Thursday, 13 June 2019

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு/வருகை பகுதிகளுக்கு பலவருடங்களாக சென்று வருகிறேன்.

சில தினங்களுக்கு முன்  அதிகாலையில் (இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா) மகிழுந்தில் 3 மணிக்கு விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டோம் மகள் மற்றும் பேரன்களை வரவேற்க , விமானம் அதிகாலை 2.30 சரியான நேரத்தில் தரையிறங்கி விட்டது என்ற என் மகளின் தகவலுடன் .

வெளிச்சமாய் இருந்த  Arrival/வருகை பகுதியில் எங்களுடன் பேரன்களின் மற்றொரு தாத்தாவும் பாட்டியும்  சேர்ந்து கொள்ள....காத்திருப்பு ஆரம்பம். 

வெளியே வரும் கதவருகில் ஒரு காவலர். (சென்னை விமான நிலைய காவலர்கள் தமிழர்களாக ஏன் இருப்பதில்லை ? )

மெட்ரோ ரயில் 4.30 am - 11.00 pm வரை செயல்படும் என ஒரு விவரப்பலகை கூறுகிறது . 

"Free shuttle for transit passengers to city side"என்கிறது மற்றொரு விவரப்பலகை . 

6,7 விமானங்கள் ஒரே நேரத்தில் துபாய் தோஹா குவைத் அபுதாபி சிங்கப்பூர் என பல ஊர்களிலிருந்தும் வருகை என தகவல் பலகை காட்டியது .

கம்பித்தடுப்பின் ஒரு பக்கம் பலதரப்பட்ட மக்களும் தூக்க கலக்கத்துடன் ஒரு வித ஆர்வத்துடன் நின்றிருந்தார்கள் (நானும்).  நேரெதிரில்.... பிரபல ஹோட்டல்களில் வாகன ஓட்டிகள் கையில் ....Hotel , Mr ...., Ms ....... என பெயர்பலகைகளுடன் ..... வருகைப்பாதையின் முடிவில் டாக்ஸி ,OLA,ஆம்புலன்ஸ்,போலீஸ் வேன் ,  டாக்ஸி ஓட்டிகள்(டாக்சி வேணுமா sir /madam) நின்றிருந்தார்கள். இது தவிர அருகில் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கைகளில் அமர்ந்து, தூங்கி, நின்று  என ஒரு கூட்டம். குளிர்பானங்களுக்கான Automatic Vending Machine தற்போது கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளது.(நான் பார்த்த வரையில் ஒருவரும்  உபயோகிக்கவில்லை)

மெட்ராஸ் காப்பி சென்டரில் 3 மணிக்கே சுடச்சுட பருப்பு வடை வந்திறங்கியது . தலப்பாக்கட்டியில் யாரும் இல்லை .

(நேரமாகுது போய் காப்பி குடிச்சுட்டு வாம்மா _ யாரோ ஒரு கணவர் எனக்கு வேண்டாம் நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்களே ....அவரது மனைவி)

இடையிடையே மக்கள் தம் உறவினர்/நண்பர் வருகை கண்டு ஹாய் ஹூய் சப்தங்கள் .

2 மாதங்கள் கூட நிரம்பியிராத ஒரு குழந்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஒரு தகப்பன்....
தனியாய் 4,5 பெட்டிகளை தள்ளமுடியாமல் ட்ராலியில் தள்ளி செல்லும் முதிய பெண்மணிகள் , அந்த அதிகாலை நேரத்திலும் லிப்ஸ்டிக் அணிந்து தலைவாரி .. புத்துணர்ச்சியுடன் வரும்  யுவதிகள், ஸ்வெட்டர் அணிந்து வரும் மக்கள்,  சென்னை வெய்யிலின் தாக்கம் தாங்காமல் அழுது கொண்டே செல்லும் சிறுகுழந்தைகள் , பிறந்ததிலிருந்து  காணாத தன் குழந்தையை உள்ளிருந்தே வாங்கிக்கொண்ட இளம்தந்தை,   உடல்நலம் சரியில்லாமல் சக்கர நாற்காலியில் வந்து ஆம்புலன்ஸில் ஏறி சென்றவர் என பலரும் வந்து கொண்டே இருக்க .....  அனைவரின் கண்களிலும் தூக்கத்தின் சாயல்.

இடையிடையே பயணிகள் வெளியில் எடுத்து செல்லும் ட்ராலிகளை ஒரு சிறிய வண்டியின் உதவியுடன் பின்னாலிருந்து ஒருவர் உந்தித்தள்ள , முன்னால் ஒருவர் அவைகளை சரியாக வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார்கள்.

 விமான பணிப்பெண்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தவிர்த்து வெகு சில பயணிகளே புதிதாக வலது பக்கமாக வெளியேறி செல்லும் பாதையை பயன்படுத்தினார்கள் . வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் திரும்புவார்கள் என எங்கோ படித்த நினைவு (அ ) எப்போதும் வெளியேறும் இடப்பக்க பாதையையே கரடுமுரடாக இருந்தாலும் பழக்கம் காரணமாக செல்கிறார்கள். 

பெட்டிக்கு மேல் plastic சுற்றி அல்லது டிவி printer போன்றவைகளுடன் DOH, DXB போன்ற  எழுத்துக்கள் உள்ள bag tag மற்றும்  பாரம்பரிய உடைகளுடன் வந்தால் (அதிலும் பெண்களின் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகை, முகத்தை மறைக்காத வண்ணம், நீளமும் வெள்ளையும் கலந்து Haj Travels Pvt Ltd என எழுதப்பட்ட ஆடை என விதவிதமானவைகள்)  ..... ஐக்கிய அரபு நாடுகள். (மற்ற வகை உடை அணிந்தவர்களும் உண்டு .)

[DOH,DXB போன்றவை எந்த ஊரில் இருக்கும் விமான நிலையம் என்பதை குறிக்கும் குறியீடு.  LAX(Los Angeles ),MAA(Madras) என்பது போல. பலவருடங்களுக்கு முன்பு இரண்டெழுத்து குறியீடுகளும் இருந்தனவாம். உலகின் அனைத்து இடங்களுக்கு பொதுவானதாக 3 எழுத்து குறியீடு மாற்றி அமைக்க பட்டபோது  LA என்பது LAX, DB என்பது DXB ஆனது. கணிதத்தில் X குறியீடு போல]

3.15

"Here comes trouble" என்ற வாசகம் கொண்ட சட்டையை அணைந்த கு(சு)ட்டிப் பையன் குதித்து கொண்டே வெளியில் வந்தான். அவனது பெற்றோரின் பெட்டியில் SFO - MAA. ஆஹா ......சான்பிரான்சிஸ்கோ மக்கள் வர தொடங்கி விட்டார்கள் . வந்துட்டாங்கய்யா .....வந்துட்டாங்கய்யா .....

விதவிதமான வாசகங்கள் கொண்ட உடைகள் அணிந்த ஆண்கள்,  ஸ்வெட்டர் அணிந்த முதியவர்கள் , பள்ளி விடுமுறை சமயமாதலால் சிறுவர் சிறுமியர் , இடையிடையே outdated fashionல் தைக்கப்பட்ட [பலவருடங்களுக்கு முன்பு தைத்து இந்திய வருகைக்காக என reserve செய்து வைக்கப்பட்ட]  சுடிதார்கள் ரவிக்கைகளுடன்  குட்டையாய் வெட்டிவிடப்பட்ட கூந்தலை குட்டிக் கொண்டையாக்கி (அ) குதிரைவாலாக்கிய பெண்கள் ....என 24 மணி நேரங்கள் பயணம் செய்த களைப்புடன் வந்தார்கள்.

அம்மா ..என்னுடைய பெட்டிகளில் ஒன்று மட்டும் வரவில்லை,காத்திருக்கிறேன் _ மகளின் வாட்ஸாப் தகவல் 

மீண்டும் ...ஐக்கிய அரபு நாட்டு விமானங்களின் வருகை ... மீண்டும் மக்களின் வருகை 

4.00 

இன்னும் பெட்டி வரவில்லை _ மகளின் குறுஞ்செய்தி 

காத்திருப்பு மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்தோம் இப்போது ...இடையிடையே மகளிடமிருந்து தகவல் உண்டா என்று ...

இன்னும் வெளியில் வரலையே ... உள்நாட்டு விமான நிலையம் போய் அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டுமே ... நீங்கள் அடுத்த விமானத்தின் நேரத்தை பார்த்து சொல்லுங்க _ ஒரு இளைஞர் முதியவரிடம் சொல்ல முதியவர் வெள்ளெழுத்து கண்களால் தன் கைபேசியில் தேடுகிறார்.


4.15

பெட்டி வரவே இல்லை . புகார் கொடுத்து விட்டு வருகிறேன். International Roaming 2G யில் இருப்பதால் உங்களுடன் பேச இயலவில்லை  _ மகள். 

2 வயது கூட நிரம்பியிராத குட்டி பாப்பா அம்மாவின் கைபேசியை வாங்கி தனக்கு வேண்டிய appஐ கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்க ....நேரம் கடந்து கொண்டே இருந்தது. (குட்டிஸ்களுக்கு எப்படித் தான் எந்த நேரத்திலும் அவ்வளவு energy இருக்கிறதோ???)

 மேலை நாட்டவர்கள் எப்போதும் எங்கும் சட்டங்களை மதிப்பவர்கள் என்று தான் நினைத்திருந்தேன் கம்பியை தாண்டிக்  குதித்து காத்திருப்பு மண்டபத்தின் உள்ளே வந்தவரை பார்க்கும் வரை . 

5.00

சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பும்போதே 1.45 மணி நேரம் தாமதமாய் புறப்பட்ட விமானம் துபாய் நகரை அதே தாமதத்துடன் வந்தடைந்து, அங்கிருந்து சென்னை கிளம்ப வேண்டிய விமானத்தை 30 நிமிடங்கள் தாமதிக்க வைத்து, சரியான நேரத்தில் சென்னையை வந்தடைந்து... வந்து சேராத ஒரு பெட்டி என் மகள் மற்றும் பேரன்களின் வருகையை 2.30 மணிநேரங்கள் தாமதப் படுத்தி .......

எங்களையும் சேர்த்து படுத்தி ......(சான்பிரான்ஸிஸ்கோவில் கிளப்பியது முதல் , துபாய் வந்து மாற்று விமானத்தில் ஏறி சென்னையில் தரை இறங்கும் வரை தூக்கம் இல்லை . விமானத்தில் WIFI வசதி இருப்பதால் சாப்பிடீர்களா தூங்கினீர்களா என குசலம் விசாரித்தல் ,அம்மா தற்சமயம் துபாயில் என்ன நேரம் இன்னும் 4.30 மணி நேரம் என்றால் எப்போது போய் சேரும் பார்த்து சொல்லு என்பது போன்ற வினா விடை நிகழ்ச்சிகள் , Track Flight Live பார்த்தல் , பார்த்ததை சம்மந்தி வீட்டிற்கு update செய்தல் , சரியான நேரத்திற்கு விமான நிலையம் கிளம்புதல் என பயணம் செய்பவர்களை விட அதிக மன அழுத்தம்) 

காத்துக் காத்து.. கண்கள் பூத்திருந்தோம் ......

பல வருடங்களுக்கு முன்பு .. வெளியில் வரும் கதவிற்கு மேலாக ஒரு திரையில் , விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியை கடந்து வரும்போது , வருபவர்கள் தெரியும் வண்ணம் வைத்திருப்பார்கள். அங்க பாருங்க பாருங்க .... நீல நிற சட்டை போட்டிருக்கிறார், பச்சை நிற புடவை உடுத்தி இருக்கிறார் என உற்சாகமாக கூவிக் கொண்டிருப்பார்கள் உறவினர்கள். தற்போது அது இல்லை. Landed,Taxiing,Immigration என status update கள்தான்.

விடியத் தொடங்கிய அந்த நேரத்தில் ...  மகளும் பேரன்களும்  நொந்து நூலாகி  வந்து சேர்ந்தார்கள்.  

விடிவெள்ளியாய் ..... 

அச்சச்சோ... டூத் பிரஷ் களை எந்தப் பெட்டியில் வைத்தேன் என்று நினைவில்லையே அம்மா....

பின் குறிப்பு : உடன்வராத பெட்டி  வீட்டிற்கே இன்று வந்து சேர்ந்தது  .


Thursday, 6 June 2019

வண்ணக் (எண்ணக்) கோலங்கள் ...


கடந்த அமெரிக்க பயணத்தின் போது , வழக்கமாக Netflix ல் ஆங்கில தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன்  வெவ்வேறு நாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை கண்டேன் . முக்கிய காரணங்கள் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் பற்றி, மொழியை எவ்வாறு பேசுகிறார்கள் (ஆங்கிலத்தையே ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள் ) என்பது பற்றி .... அறிந்து கொள்ளும் ஆர்வமே . (subtitles இருக்க பயமேன் ?)

ஆஸ்திரேலியா(Wanted), மலேசியா(Hati Perampuan),மெக்ஸிகோ(Unauthorized living) தென் அமெரிக்கா(Velvet), ஆப்பிரிக்கா(The lion king- movie)ரஷ்யா மற்றும் சில நாடுகளின்  தொடர்களையும் காண நேர்ந்தது. 

சற்றே மிகைப்படுத்தப் பட்ட காட்சிகள் இருந்தாலும் அடிப்படை செய்திகள் மாறாது இல்லையா? என் மனதை பாதித்த இரண்டு தொடர்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே ....

துருக்கிய நாட்டு தொலைக்காட்சி தொடர் :  What happens to my family ?

ஒரு மத்தியதர குடும்பம்.  வீட்டின் முன்புறம் துருக்கிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடை வைத்திருக்கும் தகப்பன் மட்டும். தாய் இல்லை. 2 மகன்கள் 1 மகள் . அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். விதவை அத்தையும் இவர்களுடன் வசிக்கிறார் . 

பிள்ளைகள் மூவரின் காதல் மற்றும் திருமணம் முடிய செல்லும் கதை . 

அத்தையின் கண்டிப்பான வளர்ப்பில் பிள்ளைகள். காலையில் சீக்கிரம் எழுந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு வெளியில் கிளம்புதல்(சாப்பிடாமல் வெறும் வயிற்றில் போகாதேப்பா)  வயதில் மூத்தோரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுதல் ,வீட்டை சுத்தமாக பராமரித்தல் (வெளியில் அணிந்து செல்லும் செருப்பை வீட்டிற்குள் அணிந்து நடமாடினால் அத்தை கொன்றுவிடுவார் _ பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனம் )

அத்தை மூன்று நேரமும் சமைப்பார். துணிகளை துவைத்து வீட்டு தோட்டத்தில் கொடி  கட்டி காய வைப்பார். வீட்டிற்கு வெளியில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார் . யாராவது வெளியில் சென்றால் அவர்கள் கிளம்பிய உடனே அந்த நீரை நல்ல சகுனத்திற்க்காக தெருவில் வீசி இறைப்பார். (நாங்கள் கொஞ்சம் முன்னே சென்ற பிறகு நீரை ஊற்ற கூடாதா அத்தை ?)

பிள்ளைகளுக்கு தெரிந்த இடங்களில் சொல்லி வைத்து தகுந்த வரன்களை பார்த்து மணமுடிக்கிறார்கள்.  காதலித்தால் குடும்பம் குலம் தகுதி பார்த்து சம்மதிக்கிறார்கள். மணமகனின் வீட்டார் பெண் வீட்டிற்கு பூக்கள் மற்றும் chocolates வாங்கி வந்து பெண் கேட்கிறார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குதல் என்று இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். 

மருத்துவரான மூத்த மகன் ஒரு பணக்கார பெண்ணை மணக்கிறார். மத்தியதர மக்கள் வாழும் இடமென்பதால் எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று தந்தையாரின் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கிறார்கள். வம்பர்களும் உண்டு. 

அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு சிறிய மண்டபத்தில் reception வைக்க ஏற்பாடு செய்ய , அனைவரும் திரண்டு வந்து உதவி செய்து மகிழ்ந்து, பணக்கார சம்மந்தியையும் மகிழ்விக்கிறார்கள். 

இப்படி பலப்பல ...... நம் பழக்க வழக்கங்களை அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிப்பது போல தோன்றியது .

அடுத்து ........

அமெரிக்க தொலைக்காட்சி தொடர் "Switched at birth

இந்த தொடர் குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளை (teenagers)பற்றியது. 

 தென் அமெரிக்க, வடஅமெரிக்க தம்பதிகளுக்கு  பிறக்கும் பெண் குழந்தைகள் மருத்துவமனையில் (ஏதோ காரணம் _ மறந்து போய்விட்டேன் )
மாறி விடுகின்றன . 

தென் அமெரிக்க தம்பதியின் குழந்தை வெள்ளை நிற தலைமுடி நீல கருவிழி என இருக்க ( அதன் மூன்றாவது வயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்க பட்டு காது கேட்கும் திறன் போய் விடுகிறது) வட அமெரிக்க தம்பதியின் பெண் சற்றே குட்டையாக கருவிழிகளுடன் கருகருவென்ற தலைமுடியுடன் இருக்கிறார்.
 இது பின்கதை .

வட அமெரிக்க தம்பதியின்  மகள் உயிரியல் வகுப்பில்  எதேச்சையாக DNA test செய்து பார்க்க உண்மை வெளியாகிறது .

இதிலிருந்து தொடங்கி எப்படி மகள்களை கண்டுபிடித்து எல்லாரும் ஒரே வீட்டில் வசித்து, எப்படி எல்லாரும் இரு மகள்களையும் ஏற்று கொள்கிறார்கள் என்பது கதை.வட அமெரிக்க தம்பதிக்கு மூத்த மகனும் உண்டு. இந்த மூவரும் தினமும் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கவே பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் .

Boyfriend /girlfriend வைத்துக் கொள்வது (அங்கே இது social pressure )  குடிப்பழக்கம், போதைமருந்து, கர்ப்பத்தடை மாத்திரைகள் , வேண்டாத கர்ப்பம்  என விதம்விதமான பிரச்சினைகளை பெற்றோர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. தினமும் இதுபோன்ற எமோஷனல் பிரச்சினைகளுக்கிடையே எப்படி படிக்கிறார்கள்??

(அம்மா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் _ மகன் 
என்ன ஆச்சு போதை மருந்து ஏதாவது வெச்சிருந்து போலீஸ் பிடிச்சுட்டாங்களா உன்னை இல்லேன்னா எந்த பெண்ணையாவது கர்ப்பமாக்கிட்டியா ? 
ஐயோ அம்மா ஸ்கூலில் excursion கூட்டி போகிறார்கள்_மகன்)

வட அமெரிக்க அம்மா தினமும் 3 வேளையும் சமைத்து பிள்ளைகளுக்கும் கணவருக்கும் பரிமாறுவார். மதிய உணவு கொடுத்தனுப்புவார்.

18 வயதானதும் பிள்ளைகள் தனியாக இருக்க வேண்டும் சம்பாதித்து தங்கள் செலவுகளை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். (19 வயசாச்சு இன்னும் நாம் தான் அவனுக்கு telephone bill கட்டுகிறோம்)

ஒரு பெண்ணுக்கு காது கேளாது என்பதால் ASL (American Sign Language ) நிறைய இடம்பெறுகிறது இந்த தொடரில். (மொழி படம் நினைவுக்கு வருகிறதா ?) ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த sign language மாறுபடும். SL, அவர்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் எப்படி போதிக்கிறார்கள் வேலை வாய்ப்புக்கள் என்னென்ன என நிறைய தகவல்கள்.  

[இந்த தொடரினை நான் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் என் சிறிய பேரன் (6 வயது kindergarten வகுப்பு) , சில சைகைகளை செய்து காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட போது பள்ளியில் அவனுடைய ஆசிரியை கற்றுத் தந்தார் என்று கூறினான். ஆசிரியையுடைய  சகோதரி காத்து கேளாதவர் என்பதால் ஆசிரியை சைகை மொழியை அறிந்துள்ளார். எங்களுக்கும் கற்றுத் தந்துள்ளார் என்று கூறினான். 

மற்றொரு அனுபவம். கரிபியன் தீவுகளில் நடக்கும் துப்பறியும் தொடர். ஒரு முறை கதையின் போக்கில் தொலைக்காட்சியில் weather report காட்டினார்கள் . கவனித்து பார்த்த போது 90, 93, 95 பாரன்ஹீட் என இருந்தது.

அப்போது தான் புரிந்தது ..மக்கள் ஏன் க்ரூஸ் கப்பல்களில் ஏறி கரிபியன் தீவுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் என்று.  கடும் குளிர் நாடுகளில் சூரியனின் வெளிச்சம் இருக்கும் ஆனால்  வெப்பத்தை உணர முடியாது . (இங்கே வாங்கப்பா ..90 + எங்களுக்கு சகஜமப்பா _ mind voice) 

சமீபத்தில் என் குட்டி பேரனின் வருகையின் போது 102 டிகிரி என்று சொல்லி கொண்டு இருந்தேன் . பாட்டீ .. அப்போ ஐஸ் கிரீம் சாப்பிடலாமா என்று கேட்டான் . வேண்டாம் என்றேன். அவன் பதில் : பாட்டீ எங்கள் ஊரில் 80 டிகிரி போனாலே எங்கள் அம்மா வாங்கி தருவார் என்றான். குளிர் நாடுகளின் நடப்பு இது] ]

எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவான பிரச்சினை , தம் பிள்ளைகளின் நலம், படிப்பு , பெரியவர்களிடம் மரியாதை, தகுந்த வரனை திருமணம் செய்தல் இப்படி பல.

பணக்கார வீடுகளில் வேறு விதமான வாழ்க்கை முறையை காட்டுகிறார்கள். நம் ஊர் தொடர்களை போல நள்ளிரவிலும் முழு makeup , நகைகள், கலையாத கூந்தல் அங்கும் உண்டு. 

எவ்வளவு கண்டங்களை சுற்றி வந்தாலும் ஒரு நாட்டைப் பற்றிய விவரங்களை அதன் கலாச்சாரத்தின் மூலம் தான் கண்டு கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மை. 

தொடரும் தொடர்கள் .....

பின் குறிப்பு : தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது என் முக்கிய வேலை இல்லை . 



















WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...