Saturday, 6 December 2014

பொத்தூஊ..........

Son in girl attire sporting Pottu & pink ribbon
சிறு வயதில் நெற்றியில் வைக்கும் இந்த பொட்டை வட்ட வடிவில் இல்லாமல்  திலகமாக நீள வாக்கில் மட்டுமே வைத்து விடுவார் என் தாயார். 

அதற்கடுத்த கட்டமாக அச்சுக்களை ((பல வித வடிவங்களில் ஒரு வளையத்தில் கோர்த்து செய்திருப்பார்கள்)  கண் மையில் தோய்த்து நட்சத்திரம், பூ, காய், நாய், பேய்ன்னு வித விதமாய் வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் முகப்பவுடரை ஒத்தி விடுவார்கள். ஒரு வித கறுப்பு வெள்ளை கலவையாக அலைவோம்.

Raghav & Keshav Sporting Pottu
6,7 வயதுக் காலத்தில் திருமணமாகி மும்பை சென்ற என் சித்தி திரும்பி வருகையில் பச்சை நிற பிளாஸ்டிக் பொட்டு, குட்டை முந்தானை வைத்து உடுத்திய சேலை,பப்பின்ஸ் ஸ்டைல் தலை அலங்காரம்(அதாங்க மண்டைல கொண்டை வெச்சு தூக்கி வாரிக்கறாங்களே ... இன்றைய நயன்தாரா போல , அந்த கால ஷர்மிளா டாகூர் போல )  என  வந்தார். கருப்பு சிவப்பில் மட்டுமே பொட்டு இருக்கும் என்று நினைத்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விதம் விதமான நிறங்களில் மேட்சி மேட்சியாக அலங்கரித்துக் கொள்வார். முன் தினம் பார்த்தே......னே  பாட்டில் வரும் சிம்ரன் போல பொட்டை நடு நெற்றியில் வைத்துக் கொள்வார். ( எல்லாப் பெண்களும் அப்படித்தான், ட்விஸ்ட் நடனம் ஆடாதது தான் குறை)


நான் ஐந்தாம் வகுப்பு வந்தவுடன் , பல நிறங்களில் சாந்து பொட்டுக்கள் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். தோழிகளுக்குள் 16, 18 என யார் அதிக நிறங்களில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு போட்டியே நடக்கும்.(வட்டமாக எல்லா குப்பிகளும் அடுக்கி வைக்கப்பட்டு மேலே மூடி போட்டு இருக்கும்) 

அதில் என்ன கொடுமை என்றால் யார் மிகச் சிறிய பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்பதில் ஒரு போட்டி. நான் குண்டூசியை திருப்பி அதன் முனையில் சாந்தைத் தோய்த்து வைத்துக் கொள்வேன். (என் தாத்தா- பொட்டு கண்ணுக்கே தெரியலையே ...... நல்ல்ல்ல்லா பாருங்க... ஆமாம் இருக்கு அதென்ன ஈயோட  பீ அளவுல இருக்கு...கொஞ்சம் பெரியதா வெச்சா என்னம்மா..... உங்களுக்கு ஒண்ணும் தெரியாது தாத்தா  இது தான் ஃபேஷன்.... ஹைய்யோ ஹைய்யோ _தாத்தா) மஞ்சள், காப்பர் சல்பேட் நீலம், அடர் பச்சை என் அபிமான நிறங்கள்.(இந்த நிறங்களுக்கு தனி ஹைய்யோ..)

 Friends Meena to my right & Santhana Lakshmi to the left

அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒரு புகைப்படம் இது.... நான் அதில் பொட்டு வைத்திருக்கிறேனா இல்லையா என்பதை மிகச் சரியாகக் கண்டு பிடித்துச்  சொல்பவர்களுக்கு ஆலய மணி படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் பயன்படுத்திய சோப்பு டப்பா இலவசம்............

பல வருடங்கள் , மகள் பிறக்கும் வரை சாந்துப் பொட்டுக்கள் தான். அதை நாங்கள் பயன்படுத்தியதை விட கை தவறி (??!) கீழே கொட்டியது தான் அதிகம். இவைகள் விரல் உயர குப்பிகள், ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி குப்பி.


 இரு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலே உள்ள இடமே பொட்டு என்றும், நெற்றிப் பொட்டில் வைக்கும் சின்னமே பொட்டு என்பதும்,  அந்த இடம் நம் மனத்துடன் சம்பந்தப் பட்டது என்றும், யாரேனும் உற்றுப் பார்த்தால் நம் மனத்தை தம் வயப்படுத்த முடியும் என்றும் புரிந்த பிறகு சற்றே பெரிய பொட்டுக்கு மாறினேன். (இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட செய்தி)


மகன் சிறுவயதில் அம்மா எனக்கு "பொத்தூஊ" வேணும் என்று அடம் பிடித்து "பப்பௌ" போட்டு "பொத்தூஊ" வைத்துக் கொள்வார்.அம்மா பாவம்மா குழந்தை கேட்குது வெச்சு விட்டுடு_ என் மகள்.(என் மகளால் குழந்தை எனக் குறிப்பிடப்படும் என் மகன் சமீப காலங்களில் ..............
அக்காவை விட்டு விட்டு எனக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லும் போது நாயாகவும் , நான் தம்பியை கடைக்கு அனுப்பி உனக்கு தேவையானதை வாங்கி வர சொல்லு என்றால் குழந்தையாகவும் மாறுவார்)

பிறகு வந்தது வித வித நிறங்களில் , அளவுகளில் பிசின் வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள். பல நிறங்களில் ஆரம்பித்து கடந்த வருடம் வரை கருப்பு, சிவப்பு, கருப்பில் சிவப்பு, சிவப்பில் கருப்பு வட்டம் , நீட்டு பொட்டு என விதம் விதமாக என்னுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் மூடுக்கு ஏற்ற வகையில் மற்றி மாற்றி வைத்துக் கொள்வேன்.(மிக்ஸ் & மேட்ச் வகை ??)

Younger Grandson Raghav
என் தந்தையின் கருத்தில், மாமியாருக்கும் மருமகளுக்கும் கருத்து வேற்றுமை வர முக்கியக் காரணம் இந்த பொட்டுதான். மருமகள் வட்டப் பொட்டு வெச்சுகிட்ட நீளப் பொட்டு வெச்சுக்கோன்றது நீளமா வெச்சுகிட்ட வட்டமா வெச்சுக்கோன்றது... அவரவராக எதற்காக பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து செய்து கொள்வதே சிறப்பு...... மற்றவர்கள் சொல்வது சரியாக இராது என்பார்.

கடந்த அமெரிக்க பயணத்தின் போது பல அட்டைகள் மகளுக்காக வாங்கிச் சென்றதில் அளவு சரியில்லை என்று திருப்பி விட்டார். திரும்ப வந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மறுத்து அலற அலற பல அட்டைகளை தானம் செய்த பின்பும் , அன்று முதல் நேற்று வரை ஒரே அளவிலான கருப்பு நிற வட்ட வடிவப் பொட்டு தான்... அலுக்க சலிக்க..........(தயவு செய்து சிவப்பு நிறப் பொட்டு வெச்சுக்கோயேன் _ என் அத்தை மகள்)

நேற்று போல் இன்று இல்லை.......... சிவப்பு திலகம் என் நெற்றியில்.......
இன்று போல் நாளை இல்லை...... சிவப்பு நிறத்தில் கறுப்பு வட்டப் பொட்டு....

பின் குறிப்பு : பொட்டு வட்ட வடிவமாக இருப்பது சிறப்பு. எப்படி நகர்ந்தாலும் அதே வடிவம் தான்.
இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான சக்கரம் என்ன வடிவம் சொல்லுங்க பாக்கலாம்?
வீதியோர சாக்கடைகளின் மூடி வட்டமா சதுரமா? பார்த்திருக்கீங்களா? (சதுர மூடி குறுக்காக வைத்தால் சாக்கடையின் உள்ளேயே விழுந்து விடும்)



Monday, 1 December 2014

ஜோடிப் பொருத்தம் (रब ने बना दी जोड़ी)

வேலைக்கு செல்லும் தாயான என்னால் மகளது பிரசவ தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் விடுப்பு கிடைத்து சான் ஹொசே நகரம் செல்ல முடிந்தது.

அக்டோபர் 17, 2013.... இனிய காலை பொழுது ... (அங்கே சூரிய பகவான் லேசாக எட்டிப் பார்த்தாலே இனிய காலைன்னு சொல்வாங்க...எல்லா நாளும் எல்லா நேரமும் பிரிட்ஜுக்குள்ளே இருக்கற மாதிரியே இருந்தது நான் இருந்த 6 மாதங்களும்)

அது நாள் வரை மகளுக்கு சமைத்துத் தராததை ஈடு கட்டும் விதமாக அவளுக்குப் பிடித்த உணவை நண்பகலில் சூடாக சமைத்துத் தருவதாக சொல்லி இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் பொழுதை போக்குவது எப்படி? (4.30 ~ 11.00 தினமும் பரபரப்பாக இருந்தவள் நான்..)


அங்கே உள்ள நெட் ஃப்லிக்ஸில்" ரப் நே பனா தி ஜோடி" படம் பார்க்க சொன்னார் மகள். நான், என் கணவர் , மூத்த பேரன் மூவரும் மிக சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு காட்சியில் பஞ்சாப் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் கதா நாயகன் , கதா நாயகிக்கு தன் காதலை உணர்த்த எண்ணி ஒரு மலை மேலே அழைத்துச் செல்வார். அங்கிருந்த படி ஊருக்குள் பார்க்க சொல்வார். அப்போது ஊரிலுள்ள மொத்த விளக்குகளும் அணைந்து விடும். அந்தக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதே கணம் எங்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலும் விளக்குகள் அணைந்து விட்டது. காரிருள் சூழ்ந்தது ??!

நான் மகளிடம் திரைப்படத்தில் தான் மின் தடை.... இங்கே தொலைக்காட்சி திரையும் இருட்டாகி விட்டதே என்று கேட்க , அவள்...அம்மா நம் வீட்டிலும் மின்  தடை என்றாள்.(அமெரிக்காவுல கரண்டே போகாதுன்னுல்ல சொல்வாங்க??)

அப்போது நேரம் 11.30 ... மின் அடுப்பில் மதிய உணவு எப்படி சமைப்பது?? வேறு வகை அடுப்பும் கிடையாது......

சற்று தொலைவில் வசித்து வந்த மகளது தோழிக்கு தொலை பேசி , அவரை எங்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயாரிக்க சொல்லி விட்டு, பொடி நடையாய் அவரது இல்லம் சென்று உண்டு முடித்தோம். (மகளால் அச்சமயம் கார் ஓட்ட முடியாத நிலை)

வரும் போது அவரது தோழி எங்களை காரில் அழைத்து வந்து விட்டு சென்றார். 

வீட்டை ஒட்டி பிரதான சாலை, மின் தொடர் வண்டி நிலையம் , ரயில், கார் இரண்டுக்கும் பொதுவான சிக்னல் ..ரயில் மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க சில மைல்களுக்கு சாலைகளில் சிக்னல் இல்லை... (மகளது தோழியிடம் , பார்த்து பத்திரமா வீட்டுக்கு போம்மா.போயிட்டு போன் பண்ணும்மா.....)

சில மணி நேரங்கள் கழித்து மின்சாரம் வந்த பிறகு .. விட்ட இடத்திலிருந்து படத்தை பார்த்து முடித்தோம். முதல் நாள் வரை சிங்கார சென்னையில் தினசரி 2 மணி நேர மின் தடையை அனுபவித்ததால் எனக்கு சிரமமாக தெரியவில்லை...... சமைக்க முடியவில்லை என்பது தவிர....

என் கணவர் முக நூலில் போட்ட ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா??:
"ஒரு ஆள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் போது மின் தடையையும் சேர்த்தே கொண்டு வந்து விட்டார்"





WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...