1-1-2025
ஏழாவது அமெரிக்கப்
பயணத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 1-4, 2025 தேதிகளில் மகனது குடும்பத்துடன் கலிபோர்னியா
மாகாணத்தில் உள்ள சான் டியாகோ (San Diego) நகருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
கிறிஸ்துமஸ் தின விடுமுறை முடிந்த சில நாட்களில் அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகருக்குப்
பயணித்து அங்கிருந்து மறுநாளே சான் டியாகோ பயணம் என்பதால் சற்றே நெருக்கமான பயணமாக
இது அமைந்தது.
முதல் பேரனுக்கு 1.5 வயதாக இருந்த போது (2010) லாஸ் ஏன்ஜல்ஸ் நகரை சுற்றிப் பார்த்து விட்டு இந்த நகருக்குச் சென்று Sea World என்னும் theme parkல் சென்று நாள் முழுவதும் கழித்து விட்டு வீடு திரும்பினோம். வேறெங்கும் செல்லாததால் ஊரைப் பற்றிய நினைவு எதுவும் இல்லை.
இம்முறை மீண்டும்
ஒரு குட்டிப் பேரன், 4.5 மணி நேர கார் பயணம் போன்ற காரணங்களால் இந்தப் பயணமும்
2010 பயணம் போலவே Electric rice cooker, அரிசி, பருப்பு, instant foods என ஜனவரி
1, 2025 காலை பத்து மணியளவில் அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்ற பிறகு எங்கள்
5.30 மணி நேர சாலைப் பயணம் தொடங்கியது.
நகரை நோக்கிச்
செல்லுமுன் சில அடிப்படை விவரங்களைத் தெரிந்து கொள்வோமா?
சான் டியாகோ
தென் கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் மெக்சிகோ நாட்டு எல்லையில் அமைந்துள்ள
மலைப்பாங்கான ஒரு நகரம். இந்த நகரின் பொருளாதாரம் கப்பற்படை சார்ந்த தொழில்கள், சுற்றுலா,
உற்பத்தித் துறை, வெளிநாட்டு வாணிகம் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.
இந்த நகரில் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஒரே ஓடுபாதையுடன் கூடிய மிகவும் பிசியான
விமான நிலையம் இங்குள்ளது. மெக்சிகோவுக்கு மிக அருகில் உள்ளதால் ஸ்பானிஷ் மொழி பேசும்
மக்கள் இங்கு அதிகம் வசிக்கிறார்கள்.
Bay, hills, mountains and canyons என இந்த நகரம் அமைந்துள்ளதால் இதன் பருவநிலை micro climate என அழைக்கப் படுகிறது. ஒரு பகுதியில் வெயில் மறு பகுதியில் மழை என வெவ்வேறு விதமான காலநிலை நிலவுகிறது. பொதுவாக வருடம் முழுவதும் வெயில் உள்ள நகரம் என்பதால் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த நகரின் எல்லையில் மெக்சிகோ நாட்டின் Baja California மாநிலத்தைச் சேர்ந்த Tijuana என்னும் நகரம் உள்ளது. சான் டியாகோ போல அதுவும் சுற்றுலா மற்றும் உலக வர்த்தகத்திற்குச் சிறப்புப் பெற்றது. (கப்பற்படை ஏன் இந்த நகரில் அமைந்துள்ளது என இப்போது புரிந்திருக்கும்)
சாலைப் பயணத்தின்
முதல் இரண்டு மணி நேரங்கள் அரிசோனா மாநிலம் என்பதால் வழியெங்கும் பாலைவனக் காட்சிகளே
தென்பட்டன. (வறண்ட நிலப்பகுதி, விதம் விதமான உயரமான, குட்டையான, குண்டான, உருண்டையான
கள்ளிச் செடிகள்) வழியில் Sentinel என்னும் ஊரின் rest areaவில் நின்று குட்டிப் பாப்பாவிற்கு
அங்கே சென்ற மிக நீ……ண்ட சரக்கு ரயிலை வேடிக்கை காட்டி உணவு தந்து விட்டு மீண்டும்
கிளம்பிய சமயம் லேசாகக் குளிரத் தொடங்கியது.
வழியில் மெக்சிகோ
நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள Yuma என்னும் நகரைக் கடந்து செல்ல வேண்டும். அந்தப்
பகுதியில் நாங்கள் பயணித்த சாலைக்கு இடப்புறம் பல மைல்களுக்கு இரு நாடுகளுக்கிடையேயான
எல்லையைக் குறிக்கும் வகையில் கம்பி வலை போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே நாட்டைக் கடக்க
check postகள் உள்ளன. மிக அதிக அளவில் இரு நாடுகளுக்கிடையேயான தரை வழி வியாபாரம் இந்தப்
பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது. பெருமளவில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகள்
இரு நாட்டு எல்லைக்கிடையே வந்து செல்வதைக் காண முடிந்தது.
நாங்கள் சென்ற
சமயம் day light saving எனப்படும் பகற்பொழுது குறைவான நேரம் என்பதால் மாலை 5 மணியளவில்
இருட்டத் தொடங்கியது. மெக்சிகோ நாட்டின் நகரங்களும் கிராமங்களும் இரவின் விளக்கொளியில்
பார்க்க அழகாகத் தெரிந்தன. ஊருக்குத் திரும்பும் சமயம் எல்லையில் நின்று புகைப்படம்
எடுத்துக் கொள்ள எண்ணி இருந்தேன். பாப்பாவின் jacketஐ எடுத்து வரவில்லை என்பது நினைவுக்கு
வர, வழியில் ஒரு ஊரில் நிறுத்தி புதிதாக jacket வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
இரவு 9 மணியளவில்
சான் டியாகோ நகரின் Hotel Marriotஐ அடைந்தோம். அனைவரும் தங்கும் வகையிலான பெரிய அறையை
அடைந்து கையில் எடுத்து சென்றிருந்த சப்பாத்திகளை உண்டு விட்டு மழலையில் குட்டி பேரன்
பேசிய பேச்சுக்களை ரசித்து விட்டு அன்றைய நாளை முடிவுக்குக் கொண்டு வந்தோம். Day
light saving என்பதால் பீனிக்ஸ் நகர நேரத்தை விட இந்த நகரத்தில் ஒரு மணி நேரம் பின்னால்
இருந்தது என்றாலும் மறுநாள் சுற்றிப் பார்க்க சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதால் உறங்க
சென்றோம். விடுதிக்கு மிக அருகில் freeway எனப்படும் நகரின் பிரதான சாலை இருந்தது.
மிக வேகமாகச் செல்லும் வாகனங்களின் (பெரும்பாலும் கார்களே) விர்…..விர்….ஜன்னலைத் திறக்கவே
முடியவில்லை. நகரின் பல பகுதிகளிலும் மலைத் தொடர்களே தெரிந்தன. விடுதிக்கு எதிரில்
சுற்றிலும் அரை வட்ட வடிவில் குன்றுகள் அவற்றின் மேலே வீடுகள், தெளிவாகத் தெரிந்த வானம்
(இரவில் நட்சத்திரங்களும் பகலில் நீல வானமும்) என ரம்மியமாக இருந்தது.
2-1-2025
மறுநாள் காலை ஹோட்டலில் தரப்பட்ட continental breakfast ஐ 8.30 மணியளவில் உண்டு விட்டு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். Marriot hotelலில் மிகவும் சுமாரான காலை உணவு அளிக்கப்பட்டது சற்றே வியப்பாக இருந்தது. பழத் துண்டுகள் தீர்ந்து விட்டால் மறுமுறை அவை நிரப்பப் படவில்லை. பழரசங்கள், பாலும் அப்படியே. பாப்பாவிற்கு Instant அவல் உப்புமாவை அறையிலேயே தயார் செய்து கொடுத்தோம். Rice cookerல் சாதம் வைத்து புளி சாதமாக மாற்றி பேக் செய்து எடுத்துக் கொண்டு 9 மணியளவில் ஊர் சுற்றக் கிளம்பினோம்.
Downtown எனப்படும்
நகரின் முக்கிய பகுதி San Diego Bayயில் அமைந்துள்ளது. Downtown பகுதியைக் கடந்து San
Pasqual Valleyயில் அமைந்துள்ள San Diego Zoo Safari Park என்னும் இடத்தை அடைந்தோம்.
இந்தப் உயிரியல் பூங்கா(zoo) உலகின் தண்ணீர் குறைவான பகுதிகளில் (அன்டார்டிகா தவிர)
வசிக்கும் மிருகங்கள் மற்றும் அரிய வகை விலங்கினங்களுக்கானது. இங்குள்ள botanical
gardenல் ஒரு மில்லியன் (10 லட்சம்) தாவரங்கள் உள்ளதாக அறிகிறோம்.
இந்தப் பூங்கா
ஆசியா, ஆப்பிரிக்கா (அதன் பல்வேறு பகுதிகள்), சிங்கங்கள் வசிக்கும் பகுதி எனப் பல வகையாகப்
பிரிக்கப் பட்டு மிருகங்கள்/ செடிகள் பராமரிக்கப் படுகின்றன. பூங்காவின் உள்ளே நுழைந்ததும்
கையில் வரைபடத்தை (map) எடுத்துக் கொண்டு முதலில் எங்கே செல்வது என ஆராய்ந்தோம்.
Tramல் இந்தப் பூங்காவை சுற்றிப் பார்க்க முடியும் என்பதால் அடர்ந்த செடி/மரங்களுக்கிடையில்
சிறு பாலங்களைக் கடந்து வந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். இந்தப் பூங்கா பல
ஏக்கர் பரப்பளவில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடந்தும் ஜீப்களிலும் ட்ராமிலும்
செல்லலாம். இரவில் தங்கி camp செய்யும் வசதியும் உண்டு. சக்கர நாற்காலி, சிறு சைக்கிள்,
குழந்தைகளை அழைத்துச் செல்லும் stroller ஆகியவற்றையும் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
நடந்து சென்ற வழியில் Nairobi village, Walkabout Australia, African plains,
Asian plains என ஒவ்வொரு பகுதிக்கும் பெயரிடப்பட்டு அந்த நிலப்பகுதி தொடர்பான விலங்கினங்கள்/பறவைகள்
பார்வைக்குக் கிடைத்தன.
அன்றைய தினம் விடுமுறை என்பதால் வரிசையில் 40 நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு டிராமில் ஏறினோம். பொறுமையாக வண்டி கிளம்பியது. முதலில் சிறு குளம் அதில் பல வாத்துக்கள் என ஆரம்பித்து ஒட்டக சிவிங்கி, ஒட்டகம், யானை, காட்டெருமை, மான் எனப் பல மிருகங்களையும் அருகில் சென்று பார்த்து விட்டுத் திரும்பினோம். வழியில் ஆங்காங்கே ஜீப்களும் பேட்டரி கார்களும் மிருகங்களுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தன. நீர் குறைந்த (arid regions) பகுதியில் உள்ள விலங்குகளுக்கான சரணாலயம் என்று நாம் முன்பே அறிந்திருந்தாலும் வறண்ட பகுதியில் மிருகங்களைக் கண்ட போது சற்றே வருத்தமாக/ஏமாற்றமாக இருந்தது. இங்குள்ள சிறு குளங்கள், நீர் நிலைகளில் உள்ள நீர் மறுசுழற்சி(recycling) செய்யப்பட்டு செடிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது.
அந்தப் பகுதிக்கு
அருகில் ஒரு hot air balloon இருந்ததைக் கண்டதும் அதில் செல்ல முடிவு செய்தோம்.
Hot air balloon பயணம் இன்னும் என் bucket listல் உள்ள ஒன்று. வழக்கமாகச் செல்லும்
பலூன் போல அல்லாமல் மோட்டாரின் உதவியுடன் மேலெழும்பிச் செல்லும் வகையில் இருந்தது.
வரிசையில் காத்திருந்து (கூட்டமில்லை) பலூனில் மேலேறி உயரே சென்று பூங்காவினை பறவைப்
பார்வையில் கண்டோம். ஒரு பகுதி பச்சைப் பசுமையாக இருந்தாலும் மறுபகுதி வறண்டு ஏறக்குறைய
பாலைவனம் போலக் காட்சியளிக்கிறது.
அந்தப் பூங்காவிலேயே
கையில் எடுத்துச் சென்ற உணவினை உண்ட பிறகு 45 நிமிட நேரப் பயண தூரத்தில் உள்ள
Balboa Park என்னும் இடத்தை நோக்கிப் பயணித்தோம். மதிய நேரமாக இருந்தாலும் ஜனவரி மாதம்
என்பதால் வெப்பத்தின் தாக்கம் இல்லை. இந்த Balboa Park18 பூங்காக்கள், 60+ மைல்கள்
நடக்கும் பாதை (walking trail), அருங்காட்சியகங்கள் (museums), performing art
venues, recreational resources மற்றும் San Diego Zoo வை உள்ளடக்கியது. 1200 ஏக்கர்
பரப்பளவிலான இங்கே Lawn bowling, Archery, Tennis, Golf, Swimming, Disc golf ஆகியவற்றுக்கான
விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளிகள், சிறு மேட்டுப் பகுதிகள் போன்றவையும்
உள்ளன. மொத்தத்தில் இந்தப் பூங்கா இயற்கை, கலை, கலாச்சாரம், மானுடவியல், பொழுதுபோக்கு
அம்சங்கள் ஆகிய அனைத்தும் கலந்த ஓரிடம் எனக் கூறலாம்.
எங்கெங்கும்
மக்கள் வெள்ளம் என்பதை விட எங்கெங்கும் கார்களின் அணிவகுப்பு. பூங்காவிற்கு அருகில்
காரை நிறுத்த இடமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து சற்று தொலைவில் நிறுத்தி விட்டு நடந்து
உள்ளே சென்றோம். பூங்கா ஆரம்பத்திலேயெ Japanese garden தென்பட்டது. உள்ளே நுழைந்ததும்
வரலாற்றை நினைவு படுத்தும் வண்ணம் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காண முடிகிறது. ஒரு சாலையில்
வரிசையாக இரு புறமும் அருங்காட்சியகங்கள் மற்றும் கலையரங்குகள் தென்பட, ரயில் மியூசியம்
செல்லலாம் என முடிவு செய்து உள்ளே சென்றோம். (ஓரே நாளில் பல இடங்களை சுற்றிப் பார்த்தால்
சலுகை விலை அனுமதி சீட்டுக்கள் கிடைக்கும்) தனித் தனியாக ஒவ்வொரு இடத்திற்கும் அனுமதி
சீட்டு தேவையில்லை. அருங்காட்சியகங்களைக் காண்பது எனக்கு மிகவும் பிடித்தமானது என்றாலும்
குட்டிப் பேரனுக்காக 17 அருங்காட்சியகங்களில் ஒன்றை மட்டும் பார்த்தோம். (இந்தப் பூங்காவை
சுற்றிப் பார்க்க ½ நாளெல்லாம் போதாது)
ரயில் அருங்காட்சியகத்தில் வட அமெரிக்க ரயில் வரலாற்றை தத்ரூபமாகக் காட்டும் வகையில் ஒவ்வொரு பழமையான ரயிலும் சென்ற பாதையை 3D மாடலாக வடிவமைத்து ரயில் மலை, பாலம், குகை, கிராமம் எனச் செல்லும் வகையில் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பொம்மை ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. பேரனை விட நான் அதிகம் ரசித்தேன். அங்கிருந்து கிளம்பி மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும் முன்பாக குட்டிப் பேரனுக்காக குட்டி ரயிலில் பயணிக்க வரிசையில் காத்திருந்தோம். நானும் என் கணவரும் வேடிக்கை மட்டுமே. பயணியர் செல்லும் ரயில்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இல்லையென்பதால் சிறுவர்களுக்கு ரயில் என்றாலே ஆச்சரியம் தான். 5 கிமீ வேகத்தில் செல்லும் பொம்மை ரயிலில் செல்ல கூட்டம் அலைமோதும்.😊 டிக்கெட்டுகளும் அசாத்திய விலைக்கு விற்கப்படுகின்றன.
அடுத்ததாக மிருகக்
காட்சி சாலைக்குச் சென்றோம். Safari Park zoo போல அல்லாமல் இங்கே அந்தந்த மிருகத்திற்கான
வசிப்பிடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எங்கெங்கும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்
எனத் தென்பட்டன. கோலா கரடி உட்பட பல மிருகங்கள் இருந்தன. பார்க்கும் இடமெல்லாம் உணவகங்கள்
தென்பட்டன. (மக்கள் உணவு உண்ணவும் பானங்களைக் குடிக்கவும் நேரம் காலம் பார்ப்பதில்லை)
இந்த மிருகக் காட்சி சாலையும் அதிகப் பரப்பளவைக் கொண்டது. நடந்தோ மாடி பேருந்திலோ சென்று
மிருகங்களைக் காணலாம். நாங்கள் பேருந்திற்காகக் காத்திருந்து முதலாம் தளத்தில் அமர்ந்தோம்.
வரிசையாகப் பேருந்துகள் மக்களை அழைத்துச் சென்று திரும்பி வந்து கொண்டே இருந்தன. சற்றே
மேடான பகுதியில் இந்த பேருந்து சென்றது. ஒவ்வொரு மிருகத்தின் அருகிலும் நிறுத்தி அவை
பற்றிய விளக்கம் கூறி மக்கள் பார்த்து ரசித்ததும் மீண்டும் பயணம் தொடங்கியது.
Day light
saving மாதம் என்பதால் மாலை 4.30க்கே இருட்டத் தொடங்கியது. கடைகள் மற்றும் பூங்காவில்
வண்ண விளக்குகள் எரியத் தொடங்கின. 40 நிமிட நேரம் சுற்றிப் பார்த்த பிறகு பேருந்து
கிளம்பிய இடத்திற்கு அருகில் வந்து நின்றது. அருகில் இருந்த கடையில் அனைவரும்
coffee, hot chocolate என வாங்கிக் குடித்த பிறகு குட்டிப் பேரன் பல சிறுவர்கள் நடனம்
ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு தானும் ஆடினார். இச்சமயம் நன்றாக இருட்டி விட்டது. பூங்காவின்
மற்றொரு பகுதியில் cable carல் சென்று பூங்காவின் மொத்தப் பரப்பளவையும் பார்க்கும்
வசதி இருப்பதைக் கண்டு அங்கு சென்று cable carல் ஏறினோம். வழக்கம் போல் அவசரமாக இரண்டிரண்டு
பேர் ஒரு காரில் ஏறி (கிட்டத்தட்ட டவுன் பஸ்ஸில் ரன்னிங்கில் ஏறுவது போல) பயணித்தோம்.
மேலிருந்து பறவைப் பார்வையில் San Diego நகரின் இரவுக் காட்சிகளைக் காண முடிந்தது.
இந்த ஊரின் விமான நிலையம் ஒரே ஒரு runway உள்ளதால் எப்போதும் விமானங்கள் ஏறி இறங்கிக்
கொண்டே இருந்தன. San Diego Bay அருகில் downtown, மற்றொரு புறம் விமான நிலையம், கீழே
மிருகக் காட்சி சாலை, பூங்காவின் வண்ண விளக்குகள் என…திருவிழாக் கோலத்தைக் காண முடிந்தது.
பயணம் முடிந்ததும்
கீழிறங்கி சிறிது தொலைவு நடந்து பூங்காவின் முன் பகுதிக்கு வந்த போது முன்பு சென்ற
சிறு ரயில் தற்போது வண்ண விளக்குகளுடன் சென்று கொண்டிருந்ததைக் கண்டதும் குட்டிப் பேரனுக்கு
மிக்க மகிழ்ச்சி. மகன் நடந்து சென்று காரை எடுத்து வரும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
திரும்பும் வழியில் ஒரு இந்திய உணவகத்தில் தோசை, இட்லி என வாங்கி இரவு உணவை முடித்துக்
கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.
3-1-2025
அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்ற பிறகு எங்கள் சுற்றுலாவைத் தொடங்குவதாக முடிவு செய்தோம். சுறுசுறுப்பாக எழுந்து தயாராகி அன்றைய பகல் உணவை தயார் செய்து எடுத்து வைத்தோம். நான் என் மகன் கணவர் மூவரும் 7.30க்கே காலை உணவிற்குச் சென்றதால் எல்லா உணவுகளும் இருந்தன. Bread toast, chocolate milk, juice, fruits தான் எங்கள் உணவு. மருமகளும் குட்டியும் திடீர் உப்புமா, Bread toastஐ உண்டு விட்டு கோவிலுக்குச் சென்று அங்கு பொங்கல், பாயசம் என கிடைத்த பிரசாதத்தை பாப்பாவிற்கு ஊட்டி விட்ட பிறகு ஊர் சுற்றக் கிளம்பினோம்.
முதலில் San Diego Bayயிலிருந்து கிளம்பும் City Tours Cruise படகில் பயணித்து திமிங்கிலங்களைக் காணச் செல்வதாக ஏற்பாடு. காலை 9.30 மணிக்குக் கிளம்பும் படகில் செல்ல வேண்டும். அவசரமாக சாலைக்கு எதிரில் காரை நிறுத்தி விட்டு ஓட்டமாக ஓடி ஏறவும் படகு கிளம்பவும் சரியாக இருந்தது. படகின் பின் புறத்தில் திறந்த வெளியில் நின்ற படி பயணத்தை ஆரம்பித்த போது skyline எனப்படும் உயரமான கட்டிடங்களடங்கிய நகர்ப்புறம் நேரெதிரிலும் வலப்புறம் ஒரு மிகப் பெரிய பாலமும் இன்னும் சற்று தூரத்தில் கப்பல் கட்டும் இடமும், ராணுவக் கப்பல்கள் நிற்கும் இடமும் இடப்புறத்தில் விமான நிலையத்தில் ஏறி இறங்கும் விமானங்களும் கண்ணில் பனிமூட்டத்திற்கிடையே தெரிய எங்கள் பயணம் தொடங்கியது. சாலையை ஒட்டி ஒரு பிரம்மாண்டமான ராணுவக் கப்பல் அதன் மேல் தளத்தில் சிறு விமானங்கள் என ஒரு வித்தியாசமான காட்சியும் துறைமுகத்தை ஒட்டியே தெரிந்தது. (குட்டிப் பேரனின் பஸ் மேலே கார், டிரக் மேலே கார் பாட்டு போல கப்பல் மேலே விமானம்)
இந்தத் துறைமுகம்
இயற்கையாக அமைந்துள்ளது. மெக்சிகோ எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் ராணுவம், சுற்றுலா,
பொருளாதாரம் ஆகியவற்றிற்குக் கைகொடுக்கும் ஒன்றாக உள்ளது. இந்தத் துறைமுகத்திலிருந்து
உல்லாசக் கப்பல்கள் உலகின் பல இடங்களுக்கும் செல்கின்றன. தற்சமயம் ஏறக்குறைய 50 கப்பல்களே
செல்வதாகக் கூறினார்கள். நாங்கள் படகில் ஏறிய இடத்திற்கு அருகிலேயே சில உல்லாசக் கப்பல்களைக்
காண முடிந்தது. Boating, fishing, kayaking, whale watching மற்றும் பல நீர் சார்ந்த
செயல்பாடுகளும் இங்கே நடைபெறுகின்றன. இந்தத் துறைமுகத்தின் ஒரு பகுதி உலகின் அரிய உயிரினங்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் இடமும் துறைமுகப் பகுதியில் உள்ளது.
படகு முன்னேறி செல்லச் செல்ல பனிமூட்டம் குறைந்து சுற்றிலும் தென்பட்ட காட்சிகளைக் காண முடிந்தது. முதல் தளத்தில் அமர்ந்து திமிங்கிலங்கள் கண்ணில் படுகின்றனவா எனப் பார்த்துக் கொண்டே சென்றோம். கடுமையான குளிர் காற்றடித்ததால் சிறிது நேரத்திற்குப் பிறகு கீழடுக்கில் சென்றமர்ந்தோம். உணவுப் பொருட்களும் குளிர்பானங்களும் அங்கேயே விற்பனை செய்யப் படுகின்றன. இந்தப் படகுப் பயணம் commentaryயுடன் கூடியது என்பதால் வழியில் தென்படும் இடங்கள்/காட்சிகளின் வர்ணனைகளைக் கேட்டுக் கொண்டே செல்ல முடிகிறது. ஏறக்குறைய ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு படகின் இரண்டு பக்கமும் நூற்றுக் கணக்கான டால்பின்கள் துள்ளிக் குதித்தபடி செல்வதைக் கண்டோம். மேலும் பல நிமிடங்கள் திமிங்கிலம் தென்படுமா எனப் பயணித்து விட்டு ஊரை நோக்கித் திரும்பினோம். திமிங்கிலங்கள் சில சமயம் மட்டுமே கண்ணில் தென்படுகின்றன. நம்முடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்து என வைத்துக் கொள்ளலாம்.
நகரை நோக்கிய
பயணம் சற்றே அலுப்பாக இருந்தது. துறைமுகத்தின் வலப்புறத்தில் The Coronado bridge என்னும்
பெயருடைய 2.12 மைல் நீளப் பாலம் San Diego Bay வை Coronado தீவுடன் இணைக்கும் பாலமாகும்.
வில்லைப் போல வளைந்து நிற்கும் இந்தப் பாலம் 200 அடி உயர ராணுவக் கப்பல்கள் கடந்து
செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மக்கள் இருபுறமும் செல்ல வசதியான இந்தப்
பாலத்தில் ஓட்டப் பந்தயம், சைக்கிள் பந்தயம் போன்றவைகளும் நடைபெறும். துறைமுகத்தை நெருங்கும்
சமயம் வெயிலாக இருந்ததால் kayaking, jet boat போன்ற செயல்பாடுகள் அதிகம் தென்பட்டன.
ஒரு வழியாக துறைமுகத்தை அடைந்து படகை விட்டுக் கீழிறங்கினோம். Whale watching செய்யலாம்
எனபது தான் இந்த படகுப் பயணத்தின் நோக்கம். Whaleஐ பார்க்க முடியாவிட்டால் இன்று எங்களுடன்
பயணம் செய்தவர்கள் மீண்டும் இலவசமாக நவம்பர் 2025க்குள் மீண்டும் பயணிக்கலாம் என முன்பே
அறிவிக்கப்பட்டபடி கீழிறங்கியதும் எங்களுக்கான Redemption ticketsஐ கையில் கொடுத்து
அனுப்பினார்கள். (எத்தனை பேர் அதை பயன்படுத்துவார்கள்?)
வெளியில் வந்து
வலப்புறம் திரும்பி சில நிமிட நடையில் நாம் படகிலிருந்து கண்ட USS Midway Naval
Warship Museum. 1945 முதல் 1992 முடிய ராணுவ சேவையாற்றிய இந்த பிரம்மாண்டமான கப்பல்
போரிலும் அமைதிப் பணிகளிலும் ஈடுபட்டது. ஏறக்குறைய 2,00,000 வீரர்கள் இதில் பணியாற்றியுள்ளார்கள்
எனத் தகவல். 2004ஆம் ஆண்டு இந்தக் கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. நாமே
audio tour மூலம் கப்பலின் பல பகுதிகளையும் காணலாம். மேல் தளத்திற்குச் செல்ல lift
வசதி உள்ளது. அந்தத் தளத்தில் போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள்
மற்றும் பல விதமான விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள். https://en.wikipedia.org/wiki/USS_Midway_Museum எத்தனை விமானங்கள் அங்கே உள்ளன என்பதை இந்த linkஐ அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.
தரைத் தளத்தில் ஓய்வு அறைகள், அலுவலர்கள் தங்குமிடம், எஞ்சின் அறை, விமானக் கட்டுப்பாட்டு அறை இப்படி 60 பகுதிகள் உள்ளன. இங்கு ராணுவ வீரர்களின் ஓய்வு விழா, புதிதாக ஆள் சேர்க்கை, ராணுவ மரியாதை போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவர்கள் வருடத்திற்கு 5,000 பேர் இரவில் தங்கி இந்தக் கப்பலைப் பற்றி அறியும் வசதியும் உண்டு. கப்பலின் மேல் தளத்திலிருந்து பார்க்கையில் படகிலிருந்து தெரிந்த அனைத்தும் நன்றாக பறவைப் பார்வையில் தெரிந்தது. கப்பலின் வலப்புறத்தில் ஒரு ராணுவ வீரர் தன் காதலி/மனைவி?! யை அணைத்தபடி நிற்கும் மிக உயரமான சிலை உள்ளது. சிறுவர்களும் பெரியவர்களும் விமானங்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்தும் கொள்ளலாம். கீழ்த் தளத்தில் flight simulator ஒன்றும் உண்டு.
இந்தக் கப்பலை
சுற்றிப் பார்த்து விட்டு கார் நிறுத்தியிருந்த பகுதிக்கு வந்து எங்கள் மதிய உணவை உண்டதும்
விடுதியை நோக்கிக் கிளம்பினோம். அன்றைய மாலையில் மீண்டும் முடிந்தால் Balboa Park செல்லலாம்
என முடிவு செய்தோம். மறுநாள் காலை பீனிக்ஸ் கிளம்ப வேண்டும் என்பதால் இரவு உணவிற்கு
மட்டும் வெளியில் சென்றோம். சுவையான இந்திய உணவுகளை உண்டு விட்டு பெட்டிகளை அடுக்கி
வைத்து விட்டு உறங்கச் சென்றோம்.
4/1/2025
காலை உணவினை
முடித்துக் கொண்டு வழியில் Palm Spring என்னும் ஊரினைப் பார்த்து விட்டு பீனிக்ஸ் செல்வதாக
முடிவு செய்யப்பட்டது. இந்த நகரம் தெற்கு கலிபோர்னியாப் பாலைவனப் பகுதியான Coachella Valleyயில்
அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் உள்ள இந்த ஊருக்கு
நாங்கள் சாலை மார்க்கமாகப் பயணிக்கையில் பலவிதமான காட்சிகளையும் காண முடிந்தது. குறிப்பாக
Fedexன் மிகப் பெரிய storage unit. பலவிதமான பாலைவனக் காட்சிகளும் நவீனக் கட்டிடங்களும்
உள்ள இந்த ஊரில் ஹாலிவுட் நடிகர்கள் தங்கி செல்வது கூடுதல் கவர்ச்சி.
இந்த ஊரின் மற்றொரு
சிறப்பம்சம் Aerial tramway எனப்படும் 360 டிகிரி சுழன்றபடி மேலேறும் cable car. ஏறக்குறைய
2.5 மைல் மலை உச்சி நோக்கிய பயணம். (உலகின் மிகப் பெரிய rotating cable car எனக் கூறப்பட்டாலும்
இதே போன்ற ஒன்றில் ஸ்விட்சர்லாந்து சென்ற போது Mr.Titlis உச்சிக்கு சென்றோம்) சான்
டியாகோ நகரிலிருந்து ஏறக்குறைய 3 மணி நேரப் பயணத்தில் இந்த ஊரை அடைந்தோம். ஊரை விட்டுத்
தனித்து உள்ள இந்த இடத்திற்குச் செல்லும் சாலை திரும்பும் இடத்தில் Waiting time
2-3 hrs என display board கூறியது. கார்களை எங்கே நிறுத்த வேண்டும் என checkpostல்
கூறப்பட்ட படி நிறுத்தி விட்டு அங்கிருந்து பயணிகளை cable car கிளம்பும் இடத்திற்கு
அழைத்துச் செல்லும் பேருந்துக்கான வரிசையில் காத்திருந்து சென்றோம். அனுமதி சீட்டுக்களை
வாங்கிய பிறகு மீண்டும் காத்திருப்பு. மதியம் 1.30 க்கு தான் எங்கள் முறை என்பதால்
அருகில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். (2.30 மணி நேரங்கள்
காத்திருந்தோம்)
மதிய உணவை முடித்துக் கொண்டு குட்டிப் பேரனின் அட்டகாசங்களை ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு எங்கள் முறை வந்ததும் cable carல் ஏறிக் கிளம்பினோம். இந்த cable car 80 பேர் நின்று கொண்டே பயணிக்கும் வசதி உடையது. மிக மெதுவாக 360 டிகிரி சுழன்று கொண்டே மேலேறிய போது Chino Canyonனின் அழகினையும், ஊரையும், நீண்டு செல்லும் சாலைகளையும் காண முடிந்தது. 8516 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் பயணம் முடிவடையும் இடத்தில் Mt. San Jacinto State Park உள்ளது. (மலையின் பெயர் என்னவென்று சொல்ல வேண்டுமா?)
Mountain
stationல் இரண்டு உணவகங்கள், observation decks, natural history museum, two
documentary theatres, gift shop எனப் பல வசதிகளும் உள்ளன. Station உள்ளே இருக்கும்
படிக்கட்டுகளில் இறங்கி வெளியே சென்றால் அடர்த்தியான மரங்களடர்ந்த பகுதி. அரிய வகை
பறவைகளும் மிருகங்களும் உள்ள இந்தப் பகுதியில் 50 மைல் நீளத்திற்கு hiking trails உள்ளன.
சில நிமிடங்கள் அந்தப் பகுதியை வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் மேலேறி observation
deckல் நின்று வேடிக்கை பார்த்தோம். மலையின் மறுபக்கம் பாலைவனக் காட்சிகள் தெரிகின்றன.
சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் கேபிள் காரில் கீழிறங்கினோம். இச்சமயம்
சூரியம் மறையத் தொடங்கியதால் நகரின் இரவுக் காட்சிகள் தென்பட்டன. பேருந்தில் ஏறிக்
கீழிறங்கி வந்து காரில் வீட்டை நோக்கிய பயணத்தை மாலை 5.30 மணியளவில் ஆரம்பித்தோம்.
மலை மேலிருந்து
இறங்க பேருந்துக்குக் காத்திருந்த நேரத்தில் பலர் கார்களில் இரவு camping செய்வதற்கான
உபகரணங்களுடன் வந்திறங்கினார்கள். Mt.
San Jacinto State Parkல் தங்க முன் அனுமதி வாங்க வேண்டும். பேருந்து நின்றதும் மக்கள்
வரிசையில் நின்றிருந்தாலும் முண்டியடித்து ஏறினார்கள். வளைந்து நெளிந்து செல்லும் சாலைப்
பயணம் சற்றே சிரமமாக இருந்தது. காரிலிருந்து ஊருக்குச் செல்லும் முக்கிய சாலை வரை மேடும்
பள்ளமுமாக வளைந்து நெளிந்த சாலைகளே. கூட்டு ரோட்டில் Display board waiting time 3
hours எனக் காட்டியது. Freeway எனப்படும் national highwayல் மூன்று லேன்கள் இருந்தாலும்
வழக்கம்போல இல்லாமல் குறுகலாக இருந்தன. எங்கள் காருக்கு மிக நெருக்கமாக டிரக்குகள்
கடந்து சென்றன. இரவு ஒம்பது மணியளவில் பீனிக்ஸ் நகரில் உள்ள வீட்டை வந்தடைந்தோம்.
திரும்பும் வழியில் மெக்சிகோ எல்லையில் புகைப்படம் எடுக்கலாம் என்ற என் ஆசை நிறைவேறவில்லை ☹அன்றே செய் அதை நன்றே செய் என்பது இதற்கு மிகவும் பொருந்தும்.
வித்தியாசமான
நில அமைப்புக்கள், தாவர விலங்கின வகைகள், பல வகை காலநிலைகள், நகருக்குள் விமான நிலையம்,
அடர்ந்த மரங்களடங்கிய பகுதிகள் என அமைந்துள்ள சான் டியாகோ நகருக்குச் சென்றதும் வித்தியாசமான
பயணமே.
Tramல
போய் giraffe பாத்தோமே!
No comments:
Post a Comment