும் அது வரை ரொட்டி, பழங்களை உண்டு சமாளித்தோம். இரவு நேரம் முழுவதும் பேருந்துப் பயணத்தில்…

ஹௌரா/கல்கத்தாவை அடையும் முன்பாக அந்த ஊர்களைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோமா?

ஹௌரா/கல்கத்தா (மேற்கு வங்காளத் தலைநகரம்)

ஹூக்ளி நதியின் தென்-வடக்காக அமைந்த இரட்டை நகரங்கள் இவை. கங்கையின் முகப்பில் (டெல்டா) அமைந்த சதுப்பு நிலப்பகுதியே கல்கத்தா நகரமாக விளங்குகிறது. இன்றளவும் தூர்க்கப்படாத சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.(Mangrove/ Sundarbans) 1951 முடிய இந்தியாவின் தலை நகரமாக விளங்கிய கல்கத்தா தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளங்குகிறது. வடக்குப் பகுதி பழமையானது. தெற்குப் பகுதி சுதந்திரத்திற்குப் பிறகு விரிவு படுத்தப்பட்டது. மையப் பகுதி என்பது வணிகப் பகுதி. முக்கியமான கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. Indian Standard Time (IST) எனப்படும் இந்திய நாடு முழுவதற்கும் பொதுவான நேரம் கல்கத்தா நகரின் தீர்க்க ரேகையைக் (longitude) கொண்டே கணக்கிடப்படுகிறது.
கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான ஹூக்ளி நதியின் குறுக்கே உள்ள நான்கு பெரிய பாலங்கள் இரண்டு நகரங்களையும் இணைக்கின்றன. ஹௌரா பாலம் (Cantilever bridge) மற்றும் வித்யாசாகர் சேது ஆகியவை மிகப் பிரசித்தி பெற்றவை. நீர்ப் போக்குவரத்து (படகுகள், கப்பல்கள்), ஆகாயப் போக்குவரத்து (Netaji Subhash Chandra Bose International Airport), சாலைப் போக்குவரத்து (பேருந்துகள், கார்கள், ட்ராம்கள், சைக்கிள் மற்றும் கை ரிக்சாகள்), ரயில் போக்குவரத்து (ஹௌரா ரயில் நிலையம், மெட்ரோ ரயில்) என அனைத்து விதப் போக்குவரத்து வசதிகளையும் கொண்டவை இந்த இரட்டை நகரங்கள்.

கல்கத்தா என்றாலே ரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென், அன்னை தெரசா போன்ற நோபல் பரிசாளர்கள், சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகம், பேலூர் ராமகிருஷ்ணா மடம், நூலகம், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுக்கள், சத்யஜித் ரே படங்கள், கல்கத்தா காளி, வாணலி, உள்பாவாடைகள், பெங்கால் பருத்திப் புடவைகள், மீன் உணவுகள், ரசகுல்லா, மிஷ்டிதோய், ட்ராம்…இப்படி பலப் பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும் அளவுக்குப் புகழ் பெற்றது இந்த நகரம். சென்னை எக்மோர், சென்ட்ரல், ரிப்பன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் ஹைகோர்ட் கட்டிடங்கள் உள்ள பழைய சென்னைப் பகுதியைப் பார்த்திருப்பவர்களுக்கு கல்கத்தா வித்தியாசமாகத் தெரியாது. (சென்னையில் ட்ராம் போக்குவரத்து 1953 முதல் நிறுத்தப் பட்டு விட்டது)

கல்கத்தா நகரம் கலை, கலாச்சாரங்களுக்கும் திருவிழாக்களுக்கும் புகழ் பெற்றது. 1860 ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கல்கத்தாவை ஆண்ட நவாப் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார். மெல்ல மெல்ல இந்நகரின் வழியாகத் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப் படுத்தினர் என்பது சரித்திரம். இன்றளவும் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த குறுகலான சாலைகளுக்கிடையே ஓடும் ட்ராம்கள், மற்றும் Gothic, Barok, Roman, Oriental, Indo-islamic ஆகிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட பல கட்டிடங்கள் காலனி ஆதிக்கத்தின் உதாரணங்கள்.

2016 ஆண்டு ஐரோப்பியப் பயணத்தில் லண்டன் நகரைப் பார்த்த போது கல்கத்தா நகரத்தை லண்டனை உதாரணமாக வைத்தே அமைத்திருக்கிறார்கள் எனப் புரிந் தது. குறுகலான சாலைகள், கட்டிடக்கலை, ட்ராம், அடுக்கு மாடிப் பேருந்துகள் எனப் பலப் பல விஷயங்கள் பொதுவாக இருப்பதைக் காண முடிந்தது.

மறுநாள் காலை புறநகரை அடைந்த போது விடியும் நேரம் என்பதால் நகரின் பழமையான பகுதிகள் வழியாக வந்த போது நாங்கள் கண்ட பல காட்சிகள் இன்றளவும் நினைவில் உள்ளன. நாங்கள் டார்ஜீலிங் போகும் முன் தங்கியிருந்த ஹௌரா RMSற்குச் சென்று சேர்ந்தோம். RMS கட்டிடத்தின் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடம் வரை நடைபாதைக் கடைகளில் மிகப் பெரிய வாணலிகளில் கடுகு எண்ணெயில் மீன் பொரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியே மீன் வாடை, சாக்கடை நாற்றம், ரயில் பயணிகளின் கூட்டம், சத்தம், வழியெங்கும் நெரிசலான சாலை என மணம் குணமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து பார்க்கும் போது அதற்கு நேரெதிரான காட்சிகள் தெரிந்தன. நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை ஒட்டி ஹூக்ளி நதி, அதில் செல்லும் படகுகள் ஜன்னல் வழியாகப் பார்த்தாலே தெரியும் ஹௌரா பாலம், முன்பக்கத்தில் பிரம்மாண்டமான ரயில் நிலையம் என புகைப்பட அழகுடன் (picturesque view) இருந்தது.

ஹூக்ளி நதியில் குளிக்கும் ஆசையில் ஆண்கள் குழந்தைகளில் சிலரையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். சாக்கடைக் கழிவுகள் கலந்து நாற்றமெடுக்கும் நீர் அது என்பதை அதில் மூழ்கிய பிறகு தெரிந்து கொண்டவர்கள் அருவருப்புடன் மீண்டும் தங்கியிருந்த இடத்தின் குளியலறையில் குளித்தனர். காலை உணவிற்குப் பிறகு ஊர் சுற்றிப் பார்க்க் கிளம்பினோம். ஒவ்வொரு முறையும் சாலையைக் கடந்து செல்வதே ஒரு தனிக் கலை தான்.

முதலில் சென்ற இடம் காளி காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள காளி கோவில். ஹூக்ளி நதியைப் படகில் (ferry) கடந்து அக்கரைக்குச் சென்று அங்கிருந்து Mass rapid transit system எனப்படும் மெட்ரோ ரயிலில் காளி காட் சென்றோம். 1994லேயே கல்கத்தாவில் மெட்ரோ ரயில் இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் முதன் முதலில் இந்நகரில் தான் மெட்ரோ ரயில் விடப்பட்டது பூமிக்குக் கீழும் மேலுமாக ரயில் சென்றது அச்சமயத்தில் ஆச்சரியமான அனுபவம். 😊 (முதல் மெட்ரோ பயணம்)

ரயில் நிலையத்திலிருந்து குறுகிய சாலைகளில் நடந்து சென்று காளி கோவிலை அடைந்தோம். நவராத்திரி சமயத்தில் கல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகப் பிரசித்தம். கோவில் வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. உள்ளே வரிசையில் நின்று முக்கிய சந்நிதி என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். நம் ஊர் கோவில் சந்நிதிகளைப் போல அல்லாமல் சதுரமான ஒரு அறை. நடுவில் ஒரு பீடம். அதில் மூன்று கற்கள். அவைகள் தான் அங்கே தெய்வத் திருவுருவங்கள். அவைகளின் மேலும் செம்பருத்திப் பூக்கள். பார்க்க வித்தியாசமான காட்சி. வழியெங்கும் தண்ணீரைக் கொட்டி அதன் மேல் செம்பருத்திப் பூக்களைப் போட்டிருந்தார்கள். (பக்தர்கள்?!) பூ மேல் காலை வைக்காமல் வழுக்கி விழாமல் நடப்பதே சர்க்கஸ் போல இருந்தது. அப்படியும் சிலர் வழுக்கி விழுந்தார்கள். நிதானமாக நடந்து சென்று காளி மாதாவை வணங்கி விட்டு வெளியில் வந்தோம்.
கோவிலை சுற்றிப் பார்த்து விட்டு வெளியில் வந்து சிறிது நேரம் பந்தலுக்குக் கீழே நின்று அடுத்து எங்கே எனப் பேசி முடிவு செய்து, பழைய கல்கத்தா பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கடைக்குச் சென்று ரசகுல்லா வாங்கக் கிளம்பினோம். அங்கே செல்ல ட்ராமில் செல்ல வேண்டும். குறுகிய சாலைகளில் மக்கள் நடமாட்டத்துக்கு இடையில் வளைந்து நெளிந்து சென்றது புது அனுபவம்.(முதல் அனுபவம்) சிறிது தொலைவு நடந்து கடையைக் கண்டு பிடித்து ரசகுல்லா வாங்கி அங்கேயே உண்டோம். நண்பர்களுக்குத் தரவும் வாங்கிக் கொண்டோம். (ரசகுல்லா உண்டதும் முதல் அனுபவம்) அது தவிர வேறு ஒரு இனிப்பும் உண்டோம். பெயர் நினைவில்லை.

இன்னும் ஊரை சுற்றிப் பார்க்கவே இல்லையே! பேருந்தில் ஏறி மத்திய கல்கத்தா பகுதியை சுற்றிப் பார்த்தோம். நடுவில் பெரிய மைதானம். (Maidan) அங்கே தான் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த மைதானத்தைச் சுற்றியும் பக்கத்துத் தெருக்களிலும் நகரின் முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. Mother Teresa Sarani, Victoria memorial hall, Royal Calcutta Turf club (குதிரைப் பந்தய மைதானம்), St.Paul’s Cathedral, Vidyasagar setu (பாலம்), கல்கத்தா கிரிக்கெட் மைதானம் (Eden gardens) போன்ற முக்கியமான இடங்களை தூ…ரத்திலிருந்தே பேருந்தில் பயணம் செய்தவாறே பார்த்தோம்.

அடுத்து ஷாப்பிங் செய்ய விரும்பி ஒரு பிரசித்தி பெற்ற கடைவீதிக்குச் சென்றோம். (பெயர் நினைவில்லை) கல்கத்தா சென்றால் மறக்காமல் வாணலி, உள் பாவாடைகள் மற்றும் பெங்கால் காட்டன் புடைவைகளை அந்தக் கடைவீதியில் வாங்கலாம் விலை அனுகூலமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருந்தோம். குறுகலான வீதிகள். சாலையின் இருபுறமும் சிறு கடைகளில் சிறு குன்று போல் சேமியாவைக் குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமிய அன்பர்கள் சேமியா, பேரீச்சம் பழம் போன்றவற்றை வாங்கிச் சென்றார்கள். உள்பாவாடை, சேலைகள் எங்கே கிடைக்கும் என ஓரிடத்தில் கேட்டபோது ஒரு அன்பர் சென்னை பாரிஸ் கார்னர் தெருக்களின் சாயலில் பின் பக்கத்தில் பல சந்துகள். சந்துக்குள் சந்து, அதற்குள் ஒரு சந்து என maze மாதிரி உள்….ளே ஒரு கடையைக் காட்டினார். அதன் திண்ணையில் அமர்ந்து வியாபாரத்தைத் தொடங்கினோம். அவர்கள் சொல்லும் விலையில் பாதிக்கு பேரம் பேசுங்கள் என நண்பர்கள் கூறி இருந்ததன் அடிப்படையில் பேரம் பேசி, ஒரு வழியாக சில ஆடைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். சிலர் கல்கத்தா வாணலி வாங்கினார்கள்.

மாலை மங்கத் தொடங்கிய நேரம். இரவு 10 மணி ரயிலைப் பிடித்து சென்னைக்கு வர வேண்டும் என்பதால் ஆட்டோவில் கிளம்பினோம். கிளம்பிய சமயம் பெருமழை பெய்யத் தொடங்கியது. கல்கத்தா நகரம் ஆங்கிலேய ஆட்சிக் காலம் தொடங்கி இன்றளவும் மக்கள் தொகை அதிகம் உடைய நகரம். நிறைய தொழிற்சாலைகளும் உள்ளன என்பதால் காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. மழை நீர் கருமையாகத் (Acid rain) தரையில் விழுந்தது. ஏற்கனவே அசுத்தமாக இருந்த சாலைகள் மேலும் அழுக்காகி…இன்னும் விரிவாக விவரிக்க விரும்பவில்லை.

எங்கள் சுற்றுலாவின் இறுதிக் கட்டமாக ஹௌரா பாலத்தின் மேல் செல்ல வேண்டி இருந்தது. பாலத்தில் பயணிக்கும் நேரம் மழை மட்டுப்பட்டு சிறு தூரலாக மட்டுமே இருந்த காரணத்தால் பாலத்தின் அழகை ரசிக்க முடிந்தது. 1500 அடி நீளமும் 71 அடி அகலமும் 8 லேன்களும் கொண்ட இந்தப் பாலம் ஹூக்ளி நதியின் மேல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இதன் மறுபெயர் ரவீந்த்ர சேது.(சேது – பாலம்). இரும்பினால் அமையப் பெற்ற இந்தப் பாலம் உலகின் மிக நீளமான cantilever பாலங்களுள் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பாலத்தை ஒரு nut, bolt கூட உபயோகப் படுத்தாமல் rivetகளால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு. ஒரு நாளுக்கு 100,000 வாகனங்களும் கணக்கில்லாத பாதசாரிகளும் செல்லும் பாலம் இது. (நன்றி: கூகிள்)

தொலைவிலிருந்து பார்த்த பாலத்தை அருகில் பார்த்ததும் பயணித்ததும் இவ்வளவு பெரிய பாலமா இவ்வளவு லேன்களா என வியந்ததும் இன்றளவும் நினைவில் உள்ளது. லேசான மழைத் தூறலில் இந்த பாலத்தில் பயணித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. பின்னாட்களில் பல நாடுகளுக்கும் சென்று பல விதமான பாலங்களைக் கண்டு அவற்றின் மேல் பயணித்த அனுபவம் உண்டென்றாலும் (Golden gate bridge- San Franscisco, Tower bridge – London) முதன் முதலாகப் பயணித்த வித்தியாசமான ஹௌரா பாலம் நினைவில் நிற்பதென்னவோ உண்மை.

ஹௌரா ரயில் நிலையம் அருகில் வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து RMS சென்று பெட்டிகளை எடுத்துக் கொண்டு வழியெங்கும் சேறும் சகதியுமான சாலையில் லேசான மழைத் தூறலில் ரயில் நிலையம் சென்றோம். இரவு உணவை ரயில் நிலைய கேன்டீனில் முடித்த போது இரவு 9 மணி இருக்கும். எங்கள் ரயில் 10 மணிக்கு 21ஆவது நடைமேடையிலிருந்து கிளம்பும் என அறிவிப்புப் பலகையில் பார்த்ததும் அசந்து போனோம். தோளில் மாட்டும் பைகள், கைப்பிடி வைத்த பை, சூட்கேஸ், கட்டைப்பை என எங்கள் சாமான்களுடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு முதலாம் நடைமேடையிலிருந்து 21ஆவது நடைமேடைக்குச் சென்று எங்கள் கோச்சிற்குச் செல்ல வேண்டுமே! நடக்கும் போது ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் என் சிறு வயதில் நான் குடித்த, பின்னர் தடை செய்யப்பட்ட coca cola கல்கத்தாவில் அச்சமயம் விற்பனை செய்யப்பட்டதைப் பார்த்ததும் உடனே வாங்கிக் குடித்தோம். (சில வருடங்களுக்குப் பிறகே மற்ற நகரங்களில் தடை நீக்கப் பட்டது)

அவரவருக்கு முடிந்த அளவு பெட்டி/பைகளை எடுத்துக் கொண்டு முன்னேறும் வேளையில் நண்பர் ஒருவர் முன்னால் சென்று விட்ட தன் மனைவியைக் காணாமல் சாந்தா..சாந்தா…என அழைத்துக் கொண்டே செல்ல அவரைக் காணாமல் சாந்தையும் காணோம் பொட்டையும் காணோம் எனப் புலம்பிக் கொண்டே முன்னேறியது இன்னும் நினைவில் உள்ளது.😊 ரயில் நிலைய அழுக்குடன் மழைத் தண்ணீரும் கலந்திருக்க வழுக்கி விழுந்து எழுந்து ஒரு வழியாக ரயிலை அடைந்தோம்.

RMS தபால் கட்டுக்களிடையே தூக்கம், மண் குடுவைத் தேநீர், பச்சை மிளகாயைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி, கடுகு எண்ணையில் பொரித்த பூரி, பாசி நாற்றச் சாலைகள், தண்ணீரில்லாக் குளியலறை, ரயில் தரைப் பயணம், முதல் வகுப்பில் முன்பதிவு confirm ஆகாமலே பயணம், பூக்களில்லாப் பூங்காக்கள், சாக்கடை நாற்றம், மீன் பொரிக்கும் மணம், சேறு, சகதி என மணம் குணமாக எங்கள் சுற்றுலா நிறைவு பெற்றது. பெரிதாக எந்த வித அசம்பாவிதமும் நோய்களும் இல்லாமல் (என் மகன் இரண்டு முறை தொலைந்தது, ஒரு ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்தது தவிர) நல்ல விதமாகவே நாட்கள் சென்றன.

கூகிளும் விக்கிபீடியாவும் இல்லாத காலகட்டத்தில் குறைவான பட்ஜெட்டில் எந்த விதமான தங்குமிட முன்பதிவும் செய்யாமல் (எதுவுமே திட்டமிடாமல்?!) சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டு எப்படி அவ்வளவு தொலைவு/நாட்கள் பயணித்தோம் என நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சகித்துக் கொண்டு கடந்து முன்னேற எங்களால் அப்போது முடிந்தது. வயதும் ஒரு காரணம். இன்று நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவு எங்கள் அனைவருக்கும் பொருளாதார வசதி இருந்தாலும் மீண்டும் அனைவரும் சேர்ந்து செல்வதென்பது அசாத்தியமே!

பழமையும் புதுமையும் கலந்த அந்தப் பயண அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன்…

அனுபவங்கள் தொடரும்…

பின் குறிப்பு:
நண்பரின் கேமராவில் எடுக்கப்பட்டு எங்களுக்குத் தரப்பட்ட சில புகைப்படங்களை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளேன். புவனேஸ்வர், கல்கத்தாவில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டனவா அல்லது எடுக்கப்பட்டு எங்களுக்குத் தரப்படவில்லையா அல்லது film role தீர்ந்து விட்டதா? யாமறியோம் பராபரமே!

PC: Google and our friends