COCO CAY
Florida மாகாணத்தின் Fort Lauderdale துறைமுகத்தில் தொடங்கிய எங்கள் உல்லாசக் கப்பல் பயணத்தின் இறுதி நாள் காலை ஆறு மணியளவில் எழுந்து எங்கிருக்கிறோம் என பால்கனிக்குச் சென்று பார்க்கையில் Coco Cay தீவின் துறைமுகத்திற்கு அருகில் நங்கூரம் பாய்ச்சும் சமயத்தில் இருந்தோம். (துறைமுகம் என ஒரு புரிதலுக்காகக் கூறுகிறேன். இது செயற்கையாக அமைக்கப்பட்ட Pier. ஒரு நீண்ட நடைமேடை, அதற்கு இரு பக்கமும் இரண்டு கப்பல்கள் நிற்கும்படியான வசதி, தீவை இணைக்கும் ஒரு அகலமான பாலம் அவ்வளவே) எப்படி கப்பலை reverse எடுத்து கரையை ஒட்டி இடிக்காமல் நிறுத்துகிறார்கள் என அரை மணி நேரம் நடைபெற்ற அந்த வேலையை சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்தேன். (நீண்ட நடைமேடைக்கும் கப்பலுக்கும் இடையில் மிகப் பெரிய இரும்பு உருளைகள் உள்ளன) எங்களுக்கு முன்பாக மற்றொரு Carribean நிறுவன உல்லாசக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. (சுற்றுலாக்களில் எப்போதும் இரண்டு கப்பல்கள்/படகுகள்/பேருந்துகள்/கார்கள் என சேர்ந்து செல்வது வழக்கம்) கப்பலில் இருந்து பார்க்கையில் water slide, hot air balloon போன்ற theme parkற்கான அம்சங்கள் தென்பட்டன.
அன்றைய தினம் காலை 9 மணிக்குத் தான் கீழிறங்க வேண்டும் என்பதால் நிதானமாகத் தயாரானோம். Deck 5ல் உள்ள காபி கடையிலிருந்து மருமகன் அனைவருக்கும் வாங்கி வந்த
காபி, hot chocolate போன்றவற்றை குடித்து விட்டு பேரன்களுடன் காலை உணவிற்காக Deck 11 சென்றோம். [எங்கம்மா உங்களை சாப்பிட அழைத்துப் போகச் சொன்னார்] 12 வயதான சின்னப் பேரன். மிகப் பொறுப்புடன் liftல் அழைத்துச் சென்று எங்களுக்கு உணவகத்தில் உட்கார இடம் பிடித்துக் கொடுத்து, பால், பழம் போன்றவைகளைக் கொண்டு வந்து தந்து உபசரித்தார். மற்றவர்களும் வந்து சேர, உள்ளேயும் வெளியேயும் வேடிக்கை பார்த்தபடியே காலை உணவை முடித்துக் கொண்டு கப்பலை விட்டுக் கீழிறங்க Deck 1 ஐ நோக்கிச் சென்றோம்.
இந்தத் தளம்
Gangway என கப்பல் terminology படி அழைக்கப் படுகிறது. [கப்பல் நிறுவனம் app மூலமாக
Gangway, port side, starboard side, embarkation, disembarkation, Port of call
etc போன்ற வார்த்தைகளைப் பயணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது)
Gangway என்பது கப்பலை விட்டு வெளியேறும் வாயில் என வைத்துக் கொள்ளலாம். கப்பலுக்கும்
தரைக்கும் இடையில் தற்காலிகப் பாலம் நிறுத்தப்பட்டு மக்கள் ஏறி இறங்க வழி செய்யப்படுகிறது.
முதல் தினம் போல் அல்லாமல் தேவையான அளவுக்குத் துண்டுகளை(towels) பெற்றுக் கொண்டு கீழிறங்கினோம். கீழிறங்கியதும் ஒரு அகலமான நடைமேடை/பாலத்தில் நடந்து 200 மீட்டர்கள் சென்றால் தீவை அடையலாம்.
இந்தத் தீவைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் உள்ளே செல்வோம். முதலில் Cay என்றால் என்ன?
Cay என்பது a small low island comprised of coral or sand என்கிறார் கூகிள் ஐயனார். சிறிய தீவு அல்லது மண் மேடு அல்லது பவழப்
பாறை(coral reef) என வைத்துக் கொள்வோம்.Berry islands என்னும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான இந்த சிறு தீவு Naussauவிலிருந்து ஏறக்குறைய 89 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. Little stirrup cay (அ) Coco cay என்னும் பெயருடைய இந்தத் தீவு ராயல் கரீபியன் நிறுவனத்தின் சொந்தத் தீவு. இந்த நிறுவனத்தின் கப்பல்கள் மட்டுமே இங்கு வந்து உல்லாசப் பயணிகளை இறக்கி விட முடியும். [அருகிலுள்ள Great Stirrup cays என்பது Norwegian cruise நிறுவனத்திற்குச் சொந்தமானது]. இந்தத் தீவு கிழக்கு மேற்காக 1.57 கி.மீ தெற்கு வடக்காக 0.47 கி.மீ என்னும் அளவில் மிகச் சிறியது. நடந்தே சென்று சுற்றிப் பார்க்கலாம்.
2019 ஆம் ஆண்டு இந்தத் தீவு $250 மில்லியன் டாலர்கள் செலவில் புதுப்பிக்கப்பட்டு Perfect day at Coco cay எனப் பெயரிடப்பட்டது. வடக்கில் கப்பல்கள் வந்து நிற்கும் வகையில் pier, மேற்கில் நீச்சல், ஓய்வெடுக்கும் வகையில் bearch chairகள், நிழற்குடைகள், கடைகள், கிழக்கில் water slides (2 nos) மற்றும் சில விளையாட்டுக்கள், carribean என எழுதப்பட்ட மிகப் பெரிய hot air balloon, zipline போன்றவைகளும், அதையொட்டி அடர்த்தியான மரங்களும் அதற்குப் பின்னால் 18+ வயதானவர்கள் மட்டும் செல்லும் வகையில் ஒரு கடற்கரையும் என நாள் முழுவதும் எல்லா வயதினரும்
பொழுது போக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கப்பல் நிறுவனத்தின் சொந்தத் தீவு என்பதால் இங்கு ஒரு உணவகம் அமைக்கப்பட்டு மதிய உணவு, கோன் ஐஸ், குளிர்பானங்கள் போன்றவைகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. தீவில் இரண்டு நீச்சல் குளங்களும் உள்ளன.
கப்பலிலிருந்து இறங்கி மிக அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு கப்பலுக்கு இடையில் இருந்த நடைமேடையில் நடந்து கடலின் மேல் அமைந்துள்ள பாலத்தைக் கடக்கும் போது தீவின் ஆரம்பத்தில் இடப்புறம் The Perfect day, வலப்புறம் The Coco cay என்னும் பெயர்ப் பலகைகள் தென்பட்டன. தீவின் ஆரம்பத்தில் மூன்று இளம் பெண்கள் பஹாமாஸ் நாட்டின் தேசிய நடனம் ஆடிப் பயணிகளை வரவேற்றார்கள். ஒரு பயணியும் நின்று நடனத்தைப் பார்க்கவும் இல்லை பாராட்டவும் இல்லை.
கப்பல் பயணம் தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்பே water parkல் விளையாட முன்பதிவு செய்ய வேண்டும். மகள் குடும்பம் முன்பதிவு செய்ய முயற்சி செய்த போது ஏற்கனவே அந்த வசதி முடிந்து விட்டது.[பந்திக்கு முந்து…
என ஒரு பழமொழி உண்டு. அதையொட்டி உல்லாசக் கப்பலின் உணவு விடுதியோ விளையாட்டுக்களோ நாம்
முந்திக் கொண்டால்தான் இடம் கிடைக்கும்] முன்பதிவில்லாமல் விளையாட ஒருவருக்கு $100 கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். மேலும் கூட்டம்
அதிகம். பேரக் குழந்தைகள் அதில் விருப்பம் காட்டாததால் கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கடற்கரையெங்கும் நாற்காலிகள், குடைகள் அமைக்கப்பட்டு மக்கள் ஓய்வெடுக்கும் வண்ணம் இருந்தது. நீச்சல் தெரிந்தவர்கள் கடலை நோக்கிச் செல்ல வழக்கம் போல நானும் என் கணவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். பின் வரிசையில் தமிழ்க் குரல் கேட்கவே அவர்களுடன் உரையாடினோம்.
மேற்கு அட்லான்டிக் கடலில் அமைந்துள்ள பஹாமாஸ் தீவுகளைச் சுற்றியுள்ள நீர் மிகத் தூய்மையாக aqua marine நிறத்தில் காட்சியளிக்கிறது. கடல் நீரின் நிறத்தை ஒட்டி இளம் நீலம், இளம் பச்சை, வெள்ளை நிறங்களில்(இவைகள்
கரீபியன் நிறங்கள் என அழைக்கப்படுகின்றன என ஒரு புத்தகத்தில் படித்தேன்) நாற்காலிகள், குடைகள் தென்னை மரங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தன. பார்க்கவே மனதுக்கு ரம்மியமாக இருந்தது. சிறிது நேரம் காலை நீட்டி beach chairல் அமர்ந்திருந்த நேரத்தில் நேரெதிரில் தெரிந்த சிறிய கலங்கரை விளக்கம் (lighthouse), நாங்கள் வந்த கப்பல்கள், கடலின் அமைதியான தெளிவான நீர், சுற்றிலும் இருந்த தென்னை மரங்கள், பல வண்ண நீச்சல் உடைகளில் மக்கள் எனப் பலவும் கண்ணில் பட்டது. கண்ணில் பட்ட தீவு ஊழியர்கள் அனைவரும் ஆப்பிரிக்கர்களே. [எத்தனை நிறங்கள்
எத்தனை விதங்களில் நீச்சல் உடைகள் உண்டோ அத்தனையும் காண முடிந்தது. கப்பலிலிருந்து
பெறப்பட்ட துண்டுகள் அனைத்தும் இளம் நீல நிறம் மட்டுமே]
எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது? மக்கள் உணவகத்திலிருந்து கோன்ஐஸ் lemonade என வாங்கி வருவதைக் கண்டு மகளும் லெமனேட் வாங்கி வந்தார். தீவை
explore செய்ய எண்ணி நான்
மட்டும் அங்கிருந்த கடைகளை சுற்றிப் பார்க்கத் தொடங்கினேன். பருவ நிலை மிதமான வெப்பத்துடன் இருந்தது (தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வியர்ப்பதில்லை) இடையில் இந்தியாவில்
உள்ள உறவினருக்கு வீடியோ காலில் தீவைக் காட்டியபோது கரீபியன் நாடுகளில் தென்னை மரங்களின்
கீழே தேங்காய்கள் விழுந்து கிடக்கும் யாரும் எடுக்க மாட்டார்கள் எனப் படித்திருக்கிறேன்
அப்படி ஒரு காட்சியைப் பார்த்தீர்களா எனக் கேட்டார்கள். என் பதில் “இல்லை”. நாங்கள்
சென்ற இடங்கள் சுற்றுலாத் தலங்கள் என்பதால் தென்னை/பனை மரங்களின் காய்த மட்டைகள் வெட்டப்
பட்டு காய்கள் இல்லாமல் காட்சியளித்தன. [தேங்காய்/மட்டை யார் தலையிலாவது விழுந்தால்
கப்பல் நிறுவனம் பல லட்சம் டாலர்களை நட்ட ஈடாகத் தர வேண்டி இருக்குமே?]
வருடத்தில் 360 நாட்கள் வெயில் உள்ள நாடு என்பதால் கடைகளில் பருத்தியாலான ஆடைகளையே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தென்னை நாரிலிருந்து செய்யப்பட்ட தொப்பிகள் பைகள் போன்றவைகள், fridge magnets, மற்றும் பிற நினைவுப் பொருட்கள் என விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரே ஒரு fridge magnet வாங்கினேன். அனைவரும்
credit/debit card உபயோகிப்பதால் பணமாக வாங்கிக் கொள்வீர்களா எனக் கடைக்காரரிடம் கேட்டேன்.
அவர் ஒத்துக் கொண்டு மீதி சில்லறையைத் தந்தார். 200 மீட்டர் நடந்தால் தீவைச் சுற்றிக் காட்டும் டிராம் உள்ளதாகத் தெரிந்ததும் நாங்கள் அதிலேறி சுற்றி வந்தோம். வழியெங்கும்
அடர்த்தியான மரங்கள், சில வண்ண செம்பருத்தி பூச்செடிகள் தென்பட்டன.
Hot air
balloonஐக் கட்டி வைத்திருக்கிறார்கள். அது வெறும் காட்சிப் பொருள் மட்டுமே. மீண்டும் அதே டிராமில் ஏறி வரவேண்டுமென்றால் ஒரு மைல் நீள வரிசையில் நிற்க வேண்டும் என்பதால் நடந்து ஐந்து நிமிடங்களில் நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளுக்கு வந்து சேர்ந்தோம். அமர்ந்த சில நிமிடங்களில் கடற்கரையில் ஒரே பரபரப்பு. Security guards மற்றும் paramedics போன்றோர் அவசரமாகக் கடலை நோக்கி ஓடினார்கள்.
பேரக் குழந்தைகளும் அவர்களின் தகப்பன்களும் அந்தப் பகுதியில் தான் நீந்திக் கொண்டிருந்தார்கள் என்பதால் வேகமாக நாங்களும் சென்றோம். மிக மிக குண்டான ஒரு பெண்மணிக்கு மூச்சு விடுவது சிரமமானதால் அந்தப் பரபரப்பு எனத் தெரிந்தது. அவரை ஒரு ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். அதே சமயத்தில் குளிக்கச் சென்றவர்கள் திரும்பி வந்ததும் மனதுக்கு நிம்மதியாக இருந்தது. மதிய உணவிற்காக அமைக்கப் பட்டிருந்த இடத்திற்குச் சென்றோம். மிகப் பெரிய கூடத்தில் விதம் விதமான உணவுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. இங்கும் buffet முறை தான் என்பதால் வேண்டிய உணவுகளை எடுத்துக் கொண்டு வெளியில் இருந்த மேசைகளில் அமர்ந்து உண்டோம். இங்கு மெக்சிகன் மற்றும் ஆங்கிலேய உணவுகள் அதிகமாக இருந்தன. இந்திய உணவுகள் எதுவும் இல்லை.
Tacos, salads, salsa, toppings, breads, cut
fruits, whole fruits, cone ice cream, lemonade, iced tea, iced water என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி counter இருந்தது. எங்களால் சாப்பிட முடிந்த உணவுகளை எடுத்து வந்து சாப்பிட்டு முடிந்து விட்டு சிறிது தூரம் அங்குமிங்குமாக நடந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மாலை 4.30 மணியளவில் கிளம்பிக் கப்பலின் உள்ளே சென்றோம்.
அடுத்த சில நிமிடங்களில் பேரக் குழந்தைகள் 12ஆவது அடுக்கிலுள்ள நீர் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுவதாகத் தகவல் வர அங்கே வேடிக்கை பார்க்கக் கிளம்பினோம். பீனிக்ஸ் நகரிலிருக்கும் இரண்டு வயதுப் பேரனுக்கு நீர் விளையாட்டுக்களை வீடியோ காலில் காட்டிய போது தானும் ஒரு பெட்டியின் மூடியில் wave surfing செய்வது போல விளையாடிக் காட்டினார்.
சிறிது நேரத்தில் இரண்டாவது கப்பலும் (Utopia of seas) கிளம்பி எங்களைத் தாண்டிச் சென்றது. 5400 பயணிகள் செல்லக் கூடிய மிகப் பெரிய உல்லாசக் கப்பலான அதனுள்ளே சிறு ரயில் வண்டி கூட இருப்பதாக மகள் கூறினார். Utopia என்ற வார்த்தையின் பொருள் an imagined place or state of
things in which everything is perfect. அதில் எங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை
என மகள் கூறினார். [நான் படித்த ஆங்கில இலக்கியப் பாடம் ஒன்றில் St. Thomas More என்பவர் எழுதிய Utopia என்னும் பாடத்தில் ஒரு அரசு/நாடு எப்படி இருந்தால் perfect ஆக இருக்கும் என விளக்கப்பட்டிருக்கும். நம் இந்திய நாட்டு வழக்கில் “ராம ராஜ்ஜியம்” எனக் கூறலாம். அந்த அடிப்படையில் பார்த்தால் மேற்படி கப்பல் perfect என்னும் படி கட்டப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்] பொதுவாக ஒரு
நிறுவனத்தின் கப்பல்கள் பெயர்களில் ஒரு uniformity இருப்பது போலத் தான் பெயரிடப்படுகின்றன.
Royal Caribbean நிறுவனக் கப்பல்கள் சிலவற்றின் பெயர்கள் : Liberty of the seas( நாங்கள்
சென்ற கப்பல்), Oasis of the seas, Wonder of the seas, Allure of the seas,
Odyssey of the seas, Utopia of the seas, Quantum of the seas etc.
கப்பலில் நமது
அறையை தினமும் சுத்தம் செய்து கட்டிலின் மேல் சிறிய துண்டினை அழகாக மடக்கி ஒரு மிருகம்/பறவை
போல தினமும் வைக்கப் பட்டிருந்தது. சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு தினப்படி tips (gratuity
என கப்பல் app கூறியது) ஆக நம்முடைய room
service bill தொகையிலிருந்து 18% கூடுதலாக கப்பல் நிறுவனமே நம்முடைய security
depositலிருந்து கழித்துக் கொள்ளும். என் app $18 கழிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
நாம் வாங்கிய பஞ்சு மிட்டாய், காபி, நினைவுப் பொருட்கள் போன்றவற்றிற்கான பணமும் இதிலிருந்தே
கழிக்கப்படும். [பயணம் முழுவதும் நம்மிடமிருந்து பணம் வாங்குவதில்லை. அண்ணாச்சி கடை
போல கணக்கு வைத்துக் கொள்கிறார்கள்] கூடுதலாக நாம் டிப்ஸ் தர விரும்பினால் அறையைக்
காலி செய்யும் போது அதற்கென வைக்கப்பட்டிருக்கும் கவரில் வைத்துக் விட்டு வரலாம்.
(ஒரு பயணிக்கு 1-5 நாள் பயணத்திற்கு100$). ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இந்தத் தொகைகள்
மாறுபடும்.
கப்பல் பயணங்களில்
மதுவகைகளின் புழக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. (இது இலவசம் இல்லை, முன்
கூட்டியே குறிப்பிட்ட package களுக்கு பணம் கட்டினால் மட்டுமே தேவைப்பட்டதை வாங்க முடியும்)
நீச்சல் குளம், jacuzzi போன்றவைகள் பெரியவர்களும் சிறுவர்களுக்கும் தனித் தனியாக இருந்தன
என்பதால் இரவு 9 மணி முடிய மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்தார்கள்.
இரவு உணவில் கூடுதலாக vegan chocolate browny இருந்தது. என்னுடைய கப்பல் தோழி
Renalynஐ சந்தித்து நன்றி கூறி $10 டிப்ஸ் தந்து, selfie எடுத்துக் கொண்டேன். மறுநாள் காலை Port Lauderdaleல் கரையிறங்க வேண்டும். யார் யார் எத்தனை மணிக்கு வெளியேற வேண்டும் என முதல் நாளே appல் தகவல் வந்து விட்டது. அவரவர் அறைக்கு
வெளியில் பெட்டிகளை label ஒட்டி இரவே வைத்து விட்டால் காலை கப்பலை விட்டு இறங்கியதும்
நம் பெட்டிகளை துறைமுகத்தில் பெட்டிகள் வைக்கும் இடத்தில் எடுத்துக் கொள்ளலாம். பெட்டிகளைத்
தாமே எடுத்துச் காலை 6.30க்கே கிளம்ப வேண்டும். கப்பலின் இரண்டு liftகளில் மக்கள் கீழிறங்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மனிதர்களுக்கு இடம் கிடைக்கவே நேரமாகும் என்பதால் இரவே பெட்டிகளை நம் பெயர் மற்றும்
இறங்கும் குழுவின் எண் கூடிய tagஐக் கட்டி அறைக்கு வெளியில் வைத்து விட்டோம்.
தூக்கம் வரவில்லையென்பதால் அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியின் ஒவ்வொரு சானலாகத் திருப்பிக் கொண்டிருந்த போது கப்பல் எந்த இடத்தில் உள்ளது எத்தனை வேகத்தில் செல்கிறது அந்தப் பகுதியில் கடலின் ஆழம் என்ன என்பது போன்ற விவரங்களை live ஆக ஒளிபரப்பிக் கொண்டிருந்ததைக் கண்டோம். நாங்கள் கண்ட சமயம் 4.5 நாட்(knot) வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மறுநாள் காலைக்குள் ஏறக்குறைய 300 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும் என்பதால் 24.5 நாட் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. (வெளிப்புற வெப்பம் 24 டிகிரி C, 330 மீட்டர் ஆழம், இதுவரை 465 நாட் பயணித்திருக்கிறோம்) கையில் எடுத்துச்
சென்ற night lamp பயனுள்ளதாக இருந்தது. [Extension cord பயன்படவில்லை]
நாங்கள் அனைவரும் நிதானமாக காலை உணவை முடித்துக் கொண்டு 9.30 மணிக்கு கப்பலை விட்டு இறங்கக் கிளம்பினோம். Deck 4ல் அமைக்கப் பட்டிருந்த பாலத்தின் வழியாகக் கீழிறங்க மிக நீண்ட வரிசையில் காத்திருந்து கீழிறங்கினோம். (தரையில் கால
வைக்க Deck 1 gangway) வரிசையில் நகர்ந்த போது எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த
dining hallகளைக் கடந்து செல்ல நேர்ந்தது. அங்கே இரவு உணவு மாலை 5.30 மணிக்கே ஆரம்பம்.
அங்கிருந்த notice boardல் 25/12/2024 அன்று Mediterranean menu 26/12/2024
Caribbean menu என்பது போல எழுதி இருந்தது. அந்த உணவகம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
[சைவ உணவுகள் இங்கே கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்ததால் Windjammer buffet உணவத்திற்கே
சென்றோம்].
விமானத்திலிருந்து
இறங்கும் பாலம் போல இருந்த பாலத்தில் கீழிறங்கியதும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குழு எண் உள்ள இடத்தில் பெட்டிகள் இருந்தன. வெளியில் செல்லும்
வரிசையில் நின்று Biometric facial recognition machineல் புகைப்படம் எடுத்துக் கொண்டு
security officer தலையாட்டியதும் துறைமுகத்தின் வெளியே சென்றோம். இங்கும் எங்கள்
passportஐ பரிசோதிக்கவில்லை.
FORT LAUDERDALE
மாலை 4 மணிக்குத் தான் சான்பிரான்சிஸ்கோ
விமானம் என்பதால் அடுத்து என்ன என்ற என் கேள்விக்கு நாம் விமான நிலையத்திலேயே பெட்டிகளை லாக்கரில் வைத்து விட்டு Fort Lauderdale கடற்கரைக்குச் செல்லப் போகிறோம், மதிய உணவிற்குப் பிறகு விமான நிலையம் திரும்புகிறோம் எனக் கூறப்பட்டது. இம்முறை Uberல் கிளம்பிக் Hollywood கடற்கரைக்குச் சென்றோம். மியாமி கடற்கறைக்கு மிக அருகிலிருக்கும் இந்தக் கடற்கரையும் மிக நீண்ட வெண்மணல் உள்ள கடற்கரைதான். கடலை ஒட்டி அடுக்கு மாடிக்கட்டிடங்கள் பல உள்ளன.
இந்தக் கடற்கரை மணலில் ஆங்காங்கே சங்குகள் தென்பட்டன. பொறுமையாகப் பொறுக்கத் தொடங்கிய போது அவை பல நிறங்களில், டிசைன்களில் உள்ளதைக் கண்டேன். இயற்கையாகவே
அவைகளில் கழுத்து செயினில் கோர்த்துக் கொள்ளும் வகையில் ஓட்டை இருந்தது. (sand
dollar) அமைதியான கடல்பகுதி என்பதால் மக்கள் ஆங்காங்கே குளித்துக் கொண்டும் வெயிலில் காய்ந்து கொண்டுமிருந்தார்கள். நாங்கள் சென்ற பகுதியில் மக்கள் கூட்டம் இல்லை. உடன் வந்தவர்கள் reel எடுக்க முயற்சி/பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் எனத் தகவல் கிடைக்கவே அங்கிருந்து நகரின் மையப்பகுதியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றிற்குச் செல்ல முடிவு செய்து கிளம்பினோம்.
வெயில் விரும்பிகள் தலையில் தொப்பியுடன் சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்கள். (பல வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு திரைப்படத்தில் பார்த்த/கேட்ட வசனங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆங்கிலேயர்: Good morning. This is a sunny day
மயில்சாமி (மொழிபெயர்ப்பாளர்): உச்சி வெயில் மண்டைய பொளக்குது
சாலைகளின் இரு பக்கமும் மரங்கள் சீராக வளர்க்கபட்டு பார்க்கவே அழகாக உள்ளது. கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் ஆங்காங்கே விளக்கலங்காரங்களும் தென்பட்டன.
இந்திய உணவகத்தில் தோசை, இட்லி, சப்பாத்தி, பருப்பு சாதம், தயிர் சாதம் என அவரவருக்கேற்ற உணவுகளை உண்டு விட்டு இரவு உணவிற்கு எனக்கும் என் கணவருக்கும் சாதம், தயிர் போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு விமான நிலையம் கிளம்பினோம். அங்கு சென்றதும் எங்கள் United airlines விமானம் மேலும் தாமதமாகக் கிளம்பும் எனத் தெரிந்தது. Fort Lauderdale -> Chicago
-> SFO என எங்கள் பயணம் அமைக்கப்பட்டிருந்தது. சிகாகோ செல்ல தாமதமானால் அடுத்த விமானத்தைக் கண்டிப்பாகப் பிடிக்க முடியாது. மேலும் சிகாகோவில் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப்பொழுவு இருக்கும் என்பதால் விமானம் கிளம்புமா என்பதே சந்தேகம். இதை எல்லாம் தவிர்க்க Fort Lauderdale -> SFO செல்லும் 7.30 விமானத்திற்கு டிக்கெட்டுகளை மாற்றினார் மருமகன். இரவு உணவை அங்கேயே உண்டு விட்டு விமானம் ஏறினோம்.
United
Airlines விமானத்தில் ஆபத்துக் கால விவரங்களை விளையாட்டாக, வித்தியாசமாக, ஒவ்வொரு ஊராக செல்வது போல, அங்கே விமானப் பணிப்பெண் சமயம் பார்த்து விவரங்கள் கூறுவது போல வடிவமைத்து சுவாரசியமாக இருக்கையின் முன்னால் இருந்த inflight entertainment திரையில் காட்டினார்கள். ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. 5 Inflight entertainmentல்
விமானம் எந்தப் பாதையில் செல்கிறது (Florida, Louisiana, Texas, Arizona and &
California) என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தந்த ஊரின் சிறப்புக்கள் பக்கத்தில்
விளக்கப் பட்டிருந்தது. இடையில் மிகப் பெரிய நகரான Houston வந்தது. பல நிமிடங்கள் அந்த
நகரின் மேலே விமானம் பறந்த போது நகரின் இரவுக் காட்சியைக் காண அற்புதமாக இருந்தது.
வட அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமான Texasஐக் கடக்க ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும்
மேலானது. 5.44 மணி நேரப் பயணம் முடிந்து San Franscisco நகரில் நேர வித்தியாசம் காரணமாக இரவு 9 மணிக்குத் தரையிறங்கினோம்.
இந்தப் பயணத்தின் மூலம் உல்லாசக் கப்பல் துறை என்பது எவ்வளவு முதலீட்டை உள்ளடக்கியது என்பது பற்றிய பல தகவல்களை அறிய முடிந்தது. விமானங்களைப்
போல உல்லாசக் கப்பல் துறை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. மியாமி AA துறைமுகத்தில்
நாங்கள் பார்த்த போது வரிசையாக 10-12 பிரம்மாண்டமான உல்லாசக் கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.
Miami, Fort Lauderdale, Cape Canaveral, Los Angeles, San Diego, Seattle எனப் பல
துறைமுகங்களிலிருந்தும் பல கப்பல்கள் மெக்சிகோ, அலாஸ்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிக்
என பூமிப் பந்தின் எல்லாப் பகுதிகளுக்கும் மக்களை அழைத்துச் செல்கின்றன. இந்தியாவில்
பல வருடங்களாக மும்பை-கோவா இடையே க்ரூஸ் கப்பல்கள் செல்கின்றன. [இவை அளவில் சிறியவை]
ஐரோப்பாவின் ர்iver cruise, ஆப்பிரிக்காவின் நைல் நதிப் பயணம் போன்றவை சிறப்பு மிக்கவை.
[சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த உறவினர் அங்கிருக்கும் பனிப் பாறைகள் இன்னும் பத்து
வருடங்களில் காணாமல் போய்விடும்; பார்க்க விரும்புபவர்கள் விரைவில் செல்லுங்கள் எனக்
கூறினார்]
நாங்கள் சென்ற
கப்பல் Freedom class என்னும் வகையைச் சேர்ந்த மிகப் பிரம்மாண்டமான கப்பல். 7 விதமான
உல்லாசக் கப்பல்களை இந்த் நிறுவனம் இயக்குகிறது. இவை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள
விரும்புபவர்கள் கீழே உள்ள linkஐ அழுத்தவும்.
https://thepointsguy.com/cruise/royal-caribbean-ship-class-guide/
Pirates of the Caribbean (movie), Bermuda
triangle, Cuba, West Indies எனப் பல தகவல்களை அறிந்திருந்தாலும் நானும் கரீபியன் நாடு ஒன்றிற்குச் செல்வேன் என்று நினைத்ததில்லை.
புயல், சூறாவளி
போன்ற இயற்கை சீற்றங்கள், நோய்த் தொற்றுக்கள் எதுவும் இல்லாமல் பயணம் இனிமையாக அமைந்ததற்கு
கடவுளுக்கு நன்றிகள். இரண்டு மாதங்களாகியும் மறக்க முடியாத மிக வித்தியாசமான உல்லாசக் கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்த மகள் குடும்பத்தாருக்கு நன்றி. Google ஐயனாருக்கும்
நன்றி.
Liberty of the seas…
பின் குறிப்பு: Cruise கப்பல்களைக் காண விரும்புபவர்கள் Youtubeல் காணலாம். “மன்மதன் அம்பு” என்ற திரைப்படத்தில் விரிவாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.