ஏழுமலையானின் வாசஸ்தலமான திருமலை....பாப விநாசம் செல்லும் சாலையில் கோகர்பம் அணக்கட்டின் அருகில் அமைந்த ஒரு திருமண மண்டபத்தில் கணவரின் அலுவலக நண்பரது மகனின் திருமணம்(ஜூன் 8,9).
வெய்யிலால் காய்ந்து மழையால் நனைந்து, பசியால் வாடி... சென்னை - திருமலை சென்று சேர 9 மணி நேரங்கள் , இதில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் திருமலையில் எங்களை அழைத்து செல்ல அனுப்பி வைக்கப் பட்ட , பரஸ்பரம் எங்களது தொலைபேசி எண் இல்லாத, வெள்ளை சட்டை அணிந்த ஒரு நபருக்கான காத்திருப்பு நேரம். ( திருமலையில் மொட்டை தலையுடன் காணப்பட்டவர்களுக்கு ஈடாக வெள்ளை சட்டை அணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிந்தது :) )
வரிசையாகத் திருமண மண்டபங்கள் தங்கும் அறைகளுடன். எங்கும் வண்ண விளக்குகள் வாகனங்கள். தோரணங்கள். வண்ணக் கோலங்கள். இது இரவுக் காட்சி.
மலைகளும் மரங்களும், பூக்களும் புத்தாடைகளுமாய் எங்கும் மகிழ்ச்சிக் கோலம். பகலில் தான் இதெல்லாம் என் கண்ணுக்கு தென்பட்டது.

மணமகன் ஏற்கனவே அறிமுகமானவர் மணமகள் தற்சமயம் சான் ஹொசே நகரில் படித்து கொண்டிருப்பவர். (இது கல்யாணம் முதல் காதல் வரை...) மண்டபத்தின் உள்ளே சென்று மணமக்களின் அருகில் சென்றவுடன் என்னுடைய "HI" யை கூறி முடிக்கும் முன்பாக, மணமகன் என் வலது கையை பிடித்து கொள்ள யாரென்றே என்னை அறியாத நிலையில் என் இடது கையை பிடித்துக் கொண்டு என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினார் மணமகள்.
முதல் தளத்தில் இரவு உணவு முடித்து கீழிறங்கி வந்த போது மண்டபத்தின் உள்ளே ஒரு பெண்மணியை சுற்றி பலரும் நின்றிருக்க அவர் சற்றே உரத்த குரலில் திருமண அமைப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்ததன் சாரம் :
8 மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கும் அவர்களுக்கு மாலையில் உணவு எதுவும் அளிக்கப் படவில்லை.
அரை அடி உயரத்தில் மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருக்கும் மேடை சீராக இல்லாததால், விளக்கு 3 முறைகள் தவறி விழுந்து விட்டது
திரைச் சீலைகள், உறைகள், தரை விரிப்புகள் அனைத்தும் சுத்தமாக இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணத்தை நடத்தி வைக்க வைதீகர் ஏற்பாடு செய்யப் படவில்லை. (நாங்களே ஐயரை கூட்டி வந்திருப்போமே)
மணப்பெண்ணின் தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதில் வியப்பில்லை. அந்த அமைப்பாளர் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் பேசியவுடன், அப்பெண்மணி கடும் கோபத்துடன், தன் கணவரை நோக்கி வாங்க நாம் இங்கிருந்து கிளம்பலாம் ஊருக்கே போய் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றார். இவர் சொன்னதை செய்யக் கூடியவர் என்று நினைத்தாரோ என்னவோ, அமைப்பாளர் சரி என்ன செய்யணும் சொல்லுங்க என்றார். மற்றவர்கள், அவரது கணவர் தவிர்த்து, அமைதியாக இருந்தார்கள். (அதுவும் நன்மைக்கே, விட்டால் எதிர் கட்சி வக்கீல் போல நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள்)
விடிவதற்குள் மேடை அகற்றப்பட்டு (தரையில் என் பெண் திருமணத்தை நடத்திக்கறேன்), கார்ப்பெட், உறைகள் மாற்றப்பட்டு,பக்கவாட்டில் வெள்ளை நிறத்தில் படுதாக்கள் இருக்க வேண்டும்.
வைதீகரைப் போல தோற்றமளித்தஒரு இளைஞரிடம் நாளை 8.30 க்கு இன்னொரு ஐயரையும் கூட்டிட்டு வரீங்க (காசி யாத்திரை தொடங்கி பல சடங்குகளையும் வரிசையாக சொல்லி), இவைகளுக்கு தேவையான மந்திரங்களை படிச்சுட்டு வாங்க, தெரியலைன்னா புத்தகம் எடுத்துட்டு வந்து சொல்லுங்க. 1 மணி முடிய இங்கே இருந்து அனைத்து சடங்குகளையும் ஒழுங்காக செய்து முடிக்கணும் என்றார்.

கூட்டம் கலைந்து சென்றது. மணப்பெண்ணின் தாயார் சாப்பிட அமர்ந்த நிலையிலும் (நினைவு இருக்கா, மாலையிலும் அவர் சாப்பிடலை) கடந்து சென்ற ஒவ்வொருவரையும் சாப்பிட்டீங்களா என்று உபசரித்தார்.
மறு நாள் காலை. மண்டபம் அந்த அம்மையார் கூறிய படி வெள்ளை படுதாக்கள் உறைகளுடன் சுத்தமாகக் காட்சி அளித்தது.

சொன்னபடி ஐயர் மற்றொருவருடன் வந்து சடங்குகளை நடத்த, திருமணம் இனிதே நடைபெற்றது.
மஞ்சள் படுத்தப்பட்ட பஞ்சகச்ச வேட்டி, பூணூல் தரித்த மணமகன் மஞ்சள் மடிசார் புடவை உடுத்திய மணமகள். வந்திருந்தவர்களிடம் மடிப்பிச்சை எடுத்து காசி யாத்திரை சென்ற மணமகன் என இது வரை கண்டிராத பல விஷயங்கள் திருமணத்தில்.(பாப்பா... புடவை மஞ்சள் படுத்தியதா இல்லை மஞ்சள் நிறத்திலேயே வாங்கியதா?
முதல் நாள் நிகழ்வு பற்றிய எந்த விதமான அலட்டலும் இல்லாமல் அமைதியாகத் திருமண சடங்குகளில் கலந்து கொண்டது அந்த அம்மையாரின் மற்றொரு பரிமாணம்.

தவறு, அநீதி கண்டு தட்டிக் கேட்ட அந்தத் தாயின் உருவில்-பாரதியின் புதுமைப் பெண் கண்டேன். அக்கா.. உங்க பேர் தைரிய லட்சுமியா?
அர்ச்சனா கல்யாண வைபோகமே..............
பின் குறிப்பு: : எங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. தட்டிக் கேட்க தைரியம் இருந்ததில்லை. எதுக்கு பிரச்சினை என்று நாம் எண்ணுவது நமக்கு பாதகமாக முடிகிறது. தவறுகளை தட்டிக் கேட்கலாம் தப்பே இல்லை.