Monday, 13 June 2016

ஓடிப் போலாம் வரியா?

கடந்த மாதத்தின் ஒரு இனிய காலை நேரம்.

அதற்கு சில தினங்களாக எனக்கு சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ மனைக்கு சென்று காத்திருந்த நேரம்.....

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி கையில் டஃபெல் பை, கால்களில் நடைப் பயிற்சிக்கான ஷூக்கள், ட்ராக் பேண்ட் டீ ஷர்ட் சகிதம் கம்பீரமாக நடந்து வந்து அருகில் அமர்ந்தார். ஒரு அத்லெட்டுக்கான தோற்றம்.

என்னிடம் பேச ஆரம்பித்தார் அப்பெண்மணி. உடனே என் ஆர்வ (கோளாறின்) த்தின் பேரில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

நான் : அம்மா... வாகிங்க் முடிஞ்சு வரீங்களா?

அவர்: இல்லைம்மா.. நான் ஜவஜர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் ஜாகிங் முடிச்சுட்டு வரேன். (8.00 - 9.30)

தொடர்ந்து அவரே கூறியவைகள் ...

நான் தபால் துறையில் வேலைக்கு சேர தேர்வு எழுதினேன் அங்கே வேலை காலி இல்லாத காரணத்தால் டெலிபோன் துறையில் வேலை தந்தார்கள். நான் அலுவலகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்று 35 உலக நாடுகளுக்குச் சென்று , பல போட்டிகளில் பங்கேற்று , தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். 100 மீட்டர் ஓட்டம் என்னுடைய சிறப்பு என்றார்.

1989 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். தற்சமயம் எனது 85 ஆவது வயதில் இருக்கிறேன். தற்சமயம் வயது முதிர்ந்தோருக்கான போட்டிகளில் (veterans) பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறேன் என்றார்.

நான் : (வாயடைத்துப் போன நிலையில்) அம்மா...உங்கள் பெயர் என்ன ?

அவர் : என் பெயர் டெய்சி விக்டர். விக்டர் என் கணவர். அவரின் ஒத்துழைப்பால்தான் பல பரிசுகளைப் பெற முடிந்தது. கூகிள் செய்து பார் எனனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். டீவீ, நியூஸ் பேப்பர்களில் என் பேட்டிகள் வந்துள்ளன என்றார்.
உனக்கு எத்தனை பிள்ளைகள் அம்மா??

நான் :  ஒரு மகன் ஒரு மகள்

அவர் : எனக்கு 3 ஆண் 3 பெண் குழந்தைகள். அதில் 3 பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். எனக்கு சுதந்திரமாக வெளியில் சென்று வர வேண்டும் அங்கே அது முடிவதில்லை அதனால் பிள்ளைகள் அழைத்தும் நான் அங்கே செல்ல விரும்பவில்லை.


தம்முடைய விளையாட்டு ஆர்வம் பற்றி அவர் கூறியது : ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். காலப் போக்கில் இவள் உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள் என்றார்.

ஒவ்வொரு போட்டியின் முன்பும், கடவுள் எனக்கு ஓடும் திறமையை அளித்துள்ளார் அதை பயன்படுத்தி வெற்றி பெறுவேன் என்று நினைத்து செயல்படுவேன். கண்டிப்பாக ஓரிரண்டு பரிசுகளாவது பெற்றுத் தான் திரும்புவேன் என்றார்.

மருத்துவர் மிக மிக நிதானமாக கணினியில் வேலை செய்தததைக் கண்ட திருமதி விக்டர் , ஏன் இவர் வேகமாக வேலை செய்யலை என்று தெரியலையே.... ஓடி ஓடியே பழகிட்டேன் இப்படி உட்கார்ந்திருப்பது பிடிக்கவே இல்லை என்றார்.

நான் பல வருடங்கள் முன்பு ஹாங்காங் சென்ற போது மடிக்கணினி வாங்கி வந்து நானும் கற்றுக் கொண்டு அக்கம் பக்கத்து பிள்ளைகளையும் கற்கச் செய்தேன். இன்றளவும் இணையம் பற்றிய தகவல்களை யார் உதவியும் இல்லாமல் நானே அறிந்து கொள்கிறேன் என்றார். ஆர்வம் தான் காரணம் என்றார்.

நான் : .....................................................

அவர் : எப்போதும் நான் மருந்துகளின் உதவியை நாடியதில்லை. வயதான காரணத்தினால் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் அதன் காரணமாக இங்கே வந்தேன்.

நான் : ....................................................

கிளம்பும் சமயம் நான் அவரிடம் எப்படி வீட்டுக்கு போறீங்க என்றேன்....

அவரது பதில் : நடந்து தான்.... என் கூட வரியா ஓடலாம்??

பின் குறிப்பு : திருமதி விக்டருடன் பேசியதில் முதுமை என்பது சாதனை செய்யத் தடை இல்லை என்பது புரிந்தது,  இன்றளவும் ஆர்வம் சற்றும் குறையாத திறமையான விளையாட்டு வீராங்கனை. CGHS (Central Government Health Scheme)  எனப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது மருத்துவ மனையில் தான் மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் அந்த அம்மையார். நூற்றுக்கும் மேற்பட்ட மெடல்களைப் பெற்றிருக்கும் இவர் யார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.  அரசின் அங்கீகாரம் எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/agedefying-daisy-victor/article4131915.ece

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...