April 10, 2016
ஐரோப்பியப் பயணத்தின் ஐந்தாவது
நாள்
காலை உணவு முடிந்ததும் பிரான்ஸ் நாட்டை நோக்கிய பயணம் தொடங்கியது. ஏறத்தாழ 260+ கிலோமீட்டர்கள் பயணம். அகலமான சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் எந்த அதிர்வும் தெரியாத சுகமான பயணம்.
கூகுளை பார்த்து நாங்கள் செல்ல போகும் இடங்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருந்தேன் என்று முன்பே குறிப்பிட்டேன்.அவைகளின் அடிப்படையில் மனதில்
பலவிதமான எண்ணங்களை சுமந்த வண்ணம் பயணித்து கொண்டிருந்தேன்.
பேருந்தின் உள்ளே இருந்த monitorல் ஹிந்தி பட பாடல்கள், திரைப்படம் என காண்பிக்கப் பட்டது. விரும்பியவர்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த பெண்மணி பேருந்து கிளம்ப ஆரம்பித்ததும் தூங்க ஆரம்பித்தால் அடுத்ததாக பேருந்து நிற்கும் இடத்தில் தான் கண் விழிப்பார். காரணம் கேட்டேன். வீட்டில் ஓய்வெடுக்க நேரமே இல்லை, இது போல பயணங்களின் போது தான் ஓய்வு என்றார். எங்கள் பின்பகுதி இருக்கைகளில் இருந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்பதால் அரசியல், தங்களின் தொழில் போன்றவற்றை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். பேருந்தின் உள்ளே பயண நேரத்தில் நடமாடக் கூடாது. கேமராவில் பார்த்துக் கொண்டே இருப்பார் வழிகாட்டி.
சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளிகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்கள் நிறைய தென்பட்டன. ஏக்கர் கணக்கில் Daffodil செடிகளை பயிரிட்டிருக்கிறார்கள். நிலக்கடலை, பருத்தி போல இவைகள் பணப்பயிர்கள். Daffodil மலர்கள் பல மருத்துவ குணங்களை கொண்டது; Alzheimer நோய்க்கு மருந்து தயாரிக்க உதவுகிறது என்பதால் பரவலாக பயிரிடப் படுகிறது என்று அறிந்தேன். குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற முடியும் என்பது மற்றொரு காரணம்.
மஞ்சள் வண்ண daffodil மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருந்தன. சாலையின் இரு பக்கமும் மஞ்சளும் பச்சையும் கலந்த காட்சி கொள்ளை அழகு. காற்றுக்கு அவைகள் தலையசைத்து கொண்டிருந்ததை கண்ட போது பள்ளி நாட்களில் படித்த William Wordsworth எழுதிய Daffodils என்னும் கவிதை தான் நினைவுக்கு வந்தது.
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
நாங்கள் சென்ற ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தேசத்தில் மட்டும் கிராமங்களில் நம் ஊர் தெரு முனையில் பிள்ளையார் கோவில் இருப்பது போல ஊருக்குள் செல்லும் தெருவின் முனையில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. பிரான்ஸ் தேசம் வரலாற்று சிறப்பு மிக்கது என்பது நாம் அறிந்ததே. ஆங்காங்கே பழங்கால கோட்டைகளும் தென்பட்டன. ஊருக்கு வெளியே தொழிற்சாலைகளும் ஊருக்குள்ளே நுழைந்ததும் 1 + 4 /5 அடுக்கு கொண்ட ஒரே மாதிரியான வெளித் தோற்றம் (façade — fazaad என்பது அதன் உச்சரிப்பு) கொண்ட கட்டிடங்களும் தென்பட தொடங்கின.
பாரிஸ் நகரம் திட்டமிட்டு கட்டப் பட்டுள்ளது. வரிசையாக அழகாக அடுக்கி வைக்க பட்டது போல கட்டிடங்கள் உள்ளன. காண கண்கொள்ளா காட்சி. வேறெந்த ஐரோப்பிய நகரத்திலும் இது போல காணவில்லை.
இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டு Eiffel Tower ஐக் காண கிளம்பினோம். ஆங்கிலம் பேசத் தெரிந்த பாரிஸ்
நகரை சேர்ந்த ஒரு பெண் வழிகாட்டி எங்களுடன் சேர்ந்து கொண்டார். நாங்கள் சென்ற தினத்தில் வானம் நீல நிறத்தில் மிதமான வெய்யிலுடன் குளிரில்லாமல் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தான் குளிர் நாடுகளில் பனிப் பொழிவு /குளிர் குறைந்து வசந்த காலம் தொடங்கும் என்று முன்பே குறிப்பிட்டேன். அதனால் மேலை நாட்டு மக்களுக்கு வெயில் என்பது மிகவும் பிடித்தமானது. குடும்பம் குடும்பமாக ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள். மொத்தத்தில் நாங்கள் சென்ற தினத்தில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிய , நாங்கள் நிதானமாக நகருக்குள் பயணித்தோம்.
[வெய்யிலை பற்றிக் கூறியதும்
மற்றொரு செய்தியையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். மக்கள் கரீபியன் தீவுகளுக்கு
Cruise கப்பல்களில் ஏன் செல்கிறார்கள் என பல வருடங்கள் எனக்கு புரியாமலே இருந்தது.
Netflixல் அந்த தீவுகளை மையமாக வைத்து எடுக்கப் பட்ட ஒரு தொடரைக் காண நேர்ந்தது. அதில்
ஒரு காட்சியில் தொலைக்காட்சியில் வானிலை அறிக்கையில் ஒரு வாரத்திற்கான வெப்ப நிலையை
காட்டுவார்கள். 92,93,90,94 என 90 டிகிரிக்கும் மேலே வெய்யில். அதை கண்ட பிறகு தான்
குளிர் நாட்டு மக்கள் வெய்யிலுக்காக தான் அங்கே செல்கிறார்கள் என்பது. Cruise கப்பலின்
மாலுமியை பார்த்து ஐயா கப்பலை எங்கள் சென்னையை நோக்கி திருப்புங்கள் டிசம்பர் மாதத்தில்
கூட எங்கள் ஊரில் 90 டிகிரிக்கு குறையாது என்று சொல்ல தோன்றியது. வெய்யில் இயற்கை நமக்களித்த
வரம். சுற்றுலா, மின்சாரம் தயாரித்தல் என வருமானம் ஈட்டித் தரும் ஒரு சாதனம் ஆனால்
நாம் அதை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்பது வருத்ததிற்குரியது.]
நகரின் ஆரம்பம் மற்ற நகரங்களைப் போலவே இருந்தது என கூறலாம். ஐபல் கோபுரம் சற்று தொலைவில் ஓரிடத்தில்(view point) நின்று பார்த்தால் நன்றாக தெரியும் அங்கிருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் பிறகு அருகில் செல்லலாம் என்று கூறினார் வழிகாட்டி. பேருந்தை விட்டு கீழே இறங்குவதற்கு முன் இந்த நகரில் திருடர்கள் நிறைய இருக்கிறார்கள் அனைவரும் பாஸ்போர்ட் பணம் முதலியவற்றை மிக பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் பேருந்தின் கதவு எலெக்ட்ரானிக் பூட்டினை உடையது அதனால் பேருந்தின் உள்ளேயே வைத்து விட்டு செல்லுங்கள் அது தான் மிக மிகப் பாதுகாப்பானது. ஓட்டுனர் பேருந்தின் அருகிலேயே தான் இருப்பார். கவனக் குறைவாக இருக்காதீர்கள் என்று வழிகாட்டி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காமிராவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.[பாரிஸ் நகரில் திருடர்கள் அதிகம் என கிளம்புவதற்கு முன்பே பல முறை கூறி இருந்தார்கள்.]
அந்த இடத்திலிருந்து பார்க்கையில்
தொலைவில் ஐபல் கோபுரம் தெரிந்தது. அதன் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
அச்சமயம் ஒரு இசைக் குழுவினர் அங்கே வந்து பாடி நடனம் ஆடத் தொடங்கவே நம் மக்களின் கவனம்
அவர்களிடம் சென்று விட்டது. ஐபல் கோபுரம் இருந்த திசைக்கு எதிர்புறமாக திரும்பி வேடிக்கை
பார்க்க ஆரம்பித்தார்கள். [கவனக் குறைவு ஏற்படுத்தும் முயற்சி]
பலரும் பேருந்தின் அருகே சென்று
விட்டோம். அப்போது எங்கள் ஓட்டுனர் மற்றும் வழிகாட்டி பயணியர் சிலருடன் தீவிரமாக பேசிக்
கொண்டிருந்தார்கள். எங்களுடன் வந்த வயதில் மூத்த பெண்மணியின் 800 யூரோக்கள் அவரது கைப்பையிலிருந்து
களவாடப் பட்டு விட்டன என அறிந்தோம். ஒரு இளம் பெண் நாகரிகமான உடையில் அருகில் நடந்து
சென்றது மட்டும் தான் தனக்கு தெரியும் எப்போது களவாடினார் என தெரியவில்லை என்று கூறினார்
பணத்தை தொலைத்த பெண்மணி.
சுற்றுலா பயணிகள் க்ரெடிட்
கார்டுகளை பயன்படுத்த மாட்டார்கள் கையில் பணம் வைத்திருப்பார்கள் என்பதால் திருடர்களுக்கு
அவர்கள் தான் இலக்கு (target) குறிப்பாக வயதானவர்கள்.
வழிகாட்டி அவ்வளவு வலியுறுத்தியும்
அந்தப் பெண்மணி பணத்தை கையில் வைத்துக் கொண்டே இறங்கியிருக்கிறார். நல்ல வேளையாக பாஸ்போர்ட்
திருடப்படவில்லை. அருகிலேயே போலீஸ் பூத் இருந்தும் திருட்டுக்கள் தொடர்ந்த வண்ணம் தான்
உள்ளன. அங்கிருந்த போலீசார் அனைவரையும் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தார்கள். அவர்களுக்கு
திருடர்களை அடையாளம் தெரிந்திருந்தது போல.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்து
விட்டு வந்தார் பணம் திரும்ப கிடைக்க மாதக் கணக்கில் அங்கேயே தங்கி follow-up செய்ய
வேண்டும். அது சாத்தியமில்லையே. அந்த பெண்மணியுடன்
அவரது உறவினரும் பயணித்ததால் பணத்தைப் பற்றிய கவலை இல்லாமல் அவரால் தொடர்ந்து பயணம்
செய்ய முடிந்தது.
பயண நேரத்தில் வழிகாட்டி சொல்வதை மிக கவனமுடன் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் இது போன்ற தேவையற்ற சங்கடங்களை சந்திக்க நேரிடும். குழுவாக பயணிக்கும் நேரத்தில் நம்மால் மற்றவர்களுக்கும் தொல்லை. சென்னை திரும்பும் வரையில் அந்த பெண்மணி அதை பற்றிய நினைவுடனேயே பயணித்தார். பாவமாக இருந்தது. என் பங்குக்கு நானும் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வந்தேன் சென்னை வரும் வரை.
வருத்ததுடன் கிளம்பி ஐபல் கோபுரத்தை
காண புறப்பட்டோம். பாரிஸ் நகரம் 20 arrondissementகளாகப்
பிரிக்கப் பட்டுள்ளது. நம் ஊர் வார்டு(Ward) போல என வைத்துக் கொள்ளலாம். முதலாவது arrondissement
Notre Dame தேவாலயத்தில் தொடங்குகிறது.
அதிலிருந்து மொத்த நகரத்தையும் spiral வடிவில் பிரித்துள்ளார்கள். Travel Wiki யில்
பார்த்த புகைப்படத்தை இணைத்துள்ளேன்.
[French road system’s ”Point Zéro”
spot is on
the ground in front of the Notre Dame (since 1924)]
நகரின் மையப் பகுதி 1, 2,
3, 7, 8 ஆகிய பகுதிகளில் உள்ளன. [என் கணிப்பை விக்கியுடன் ஒப்பிட்டு பார்த்தேன் சரியாக
உள்ளது].
செல்லும் வழியில் முதலாம் arrondisementல் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற லூவர் அருங்காட்சியகத்தை [Musée du Louvre] வெளியிலிருந்தே கண்டோம். அது Siene நதியின் தென் கரையில் அமைந்துள்ளது. நகரின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. Palais Louvre தான் தற்சமயம் Musee De Louvre ஆக செயல்படுகிறது. [Palais – அரண்மனை, Musée – அருங்காட்சியகம்]
முற்காலத்தில்
அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் தற்காலத்தில் 5 ஸ்டார் விடுதிகளாகவும் அருங்காட்சியகங்களாகவும்
செயல்படுகின்றன. [இந்தியாவிலுள்ள மைசூர், ஜெய்பூர் நகர அரண்மனைகள் தற்சமயம் 5 ஸ்டார்
விடுதிகளாக உள்ளன.]
அதன் முன்பகுதியில் கண்ணாடி பிரமிடு ஒன்று உள்ளது. முன்பதிவு அனுமதி சீட்டுக்கள் பெற்றவர்கள் பிரமிடின் உள்ளே பூமிக்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுக்கள் மூலமாக அருங்காட்சியகத்தின் உள்ளே செல்லலாம். அவை அந்த கட்டிடத்தின் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன என்று அங்கே சென்று மோனலிஸாவைப் பார்த்த என் சகோதரி கூறினார்.
[Dan Brown எழுதிய
Da vinci Codeன் முதல் அத்தியாயம் இந்த அருங்காட்சியகத்தின் மோனாலிஸா ஓவியத்தில் ஆரம்பித்து
கடைசி அத்தியாயம் பிரமிடுக்குள் முடியும்.
அந்தப் புத்தகத்தை
படிக்காதவர்கள் Netflixல் LUPIN என்னும் தொடரைப் பாருங்கள். முதல் காட்சியே இந்த அருங்காட்சியகமும்
மோனாலிஸா ஓவியமும்,பிரமிடுக்குள்ளே நடக்கும் நிகழ்வுகளும் தான். மிக விரிவாகக் படமெடுத்திருக்கிறார்கள்.
லூவர் அருங்காட்சியகத்தில்
38,000 பொருட்களும் 15,000 கலை சம்மந்தப்பட்ட பொருட்களும் உள்ளன என விக்கிபீடியா கூறுகிறது.
வழிக்காட்டியிடம் அங்கே ஏன் அழைத்து செல்லவில்லை என கேட்ட போது உள்ளே சென்று முழுமையாக சுற்றிப் பார்க்க 6 மாதங்கள் தேவைப்படும் என்றார் வெளித் தோற்றமே மிரட்டலாக உள்ளது. வழிகாட்டி சொன்னது உண்மை தான்.
ஐரோப்பாவிலேயே
சிறந்த அருங்காட்சியகம் ஒன்றிற்கு அழைத்து செல்ல போகிறேன் அது வரை பொறுமையாக இருங்கள்
என்று கூறினார். எங்கள் பயணத் திட்டத்தில் லூவர் அருங்காட்சியகம் இல்லை என்பதில் இன்றளவும்.
எனக்கு மிகுந்த வருத்தம்
[Museum சென்று
பார்ப்பதில் என்னை விட அதிக ஆர்வம் கொண்ட என் பேரனுடன் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
ஐரோப்பிய நகரங்களின் முக்கிய அருங்காட்சியகங்களையும் காண விரும்புகிறேன். ஏன் அவருடன்
செல்ல விரும்புகிறேன் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
ஏழு வயது பேரனும்
நானும் மட்டும் தண்ணீர் பாட்டிலுடன் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசாங்க
அருங்காட்சியகத்துக்கு சென்றோம்.
அருங்காட்சியகத்தின்
7 பகுதிகளில் முதலாம் பகுதியை மட்டும் என் பேரன் 4 மணி நேரங்கள் பார்த்தார் மற்ற பகுதிகளையும்
பார்க்கலாம் என கூறியதும் இன்னும் நான் இந்த பகுதியின் மாடியில் உள்ளவைகளை பார்க்கவே
இல்லை அதற்குள் அவசரப் படுத்துகிறீர்கள் என்று கோபித்துக் கொண்டார்.
தற்சமயம் 12 வயதாகும்
அவர் அடுத்த முறை சென்னை வரும் சமயம் மற்ற பகுதிகளைக் காண்போம் என நினைக்கிறேன்.]
பாரிஸ் நகரின்
மையப் பகுதிகளில் உள்ள தெருக்களின் பெயர்கள் palais அல்லது musee என்று முடிகிறது.
(Palace, Museum). அரண்மனைகளுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் இங்கே பஞ்சமே இல்லை.
பாரிஸ் நகரம் வரலாற்று
சிறப்பு மிக்க நகரம் அரண்மனைகளுக்கும் கோட்டை கொத்தளங்களுக்கும் பிரான்ஸ் தேசத்தில்
பஞ்சமே இல்லை. வழியெங்கும் புராதனமான முகப்பு தோற்றம் ஒரே மாதிரியாக அமைந்த கட்டிடங்கள்
உள்ளன. கட்டிடங்களின் முகப்பு, ஜன்னல் கதவுகளின் Grill வேலைப்பாடுகள் திறம்பட செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது arrondisementல் Palais Garnier என்னும் பெயருடைய 1979 பேர் அமரக் கூடிய Opera House ஐக் கடந்து சென்றோம். இது Napoleon III ஆல் தோற்றுவிக்கப் பட்டது. தற்சமயம் Paris Opera Library Museum ம் அங்கே செயல்படுகிறது.
https://en.wikipedia.org/wiki/Palais_Garnier
பாரிஸ் வழிகாட்டி ஊரை சுற்றிக் காட்டிய வண்ணம் எங்களை ஐபல் கோபுரத்தை காண அழைத்து
சென்றதால் நாங்கள் கண்ட பல இடங்களையும் பற்றி இங்கே கூற வேண்டி உள்ளது. பொறுமையாக இவற்றை
கடந்து ஐபல் கோபுரத்தை காண செல்லலாம்.
நாங்கள் கடந்து சென்ற பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டிடங்களும் ஏதோ ஒரு விதத்தில்
சிறப்பு பெற்றதாக உள்ளன. நிதானமாக சென்ற பேருந்தில் அமர்ந்த வண்ணம் கண்டு களித்தேன்.
[மற்றவர்கள் என்ன நினைத்தார்கள் எதை ரசித்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.] தெருக்களில்
வெள்ளை கோடுகள் மற்ற நகரங்களைப் போல அதிகம் காணப்படவில்லை
அடுத்து Arc De Triomphe எனப்படும் ஒரு Triumphal arch ஐக் கடந்து சென்றோம். மாவீரன் நெப்போலியனின் வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் கட்டப்பட்ட அது Gate way of India arch போன்ற அமைப்பில் உள்ளது. மிகுந்த கலை நயத்துடன் விதம் விதமான சிற்பங்களுடன் கூடிய இந்த நினைவுச் சின்னம் பாரிஸ் நகரின் பெருமிதம் எனக் கூறினால் மிகையாகாது. இது Avenue des Champs-Élysées என்னும் பெயருடைய 1.9 கிலோமீட்டர் நீளமும் 70 மீட்டர் அகலமும் கொண்ட சாலையின் மேற்கு பகுதியில் உள்ளது.
50 மீட்டர் உயரமுடைய
இந்த சின்னம் பிரஞ்சு புரட்சி மற்றும் நெப்பொலிய போர்களில் சண்டையிட்டு மாண்ட வீரர்கள்
மற்றும் தலைவர்களை கௌரவிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. பிரான்சு தேசம் பெற்ற வெற்றிகள்,
அவைகளில் பங்கு பெற்ற ஜெனரல்களின் பெயர்கள் இந்த சின்னத்தில் பதிக்கப் பட்டுள்ளது.
இதன் கீழே முதலாம் உலகப் போரில் மாண்ட பெயர் தெரியாத வீரர் ஒருவரின் சமாதியும் உள்ளது.
[மொத்தம் மூன்று நெப்போலியன்கள். நெப்போலியன் 1(Napoleon Bonaparte)—இவர் தான் நாம்
அனைவரும் அறிந்த பிரசித்தி பெற்ற மாவீரன் நெப்போலியன், நெப்போலியன் 2—இவரது மகன், நெப்போலியன்
3—இவரது சகோதரி மகன்]
பிரான்சு நாட்டில் 1880 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் ஜுலை 14 ஆம் தேதி ராணுவ தினமாகக் கொண்டாடப் படுகிறது.(Bastille day) அந்த தினத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு (Military Parade) இங்கிருந்து (Place Charles de Gaulle) தொடங்கி Avenue des Champs-Élysées ஐக் கடந்து Place de la Concorde என்னும் இடம் முடிய 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது.
இத்தனை சிறப்பு பெற்ற இந்த வளைவானது 8,16,17 ஆம் arrondissementகளுக்கு நடுவில்
12 லேன்கள் உடைய மிகப் பெரிய வட்டப் பாதையாக (roundabout) ஆக உள்ளது. இந்த இடத்தில்
Traffic signal கிடையாது என்பதால் இந்த நுழைவாயிலின் அருகே எப்போதும் போக்குவரத்து
குழப்பம் (chaos) தான். யார் வலது பக்கமாக வருகிறார்களோ அவர்கள் முதலில் செல்லலாம்
(Right is Right) மிகுந்த கவனமாக செல்ல வேண்டிய பகுதி என்று வழிகாட்டி கூறினார்.
இது பற்றி நிறைய விடியோக்கள் Youtube ல் உள்ளன.
இந்த நுழைவாயிலின் உள்ளே படிக்கட்டுகள் உள்ளன. அனுமதி சீட்டு வாங்கி மேலே ஏறி
மக்கள் பாரிஸ் நகரை, சூரிய அஸ்தமனத்தை காண்கிறார்கள். அந்த பகுதியில் நடந்தும் சைக்கிளிலும்
வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்திக் காட்டியது.
இந்த பகுதியை கடக்கும் சமயம் என் கணவரிடம் digital cameraவை கொடுத்து புகைப்படம்
எடுக்க சொன்னேன். இரவில் விடுதிக்கு சென்று அவைகளைப் பார்த்த போது சலங்கை ஒலி என்னும்
திரைப்படத்தில் ஒரு குட்டி பையன் கதாநாயகன் நடனம் ஆடுவதை புகைப்படம் எடுக்கிறேன் என்று
அவரது தலை, கை, கால் என தனித் தனியாக எடுத்திருப்பார். அதே போல இந்த வளைவை பகுதி பகுதியாக
எடுத்திருந்தார் என் கணவர்.[ பேருந்து நகர்ந்து கொண்டே இருக்கையில் எப்படி புகைப்படம்
எடுப்பது என்பது அவரது வாதம். அதே வளைவை மீண்டும் பல முறை கடந்து செல்வோம் என எனக்கு
அப்போது தெரியாது.]
ஒரு வழியாக அந்த வளைவை தாண்டினோம். இதோ வந்து விட்டது உலகின் மிக அழகான avenue
(இரு பக்கமும் மரங்கள் உள்ள அழகான சாலை என்பது பொருள்)
எட்டாவது arrondissement
ல்
அமைந்துள்ள Avenue des Champs-Élysées என்னும் பெயருடைய அந்த சாலை இருபக்கமும் மரங்கள் அமைந்த 1.9 கிலோமீட்டர் நீளமும்
70 மீட்டர் அகலமும் கொண்டது.
இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களால் பாடி சிறப்பிக்கப்பட்ட சாலை இது. ஆங்கில இலக்கியப்
பாடத்தில் பனி பொழியும் ஒரு நாளில் இந்த தெரு எப்படி பனியால் மூடப்பட்டு இருந்தது அதன்
விளக்குகளின் வெளிச்சம் எப்படி மங்கலாக தெரிந்து சாலையின் பொலிவைக் குறைத்தது மக்கள்
சூதாட்ட விடுதிகளுக்கு செல்கிறார்கள் வாழ்வை வீணாகக் கழிக்கிறார்கள் என்னும் பொருளில்
அமைந்த ஒரு கவிதையில் அந்த காலத்தின் நடப்பை எழுதி இருப்பார் கவிஞர். “As the
mercury goes down” என்னும் வரிகளுக்கு பேராசிரியர் வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகமானது
என்று விளக்கம் அளிக்காமல் வேறு மாதிரி விளக்கம் அளித்தார். அதனால் அந்த கவிதை என்
மனதில் நன்றாகப் பதிந்து விட்டது. [கவிஞர் மற்றும் கவிதையின் பெயர் நினைவில்லை.]
Tour de
France எனப்படும் சைக்கிள் போட்டியின் இறுதிப் பகுதி இந்த அவின்யூவில் தான் ஆண்டுதோறும்
நடைபெறுகிறது. Paris Metro Line 1 இந்த அவின்யூவின் கீழே செல்கிறது.
இந்த சாலை தியேட்டர்கள், 3 Star Michelin உணவகங்கள், ஆடம்பர பொருட்கள் விற்கும்
கடைகள், சூதாட்ட விடுதிகள்(Casino) மற்றும் காபரே நடன விடுதிகளுக்கு பிரசித்தி பெற்றது. உதாரணத்திற்கு இந்த அவின்யூவில் உள்ள சில
Designer brand கடைகள்: Adidas Zara,
Nike, Levi's, Marks & Spencer, Louis Vuitton, Dior, Celio. J Tiffany &
Co. Swarovski, Renault, Toyota, Mercedes (car
show-rooms, Book and music store FNAC
பாரிஸ் Gastronomyக்கு பிரசித்தி பெற்றது. (Gastronomy-சிறப்பாக உண்ணும் அல்லது
சமைக்கும் கலை) உலகிலேயே அதிகமான 3 Star Michelin உணவகங்கள் பாரிஸ் நகரில் தான் உள்ளன
என சமீபத்தில் படித்தேன். ரெஸ்டாரன்டுகளின் தரைத்தை அடிப்படையாக வைத்து இந்த
Michelin ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன. «—A very good restaurant, ««—Excellent cooking that is worth a
detour, «««—Exceptional cuisine that is worth a
special journey. பாரிஸ் நகரில் ரெஸ்டாரன்டு ஆரம்பித்து 3 Michelin Star வாங்க வேண்டும்
என்பது சமையற்கலை பற்றிப் படிக்கும் பலரின் கனவாக உள்ளது.
எட்டு லேன்கள் உள்ள இந்த அவின்யூவில் ஒரு மணி நேரத்திற்கு 3000 வாகனங்கள் செல்வதால் காற்று மிகுந்த அளவில் மாசுபடுகிறது. உலக பிரசித்தி பெற்ற Designer கடைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தே இதற்குக் காரணம். 2016 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாத முதல் ஞாயிற்றுக் கிழமையும் போக்குவரத்து இங்கே தடை செய்யப் பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இந்தப் பகுதியில் 200 ஏக்கர் அளவிற்கு மரங்களை நட பிரான்சு அரசு தீர்மானித்துள்ளது.
ஐபல் கோபுரத்தை
நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். வழியில் Grand Palais கண்ணில் படுகிறது. இது Champs-Elysees ல் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்பு மிக்க அரண்மனை. தற்சமயம் அது பொருட்காட்சிகள் (exhibitions) நடைபெறும் இடமாகவும்
அருங்காட்சியகமாகவும் (museum) செயல்படுகிறது. பெயருக்கேற்ப பிரம்மாண்டமான அரண்மனை.
அலெக்சாண்டர் பாலத்திற்கு அருகில் அமைந்திருக்கும் Public Square தான் Place de la Concorde. அங்கே தற்சமயம் ரங்கராட்டினம்(Giant wheel), கில்லடின் காட்சிகள் (Scene of executions), நீரூற்றுக்கள் (Fountains), சிலைகள்(statues) மற்றும் Obelisk வடிவில் அமைந்துள்ள நினைவுத் தூண் ஆகியவைகள் உள்ளன.
இந்த இடம் முடிய
Bastille day military parade நடைபெறும் என்று முன்பே அறிவோம். இந்த இடத்தில் உள்ள
3300 வருடங்கள் பழமையான Obelisk of Luxor தூண் எகிப்து அரசரால் 1829ல் பிரான்சு நாட்டிற்கு
அன்பளிப்பாகத் தரப்பட்டது. இந்த தூணானது செவ்வக வடிவில் மஞ்சள் நிற கிரானைட் கல்லால்
அமைந்திருக்கிறது தூணின் மேல் பகுதியில் சிறிய பிரமிட் இருக்கிறது. அந்த பிரமிட் பகுதி
தங்கத்தால் ஆனது. அதன் பீடத்தில் எந்தெந்த முறைகளில் என்னென்ன பொருட்களை உபயோகித்து
இந்த தூணை எகிப்திலிருந்து கப்பலில் கொண்டு வந்தார்கள் என பொறிக்கப் பட்டுள்ளது. எகிப்தில்
லக்சர்[LUXOR} என்னும் ஊரிலுள்ள கோவிலின் நுழை வாயில் தூண்கள்.
ஒரே மாதிரியான
இரண்டு தூண்கள் பரிசளிக்கப் பட்டனவாம். எகிப்திலிருந்து 23 மீட்டர் உயரமும் 250 டன்கள்
எடையும் கொண்ட தூணை கொண்டு வருவது அந்த காலகட்டத்தில் சிரமமாக இருந்ததால் ஒரு தூண்
மட்டும் பிரான்சு வந்து சேர்ந்துள்ளது மற்றதை சில வருடங்களுக்கு முன்பு எகிப்திற்கே
அன்பளிப்பாக திருப்பி அளித்து விட்டது பிரான்சு அரசு. [திருப்பி கொடுக்க எதுவும் இல்லை
வாய் வார்த்தைகள்தான் அந்த தூண் இன்றளவும் எகிப்தில் தானே இருக்கிறது?]
இந்த வடிவ தூணை
முக்கியமான நிகழ்வினை நினைவு கூறும் வகையில் அமைப்பார்கள். Place de la Concorde வில்
அது போன்ற தூணை வைக்கும் அளவிற்கு என்ன முக்கியமான நிகழ்வு நடைபெற்றது என தெரிந்து கொள்வோமா?
17 ஆம் நூற்றாண்டில்
பிரான்சு தேச இளவரசர் லூயி அகஸ்டேவை ஆஸ்திரிய இளவரசி மேரி அன்டாய்னெட் அரசியல் காரணங்களுக்காகத்
திருமணம் செய்து கொள்கிறார். லூயியின் தந்தை அம்மை நோயினால் இறந்து விட லூயி அகஸ்டே
பதினாராம் லூயி (Louis XVI) என்னும் பெயருடன் அரசராகிறார். Verseilles நகரம் பிரான்சு
தேசத்தின் தலை நகரமாக இருந்த காலம் அது. அரசி ஆடம்பரப் பிரியை. லூயி மன்னர் தன் மந்திரிகள்
மற்றும் அரசியாரின் விருப்பத்திற்கிணங்க அரசு புரிகிறார். அரசியின் ஆடம்பர செலவுகளுக்காகவும்
பிற அரசாங்க செலவுகளுக்காகவும் மக்களிடம், குறிப்பாக விவசாயிகள்/கீழ்த்தட்டு மக்களிடம்
அதிக வரி வசூலிக்கிறார் நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ரொட்டிக்கு மாவு இல்லை
என்று மக்கள் போராட்டம் நடத்த அரசி அவர்களை கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று கூறுகிறார்.
அதை தொடர்ந்து
1789 ஆம் ஆண்டு புரட்சி வெடிக்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றுகிறார்கள்.
புரட்சி அரசாங்கம் கில்லட்டின் என்னும் கொலைக் கருவியை Place de la Concorde பகுதியில்
நிறுவி அரச குடும்பத்தினர், மேட்டுக் குடிமக்கள் என குடும்பம் குடும்பமாக கில்லடினுக்கு
இரையாக்குகிறார்கள். கில்லட்டின் என்பது கூர்மையான தலையை வெட்டும் கருவி வைத்துக் கொள்ளலாம்.
1893ல் பதினாராம்
லூயி மன்னனும் அரசி மேரி அன்டாய்னெட்டும் கில்லட்டினுக்கு இரையானார்கள்.
அந்த இடத்தில்
தான் இன்று நாம் காணும் Obelisk of Luxor தூண் நினைவு
சின்னமாக வைக்கப் பட்டுள்ளது.
[1. பிரஞ்சு புரட்சி
பற்றியும் அந்த காலகட்டத்தில் அரச குடும்பத்தினரை காப்பாற்ற எந்த மாதிரியான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன என்பது பற்றி அறிய Baroness Orczy எழுதிய The Scarlet Pimpernal நாவலைப்
படியுங்கள். ஒன்பதாம் வகுப்பு Matriculation Syllabus இருந்த சமயம் Non-detail ஆக இருந்தது.
மேடம் மூன்றாவது அத்தியாயத்திற்கு summary எழுதி தாருங்கள் எனக் கேட்ட என் மாணவர்களுக்காக
முதலாம் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கும் வரை கீழே வைக்க மனம்
வரவில்லை. மிகவும் ரசித்த, பல வருடங்களாகியும் மறக்காத கதை.
2. வட அமெரிக்காவின்
லாஸ் வேகாஸ் நகரில் உள்ள சூதாட்ட விடுதிகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு கருவுடன்(theme)
அமைக்கப் பட்டுள்ளன. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் Luxor Hotel &
Casino. என்னும் விடுதி பிரமிட் வடிவில் உள்ளது. அதன் வாசலில் Luxor தூண் இருக்கும்.
கூடுதலாக ஒரு தகவலையும் இங்கே கூறி விடுகிறேன். இந்த விடுதியில் Titanic கப்பலில் கண்டெடுக்கப்
பட்ட பொருட்களுக்கான museum உள்ளது.]
பதினாறாம் லூயி மன்னன் மற்றும் மேரி அன்டாய்னெட்டின் நினைவுகளுடன் தற்சமயம் சீன் (Seine) நதிக்கரையின் அருகே வந்து விட்டோம். குறுக்கே இருக்கும் Pont Alexande III என்னும் புகழ் பெற்ற பாலத்தைக் கடந்து சிறிது தொலைவு சென்றால் ஈபில் கோபுரம் வந்து விடும். இந்த பாலம் Champ Elyseesஐ ஐபல் கோபுரம் மற்றும் Des Invalides உடன் இணைக்கிறது.
இந்த பாலத்தின் இருபுறமும் 4 தூண்கள் அவற்றின் மேல் தங்கப் பூச்சுடன் கூடிய சிலைகள், பாலத்தின் நடுவில் சிலைகள் என மிகுந்த கலை நயத்துடன் அமைந்திருக்கும் பாலம் இது. பாலத்தின் கீழே படகுகள் செல்லும் காட்சி மனதை கொள்ளை கொண்டது. அந்த காலத்து அரசர்கள் மக்களின் விலையுயர்ந்த கலைப் பொருட்களை வைத்து நகரை அழகு படுத்தி வைத்தது சாதாரண விஷயம் இல்லை. அதை விட இன்றளவும் அவைகள் சிறப்பாகப் பரமரிக்கப் படுவது தான் மகிழ்ச்சிக்குறியது. அந்த தூண்களின் கலையழகை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அவ்வளவு கம்பீரமாக உள்ளது அந்த பாலம்.
சீன் நதி உட்பட
இது வரை நாம் பார்த்த பல இடங்களும் World Heritage Places ஆக அங்கீகரிக்கப் பட்டவை.
நெருங்கி விட்டோம்
…இதோ….
ஐபல் கோபுரம்
!
Eiffel - EYE-fal என உச்சரிக்க வேண்டும். என்று
சொல்கிறது phonetics.
La dame de fer (Iron Lady என்பது பொருள்) என செல்லமாக பிரான்சு மக்களால் குறிப்பிடப்படும் இந்த கோபுரம் Gustave Eiffel என்னும் பொறியாளரின் நிறுவனத்தால் 1889 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட உலகப் பொருட்காட்சிக்கான நுழைவாயிலாக உருவாக்கப்பட்டது. உருவாக்கியவரின் பெயரையே அந்த கோபுரம் பெற்றுள்ளது. உலகிலேயே பணம் கொடுத்து மிக அதிக மக்களால் பார்க்கப்படும் நினைவுச் சின்னம் இந்த கோபுரம் தான்.[Gustave Eiffel அவர்கள் தான் அமெரிக்க தேசத்தில் உள்ள சுதந்திரதேவி சிலையின் உள்ளமைப்பை வடிவமைத்தவர்.]
ஐபல் கோபுரம் 324 மீட்டர்கள் உயரம் உடையது (81 மாடிகள்
அளவு.) அதில் 276 மீட்டர்கள் வரை பொது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். அதற்கும் மேலே
ரேடியோ, தொலைக்காட்சி நிலையங்களின் transmitterகள் உள்ளன.இந்த கோபுரம் பாரிஸ் நகரிலேயே
உயரமானது.
இந்த கோபுரம் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம்
நிலை என அமைந்துள்ளது. சரிவான பகுதியில் ஏறினால் முதல் இரண்டாம் நிலைகள். மேலே உயரே
உச்சியிலே ….மூன்றாம் நிலை.[இது தான் European Union னின் மிக உயரமான Observation
Deck]
பேருந்திலிருந்து இறங்கி கோபுரத்தின் பின்புறமாக நடந்து சென்று அதன் அடிவாரத்தில் மின் தூக்கிக்கான வரிசையில் சேர்ந்து கொண்டோம். அதன் அருகில் நீண்ட வரிசை. இந்த கோபுரத்தை மேலே சென்று காண எப்போதும் கூட்டம் அலை மோதும் என்று கேள்விப் பட்டேன். இதன் சதுரமான அடிப்பாகத்திலிருந்து முதல் தளம் 125 மீட்டர்கள் உயரம் உடையது. சதுரத்தின் ஒரு பக்கத்தில் அனுமதி சீட்டுக்கள் விற்கும் பகுதி கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற தினத்தில் வானம் தெளிவான நீல நிறத்தில் காணப்பட்டது. வெப்பம் அதிகமாக இருந்தால் மக்களுக்கு உற்சாகம் தான் அங்கே. இந்த பகுதியில் ஆப்பிரிக்க மக்கள் நிறைய தென்பட்டார்கள்.[உள்ளூர்வாசிகள்]
கோபுரத்தின் ஒரு கால் அருகில் அனுமதி சீட்டு அலுவலகம்,
ஒரு காலில் சிவப்பு நிற மின் தூக்கி, மற்றொரு காலில் மஞ்சள் மின் தூக்கி, நான்காவது
காலில் படிக்கட்டுகள் என ஆரம்பிக்கின்றன. மேல் வரை செல்ல 700 படிக்கட்டுகள். முடிந்தவர்கள்
அதற்கான அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு மேலே ஏறி செல்லலாம். மின் தூக்கிகள் அமைப்பதற்கு
முற்பட்ட நாட்களில் Gustave Eiffel படிக்கட்டுகளில் மேலேறி வந்து வேலைகளை மேற்பார்வை
செய்வாராம்.
கோபுரத்தின் முன் பகுதியில் நீரூற்றுக்களுடன் கூடிய
பூங்கா உள்ளது.
எங்களின் அனுமதி சீட்டுக்கள் 6 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப் பட்டதால் அங்கே சென்றவுடன் எங்கள் கையில் கொடுக்கப் பட்டது. (17 யூரோக்கள்). உயரமான இடங்களில் எப்போதும் குறிப்பிட்ட அளவில் தான் மக்களை அனுமதிப்பார்கள். மேலே சென்றவர்கள் இறங்கி வந்ததும் 30 நிமிடங்களில் நாங்கள் அனுமதிக்கப் பட்டோம். கோபுரத்தின் நேர் கீழே காத்திருந்த நேரத்தில் அதன் அடிவாரத்தின் வேலைப்பாடான பீடம், ஐபல் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள், அவரது கழுத்தளவு சிலை, hydraulic lift mechanism வைக்கப்பட்டிருக்கும் சிறு அருங்காட்சியகங்கள் என பார்த்து, படித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நின்றிருந்தோம். கோபுரத்தின் உயரத்தை தலையை உயர்த்தி வேடிக்கை பார்த்தோம்.
இந்த கோபுரம் நிர்மாணிக்கப் பட்ட காலத்தில் சிவப்பு வர்ணம் பூசப்பட்டு காட்சியளித்தது. காலப் போக்கில் பல shades மாற்றப் பட்டு தற்சமயம் பாரிஸ் நகரின் தோற்றத்திற்கு ஒத்துப் போகும் நிறத்தில் (matching color) வர்ணம் பூசப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிறத்திற்கு Eiffel tower brown என்றே பெயர். அடிப்பாகத்தில் அடர்த்தியாகவும் மேலே செல்ல செல்ல அடர்த்தியின் அளவைக் குறைத்தும் மூன்று விதமான toneகளில் வர்ணம் பூசப்படுகிறது. [Darkest at the bottom and lightest at the top] இந்த முறையில் வர்ணம் பூசப்படுவதால்தான் நாம் பார்க்கும் போது கோபுரம் மேலிருந்து கீழ் வரை ஒரே வர்ணத்தில் தெரியும்
இரும்பினால் ஆன கோபுரம் இல்லையா? இரும்பினால் ஆனது
என்பது ஒரு காரணம் என்றால் காற்றின் மாசுக்களும் இரும்பை சீக்கிரம் துருப்பிடிக்க வைப்பதால்
7 வருடங்களுக்கு ஒரு முறை மொத்த கோபுரத்திற்கும் வர்ணம் பூசப் படுகிறது. ஐபல் காலத்தில்
எப்படி கையினால் துரு சுரண்டப்பட்டு பின் வர்ணம் பூசப்பட்டதோ அதே முறை தான் இன்றும்
கையாளப் படுகிறது என்று படித்தேன். 60 ton வர்ணம் தேவைப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இது வரை இந்த கோபுரதை 19 முறை முழுமையாக வர்ணம்
பூசி சீரமைத்துள்ளர்கள் என்கிறது விக்கிபீடியா.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் நினைவு சின்னங்களைப்
பாதுகாக்கவும் பராமரிக்கவும் பணத்தை செலவு செய்ய தயங்குவதில்லை என்று எங்கள் வழிகாட்டி
கூறினார்.
மின் தூக்கிகளைப் பற்றிய சிறு விவரம் அறிந்து கொண்டு
பயணத்தை துவங்கலாம்.
கோபுரத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்று உங்களுக்கு
தெரியும். முதலில் சரிவாகவும் பின்பு செங்குத்தாகவும் ஏறி செல்ல வேண்டும்.
தரையிலிருந்து சாய்வான மின் தூக்கி மூலம் முதலில்
இரண்டாம் தளத்தில் இறக்கி விடப் படுவோம். முதல் தளத்தில் நிற்காது. Hydraulic முறையில்
தான் இன்றளவும் செயல்படுகின்றன இந்த மின் தூக்கிகள். இவை அமர்ந்த வண்ணம் செல்லக் கூடிய
இரண்டு பெட்டிகள் கொண்ட சிறு ரயில் பெட்டி போல உள்ளன. இரண்டாம் தளம் வரை செல்ல கோபுரத்தின்
அடிவாரத்திலிருந்து இரண்டு மின்தூக்கிகள் உள்ளன.
சரி, மேலே ஏறி செல்லலாம் வாருங்கள்.
மின் தூக்கி மிக நிதானமாக, ஆனால் எந்த விதமான அசைவும் இல்லாமல் சரிவாக மேலே ஏறியது. உள்ளிருந்த படியே வெளிப்புறக் காட்சிகளை காண முடிந்தது. இரண்டாம் நிலையிலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி முதல் நிலைக்கு வரவேண்டும். இதன் தரைப்பகுதி கண்ணாடியால் ஆனது. சுற்றிலும் அகலமான நடைபாதை. ஓரத்தில் பாதுகாப்புக்காக கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நகரை காணும் வசதி செய்யப் பட்டுள்ளது அழகு கொஞ்சும் நகரை அங்கிருந்து கண்டோம். சுற்றிலும் பாதையில் Digital displays, Screens, Touch screens போன்றவைகள் உள்ளன. ஐபல் கோபுரம் பற்றிய தகவல்களை இவைகள் மூலம் அறியலாம்.
இந்த கோபுரம் அமைக்கப் பட்ட காலத்தில் ஐபல் அவர்கள்
படிக்கட்டுகளில் நடந்தே மேல் தளத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு செல்வார் என்று குறிப்பிட்டேன்
இல்லையா? அவைகள் spiral வடிவில் அமைந்தவை. அவைகள் உபயோகிக்க முடியாத நிலைக்கு ஆளாகி
விட்ட பிறகு அவற்றை நீக்கி விட்டார்கள். அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்.
அதை இந்த தளத்திலிருந்து காணலாம்.
புது அம்சங்கள்:
1.இந்த பகுதியின் நடுவில் தற்சமயம் ஒரு
apartment [2 bedrooms, 1 kitchen,1 lounge with Paris view] 2016ல் கால்பந்து போட்டியின்
போது விளையாட்டு வீரர்கள் நால்வரை தங்க வைக்க கட்டப்பட்டுள்ளது. ஒரு apartment கட்டும்
அளவுக்கு அகலமான இடம் கோபுரத்தின் முதல் பகுதி என்றால் நம்ப முடிகிறதா? நாங்கள் சென்ற
சமயம் இந்த apartment இல்லை என்பதால் சுற்றிலும் உள்ள நடைபாதை தற்போதுள்ள 2.6 மீட்டர்
அகலத்தை விட அதிகமாகவே இருந்தது.]
2. சிறுவர்களுக்கான சுற்றுலா
மீண்டும் இரண்டாம் தளத்திற்கு படிகளில் சென்றோம்.
அங்கே Jules Verne என்னும் பெயருடைய உணவகம், பரிசு பொருட்கள் விற்கும் கடைகள், பார்கள்
உள்ளன. இந்த தளத்திலும் சுற்றிலும் கண்ணாடி தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து
நகரின் அனைத்து நினைவு சின்னங்களும் தெரிகின்றன. நகரைக் காண சரியான உயரம் இது என்று
கூறலாம். Spectacular view.
இந்த தளத்திலிருந்து கிளம்பி மூன்றாவது தளத்திற்குச்
செல்லும் மின் தூக்கியில் ஏறினோம்.
சீன் நதியில் செல்லும் படகுகளையும், சூரியனின் கதிர்கள்
பட்ட நதி நீரின் ஜொலிப்பையும், தூரத்தில் தெரிந்த நினைவு சின்னங்களையும், ஒரே மாதிரி
வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டது போன்ற கட்டிடங்களையும், நேர்கோடான சாலைகளையும், நீல
வானத்தையும் மேலே செல்ல செல்ல வெவ்வேறு உயரங்களில் கண்டது நெஞ்சில் நீங்காத நினைவு.
[Acrophobia எனப்படும் உயரம் குறித்த பயம் எனக்கு உண்டென்றாலும் உயரே செல்வதில் உள்ள
thrill அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.]
மூன்றாவது தளமும் இரண்டு நிலைகளாக உள்ளது. கீழ்
நிலையில் மின் தூக்கிகள் வந்து செல்லும் இடம் நடுவிலும் அதை சுற்றிலும் நடைபாதையும்
உள்ளன. சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்களால் மூடப்பட்டு அதன் மூலம் நாம் நகரினை காணும் வண்ணம்
அமைக்கப் பட்டுள்ளது.
அதன் மேற்கூரையில் சுற்றிலும் 360 டிகிரிக்கு அந்த
கோபுரத்திலிருந்து தாஜ்மஹால், சுதந்திர தேவி சிலை போன்ற நினைவு சின்னங்கள், முக்கிய
நகரங்களின் நினைவு சின்னங்களின் silhouetteடுடன் எவ்வளவு தொலைவில்/உயரத்தில் அமைந்துள்ளன
என்று குறித்து வைத்துள்ளார்கள். அருகிலேயே ஐபல் கோபுரத்தின் உயரமும் ஒப்பிட்டுப் பார்க்க
வசதியாக குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலையிலும் அந்த கோபுரம் எப்படி கட்டப் பட்டது
என புகைப்படங்கள், குறிப்புக்கள் உள்ளன.
உட்புறமாக உள்ள படிக்கட்டில் ஏறி மேல் தளத்திற்கு சென்றோம். அங்கே ஐபல் அவர்களின்அலுவலகம் உள்ளது தற்போது அவர், அவரது மகள் Claire மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் சிலைகள்(life size mannequins) வைக்கப்பட்டுள்ளன.அருகில் எடிசன் அவர்கள் அன்பளிப்பாக அளித்த gramophone ம் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. இந்த அறையை காண சிறு ஜன்னல்கள் [திருவனந்தபுரம் கோவிலில் உள்ளது போல] அமைத்துள்ளார்கள்.அதன் மூலம் காணலாம்.
நாங்கள் சென்ற நாளில் வானம் தெளிவாக நீல நிறத்தில் காணப்பட்டது. மேகமூட்டம் இல்லாததால் தான் நகரை அவ்வளவு துல்லியமாக காண முடிந்தது. குளிர் இல்லை என்பதால் திறந்த வெளி நடைபாதையில் சுற்றி சுற்றி நடந்து பாரிஸ் நகரைக் கண்டோம். பைனாகுலர் எங்களிடம் இருந்தும் எடுத்து செல்லாததால் துல்லியமாக எல்லா கட்டிடங்களையும் அருகில் காணும் வாய்ப்பை இழந்தேன்.[ சோம்பலின் விலை]
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு
சிறிய அளவில் தெரியும் கோபுரம் அருகில் சென்றதும். பிரம்மாண்டமான அளவில் காட்சியளிக்கிறது.
தளங்கள் நடைபாதையுடன் அகலமாக உள்ளன.
தொலைவிலிருந்து பார்த்தாலும் அருகிலிருந்து பார்த்தாலும்
அழகாக தெரிந்த நினைவு சின்னங்களில் ஐபல் கோபுரமும் ஒன்று.
Surreal experience!!
பேருந்து நிறுத்தத்தின் அருகே ஐபல் கோபுரத்தின்
வடிவில் அமைந்த இரும்பிலான சிறு பொம்மைகள் சாவிக் கொத்துக்கள் போன்ற நினைவுப் பொருட்களை
ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்து பிரான்சில் வசிக்கும் மக்கள் தெருவில் விற்பனை செய்து
கொண்டிருந்தார்கள். 10 யூரோவிற்கு மூன்று கோபுரங்கள். நாங்களும் வாங்கினோம்.
சென்னை தி நகர் ரங்க நாதன் தெரு, திருப்பதி கோவில் போன்ற இடங்களில் காவலர்கள் வந்தால் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகள் ஓட்டமாக ஓடி விடுவார்கள். அதே போன்ற காட்சியை பாரிசிலும் கண்டேன்.
பாரிஸின் Iron lady யைப் பிரிய மனமில்லாமல் கிளம்பி
பேருந்தில் ஏறி அடுத்த சுற்றுலா தலமான Des Invalides ஐ நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.
Arc De Triompeல் நுழைந்து Champs de Elysees
avenue வில் பயணித்து அரண்மனைகளக் கடந்து, சீன் நதியைக் தாண்டி, கோபுரத்தில் ஏறி பாரிஸ்
நகரின் அழகினைக் கண்டது மிக அருமையான அனுபவம்.
பாரிஸ் நகரின் சுற்றுலா அனுபவம் நேற்று சென்று வந்தது
போல உள்ளது. இன்றளவும் அந்த excitement குறையவில்லை. அதிலிருந்து மீண்டு இந்த பகுதியை
எழுத அதிக முயற்சி தேவைப்பட்டது என்றே சொல்வேன்.
அனுபவங்கள் தொடரும்…
(Videos of Lift experience attached)