கடந்த மார்ச் மாதம் 21-31 சம்ஸ்க்ருத பாரதி என்னும் NGO வின் பழைய மாணவிகள் இருவர் நடத்திய சம்ஸ்க்ருத மொழி அறிமுக வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் வீட்டிற்கு மிக அருகில். (கூடுவாஞ்சேரி கிட்டே இல்லை). சம்ஸ்க்ருத மொழியை சம்ஸ்க்ருதம் வாயிலாகக் கற்பிக்கும் , மேன்மேலும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு முயற்சி மற்றும் வழக்கொழிந்து போன மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சியும் கூட.
பல வருடங்களுக்கு முன் , கொஞ்சம் படித்தேன். எழுத படிக்கத் தெரியும் ஆனால் தெரியாது. இது என் சம்ஸ்க்ருத அறிவு பற்றிய முன் கதைச் சுருக்கம்.
இந்த வகுப்புக்களை தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் Zabaahn sambaal ke என்று ஒரு நாடகம் (ஹிந்தி, பின்பு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது) மற்றும் சமீப கால உதாரணமாக உதாரணமாக “English Vinglish” திரைப்பட ஆங்கில வகுப்புகளை/மாணவர்களை ஒப்பிடலாம்.
2 ஆசிரியைகள்.(Adroit Angels) ;மாணவமணிகள் :25
7 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடங்கிப் எல்லா வயதினரும் இருந்தார்கள்.
சமஸ்க்ருதம் (1). கொஞ்சம் எழுத, படிக்க, பேச (2).எதுவுமே தெரியாமல் (3). இரண்டாவது மூன்றாவது மொழியாக பள்ளியில் (எப்போதோ) படித்தவர்கள் (4).இது போன்ற அறிமுக வகுப்புகளுக்குப் சில,பலமுறை சென்றவர்கள்( 5). எங்கெங்கு சென்னையில் சம்ஸ்குத வகுப்புகள் நடக்கிறதோ அங்கெல்லாம் யாத்திரை போல சென்று வருபவர்கள் (6) என்னை மாதிரி ரெண்டும் கெட்டான்(இது முக்கியம் இல்லையா?) என்ற ரீதியில் மாணவர்கள்.
பள்ளி மாணவர்கள், Home managers, திரைத்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், கணக்காளர் எனப் பலதுறைகளையும் சார்ந்தவர்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்(என்னோட தமிழ் கண்ராவியா இருக்கும் மொத்தத்துல எனக்கு ஒரு பாஷையும் சரியாத் தெரியாது என்பார் ஒரு சகோதரி, தன்னடக்கம் தான்) எனப் பல மொழி பேசுபவர்கள், பல மாநிலங்களிலும் வசித்தவர்கள் என கலந்து கட்டிய உற்சாகமோ உற்சாகம் மிகுந்த மாணவமணிகள்.
மொத்தத்தில் Heretogenous group.
இதில் முக்கியமான விஷயம் ஆசிரியைகள் சம்ஸ்க்ருதத்தில் மட்டுமே பேசுவார்கள். பாடமும் சமஸ்க்ருத்தில் தான். ஆரம்ப நாட்களில் வார்த்தைகள் மற்றும் அபிநயம் . சாதாரண வினைச் சொற்கள் வா, போ, நில், உட்கார்.
கதைகளும் அப்படியே. Thirsty crow... சிறப்பு அம்சமாக இன்றைய கால கட்டத்தில் என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்கிறோமோ(contemporary usage) அந்த வகையில் பாடங்களைக் கற்றுத் தந்தார்கள். வாய் வழிக் கல்வி. எழுதி/எழுதக் கற்றுத் தருவதில்லை.(கரதூரவாணி- Handphone, Vyajanam - Fan)
சம்ஸ்க்ருத வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. ஆசிரியைகள் பேசுவது புரிந்தது. இது என்ன? இது யார்? அங்கே என்ன இருக்கிறது? அவள் யார்? இப்படி சின்ன சின்னப் பாடங்கள். முதல் நாள் வகுப்பு முடிந்ததும் , நாளைக்கும் போகணுமா என்று பயந்தேன்.
என்னுடைய இயல்பான குணம் முன் வைத்த காலைப் பின் வைக்காதது. மீண்டும் தைரியமாகக் கிளம்பிச் சென்றேன். போகாமல் இருந்திருந்தால்?? மிகச் சிறந்த அனுபவங்களை இழந்திருப்பேன்.
வகுப்பறை அனுபவங்களில் சில:
இரண்டு ஆசிரியைகளும் ஆகச்சந்து சுப்ரபாதம்(வாங்க காலை வணக்கம்) என்று அன்பா...க ஆசையாக அழைப்பார்கள். இன்று என்ன கற்றுத் தருவார்கள் , என்ன கதை சொல்வார்கள் என்ன நாடகம் நடத்துவார்கள் என்ற ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்க, அவர்கள் இருவரும் மாறி மாறி கற்றுத் தருவார்கள்.
ஒரு concept கற்றுத் தந்தவுடன், கின்சித் யோஜனீயம் கூர்வந்தஹ வயம் ஏக ஏக வாக்யம் வதாமஹ என்பார் ஆசிரியை (கொஞ்சம் யோசித்து ஆளுக்கு ஒரு வாக்கியம் சொல்லலாம் என்பது இதன் பொருள்.)
வகுப்பில் முக்கிய கட்டம் இது.(செத்தாண்டா சேகரு..) சிரிப்பு அலை போலப் பொங்கும் நேரமிது.
1.எப்போது , அப்போது..
எப்போது மாதா வருவாரோ அப்போது பாயசம் வரும். (முதல் நாள் வயதில் மூத்த ஒரு பெண்மணி பாயசம் செய்து கொண்டு வந்து தந்தார்)
மாதா தினமெல்லாம் பாயசம் கொண்டு வரமாட்டார்_ சக மாணவர்கள்
2.உடன்
மகன் அப்பாவுடன் பள்ளிக்குச் செல்கிறான். இது உதாரணம். சுவரில் ஒட்டி இருக்கும் சார்ட் பார்த்து சொல்லுங்க.....(ஆண்பால் வார்த்தைகள் கொண்டது)
குட்டிப் பையன் : ஆசிரியர் திருடனுடன் பள்ளிக்குச் செல்கிறார்.
3.இதி (இப்படி/என்று )
"கனவு காணுங்கள்" என்று திரு அப்துல் கலாம் சொன்னார். பலரும் இப்படி சம்ஸ்க்ருதத்தில் Quotation லாம் சொன்னாங்க.
என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, கா கா கா என்று காக்கா சொன்னது என்றார்.
நானும் அதே போல யோசித்து வைத்திருந்தேன். டண் டண் டண் என்று கடிகாரம் ..... (என்ன வினைச் சொல் சேர்ப்பது என்று தெரியவில்லை)
தினமும் படிக்கணும் என்று என் அம்மா சொன்னாங்க வகைல சொன்னால் கூட போதுமாம். மறு நாள் ஆசிரியை விளக்கினார். :)
எல்லாரும் ஒவ்வொரு வாக்கியம் சொல்லணும் இல்லையா? ஆசிரியை அருகில் வந்து LKG குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல் உற்சாகமூட்டி, தைரியமூட்டி, பயப்படாதீங்க தெரியலைன்னா நான் உதவறேன் என்று கூறி முயற்சிக்க வைப்பார். (எல்லோராலும் எல்லா நேரத்திலும் சரியாகச் சொல்ல முடியாது, புது மொழி இல்லையா?). வாக்கியம் சொல்லும் நேரங்களில் புத்தகத்தைப் பாக்காதீங்க காகிதத்தைப் பார்க்காதீங்க , நீங்களே யோசிச்சு சொல்லுங்க என்பார் ஆசிரியை. படிக்கத் தெரியாது பகினி - இது அவரிடம் சொன்னது (பகினி- தோழி) Its already Greek and Latin. Mind voice : It is Samskrutham (samyak + krutham , good language )
மற்றொரு நாள் வகுப்பு. சம வயதினரை பெயரிட்டு அழைக்கலாம் . ராதா என்பதை ராதே... ராகவேந்திரன் என்பதை ராகவேந்த்ரஹ....வயதில் மூத்த ஆண் என்றால் மஹோதயா,வயதில் மூத்த பெண் மாதா,ஆண் என்றால் பவான் ,பெண் என்றால் பவதி,குட்டி பையன் பாலகஹ குட்டிப் பெண் பாலிகா,யூத்லாம் யுவன் யுவதி.
இப்படி 10 நிமிடங்கள் விளக்கினார் ஆசிரியை. பிறகு Brain storming session ….
............. , ............. (தன் அருகில் அமர்ந்திருந்த பெரியவரை சுட்டிக் காட்டி) மாமா இன்னும் சொல்லலை என்று ஆசிரியை பெயரைச் சொல்லி அழைத்தார் ஒரு பெண்மணி. (அலறல் தான் அழைத்தல் எல்லாம் கிடையாது ) போட்டுக் கொடுக்கும் அவசரத்தில் சமவயதினரை எப்படி அழைக்கலாம் என்பதை மறந்துட்டாப்ல :)
பின்னணியில் ஒரு குரல் : மாமான்னு சொல்லாதீங்க.. “மாதுலஹ"ன்னு சொல்லுங்க
மற்றொரு நாள் உறவுகள் பற்றிய பாடம். நம்ம வீட்டு உறவுகள் மாதா(அம்மா), பிதா(அப்பா) போல உச்சரிக்க சுலபமாக உள்ளன. In laws வீட்டு உறவுகள் shwastroo (மாமியார்),swashtraha (மாமனார்), நனந்தி- நாத்தனார் தேவரஹ : மச்சினர். இந்தப் பகுதியே சிரமமாக இருக்கே....( சிலரது முணுமுணுப்பு)
பின்னணியில் ஒரு குரல்: இந்தப் பகுதி மொத்தத்துக்கும் சேர்த்து ஒரு வார்த்தை இருக்கு. "சத்ரு"
ஆரம்பம், நடுவில் கடைசியில் என தினமும் மூன்று பாடல்கள் (புத்தகத்தைப் பார்த்துப் பாட அனுமதி உண்டு).
ஒரு ஆசிரியை கிஞ்சித்(கொஞ்சம்) சீரியஸ் ஆகப் பாடம் சொல்லித் தருவார். இவரது குரல் வீட்டிற்கு வந்த பிறகும் ஒலிக்கும். (உச்சைஹி வதந்து- சத்தமா வாய் விட்டு சொல்லுங்க, பயப்படாதீங்க வெட்கப்படாதீங்க)
மற்றொருவர் நகைச்சுவையாகப் பாடம் சொல்லித் தருவார். கதைகள், நாடகங்கள் அனைத்திலும் பாடத்தில் வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்வார்கள்/செய்வார்கள். அருமையான நேரங்கள். அவரது முக பாவனைகள் இந்த நிமிடமும் சிரிப்பை வரவழைக்கிறது. அந்தக் கதைகளை மற்றொரு சமயம் பகிர்கிறேன்.[ சிரிக்காமல் நாம் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பது, கதை சொல்வது என்பதெல்லாம் தனித் திறமை.] கசப்பு மருந்தை இனிப்பில் தோய்த்துக் கொடுக்கும் உத்தி இது.
என்று எப்போது எப்படி இவர்கள் அபிநயம் மூலம் பாடம் சொல்லித் தருவதை நிறுத்தினார்கள் என்றே தெரியவில்லை. சாதாரணமாகப் பேசி interact செய்தோம் . சம்ஸ்கிருதம் மிகச் சுலபமான மொழி. நாம் நினைப்பது போலக் கடினம் இல்லை. பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழியும் அழிந்து போகும் என்ற நியதிப்படி அம்மொழி தற்காலத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. இலக்கணமும் மிகச் சுலபமாக உள்ளது. நான்(ம்) நினைத்திருந்தது போல இல்லை.
தினமும் வீட்டிற்கு வந்த பிறகு அன்றைய பாடங்கள் என்னவென்று பார்ப்பேன். சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் போல நிறைய சொல்லித் தந்திருப்பார்கள். (அனைத்தும் ஸம்ஸ்க்ருதத்திலேயே) Cryptology போல அதை decode செய்வேன். குறைந்தது 2 மணி நேரங்கள் ஆகும். ஒரு நாள் 24 மணி நேரங்கள் ஆனது என்னவென்று புரிய. கற்றுத் தந்த பாடங்களின் அடிப்படையில் நானே லகு(எளிமையான) கட்டுரை, வாக்கியங்கள் என்று அமைத்து எழுதிச் சென்று காட்டுவேன். சம்யக் அஸ்தி (நம்ம good தான்) என்று எழுதித் தருவார் ஆசிரியை. LKG குழந்தைக்கு தப்பிருந்தாலும் ஊக்கம் தர Star போட்டுக் தருவது போல.
வாட்சப்பில் சந்தேகங்கள் கேட்கலாம். பதில்கள்?? இரவு 8 மணிக்கு அனுப்பப் பட்ட பதில்கள் நடுராத்திரி புரியும். அச்சச்சோ .. டீச்சர் இப்படி எழுதி இருக்காங்க நாம் பதில் போடலையே.. மரியாதைக் குறைவாச்சே என்று அந்த நேரமே பதில் அனுப்பி விட்டு மீண்டும் தூங்கச் செல்வேன். (என்ன பெரிய பதில் , நமக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தையான தன்யவாதஹ தான்- Thank you)
நிறைவு நாளன்று நாம் கற்ற வித்தைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கவிதை(அடியேன்), ஓரங்க நாடகம்(அடியேன் எழுதி வேறிரண்டு தோழிகள் படித்தார்கள்), பக்தி நாடகம், ஓரங்க நாடகம், பாடல், கட்டுரை, நகைச்சுவை நாடகம், கதை, செய்யுள் வடிவில் விடுகதை எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள். அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில், திக்காமல் தயங்காமல், சொதப்பாமல். வெளியிலிருந்து வந்திருந்த Evaluator உங்கள் மாணவர்கள் 10 நாட்களில் இப்படி அசத்திட்டாங்களே என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் இருந்தன. ஆசிரியைகளின் திறமைக்கு, உழைப்புக்கான பலன்.
சம்ஸ்க்ருதம் கற்க இனம் , மதம் , மொழி, வயது, பால் எதுவும் தடையில்லை என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று வேறில்லை.
4 நாட்களுக்கு முன்பு எளிமையான வாக்கியங்கள் அமைத்து ஒரு கதை எழுத/சொல்ல சொன்னார் ஆசிரியை. நேற்றுக் காலையில் தான் அந்தக் கதைக்கான முதல் வாக்கியம் (lead) கிடைத்தது. மஹாகாவியம் எழுத lead கிடைச்சாப்ல புல்லரித்து போயிட்டேன். அதுவும் பூர்வ காலே .. என முற்காலத்தில் என்ற வார்த்தை கிடைத்ததும்... ஆஹா..காளிதாசர் போல ஒரு feel... அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
பூர்வ காலே ஏகம் வனம் ஆசீத்....(Long ago there was a forest)
பின் குறிப்பு : கடந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்த சமயம் , பேரனை சம்ஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் போது உடன் சென்றிருக்கிறேன். நானும் சங்கி காஷ் போறேன் என்று 3 வயதுப் பேரன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அழுவார்.
*சம்யக் ஆசீத் - நன்றாக இருந்தது