Tuesday, 5 July 2016

செட் டாப் பாக்ஸ்

புதுத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய போது ஓசியில் கிடைத்ததென்று ஏர்டெல் டிஷ் ஆண்டென்னாவைப் பொருத்தி விட்டு, ஏர்டெல் கம்பெனியுடன்  INVISIBLE யுத்தம் (ஆன்லைனில் தான்) நடத்திக் கொண்டு இருந்த ஒரு நாளில் எங்களின் கேபிள் ஆப்பரேட்டர் வந்தார். தற்சமயம் ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் சானல் அமைப்பினருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், அதன்படி அனைத்து சேனல்களும் 250 - 300 ரூபாய்க்குள் காணும்படியான வசதி இருப்பதாகவும் கூறினார்.

மீண்டும் SCV !!

டிஸ்கவரி சேனல்கள் , வெளி நாட்டு சேனல்கள் , விளையாட்டு, செய்திகள்(தமிழ், ஆங்கிலம்), தமிழ் பொழுதுபோக்கு, சிறுவர்கள் (தமிழ், ஆங்கிலம்),ஆங்கில பொழுதுபோக்கு (திரைப்படங்கள், சீரியல்கள்) தவிர, தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஹிந்தி சேனல்கள் என எண்ணிலடங்கா சேனல்கள்.[ தூர்தர்ஷனில் நூபுர், ஜுனூனுகுப் பிறகு  ஹிந்தி பக்கமே செல்லவில்லை. மம்முட்டி மகன் நடிக்க வந்த பிறகு ஏசியாநெட் மம்முட்டி நடித்த படங்களைப் பார்ப்பதில்லை]

காலை எழுந்தவுடன் டீவீ... பின்பு காப்பி குடித்ததும் டீவீ... மாலை முழுதும் இங்கு டீவீ.... சங்கரா, திருப்பதி தேவஸ்தான சேனல்கள், பொதிகை, ஜெயா செய்திகள் .. ஹாலை ஒட்டிய மாமியாரின் அறையிலிருந்து பின்னணியில்...

தந்தி டீவீ - தினமும் இரவு 7.30 - 7.45 BBC செய்திகள். அனாவசியமான அழுத்தங்கள் (வணggaaம்) தராமல் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்து, உலக செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். காலை 8 மணியளவில் ஆரம்பித்து , செய்தித்தாட்களைப் பிரித்து ஒவ்வொரு செய்தியாகப் படித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவார்கள், அலசிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நன்றாக அலசுவார்கள். சிலர் துணி கிழிந்து தொங்கும் வரை அலசித் தள்ளுவார்கள்.  சில சமயம் 4,5 பேர் சேர்ந்து விவாதம் என்ற பெயரில் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியாத வண்ணம் பேசுவார்கள். எந்த சூடான தலைப்பும் இல்லாத நாட்களில் “தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா?”
NDTV  விவாதங்களும் இவ்வண்ணமே. (தினமும் ஒரு தலைப்பு கிடைச்சுடுது, ஸ்ஸ்ஸப்ப்பா....)

புதிய தலைமுறை, கேப்டன் , சத்யம் போன்றவற்றிலும் அவ்வப்போது செய்திகள், நிகழ்வுகள் கவனம் ஈர்க்கும். இசை சேனல்கள் சில சமயம் ஓகே.

அம்மா, பெரியம்மா வந்தால் சரவணன் மீனாட்சி, சீதா, ராம், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்கள் விஜய் டீவி மூலம் வந்து செல்வார்கள்.

பொதிகை , எங்கள் தந்தையாரின் வார்த்தைகளில் ... "யாரோ ரெண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள் நாள் முழுவதும்". உலகில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்பதே இதன் தாரக மந்திரம்(?!) மேடை அமைப்பு மாறாத நாடகங்கள், பழைய பாடல்கள் . 

ஆங்கிலத் திரைப்படம் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகும் சேனல்களில் ரிப்பீட்டோ ரிப்பீட்டு. புதுத் திரைப்படம் அல்லது தொடர் ஏதாவது தென்பட்டு, அதைப் பார்க்க முடிவு செய்து ஒளிப்பரப்பு நேரத்தைப் பார்த்தால் அனேகமாக அதிகாலை 2 - 6 ஆக இருக்கும். நல்ல விஷயம் பின்னணி இசை அலறாது, சண்டைப் படங்களில் கூட டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் குறைவு. சீனா(குங்பூ,கராத்தே), கொரியா (போலீஸ் திருடன்),ஹாலிவுட் (வேற்று கிரக வாசிகள், சரித்திரக் கதைகள், கார்ட்டூன்கள், பல கோணக் காதல்) ஆகியவையே திரைப்படங்களின் பொதுவான கரு.

டிஸ்கவரி சேனல்களில் பாம்பு, சிங்கம், புலி, மான் ஓடிக் கொண்டே இருக்கின்றன. (இது பாம்புகள் மா....தம்) ஜீப்பில் கேமராவுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஏதேனும் மிருகத்தைத் துரத்தியபடி. இல்லையென்றால் FOOD FACTORY. விதம் விதமான உணவு தயாரிப்புகளைப் பார்க்கலாம். 

எல்லா மொழி சேனல்களிலும் அனேக நேரங்கள் "சமையல் நேரம்". பொறுமை இருக்கும் போது அதையும் பார்க்கிறேன். இயற்கைச் சூழலில் அருவிக்கரையில், புல்வெளிகளில் என்று சமைக்கும் இடம் வெளி நாட்டு சேனல்களில் தினம் தினம் மாறும். எப்படியும் நம்ம வீட்டுல தோசை தான். (மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா அமெரிக்கா நிகழ்ச்சியில் எதுக்கு போட்டியில் கலந்துக்கறவங்களை ஏதேதோ பேசிப் பேசி, பதட்டப் படுத்தறாங்க??) 

என் மனம் கவர்ந்த Foreign சேனல்கள் : NAT GEO PEOPLE (Travel around the world and food ), Al Jazeera , DW (Germany), NHK newsline (Japan), TV 5 monde (France) , CCTV (China) , BBC (London), Australia +, CNN ,Arirang (Korea) - இளைஞர்களுக்கான சேனல் இது. நம் பொதிகை போலத் தான். உலகில் நடக்கும் எந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லாமல் இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

செய்திகள் தவிர்த்து உலகின் பல்வேறு இடங்களையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் டாக்குமெண்டரிகள், உணவு வகைகள், கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், விழாக்கள் எனப் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. 

CCTV (China) யில் சீனாவைப் பற்றிய நிகழ்வுகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கண்டத்திற்கும் நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை அளிக்கிறார்கள். மாலை 3-5 ஆப்பிரிக்கா, காலையில் அமெரிக்கா. 

NAT GEO PEOPLE சேனலில் ஒளிபரப்பான Boarding time - Turkish Airlines பற்றிய நிகழ்ச்சி. ஏர்போர்டில் பயணிகள் வந்து சேர்வதிலிருந்து ஆரம்பித்து, அங்கே உள்ள செக்யூரிடி, போர்டிங், பயண நேரம், உணவு, விமான ஓட்டிகளின் பணி என ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று இறங்குவது வரை சிறிய பேட்டிகளுடன் அற்புதமாக இருந்தது. [350 டன் எடை கொண்ட விமானம் டேக் ஆஃப் ஆக 170 kmh வேகத்தை அது ரன்வேயின் முடிவிற்குள் அடைய வேண்டுமாம்)

Best cruises என்ற நிகழ்ச்சி உல்லாசக் கப்பல் பயணம் பற்றியது. (மன்மதன் அம்பு படத்தில் வருமே...) ஒவ்வோர் ஊராக இறங்கி சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் கப்பலில் ஏறி மற்றோர் இடத்திற்கு செல்கிறார்கள். வழியெங்கும் கண்கொள்ளாக் காட்சிகள்.

இன்றைக்கு நான் காண நேர்ந்த ஒரு நிகழ்ச்சி(Al Jazeera). Think out of the box type.  இது ரம்ஜான் மாதம் என்பது அனைவரும் அறிந்ததே. இசுலாமிய அன்பர்கள் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை உணவு உண்ணாமல் இருந்து விரதம் இருப்பார்கள். ஐஸ்லாந்து, நியூசிலாந்து போன்ற உலகின் துருவப் பகுதிக்கு அருகிலுள்ள நாடுகளில் எப்படி இந்த விரத நேரத்தைக் கணக்கிடுகிறார்கள் ? ஐஸ்லாந்தில் 21 மணி நேரங்கள் சூரியன் தரிசனம் தருவார் நியூசிலாந்தில் 9 மணி நேரங்கள் தான். இது மாதிரியான நாடுகள் தங்களது அண்டை நாட்டின் ,அதாவது moderate day and night times உள்ள நாட்டின் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரத்தைக் கணக்கில் கொண்டு உண்ணா நோன்பு  இருக்க வேண்டும் அல்லது அவர்களின் புனிதத் தலங்களான மெக்கா (அ) மெதீனாவின் நேரக் கணக்கினைப் பின்பற்றி உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்தேன். [நோன்பிருத்தல் பற்றிப் பல தகவல்கள் தோழிகள் மூலம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இன்றைய தகவல் சற்றே வித்தியாசமானது.]

BREXITபுண்ணியத்தில் தினமும் லண்டன் மற்றும் அதன் சுற்றுப் புறங்களைக் கண்டு களித்தேன். இன்று காலை DW (Germany)வில் EU நாடுகள் ஒவ்வொன்றாகக் காட்டி பிரிட்டனின் முடிவுக்கெதிரான போராட்டங்களை ஒளிபரப்பினார்கள். 

இத்தனை சேனல்கள் எங்களுக்கு வராதே என்று எண்ணுகிறீங்களா ? 
முதலில் எந்தெந்த சேனல்களை நீங்கள் பார்ப்பதே இல்லை என்பதை கண்டு பிடியுங்கள். அவைகள் Paid channel ஆக இருந்தால் கேபிள் ஆப்பரேட்டரிடம் பேசி நமக்குத் தேவையான சேனலை மாற்றிக் கொள்ளலாம். [அனுபவம் தான்]

ஆங்கிலம் மற்றும் வெளி நாட்டு சேனல்களில் கீழே சப்டைட்டில் வரும்.  

நானும் உங்களை மாதிரி தானுங்கோ!!

பின் குறிப்பு :
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி இவ்வளவு கதையளக்கிறாளே , வேறு வேலையே இல்லையா என்று நினைக்காதீர்கள் மக்களே...  எனக்கு நேரம் கிடைத்து, நல்ல நிகழ்ச்சிகளும் அந்த நேரத்தில் ஒளிபரப்பானால் மட்டுமே பார்க்கிறேன். அனேக நேரங்கள் முக்கியமான நிகழ்ச்சிகள் கிளைமாக்ஸ் சமயத்தில் தான் “கொஞ்சம் காபி போட்டு கொண்டு வறியா?”






















No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...