CHENNAI – BANGALORE
– GORAKHPUR (UTTAR PRADESH)
DARBHANGA
(BIHAR)- KOLKATTA- CHENNAI
INDIGO
AIRLINES
9-16/10/2025
மூன்று மாத திட்டமிடல்,
ஆயிரம் விசாரணைகள் எனச் செய்து கடைசியில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாளத்தில்
பனிமலைகளுக்கிடையில் அமைந்த மிக உயரமான இந்துக் கோவில் அமைந்திருக்கும் முக்திநாத்
செல்ல முடிவு செய்தோம். பல குறைபாடுகளை சாமானியர்கள் மட்டுமல்லாது பிரபல உபன்யாசகர்
உட்படப் பலரும் கூறியதைக் கேட்ட பிறகு இந்தப் பயணம் தேவையா என்ற கேள்வி என்னுள் எழுந்தது
நிஜம்.
மகளிடம் எங்கள்
பயணம் பற்றிக் கூறிய போது, அம்மா…முக்திநாத் செல்லும் வாய்ப்பு என்பது மிக அரிதான ஒன்று.
திருப்பதிக்கு எப்படி நாம் நினைத்தபோது செல்ல முடியாதோ அப்படிதான் இதுவும். நேர்மறைக்
கருத்துக்களுடன் அங்கு சென்று வாருங்கள் எனக் கண்டிப்பாகக் கூறினார். தரை மார்க்கமாகக்
கடந்த வருடம் நேபாள சுற்றுலா சென்று வந்த சகோதரி ஒருவரும் இந்தப் பயணத்தை சுலபமாக ஏற்றுக்
கொள்வது எப்படி என விவரங்கள் கூறினார். நேர்மறையான அவரது கருத்துக்களும் என்னை மகிழ்ச்சியுடன்
இந்த எட்டு நாள் பயணத்தை எதிர்கொள்ள வைத்தது.
நேபாளமும் நமக்கு
வெளிநாடு தான் என்பதால் பயணம் பற்றிய குறிப்புக்கள்/ஏற்பாடுகள் பற்றிய சில தகவல்களை
பகிர்ந்துள்ளேன். இந்தப் பதிவு நீளமானதாக இருந்தாலும் நேபாளம் செல்ல விரும்புவோர்க்கு
பயனுள்ளதாக அமையும். மேலும் நாங்கள் பார்த்த YouTube வீடியோக்களிலும் மற்றவர்களின்
கருத்துக்களிலும் கண்டது போல முக்திநாத் (நேபாள) பயணம் பயங்கர “திக் திக்” அனுபவமாகவோ
மோசமானதாகவோ இல்லை. சரியான பருவநிலை, தகுந்த முன்னேற்பாடுகள் எனப் பயணம் சென்றால் எந்தப்
பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நம் மனத்தில் ஆழ்ந்த இறை நம்பிக்கையும்
நேர்மறைக் கருத்துக்களும் தைரியமும் தேவை. அவ்வளவே.
1.Identity
card
Passport தேவையில்லை.
இது **SAARC நாடுகளுள் ஒன்று என்பதால் இங்கு செல்ல விசா தேவை இல்லை. நம்முடைய “ஆதார்”
அட்டையே போதுமானது. கூடுதலாக Voter Id எடுத்துச் செல்ல வேண்டும். காத்மாண்டு விமான
நிலையம் வழியாக சென்றால் பயன்படும்.
2.Currency
அங்கு நேபாள
ரூபாய் பயன்படுத்தப் படுகிறது. [Rs 1= NRs 1.6 (தோராயமாக)] இந்தியப் பணம் ₹100,
₹500 செல்லுபடியாகும். ₹20, ₹50 நோட்டுக்களும் செல்லும். சரியான சில்லறை கொடுக்கவில்லையென்றால்
அவர்கள் நேபாள ரூபாயில் மீதி சில்லறை தருவார்கள். (உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்க
டாலர்களைப் பெற்றுக் கொண்டு அந்தந்த நாட்டு பணத்தை சில்லறையாகத் தருவார்கள்; அப்படி
சேர்த்த சில்லறை நோட்டுக்கள் பலவும் என்னிடம் உள்ளன) அனேகமாக அனைத்து பேரங்களும் இந்திய ரூபாயில் தான்.
வயது குறைந்தவர்கள்
மற்றும் உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் தரைமார்க்கமாக தாராளமாக செல்லலாம். செலவும் குறையும்.
அனுபவமிக்க பெங்களூரை சேர்ந்த ஒரு Travel agency மூலம் நாங்கள் விமானப் பயணங்களைத்
தேர்ந்தெடுத்தோம். விமானப் பயணங்கள் தவிர்த்து மற்ற இடங்களுக்கு Insurance கிடையாது.
Insurance companyகளிடம் விசாரித்த போது குறுகிய கால பயணங்களுக்கு அந்த வசதி இல்லை
என அறிந்தோம். சாலையோ விமானமோ ஒரு நாள் ஒரு ஊர் எனத் தான் பயணத் திட்டம் என்பதால் அசதி
அதிகமாக இல்லை.
4. Food
& Medicines
நேபாளம் இமயமலைத் தொடர்களுக்கிடையே அமைந்த நாடு என்பதால் அதிக காற்றழுத்தம் காரணமாக அரிசி, பருப்பு நம் ஊர்களைப் போல வேகாது. சப்பாத்தி, அரிசி சாதம் (சீரக சம்பா பாஸ்மதி போல நீள அரிசி), பருப்பு, காய்கறிகள், தயிர் என உணவு கிடைக்கிறது. பயண நேரத்தில் வயிற்றுக்கு ஏற்ற வகையில் அவற்றை அளவாக உண்டால் சமாளித்து விடலாம். கூடுதலாக snacks, பழங்கள் இருந்தால் போதும். திடீர் உணவுகளும் எடுத்துச் செல்லலாம். வழியில் Thakali thali எனும் பெயரில் அசைவ உணவுக் கடைகள் நிறைய உள்ளன.
மருத்துவ வசதிகள்
பெரிய நகரங்கள் தவிர்த்து அதிகம் இல்லை, தேவையான மருந்து மாத்திரைகள் ORS போன்றவற்றைக்
கைவசம் வைத்திருக்கவும். இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று தேவையான
மருந்தினை முக்திநாத் செல்லும் போது பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்கள். நாங்கள் எதுவும்
பயன்படுத்தவில்லை.
5. Clothing
முக்திநாத் அடிவாரத்தில்
அமைந்துள்ள Jomsom என்னும் ஊரினை அடையும் போது பருவநிலை மாறி குளிரத் தொடங்குகிறது.
அங்கிருந்து முக்திநாத் சென்று திரும்பவும் Pokhra என்னும் ஊரை அடையும் வரை குளிராடைகள்
தேவைப்படும். மற்றபடி வேறேங்கும் குளிராடைகள் தேவைப்படவில்லை.
நாங்கள் சென்ற
அக்டோபர் இரண்டாம் வாரம் அங்கு பருவமழை முடிந்திருந்த காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக
குடையும் எடுத்துச் சென்றோம். நல்ல ஷூக்களை அணிந்து சென்றால் போதுமானது. அதிகப்படியாக
3-4 செட் சாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய சுற்றுலாப்
பயணிகள் வந்தாலும் அங்குள்ள மக்களும் செருப்புக்களை ஒழுங்காக வைக்கிறார்கள். செல்லும்
வழி திரும்பும் வழிகளை சரியாகப் பின்பற்றுகிறார்கள். நேபாள மக்கள் பொதுவிடங்களில் கத்தி
பேசுவதில்லை.
6.Luggage
Less
luggage more comfort.
விமானத்தில்
செல்வதால் 15kg check-in bag, 7 kg roll-on மற்றும் ஒரு 3 kg laptop bag/handbag அனுமதிக்கப்படுகிறது.
ஆங்காங்கே உடைகளை மட்டும் எடுத்துச் செல்லவோ, சுற்றிப் பார்க்கையில் தின்பண்டங்களை
எடுத்து செல்லவோ backpack உதவும் என்பதால் 7 kg roll-on பையை backpack ஆக வைத்துக்
கொள்ளலாம். விதம் விதமாய் பொருட்களை எடுத்துக் கொள்ள சொல்கிறாய் இந்த அளவுள்ள பெட்டிகள்
போதுமா என்ற கேள்வி எழுகிறதா? போதும். கத்திரி, கத்தி, ஊசி நூல் இன்ன பிறபொருட்களை
Check-in பெட்டியிலும் துணிமணிகளில் ஒரு பகுதி, காலி குடிதண்ணீர் பாட்டில், போன்றவற்றை
7 கிலோ பெட்டி/backpackல் வைத்துக் கொள்ளலாம். Securitys scanல் பிரச்சினை வராது.
Passport இல்லாத பயணம் என்பதால் எல்லையைக் கடக்க தரை மார்க்கமே பயன்படுத்தப்படுகிறது.
எல்லையை தாண்டியதும் மிக அருகில் உள்ள விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
7. Hotels
காலி தண்ணீர்
பாட்டில்கள் இரண்டினை எடுத்துச் சென்றால் ஹோட்டலில் உள்ள கெட்டிலில் சுடுநீர் வைத்து
கொட்டி எடுத்துச் செல்லலாம். அறையில் கெட்டில் இல்லாத இடத்தில் அவர்களது உணவு விடுதியிலேயே
மிகப் பெரிய கெட்டில் வைத்திருந்தார்கள். இருப்பினும் சிறிய கெட்டில் ஒன்றை கையில்
எடுத்துச் செல்வது நலம். இருமல், சளித் தொல்லையில்லாமல் பயணிக்கலாமே!
8.
Restrooms
நேபாளத்தில்
விமான நிலையம் உட்பட அனேகமாக நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலுமே Western and Indian
style commodes சுத்தம் செய்து கொள்வதற்கான hand bidet.களுடன் இருந்தன, பெண்கள்
Urinary tract infection வராமல் எப்படி சமாளித்தோம் என்பது பற்றி அறிய விரும்புபவர்கள்
என்னை தொடர்பு கொள்ளவும். [இதற்குத் தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்]
இங்குள்ள கோவில்களில்
நாமே தெய்வத்தை தொட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்யலாம் எனக் கூறப்பட்டாலும்
எந்தக் கோவிலிலும் அதற்கு அனுமதி இல்லை (ஒரு சிறு கோவிலில் பிள்ளையாருக்கு ஒரு பெண்மணி
பூஜை செய்தார்) பிரசாதம் எங்கும் வழங்கப்படுவதில்லை. ஊரிலிருந்து கிளம்பும் போதே பாதாம்,
முந்திரி, கல்கண்டு போன்றவற்றை எடுத்துச் சென்றால் அங்கே பூசாரி கடவுளின் காலடியில்
வைத்து எடுத்துத் தருவார். முக்திநாத் கோவிலருகில் பனியுருகி காலி கண்டகி நதியாக மாறும்
இடத்தில் நீர் பிடித்து எடுத்து வர ஒரு காலி பாட்டிலும் உடன் எடுத்துச் செல்லலாம்.
(200 ml அளவில் இருந்தால் விமானத்தில் check-in செய்வது சுலபம்) நதியில் இறங்கி சாளக்கிராமம்
பொறுக்க எங்கும் அனுமதி இல்லை. கடைகளில், தெருக்களில், ஹோட்டல்களில் ருத்ராட்சம் சாளக்கிராமம்
விற்பனை செய்கிறார்கள்.
10.
Language
நேபாளத்தில்
இருந்த நாட்களில் நான் காண நேர்ந்த ஒரு Documentaryயில் ஒரு நபர் கூறியது: Nepal
has three religions: Hinduism, Buddhism and Tourism
இந்துக்களுக்கும்
பௌத்தர்களுக்கும் முக்திநாத், பசுபதிநாத், லும்பினி போன்றவைகள் திருத்தலங்கள் என்றால்
வெளிநாட்டினருக்கு எவரெஸ்ட், அன்னபூர்ணா போன்ற சிகரங்களுக்கு ஏறுதல், பனி சார்ந்த விளையாட்டு
தலங்கள். [5,500 அடியிலுள்ள Everest base camp செல்வது தற்சமயம் அனைத்து நாட்டினரும்
விரும்பும் ஒரு செயலாக மாறியுள்ளது]
சுமாரான ஹிந்தி
தெரிந்திருந்தால் சமாளிக்கலாம். நேபாள மொழி சமஸ்கிருத வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்
கொண்டுள்ளதால் அங்குள்ள பலகைகளைப் படித்துப் புரிந்து கொள்வது என் வரையில் சிரமமாக
இருக்கவில்லை. ஹிந்தி படிக்கத் தெரிந்தவர்களும் சமாளிக்கலாம். உடைந்த ஆங்கிலமும் சிலர்
பேசுகிறார்கள்.
11.
Shopping
தில்லியிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட பல வண்ணப் பாசிகளால் ஆன மாலைகள், வளையல்கள் கடைகள் எல்லா ஊரிலும்
உள்ளன. பேரம் பேசி வாங்கலாம். பித்தளை, தாமிரம், மூங்கில், மரச் சாமான்கள், ருத்ராட்சத்தினால்
ஆன மாலைகள், 100 ரூபாய்க்கு 5 bracelets, பாஷ்மினா Pashmina shawls) சால்வைகள், வெள்ளி
நகைகள் ஆகியவைகள் அங்கேயே செய்யப் படுகின்றன. வேலைப்பாடுகளுடன் அமைந்த ஆடைகளும் நிறையக்
கிடைக்கின்றன. சிற்றூர்களில் வாங்குவது உத்தமம். காத்மாண்டுவில் விலை அதிகம் பேரம்
பேச முடிவதில்லை. Fridge magnets போன்றவைகள் கோவில் வாசல்களில் விற்கப்படுகின்றன, தனியாக
souvenir கடைகள் இல்லை. (இருக்கின்றன ஆனால் தொலைவில்)
11.Time
difference
இந்திய நேரத்தை
விட 15 நிமிடங்களே அதிகம். உதாரணமாக Indian Standard Time காலை 9.00 என்றால் Nepal
Standard Time காலை 9.15. அதிகம் நேர வித்தியாசம் இல்லை என்பதால் உடலளவில் jet lag
போன்ற எந்தப் பாதிப்பும் இல்லை.
நிற்க. விவரங்கள்
போதும். யாத்திரைக்குச் செல்வோம்.
நவராத்திரி முடிந்த
சில நாட்களுக்குள் தேவையான பொருட்களை சேகரித்து பெட்டிகளை குரங்கு ஆப்பக் கதை போல மாற்றி
மாற்றி அடுக்கி…முதல் நாளே திருப்பெரும்புதூர் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வேண்டிக்
கொண்டு கிளம்பத் தயாரானோம்.
சில வாரங்களுக்கு
முன் நேபாளத் தலைநகரில் மாணவர்கள் அரசை எதிர்த்து நடத்திய போராட்டம், பருவ மழையால்
ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகள் போன்ற காரணங்களால் எங்கள் பயணம் தொடங்குமா என்பதே
சந்தேகமாக இருந்த நிலை. Travel agencyயிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தான்
எங்கள் விமான சீட்டு விவரங்கள் கிடைத்தன. முதல் நாள் தான் எங்களின் தினசரிப் பயணத்
திட்டம் கிடைத்தது.
09/10/2025
அன்று காலை
5.45க்கு எங்கள் இல்லத்திலிருந்து கிளம்பி சென்னை விமான நிலையம் சென்றோம். எங்களுடன்
பயணிக்கவிருந்த என் கணவரின் அலுவலகத் தோழர்கள் மூவரும் தம் மனைவியர் சகிதம் வந்து சேர்ந்திருக்க
விமானத்தில் பைகளை check-in செய்த பிறகு காலை உணவான ரொட்டி உப்புமாவை (?!) உண்டு விட்டு
பெங்களூரை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம்.
[முதல் நாளிரவு
எங்கள் ஊர் ரொட்டி டோஸ்டரில் போட்டால் கருகியது, தோசைக்கல்லில் போட்டால் பிய்ந்தது.
விடிய விடிய சரியாகத் தூங்காமல் அதிகாலையில் எழுந்து பிய்ந்த ரொட்டிகளை உப்புமாவாக்கி
எடுத்துச் சென்ற கதைக்கு தனிப் பதிவே போடலாம்]
இண்டிகோ விமானங்களில்
தண்ணீர் கூட நாம் கேட்டால் மட்டுமே தருவார்கள். 40 நிமிட பயணம் என்பதால் பிரச்சினை
இல்லை. கோரக்பூர் செல்லும் விமானம் மதியம் 2.10க்கு தான் என்பதால் இடைப்பட்ட பொழுதை
விமான நிலையத்தில் கழித்தோம். கையில் கொண்டு சென்றிருந்த சப்பாத்திகளை உண்டு விட்டு
அடுத்த பயணத்தைத் தொடங்கினோம். 4.20க்கு கோரக்பூரை சென்றடைந்தோம். [2.20 மணி நேர பயணம்]
இந்த விமான நிலையம் அடர்ந்த காட்டினிடையே அமைக்கப்பட்டுள்ளது. சிறிய விமான நிலையம்.
குறுகிய ஓடுபாதை என்பதால் கிராமத்துப் பேருந்து நிலையம் போல ரன்வேயின் குறுக்கே நடந்து
நிலையத்தை அடைந்தோம். அந்த சமயம் 300 அடி தொலைவில் மற்றொரு விமானம் ரன்வேயில் எங்களுக்கு
முன்பாக சென்று கொண்டிருந்தது. ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
(விமானப் படைத்தளம் ஒன்று இந்த ஊரில் உள்ளது)
50*30 அடியில்
ஒரு சிறு கூடம் அது தான் Baggage claim, Security, Baggage check-in area எல்லாம்.
அங்கே காத்திருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு எங்களுக்காகக் காத்திருந்த இரண்டு ஜீப்களில்
ஏறினோம். பயண நேரத்தில் கோரக்பூர் பற்றி சில முக்கிய விவரங்கள் உங்களுக்காக இங்கே.

உத்தரப் பிரதேச
மாநிலத்தில் Rapti என்னும் பெயருடைய நதியின் கரையில் அமைந்துள்ளது இந்த ஊர் ஆதிநாத்
(சிவன்) கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆதிநாத் மடம் இங்கே தான் உள்ளது. Nath என்னும்
ஒரு cultஐ சேர்ந்தவர்களின் தலைமை மடம் இது. இதன் தலைவர் தற்சமயம் உத்தரப் பிரதேச மாநிலத்தின்
முதல்வராக உள்ள திரு. யோகி ஆதிநாத் ஆவார். Gita press எனப்படும் மிகப் பிரபலமான இந்து
மத புத்தகங்கள் அச்சிடும் பதிப்பகம் இங்கு தான் உள்ளது. [1000 பக்கங்கள் கொண்ட பகவத்
கீதை புத்தகத்தின் விலை ₹200/- மட்டுமே] விமான நிலையம் சிறிய அளவில் இருந்தாலும் அதன்
புகைவண்டி நிலையம் மிகப் பெரியது. உலகின் இரண்டாவது மிக நீண்ட நடைமேடையைக் கொண்ட ரயில்
நிலையம் இது.[என் பிள்ளைகளின் பள்ளி நாட்களில் கூட இது தான் முதல்] மிகப் பெரிய இந்த
ரயில் நிலையத்திற்கு 7 கதவுகள் இருப்பதை செல்லும் வழியில் கண்டேன். ஓவ்வொன்றுக்கும்
இடையே ஏறக்குறைய 0.5 – 1 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்.
இரவு 9 .30 மணிக்குள்
இந்திய எல்லையைக் கடக்கவில்லை என்றால் மறுநாள் காலை தான் கடக்க முடியும் என்பதால் எங்களுக்கு
கோவிலுக்கு செல்ல நேரம் இல்லை. வழியில் எங்கும் நிறுத்தாமல் ஜீப் சென்றது. இடையில்
நிறுத்தி snacks and tea வாங்கித் தர வேண்டும் என்பது பயணத் திட்டம். ஜீப் ஓட்டுநர்கள்
எங்களிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது போல, மொழி புரியாதது போல நடித்தபடி ஓட்டிக்
கொண்டே… இருந்தார்கள். (100 கிலோமீட்டர் தொலைவைக்
கடக்க 2.50 – 3 மணி நேரங்கள்)
நம் ஆட்கள் சாதாரணாமானவர்களா
என்ன? ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்து ஹிந்தி தெரியுமா என ஆரம்பித்து அவர்கள் இடைப்பட்ட
ஊரில் நிறுத்தி டீ வாங்கித் தரும் வரை விடவில்லை. எங்களுக்கு சமோசா வாங்கித் தந்ததாக
பில்லை கூட்டிப் போட்டு வாங்கிக் கொண்டார். [பயண நாட்களில் உணவு செலவு agency’s scope]
ஒரு வழியாக இரவு 8.30 மணியளவில் நேபாள எல்லையை அடைந்தோம். இந்தியப் பகுதியில் (Sonouli,
UP) பெரிய கடைத்தெருவிற்கு நடுவில் செல்லும் சாலையில் நேபாள எல்லைக் கோட்டிற்கு மிக
அருகில் ஆதார் அட்டைகளைப் பரிசோதித்து விட்டு ஜீப்பின் பின் பக்க கதவினைத் திறந்து
பெட்டிகளை பார்த்து விட்டு எங்கே செல்கிறோம் என விசாரித்து அனுப்பினார் ஒரு ராணுவ வீரர்..
நேபாளப் பகுதியில் பைகளை ஸ்கேன் செய்ய வைத்து அனுமதித்தார்கள்.
நேபாள
registration உள்ள ஜீப் எல்லையில் எங்களை அழைத்துச் செல்ல வரும் எனக் கூறப்பட்டது ஆனால்
நாங்கள் சென்ற ஜீப்பே எங்களை தங்கும் விடுதிக்கு (Hotel Ultra International Pvt
Ltd) அழைத்துச் சென்றது. அதே வண்டியே மீண்டும் சென்று மற்றவர்களையும் அழைத்து வந்தது.
அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்து விட்டு இரவு உணவான சப்பாத்தி, பருப்பு, சாதம், கத்திரிக்காய்
துவையல், சாலட், உருளைக் கிழங்கு பீன்ஸ் பனீர் சேர்த்த கூட்டு, தயிர், குலாப்ஜாமூன்
ஆகியவற்றை உண்டு விட்டு மங்களூர் குழுவினரிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அறைக்கு
உறங்கச் சென்றோம். [மங்களூரைச் சேர்ந்த எங்கள் குழுவினர் ஐவரும் மதியமே அங்கு சென்றடைந்து
விட்டதால் கோரக்நாத் கோவிலுக்கு சென்ற பிறகு Bairahawa என்னும் நேபாள எல்லை நகருக்கு
எங்களுக்கு சற்று முன்பாக சென்று சேர்ந்து விட்டார்கள்]
வித்தியாசமான
அனுபவங்களுக்கான எதிர்பார்ப்போடு எங்கள் முதல் பயண நாள் முடிந்தது.
10/10/2025
நேபாள எல்லையில்
இருக்கும் போதே அந்த நாட்டைப் பற்றிய சிறு குறிப்பினைக் கூறிவிடுகிறேன். வடக்கில் திபெத்
மற்ற திசைகளில் இந்தியா என நிலப்பரப்பால் சூழப்பட்ட மிகப் பெரிய ஆனால் பரப்பளவில் சிறிய
இந்து தேசம் என்னும் பெருமை வாய்ந்த இந்த நாட்டில் புத்தமதமும் போற்றப் படுகிறது. இமாலய
மலைகளின் மீது அமைந்திருந்தாலும் இதன் ஒரு பகுதி Indo-gangetic plain எனப்படும் கங்கை
சமவெளியில் உள்ளது.
வளமையான சமவெளி,
பைன் காடுகள் அடர்ந்த குன்றுகள், மிக உயரமான பனிமலைகள் (எவரெஸ்ட் உட்பட உலகின் மிக
உயரமான 10 சிகரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன) என வித்தியாசமான நிலப்பகுதிகளைக் கொண்டது.
வடக்குப் பகுதி மக்கள் திபெத்திய/சீன
பழக்கங்கள் மத்திய மற்றும் கீழ்ப் பகுதி மக்கள் இந்தோ ஆரிய பழக்கங்கள் எனக் கலந்து
மேற்கொள்கிறார்கள். தேசிய மொழி “நேபாளி” இது சமஸ்கிருதமும் ஹிந்தியும் சேர்ந்தது போன்ற
எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ளது.
சித்தார்த்
நகர் எனப்படும் பைரஹவா (Bairahawa) நகரம் நேபாள எல்லையில் அமைந்து புத்தர் அவதரித்த
Lumbhini என்னும் ஊரின் நுழைவாயிலாக உள்ளது. இந்த நகரம் கடல்மட்டத்திலிருந்து
87மீ உயரம் உடையது என்பதால் சமவெளிதான். தூ……ரத்தில் தான் பனிமலைகள் தெரிகின்றன.
காலை
6.45க்கு அளிக்கப்பட்ட காலை உணவான பூரி உருளை கொண்டைக்கடலை கூட்டு, ரொட்டி, வெண்ணை,
ஜாம், டீ ஆகியவற்றை உண்டு முடித்ததும் அறையைக் காலி செய்து விட்டு பெட்டிகளுடன் எங்களுக்கான
maxicabல் ஏறினோம். 25 கிலோமீட்டர் பயணம். சாலை நன்றாக இருந்தது. சாலையின் நடுவே ஆங்காங்கே
பீடம் அமைக்கப்பட்டு கைகூப்பிய நிலையில் அமர்ந்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
முதலில்
சென்ற இடம் World peace pagoda, Lumbhini. இது ஒரு புத்த விஹாரம். சுற்றிலும் பசுமையுடன்
அமைந்த இந்த விஹாரத்தின் மேலேறிக் காணலாம். பின்னணியில் தொலைவில் பனிபடர்ந்த சிகரங்களைக்
கண்டோம். அங்கே தன் முக்திநாத் இருக்கிறது எனக் கூறப்பட்டது. சில நிமிடங்களை அங்கே
கழித்து விட்டு கீழிறங்கி வந்ததும் வாசலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆட்டோக்களில்
ஏறி ஊரின் மற்ற பகுதிகளைக் காணச் செல்ல வேண்டும் பெரிய வண்டிகள் செல்லாது எனக் கூறப்பட்டதால்
4 பேருக்கு ஒரு ஆட்டோ INR 650 எனப் பேசி முடிவு செய்து கிளம்பினோம். சிறிது தொலைவு
சென்றதும் ஜப்பான், இந்தியா, கம்போடியா, பர்மா ,தாய்லாந்து ஆகிய நாட்டினர் கட்டியுள்ள
புத்தர் கோவில்களை உள்ளே சென்று பார்த்தோம். (மேலும் பல நாட்டினரும் இங்கே கோவில்களைக்
கட்டியுள்ளார்கள். நேரமின்மை காரணமாக அவைகளைக் காண இயலவில்லை).
ஒவ்வொரு
நாட்டினரும் அவரவர் கட்டிடக் கலைக்கேற்ப கோவில்களைக் கட்டியுள்ளார்கள். கம்போடியக்
கோவிலின் கைப்பிடி, சுற்றுச்சுவர்கள், உட்புற அலங்காரங்கள் எல்லாம் இரண்டு பாம்புகள்
பின்னிப் பிணைந்தது போல அமைக்கப் பட்டுள்ளது. கட்டிடக் கலையின் பல்வேறு பரிமாணங்களுக்கு
இந்தக் கோவில்களே சிறந்த சான்று. இந்தியக் கோவிலின் உட்புறம் புத்தரின் வாழ்க்கை வரலாறு
படமாக சுவரில் வரையப்பட்டுள்ளது. கடைசியாக புத்தர் பிறந்த இடமாகக் கூறப்படும் மாயாதேவி
கோவிலை அடைந்தோம். இது மிகப் பெரிய complex. ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பூங்கா மற்றும்
பாதையில் நடந்து சிறிது தூரம் சென்றால் கோவில்.

கோவிலின்
உள்ளே 3-7 ஆம் நூற்றாண்டுக் கட்டிடங்களின் சிதிலங்கள் அப்படியே பராமரிக்கப் படுகின்றன.
இங்கே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் பார்த்தவர்களின் வார்த்தைகள் தான் வாக்குமூலம்.
வெளிப்பூச்சு இல்லாத ½ செங்கல் சுவர்கள் ஆங்காங்கே அறைகள் இருந்த இடங்களில் அப்படியே
உள்ளன. ஓரிடத்தில் கண்ணாடித் தடுப்புக்கு இடையில் ஓரிடத்தில் புத்தர் பிறந்த இடம் எனக்
குறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் இந்தக்
கோவில் உள்ளதால் அமைதியாக உள்ளது. மக்கள் பக்தியுடன் வணங்கிச் செல்கிறார்கள்.
கோவிலுக்கு
வெளியேயும் பழங்காலக் கட்டிட சிதிலங்கள் உள்ளன. (World heritage site) யாக சாலை போன்ற
அமைப்பில் உள்ளது. அதையொட்டி ஒரு குளமும் ஒரு அரச மரமும் உள்ளன. இங்கே தான் மாயாதேவியின்
சிலை உள்ளது. (விக்கிரக வடிவில் இல்லை) இந்தக் குளத்தில் தான் மாயாதேவி புத்தர் பிறப்பதற்கு
முன்பு குளித்தார் எனவும் குழந்தை கௌதமரும் அங்கே தான் குளித்தார் எனவும் நம்பப்படுகிறது.
சிறிது நேரம்
அங்கே அமர்ந்து அந்த சூழலை அனுபவித்து விட்டு வெளியில் வந்தோம். இங்கிருந்து பார்த்தால்
தெரியும்படி World peace pagoda அமைக்கப் பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு
ஆட்டோவில் ஏறினோம். விமான நிலையத்திற்கு செல்லும் நேரமாகி விட்டதால் வழியிலேயே எங்கள்
maxicab நிறுத்தப் பட்டிருந்தது. சில நிமிடப் பயணத்தில் Gouthama Budhdha
International Airport ஐ சென்றடைந்தோம்.
1.30 மணிக்கு
Pokhra செல்லும் விமானம் என்பதால் 12.30 மணியளவில் அங்கிருந்தோம். பெட்டிகளை scan செய்த
பிறகு உள்ளே வந்தோம். அனைவரது ஆதார் அட்டைகளும் சேகரிக்கப்பட்டு மொத்த குழுவிற்குமான
Boarding pass வாங்கிய பிறகு எங்கள் பெட்டிகளை வரிசையில் நின்று ஒரு எடை பார்க்கும்
கருவியின் மேல் வைக்க வேண்டும். விமான நிலைய ஊழியர் security checked என ஒரு ஸ்டிக்கரை
பெட்டியில் ஒட்டி எத்தனை எடை இருக்கிறது என்பதைக் குறித்து விடுவார். மற்றொரு ஊழியர்
பெட்டிகளை ஒரு ஓரமாக எடுத்து வைப்பார். Baggage check-in and security முடிந்தது. விமான
நிலையத்தில் AC இல்லை. மிகப் பெரிய Air coolerகள் சிலவற்றை வைத்திருந்ததைக் கண்டேன்.
மிகச் சிறிய
ஹால் என்பதால் அனேகரும் நிற்க வேண்டிய நிலை. விமானம் அரை மணி நேரம் தாமதமாக வரும் என்றதால்
அங்கிருந்த கடையில் காபி டீக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம். காபி/டீ
கையில் கிடைக்கவும் விமானத்தில் ஏற அழைப்பு வரவும் சரியாக இருக்க, சுடச் சுட வாயில்
ஊற்றிக் கொண்டு வரிசையில் நின்றோம். securityயைக் கடந்து வெளியில் மீண்டும் ஒரு ஹால்.
அங்கே அமர்ந்து காத்திருந்தோம். ATR வகை விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சிறிய
விமான நிலையம் அது.
எங்களுக்கு முன்பாக
மற்றொரு விமானம் புறப்பட எங்கள் விமானம் சற்றுத் தள்ளி நின்றது. சிறு தள்ளு வண்டியில்
எங்கள் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு விமானத்தின் முன்/பின் பகுதிகளில் ஏற்றப்பட்டன.
(பெரிய விமானங்கள் போல விமானத்தின் வயிற்றுப் பகுதியில் பெட்டிகள் வைக்க இடமில்லை).
சில நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் ஏறினோம். இவ்வளவு விவரமாகக் கூறக் காரணம்
A380, Boeing 747, A320-1000 போன்ற மெகா விமானங்களில் சென்றிருந்தாலும் சிறிய ATR வகை
விமானத்தில் பறப்பது முதன்முறையே. மேலும் நேபாள பயணம் செல்பவர்களுக்கு அதிக பெட்டிகளை
எடுத்துச் செல்ல முடியாது என்பதை உணர்த்தவும் தான்.
விமானம் கிளம்பியதும்
safety methods கூறப்பட்டன. இருக்கை முன்னாலிருந்த பையில் உள்ள அட்டையில் அது எந்த
வகை விமானம் என்பது கூடக் குறிப்பிடப்படவில்லை. 30 நிமிட விமானப் பயணத்தில் ஜன்னலில்
தெரிந்த இயற்கைக் காட்சிகள் வித்தியாசமாக இல்லை. மரங்களடர்ந்த உயரம் குறைந்த மலைத்
தொடர்கள், இடையே நீண்டு நெளிந்த நதி என இருந்தது. இருக்கை முன்னால் வைக்கப் பட்டிருந்த
Buddha Airlines magazine ஐப் படித்தேன். நேபாளத்தில் நுழைந்ததுமே எங்கெங்கும் சிறு
கடை முதல் பெரிய விடுதிகள் வரை “தக்காலி தாலி” இங்கே கிடைக்கும் எனப் பலகைகளைக் கண்டேன்.
அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு இந்தப் புத்தகம் விளக்கியது.
2.30 மணியளவில் Pokhra நகரில் தரையிறங்கினாலும் பெட்டிகள் வர மேலும் சில நிமிடங்கள் பிடித்தது. இந்த நகரம் காட்மாண்டுவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 2697 அடி உயரத்தில் உள்ளது என்றாலும் மலை மேல் இருப்பது போல இல்லை. நகரின் ஒரு பகுதியிலிருந்த உணவு விடுதிக்கு நாங்கள் அழைத்துச் செல்லப் பட்டோம். சாதம், பருப்பு, சப்பாத்தி, mixed vegetables – 2 வகை, அப்பளம், கேரட் ஊறுகாய், தயிர், சிப்ஸ் என மதிய உணவை உண்டு முடித்து விட்டு தங்கும் விடுதிக்குச் (Hotel Niwas) சென்று பெட்டிகளை வைத்து விட்டு அரை மணி நேரத்தில் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். கடைவீதியில் என் கவனத்தைக் கவர்ந்த ஒரு பெயர்ப்பலகை: Browsing centre for Netflix
இந்த நகரை விவரமாக
முக்திநாத் சென்று திரும்பும் வழியில் தான் கண்டோம் என்பதால் தேதி வாரியாக நாங்கள்
கண்ட இடங்களைப் பற்றி எழுதுகிறேன்.


மாலை நேரம் என்பதால்
அந்த நகரின் மிகவும் பழமை வாய்ந்த Vindhyabasini கோவிலுக்குச் சென்றோம். நகரின் நடுவில்
ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலின் lift நாங்கள் சென்ற தினம் பழுதாகி
இருந்ததால் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றோம். 50-80 படிக்கட்டுக்கள் இருக்கலாம். மேலேறிச்
சென்றதும் Vindhyabasini சன்னதி. கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த பெண் குழந்தையை
மேலே வீசிக் கொன்று விடுகிறான் என்றும் அந்தப் பெண் பார்வதி தேவி என்பதால் மாயமாகி
மறைந்து விட்டார் எனவும் கேள்விப் பட்டிருக்கிறோம் இல்லையா? அவர் தான் இவர் என்பது
நேபாள மக்களின் நம்பிக்கை.
பார்வதி தேவி
சன்னதிக்கு எதிரில் நாராயணர், கிருஷ்ணர் ராதா சன்னதிகள், அருகில் அனுமார் பிள்ளையார்
சன்னதிகள் சில அடிகள் தொலைவில் மிகப் பெரிய நந்தியும் உடுக்கையும் சூலமும் உள்ள சிவன்
சன்னதி என சற்றே பெரிய கோவில். கடவுளர்களை வணங்கி விட்டு அங்கிருந்து நாங்கள் கண்ட
உயர்ந்த பனிச் சிகரங்களின் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீழிறங்கினோம்.
கீழே ருத்ராட்சம், பாசி மாலைகள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் சில
இருந்தன. சிலர் மட்டும் வாங்கினார்கள்.
மறுநாள் காலை
முக்திநாத்தை நோக்கிய பயணம் என்பதால் விடுதிக்குத் திரும்பி அங்கேயே இரவு உணவை முடித்துக்
கொண்டோம். Nepali thali எனப்படும் மதியம் உண்ட அதே menu தான். சிறிதளவு உண்ட பிறகு
அறைக்குச் சென்று ஓய்வெடுத்து அடுத்த நாள் பயணத்தை எதிர்நோக்கி உறங்கினோம்.

































