Monday, 20 November 2023

LTC பயணங்கள் – வடகிழக்கு இந்தியா [பகுதி -2]

(1994 ஆகஸ்ட்-செப்டம்பர்)

[புவனேஸ்வர், கொல்கத்தா, டார்ஜீலிங் & கேங்டாக்]

கேங்டாக் (சிக்கிம் மாநிலத் தலைநகரம்)

நகரை அடைவதற்குள் சில முக்கியத் தகவல்களை அறிந்து கொள்வோம்.

சிக்கிம் மாநிலத் தலைநகரான கேங்டாக் கடல் மட்டத்திலிருந்து 5410 அடி உயரத்தில் உள்ள ஒரு நகரம். (முனிசிபாலிடி). சிக்கிம், நேபாள் மக்களைத் தவிர பிற மாநிலத்தவர்களும் வசிக்கும் ஊர் இது. இந்தியாவின் வட கிழக்குப் பகுதி என்பதால் மக்கள் சற்றே மஞ்சள் கலந்த வெள்ளை நிறம், சிறிய கண்கள், சப்பை மூக்கு எனத் தென்படுகிறார்கள். (Mangoloids என Anthropologistsகளால் வகைப்படுத்தப்பட்ட தெற்காசிய மக்களின் சாயல்). புத்த மதத்தினரின் புண்ணியத் தலமாகக் கருதப்படும் இந்த ஊரில் பிரபலமான Enchey Monastry (மடாலயம்), Rumtek Monastry போன்ற பிரபலமான புத்த மடாலயங்கள் உள்ளன. 1840 ஆண்டு Enchey Monastry கட்டப்பட்ட பிறகே அதைத் சார்ந்து இந்த நகரம் தோன்றியதாகவும் கூறுகிறார்கள்.ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கல்கத்தாவிலிருந்து திபெத்தில் உள்ள லாசாவிற்கு நாதுலா கணவாய் (Nathula pass) வழியாகத் தான் சென்றார்கள். (Trade route)

இந்த ஊர் டீஸ்டா நதி மற்றும் இமய மலையிலிருந்து பெருகி வரும் ஓடைகள், சுற்றிலும் பனி படர்ந்த மலை என அமைந்துள்ளதால் வருடம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகம் இல்லை. ஜூன் – செப்டம்பர் இங்கே பருவமழைக் காலம். மலைப் பகுதியாக உள்ளதால் அடிக்கடி நிலச்சரிவுகளுக்கு உட்படும் பகுதி இது.

நாங்கள் சென்ற சமயத்தில் ஊர் அவ்வளவாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. சிறிய ஊராக ஒரே ஒரு முக்கிய சாலையுடன் இருந்தது. (மஹாத்மா காந்தி மார்க்) ஆங்காங்கே சாலையைக் கடக்க குறுக்கே skywalk இருந்தது. தபால் நிலையத்துக்கு நேரெதிரில் அது போன்ற நடைப்பாலம் ஒன்றிற்கு அருகில் ஒரு சத்திரத்தில் (choultry) தங்கி இருந்தோம். புட்டபர்த்தி சாய்பாபா சமிதி மூலம் கிடைத்த சத்திரம் அது. மூன்று அறைகள் தீப்பெட்டி போல அருகருகே, அவற்றிற்கு இரண்டு புறமும் கதவுகள். பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடி மகிழவும் நாங்கள் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து அரட்டை அடிக்கவும் வசதியாக இருந்தது.

தென்னிந்தியர்களான நம் கருத்துப்படி இமய மலைப் பகுதிகளில் ஆப்பிள் மற்றும் பிற பழங்கள் அபரிமிதமாகக் கிடைக்கும். தெருக்களில் குவித்து விற்பார்கள் என்பதே. அனைத்துப் பழங்களும் பூக்களும் பிற மாநிலங்கள்/ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. கடை வீதியில் சிறுவர்களுக்கு ஆப்பிள் வாங்கித் தர விரும்பினேன். நெல்லிக்காயை விடச் சற்றே பெரிய அளவிலான ஆப்பிள்களே கிடைத்தன. சுவையும் சுமார்தான். வேறு பழங்களே இல்லை.

விடுதிக்கு நேரெதிரில் ஒரு பள்ளமான சாலையில் இருந்த உணவகத்தில் இட்லி, தோசை, சாம்பார் (unlimited) கிடைத்தது. பல நாட்களுக்குப் பிறகு நமக்கேற்ற உணவைக் கண்டதில் கிண்ணியில் சாம்பாரை வாங்கிக் குடிக்கும் அளவுக்கு அனைவருக்கும் மகிழ்ச்..ச்..சி. என் குழந்தைகள் எங்கே சென்றாலும் எதையும் சரியாக சாப்பிட மாட்டார்கள். என் மகன் எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என அழுது அடம் பிடித்ததை சமீபத்தில் மூணாறுக்கு வந்திருந்த ஒரு சகோதரி ஒருவர் நினைவில் இருத்திக் கூறினார். 😊 மற்றொரு சகோதரி. முதல் நாள் பால் பவுடரைக் கரைத்துக் கொடுத்த போது என் குழந்தைகள் மட்டும் சாப்பிடாமல் ஓட நான் துரத்த… அதைத் தவிர்க்க மறுநாள் கடைக்குச் சென்று பால் வாங்கி வந்து உடன் எடுத்துச் சென்றிருந்த மின்சார அடுப்பில் காய்ச்சி எல்லாக் குழந்தைகளுக்கும் தந்தார். அதற்கும் என் குழந்தைகள் தெறித்து ஓடினார்கள் என்பது தனிக்கதை.
மூன்று இரவுகள் இரண்டு பகல்கள் அந்த ஊரில் தங்கி இருந்தோம். மிகச் சிறிய ஊராக இருப்பதால் இதன் முக்கியமான போக்குவரத்து சாதனம் டாக்சி மற்றும் அவரவர் சொந்த இரண்டு சக்கர வாகனம் மற்றும் நடராஜா சர்வீஸ் மட்டுமே. அரசாங்க/தனியார் பேருந்துகள் மிகக் குறைவே. தொலைதூரப் போக்குவரத்திற்கு மட்டுமே இவைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். மலைமேல் வசிக்கும் மக்கள் முதுகில் ஒரு பெரிய மூங்கில் கூடையைச் சுமந்து கொண்டு செல்கிறார்கள்.

மறுநாள் காலை உணவுக்குப் பின் நாங்கள் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஜீப் ஓட்டுநர் அருகிலிருந்த உயிரியல் பூங்கா மற்றும் சில பூங்காக்களுக்கும் அழைத்துச் சென்றார். நாங்கள் சென்ற சமயம் சீசன் இல்லாததால் நோ ப்ரூட்ஸ் நோ பிளவர்ஸ் என்றார். பூக்கள் இல்லாவிட்டலும் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் புறங்கள் பசுமையாக இருந்தன. இமய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் வெப்பநிலை குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மிதமாக இருந்தது. சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். விளையாடிக் கொண்டிருந்த போது பூங்காவில் ஒரு பெரிய தொட்டியில் (மூடி இல்லாமல்) தண்ணீர் இருந்ததைக் கவனிக்காமல் நண்பரின் குட்டிப் பையன் விழுந்து விட்டான். அலறி அடித்து ஓடி அந்தக் குழந்தையை வெளியே எடுத்தார் நண்பர். அத்துடன் பூங்காவை விட்டுக் கிளம்பி 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Rumtek Monastry யைக் காணச் சென்றோம். ஏறக்குறைய 1.30 மணி நேரப் பயணம்.

தொலைதூரத்திலிருந்தே சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமாகத் தெரிந்து நம் ஆவலை அதிகரித்தது அந்த மடாலயம். 1966 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து வந்த 16ஆம் கர்மபா(karmapa- Guru)வால் கட்டப்பட்ட மடாலயம் இது. சுற்றிலும் பெருகும் ஓடைகள், முன்னால் நதி, பின்னால் மலைத் தொடர்கள், பனி படர்ந்த சிகரங்கள் என ஒரு மடாலயம் அமைக்க மிகச் சாதகமான இடமாக இதைக் கருதியதால் இந்த இடத்தில் நிறுவியதாக் கூறுகிறார்கள். சிக்கிம் அரச குடும்பம் மற்றும் சாமானிய மக்களின் பொருளுதவியால் கட்டப்பட்ட இந்த மடாலயம் மிகுந்த கலையழகுடன் உள்ளது .

நாங்கள் அங்கே சென்ற போது கண்ட காட்சி எங்களைத் திகிலுக்கு உள்ளாக்கியது. சுற்றிலும் ராணுவ வீரர்கள் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் (எனக்குச் சிறுவயது தொடங்கி இன்று வரை ராணுவம், காவல் துறை சேர்ந்தவர்களைப் பார்த்தாலே நெஞ்சு படபடக்கும். பயம் 😊)

அந்த மடத்தில் 4 வயது முதல் 90 வயது வரையிலான புத்த பிட்சுக்களைக் காண நேர்ந்தது. குழுக்களாக மடாலயத்தின் அங்குமிங்கும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு எங்களைப் பார்த்ததும் (கேட்டதும்??) மிகுந்த மகிழ்ச்சி. அவர்களின் துணையுடன் மடாலயத்தைச் சுற்றி பார்த்தோம். மடாலயத்தின் உட்புறத்தில் உள்ள புத்தரை வணங்கினோம். [இதைத் தான் ராணுவ மரியாதை என்கிறார்களோ??] என்ன காரணமாக ராணுவம் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது என்று விசாரித்த போது, அங்கே இருந்த புத்த பிட்சுக்கள் 17ஆம் குருவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து இருப்பதாகவும், வரும் புத்த பௌர்ணிமாவை எந்தக் குழு எடுத்து நடத்துவது என்பதில் அவர்களுக்குள் பிரச்சினை.என்றும் எந்த நேரமும் அங்கே கலவரம் ஏற்படலாம் என எதிர்பார்த்து அரசாங்கம் 1992 முதல் ராணுவத்தை அங்கே குவித்திருப்பதாகவும் அறிந்தோம். நாங்கள் சென்றது 1994ல்.இன்றளவும் அங்கே ராணுவம் இருப்பதாக கூகிள் ஐயனார் கூறுகிறார். (என்ன கொடுமை சரவணன் இது???)

அதைக் கேட்டதும் என்றோ படித்த கவிதை என் நினைவுக்கு வந்தது.

ஆசையே துன்பத்திற்கு காரணம்
புத்தர் சிலை அதிக விலை

தமிழக வீரர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு நகரை நோக்கித் திரும்பினோம். ராணுவ வீரர்களின் சுயநலமற்ற சேவையை சிலாகித்துப் பேசிய படியே நகரை அடைந்தோம். மாலை மங்கும் வேளையில் சாலையில் நடந்து சென்று வேடிக்கை பார்த்து விட்டு அறைக்குத் திரும்பும் வேளையில் மீண்டும் எங்கள் மகனைக் காணவில்லை. பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித் தேடிய போது Skywalk மேல் அமைதியாக நின்று கொண்டிருந்தவரைக் கண்டு பிடித்து அழைத்து வந்தோம். இரவு உணவுக்கு மீண்டும் அதே உணவகம், இட்லி, தோசை, சாம்பார் தான். ஆப்பிள் சாப்பிடுங்கள் எனக் கெஞ்சியும் என் பிள்ளைகள் தொடவே இல்லை. (வெளியில் சாப்பிடும் உணவு ஒவ்வாமையால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலும் ஆப்பிள் அதை முறித்து விடும் என்பதாக ஒரு குழந்தை மருத்துவர் கூறினார்)

மறுநாள் காலை நகரின் மையப் பகுதியிலிருந்து Lake Changu என அழைக்கப்படும் Lake Tsongmo செல்ல முடிவு செய்தோம். கேங்டாக் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நாதுலா (Nathula pass) கணவாய் செல்லும் Gangtok-Nathu la highwayயில் 12,310 அடி உயரத்தில் நீள் வட்ட வடிவில் (Oval) அமைந்துள்ள ஏரி இது. சுற்றிலும் உயரமான பனி படர்ந்த மலைச் சிகரங்களைக் கொண்ட இந்த ஏரி பனிக் காலத்தில் முற்றிலும் உறைந்து விடும். வெயிற்காலத்தில் பனி உருகி வரும் நீரே ஏரியாகிறது. இதன் வடக்குப் பகுதியில் நாது லா செல்லும் சாலை மற்றும் வடகிழக்குப் பகுதியில் ஐந்து (5) கிலோமீட்டர் தொலைவில் சீன எல்லை.என்ற காரணத்தால் இந்த ஏரியைக் காண அரசாங்க அனுமதி (permit) வாங்கிய பிறகே செல்ல முடியும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியருக்கு இன்னும் கடுமையான விதிமுறைகள் உண்டு.

புத்த பூர்ணிமா, ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகள் இந்த ஏரிக் கரையில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. சிக்கிம் மக்களால் புனிதமான ஏரியாக இது கருதப் படுகிறது. பனி மலைகளுக்குக் கீழே அல்பைன் காடுகள் (Alpine forest). இந்த ஏரிப் பகுதியில் வித்தியாசமான வாத்துக்கள், சிவப்பு பாண்டா கரடி போன்றவைகள் உள்ளன. (எங்கள் கண்ணில் எதுவும் தென்படவில்லை). மே – ஜூலை மாதங்களில் பல விதமான பூக்கள் பூக்கும். இப்படி ஏரியைப் பற்றிப் பல செய்திகளை கூகிள் ஐயனார் கூறுகிறார்.

மிகவும் ஆபத்தான சாலைப் பயணம் என்பதால் பல கார்கள், ஜீப்கள் மற்றும் மினி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் கிளம்பிச் சென்று திரும்பி வரும் என்பதால் மிகச் சரியாக காலை ஒன்பதுக்குக் கிளம்ப வேண்டி இருந்தது மினி பஸ் ஒன்றில் கிளம்பி குறுகிய சாலையில் பயணம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் அதள பாதாளத்தில் டீஸ்டா நதி. சாலையில் தடுப்புச் சுவர் எதுவும் சரியாக இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.

1.30 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 2743 அடி உயரத்தில் உள்ள அந்த ஏரியை அடைந்தோம். மழை மேகங்கள் தூரத்தில் தென்பட, லேசான வெயில். சுற்றிலும் பனி படர்ந்த மலைகளுக்கிடையே உள்ள அந்த ஏரியின் நீர் வெயிற்காலமாக இருந்தபோதும் அனேகமாக உறைந்தே காணப்பட்டது. அந்த ஏரியின் கரையில் சில பெட்டிக் கடைகளும் ஒரு சிறு சிவன் கோவிலும் இருந்தன. ஏரியின் வடக்குப் பகுதியில் யாரும் செல்ல முடியாதபடி ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். ஏரியின் அருகில் இருந்த பனி படர்ந்த மலைகளை நடந்து போய் பார்த்து விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட வேண்டும் எனக் கூறினார் ஓட்டுநர்.

ஏரியின் மறுபுறம் சுற்றுலாப் பயணிகளைக் கவர Yak (பனிப் பிரதேசத்திற்கு ஏற்ற வகையில் முடிகள் அடர்ந்த காட்டெருமை), Mule(கோவேறு கழுதை) போன்றவற்றை நிறுத்தி இருக்கிறார்கள். அதன் மேலேறி பிள்ளைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அனைவரும் சிறிது தொலைவு நடந்து சென்று பனியின் மேல் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பனியை உருட்டி மற்றவர் மேல் வீசி எறிந்து விளையாடினோம். முதன் முதலாக உறைபனியை அவ்வளவு அருகில் அன்று தான் பார்த்தேன். பதினைந்தே நிமிடங்கள் தான். எதிர்பாராத வண்ணம் மழை பொழியத் துவங்கியது. 12 ஆயிரம் அடி உயரம் என்பதால் நீர் உறைந்து பனிக் கட்டி மழையாகப் பெய்யத் தொடங்கியது. நம் ஊர்களைப் போல சாதாரண ஆலங்கட்டி மழை இல்லை. பெரிய பாறை அளவில் விழத் தொடங்கியதும் அனைவரும் அவரவர் வாகனத்தை நோக்கி ஓட்டமாக ஓடி ஏறினோம். வெளியில் நிற்க இடமில்லை.
கடும் பனி மழை. பேருந்துக் கூரையின் மேல் “டொம்” டொம்” எனச் சத்தத்துடன் விழுந்தது. சீக்கிரம் இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட வேண்டும். பனிப்புயல் வரப் போகிறது என ஓட்டுநர் அவசரப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் காலையில் கிளம்பி வந்த வாகனங்கள் அனைத்தும் கிளம்பின (Convoy of vehicles). நம் மக்கள் கடவுளின் பெயரை உரக்கக் கூறத் தொடங்கியதும் இளம் வயது ஒட்டுநர் யாரும் சத்தம் போடக் கூடாது என் கவனம் திசை திரும்பினால் ஊர் போய்ச் சேர முடியாது என்று கூறவும் வாயை மூடிக் கொண்டு என்ன நடக்குமோ எனப் பயந்தபடி பயணித்தோம்.


ஏற்கனவே சாலை எப்படி இருக்கும் எனக் கூறி உள்ளேன் இல்லையா? அந்தச் சாலையும் கண்ணில் தெரியாதபடி கடும் பனி மூட்டம் வழியெங்கும். ஓட்டுநர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபடி, முன் பக்கக் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டே முன்னேறினார். உடன் வந்த மற்ற வாகனங்களும் அதே போல் வந்தன. திக் திக் நிமிடங்கள். பனி மூட்டம் சற்றே குறைந்ததும் நாங்கள் கீழிறங்கிப் பார்க்க விரும்பினோம். ஓட்டுநர் எங்களிடம் நிலைமை மிக ஆபத்தானது, பனிப் புயல் வந்தால் 24 மணி நேரம் அதே இடத்தில் நிற்க வேண்டி இருக்கும் எனக் கூறியும் எங்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு வண்டி நிறுத்தப் பட்டது. Adventure விரும்பிகள் சிலர் மட்டும் கீழிறங்கி அந்தப் பனிக் காற்றை அனுபவித்து விட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம். குளிராடைகள் யாரிடமும் இருந்தது போல் எனக்கு நினைவில்லை.

கேங்டாக் நகரை நெருங்குவதற்கு அரை மணி நேரம் முன்னால் உயரக் குறைவு காரணமாகப் பனியானது நீராக மாறிப் பெருமழையாகப் பொழியத் தொடங்கியது. நகரை அடைந்து தங்கியிருந்த இடத்தை அடைந்த பிறகும் அடுத்த அரை மணி நேரத்திற்கு மழை நிற்கவே இல்லை. ஆபத்தானதாக இருந்தாலும் இன்றளவும் நினைவில் நிற்கும் அனுபவங்களில் அந்தப் பயணமும் ஒன்று.

மறு நாள் காலை அரசாங்கப் பேருந்தில் கிளம்பி நியூ ஜல்பாய்குரி நோக்கிய நான்கு மணி நேரப் பயணத்தைத் தொடங்கினோம். கேங்டாக் சாம்பார் தன் வேலையைக் காட்டத் தொடங்கியதால் என் குழந்தைகளுக்கு LM ஆரம்பித்து விட்டது. மீண்டும் ரொட்டி, ஆப்பிள் வாங்கிக் கொண்டு பயணித்தோம். (கையில் முதலுதவிக்கு மருந்துகள் எடுத்துச் செல்ல வேண்டும் என அறியாத ஞான சூன்ய நாட்கள் அவை) மதிய உணவு நேரத்தில் நியூ ஜல்பாய்குரி பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்த ஒரு உணவகத்திற்குள் சென்ற போது அங்கே அசைவம்/சைவம் எனக் கலந்து இருந்தது. இரவு பத்து மணிக்குத் தான் கல்கத்தா செல்லும் பேருந்து கிளம்பும் என்பதால் எங்கள் குடும்பம் மட்டும் அது வரை ரொட்டி, பழங்களை உண்டு சமாளித்தோம். இரவு நேரம் முழுவதும் பேருந்துப் பயணத்தில்…

ஹௌரா/கல்கத்தாவை அடையும் முன்பாக அந்த ஊர்களைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோமா?

ஹௌரா/கல்கத்தா (மேற்கு வங்காளத் தலைநகரம்)

ஹூக்ளி நதியின் தென்-வடக்காக அமைந்த இரட்டை நகரங்கள் இவை. கங்கையின் முகப்பில் (டெல்டா) அமைந்த சதுப்பு நிலப்பகுதியே கல்கத்தா நகரமாக விளங்குகிறது. இன்றளவும் தூர்க்கப்படாத சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.(Mangrove/ Sundarbans) 1951 முடிய இந்தியாவின் தலை நகரமாக விளங்கிய கல்கத்தா தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளங்குகிறது. வடக்குப் பகுதி பழமையானது. தெற்குப் பகுதி சுதந்திரத்திற்குப் பிறகு விரிவு படுத்தப்பட்டது. மையப் பகுதி என்பது வணிகப் பகுதி. முக்கியமான கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. Indian Standard Time (IST) எனப்படும் இந்திய நாடு முழுவதற்கும் பொதுவான நேரம் கல்கத்தா நகரின் தீர்க்க ரேகையைக் (longitude) கொண்டே கணக்கிடப்படுகிறது.
கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான ஹூக்ளி நதியின் குறுக்கே உள்ள நான்கு பெரிய பாலங்கள் இரண்டு நகரங்களையும் இணைக்கின்றன. ஹௌரா பாலம் (Cantilever bridge) மற்றும் வித்யாசாகர் சேது ஆகியவை மிகப் பிரசித்தி பெற்றவை. நீர்ப் போக்குவரத்து (படகுகள், கப்பல்கள்), ஆகாயப் போக்குவரத்து (Netaji Subhash Chandra Bose International Airport), சாலைப் போக்குவரத்து (பேருந்துகள், கார்கள், ட்ராம்கள், சைக்கிள் மற்றும் கை ரிக்சாகள்), ரயில் போக்குவரத்து (ஹௌரா ரயில் நிலையம், மெட்ரோ ரயில்) என அனைத்து விதப் போக்குவரத்து வசதிகளையும் கொண்டவை இந்த இரட்டை நகரங்கள்.

கல்கத்தா என்றாலே ரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென், அன்னை தெரசா போன்ற நோபல் பரிசாளர்கள், சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகம், பேலூர் ராமகிருஷ்ணா மடம், நூலகம், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுக்கள், சத்யஜித் ரே படங்கள், கல்கத்தா காளி, வாணலி, உள்பாவாடைகள், பெங்கால் பருத்திப் புடவைகள், மீன் உணவுகள், ரசகுல்லா, மிஷ்டிதோய், ட்ராம்…இப்படி பலப் பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும் அளவுக்குப் புகழ் பெற்றது இந்த நகரம். சென்னை எக்மோர், சென்ட்ரல், ரிப்பன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் ஹைகோர்ட் கட்டிடங்கள் உள்ள பழைய சென்னைப் பகுதியைப் பார்த்திருப்பவர்களுக்கு கல்கத்தா வித்தியாசமாகத் தெரியாது. (சென்னையில் ட்ராம் போக்குவரத்து 1953 முதல் நிறுத்தப் பட்டு விட்டது)

கல்கத்தா நகரம் கலை, கலாச்சாரங்களுக்கும் திருவிழாக்களுக்கும் புகழ் பெற்றது. 1860 ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கல்கத்தாவை ஆண்ட நவாப் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார். மெல்ல மெல்ல இந்நகரின் வழியாகத் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப் படுத்தினர் என்பது சரித்திரம். இன்றளவும் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த குறுகலான சாலைகளுக்கிடையே ஓடும் ட்ராம்கள், மற்றும் Gothic, Barok, Roman, Oriental, Indo-islamic ஆகிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட பல கட்டிடங்கள் காலனி ஆதிக்கத்தின் உதாரணங்கள்.

2016 ஆண்டு ஐரோப்பியப் பயணத்தில் லண்டன் நகரைப் பார்த்த போது கல்கத்தா நகரத்தை லண்டனை உதாரணமாக வைத்தே அமைத்திருக்கிறார்கள் எனப் புரிந் தது. குறுகலான சாலைகள், கட்டிடக்கலை, ட்ராம், அடுக்கு மாடிப் பேருந்துகள் எனப் பலப் பல விஷயங்கள் பொதுவாக இருப்பதைக் காண முடிந்தது.

மறுநாள் காலை புறநகரை அடைந்த போது விடியும் நேரம் என்பதால் நகரின் பழமையான பகுதிகள் வழியாக வந்த போது நாங்கள் கண்ட பல காட்சிகள் இன்றளவும் நினைவில் உள்ளன. நாங்கள் டார்ஜீலிங் போகும் முன் தங்கியிருந்த ஹௌரா RMSற்குச் சென்று சேர்ந்தோம். RMS கட்டிடத்தின் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடம் வரை நடைபாதைக் கடைகளில் மிகப் பெரிய வாணலிகளில் கடுகு எண்ணெயில் மீன் பொரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியே மீன் வாடை, சாக்கடை நாற்றம், ரயில் பயணிகளின் கூட்டம், சத்தம், வழியெங்கும் நெரிசலான சாலை என மணம் குணமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து பார்க்கும் போது அதற்கு நேரெதிரான காட்சிகள் தெரிந்தன. நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை ஒட்டி ஹூக்ளி நதி, அதில் செல்லும் படகுகள் ஜன்னல் வழியாகப் பார்த்தாலே தெரியும் ஹௌரா பாலம், முன்பக்கத்தில் பிரம்மாண்டமான ரயில் நிலையம் என புகைப்பட அழகுடன் (picturesque view) இருந்தது.

ஹூக்ளி நதியில் குளிக்கும் ஆசையில் ஆண்கள் குழந்தைகளில் சிலரையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். சாக்கடைக் கழிவுகள் கலந்து நாற்றமெடுக்கும் நீர் அது என்பதை அதில் மூழ்கிய பிறகு தெரிந்து கொண்டவர்கள் அருவருப்புடன் மீண்டும் தங்கியிருந்த இடத்தின் குளியலறையில் குளித்தனர். காலை உணவிற்குப் பிறகு ஊர் சுற்றிப் பார்க்க் கிளம்பினோம். ஒவ்வொரு முறையும் சாலையைக் கடந்து செல்வதே ஒரு தனிக் கலை தான்.

முதலில் சென்ற இடம் காளி காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள காளி கோவில். ஹூக்ளி நதியைப் படகில் (ferry) கடந்து அக்கரைக்குச் சென்று அங்கிருந்து Mass rapid transit system எனப்படும் மெட்ரோ ரயிலில் காளி காட் சென்றோம். 1994லேயே கல்கத்தாவில் மெட்ரோ ரயில் இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் முதன் முதலில் இந்நகரில் தான் மெட்ரோ ரயில் விடப்பட்டது பூமிக்குக் கீழும் மேலுமாக ரயில் சென்றது அச்சமயத்தில் ஆச்சரியமான அனுபவம். 😊 (முதல் மெட்ரோ பயணம்)

ரயில் நிலையத்திலிருந்து குறுகிய சாலைகளில் நடந்து சென்று காளி கோவிலை அடைந்தோம். நவராத்திரி சமயத்தில் கல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகப் பிரசித்தம். கோவில் வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. உள்ளே வரிசையில் நின்று முக்கிய சந்நிதி என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். நம் ஊர் கோவில் சந்நிதிகளைப் போல அல்லாமல் சதுரமான ஒரு அறை. நடுவில் ஒரு பீடம். அதில் மூன்று கற்கள். அவைகள் தான் அங்கே தெய்வத் திருவுருவங்கள். அவைகளின் மேலும் செம்பருத்திப் பூக்கள். பார்க்க வித்தியாசமான காட்சி. வழியெங்கும் தண்ணீரைக் கொட்டி அதன் மேல் செம்பருத்திப் பூக்களைப் போட்டிருந்தார்கள். (பக்தர்கள்?!) பூ மேல் காலை வைக்காமல் வழுக்கி விழாமல் நடப்பதே சர்க்கஸ் போல இருந்தது. அப்படியும் சிலர் வழுக்கி விழுந்தார்கள். நிதானமாக நடந்து சென்று காளி மாதாவை வணங்கி விட்டு வெளியில் வந்தோம்.
கோவிலை சுற்றிப் பார்த்து விட்டு வெளியில் வந்து சிறிது நேரம் பந்தலுக்குக் கீழே நின்று அடுத்து எங்கே எனப் பேசி முடிவு செய்து, பழைய கல்கத்தா பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கடைக்குச் சென்று ரசகுல்லா வாங்கக் கிளம்பினோம். அங்கே செல்ல ட்ராமில் செல்ல வேண்டும். குறுகிய சாலைகளில் மக்கள் நடமாட்டத்துக்கு இடையில் வளைந்து நெளிந்து சென்றது புது அனுபவம்.(முதல் அனுபவம்) சிறிது தொலைவு நடந்து கடையைக் கண்டு பிடித்து ரசகுல்லா வாங்கி அங்கேயே உண்டோம். நண்பர்களுக்குத் தரவும் வாங்கிக் கொண்டோம். (ரசகுல்லா உண்டதும் முதல் அனுபவம்) அது தவிர வேறு ஒரு இனிப்பும் உண்டோம். பெயர் நினைவில்லை.

இன்னும் ஊரை சுற்றிப் பார்க்கவே இல்லையே! பேருந்தில் ஏறி மத்திய கல்கத்தா பகுதியை சுற்றிப் பார்த்தோம். நடுவில் பெரிய மைதானம். (Maidan) அங்கே தான் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த மைதானத்தைச் சுற்றியும் பக்கத்துத் தெருக்களிலும் நகரின் முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. Mother Teresa Sarani, Victoria memorial hall, Royal Calcutta Turf club (குதிரைப் பந்தய மைதானம்), St.Paul’s Cathedral, Vidyasagar setu (பாலம்), கல்கத்தா கிரிக்கெட் மைதானம் (Eden gardens) போன்ற முக்கியமான இடங்களை தூ…ரத்திலிருந்தே பேருந்தில் பயணம் செய்தவாறே பார்த்தோம்.

அடுத்து ஷாப்பிங் செய்ய விரும்பி ஒரு பிரசித்தி பெற்ற கடைவீதிக்குச் சென்றோம். (பெயர் நினைவில்லை) கல்கத்தா சென்றால் மறக்காமல் வாணலி, உள் பாவாடைகள் மற்றும் பெங்கால் காட்டன் புடைவைகளை அந்தக் கடைவீதியில் வாங்கலாம் விலை அனுகூலமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருந்தோம். குறுகலான வீதிகள். சாலையின் இருபுறமும் சிறு கடைகளில் சிறு குன்று போல் சேமியாவைக் குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமிய அன்பர்கள் சேமியா, பேரீச்சம் பழம் போன்றவற்றை வாங்கிச் சென்றார்கள். உள்பாவாடை, சேலைகள் எங்கே கிடைக்கும் என ஓரிடத்தில் கேட்டபோது ஒரு அன்பர் சென்னை பாரிஸ் கார்னர் தெருக்களின் சாயலில் பின் பக்கத்தில் பல சந்துகள். சந்துக்குள் சந்து, அதற்குள் ஒரு சந்து என maze மாதிரி உள்….ளே ஒரு கடையைக் காட்டினார். அதன் திண்ணையில் அமர்ந்து வியாபாரத்தைத் தொடங்கினோம். அவர்கள் சொல்லும் விலையில் பாதிக்கு பேரம் பேசுங்கள் என நண்பர்கள் கூறி இருந்ததன் அடிப்படையில் பேரம் பேசி, ஒரு வழியாக சில ஆடைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். சிலர் கல்கத்தா வாணலி வாங்கினார்கள்.

மாலை மங்கத் தொடங்கிய நேரம். இரவு 10 மணி ரயிலைப் பிடித்து சென்னைக்கு வர வேண்டும் என்பதால் ஆட்டோவில் கிளம்பினோம். கிளம்பிய சமயம் பெருமழை பெய்யத் தொடங்கியது. கல்கத்தா நகரம் ஆங்கிலேய ஆட்சிக் காலம் தொடங்கி இன்றளவும் மக்கள் தொகை அதிகம் உடைய நகரம். நிறைய தொழிற்சாலைகளும் உள்ளன என்பதால் காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. மழை நீர் கருமையாகத் (Acid rain) தரையில் விழுந்தது. ஏற்கனவே அசுத்தமாக இருந்த சாலைகள் மேலும் அழுக்காகி…இன்னும் விரிவாக விவரிக்க விரும்பவில்லை.

எங்கள் சுற்றுலாவின் இறுதிக் கட்டமாக ஹௌரா பாலத்தின் மேல் செல்ல வேண்டி இருந்தது. பாலத்தில் பயணிக்கும் நேரம் மழை மட்டுப்பட்டு சிறு தூரலாக மட்டுமே இருந்த காரணத்தால் பாலத்தின் அழகை ரசிக்க முடிந்தது. 1500 அடி நீளமும் 71 அடி அகலமும் 8 லேன்களும் கொண்ட இந்தப் பாலம் ஹூக்ளி நதியின் மேல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இதன் மறுபெயர் ரவீந்த்ர சேது.(சேது – பாலம்). இரும்பினால் அமையப் பெற்ற இந்தப் பாலம் உலகின் மிக நீளமான cantilever பாலங்களுள் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பாலத்தை ஒரு nut, bolt கூட உபயோகப் படுத்தாமல் rivetகளால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு. ஒரு நாளுக்கு 100,000 வாகனங்களும் கணக்கில்லாத பாதசாரிகளும் செல்லும் பாலம் இது. (நன்றி: கூகிள்)

தொலைவிலிருந்து பார்த்த பாலத்தை அருகில் பார்த்ததும் பயணித்ததும் இவ்வளவு பெரிய பாலமா இவ்வளவு லேன்களா என வியந்ததும் இன்றளவும் நினைவில் உள்ளது. லேசான மழைத் தூறலில் இந்த பாலத்தில் பயணித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. பின்னாட்களில் பல நாடுகளுக்கும் சென்று பல விதமான பாலங்களைக் கண்டு அவற்றின் மேல் பயணித்த அனுபவம் உண்டென்றாலும் (Golden gate bridge- San Franscisco, Tower bridge – London) முதன் முதலாகப் பயணித்த வித்தியாசமான ஹௌரா பாலம் நினைவில் நிற்பதென்னவோ உண்மை.

ஹௌரா ரயில் நிலையம் அருகில் வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து RMS சென்று பெட்டிகளை எடுத்துக் கொண்டு வழியெங்கும் சேறும் சகதியுமான சாலையில் லேசான மழைத் தூறலில் ரயில் நிலையம் சென்றோம். இரவு உணவை ரயில் நிலைய கேன்டீனில் முடித்த போது இரவு 9 மணி இருக்கும். எங்கள் ரயில் 10 மணிக்கு 21ஆவது நடைமேடையிலிருந்து கிளம்பும் என அறிவிப்புப் பலகையில் பார்த்ததும் அசந்து போனோம். தோளில் மாட்டும் பைகள், கைப்பிடி வைத்த பை, சூட்கேஸ், கட்டைப்பை என எங்கள் சாமான்களுடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு முதலாம் நடைமேடையிலிருந்து 21ஆவது நடைமேடைக்குச் சென்று எங்கள் கோச்சிற்குச் செல்ல வேண்டுமே! நடக்கும் போது ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் என் சிறு வயதில் நான் குடித்த, பின்னர் தடை செய்யப்பட்ட coca cola கல்கத்தாவில் அச்சமயம் விற்பனை செய்யப்பட்டதைப் பார்த்ததும் உடனே வாங்கிக் குடித்தோம். (சில வருடங்களுக்குப் பிறகே மற்ற நகரங்களில் தடை நீக்கப் பட்டது)

அவரவருக்கு முடிந்த அளவு பெட்டி/பைகளை எடுத்துக் கொண்டு முன்னேறும் வேளையில் நண்பர் ஒருவர் முன்னால் சென்று விட்ட தன் மனைவியைக் காணாமல் சாந்தா..சாந்தா…என அழைத்துக் கொண்டே செல்ல அவரைக் காணாமல் சாந்தையும் காணோம் பொட்டையும் காணோம் எனப் புலம்பிக் கொண்டே முன்னேறியது இன்னும் நினைவில் உள்ளது.😊 ரயில் நிலைய அழுக்குடன் மழைத் தண்ணீரும் கலந்திருக்க வழுக்கி விழுந்து எழுந்து ஒரு வழியாக ரயிலை அடைந்தோம்.

RMS தபால் கட்டுக்களிடையே தூக்கம், மண் குடுவைத் தேநீர், பச்சை மிளகாயைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி, கடுகு எண்ணையில் பொரித்த பூரி, பாசி நாற்றச் சாலைகள், தண்ணீரில்லாக் குளியலறை, ரயில் தரைப் பயணம், முதல் வகுப்பில் முன்பதிவு confirm ஆகாமலே பயணம், பூக்களில்லாப் பூங்காக்கள், சாக்கடை நாற்றம், மீன் பொரிக்கும் மணம், சேறு, சகதி என மணம் குணமாக எங்கள் சுற்றுலா நிறைவு பெற்றது. பெரிதாக எந்த வித அசம்பாவிதமும் நோய்களும் இல்லாமல் (என் மகன் இரண்டு முறை தொலைந்தது, ஒரு ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்தது தவிர) நல்ல விதமாகவே நாட்கள் சென்றன.

கூகிளும் விக்கிபீடியாவும் இல்லாத காலகட்டத்தில் குறைவான பட்ஜெட்டில் எந்த விதமான தங்குமிட முன்பதிவும் செய்யாமல் (எதுவுமே திட்டமிடாமல்?!) சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டு எப்படி அவ்வளவு தொலைவு/நாட்கள் பயணித்தோம் என நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சகித்துக் கொண்டு கடந்து முன்னேற எங்களால் அப்போது முடிந்தது. வயதும் ஒரு காரணம். இன்று நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவு எங்கள் அனைவருக்கும் பொருளாதார வசதி இருந்தாலும் மீண்டும் அனைவரும் சேர்ந்து செல்வதென்பது அசாத்தியமே!

பழமையும் புதுமையும் கலந்த அந்தப் பயண அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன்…

அனுபவங்கள் தொடரும்…

பின் குறிப்பு:
நண்பரின் கேமராவில் எடுக்கப்பட்டு எங்களுக்குத் தரப்பட்ட சில புகைப்படங்களை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளேன். புவனேஸ்வர், கல்கத்தாவில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டனவா அல்லது எடுக்கப்பட்டு எங்களுக்குத் தரப்படவில்லையா அல்லது film role தீர்ந்து விட்டதா? யாமறியோம் பராபரமே!

PC: Google and our friends

LTC பயணங்கள் – வடகிழக்கு இந்தியா [பகுதி -1]

 (1994 ஆகஸ்ட்-செப்டம்பர்)

[புவனேஸ்வர், கொல்கத்தா, டார்ஜீலிங் & கேங்டாக்]

பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் என் கணவரின் அலுவலக நண்பர்களுடனும் தனியாகவும் சென்ற இன்றும் எங்களின் நினைவில் நிற்கும் பயணங்களின் தொடர் இப்போது உங்களுக்காக…

முதலில் LTC என்றால் என்ன எனத் தெரிந்து கொண்டு பயணத்தைத் தொடங்குவோமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு Leave touring concession (சுருக்கமாக LTC) எனப்படும் உதவித் தொகையுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. நான்கு வருடங்களுக்கொரு முறை அதைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்துடன் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் சுற்றுலா சென்று வரலாம். அவரவர் பார்க்கும் வேலையின் அடிப்படையில் அரசாங்க உதவித் தொகை முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ரயில், விமானம் என மாறும். அரசாங்கப் பேருந்து, ரயில், விமானம் எனப் பயணிக்க வேண்டும் என்பது விதி. மற்ற செலவுகள் நம்மைச் சேர்ந்தது. (இதைத் தவிர இரண்டு வருடங்களுக்கொரு முறை அவரவர் சொந்த ஊருக்கும் சென்று வரும் சலுகையும் உண்டு)

மேற்கண்ட வசதியைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் என் கணவரின் ஆறு அலுவலக நண்பர்களின் குடும்பங்களுடன் 12 நாள் பயணமாக புவனேஸ்வர், கொல்கத்தா (அப்போது கல்கத்தா) மார்க்கமாக டார்ஜீலிங், கேங்டாக் செல்லத் திட்டமிட்டுக் கிளம்பினோம்.

என் நான்கு வயதுக் குட்டிப் பையனுக்கு கிளம்பும் தினத்தன்று காலை முதல் காய்ச்சல். இருந்தாலும் பயண நேரத்தில் உண்ண potluck முறையில் எனக்கு வந்த உணவான புளி சாதத்தை காலை முதலே ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அளவுக்குத் தயார் செய்து எடுத்துக் கொண்டு மாலை 4 மணி ஹவுரா மெயிலில் பயணம் ஆரம்பம்.

அந்தச் சமயத்தில் எங்கள் அனைவருக்கும் முதல் வகுப்பில் ரயில் பயணம் செய்யும் சலுகை இருந்ததால் கடைசியாகச் சேர்ந்து கொண்ட குடும்பத்தைத் தவிர அனைவரும் ஒன்றாகப் பயணிக்க முடிந்தது. சிறுவர்களும் பெரியவர்களும் தனித் தனியாக அமர்ந்து விளையாடி, பேசி, சிரித்து, உண்டு, சிறிது நேரம் உறங்கி எழுந்ததும் இரவு 12.30க்கு புவனேஸ்வர் வந்து விட்டது.

புவனேஷ்வர் (ஒடிஷா மாநிலத் தலைநகர்)

அங்கே இறங்கி RMS எனப்படும் Railway Mail Service அலுவலகத்தில் தபால்களைப் பிரிக்கும் பகுதியில் (Sorting area) அவர்களின் அனுமதியுடன் அன்றிரவு தபால் கட்டுக்களுக்கிடையில்(?!) படுத்துக் தூங்கினோம். நாங்கள் Postal accounts அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிடைத்த சலுகை இது. (Postal accounts துறை என்பது தபால் அலுவலகங்களின் கணக்கைத் தணிக்கை செய்து (audit) மத்திய அரசுக்கு மாதாந்திர/வருடாந்திர அறிக்கைகளை (report) சமர்ப்பிக்கும்) மறுநாள் காலை அங்கேயே குளித்து, ரயில்வே கேன்டீனில் காலை உணவருந்தி விட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஒடிஷா (அப்போது ஒரிஸா) மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரிலிருந்து சுற்றுலாப் பேருந்து ஒன்றில் கிளம்பி ஏறக்குறைய 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “புரி” நகர ஜகன்னாதரைத் தரிசிக்கக் கிளம்பினோம். வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “பிபிலி” (Pipili) என்னும் சிறு ஊரில் பேருந்து நின்றது. இந்த ஊரானது புவனேஷ்வர் மாவட்டத்தின் நகரப் பஞ்சாயத்தின் (Urban panchaayat) கீழ் அடங்கும்.

முக்கிய சாலையில் பயணிக்கும் போது வழியெங்கும் இருபுறமும் கடைகளில் Applique வேலைப்பாட்டுடன் கூடிய கைவினைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. பிரஞ்சு மொழியில் appliquer என்றால் “attach” எனப் பொருள். (Appliqué is ornamental needlework in which pieces or patches of fabric in different shapes and patterns are sewn or stuck onto a larger piece to form a picture or pattern. It is commonly used as decoration, especially on garments) புரியும் விதத்தில் கூறுகிறேன் கோவில் குடைகள், தேர்கள், தோரணங்கள், ஆடைகள் போன்றவற்றில் ஒரு டிசைனைத் தைத்து அதை வெட்டி மற்றொரு துணியில் தைத்திருப்பார்கள். பல வண்ணங்களில் அவைகள் இருப்பதை நம்மில் பலரும் கண்டு ரசித்திருப்போம். ஆனால் அது தான் இது என்று தெரிந்திருக்காது.

இவ்வூரின் மக்கள் தொகை பத்தாயிரம் கூட இல்லை என்றாலும் (2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு படி 17,000+) அனைத்துக் குடும்பங்களுக்கும் Appliqué வேலை செய்வது தான் தொழில் என்பதால் பார்க்கும் இடமெல்லாம் கடைகள் தான். பேருந்து நின்றதும் என் குடும்பத்தைத் தவிர அனைவரும் இறங்கிக் கைவினைப் பொருட்களை வாங்கத் தொடங்கினார்கள். என்னையும் வரச் சொல்லி வற்புறுத்தினார்கள். முடிந்தால் நம்புங்கள், எனக்கு அந்த நாட்களில் அதிகப்படியாக எந்தப் பொருளையும் வாங்கும் எண்ணமே இருந்ததில்லை என்பதால் பேருந்தை விட்டு இறங்கவே இல்லை.

மற்றவர்கள் பார்வையில் எங்களிடம் செலவு செய்யத் தேவையான பணம் இல்லாததால் தான் நான் வரவில்லை எனத் தோன்றியது போலும். நான் பணம் தருகிறேன் ஊருக்கு வந்து திருப்பித் தாருங்கள் என ஒரு நண்பர் கூறியதாகவும், என்னிடம் தேவையான பணம் இருக்கிறது என் மனைவிக்கு ஷாப்பிங் செய்யும் ஆர்வம் இல்லை எனக் கூறி மறுத்ததாகவும் என் கணவர் கூறினார். சில நிமிடங்களில் பேருந்தின் உள்ளேயே சுவற்றில் மாட்டும் தபால்கள், சாவிகள் போன்றவைகளைப் போடும் வகையில் ஒரு கலைப் பொருளை விற்பனை செய்தார்கள். அந்நாட்களில் என் கணவர் ஸ்கூட்டர் சாவி, பேனா போன்றவற்றை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விட்டு தினமும் காலையில் என்னையும் சேர்த்துத் தேட விடுவார். அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாமே என நினைத்து ஒரு applique wall hangingஐ ₹13/- கொடுத்து வாங்கினேன். அதைக் கண்ட மற்றொரு நண்பர் ஒருவரின் கேள்வி: வாங்கியது நல்ல செயல். எப்படி உங்கள் கணவரை அதில் அவரது பொருட்களைப் போட வைப்பீர்கள்?
என் பதில்: பே...பே...

பிள்ளைகளின் பசி, தாகம் இன்னபிற தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு “புரி” நகரை நோக்கிய எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

புரி நகரம் வைணவ சார் தாம் (Char Dham) எனப்படும் புண்ணியத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (புரி, துவாரகா, ராமேஸ்வரம், பத்ரிநாத்) பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நான்கு லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக உயரமான மதில் சுவருடன் அமைந்த இந்தப் பிரம்மாண்டமான கோவிலில் கிருஷ்ணர், அவரது மூத்த சகோதரர் பலராமர் மற்றும் சுபத்ராவின் மரத்தாலான உருவச் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள். (Jagannath, Balabhadra and Subhadra என அழைக்கிறார்கள்). 12 வருடங்களுக்கொரு முறை இந்த மரச் சிலைகள் புதிதாக மாற்றி வைக்கப்படுகின்றன. இதையொட்டிப் பல புராணக் கதைகளும் உண்டு.

இங்கு நடைபெறும் வருடாந்திர “ரத யாத்திரை” (ஜூன்) மிகப் பிரசித்தி பெற்றது. மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள். மூன்று பெரிய தேர்களில் கடவுளரின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டு யாத்திரை நடைபெறுகிறது. (தொலைக்காட்சியில் Live ஒளிபரப்பு ஒவ்வொரு வருடமும் உண்டு) ரத யாத்திரை சமயத்தில் தேர்கள் எந்த வீதிகளில் வரும் எனக் காட்டினார்கள். வீதிகள் சற்றே நெரிசலாக, கூட்டமாக இருந்தது. மக்கள் தொகை அதிகமா அல்லது பக்தர்களின் வருகையினாலா எனத் தெரியவில்லை.
நாங்கள் கோவிலுக்குச் சென்ற போது மதியம் பன்னிரண்டு மணி இருக்கலாம். குறிப்பிட்ட வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை கடவுளின் சன்னிதிக்கு அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால் (சில குட்டீஸ் தவிர்த்து) அவரவர் பிள்ளைகளுடன் ஒரு பெற்றோர் மட்டும் வெளியில் நிற்க மற்றவர்கள் கடவுளை தரிசனம் செய்து வந்தனர். குழந்தைகளை இடுப்பில் தூக்கிய படி செல்ல அனுமதி உண்டு நடத்தி அழைத்துச் செல்லத் தான் அனுமதி இல்லை என்று யாரோ ஒருவர் கூறவும் அனைவரும் சந்நிதிக்குச் செல்ல கருங்கற்களால் ஆன நடைபாதையில் பிள்ளைகளை இடுப்பில் சுமந்து கொண்டு வேகமாக ஓடினோம். கடும் வெயிலின் தாக்கத்தால் நடைபாதை கொதித்தது.

தென்னிந்தியக் கோவில்களைப் போல இல்லாமல் ஒரு பெரிய கூடத்தில் கடவுளர்களின் உருவச் சிலைகளை வைத்து பூசை செய்கிறார்கள். இடையே தடுப்பு வேறு. பக்தர்களின் கூட்டத்திற்கிடையில் நாங்களும் முட்டி மோதி தரிசனம் செய்தோம். வெளியில் வந்ததும் இடது பக்கத்தில் மண் குடுவைகளில் பிரசாதங்களை பக்தர்களுக்கு வினியோகம் செய்து கொண்டிருந்தார்கள். பழங்காலப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளபடி 56 வகை உணவுகள் தினமும் தயாரிக்கப்பட்டு, கடவுளுக்குப் படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது. இந்த உணவுகளில் வெங்காயம், பூண்டு, மசாலா பொருட்களை சேர்ப்பதில்லை. இனிப்பு வகைகள் நிறைய உண்டு. அங்கே தயாரிக்கப்படும் உணவுகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் எப்போதும் போதுமானதாகவே இருக்குமாம். இல்லை என்பதே இருக்காது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

மதிய உணவை செல்லும் வழியில் ஒரு உணவு விடுதியில் உண்டு விட்டு (சாதம், தயிர்) சூரியனாரின் கோவில் அமைந்திருக்கும் “கொனார்க்” நகரை நோக்கிப் பயணித்தோம். இந்த நகரம் புரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாக் கடலின் கரையில் (Bay of Bengal) உள்ளது. சென்று சேர்வதற்குள் சூரியனார் கோவிலைப் பற்றிய சில விவரங்களை அறிந்து கொள்ளலாமா?

கலிங்க மன்னன் முதலாம் நரசிம்ம தேவனால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் 1984ஆம் ஆண்டு UNESCOவால் world heritage site ஆக அறிவிக்கப் பட்டது. இந்தக் கோவில் கற்களால் ஆன பல அடுக்குகளும் கோபுரமும் கூடிய தேர் போன்ற அமைப்பில் 24 சக்கரங்களுடன் (12 அடி/ 3.7 மீட்டர் அகலம்) சூரியக் கடவுள் குதிரைகள் இழுக்கும் தேரில் அமர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதய நேரத்தில் பார்த்தால் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நீலக் கடலிலிருந்து எழும்பி வருவது போலத் தோன்றும் வண்ணம் உள்ளதாக் கூறுகிறார்கள். வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலரை அங்கே காண முடிந்தது. மிக அற்புதமான வடிவமைப்பு. ஒவ்வொரு சக்கரமாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்து அருகில் நின்று சுமாராகப் படம் எடுக்கும் நண்பரின் கை கேமராவில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. (பெரிய்ய்ய்ய்ய்ய்ய சக்கரங்கள். தற்சமயம் அந்தப் புகைப் படத்தைக் காணவில்லை ☹

சிற்ப சாஸ்திரக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலின் சுவர்களின் ஒவ்வொரு நிலையிலும் பலப் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள் உள்ளன. காம சூத்திரத்தை விளக்கும் பல சிலைகளும் அங்கே உள்ளன. (சிறுவர்களும் உடன் இருந்ததால் விவரமாக அனைத்தையும் காண முடியவில்லை) தற்போது இருக்கும்தேர் போன்ற சூரியனார் சன்னிதியுமே காலத்தின் கோலத்தினால் பெரிதும் சிதிலமடைந்து உள்ளது. காற்று அரிப்பு, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உருமாறி விட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் மொத்தத்தில் ஏன் கோவிலைக் காணவில்லை என்பது யாருக்கும் தெரியாது.


அடுத்ததாக அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் அங்கே விளையாடி மகிழ்ந்து விட்டு அருகிலிருந்த ஒரு உணவு விடுதியில் மாலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புவனேஷ்வரை நோக்கிக் கிளம்பினோம். கடற்கரையில் இருந்த போது என் கணவரும் அவரது நண்பர்களும் ஒரிசாவில் அரிசி சாதமும் தயிரும் கிடைத்தது பற்றி சிலாகித்துப் பேசியது இன்றும் என் நினைவில் உள்ளது. 😊 மீண்டும் புவனேஷ்வரைச் சென்றடைந்த போது மாலை 4.30-5.00 இருக்கும்.

ஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வர் பண்டைய கலிங்க நாட்டின் தலைநகரமும் ஆகும். (வரலாற்றுப் பாடத்தில் படித்த அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார் என்பதும் கலிங்கப் போரும் நினைவுக்கு வருகிறதா?) இங்கு கோவில்கள் நிறைய இருப்பதால் இந்தியாவின் “கோவில் நகரம்” எனப் பிரசித்தி பெற்றது. புவனேஷ்வரின் கோவில்களைப் பார்க்க முடிவு செய்து சில குடும்பங்கள் மட்டும் 5.30 மணியளவில் குடும்பத்துக்கொரு ஆட்டோ பேசிக் கிளம்பினோம். முதல் நாள் இரவு 12.30 மணிக்கு நாங்கள் வந்திறங்கிய அதே ரயிலைப் பிடித்துப் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதால் மற்றவர்கள் ஓய்வெடுக்க விரும்பினார்கள்.

மாநிலத் தலைநகரமாக இருந்தாலும் அந்நாட்களில் சீரான தெருவிளக்குகளுடன் கூடிய சாலைகள் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் வரையே இருந்தன. நகருக்குள்ளேயே பேருந்து நிலையத்தைப் பார்த்தது நினைவில் உள்ளது. (தற்போது எட்டு கிலோமீட்டர் தொலைவில் பல ஊர்களுக்கும் செல்லும் பேருந்து நிலையம் உள்ளது என விக்கி மாமா கூறுகிறார்). மாலை மயங்கும் நேரத்தில் தெரு விளக்குகள் இல்லாத சாலைகளில் பயணித்து மிகவும் பிரசித்தி பெற்ற லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.(நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் இந்தக் கோவிலில் நடனக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்) கலிங்கச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது இந்தக் கோவில். அருமையான சிற்ப வேலைப்பாடுகளை அரையிருட்டில் கண்டோம். கோவிலில் சரியானபடி விளக்குகளே இல்லை. சில படிக்கட்டுகள் இறங்கி குகை போன்ற பகுதியில் ஒற்றைத் தீபத்துடன் இருந்த சிவலிங்கத்தை வணங்கினோம். ஆளரவமே இல்லை. பூசை செய்யவும் ஆளில்லை. அருகிலிருந்த சில கோவில்களுக்கும் (அளவில் சிறியவை, பெயர்கள் நினைவில்லை) சென்று விட்டு இருட்டான சாலைகளில் பயணித்து மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்தோம்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நாங்கள் இருந்த RMS பார்சல் பகுதியில் எதிர்பாராத வகையில் short circuit ஆகி மின்சார விபத்து ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. அவசரமாக ரயில் வருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே நடைமேடையில் அமர்ந்து காத்திருக்க முடிவு செய்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு சென்றோம். சிறுவர்கள் அனைவரும் என் மகள் தலைமையில் எங்கள் பின்னால் வந்தார்கள். நடைமேடைக்குச் சென்ற பிறகு எங்கள் நான்கு வயது மகனைக் காணவில்லை. அரையிருட்டு வேறு. பதறி அடித்துக் கொண்டு அங்குமிங்கும் தேடிக் கடைசியில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தவரைக் கூட்டி வந்தோம். 12.30 மணிக்கு ரயிலில் ஏறி ஹௌராவைக் காலை பத்து மணியளவில் சென்றடைந்தோம்.

அந்த ரயில் நிலையம் 21 நடைமேடைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நிலையம். மூட்டை முடிச்சுக்களுடன் நடந்து வெளியே வந்த சில அடிகளில் நேரெதிரில் RMS எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம். முதல் தளத்தில் தங்கும் வசதிகளுடன் கூடிய இரண்டு சிறிய அறைகள் கொண்டது. போஸ்ட் மாஸ்டரின் அனுமதியுடன் நாங்கள் “அனைவரும்” அங்கே சென்றோம். அங்கு தங்கியிருந்த இரண்டு ஊழியர்களின் சம்மதத்துடன் எங்களின் அதிகப்படி சாமான்களை அங்கேயே வைத்து விட்டு மாலை 4.30 மணி ரயிலைப் பிடித்து New Jalbaiguri நோக்கிப் பயணித்தோம். கல்கத்தாவை திரும்பி வரும்போது தான் சுற்றிப் பார்க்க எண்ணி இருந்தோம் என்பதால் அன்று பகலில் ஓய்வெடுத்தோம். எங்கள் சாமான்களை வைத்த பிறகு எங்களுக்கு உட்காரக் கூட இடமில்லை என்பதே உண்மை. ஓய்வு எடுத்தோம் என்பது ஒரு வழக்குக்காக் கூறப்படுகிறது எனக் கொள்ளவும். 😊

மாலை New Jalbaiguri செல்லும் ரயிலின் முதல் வகுப்புப் பயணத்தில் எங்களில் மூன்று பேருக்கு (நான், என் கணவர், மகள்) மட்டுமே உறுதியான பயணச் சீட்டுக்கள் இருந்தன. பயண நேரம் வரை மற்றவர்களுக்கு Confirmation ஆகவே இல்லை. ஆனாலும் டிக்கெட் பரிசோதகர் பரவாயில்லை அனைவரும் இந்த கோச்சிலேயே ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறியதால் அனைவரும் அதிலேயே ஏறிக் கொண்டோம். வட இந்திய ரயில்களில் முறையான முன்பதிவுப் பயணச் சீட்டு வாங்கிப் பயணிப்பவர்கள் குறைவு. முன்பதிவு செய்திருந்தாலும் யாரும் மதிப்பதில்லை.

ஆந்திரா தாண்டியதுமே ரயில் உணவு என்பது சப்பாத்தி, மஞ்சள் நிறத் தண்ணீர் (பருப்பு தான்), ஒரு பச்சை மிளகாய், வெண்டைக்காய் பொரியல் (அனேகமாக நாங்கள் ரயிலில் சாப்பிட்ட ஒவ்வொரு முறையும்) என மணம், குணம், சுவை இல்லாத உணவு தான். தேநீர் வாங்கி அருந்த நினைத்தால் மண் குடுவையில் தான் தந்தார்கள். (use and throw). மண் நாற்றம் தாங்க முடியவில்லை. பெரியவர்கள் சமாளித்து குடிக்க சிறுவர்கள் மறுத்து விட்டார்கள்.

மறுநாள் காலை சரியாக ஆறு மணிக்கு ரயில் நியூ ஜல்பாய்குரியைச் சென்று சேர்ந்தது. அந்த ரயில் அடுத்த ஊரான சிலிகுரி வரை செல்லும் என்பதால் ஐந்து நிமிடங்களுக்குள் இறங்க வேண்டும் என்பதால் அடித்துப் பிடித்து இறங்கினோம். அனைத்துப் பெண்டிரும் வாலிப வயதில் இருந்ததால் சிலருக்கு மாத உபாதையும் சேர்ந்து கொள்ள… என்னவென்று சொல்வதம்மா!

டார்ஜீலிங் செல்லும் குட்டி ரயில் அங்கிருந்து 10 மணியளவில் தான் கிளம்பும் என்பதால் ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் காலைக் கடன்கள் கேன்டீனில் காலை உணவு என முடித்துக் கொண்டு பெண்டிரும் சிறுவர்களுமாக மூட்டை முடிச்சுக்களுடன் நடைமேடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வேறு ரயில் எதுவும் இல்லை என்பதால் சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பயணச் சீட்டுகளுக்காக் காத்திருக்கும் காத்திருக்கும் நேரத்தில் நாம் பயணிக்கப் போகும் குட்டி ரயில் பற்றிய சில விவரங்களை அறிந்து கொள்வோம்.
Darjeerling Himalayan Railway (DHR) or Toy train எனப்படும் இந்த மலை ரயிலானது meter guage எனப்படும் குறுகிய இரண்டு (2) அடி அகலமுள்ள தண்டவாளத்தில் நியூ ஜல்பாய்குரி – டார்ஜீலிங் (88 கிலோமீட்டர்) மார்க்கத்தில் செல்லக் கூடிய சிறிய ரயிலாகும்.1879-1881 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இது கடல் மட்டத்திலிருந்து 330 அடியில் தொடங்கி 7200 அடி முடிய ஆறு கொண்டை ஊசி வளைவுகள்(zigzags) ஐந்து சுழல் வளைவுகளுடன்(loops) மலை மேல் ஏறிச் செல்லும் வகையில் உள்ளது. மலை மேல் ஏறும் போது சறுக்கி விடாமல் இருக்க தண்டவாளத்தில் பல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. (கொண்டை ஊசி வளைவுகளில் ரயில் முன்னேறிச் செல்லும் போது சிறுது தூரம் பின்னோக்கி வந்து மீண்டும் முன்னோக்கிச் செல்லும். சுழல் வளைவுகளில் (Loops) வளைந்து வளைந்து செல்லும்) மலை மேல் ரயில் செல்லும் என்பதே வியப்புக்குரிய செய்தி. அதிலும் மிகச் சிறிய ரயிலில் செல்லப் போகும் அனுபவத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தோம். இந்த ரயில் UNESCO world heritage siteகளில் ஒன்றாகும்.

ஆண்கள் ரயில் தண்டவாளங்களின் மேலேயே நடந்து சென்று சிறிது தொலைவில் இருந்த பயணச் சீட்டு கௌன்டரில் குட்டி ரயிலுக்கான முதல் வகுப்புக்கான சலுகை உண்டென்பதை மறந்து விட்டு இரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டுக்களை வாங்கி வந்தார்கள். (முதல் வகுப்பு சீட்டு ₹ 19/-, இரண்டாம் வகுப்பு சீட்டு ₹ 9/-) ரயில் என்பது முதல் வகுப்பு இரண்டு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஒரு பெட்டி மற்றும் இவைகளை இழுத்துச் செல்ல ஒரு நீராவி என்ஜின். அவ்வளவு தான். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ரெஸ்ட் ரூம் கிடையாது என்பது தெரிந்து தாய்மார்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானோம். (7.30 மணி நேரப் பயணம்). ஆண்களின் கருத்து: முதல் வகுப்பிலும் கூட்ட நெரிசல் தான். மேலும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயில் எப்படியும் முப்பது நிமிடங்கள் நிற்கும். எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கலாம்.

கையில் மதிய உணவுக்கான ரொட்டி, பிஸ்கட், பழங்கள் என வாங்கிக் கொண்டு ரயிலேறினோம். இரண்டாம் வகுப்பில் கூட்டமான கூட்டம் சிலருக்கு மட்டுமே. எங்களில் சிலருக்கு மட்டுமே உட்கார இருக்கை கிடைக்க. மற்றவர்கள் பெட்டிகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மேல் அமர, குழந்தைகள் மடியில் என எங்கள் குட்டி ரயில் பயணம் ஆரம்பமானது.

ஏறிய சில நிமிடங்களில் சிலிகுரி ரயில் நிலையம். அங்கிருந்து தான் இமய மலை மேல் அமைக்கப்பட்ட இருப்புப் பாதையில் பயணம் ஆரம்பம். நீராவி என்ஜினில் ஓடும் இந்த ரயிலின் மேல் பாகத்தில் நீர் மற்றும் நிலக்கரியைச் சேமிக்க வைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டிகளில் ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது நின்று நிலக்கரி/ நீரை சேமித்துக் கொண்டு பயணம் தொடரும். வழியில் ஏழு நிலையங்கள். மிக அழகான ஊர்கள். 30 நிமிடங்களில் கீழிறங்கி ஆங்காங்கே வேடிக்கை பார்க்கலாம். நிலக்கரிகளை ஏற்றுவதையும் பெரிய குழாயில் நீரை நிரப்புவதையும் வேடிக்கை பார்த்தோம். ரயில் கிளம்பிய பிறகு கூட ஏறிக் கொள்ளலாம் அவ்வளவு வேகம்😊

வழியெங்கும் மேகம் கவிந்த தேயிலைத் தோட்டங்களும், சாலையோர வீடுகளில் வண்ண வண்ணப் ரோஜாப் பூக்களும் தென்பட்டன. பேருந்தும் ரயிலும் அருகருகில் செல்லும் வகையில் உள்ள வித்தியாசமான மலை ரயில் பாதை இது. Guard கையில் பச்சை சிவப்பு வண்ணக் கொடிகளுடன் ரயிலின் கதவருகே நின்று signal தருவதை வைத்து ரயிலும் பேருந்துகளும் வளைந்து நெளிந்து மலைப் பாதையில் செல்லும் காட்சி கொள்ளை அழகு. நத்தை வேகத்தில் தான் இன்றளவும் இந்த ரயில் செல்கிறது என்பதால் சிறு ஊர்களைக் கடக்கும் போது பள்ளி செல்லும் மாணவர்கள் நடந்து வந்து ரயிலில் தொற்றிக் கொண்டு பயணித்து வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டார்கள்.😊

கொண்டை ஊசி வளைவுகளில் ரயில் கடமுட கடமுடவென பின்னே சென்று பிறகு முன்னே செல்லும். முன்னும் பின்னுமாகச் சென்ற போது ரயில் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் தரையில் அமர்ந்திருந்த எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. இடையில் பிள்ளைகளின் பசி, தாகம், தூக்கம் வேறு. (வண்டி செல்லும் திசைக்கு எதிர் திசையை நோக்கி கடும் வயிற்று வலியுடன் அமர்ந்த வண்ணம் நான்)

வழியில் இந்தியாவின் மிக உயரமான ரயில் நிலையம் உள்ள ஊரான Ghumஐயும் ரயில் கடந்து செல்கிறது. வழியில் பல பாலங்களைக் கடந்து சென்றது ரயில் வண்டி. (5 பெரிய, 500 சிறிய பாலங்கள் என்கிறார் கூகிள் ஐயனார்) வழியெங்கும் அடர்த்தியான சால், ஓக் போன்ற மரங்களுடன் கூடிய வனம் மற்றும் தேயிலைத் தோட்டங்களிடையே வளைந்து நெளிந்து சிறு பாலங்களின் மேல் சென்ற அந்தப் பயணம் மறக்க முடியாதது.

கீழே உள்ள linkஐ தவறாமல் அழுத்திப் பார்க்கவும். “ஆராதனா” என்ற ஹிந்தித் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் விடியோ இது. நேரில் பார்ப்பது போல உள்ளது.

பல சிரமங்கள் இருந்தாலும் பயண நேரக் காட்சிகள் அவைகளை மறக்க வைத்தன. குட்டீஸ் சமர்த்தாக உடன் பயணித்தார்கள். அவ்வப்போது கீழே இறங்க முடிந்ததால் பிரசினை இல்லை.
வித்தியாசமான ரயில் பயணம்.
ஊருக்குள் செல்வதற்குள் ஒரு சிறு அறிமுகம்.

டார்ஜீலிங் (மேற்கு வங்காளம்)

கிழக்கு இமாலய மலைகளின் மேல் கடல் மட்டத்திலிருந்து 6709 அடி உயரத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது மலை வாசஸ்தலமான டார்ஜீலிங். திபெத்திய மொழியில் Dorji – ling என்பதற்கு Place of thunderbolt எனப் பொருள். இந்திரனின் ஆயுதம் எனப் பொருள் கொள்ளவும். (நன்றி: கூகிள்) Mechi & Teesta நதிகளுக்கிடையே உள்ள இந்தச் சிறிய நகரம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரசித்தி பெற்றது.

மேற்கில் நேபாள், கிழக்கில் பூடான், வடக்கே இந்தியாவின் சிக்கிம், அதற்கும் மேலே சீனா, தென் கிழக்கில் பங்களாதேஷ் எனப் பல நாடுகளை எல்லையாகக் கொண்ட பகுதி இது. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா (28,209 அடி) இதன் வடக்குப் பகுதியில் மேகமூட்டம் இல்லாத நாட்களில் தெளிவாகத் தெரியும். பிரிட்டிஷாரின் கோடை வாசஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. நேபாள மொழி பேசும் ஷெர்பாக்களே இங்கு அதிகம் வசிக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சிக் காலம் தொடங்கி பல விதங்களிலும் அரசியல் தொடர்புடையது. கல்விக் கூடங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது இந்த நகரம். (Municipality)
இந்த நகரை மாலை 5.30 மணியளவில் ஊறி ஊறிச் சென்றடைந்தோம்.அந்த நேரத்தில் குளிரத் தொடங்கி இருந்தது. கெட்டியான குளிர் தாங்கக் கூடிய ஸ்வெட்டர் எடுத்துச் செல்லவில்லை. குறைந்த பட்சமாக குழந்தைகளுக்காவது உடலை மூடும் வண்ணம் ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அறியாத வயது அது(?!) கையில் ஒரு சால்வை மட்டுமே இருந்தது. குளிரில் நடைமேடையில் அனைவரும் காத்திருக்க மூவர் மட்டும் ஊருக்குள் தங்குவதற்கு இடம் தேட நடந்தே சென்றார்கள். நாங்கள் முன் பதிவு செய்திருந்த Holiday homeல் பதிவு செய்யாமலே விட்டு விட்டார்கள். லேசான மழை வேறு. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே காத்திருந்த பிறகு சென்றவர்கள் ஒரு ரூபாய்க்கு ஒரு பூரி என வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள். (கடுகு எண்ணையில் பொரித்தது) சிறுவர்களுக்கு பூரியைக் கொடுத்துப் பசியாற்றி விட்டுத் தங்கும் விடுதிக்குக் கிளம்பினோம்.

மாலை மங்கிய அந்த நேரத்தில் ஊரின் காட்சிகள் பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மலைப் பாங்கான அந்த ஊரில் மேடும் பள்ளமுமான சாலைகளில் நடந்து சென்ற போது முன் திங்களில் பெய்த மழையால் சாலைகளின் ஓரங்களில் ஈரம், எங்கும் பாசியின் மணம்(?!), சாலையோரக் கடைகளில் கடுகெண்ணெயில் பொரிக்கப்பட்டுக் கொண்டிருந்த பூரிகள் என மூக்கிற்கு ஒவ்வாத பலவற்றையும் அனுபவித்துக் கொண்டே சற்றே பள்ளமான இடத்தில் மரத்தாலான அறைகளை உடைய விடுதியைச் சென்றடைந்தோம். King size கட்டில்கள் இரண்டு இருந்த ஒரு அறையில் இரண்டு குடும்பங்கள் தங்கினோம். மற்றவர்களும் கிடைத்த அறைகளில் தங்கினார்கள். சென்ற சிறிது நேரத்தில் விடுதியில் மின்சாரம் இல்லை. அதனால் தண்ணீரும் வரவில்லை. (கொடுமை!!) லேசான குளிர் என்பதால் அவ்வளவு சிரமம் தெரியவில்லை. வெளியில் சென்று இரவு உணவருந்தி விட்டு வந்தோம்.
மறுநாள் அதிகாலை 3 மணியளவில் கிளம்பி சூரிய உதய நேரத்தில் கஞ்சன்ஜங்கா சிகரத்தைக் காணச் செல்வதாகத் திட்டம். எங்கள் குடும்பம் மட்டும் அதில் பங்கெடுக்க விரும்பவில்லை எனக் கூறி விட்டோம். மற்றவர்கள் குழந்தைகளுடன் சென்று, மேக மூட்டம் காரணமாக எதுவும் தெரியவில்லை எனக்கடும் குளிரில் நடுங்கிக் கொண்டே திரும்ப வந்து சேர்ந்தார்கள். விடுதிக் காப்பாளர்.முதல் நாளிரவே நாங்கள் விரும்பினால் காலையில் தேநீர் தயாரித்துத் தருவதாகக் கூறி இருந்தார். விடிந்ததும் அவரிடம் டார்ஜீலிங் தேநீரைப் பருக விரும்புவதாக கூறினோம். இதோ வருகிறேன் எனக் கூறிச் சென்றவர் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை. என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என அவரது சமையலறை போன்ற ஒரு இடத்திற்குச் சென்று பார்த்தோம். Pump stoveல் தேநீர் கொதித்துக் கொண்டே… இருந்தது. குளிர்ப் பிரதேசங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்பதால் அவ்வளவு நேரம். (உயர் காற்றழுத்தம் காரணமாக அரிசி, பருப்பு வேகவும் அதிக நேரம் தேவைப்படும்) ஒரு வழியாக தேநீரை வடித்து எங்களுக்கு எடுத்து வந்து தந்த போது அது ஆறிப் போயிருந்தது. (கத்திரி வெயிலில் கூட 110 டிகிரியில் காபி/தேநீர் குடிப்பவர்கள் நாம்)

காலை உணவாகக் கடுகு எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி, கருப்பு உப்பு (காலா நமக்) சேர்க்கப்பட்ட வித்தியாசமான மணத்துடன் கூடிய உருளைக்கிழங்கு மசாலை உண்டு முடித்து விட்டு ஜீப்பில் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். (கடுகு எண்ணெயில் பொரிக்கப்படும் போது வீசும் மூக்குக்கு ஒவ்வாத மணம் சாப்பிடும் போது இல்லை) Llyod Botanical garden பூங்காவில் மலர்கள் எதுவும் இருக்கவில்லை. சீசன் இல்லை என்றார்கள். இருப்பினும் பசுமையாக இருந்தது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் டார்ஜீலிங்கிலிருந்து தான் கிளம்பிச் சென்று Base campஐ அடைகிறார்கள். அவர்களுக்கான மலையேற்றப் பயிற்சி தரும் Himalayan Mountaineering Instituteஐக் காணச் சென்றோம். அங்கிருந்த அருங்காட்சியகத்தில் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட Tensing Norgay அவர்களின் வாழ்க்கை முறைகள், சாதனைகள், மலையேற உபயோகித்த பொருட்கள், ஆடைகள் என அனைத்தையும் காட்சிப் படுத்தி இருந்தார்கள். நாமும் அவருடன் பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது போலத் தோன்றியது. திரும்பும் வழியில் மிகப் பெரிய தேயிலை எஸ்டேட் ஒன்றிற்குச் சென்று சாலையோரத்தில் நின்று டார்ஜீலிங்கின் பாரம்பரிய உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கண்ணெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்ற தேயிலைச் செடிகளின் அணிவகுப்பைக் காண மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.(முதல் அனுபவம்)

அன்று மாலை ஜீப்பில் Gangtok கிளம்பினோம். நேபாள registration உடைய ஜீப்களும் மாருதி ஆம்னிகளும் டார்ஜீலிங் நகரில் நிறைய ஓடிக் கொண்டிருந்தன. வழியெங்கும் சாலையை ஒட்டியே சிறு கிராமங்கள், ஆங்காங்கே கேரட், முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அடுக்குத் தொடர் போன்ற இமய மலைத் தொடர்கள் பச்சைப் பசுமையுடன் அடர்ந்த மரங்களைக் கொண்ட வனங்களுடன் தென்பட்டன சிறிது தூரம் சென்றதும் பள்ளத்தில் (300 மீட்டராவது இருக்கும்) டீஸ்டா நதி சுழித்துக் கொண்டு ஓடியதைக் கண்டோம். இது போன்ற சுழல்கள் River rafting போன்ற நீர் விளையாட்டுக்களுக்கு உகந்தது என்பதால் வழியெங்கும் படகுகளில் மக்கள் நதியில் rafting செய்வதைக் கண்டோம். பல வண்ண புத்த மதப் பிரார்த்தனைக் கொடிகளைத் சாலையின் இரு பக்கத்திலும் தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டோம்.

அனுபவங்கள் தொடரும்…

PC: Google and our friends

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...