Monday, 17 July 2023

கள்ளிக் காட்டுக் கதைகள்


கடந்த அக்டோபர் 2022ல் மகன் வசிக்கும் வடஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் தலைநகரான Phoenix நகரில் ஏறக்குறைய நான்கு மாதங்கள் வசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இந்நகரில் நான் காண நேர்ந்த இடங்களையும் பெற்ற அனுபவங்களையும் உங்களுடன் பகிரும் நோக்கில் அமைந்துள்ளது இந்தப் பதிவு.

முதலில் இந்நகரைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பிப்போம்.

பாலைவனத்தின் நடுவில் அமைந்ததுள்ள இந்த ஊரின் தட்பவெப்ப நிலை.Hot desert climate எனப்படும் கடும் குளிரும் கடும் வெயிலும் தான் பனி இல்லாத ஊர் என்பதால் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நகரங்களில் இதுவும் ஒன்று.
இந்நகரத்தின் பொருளாதாரம் முன்பு "5Cs" எனப்படும் Copper, Cattle, Climate, Cotton, and Citrus ஆகியவைகளால் ஆனது. தற்சமயம் Carகளுடன் சேர்த்து 6Cs எனக் கொள்ளலாம் சமீப வருடங்களில் Waymo, Uber, General motors, Nicola Motor Company போன்ற பிரபல நிறுவங்கள் தங்கள் ஆராய்ச்சிக் கூடம் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவி ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் கார்களைப் (Driverless cars) பரிசோதனைகள் செய்கிறார்கள். யாருமற்ற பாலைவனப் பகுதியில் பரிசோதனைச் சாலைகள் அமைக்கப்பட்டு மேற்படி நிறுவனங்கள் ரகசியப் பரிசோதனைகள் செய்கின்றன. (See you in my 19th life என்னும் தென் கொரியத் தொடரில் இது போன்ற Automated car ஆராய்ச்சி மற்றும் அவைகளை ஓட்டிப் பார்க்கும் பரிசோதனை சாலைகளை எப்படி அமைத்துப் பரிசோதிக்கிறார்கள் எனக் கண்டேன்-Netflix)

Waymo robotaxi இந்நகரில் பிரபலமான ஒன்று. வடஅமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை உபயோகிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். Walmart கூட driverless truckகளை உபயோகிக்கிறன. சாலையில் taxi மற்றும் truckஐக் கண்டேன். புகைப்படம் எடுக்க ஏதுவான வேகத்தில் எங்கள் கார் செல்லவில்லை. மற்றவர்கள் 60 மைல் வேகத்தில் செல்ல இவைகள் மணிக்கு 40 மைல் வேகத்தில் செல்வதாகப் படித்தேன். (இந்தப் பதிவினை நான் வெளியிடும் சமயத்தில் வடஅமெரிக்கா பறக்கும் கார்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்தியில் கண்டேன்.)


மற்றொரு முக்கியத் தொழில் semiconductor உற்பத்தி. 1949 ஆம் ஆண்டு முதல் semiconductor chip உற்பத்தியில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. (Leader of semi conductors) இந்நகரில் ஒவ்வொரு வருடமும் 9000 மாணவர்கள் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி அடைகிறார்கள்.

Phoenix நகரம் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பிரசித்தி பெற்றது. புகழ் பெற்ற University of Phoenix (Phoenix), Arizona University (Tempe) என்னும் பகுதியில் உள்ளது. பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் மக்களே அதிகம் உள்ள ஊர் இது. ஸ்பானிஷ் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் இங்கே வசிக்கிறார்கள். மிகச் சில தெற்காசியர்களே கண்ணில் தென்பட்டனர்.

கொரோனா காலத்தில் கலிபோர்னியாவிலிருந்து பலரும் இம்மாநிலத்திற்கு (குறிப்பாக இந்த நகரத்திற்கு) குடி பெயர்ந்துள்ளார்கள். காரணம் அங்கே cost of living (விலைவாசி) அதிகம். அங்கே தரும் வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அரிசோனாவில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட தனி வீடே வாங்க முடியும் என்பது தான். மக்கள் இங்கே அதிகம் குடிபெயர்வதால் தற்சமயம் இந்நகரிலும் சமீப வருடங்களில் விலைவாசி பல மடங்கு கூடி விட்டது. Real estate மதிப்பும் கூடி விட்டது.


இந்நகருக்கு Salt, Gila மற்றும் Colorado நதிகளிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது. கூடுதலாக நகருக்குள் கால்வாய்கள் அமைக்கப்பட்டுத் தண்ணீர் தடையில்லாமல் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி (2023) மாதத்தில் இந்நகரின் 500 தனி வீடுகள் கொண்ட ஒரு பகுதியில் குடிதண்ணீர் வழங்குதல் நிறுத்தப்பட்டுக் குறைந்த அளவு நீரையே அவர்கள் உபயோகிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டது. அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகப் பேட்டி வீடியோ வெளியிட்டனர் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு நிகழ்வு இது.

மேற்கண்ட தகவல்கள் யாவையும் சில தினங்களுக்கு முன்பு நான் கண்ட ஒரு டாக்குமென்டரியில் அரிசோனா மாநில கவர்னர் கூறியவைகளே. (அவரும் கூகுளைப் பார்த்துத் தான் கூறி இருக்கிறார் 😊)

RIPARIAN RESERVE AT WATER RANCH, GILBERT

மேலை நாடுகளில் Holidays என்றழைக்கப்படும் Thanks giving day தொடங்கி புத்தாண்டு முடிய உள்ள நாட்களில் வீடுகளிலும் பொது இடங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்வார்கள் என முன்பே பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு வார இறுதியில் வீட்டிற்கு அருகில் உள்ள Riparian reserve at water ranch, Gilbert என்ற இடத்திற்கு $5 சீட்டு வாங்கி கொண்டு இரவில் விளக்கு அலங்காரங்களைக் கண்டு வந்தோம். ஒரு ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள நடைபாதையின் இருபக்கமும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள். நடந்து சென்று வேடிக்கை பார்த்தோம்.


JAPANESE FRIENDSHIP GARDEN OF PHOENIX & TEMPE TOWN LAKE

ஒரு வார இறுதியில் Japanese friendship garden of Phoenix என்னும் நகரின் முக்கியமான ஒரு இடத்திற்குச் சென்றோம். இதற்கும் அனுமதிக் கட்டணம் உண்டு($10). இது Phoenix மற்றும் அதன் sister city என அழைக்கப்படும் Himeji, Japan உடன் இணைந்து கலை கலாச்சாரம் பண்பாடு அரசியல் எனப் பலவற்றையும் வெளிப்படுத்தும் வண்ணம் இந்தத் தோட்டத்தை நிறுவியுள்ளனர் 3.5 ஏக்கர் நிலத்தில் அமைந்த இதை ஜப்பானிலிருந்து தோட்டக்கலை நிபுணர்கள் வந்து அமைத்திருக்கிறார்கள். 1500 டன் எடை கொண்ட கையினால் பொறுக்கப் பட்ட கற்களைக் கொண்டு பாலங்கள், சிற்றோடை, செயற்கை நீரோடை, நடைபாதைகள் என அமைக்கப்பட்டுள்ளது பாலைவனத்திற்கு ஏற்ற வகையில் 50 வகையான தாவரங்களை ஜப்பானிலிருந்து கொண்டு வந்து வளர்க்கிறார்கள். இங்குள்ள Tea house பிரபலமானது. வாடகைக்கு விடுகிறார்கள். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. வேகமாக நடந்தால் 10 மெதுவாக நடந்தால் 20 நிமிட நேரத்தில் கடக்கக் கூடிய சிறிய தோட்டம். பச்சைப் பசேலென உள்ளது.

ஜப்பானிய வழிகாட்டி ஒருவர் ஐம்புலன்களுக்கும் தீனி போடும் வகையில் இந்தத் தோட்டம் அமைந்துள்ளது என எங்களுக்கு விளக்கினார். உதாரணமாக சற்றுத் தொலைவிலிருந்து நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்கிறது அருகில் வந்தால் பார்க்க முடிகிறது. செடிகளின் இலைகள் வெவ்வேறு பச்சை நிறத்தில் உள்ளன. See... Light green to dark green. Sunlight coming. That tree no leaf. (பனிக் காலம் என்பதால் மரத்தில் இலைகள் இல்லை, இலையின் நிறத்தில் மாற்றங்களும் அதனால் தான்) வழிகாட்டி 20 நிமிடங்களுக்கு இது போல் கூறிக் கொண்டே வந்தார்.

மறுபக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம். நகரின் மையத்தில் உள்ளதால் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. அவர்களின் balconyயில் விலை உயர்ந்த சோபாக்கள் தென்பட்டன.(யாரும் அமர்ந்திருக்கவில்லை)

அதே தினத்தில் அடுத்து நாங்கள் சென்ற இடம் Tempe town lake. Salt நதியின் நீரை அணைகட்டித் தடுத்து அதில் மேலும் நீர் சேர்த்து நகரின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மைல் நீளமுள்ள செயற்கை ஏரி. நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தடுப்பதற்காகக் கட்டப்பட்டது இந்த ஏரி. (பீனிக்ஸ் நகரின் வருடாந்திர சராசரி மழையளவு ஐந்து சென்டிமீட்டர்களே 😊) https://www.tempe.gov/government/community-services/tempe-town-lake

சுற்றிலும் மக்கள் walking, jogging, cycling செய்ய ஏற்ற வகையில் பூங்காவுடன் கூடிய நடை பாதை. நாமே ஓட்டிச் செல்லும் வகைப் படகு மற்றும் பாட்டரி சைக்கிளை App மூலம் பணம் செலுத்தி ஓட்டினோம். Tempe river walk என இந்த ஊர் மக்களால் கொண்டாடப்படும் சுற்றுலாத் தலம் இது. இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதன் மற்றொரு சிறப்பு இந்த ஏரியின் மிக அருகில் சர்வதேச விமான நிலையம் உள்ளதால் 10 வினாடிகளுக்கு ஒரு விமானம் ஏறி, இறங்கி கொண்டே இருக்கிறது. கண்கொள்ளாக் காட்சி எடுத்துச் சென்ற மதிய உணவை உண்டு முடித்து விட்டு அங்கிருந்து அவதார் 2 திரைப்படம் பார்த்து விட்டு வீடு வந்தோம். (அது பற்றித் தனிப் பதிவு வெளியிட்டுள்ளேன்)

Phoenix downtown பகுதியைக் கடந்து மேற்கண்ட இடங்களுக்கு சென்ற போது வீதிகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டேன் (Cactus road, Camelback Road, Thunderbird road, Raintree road, Talking stick way, Indian bend, Price road, Baseline road, Lemontree road) வழியெங்கும் Road accident lawyersகளின் விளம்பரப் பலகைகள். Rafi மற்றும் Husband and Wife போன்ற சட்ட நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் (Digital display boards) முக்கிய சாலைகளிலும் சட்ட நிறுவனங்களின் பேருந்துகளிலும் தென்பட்டன. சாலை விதிகள் இந்நகரில் கடுமையாகப் பின்பற்றப்படாததே இது போன்ற சட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறப்பட்டது நாங்கள் அங்கே இருந்த தினங்களில் எந்த நேரத்தில் பயணம் செய்தாலும் சாலையில் ஒரு விபத்தையாவது காண நேர்ந்தது.

மற்றொரு வார இறுதியில் வீட்டிலிருந்து ஏறக்குறைய 40 மைல் தொலைவில் (35-40 நிமிட கார் பயணம்) அமைந்துள்ள OM INDIAN BISTRO என்னும் உணவு விடுதிக்குப் பகல் உணவிற்குச் சென்றோம். இந்தியாவில் உண்பது போன்ற தரத்தில் மிகச் சுவையாக இருந்தது. செல்லும் வழியெங்கும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தென்பட்டன.

டிசம்பர் விடுமுறைக்குயின் கடைசி வாரத்தில் மகளது குடும்பம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து திடீரென யோசித்து ஒரு நாள் மாலை காரில் Phoenix வருகிறோம் எனக் கூறினார்கள்.

மகள் குடும்பம் வந்து சேர்ந்ததும் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள Flagstaff என்னும் பனிப் பொழிவு உள்ள இடத்திற்குச் செல்லலாமா, Grand Canyon செல்லலாமா என விவாதம் நீண்டு கொண்டே போனது

பனிப்பொழிவு உள்ள இடங்களுக்குச் செல்ல நான்கு சக்கரங்களும் break பிடிக்கும் வண்ணம் உள்ள (4WD - Four Wheel Drive) tyreகளில் சங்கிலி கட்டி ஓட்டிச் செல்லக் கூடிய வகை காரை வாடகைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். ஆனால் அந்த ஊரில் அதிகப் பனி காரணமாக விபத்து ஏற்பட்டு இறப்புக்கள் நேர்ந்ததாக அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு செய்யப்பட்டு முதலில் Phoenix நகருக்குள் சுற்றிப் பார்ப்பது என முடிவானது.


YOGURTLAND

டிசம்பர் 27ஆம் தேதி மாலை Yogurtland சென்று உறைநிலையில் பலவித flavourகளில் விற்கப்படும் தயிரை வாங்கி உண்டு எங்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் வைபவத்தை ஆரம்பித்தோம். (கலிபோர்னியாவிலும் Yogurtland செல்வதுண்டு) இங்கே தயிரை விதம் விதமான flavour களில் ஐஸ்கிரீம் போல உறைய வைத்து வரிசையாக வைத்திருப்பார்கள். என்னென்ன flavour வேண்டுமோ எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்துக் கொண்டு topping செய்து கொள்ள வைக்கப்பட்டிருக்கும் dry fruits, chocalate chips, சீரக மிட்டாய் இன்னபிறவற்றில் தேவையானதை மேலே தூவி எடுத்துக் கொண்டு எடை போடும் இடத்திற்குச் செல்ல வேண்டும் எடைக்குத் தகுந்தவாறு கூறப்படும் விலையைத் தந்து விட்டு உண்ண ஆரம்பிக்க வேண்டியது தான். கடும் குளிரில் ஜில்லென்ற ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்பது வாய்ப்பாட்டு பயிலும் சிறுவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சலுகை என்பதால் பேரன்கள் மகிழ்ச்சியுடன் உண்டார்கள்.


TOPGOLF

அடுத்ததாக Gilbert என்னும் பகுதியில் உள்ள Topgolf எனப்படும் Indoor Golf Complex சென்றோம்.(Topgolf is the premier golf entertainment complex where the competition of sport meets your favorite local hangout. Challenge your friends and family to addictive point-scoring golf games that anyone can play year-round) செல்லும் வழியெங்கும் வீதிகளில் விளக்கு அலங்காரங்கள் தென்பட்டன. அரங்கம் நுழைவாயில் தொடங்கி வண்ண விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடன் குழுவாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு பேர் உள்ள குழுவாக நம் பெயரைப் பதிவு செய்த சிறிது நேரத்தில் நமக்கான Bay ஒதுக்கப்பட்டு அழைப்பு வரும் வரிசையாக உயரமான இடத்தில் ஏறக்குறைய 25 Bayக்கள். ஒவ்வொருவராகப் போய் பந்தை அடிக்கவேண்டும் பந்து எவ்வளவு தொலைவு செல்கிறது, என்ன வேகத்தில் அடிக்கப் பட்டது போன்ற விவரங்கள் மற்றும் அதற்குண்டான points திரையில் தெரியும். அடிக்கப்படும் பந்துகள் தரையில் சென்று விழ விழ ஒரு சிறிய பந்து பொறுக்கும் truck பொறுக்கிக் கொண்டே வந்து குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க அவைகள் மேலே வந்து சேர்கின்றன.

எங்களுக்கான Bayயில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தபடி Chips, French fries தொட்டுக்கொள்ள Salsa, Hummus என சாப்பிட்டுக் கொண்டே ஒவ்வொருவராக மாறி மாறி ஒரு மணி நேரம் விளையாடினோம். என் முறை இல்லாத நேரத்தில் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் ஏறி இறங்கிய விமானங்களை வேடிக்கை பார்த்தேன். (Hummus - கடலைப்பருப்பு, எள், பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துச் செய்த சட்னி Salsa - தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, பச்சை மிளகாய் போன்றவற்றால் செய்த சட்னி)
குடும்பத்தினர் அனைவரும் பங்கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த Top Golf .

ROOSEVELT DAM
மற்றொரு நாள் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் Roosevelt damஐக் காண மகள் குடும்பத்துடன் கையில் உணவு கட்டி எடுத்துக் கொண்டு நானும் என் கணவரும் சென்றோம். மகன் வசிக்கும் Chandlerலிருந்து சிறிது தூரத்திலேயே பாலைவனம் ஆரம்பம். குட்டைக் கள்ளிகள், உயரமான கள்ளிகள், பலவிதமான மரங்கள் எனப் பகுதிவாரியாகத் தென்பட்டன. நாம் நினைப்பது போல பாலைவனம் எங்கும் எல்லா விதமான கள்ளிகளும் வளர்வதில்லை.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு உணவு இடைவேளை. கள்ளிகளும் கருவேல முட்செடிகளும் இருந்த ஓரிடத்தில் நின்று உணவை முடித்துக் கொண்டு சற்று நேரம் அங்கே உலாவி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் அணையை நோக்கிக் கிளம்பினோம்.

பல மைல் தொலைவுக்கு ஊரே கிடையாது. Sunflower எனப் பெயர்ப் பலகை காட்டிய ஊரில் நான்கு சிறு வீடு/கடை போன்ற அமைப்பும் நம் ஊர் puncture கடை போல ஒன்றும் இருந்தது. மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு பெரிய ஏரி சாலையை ஒட்டித் தென்பட்டது. அதனைத் தாண்டி அணையை அடைய ஒரு பாலம். இந்த ஏரியின் பெயர் Theodore Roosevelt Lake.

"Longest two-lane, single-span, steel-arch bridge in North America" என்ற சிறப்பை உடைய இந்தப் பாலத்தின் பெயர் Theodore Roosevelt Lake Bridge. Theodore Roosevelt ஏரிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் கலிபோர்னியாவின் Golden Gate bridge, நியூயார்க்கின் Brooklyn bridge போலப் பிரசித்தமானது என்கிறது கூகிள். இரண்டு Ford Model-T automobiles ஒரே நேரத்தில் செல்லும் வகையில் இரண்டு lane பாலமாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட இதில் தற்போது அனைத்து வகை வாகனங்களும் செல்லும் வகையில் One way பாலமாகச் செயல்படுகிறது.

இந்த அணை TONTO National Forestல் உள்ள Tonto creek பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதி வித்தியாசமான காட்சிகளைக் கொண்டுள்ளது. பாலைவனம், canyons, அடர்ந்த மரங்கள், பல்வெளிகள் எனப் பலவற்றையும் கொண்டுள்ளது. வழியெங்கும் வித்தியாசமான vegetation கண்ணில் தென்பட்டது என முன்பே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். பாலைவனத்தின் நடுவில் பசுமையோ பசுமை என்பது நினைத்துப் பார்க்க இயலாத ஒரு காட்சி.

இந்த 357 அடி உயரமுள்ள அணை பீனிக்ஸ் நகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள Salt நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டு Theodore Roosevelt Lake என்னும் ஏரியில் அமைந்துள்ளது. குடிநீர், வெள்ளத் தடுப்பு மற்றும் மின்சார உற்பத்தி (36 மெகாவாட்) ஆகியவையே இந்த அணையின் பயன்கள். இது கற்களாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட உயரமான அணைகளுள் ஒன்று (masonry dam) என்கிறது கூகிள்.(உலகிலேயே இது போல கட்டப்பட்ட உயரமான அணை இந்தியாவின் தெலிங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்ஜுன சாகர் அணை)

பலவித எதிர்பார்ப்புக்களுடன் அங்கே சென்ற போது உருப்படியாக எதுவும் இல்லை அணைக்கட்டு தான் இருக்கிறது அணைக்கட்டு என்பது நீரை திறந்து விடும் வகையில் இடையிடையே கதவுகளுடன் அமையப் பெற்ற ஒரு தடுப்புச் சுவர் என்பதாகத் தான் நான் அறிவேன் அந்த இலக்கணத்துக்குட்பட்டதாக இருக்கவில்லை இந்த அணைக்கட்டு அதில் தண்ணீர் மிகச் சிறிதளவே இருந்தது. எங்களைத் தவிர ஒரே ஒரு பார்வையாளர் (பெண்மணி) வந்து சில நிமிடங்கள் பார்த்து விட்டு திரும்பினார். அவரும் எங்களைப் போல எதையோ எதிர்பார்த்து வந்திருப்பார் போல)

சுற்றிச் சுற்றிப் பார்த்தோம். பாலத்தைத் தவிரப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. பேரன்களை கட்டாயமாக காரிலிருந்து இறங்கச் சொல்லி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

சில நிமிடங்கள் அங்கே இருந்த விவரப் பலகைகளைப் படித்து விட்டு நாங்களும் கிளம்பினோம்.
திரும்பி வரும் போது மாற்று வழியில் வந்தோம். கடல் மட்டத்தை விட உயரமான பகுதியில் இந்த அணை அமைந்திருப்பதால் திரும்பி வரும் வழியில் முதலில் பரந்த ஏரி, அதனை ஒட்டிய குடியிருப்புக்கள், உல்லாசப் படகுகள் (சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் போலும்) என்பதைத் தொடர்ந்து canyon வகை மலைத் தொடர்களை வழியெங்கும் சில மைல்களுக்குக் கண்டோம். அவைகள் எரிமலை வெடித்து ஏற்பட்ட பாறைகள். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அரிப்பினால் படிப்படியாக மடிப்பு மடிப்பாக சிவப்பாக இருந்தன.

வழியில் Miami என்னும் ஊர் ஒன்றே பெரிய ஊராக இருந்தது. ஆனால் அமெரிக்க standard படி ஒரு Starbucks கூட இல்லை. ஆக இது சற்றே பெரிய கிராமம்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்னும் வழக்கு போல பாலைவனத்தில் ஒரு வனம், அதில் ஒரு நதி, அதற்கு ஒரு அணை என்பதெல்லாம் மிகப் பெரிய தகவலாகக் கூறப்பட்டு மக்கள் சென்று பார்க்கிறார்கள்.

அதற்கடுத்த இரவு மீண்டும் Tempe lake river walk சென்றோம். இரவு நேரக் காட்சிகள் கண்ணைப் பறித்தன.

முன்பே இந்த ஏரியைப் பற்றி விவரித்துள்ளேன் என்பதால் தற்சமயம் எதுவும் விளக்கப் போவதில்லை. ஏறி இறங்கும் விமானங்களின் பிரதிபலிப்பு ஏரியில் தெரிவதை வேடிக்கை பார்ப்பதில் நேரம் போனதே தெரியவில்லை. 

ஒரு நாள் பீனிக்ஸ் நகரிலிருந்து ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Oracle என்னும் ஊரில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள மிகப் பெரிய ஆராய்ச்சிக் கூடமான Biosphere2வைப் பார்க்கக் கிளம்பினோம். இந்தப் பயண நேரத்தில் வழியெங்கும் பச்சைப் பசேலென்ற வயல்களைக் காண முடிந்தது. 5Cல் ஒன்றான பருத்தி இந்தப் பகுதியில் விளைகிறது. வாய்க்கால் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி செய்யப் பட்டிருந்தது.

பூமி Biospehere 1; அதை போலவே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிரினங்களை ஓரிடத்தில் வைத்து, மனிதர்களும் அவற்றுடன் வாழ்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சிக் கூடம் தான் இந்த Biosphere2. Oracle என்னும் ஊருக்கு அருகிலிருக்கும் Tucson என்னும் அரிசோனாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் அமைந்துள்ள University of Arizonaவின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையம் இது.(Closed ecological system)

Ecological balance என்பதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். புல்-> மாடு-> வன விலங்குகள்/ மனிதன்-> நுண்ணுயிரிகள்-> பூச்சி புழுக்கள்-> புல் ..இப்படி ஒரு வட்டமே ecological balance.
பூமியில் nuclear war ஏற்பட்டால் எப்படி தப்பித்து மீண்டும் உயிரினங்களை உருவாக்குவது மற்றும் செவ்வாய் போன்ற வேற்றுக் கிரகங்கள் மற்றும் வான்வெளியில் வாழ்வது எப்படி என்பது பற்றியும் அறிய ஆவலான மிகப் பெரிய பணக்காரர்/ஆராய்ச்சியாளர் ஒருவருக்குத் தோன்றியதன் விளைவே இந்த Biosphere 2. 1987-1991 முடிய உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் (கனவின்) விலை $150 மில்லியன் டாலர்கள்.

மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு:


அதை விட விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு:

The Human Experiment: Two Years and Twenty Minutes Inside Biosphere 2 by Jane Poynter

இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் Biomes எனப்படும் கூடு போன்ற பகுதிகளை வெவ்வேறு கண்டங்களின் தன்மைகள் உள்ள செடிகள் விலங்குகளுடன் சேர்த்து அமைத்துள்ளார்கள். மக்கள் வசிக்கும் பகுதியும் இங்கே உண்டு.
(1.Rainforest, 2.ocean with a coral reef, 3. mangrove wetlands, 4.savannah grassland, 5.fog desert, and 6 & 7 two anthropogenic biomes: an agricultural system and a human habitat with living spaces, laboratories and workshops. Below ground was an extensive part of the technical infrastructure).

Sep 26, 1991 - Sep 26, 1993 எட்டு பேர் கொண்ட குழு ஒன்று இந்த ஆராய்ச்சிக் கூடத்துக்குள் இரண்டு வருடங்கள் தங்கி அவர்களே பயிர் செய்த உணவுகளை சமைத்து உண்டு, ஆராய்ச்சி செய்தார்கள். High calorie low fat உணவு முறையைப் பின்பற்றியதில் ஆரோக்கியமாகவே இருந்தார்கள் என அறிகிறோம்.

உள்ளே நுழைந்ததுமே அங்கே தங்கி ஆராய்ச்சி செய்தவர்கள் பதிவு செய்த தினசரிப் பதிவுகளைக் காட்சிப் படுத்தி வைத்துள்ளதைக் கண்டோம். நம்முடைய கைபேசியில் அவர்களுடைய App மூலம் ஒவ்வொரு இடத்தைப் பற்றிய வர்ணனையையும் கேட்டபடியே சுற்றிப் பார்க்க வசதி இருந்ததால், அதைக் கேட்ட படியே ஒவ்வொரு ஒவ்வொரு Biome ஆகச் சுற்றிப் பார்த்தோம் தனித்தன்மையுடன் கூடிய கண்ணாடி, இரும்பு போன்றவற்றால் சூரிய ஒளியைத் தடையில்லாமல் உள்ளே செலுத்தும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. இரண்டு வருடமும் வெளியில் செல்ல முடியாது என்பதால் முழுவதுமாக அடைக்கப்பட்ட இடம் இது.
செடி கொடிகள் வெளிவிடும் ஆக்சிஜனை மக்கள் சுவாசித்து அவர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை பயிர்கள் ஏற்க வேண்டும். Ecological balance அடிப்படையில் செடி கொடி மரங்கள் பூச்சிகள் விலங்குகள் போன்றவைகளும் உள்ளே வசித்தன.

ஆராய்ச்சியாளர்களுக்கு (நான்கு ஆண்கள் , நான்கு பெண்கள்)தனித்தனி அறைகள், சமையலறை, நூலகம், அலுவலகம், ஆராய்ச்சி அறை, கடற்கரை, மலை என எல்லாமே உள்ளேயே இருக்கின்றன. குளிர் நீர், வெந்நீர், குளிர்/சுடு காற்று, மின்சாரம் ஆகியவற்றிற்கு அங்கேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (தற்சமயமாக இருந்தால் Solar panel கள் அமைந்தது மின்சாரம் எடுத்திருப்பார்கள்) கடலில் செயற்கையாக அலைகள் வரும்.பவழங்களை வளர்த்து இன்றளவும் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

முக்கியமாக காற்றழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம் என்பதால் Lung என்னும் பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள். அழுத்தம் குறைந்தால் குடை போன்ற அமைப்பு கீழே இறங்கும் அளவை வைத்துக் கணக்கிட்டார்கள். (தற்சமயம் கதவைத் திறக்கும் வசதி உண்டே)

ஆராய்ச்சி சமயத்தில் சில செடி கொடிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொண்டதில் மக்களால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதால் நீர்ம நிலையில் ஆக்சிஜனை வெளியிலிருந்து உள்ளே செலுத்த வேண்டி இருந்ததாம். எட்டு பேருக்கு வேண்டிய உணவினை அவர்களால் 83% மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்ததால் முதல் வருடத்தில் அனைவர்க்கும் எப்போதும் பசித்துக் கொண்டே இருந்ததாம்.

இந்த ஆராய்ச்சி தோல்வியில் முடிந்தது என்றாலும் உலகளவில் மிகச் சிறந்த ஒன்று என அறியப் படுகிறது. ஆரம்பத்தில் கேலிக்குள்ளான இந்த ஆராய்ச்சி, அவர்களின் பரிசோதனை முடிவுகளைக் கண்டதும் NASA போன்ற முக்கிய நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராட்டைப் பெற்றது. தனியாரால் ஆரம்பிக்கப் பட்ட இந்த ஆராய்ச்சிக் கூடம் பல்வேறு காரணங்களால் தற்சமயம் University of Arizona வின் பொறுப்பில் ஆராய்ச்சி மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கும் விடப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சுற்றுலா வழிகாட்டி மீண்டும் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விவரமாகக் கூறினார். குறிப்பாக Lung என்னும் காற்றழுத்தக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மிக விவரமாக அதன் செயல் முறைகளைக் காட்டினார். நம் நுரையீரல் போன்ற அமைப்பில் உள்ளது இந்தப் பகுதி.

மொத்தத்தில் பூமியை, அதன் நீர்நிலைகளை, உயிரினங்களை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்னும் வகையில் ஆராய்ச்சி செய்கிறார்கள் தற்சமயம்.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் soveneir கடையில் கண்ட Jane Poynter எழுதிய புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தேன்.

ஆசிரியர் Biosphere 2 வில் வாழ பயிற்சி எப்படித் தரப்பட்டது என்று விளக்குகிறார்.

ஏற்கனவே அந்த இடத்தை நேரில் கண்டதால் புத்தகத்தைப் படிக்கும் போது நாமே அங்கு வசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

Oracle மற்றும் Tucson (டூசான்) பகுதிகளில் கூட சென்னைக்கு மிக அருகில் அரக்கோணத்தில் ஒரு கிரௌண்ட் நிலம் விற்பனைக்கு வருகிறது என்பது போன்ற விளம்பரங்கள் கண்ணில் தென்பட்டன. (Tucson பெரிய நகரம்) Biosphere 2 அமைந்திருக்கும் பகுதி கடும் பாலைவனம் என்றாலும் real estate தொழில் அமோகமாக உள்ளது. அங்கும் பல வீடுகளைக் கண்டேன்.

திரும்பி வரும் வழியில் Maricopa county யில் இந்து ஆகம விதிமுறைகளின் படி கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மஹாகணபதி கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டோம். இந்தியக் கோவில்களின் வடிவமைப்பில் உள்ள இந்தக் கோவில் பாலைவனத்தின் நடுவில் (பீனிக்ஸ் நகரிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ளது. கோவிலுக்கு அருகில் ஒரு சிற்றூர் தவிர மனித நடமாட்டமே இல்லை. இருப்பினும் இந்திய மக்கள் பூஜைகள் விழாக்கள் என இங்கே வந்து கொண்டாடிச் சிறப்பிக்கிறார்கள்.
சூரியன் மறையும் நேரத்தில் இந்தப் பகுதியைக் காண அற்புதமாக இருந்தது. பாலைவன சூரிய உதயமும் மறைவும் எப்போதும் கண்கொள்ளாக் காட்சிதான். மேகங்களின் அமைப்புக்களும் வித்தியாசமாக அரிசோனாவில் காணப்பட்டன.

ஸ்ரீ வேங்கட கிருஷ்ண க்ஷேத்ர கோவில் என்னும் பெயருடைய இந்துக் கோவில் Tempe என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கும் அனைத்து விதமான பூஜைகளும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. போகிப் பண்டிகையன்று காலை மகனுடன் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தக் கோவிலில் ஆளுயர வெங்கடாசலபதி, லட்சுமி, சிவன், கணபதியின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

நாங்கள் சென்ற சமயத்தில் ஒரு நடனப் பள்ளியின் ஆசிரியையும் மாணவர்களும் திருப்பாவைப் பாசுரங்களுக்கு விளக்கம் கூறி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். பிரசித்தி பெற்ற Arizona State University Tempe யில் தான் உள்ளது என்பதால் வழியெங்கும் பல மைல்களுக்கு மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் அபார்ட்மெண்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

மற்றொரு முறை எங்கள் நண்பரின் மகளுடன் Gilbert Regional Park செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. 272 ஏக்கர் பரப்பளவுள்ளது இந்தப் பூங்கா.


மக்கட்தொகை குறைவான பகுதி என்பதால் பீனிக்ஸ் நகரப் பூங்காக்கள் மிக அதிகப் பரப்பளவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. ஒரு ஏரி, ஒரு சிறு குன்று, வயதுக்கு ஏற்றாற்போல் அமைக்கப் பட்டுள்ள விளையாட்டுச் சாதனங்கள், ஊஞ்சல்கள், mini zipline Amphitheatre, restroom பகுதி, water splash பகுதி, நடைப்பயிற்சி செய்யும் பாதைகள் என இந்தப் பூங்கா அமைந்துள்ளது. Amphitheatreல் பொது மக்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களை நடத்த அனுமதி உண்டு. நாங்கள் சென்ற தினம் எங்கள் நண்பரின் மகளது நடனப் பள்ளியின் பயிற்சி வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்நகரம் கடுமையான கோடைகாலத்தை கொண்டது என்பதால் பூங்காக்களில் குளிர் முடிந்து வசந்த காலம் ஆரம்பித்ததுமே சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் water splash எனப்படும் நீரை உயரத்திலிருந்து வாரி இறைக்கும் வசதியை செய்திருக்கிறார்கள். தண்ணீரில் நனைவது அனைவருக்குமே பிடித்த செயல் இல்லையா?

ஈஸ்டர் தினத்தன்று Phoenix premium outlets என்னும் காலணிகளுக்கான கடைகள் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தது. விதம் விதமான Designer brands செருப்புக்கள் மற்றும் ஷூக்கள் இங்கே விற்பனை செய்யப் படுகின்றன. கணிசமான discount இங்கே கிடைப்பது தான் இதன் சிறப்பு. மகனுடன் சில பல கடைகள் ஏறி இறங்கி என் நடைப்பயிற்சிக்கான Nike ஷூக்களை வாங்கி வந்தோம்.

இந்நகரில் தங்கியிருந்த நாட்களில் விதம் விதமான மரங்கள் மற்றும் செடிகளைக் காண நேர்ந்தது. இலையுதிர் காலத்தில் சில வகைப் பூக்கள், கடும் குளிர் காலத்தில் சில வகைப் பூக்கள், பொங்கல் பண்டிகை முடிந்த சில தினங்களில் அங்கங்கே கள்ளிச் செடிகளும் மொட்டு விட்டுப் பூக்க ஆரம்பித்தன. ஏப்ரல் மாதம் வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் மரங்கள் அனைத்திலும் இலைகள் துளிர் விட்டு பச்சைப் பசேலென்ற காட்சி எங்கும் தென்படத் தொடங்கியது ஒரு மரத்தில் இலையே தெரியாத வண்ணம் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. Bougainvillea
பீனிக்ஸ் நகரம் பூங்கா நகரம் இல்லையென்றாலும் ஆங்காங்கே பசுமையை ஏற்படுத்திக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மாற்றியுள்ளார்கள். விமான நிலையத்தின் வெளிப்புறம் தொடங்கி அழகுக்காக மிக உயரமான கள்ளிச்செடிகளை நட்டு வைத்துள்ளார்கள். இளம் பச்சை நிற ஊசி இலைகளை உடைய மரங்களை சாலைகளின் நடுவேயும் ஓரத்திலும் நட்டு Boulevard என்னும் பெயருக்குப் பொருள் சேர்த்துள்ளார்கள். என அழைக்கப்படும் (காகிதப் பூ என சிறுவயதில் கூறுவோம்) பூக்கள் எல்லாப் பருவங்களிலும் பூத்திருந்தது. சாலையோரங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கியது எனக் கூறலாம். அரளிப் பூக்களும் பூத்திருந்தன.

நகரின் சாலைகள் மிக நீளமாக (ஒரு சாலையே குறைந்தபட்சம் பத்து மைல்) உள்ளன. சதுரமான வடிவமைப்பில் உள்ளன. நூறு வருடங்களுக்கு முன் அமைக்கப் பெற்ற நகரம் என்பதால் Town planning நன்றாக உள்ளது. (நானும் என் கணவரும் நடந்து சென்று பல இடங்களையும் explore செய்தோம்) ஆங்காங்கே முக்கிய சாலைகளுக்கு நடுவில் மிகப் பெரிய farms உள்ளன. அங்கே சென்று strawberry picking போன்ற செயல்களை செய்ய சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்து நூலகங்களில் அறிவித்திருந்தார்கள். சிறு குன்றுகள் நகரெங்கும் காரில் பயணிக்கும் போது தென்படுகின்றன.

ஆங்காங்கே ஏரிகளை அமைத்து அதன் இரு கரையிலும் வீடுகளைக் கட்டி உள்ளார்கள். குட்டி வெனிஸ் போல சிறு படகுகளுடன் அழகாக உள்ளது நகரின் சில பகுதிகள். Holidays சமயத்தில் வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் ஜொலித்ததைக் கண்டபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த ஊரில் ஆங்காங்கே தென்பட்ட ஈச்ச மரங்களுக்கும் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. 😊

புது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்கி ஊரின் தன்மையை அனுபவிக்கும் என் ஆர்வத்திற்கு தீனி போட்டது இந்த ஊர் என்று தாராளமாகக் கூற முடியும்.

பாலைவனச் சோலை.

பார்த்தேன் ரசித்தேன். 

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...