Saturday, 10 July 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-6] : Paris, Disneyland Paris, Seine Night Cruise

April 10 & 11, 2016

ஐபல் கோபுரத்தைக் கண்ட நிறைவுடன் அடுத்து Les Invalides எனப்படும் பிரசித்தி பெற்ற மற்றொரு நினைவுச் சின்னத்தை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஐபல் கோபுரத்தின் மேலிருந்து பார்த்தோமே பளபளவென ஜொலித்த படி தெரிந்த ஒரு Dome. அந்த இடம் தான் இந்த Les Invalides.


ஏழாவது arrondissementல் அமைந்துள்ள இந்த மிகப் பெரிய கட்டிடம் பிரான்சு நாட்டின் ராணுவம் மற்றும் அதன் வரலாறு சம்மந்தப்பட்டது.
இந்த Les Invalides என்னும் கட்டிடத்தில் போரில் பங்கு பெற்று உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கான (War veterans) ஓய்வகம் (Retirement home), மூன்று ராணுவ அருங்காட்சியகங்கள், ஒரு Church மற்றும் Chapel தவிர ராணுவ மருத்துவமனையும் உள்ளன. [Invalides என்றால் Disabled/ஊனமுற்றவர்கள் என்று பொருள் என்பதை நாம் அறிவோம். இங்கே போரில் ஊனமுற்றவர்கள் என பொருள் கொள்ள வேண்டும்.]

[Main difference between a Church and a Chapel is that Chapel is not an independent structure or building, it is attached to another building]

பதினான்காம் லூயி மன்னனால் போரில் காயமுற்ற வீரர்களுக்காகவும், வயதான உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் தங்குவதற்காகவும் 1670ல் கட்டப்பட்டது இந்த கட்டிடம். இதன் முன் பகுதி சீன் நதியை நோக்கிய திசையில் அலெக்சாண்டர் பாலத்தை ஒத்துக் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் கட்டப் பட்ட இந்த கட்டிடம் தற்சமயம் ராணுவ அணிவகுப்புகள் அதன் உள்ளேயே நடைபெறும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் விரிவாக்கப் பட்டுள்ளது. [ஐபல் கோபுரம் நதிக்கு ஒரு கரையிலும் இந்த கட்டிடம் மறுகரையிலும் அமைந்துள்ளன.]
பிள்ளையார் கோவிலை சுற்றுவது போல எங்கள் பேருந்து சுற்றி வந்து நாம் ஐபல் கோபுரத்திலிருந்து கண்ட தேவாலயத்தின் முன்புறமாக நின்றது. மிகப் பெரிய அந்த கட்டிடத்தை சுற்றி வந்த சமயத்தில் அதன் museeக்கள், தேவாலயம், கட்டிட அமைப்பு மற்றும் பல விவரங்களை வழிகாட்டி கூறிக் கொண்டே வந்தார்.

Hardouin-Mansart's chapel என்பது நாங்கள் சென்றிறங்கிய பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் பெயர். 107 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த Dome. அந்த கட்டிடத்தின் சிறப்பினை உயர்த்திக் காட்டும் வகையில் அமைந்து பாரிஸ் நகரின் மிக உயரமான தேவாலயம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. French Baroque architecture என்னும் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது. [பிரம்மாண்டமான ஆடம்பரமான அலங்காரங்களை தவிர்த்து, தோட்டத்துடன் கூடிய அமைப்பு என கொள்ளலாம்.]
இந்த குவிமாடம் (Dome) தங்க இலைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இதற்கு 12.65 கிலோ தங்கம் தேவைப்படுகிறது ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் புதுப்பித்து வைப்பதால் இந்த மாடம் வெய்யில் பட்டு ஜொலித்தது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் நினைவுச் சின்னங்களை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் செலவு செய்ய தயங்குவதில்லை என்று முன்பே குறிப்பிட்டேன்.
இந்த குவிமாடத்தின் கீழே தான் முதலாம் நெப்போலிய மன்னனின் உடல் அடக்கம் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 1821 ஆம் ஆண்டு செயின்ட் ஹெலெனா என்னும் தீவில் இறந்தார் என்றாலும் அவரது உடல் பாதுகாக்கப் பட்டு பிரான்சுக்கு கொண்டு வரப்பட்டு 1861 ஆம் ஆண்டு இந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் பல ராணுவ வீரர்களின் உடல்களும் இங்கே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
எங்கள் பேருந்து Musee de Rodin என்னும் பெயர்ப் பலகைக்கு மிக அருகில் நிறுத்தப் பட்டது. வயதான உடல் ஊனமுற்ற வீரர்களுக்கான ஓய்வு இல்லம், அவர்களுக்கான மருத்துவமனை ஆகியவை இந்த பகுதியில் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு முன் பகுதியில் மட்டும் தான் அனுமதி. நோயாளிகள் பலரும் அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பகுதியில் ராணுவ அணிவகுப்பு பயிற்சி நடந்து கொண்டிருந்தது.
யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரவு உணவிற்காக இந்திய உணவகத்திற்கு சென்றோம். 10 ஆவது arrondissementல் நம் ஊர் சரவண பவனைக் கண்டதும் எங்களுடன் பயணித்த அனைவரும் அங்கே சென்று இரவு உணவு உண்ணலாம் என்று கூறத் தொடங்கினார்கள். [ரசம் சோறு சாப்பிட வேண்டும் சப்பாத்தியை சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு]
வழிகாட்டி டில்லியை சேர்ந்தவர் என்று முன்பே கூறியிருந்தேன். பஞ்சாபி உணவகங்களில் தான் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று அவரிடம் கேட்ட போது என்ன பதில் சொன்னாரோ அதே போல Don’t worry I will arrange to get South Indian dishes very soon என்றார். ஒவ்வொரு முறை அந்த பகுதியைக் கடக்கும் போதும் கூச்சல் எழுப்பினார்கள் நம் மக்கள்.
இந்த உணவகத்திற்கு செல்ல மீண்டும் அலெக்சாண்டர் பாலத்தை கடந்தோம். அது Champ de Elysees avenue வை இணைக்கும் பாலம் என்பதை அறிவோம். மீண்டும் வந்த வழியே அனைத்து palais, museeக்களையும் ஐபல் கோபுரத்தையும் இரவு நேரத்தில் கண்டபடியே [கண்கொள்ளாக் காட்சி] Arch de Triompe ஐக் கடந்து நகரின் பரபரப்பு இல்லாத இடத்தில் அமைந்த அந்த உணவகத்திற்கு சென்று இரவு உணவை முடித்துக் கொண்டோம்.
பாரிஸின் இரவு நேர வாழ்க்கை மிகப் பிரசித்தம். தூங்கா நகரம் என சொல்லலாம். Champ de Elysees avenue சூதாட்ட விடுதிகளுக்கும் காபரே நடன விடுதிகளுக்கும் பிரசித்தி பெற்றது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
Lido De Paris என்னும் விடுதிக்கு எதிரில் பேருந்து நிறுத்தப்பட்டு யார் அங்கே செல்ல விரும்புகிறார்களோ செல்லலாம் நள்ளிரவில் பேருந்து மீண்டும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து செல்லும் என்று கூறப்பட்டது. உள்ளே செல்ல கட்டணம் ஒருவருக்கு110 யூரோக்கள் Lido show என்றழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு கதையை தேர்ந்தெடுத்து இசை நடன வடிவில் ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள். அங்கே என்ன மாதிரியான காட்சியை காணப்
போகிறோம் என்றே அறியாமல் பலரும் சென்றார்கள் என்பதை மறுநாள் தான் அறிந்தேன். இரண்டு மணி நேரம் நடை பெறும் இந்த நடன நிகழ்ச்சியில் இலவசமாக Champagne வழங்கப்படும் என்றது விளம்பரம்.

காபரே நடனம் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் அவரவர் மனைவியை விடுதிக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இரவு நீண்ட நேரம் பணம் செலவழித்து, கண் விழித்திருந்து, பயண நேரத்தில் உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற என் கணவரின் கருத்துப் படி நாங்கள் அங்கே செல்லவில்லை. அச்சமயம் இரவு மணி 10. நள்ளிரவில் தான் show ஆரம்பம் என்றாலும் மற்றவர்கள் விடுதிக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களை இறக்கி விட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

மீண்டும் Champ de Elysees avenueல் பயணித்து Arch de Triompe ஐக் கடந்து சற்று தொலைவு சென்றதும் ஓட்டுனர் மைக்கில் அன்பர்களே லிடோ ஷோவிற்கு சென்றவர்களின் அனுமதி சீட்டுக்கான பணப்பையை வழிகாட்டி பேருந்திலேயே விட்டு விட்டதால் நாம் மீண்டும் அங்கே செல்கிறோம் என்றார். மீண்டும் வந்த மார்க்கத்திலேயே திரும்ப சென்று ஐபல் கோபுரம் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதை கண் குளிர மீண்டும் மீண்டும் கண்டு மகிழ்ந்து விட்டு நகருக்கு தெற்கில் 13 கிலோமீட்டர் தொலைவில் Orly விமான நிலையத்தின் நேரெதிரில் அமைந்திருக்கும் Hilton விடுதியை அடைந்தோம். எங்களுக்கு சலிப்பு தட்டி விடக் கூடாது என்ற

நோக்கத்தில் எங்கள் ஓட்டுனர் Hello This is Martin We are now going for the City Tour of Paris என விளையாட்டாக மைக்கில் பேசிக் கொண்டு வந்தார். [ஏற்கனவே 4-5 முறை City Tour சென்று விட்டோம் என்றாலும் சலிப்பு ஏற்படவில்லை.]

பாரிஸில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள், இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள், ஒரு Airshow விமான நிலையம் என மொத்தம் ஐந்து விமான நிலையங்கள் உள்ளன. ORLY விமான நிலையத்தின் நேரெதிரில் எங்கள் விடுதி.என்பதால் விமானத்தில் செல்பவர்கள், இடைப்பட்ட நேரத்தில் [lay over] தங்குபவர்கள், விமான ஓட்டிகள், விமானப் பணிப்பெண்கள் என பலரும் அங்கே தங்கிச் செல்கிறார்கள். விதம் விதமான சீருடைகளில் அவர்கள் ஆங்காங்கே தென்பட்டது விமான நிலையத்தின் உள்ளே இருப்பது போன்ற தோற்றத்தைத் தந்தது.

வெளிநாடுகளில் எங்கும் எப்போதும் மிக மெல்லிய குரலில் அடுத்தவருக்கு தொல்லை தராத வகையில் தான் பேசுவார்கள். அதுவும் 5 ஸ்டார் விடுதிகளில் கூடுதல் அமைதியாகப் பேசுவார்கள். எங்கள் குழுவினர் விடுதியின் ரிசப்ஷனில் பெட்டிகளுடன் நுழைந்ததும் உரத்த குரலில் பேச ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் உடனே முகம் சுளிப்பார்கள். வழிகாட்டி என்ன தான் அறிவுரை கூறினாலும் கேட்கவே மாட்டார்கள். அறை சாவி, wifi password இரண்டையும் அவரவரிடம் தந்து அறைக்கு அனுப்புவதற்குள் அவருக்கு நாக்கு தள்ளி விடும்.

சத்தம் போடுவதால் கடுகடுவென்று தான் ரிசப்ஷனில் பதில் சொல்வார்கள். பாரிஸில் ரொம்பவே கடுகடு.
மறுநாள் காலை வழக்கம் போல் 6.30-7.30 continental breakfast முடித்ததும் Disneyland Parisஐ நோக்கி பயணப்பட்டோம்.

முதல் நாள் தாங்கள் கண்ட Lido show பற்றி ஆண்கள் எந்த கருத்தும் தெரிவித்துக் கொள்ளவில்லை. அமைதியாக இருந்தார்கள். தகப்பனுடன் சென்ற ஒரு இளம் பெண் தன் தகப்பனாரிடம் நாமிருவரும் சேர்ந்து பார்க்கும் showவா இது, உங்களுக்கு முன்னரே விவரம் தெரியாதா என கோவித்துக் கொண்டேன் என்றார். எனக்கு சரியாக விவரம் தெரியாததால் உன்னையும் அழைத்து சென்றேன் என்று அவர் பதில்ளித்ததாகக் கூறினார். என் இருக்கைக்கு பின் இருக்கை பெண்மணி Showவில் ஆடியவர்களின் ஆடை அலங்காரங்கள் நம் கலாச்சாரத்திற்கு உகந்ததாக இல்லை. ஆனால் அவர்கள் Pole danceஐ மிக திறமையாக ஆடினார்கள். கடினமான பயிற்சி இருந்தால் தான் அப்படி ஆட முடியும் என்றார்.(கலா ரசிகர்)

பாரிஸ் நகரின் மையப்பகுதியிலிருந்து கிழக்கில் 32 கிலோமீட்டர் தொலைவில் Chessy என்னும் பகுதியில் அமைந்துள்ளது Disneyland Paris என்னும் இந்த பொழுது போக்கு பூங்கா. வட அமெரிக்காவை சேர்ந்த The Walt Disney Companyக்கு சொந்தமான டிஸ்னிலாண்ட் தீம் பார்க் போலவே உருவாக்கப் பட்டுள்ளது.இதனுள்ளே Theme parks-2, Resort hotels-8, Associated hotels-7, Golf course-1, High-speed rail station-1, Large outlet centre-1 (la vallée village), and Large shopping mall-1 ஆகியவைகள் உள்ளன. பொது மக்கள் Disneyland park, Walt Disney Studios park என்னும் பெயரில் அமைந்துள்ள Theme parksகளுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.

பூங்காவின் வாசலில் இறக்கி விடப்பட்டு கையில் அனுமதி சீட்டு, மதிய உணவு மற்றும் பூங்காவிற்கான வரைபடம் ஆகியவற்றைக் கொடுத்து சென்று வாருங்கள் வென்று வாருங்கள் என்று வழியனுப்பினார் வழிகாட்டி. சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு (10-3 pm) பேருந்துக்கு வந்து சேர வேண்டும் என்று சொல்லப் பட்டது.

Disneyland Park, Walt Disney Studios park என இரு பெரிய பொழுதுபோக்குப் பூங்காக்கள் இங்கே உள்ளன. Disneyland Parkல் Fantasy land, Main Street, USA, Frontier land, Adventure land, Discovery land என ஐந்து பகுதிகளாகவும் Walt Disney Studios parkல் Back lot, Front lot என இரு பகுதிகளாகவும் பிரிக்கப் பட்டு பார்வையாளர்களின் வசதிக்காக மிகத் தெளிவாக வரைபடம் அச்சிட்டு வழங்குகிறார்கள்.

ஐரோப்பாவின் பருவ நிலை பற்றி திட்டவட்டமாக கூற முடியாது என்பதால் வெய்யில் பனி மழை என எல்லா பருவ நிலைக்கும் ஏற்ற உடைகள் மற்றும் தொப்பி குடை போன்றவைகளை எப்போதும் கையில் சுமந்து சென்றோம். [எங்கு சென்றாலும் எல்லோரும் டோரா புஜ்ஜி போல backpack சகிதம் செல்வோம்.]

எங்களுக்கு தரப்பட்ட உணவுப் பை காகிதத்தால் ஆனது. வெளி நாடுகளில் பொதுவாக காகிதப் பைகளைத் தான் உபயோகிக்கிறார்கள்.ஆப்பிள் ஆரஞ்சு, கேக், கூக்கீஸ், ஜுஸ், மற்றும் சாம்பார் சாதம், தயிர், தண்ணீர் பாட்டில் மற்றும் சில உணவுப் பொருட்களுடன் இருந்தது.

பூங்காவின் உள்ளே செல்ல கூரையுடன் அமைந்த நீண்ட நடைபாதையில் நடந்து சென்றோம். இந்த பூங்காவிற்கு வர விரும்பாதவர்கள் லூவர் செல்லலாம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைந்த அந்த கணத்தில் வருண பகவான் வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்தார்.

கையில் காகித சாப்பாட்டு பை, ஸ்வெட்டர் இத்யாதிகள் அடங்கிய தோள் பை, குடையுடன் கொட்டும் மழையில் வரை படத்தை பார்த்து நமக்கு தேவையான ரைடுகளுக்கு செல்ல வேண்டும். [அது வரை நன்றாக இருந்த வானிலை நாங்கள் பூங்கா சென்ற தினத்திலிருந்து மாறத் தொடங்கியது.]

எங்களுக்கு எந்த ரைடில் போகவும் பயம். தலை சுற்றுதல் வாந்தி வரும். உயரம் பற்றிய பயம் வேறு.
எங்களுடன் ஒரு நண்பரும் சேர்ந்து கொள்ள மூவருமாக கூட்டமில்லாத ஒரு ரைடை கண்டு பிடித்து வரிசையில் நின்றோம். பாரிஸ் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தது போல கூட்டமான கூட்டம். வரிசையில் நிற்கையில் மழை வலுக்க காகித பை நனைந்து பிய்ந்து உணவுப் பொருட்கள் ஒரே சமயத்தில் எங்கள் இருவருடைய பைகளிலிருந்தும் தடதடவென தரையில் விழ, மக்கள் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க….நண்பர் தம்மிடம் கூடுதலாக இருந்த plastic பைகள் இரண்டை தந்து உதவினார். ரைடுக்கு எங்கள் முறை வந்தது.

சிறு பிள்ளைகள் ஏறி செல்லும் குதிரை ரைடு(Ride) தான் அது. குதிரையில் உட்காரவும் பயம் அதனால் அதில் தேர் போல அமைக்கப் பட்டு ஆசனங்கள் போடப்பட்டிருக்கும் பகுதியில் அமர்ந்து சென்றோம். இதில் உட்கார்ந்து செல்ல எதற்கு வந்தோம் என்று சிரித்து கொண்டே சுற்றி முடித்தோம்.

இதற்குள் 11.30 ஆகி விட்டது. என் கணவர் சாப்பாட்டு பையை எதற்கு சுமந்து
கொண்டு நடக்க வேண்டும் சாப்பிட்டு விடலாம் என்று கூற நண்பர் மறுக்க, ஒரு வழியாக அங்கும் இங்கும் அலைந்து மற்றொரு ரைடை கண்டு பிடித்தோம். Pirares of the Carribean Ride அது. அதே பெயரில் உள்ள திரைப்படத்தின் கருவில் அமைந்தது. இருட்டில் தண்ணீரில் படகில் செல்லும் வகையில் உள்ளது. எந்த வித thrillம் தராத, இருட்டில் என்னவென்றே புரியாத அந்த ரைடையும் முடித்தோம்.
பூங்காவினுள்ளே ஆங்காங்கே அழைத்து செல்லும் ரயிலில் ஏறி சுற்றிப் பார்த்தோம். ரயில் பயணத்திலேயே கேக், ஆப்பிள்களை உண்டு முடித்தோம். ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி தண்ணீரில் செல்ல கூடிய ரைடில் சுற்றிலும் உள்ள மரங்களையும் பூத்துக் குலுங்கிய செர்ரி மரங்களையும் கண்டவாறே சென்றோம். மீண்டும் ரயிலேறி வேறிடத்தில் இறங்கி மழை தூறலுக்கு இடையே ஒரு பென்சில் அமர்ந்து மதிய உணவை உண்டு முடித்து விட்டு, ரைடுக்கு சென்றால் நேரமாகி விடும் அதனால் show எதற்காவது செல்லலாம் என்று முடிவு செய்து சென்றோம். அப்போது மணி 2. அந்த showவில் விளக்குடன் கூடிய பிளாஸ்டிக் குச்சியை வைத்து நடனம், சண்டை அசைவுகள் என செய்து காண்பித்தார்கள்.

வெளியில் வந்து அங்கே இருந்த மற்ற இடங்களை அகலமான சாலைகளில் நடந்து சென்று சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஆங்காங்கே சிறு கிராமம் போன்ற அமைப்புகள் (Set). அவற்றில் உணவுக் கடைகள், குளிர்பானக் கடைகள் (இவைகள் உண்மை) என செயல்படுகின்றன. டிஸ்னிலாண்டில் மதுபான விற்பனை செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்கையில் திடீரென்று மக்களிடையே ஒரே பரபரப்பு. ஓட்டமாக ஓடி வந்து ஒரு சாலையின் இருபுறமும் நின்று கொண்டார்கள். அச்சமயம் ஒரு குட்டி ரயிலில் அனைத்து டிஸ்னி பட கதாபத்திரங்களும் பாடி ஆடிக் கொண்டே ஊர்வலமாக சென்றார்கள். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் பாடி ஆடினார்கள். [அது என்ன பாட்டோ என்ன திரைப்படமோ யாமறியோம் பராபரமே…Frozen, Tangled படங்கள் பார்த்திருக்கிறேன்.Maximus – Horse, Shrek – Donkey, Olaf – Snowman, Mickey – Mouse, Donald -Duck தெரியும். Disney படங்கள் பற்றிய என் அறிவு அவ்வளவே] நாங்கள் விடியோ, புகைபடம் என எடுத்துக் கொண்டிருந்தோம்.
டிஸ்னி திரைப்படங்களில் வருவது போல அனைத்துக் கட்டிடங்களும் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே டிஸ்னி பட கதாபாத்திரங்களின் சிலைகள் அலங்கரிக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியாக விதம் விதமான வண்ண மலர்கள் எங்கெங்கும். எந்த ரைடுக்கு செல்லவும் ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்பதால் அதிகம் சுவாரசியம் இல்லை. [வரிசை இல்லை என்றால் மட்டும் roller coaster ல் போயிருப்பாயா என்று கேட்காதீர்கள்.]
2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினர் சொந்த வீடு வாங்குவதற்காக தேடிக் கொண்டிருந்த சமயத்தில் (second hand தான்) ஒரு வீட்டை காண சென்ற போது அந்த வீட்டின் அலங்காரப் பொருட்கள், உள் அலங்காரங்கள், பின்புற தோட்டம், அவ்வளவு ஏன் அவர்கள் வீட்டு சுவர்க் கடிகாரம் கூட டிஸ்னி

themeல் காணப்பட்டது. கோட்டைகள், கொத்தளங்கள் என கண்ணாடி மாடல்கள். டிஸ்னி பூங்காவின் உள்ளே இருப்பது போல தோன்றியது. ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்து வீட்டை அலங்கரித்திருந்தார் கலிபோர்னியா டிஸ்னிலேண்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அந்த குடும்பத் தலைவி .தற்சமயம் அந்த வீட்டில் தான் என் உறவினர் குடும்பம் தற்சமயம் வசிக்கிறது. அவர்கள் தோட்டத்தில் விட்டு சென்ற குதிரை வண்டியை (புகைப்படம்) இணைத்துள்ளேன்.

வட அமெரிக்காவில் இலவச rest roomகள் எங்கெங்கும் காணப்படும். மிக மிக சுத்தமாகப் பராமரிக்கப்படும். உள்ளே disposable toilet seat வைத்திருப்பார்கள். நாம் உபயோகப்படுத்துவதற்கு முன்பு அதை commode மேல் போட்டுக் கொள்ள வேண்டும். Toilet tissue paperஐ குப்பை தொட்டியில் போடுவது போல எடுத்து போட்டு விட்டு வர வேண்டும் அல்லது flesh ம் செய்யலாம். குப்பை தொட்டியில் எடுத்துப் போடுவது உசிதம். வெளியில் கை கழுவ விதம் விதமான சோப்புகள், கை துடைத்துக் கொள்ள வேறு விதமான காகிதம், முகம் கழுவினால் துடைத்துக் கொள்ள soft ஆன காகிதம் என பல விதமாக இருக்கும். குழந்தைகள் diaper, பெரியவர்கள் உபயோகித்தது. Insulin போட்டுக் கொள்பவர்கள் உபயோகப்படுத்திய ஊசிகள், கை துடைத்த காகிதம் என குப்பை தொட்டிகளும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இருக்கும். டிஸ்னிலாண்ட் பாரிஸில் மட்டும் தான் அதே போல கண்டேன்.

மூன்று மணியானதும் வெளியில் வந்து காத்திருந்தோம். வழக்கம் போல தாமதமாக வந்தது ஒரு குழு.

அடுத்ததாக 12 ஆவது arrondissementல் உள்ள ஒரு சாலையின் இருபுறமும் புகழ்பெற்ற Brandகளின் கடைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள Perfumerie Fragonard என்னும் நிறுவனத்தின் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படும் Showroomற்கு அழைத்து செல்லப் பட்டோம். [பிரான்சு நாட்டின் Grasse என்னும் ஊரில் இதன் தொழிற்சாலை உள்ளது.]

அந்த Brandன் அனைத்து வித வாசனை திரவியங்கள், சோப்புகள், முகத்திற்கு பூசும் கிரீம்கள் என விதம் விதமாக அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என்னிடம் Dior (Poison), Lancome (Poeme), Elizabeth Arden போன்ற நிறுவனங்களின் perfumes ஏற்கனவே இருந்ததால் நான் எதுவும் வாங்கவில்லை. வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

சிறு வயதில் எனக்கு தெரிந்த ஒரே perfume Eau de Cologne தான். அது perfume தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். எங்களின் சிறு வயதில் எல்லார் வீட்டிலும் அதை வாங்கி வைத்திருப்பார்கள். அடிப்பாகம் குறுகலாகவும் மேலே செல்ல செல்ல அகலமாகவும் இருக்கும். பக்கவாட்டில் கோடுகள் போட்டது போல டிசைன் செய்யப்பட்டு இருக்கும்.அதன் மேல் மூடியும் வித்தியாசமாக தொப்பியைப் போல இருக்கும், காய்ச்சல் வந்தால் தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டு வெள்ளைத் துணியில் நனைத்து நெற்றியில் பற்று போடுவார்கள். காய்ச்சல் சிறிது நேரத்தில் குறைந்து விடும். Antibiotics, Paracetamol இல்லாத காலம் அது.

Dior பற்றிக் குறிப்பிட்டதும் முன்பொரு முறை ஒரு புத்தகத்தில் படித்த செய்தி நினைவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆடைகள் தைப்பதற்கான துணிகளை அரசாங்கம் ரேஷன் கடைகளில் தான் விற்பனை செய்யும். (அமெரிக்கா, ஐரோப்பா) மக்கள் அதை வாங்கி தாங்களே ஆடையாகத் தைத்து அணிந்து கொள்வார்கள். திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது மணமகளுக்கு ஆடை தைக்க உயர்ந்த ரக துணிகளுக்கு எங்கே போவது?

அச்சமயத்தில் போர் வீரர்கள் ஆங்காங்கே பாராசூட் மூலம் இறக்கி விடப்பட்டு தங்க வைக்கப் பட்டு இருந்தார்கள். அந்த பாராசூட்டின் துணி வெல்வெட்டிலானது. மக்கள் ராணுவ முகாம்களுக்கு சென்று அந்த பாரசூட்களை வாங்கி வந்து மணப்பெண்களுக்கு ஆடைகள் தைத்தார்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் 1946 ஆம் ஆண்டு Christian Dior SE என்பார் இந்த நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு நாகரிக ஆடைகளை வடிவமைத்து விற்க தொடங்கினார். மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றன அவரது ஆடைகள். மேலும் செருப்புக்கள், வாசனை திரவியங்கள் என அவரது வியாபாரம் உலகெங்கிலும் இன்று நடைபெறுகிறது.

இரவு உணவுக்காக ஆறு மணியளவிலேயே உணவகத்திற்கு அழைத்து செல்லப் பட்டோம். ஊருக்குள் செல்வதற்கு முன்பு பரபரப்பு இல்லாத இடத்தில் உணவகம் இருந்தது என்று குறிப்பிட்டேன் இல்லையா அங்கேயே தான் பாரிஸில் இருந்த இரண்டு நாட்களும் உண்டோம். வெளி நாடுகளில் உள்ள விடுதிகளில் நம் நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பது போல சுவரில் படங்கள், ரிசப்ஷனில் பிள்ளையார் சிலை என அலங்கரித்திருப்பார்கள். இந்த விடுதி அளவில் சிறியதாக இருந்தாலும் சுத்தமாக அழகாக பரமரிக்கப் பட்டு இருந்தது. வரிசையாக மூன்று வெவ்வேறு நாட்டு உணவகங்கள், எதிரில் மேம்பாலம் என இருந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பாலத்தின் அடியில் நேராக சென்றால் Arc de triompe வரும்.

சீக்கிரம் வாருங்கள் என்று வழிகாட்டி எங்களை விரட்டிக் கொண்டிருந்தார். 8 மணிக்கு கிளம்பும் Seine River Cruise என்னும் சீன் நதிப் படகுப் பயணத்தில் பங்கேற்க 7 மணிக்கே படகுத் துறையில் வரிசையில் நிற்க வேண்டும் என்பது தான் காரணம்.

அவசரமாய் உண்டு முடித்து விட்டு ஐபல் கோபுரத்தின் எதிர் கரையில் அமைந்துள்ள படகுத் துறைக்கு வந்து வரிசையில் நின்று கொண்டோம். மேலை நாடுகளில் கோடைக்காலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆக இரவு எட்டு மணி கூட ஆகும் என்பதால் ஒன்பது மணி வரை கூட வெளிச்சமாக இருக்கும். படகுப்பயணம் கிட்டத்தட்ட 1.45 – 2 மணி நேரங்கள் என்பதால் எட்டு மணி படகில் கிளம்பினால் போகும்போது வெளிச்சத்திலும் வரும்போது விளக்கொளியிலும் நகரைக் காணலாம் என்பதால் இரவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மற்றொரு காரணம் பாரிஸ் நகரிலும் சாலைகள் குறுகலானவையே. (ஐரோப்பா மொத்தமுமே குறுகலான சாலைகள்தான்). நாங்கள் சென்ற இரண்டடுக்கு பேருந்து குறுகலான சாலைகளில் செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் நிறுத்தும் வசதி இருக்காது என்றார் வழிகாட்டி. படகில் பயணித்த படியே நகரின் முக்கிய கட்டிடங்களைக் காணலாம் .

வரிசையில் நின்றவாறே எதிர்க் கரையில் தெரிந்த ஐபல் கோபுரத்தின் அழகையும் நகரின் அழகையும் எத்தனை பேர் ரசித்தார்கள் என்பது தெரியவில்லை. கப்பல் பிரயாணத்திற்கு காத்திருந்த நேரத்தில் மக்கள் எப்படி பேசிக் கொண்டிருந்தார்களோ அதே போல ஒரே சலசலப்பு. அப்படி சொல்வதை விட தற்பெருமை பிரசங்கங்கள் என்று சொல்லலாம். சோதனையாக அதே குழுவின் அருகில் வரிசையில் ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கும் மேலாக நிற்க வேண்டி இருந்தது.

பெரிய்ய்ய இரண்டடுக்குப் படகு. கீழடுக்கில் கண்ணாடி ஜன்னல்களுடன் மூடிய வகை இருக்கைகள். [குளிர் பிரதேசம் என்பதால் குளிர் தாங்காதவர்கள் கீழடுக்கில் அமரலாம்.] நாங்கள் சென்ற நேரம் குளிர் இல்லை வெய்யிற்காலம் என்பதால் நானும் என் கணவரும் மேலடுக்கில் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டோம். பயண நேர்த்தில் வர்ணனைகள் ஆங்கிலத்தில் படகில் கூறப்பட்டது.

https://worldinparis.com/best-seine-river-cruises-in-paris

சீன் நதியானது பாரிஸ் நகரின் மையப்பகுதியினைக் கடந்து செல்வது நகருக்கு கூடுதல் அழகை தருகிறது. போகும் போது நதியின் இடது கரை ஓரமாகவும் திரும்பும் போது வலது கரை ஓரமாகவும் படகு பயணம் நடைபெறுகிறது. படகிலேயே உணவகம், பார் உண்டென்றாலும் சிறு பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது வயிறு நிறைய உணவு கொடுத்து தாய்மார்கள் அழைத்து செல்வது போல எங்களை அழைத்து சென்றதால் எங்கும் சாப்பிட வேண்டும் என்ற temptation ஏற்படவே இல்லை.

[ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இது போல night cruise சென்ற போது இந்திய உணவு படகிலேயே வழங்கப்பட்டது. நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது பற்றி ஆஸ்திரேலிய பயணக் கட்டுரையில் விரிவாக சொல்கிறேன்.]

பாரிஸ் நகர் Gastronomyக்கு புகழ் பெற்றது. (நன்றாக சமைத்தல் அல்லது நல்ல உணவுகளை தேடி சென்று உண்ணுதல்). தொலைக்காட்சிகளில் அலெக்சாண்டர் பாலத்தின் அருகே உணவகங்கள் இருப்பது போல, அங்கே பல விதமான கேக்குகள் ரொட்டிகள் செய்து விற்பது போல மக்கள் எதிரில் தெரியும் ஐபல் கோபுரத்தையும் Les Invalides ஐயும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உண்பது போலவும் காண்பித்ததை பார்த்திருக்கிறேன். கேக் செய்யும் மாவில் எலுமிச்சை/ஆரஞ்சு தோலை சீவி சேர்ப்பதை அந்த நிகழ்ச்சிகளில் தான் முதன்முறையாகக் கண்டேன். ஓரிடத்தில் கூட எதுவும் வாங்கி சாப்பிடவே இல்லை. ☹

படகு புறப்பட்ட நேரம் வெளிச்சமாக இருந்தது. The Eiffel Tower, Assemblée Nationale, Musée d’Orsay, Institut de France, Cité de la Mode, Hôtel de Ville, Notre Dame, Conciergerie, Concorde, Grand Palais, and Palais Chaillot Musee de Louvre என காலையில் நாங்கள் காண நேர்ந்த முக்கியமான Palais, Muséeக்களை மீண்டும் கண்டோம். வழியெங்கும் ஆங்காங்கே பாலங்கள். நேரம் செல்ல செல்ல மேலடுக்கில் குளிரத் தொடங்கியது. நதிக் காற்று சிலுசிலுவென வீசியது. குளிரில் நடுங்கிக் கொண்டே, வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணித்தோம்.

முக்கியமான இடங்களை பற்றிய விவரங்களை முன்பே விவரித்து விட்டேன் என்றாலும் படகு பயணத்தில் கண்ட Notre-dame-de-Paris பற்றிய விவரங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

நாலாவதும arrondiseementல் அமைந்துள்ள இந்த Cathedral Notre-dame-de-Paris என்னும் பெயருடைய தேவாலயம் பாரிஸ் நகரின் முக்கிய சின்னமாக கருதப் படுகிறது. Our lady of Paris என்பது அதன் பொருள். ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவர்களின் மூன்று முக்கியமான தேவாலயங்களில் இதுவும் ஒன்று. இது இடைக்கால கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.(Medieval Catholic Cathedral). French gothic architecture என்னும் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த தேவாலயம் கூறப்படுகிறது. இந்த கட்டிடக் கலையின் சிறப்பியல்புகளாக அதன் வட்ட வடிவ ஜன்னல்கள். வெளிச்சுவர் சாய்ந்து விடாமல் இருக்கும் வகையில் அமைக்கப் பட்ட தடுப்புக்கள், கூரையில் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளை கூறலாம்.

முதலாம் நெப்போலியனின் முடிசூட்டு விழா இங்கே தான் நடைபெற்றது. இந்த தேவாலயத்திலிருந்து தான் பாரிஸ் நகரின் 0 கிலோமீட்டர் ஆரம்பிக்கிறது என்று முன்பே பார்த்தோம். தேவாலயத்தின் கூடுதல் சிறப்பு அதன் மணிகளும் Organ இசை கருவிகளும் ஆகும். [இவைகள் நாங்கள் வெளியிலிருந்து பார்த்தவை மற்றும் படகில் கூறப்பட்ட விவரங்கள்.]
இப்படிப்பட்ட அற்புதமான கட்டிடக் கலை அமைப்பு கொண்ட இந்த தேவாலயம் 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப் பட்ட போது தீ விபத்தில் சிக்கி பெருத்த சேதத்திற்கு ஆளானது. உலகின் எல்லா பாகங்களிலிலிருந்தும் நிதியுதவி கிடைக்கப் பெற்றதால் 2024 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் சீரமைக்கப் பட்டு மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்படும் எனக் கூறப்படுகிறது.

மாலை வெளிச்சத்தில் Concordeல் உள்ள Luxor தூணின் மேல் பகுதி தங்கமும், Les Invalides தேவாலயத்தின் தங்க கோபுரமும், அலெக்சாண்டர் பாலத்தின் சிலைகளும் ஜொலித்தன. Place de Concordeல் உல்லாசப் பயணிகளைக் கவரும் பொருட்டு ஒரு Giant Wheel உள்ளது. ஒன்பது மணியானதும் இருட்டு முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஒரே நேரத்தில் நகரின் அனைத்து பாலங்களிலும் ஊருக்குள்ளும், Giant Wheel போன்றவைகளிலும், ஐபல் கோபுரத்திலும் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. கண்கொள்ளாக் காட்சி. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

ஒவ்வொரு பாலமாகக் கடந்து ஐபல் கோபுரத்தின் அருகே வந்த சமயத்தில் எங்கள்
இருக்கைக்கு முன்பாக 50 பேர் எழுந்து வந்து நின்று கொண்டு எங்கள் கால்களை மிதித்து இம்சை செய்தார்கள். படகின் மேலடுக்கில் கூரை கிடையாது உட்கார்ந்து கொண்டே மொத்த நகரத்தையும் காணலாம் எதற்கு அடித்து பிடித்துக் கொண்டு முன்னால் வந்தார்கள் என்றே புரியவில்லை. எந்த நாடாக இருந்தாலும் மக்கள் மன நிலை ஒன்றே தான் போலும்.

நானும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை. நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம் [எடுத்தோம் என்று சொல்வது தான் சரி, இருட்டில் எங்கள் உருவங்கள் உருப்படியாய் தெரியவில்லை.]

திரு ஐபல் அவர்களின் மறைவுக்குப் பிறகு ஐபல் கோபுரத்தின் இரவு நேர விளக்கு அமைப்பு தனியாருக்கு சொந்தமானது என பிரான்சு தேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. Copywrite சட்டப்படி யார் இரவு விளக்கொளியில் எடுக்கப்பட்ட கோபுரத்தின் படத்தை உபயோகிக்கிறார்களோ அவர்கள் அபராதம் கட்ட வேண்டும். இந்த காரணத்தினால் தான் Stock photos மற்றும் வலைத் தளங்களில் அதிகம் இரவு நேர கோபுர படம் தென்படுவதில்லை. லட்சக்கணக்கான உல்லாசப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுகிறார்களே அதை எப்படி தடுப்பது என்ற கேள்விக்கு, வியாபார, விளம்பர ரீதியாக பயன்படுத்தினால் மட்டுமே அபராதம் என்று கூறப்படுகிறது என சமீபத்தில் படித்தேன்.

இரவு நேர பாரிஸ் நகரின் அழகினை கண்ணார, குளிர குளிர கண்டு களித்து, மீண்டும் கிளம்பிய படகுத் துறைக்கே வந்து சேர்ந்தோம்.

நகரின் மையப் பகுதிகளை மீண்டும் கடந்து விடுதியை நோக்கி சென்றோம்.

பயண நேரத்தில் பிரான்சு தேசத்தைப் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த, படித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பாரிஸ் நாகரிகத்தின் தலை நகரம் மேலும் இது காதலர்களின் நகரமும் கூட. மக்கள் ஜோடி ஜோடியாக பொது இடங்களில் கூடிக் குலவிக் கொண்டு இருப்பார்கள் தங்கள் வீடுகளில் உணவு மேசையில் குடும்பமாக கூடி புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பது போன்ற பல கருத்துக்களை திரைப்படங்களில் புத்தகங்களில் பார்த்தது படித்தது, வழிகாட்டி பொது இடங்களில் யாரேனும் நெருக்கமாக இருந்தால் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கூறியது என்பது போன்ற கருத்துக்களால் கூடுதலாக அந்த ஊரைப் பற்றிய எதிர்மறையான கருத்து என்னில் தோன்றி இருந்தது.

அதற்கு மாறாக மற்றெந்த மேலை நாட்டிலும் காணாத வகையில் இங்கே ஆண்களும் பெண்களும் உடலை மூடி ஆடை அணிந்திருந்தார்கள். (குளிர் விலகாத பருவ நிலை என்பதால் இருக்கலாம்). அனேகமாக கறுப்பு நிற ஆடைகள்.பல்வேறு நாட்டு மக்களும் இங்கே வசிப்பதால் தலை முடியின் நிறம் அனேகமாக கருப்பாக அல்லது Blonde ஆக இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து நிறைய மக்கள் இங்கே குடியேறி உள்ளார்கள். சமீப காலங்களில் சிரிய நாட்டு அகதிகளும் இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். (டாக்குமென்டரி படம்) ஆணும் பெண்ணும் ஜோடிகளாக திரியவில்லை. அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்கள் தலைமுடியை ஜடையாகக் பின்னிக் கொண்டிருந்தார்கள்.

Fashion தலை நகரம் என்பதால் மக்கள் நாகரிகமாக உடை உடுத்தி high heels அணிந்து நவநாகரிகமாக இருப்பார்கள் என்று கற்பனை செய்திருந்தேன். நம் ஊரை விட சாதாரணமான அலங்காரத்தில் இருந்தார்கள். Fashion showக்கள் நடக்கும் இடங்களில் மட்டும்தான் அது போல இருப்பார்கள் போல.
சுற்றுலா பயணியர் வரும் பகுதிகளுக்கு உள்ளூர் மக்கள் வருவதில்லை.

பொது இடங்களில் புகைபிடிக்க தடை ஏதுமில்லை. ஆண் பெண் வேறுபாடு இதில் இல்லை. அந்த நாட்டில் 6-10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட புகைபிடிப்பது சாதாரணம் என ஒரு டாகுமென்டரி படத்தில் பார்த்தேன்.

நகரின் வெளிப் பகுதியில் தொழிற்சாலைகள், பண்ணைகள், திராட்சை தோட்டங்கள் (பிரான்சு தேச wineகள் உலக பிரசித்தி பெற்றவை) போன்றவை காணப்பட்டன. நாங்கள் சென்ற வழியில் நெல் வயல்களைக் கூடக் கண்டேன். அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஊருக்கு வெளிப்பகுதியில் அனுமதிக்கப் படுகின்றன.

பாரிஸ் நகரம் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது என்பதால் பார்க்க மிக அழகாக உள்ளது. வீடுகளின் வெளிப்பகுதி கதவுகள் மற்றும் ஜன்னல்களின் கம்பி வேலைப்பாடுகள் மிகுந்த கலை நயத்துடன் உள்ளன.

சிறு கிராமங்களில் சர்ச்சுகள் ஊருக்குள் செல்லும் சாலைக்கு நேராக உள்ளன. ஊருக்கு வெளியே எங்கெங்கும் புல்வெளிகள். சாலைகளில் சிறிய கார்கள் சென்று கொண்டிருந்தன. மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல இங்கும் சைக்கிள்களுக்கு தனி மரியாதை தான். பிரான்சில் Grey நிறத்தில் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

இங்கே மாணவர்களுக்கு கல்வி இலவசம். பிரஞ்சு மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் படுவதால் அந்த மொழியை அறிந்திருந்தால் மட்டுமே மாணவர்கள் இலவச கல்வி சலுகையைப் பெற முடியும் என்று வழிகாட்டி கூறினார்.

ஆங்காங்கே chateauக்களும் (a large French country house or castle, often giving its name to wine made in its neighbourhood. Eg: “Chateau Margaux”) தென்பட்டன. இது போன்ற கோட்டைகளில் அரசர்களும், சிற்றரசர்களும், செல்வந்தர்களும் வாழ்ந்தனர். பிரான்சு தேசம் சிறப்பான கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் நாகரிகத்திற்கும் பெயர் பெற்றது.

உதாரணமாக Marie de Rabutin-Chantal (1626-1696) என்னும் பெண்மணி பாரிஸ் நகரில் பிறந்து Brittany என்னும் ஊரின் ஹென்ரி என்பவருக்கு வாழ்க்கைப் பட்டு இளம் வயதிலேயே விதவையானவர். இவரது கணவர் இவர் சீதனமாக கொண்டு வந்த சொத்துக்களை நாசம் செய்து விட்டாலும் மனம் தளராமல் தன் மகளையும் மகனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும் மாமனின் வீட்டில் வளர்க்கப் பட்டு நல்ல கல்வி கற்றவர். மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்.

மகளுக்கு திருமணமாகி புகுந்த வீடு சென்றதும் அவரது பிரிவு தாங்காமல் தினமும் அவருக்கு கடிதம் எழுதினார். முதல் ஏழு வருடங்களில் மிக அதிகமான கடிதங்கள் எழுதி உள்ளார்.

https://www.britannica.com/biography/Marie-de-Rabutin-Chantal-marquise-de-Sevigne

பிரஞ்சு மொழியில் அவர் எழுதிய 1700 கடிதங்கள் வரலாறு மற்றும் இலக்கிய சிறப்பு மிக்கவையாக கருதப் பட்டு அருங்காட்சியகத்தில் அவரது கடிதங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன. தாய் மகளிடம் பேசுவது போன்ற தொனியில் அமைந்தவை அவை.

அவர் வாழ்ந்த காலத்தின் அன்றாட நிகழ்வுகள், மருத்துவக் குறிப்புக்கள், விருந்தினர்கள் வருகை, அவர்களுக்கு சாக்லேட் பானம் வழங்கப் பட்டது என பல நிகழ்வுகளையும் அவைகள் படம் பிடித்துக் காட்டுபவைகளாக இன்றும் உள்ளன.
இந்தக் கடிதங்கள்.

அவர் யதார்த்தமாக எழுதிய கடிதங்கள் இவ்வளவு பிரசித்தி பெறும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது மகளிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்த அவர் மகளை குழந்தை பெற்றுக் கொள்ளாதே என அறிவுரைத்து எழுதி உள்ளார். மருத்துவ வசதிகள் சரியில்லாத காலகட்டம் என்பதால் பிரசவ நேரத்தில் மகள் இறந்து விடுவார் என்ற பயம். ஆனால் மகளுக்கு நான்கு குழந்தைகள்.தன் கடைசி காலத்தில் மகளின் வீட்டிலேயே வாழ்ந்து உயிரிழந்தார். மகள் அவருக்கு முன்பே இறந்து விட்டார் என்பது தான் மிகப் பெரிய சோகம்.

சாக்லேட் பானம் பற்றிக் குறிப்பிட்டேன் இல்லையா? அதற்கும் சரித்திரம் உண்டு. பிரான்சு தேசத்தில் 1615 ஆம் ஆண்டு சாக்லேட் அறிமுகப்படுத்தப் பட்டது. பதினான்காம் லூயி மன்னனை மணந்த ஆஸ்திரிய நாட்டு Anne சீதனமாக கொக்கோ விதைகளைக் கொண்டு வந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆனாலும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பதினைந்தாம் லூயி மன்னனால் தான் அவனது அரசவையில் பிரபலப் படுத்தப் பட்டது.

இந்த விதைகளை அரண்மனைகளிலும், அரச குலத்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் மட்டுமே உபயோகப்படுத்தி வந்தனர். பதினைந்தாம் லூயி மன்னன் கொக்கோவை(cocoa beans) எப்படி உபயோகிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் (recipe) எழுதி உள்ளார்.அந்த recipe மிக பிரபலமான ஒன்றாக விளங்கியது. Versailles நகரம் தான் அந்த காலகட்டத்தில் பிரான்சு தேசத்தின் தலை நகராக விளங்கியது.

https://en.chateauversailles.fr/discover/history/key-dates/hot-chocolate-versailles

ஆரம்ப காலத்தில் கொக்கோ வெவ்வேறு முறையில் பயன்படுத்தப் பட்டது. மேரி அன்டாய்னெட் திருமணமாகி வந்த போது சீதனமாக தன்னுடன் கொக்கோவை முறையான பானமாக தயாரிப்பதில் வல்லவர் ஒருவரை அழைத்து வந்தாராம். “Cocoa maker of the Queen” என்ற சிறப்பு பட்டமும் அவருக்கு அளிக்கப் பட்டது.

கொக்கோ விதைகள் முற்காலத்தில் Viagra போல கருதப்பட்டதே மேட்டுக்குடி மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமாகக் காரணம். [vyagra என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு Excitement என்று பொருள்.]

19 ஆம் நூற்றாண்டில் Cadbury’s (England), Menier (France).போன்ற நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்ட பிறகு தான் கொக்கோ உலகளவில் சிறப்பான இடத்தை பிடித்தது என்று சொல்லலாம்.

கொக்கோவின் தற்கால உபயோகம் பற்றி புத்தகத்தில் படித்த ஒரு செய்தி இது. கொக்கோ பானம் அல்லது சாக்கலேட்டுகளை உண்டால் நம் நினைவாற்றல்(Retention power) அதிகரிக்குமாம். அதனால் தேர்வு தினங்களில் பிள்ளைகளுக்கு 5 ஸ்டார் சாக்கலேட் கொடுத்தால் நல்லது என படித்தேன் நான் அந்தக் குறிப்பை பயன்படுத்தி பலனும் அடைந்தேன்.
இது போன்ற கதையெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று தோன்றுகிறதா?

TV5Monde என்னும் பிரான்சு தேசத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒளியலையில்(channel) மேற்கண்ட நிகழ்ச்சியைக் கண்டேன். பிரான்சு தேசத்தின் புகழ்பெற்ற மனிதர்கள், கோட்டைகள், அரண்மனைகள், அவற்றின் சரித்திரம் என பலவற்றையும் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டுவார்கள். டாக்குமென்டரி படம் தான் என்றாலும் மிக சுவாரசியமாக subtitleகளுடன் காண்பிக்கிறார்கள். இது போல மேலும் பல டாக்குமென்டரிகளை பார்த்திருக்கிறேன்.

கோட்டை, கொத்தளங்கள், அரண்மனைகள், Calais, Versailles என கண்ட போது அந்த கால கட்டத்தில் நாமும் வாழ்வது போன்ற பிரமை ஏற்பட்டதென்னவோ உண்மை.

சரி, நிகழ்காலத்திற்கு வருவோம்.

தினமும் சூரியன் மறைந்த பிறகு பேருந்தின் ஜன்னலுக்கு வெளியில் வேடிக்கை பார்க்க முடியாது (பாரிஸ் நகரம் விதிவிலக்கு) என்பதால் பயண நேரத்திலேயே நானும் என் கணவரும் அன்றைய தினத்தில் எடுத்த புகைப்படங்களை எடிட் செய்து, யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய whatsappக்கு அனுப்பி விட்டு இறங்க தயாராக இருப்போம். பாரிஸில் எடுத்த இரவு நேரப் படங்கள் பலவற்றை Google photosல் சேமிக்காமலேயே அழித்து விட்டேன். [சோகம்]

கீழிறங்கியதும் wifi on செய்து விட்டால் தானாகவே புகைப்படங்கள், செய்திகள் அவரவருக்குப் போய்ச் சேர்ந்து விடும். அறைக்கு சென்றதும் Chargerல் போட்டு விட்டு தூங்க வேண்டியது தான்.

விடுதியில் சென்று இறங்கியதும் நேராக அறைக்கு நான் சென்று விட முடியாது. பத்து பேராவது அவர்களின் புகைப்படங்களை குடும்பத்தினருக்கு attach செய்து அனுப்ப, wifi password போட்டுக் கொடுக்க என உதவி கேட்டு நிற்பார்கள். மீண்டும் காலையில் அனைவருக்கும் முன்னால் தயாராகி loungeல் காத்திருப்பேன். [மேடம் ராத்திரி என் பையனுடன்/பெண்ணுடன் பேசவே முடியவில்லை]

கடைசியாக French leave என்றால் என்ன என அறிந்து கொள்வோமா? வீட்டு வேலைக்கு உதவியாளர் வைத்திருப்பவர்களுக்கு இந்த பதத்திற்கு நான் சொல்லாமலே அர்த்தம் தெரியும். வாரத்திற்கு மூன்று நாட்களாவது முன்னறிவிப்பின்றி வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்வார்களே அது தான் French leave.

மறு நாள் காலை உணவுக்குப் பின் ஜெர்மன் தேசத்தை நோக்கிய ஆறு மணி நேரப் பயணம் ஆரம்பம்.

Frankfurt!

அனுபவங்கள் தொடரும்…


























1 comment:

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...