Thursday, 15 September 2022

ஆஸ்திரேலியப் பயணம் (பகுதி – 2)

18.04.2018 & 19.04.2018

View of Melbourne City from Albert park

முதல் நாள் முழுவதும் விமான நிலையத்திலிருந்து ஓய்வெடுக்காமல் மெல்போர்ன் நகரை சுற்றி பார்த்த அசதி காரணமாக இரவு நன்கு உறங்கினோம். காலை 6.30 -7.30 உணவு விடுதிக்கு செல்ல வேண்டும் என்பதால் அலாரம் வைத்து கொண்டோம்.

Breakfast time :)

அங்கே காலை 6 மணி என்பது இந்திய நேரப்படி அதிகாலை இரண்டு மணி. 7.30 மணிக்கே எங்கும் வெளியில் செல்லவில்லை என்றாலும் தங்கும் விடுதிகளில் குறித்த நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் காலை உணவு கிடைக்காது. அருகில் வேறு கடைகளும் இல்லை என்பதால் எழுந்து தயாராக வேண்டியிருந்தது.

இரண்டு மணிக்கு சாப்பிட வேண்டும் என்றால் 1.30க்கே எழுந்து குளித்து தயாராகி (தூங்கி வழிந்து கொண்டே) காலை உணவை உண்டு முடித்தோம்.

ஆஸ்திரேலிய விடுதிகளில் பொதுவாக வழங்கப்படும் Continental உணவு வகைகளுடன் அங்கே குடியேறியுள்ள / வந்து செல்லும் தெற்காசிய மக்களின் உணவுகளையும் சேர்த்திருந்தார்கள்.

காலை உணவில் அரிசி சாதம், பல காய்கள் கலந்த பொரியல், தயிர் என இருந்தது. உடன் வந்திருந்த நண்பர் எங்களுக்கு பரிந்துரை செய்தார்கள்அதிகாலை 3.40க்கு சாதமா??(IST 3.40)

வெளிப்புறக் கொட்டகையில் ஓரிடத்தில் சூப் பானையை வைத்திருந்தார்கள். தெற்காசியர்கள் மட்டுமே அதனருகில் சென்றார்கள்.

அதிலிருந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து சென்றவர்கள் கொட்டகையிலேயே அமர்ந்து உண்டார்கள். உள் பகுதிக்கு வரவில்லை. அது என்னவாக இருக்கும் என இன்றளவும் கேள்விக்கு குறியாக உள்ளது.

பாம்பு சூப்? வௌவால் சூப்?

நாங்கள் வழக்கம் போல் cereal, பால், பழங்கள், ஜூஸ் மற்றும் Hash Browns எனப்படும் உருளைக் கிழங்கு வறுவல் ஆகியவைகளை உண்டோம்.

Cereal லில் கலந்து உண்ண பல வித உலர்பழங்கள் இங்கும் இருந்தன. ஆஸ்திரேலியாவில் நாங்கள் அதிகம் கண்ட/உண்ட பழம் (?!) பேரிக்காய் என நாம் அழைக்கும் Pears. எல்லா இடத்திலும் platform உட்பட பேரிக்காயை விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்குள்ளது போல அல்லாமல் Fresh and juicy ஆக இருந்தது. Tasmaniaவிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யப் படுவதாகக் கூறினார்கள். (அந்த மாநிலம் பழங்களுக்கு புகழ் பெற்றது.)

நாங்கள் இதுவரை பயணித்த எல்லா நாட்டு விடுதிகளிலும் காலை உணவுக்கு மஞ்சள்(அன்னாசி - Pine apple, முலாம்பழம் - Honey dew), பச்சை(Cantaloupe), சிவப்பு (தர்பூசணி) என மூன்று வித பழங்களை தருவார்கள். 

சென்னை தியாகராய நகரில் உள்ள 5 ஸ்டார் விடுதியில் ஆரம்பித்து அண்டார்டிகா அருகிலுள்ள விடுதி முடிய பழங்கள் என்றாலே Cantaloupe, Honey Dew, அன்னாசி தான். பழச் சாறுகளில் தர்ப்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள் சாறுகள் வருடம் முழுவதும் காலை உணவில் இருக்கும்.  இவைகள் தவிர seasonal பழங்களும் சாறுகளும் உண்டு. [எங்கிருந்து வாங்குகிறார்கள் என்று வியப்பதுண்டு.] 

Little cuties

முதல் நாள் காலை உணவு நேரத்தில் பழங்கள் எதுவும் தென்படவில்லை. என்ன காரணம் என நண்பர்களை வினவிய போது திராட்சை பழங்களை அலங்காரத்திற்கு வைத்திருந்தார்கள் அதை நம் மக்கள் சாப்பிட்டு தீர்த்து விட்டார்கள் என்கிறார்கள்.

ஆஸ்திரேலியா ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த காரணத்தால் அங்கே முதலில் குடியேறிய ஆங்கிலேயர்களின் வழக்கமான காலை சீக்கிரம் எழுந்து வேலைகளை ஆரம்பித்தல், மாலையில் ஐந்து மணியோடு வீட்டிற்கு செல்லுதல், சீக்கிரம் தூங்குதல் போன்றவை இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. அதிகாலை ஐந்து மணிக்கே தெருவில் வாகனங்கள் செல்ல தொடங்கி விட்டன.

அலுவலகம் செல்பவர்கள், வெளி வேலைகளுக்கு செல்பவர்கள் என மக்கள் ஆறு மணிக்கே தெருக்களில் நடமாட தொடங்கி விட்டனர்.

நாங்கள் கண்ட சாலைகள் அனைத்துமே சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருந்தன. அங்கங்கே ரௌன்டானா அமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது.

காலை உணவை உண்ட பிறகு விடுதிக்கு நேரெதிரில் இருந்த ஆல்பர்ட் பூங்காவை காண என் கணவரின் நண்பர் மற்றும் அவரது மனைவியுடன்.கிளம்பினோம். [மற்றவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லையே]

Kangaroos by the bush - view from bus

நேரெதிர் என்று சொல்லி விட்டேனே தவிர அதன் முன் வாசலை சென்று அடைய ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருந்தது. [முன் வாசல் கூட இல்லை பக்கவாட்டு வாசல் என்றால் சரியாக இருக்கும்]

முக்கியமான பகுதி என்பதால் அகலமான பல லேன்கள் உள்ள சாலை. [அங்கே Formula 1 போட்டிகள் நடைபெறும் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்] நடுவில் கடந்து செல்ல Zebra crossing எதுவும் இல்லை. அங்கே கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அதி வேகமாக செல்லும் வாகனங்களை இடையில் நிறுத்தி தெருவை கடக்க உதவி செய்தார்கள்.

மிகப் பெரிய ஏரியுடன் அமைந்த பூங்காவின் ஏரியை ஒட்டிய நடை பாதையில் நடக்கையில் Melbourne நகரின் உயரமான கட்டிடங்களை காண முடிந்தது. சிறிது நேரத்தை அங்கே செலவிட்டோம். மீண்டும் தெருவைக் கடந்து முன் வாசல் வழியாக விடுதியை வந்தடைந்தோம்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் வழியில் Flinders Street அருகில் அமைந்த இந்திய உணவகத்தில் மதிய உணவை உண்டு விட்டு, Phillip Island என்னும் பகுதியை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

Flinders Street ரயில் நிலையம் அருகில் நின்று தெருவை வேடிக்கை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

Phillip தீவானது Melbourne நகரின் தெற்கு - தென்கிழக்கில் 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஒரு தீவு. இந்தப் பகுதி இயற்கையாக அமைந்த துறைமுகமாக உள்ளது. 

Men vs Birds

ஆஸ்திரேலிய கண்டம் உலகின் அரிய வகை வனவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இருப்பிடமாக உள்ளது. Giant bat, Beach whale போன்றவைகள் இங்கே காணப் படுகின்றன. ஆஸ்திரேலியா என்றால் கங்காருக்கள் மட்டுமே என நாம் எண்ணுவதற்கு மாறாக ஒட்டகங்களும் இங்கே உள்ளன.

செல்லும் வழியெங்கும் புல்வெளிகள் தான் அதிகமாக தென்பட்டன. புல்வெளிகள் ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப் படுகிறது (Steppes- Asia & Europe, Prairies - North America, Pampas, Llanos, Cerratos - South America, Downs, Rangelands - Australia, Savannah, Velds – Africa- Courtesy: High school Geography)

ஆங்காங்கே சாலைகளில் விலங்குகள் பறவைகள் கடக்கும் பகுதி கவனமாக செல்லவும் என எச்சரிக்கை பலகைகள் வழியெங்கும் தென்பட்டன.

தீவின் மிக அருகில் சென்ற சமயம் தொலைவில் சாலையின் இருபக்கமும் இருந்த புல்வெளிகளில் கங்காருக்கள் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தன. கங்காருவின் நிறத்திலேயே அந்த பகுதியில் கோரைப் புல் புதர்கள் இருந்தன. அருகில் சென்ற சமயம் புல்லுக்குள் ஒளிந்து கொண்டன. கங்காருக்கள் இருப்பது போலவே தெரியவில்லை.

நாங்கள் முதலில் சென்ற இடம் பிலிப் தீவின் மேற்கு முனையான Point Grant.

Fur Seal என்னும் விலங்கினம் அதிகமாக வாழும் இந்தப் பகுதியை(Australia's Largest colony of Fur Seals)  நோக்கிய வண்ணம் Nobbies Ocean Discovery Centre என்னும் கட்டிடம் உள்ளது. இதன் உட்பகுதியில் Educative Display, Coffee shop, Gift shop மற்றும் சிறுவர் விளையாட்டுப் பகுதி போன்றவைகள் உள்ளன. இந்த பகுதி Ecotourism என்னும் சுற்றுசூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க கட்டப்பட்டது. https://en.wikipedia.org/wiki/Nobbies_Centre

ஏறக்குறைய 16,000 சீல்கள் இங்கே வசிப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். Philip Island Nature Park நிறுவனம் இந்தப் பகுதியை நிர்வாகம் செய்கிறது.

மேற்கு முனையை ஒட்டி 1826ஆம் ஆண்டு Captain Wetherall என்பவரால் நிறுவப்பட்ட கொடிக்கம்பம் உள்ளது. கடலை ஒட்டிய பகுதிக்கு நடந்து சென்று சீல்களைக் காணும் வகையில் அகலமான பாதை உள்ளது.

Great Ocean Road view

நாங்கள் சென்ற சமயம் எதுவும் தென்படவில்லை என்று சொல்வதை விட ஆரம்பத்தில் அங்கே எதற்கு சென்றோம் என்ன பார்த்தோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை.

இது ஆஸ்திரேலியாவின் தெற்கு முனை?! என்று கூறினார் எங்கள் வழிகாட்டி.பிலிப் தீவின் மேற்கு முனை அது. 😊

வழியெங்கும் இங்கே பாம்பு வரும், .... வரும் ,.....வரும்   என விதம் விதமான எச்சரிக்கைப் பலகைகள் இருந்தன. அவற்றைப் படித்துக் கொண்டே, என்ன காரணத்திற்காக அங்கே சென்றோம் என்பதை புரிந்து கொண்டு, கடலை நோக்கி நடந்து சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

வானத்தின் நீல நிறமும் கடலின் அடர் நீலமும் சுற்றி தெரிந்த தீவின் பச்சை புல்வெளியும் மரங்களும் கண்ணுக்கு இனிய காட்சி.

Terrain on our return route

புல்வெளியில் அங்கங்கே மரத்தினால் ஆன சிறிய பெட்டிகள் போல செய்து வைத்திருக்கிறார்கள். அங்கே வாழும் விலங்குகள் வந்து தங்கி செல்லும் என கூறினார்கள்.

சிறிது நேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் Philip Island Nature Park ஐக் காண சென்றோம். உலகின் மிக சிறிய பெங்குவின் பறவைகள் இங்கே மட்டும் தான் காணப் படுகின்றன. (Largest little penguin colony)

Park என அழைக்கப்பட்டாலும் இது பூங்கா இல்லை. கடற்கரையை ஒட்டிய பகுதி park என அழைக்கப் படுகிறது.

Penguin parade எனப்படும் இந்த நிகழ்வு சூரியனின் மறைவிற்குப் பிறகே கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடக்கும் என்பதால் தான் காலையில் சீக்கிரமே கிளம்பாமல் சற்றே தாமதித்து மதியத்திற்கு மேல் கிளம்பினோம்.

Entrance 

33 inches உள்ள இந்த சிறிய பெங்குவின்கள் உலகின் அரிய உயிரினம் என்பதால் இதனைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.  கடற்கரையில் Galleries கட்டப்பட்டு மக்கள் அமர வைக்கப் படுகிறார்கள். வருடம் முழுவதும் தினமும் இந்த நிகழ்வு உண்டு என்பதால் இந்த ஏற்பாடு.

பேருந்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு கடற்கரையை நோக்கி நடந்து செல்ல வேண்டும். மாலை நேரம் குளிரும் ஸ்வெட்டர் எடுத்துக் கொள்ளுங்கள் என விவரமாக சொல்லாததால் எங்கள் பையை பேருந்திலேயே வைத்து விட்டு சென்றோம். (நாங்கள் இருவர் மட்டும்)

கேலரியை அடைந்ததும் கடற்காற்று வீச தொடங்கவே குளிரெடுக்க தொடங்கியது. நுழைவுக் கட்டணம் உண்டு என்பதால் மீண்டும் வெளியில் செல்ல முடியாது. குளிரில் நடுங்கி கொண்டே மற்ற நிகழ்வுகளை கண்டோம்.

பெங்குவின்களை மிக அருகில் தொட்டு பார்க்க, சற்று தள்ளி அமர்ந்து பார்க்க, .......ள் ...ளி இருந்து பார்க்க என மூன்று விதமான கட்டணங்கள். நாங்கள் எங்கே இருந்திருப்போம் என்பதை சொல்லவும் வேண்டுமா? மேலே...உயரே...உச்சியிலேதான் ...

சூரியன் மறையும் வரை காத்திருந்தோம். அந்த சமயத்தில் மைக்கில் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வர ஆரம்பித்தன. சில நிமிடங்களில் விளக்குகள் அணைக்கப் படும்; யாரும் புகைப்படம் எடுக்க கூடாது அப்படியே எடுத்தாலும் Flash light உபயோகிக்க கூடாது; சத்தம் போடாமல் மிக அமைதியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டது. அங்கே எங்களுடன் அமர்ந்திருந்தவர்களில் அநேகர் தெற்காசியர்களாக இருந்தார்கள். யாரும் தொலைபேசியை கீழே வைக்கவில்லை.

Shy snake alert

மீண்டும் மண்டாரின்(Mandarin) எனப்படும் சீன மொழியில் அறிவிப்பு செய்யப் பட்டவுடன் அனைவரின் தொலைபேசிகளுக்கும் ஒய்வு கிடைத்தது. [உலகின் மிக அதிகமான மக்களால் பேசப்படும் மொழி Mandarin]

விளக்குகள் அணைக்கப் பட்டன. எங்கும் நிசப்தம். கடற்காற்றின் ஓசை மட்டுமே.  சூரியன் மறைந்தது.

கடல் நீர் சிறிது சிறிதாக உள்வாங்கி கொண்டே சென்றது. எப்போது பெங்குவின்கள் வெளியே வரும்? திக் திக் நொடிகள்.

முதலில் 4,5 பெங்குவின்கள் மட்டும் தண்ணீருக்குள்ளிருந்து வெளியில் வந்தன. கூடியிருந்த மக்களால் உற்சாக குரல் கொடுக்க முடியாத நிலை.

அதை தொடர்ந்து கூட்டம் கூட்டமாக குட்டி பெங்குவின்கள் வெளியில் வர தொடங்கின. நாம் வழக்கமாக பார்க்கும் உயரமான கருப்பு வெள்ளை பெங்குவின்கள் இல்லை Gray நிறத்தில் ஒரு அடிக்கும் சற்றே உயரமான (1 Ft = 30 inches, இவைகள் 33 inches). பெரிய பெங்குவினே ஒரு அடி தான் என்றால் அதன் குட்டிகள் எப்படி இருக்கும் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

கூட்டமாக சிறிது தொலைவு நடந்தன பிறகு திரும்பி பார்த்து தங்கள் இனத்தவர்கள் பின்னால் வருகிறார்களா என்று பார்த்து காத்திருந்து சேர்ந்து முன்னோக்கி வந்தன.

Apollo bay hotel

மிக லேசான வெளிச்சத்தில் அவைகள் நடந்து வந்ததை மிக தொலைவிலிருந்து ஏறக்குறைய 30 -40 நிமிடங்கள் கண்டும் திருப்தியாகவே இல்லை. நேரமாகிறது கிளம்பலாம் என கூறப்பட்டதால் கிளம்பினோம். திரும்பி வரும் வழியில் நான் முன்பு குறிப்பிட்ட குட்டி மர வீடுகள் தென்பட்டன.  இவைகள் பெங்குவின்கள் இரவில் தங்கி செல்ல அமைக்கப்பட்டு உள்ளன. (மற்ற கடல் பறவைகளும் இவைகளில் தங்கி செல்கின்றன)

சரியாகவே பார்க்க முடியவில்லை (இருட்டு, Grey நிறம்) என வருந்திக் கொண்டே மரப் பாலத்தின் மேலே திரும்பி நடந்து வெளியில் வரும் வேளையில் திடீரென சலசலப்பு. (இரண்டு அடி உயரம் கூட இல்லாத பாலம், மரப் பலகை நடைபாதை என கொள்ளவும்) பாலத்தின் அடியில் எங்களுக்கு மிக அருகில் அன்னம் போல ஆடி அசைந்து குடும்பம் குடும்பமாக பெங்குவின்கள் தங்கள் Burrows நோக்கி சென்று கொண்டிருந்தன.

கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. கிசு கிசுவென தாழ்ந்த குரலில் பேசி மற்றவர்களுக்கும் சுட்டிகே காட்டி கொண்டிருந்தனர்.

Only flowery tree seen

ஓசைப் படுத்தாமல் Flash உபயோகிக்காமல் புகைப்படங்கள் எடுத்தோம். அந்த பூங்கா பகுதியிலேயே அமைந்த உணவு விடுதியில் இரவு உணவை உண்டு முடித்து விட்டு, Gift shop வேடிக்கை பார்த்து விட்டு இரவு எட்டு மணியளவில் Melbourne நகரை நோக்கிய எங்கள் 90 நிமிட பயணத்தை தொடர்ந்தோம்.

மூன்றாவது நாள் 6.30 - 7.30 காலை உணவை உண்ட பின் எங்கள் சுற்றுப் பயணத்தைக் தொடங்கினோம். Jet lag பிரச்சினை சற்றே குறைத்து அதிகாலை 4 மணி (நம் நாட்டு நேரப்படி) உணவை உடல் ஏற்றுக் கொண்டது.

Long way to 12 Apostles

அன்றைய தினம் Twelve Apostles என்னும் இடத்தை காண செல்கிறோம் என்பது தவிர பெரிதாக எதுவும் தகவல் சொல்லப் படவில்லை.

ஒவ்வொரு தலத்திற்கும் சென்ற பிறகு சொல்லப்பட்ட தகவல்களையும், நான் கூகுளை படித்து அறிந்து கொண்ட வைகளையும் ஆங்காங்கே கூறியவாறே உங்களை அழைத்துச் செல்கிறேன்.

இன்று நாம் காணப் போகும் இடம் Port Campbell National Park.

2/12 Apostles

இம்முறை Park என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆகும். இந்த இடத்தை அடைய Melbourne நகரிலிருந்து ஏறக்குறைய 150 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்.

Port Campbell செல்ல நாம் உலகின் மிக பிரசித்தமான Scenic Route ஆன Great Ocean Road என்னும் சாலையில் பயணிக்க வேண்டும்.

உலகின் மிகப் பெரிய போர் நினைவு சின்னமாக இந்த சாலை கருதப் படுகிறது. முதலாம் உலகப் போர் முடிந்ததும் போரில் இறந்த வீரர்களின் நினைவு சின்னமாக இந்த சாலை நிறுவப் பட்டது. அந்த போரில் பங்கு பெற்றுத் திரும்பிய வீரர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் நோக்கில் அவர்களில் 3000 பேரைக் கொண்டே (1919 -1932) நிறுவப்பட்டது இந்த சாலை எனக் கூறினார் எங்கள் வழிகாட்டி. (வளைத்து வளைத்து தன்னையும் சுற்றுப் புறத்தையும் புகைப்படம் எடுத்து சலித்த சில கணங்களில் கூறப் பட்ட செய்தி இது )

இந்த சாலை 240 கிலோமீட்டர் நீளத்தில் விக்டோரியா மாநிலத்தின் தென் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Torquay & Allansford என்னும் ஊர்களுக்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது. Anglesea, Lorne, Apollo Bay மற்றும் Port Campbell ஆகிய நகரங்கள் இந்த சாலையில் உள்ளன. Port Campbell பகுதி இயற்கையாக அமைந்த மணற்கல்(Sandstone) மற்றும் சுண்ணாம்புகல் (Limestone)  பாறைப் படிவங்களைக் கொண்டுள்ளது.

Wooden lodges for Penguins

Melbourne நகரிலிருந்து Torquay க்கு செல்ல 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும். ஏப்ரல்,மே  மாதங்கள் உலகெங்கிலும் வெப்பம் அதிகம் இல்லாத மாதம்; மரம் செடி கொடிகள் துளிர்த்து பசுமையாக இருக்கும் பூக்களும் பூத்திருக்கும். ஏப்ரல் மாதம் என்றாலும் எங்கும் பூக்களை காண முடியவில்லை. ஆங்காங்கே மரங்கள், செடிகள் (குரோட்டன்ஸ் போல) பசுமையாக தென்பட்டன. அங்கிருந்த பாத்து நாட்களில் ஒரே ஒரு வீட்டில் ஒரு ரோஜாப் பூ செடி பூக்களுடன் கண்ணில் பட்டது. 

வழியெங்கும் சில பல வீடுகளுடன் கூடிய சிறு கிராமங்கள் தென்பட்டன.

கிராமப்புற Victorian houses அந்நாடு பிரிட்டிஷ் காலனியாக இருந்ததை நினைவு படுத்துகிறது.

வெளிநாடுகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு(நிமிடங்களுக்காவது) ஓட்டுனருக்கு ஓய்வு அளிக்கப் பட வேண்டும் என்பது விதிமுறை என என் முந்தைய பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

Lorne Sports Club

மெல்போர்ன் நகரிலிருந்து கிளம்பிய இரண்டாவது மணி நேரத்தில் ஒரு சிறிய நதியின் கரையில் இறக்கி விடப்பட்டோம்.

ஆற்றின் கரையில் சிறிது நேரம் இளைப்பாறி, அங்கு எங்களுடன் நடந்து/கடந்து வந்த பறவைகளை கண்டு மகிழ்ந்து, காலாற நடந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம். (ஆஸ்திரேலியாவில் பறவைகளும் விலங்குகளும் சாலைகளில் மனிதர்களுடன் நடந்து செல்வது மிகச் சாதாரணமான செயல் என முன்பே குறிப்பிட்டுள்ளேன்)

மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். இம்முறை நாங்கள் பயணம் செய்தது சற்றே மலைப்பாங்கான பகுதி. சாலைக்கு ஒரு பக்கம் பெருங்கடல் தெரிய ஆரம்பித்தது.

Clean, deserted roads

Great Ocean Road தொடங்கவிருக்கும் Torquay பகுதியை வந்தடைந்து விட்டோம். இந்தப் பகுதி முக்கியமான சுற்றுலாத் தலமாக கருதப் படுவதால் இங்கே இறக்கி விடப்பட்டோம்.

https://en.wikipedia.org/wiki/Great_Ocean_Road

1918 ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தின் தென் மேற்கு பகுதியை சென்றடைய சரியான சாலை இல்லாத காரணத்தால் முதலில் South Coast Road எனப் பெயரிடப்பட்டு Howard Hitchcock என்பவர் தலைமையில் ஒரு Trust நிறுவப்பட்டு 81,000£ முதல்(Capital) திரட்டப் பட்டு இந்த சாலை நிறுவும் வேலை செப்டம்பர் 9, 1919 அன்று ஆரம்பிக்கப் பட்டது. (இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியான ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏப்ரல் 13, 1919 அன்று நடைபெற்றது. 1919 என்றதும் மேற்கண்ட செய்தி என் நினைவுக்கு வந்தது)

இந்த சாலை பல பிரச்சினைகளுக்கு இடையில் 1932 ஆம் ஆண்டு நிறுவி முடிக்கப் பட்டது இந்த 240 கிலோமீட்டர் உள்ள போக ஒன்று வர ஒன்று என இரண்டு லேன் சாலை. இந்த சாலையின் கட்டுமானம் இயந்திரங்களின் உதவி இல்லாமல் கைகளாலேயே செயல் படுத்தப் பட்டுள்ளது என்பது வியப்புக்குரியது. 

போர் வீரர்கள் பாறைகளை உடைக்கத் தேவையான வெடிகுண்டுகளை (Explosives) மடியில் வைத்து கொண்டு பயணிப்பார்களாம். வெடி குண்டுகளுக்கு Smooth ride தேவை இல்லையா?

Point Grant

வெடி குண்டுகள் பற்றி எழுதுகையில் எப்போதோ படித்த மற்றொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. அதையும் தெரிந்து கொண்டு  மேலே பயணிப்போம்.

நோபெல் பரிசை நிறுவிய திரு ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களை நமக்குத் தெரியும். அவர் கல் உடைக்கும் குவாரிகளில் வேலை செய்து வந்த தன் தந்தைக்கு உதவும் வகையில் மிகப் பெரிய கற்களை உடைக்கும் வகையிலான வெடியைக் (டைனமைட்) கண்டு பிடித்தார். 1855 ஆம் வருடம் இவரது சகோதரர் லுட்விக் நோபெல் இறந்த போது, பிரான்சு நாட்டுப் பத்திரிக்கை ஒன்று இவர் இறந்ததாக எண்ணி "மரண வியாபாரியின் மரணம்" என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. அதை படிக்க நேர்ந்த Alfred மிகவும் வருந்தினார். ஆக்க பூர்வமான காரியத்திற்காக கண்டுபிடிக்கப் பட்ட ஒரு பொருள் அழிவிற்காக பயன்பட தொடங்கியதை உணர்ந்தார்.

பின்னாளில் ஆக்கபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும் உலக அமைதிக்காகப் பாடுபடுபவர்களுக்கும் தரும் வண்ணம் மிகப் பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையை நோபெல் பரிசாக இவரது உயிலின் படி தர ஏற்பாடு செய்தார். தம் இறப்புக்குப் பிறகு தன்னை பற்றி எப்படி சொல்வார்கள் என்பதை அவர் அறிய நேர்ந்ததே நோபெல் பரிசை நிறுவக் காரணமாக அமைந்தது என்று கூறுவார்கள்.

சரி , மீண்டும் Great Ocean Road   பார்க்கலாம்.

Great Ocean Road entrance- Torquay

தனியார் நிறுவனத்தால் கடன் வாங்கி முதல் போட்டு நிறுவப் பட்ட சாலை என்பதால் ஆரம்ப நாட்களில் கடன் அடையும் வரை வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்த சாலையில் பயணிக்க சுங்க வரி விதிக்கப் பட்டதாம்.

இந்த சாலை அக்டோபர் 2, 1936 அன்று அரசுக்கு வழங்கப் பட்டது. அது முதல் சுங்க வரி வசூலிக்கப் படுவதில்லை.  அச்சமயத்தில் Great Ocean Trust ன் Honorary என்ஜினீயர் ஆக இருந்த McCormick என்பவரின் மறைவுக்கு பிறகு 1939ல் அவருக்கு ஒரு நினைவு சின்னமும் Great Ocean Roadன் ஆரம்பத்தில் ஒரு archம் அமைத்துள்ளார்கள்.

இந்த நினைவு வளைவானது கல்லால் ஆன அஸ்திவாரத்தின் மேல் மரத்தால் அமைந்துள்ளது. 

மரத்தால் ஆன இந்த வளைவை(பெயர் தான் வளைவு, மரத்தை எப்படி வளைக்க முடியும் நேராக தான் அமைந்துள்ளது) மரத்தாலான இந்த வளைவு இத்தனை வருடங்களாக எப்படி தாங்கி நிற்கிறது என யோசிக்கிறீர்களா? இடைப்பட்ட வருடங்களில் புயல் , மழை காரணமாக கீழே விழுந்து , மீண்டும் அமைக்கப் பட்டுள்ளது இந்த வளைவு.

அந்த வளைவின் அருகே இறக்கி விடப் பட்டோம். இந்தப்  பகுதிக்கு வரும் வரை எங்கே வருகிறோம் என்பதே தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தோம் என்பதே உண்மை. Great Ocean Roadல் செல்லப் போகிறோம் என்ற வரைக்கும் தான் தெரியும்.

மிகப் பிரசித்தமாக கூறப்படும் இந்த Arch அருகிலிருந்து பார்க்க மிக சாதாரணமாக இருந்தது. கல்லால் ஆனா பீடத்தின் மேல் மரங்கள் அடுக்கி வைக்கப் பட்டு நடுவில் Great Ocean Road என எழுதப் பட்டு இருந்தது.

அதனருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த சிலைகளை பார்வையிட்டோம்.

Penguin parade park 

சாலைக்கு மிக அருகில் சில அடிகள் ஆழத்தில் கடற்கரையும் கடலும் தென்படவே, இறங்கி சென்று கண்டு களித்தோம். 

மீண்டும் பேருந்தில் ஏறி Lorne நகரைக் கடந்து Apollo Bay விற்குப் பயணித்தோம். Lorne நகரில் கடல் சார்ந்த Surfing, Skiing போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்களை தரும் நிலையங்கள் தென்பட்டன. (இந்தியாவில் ராமேஸ்வரம் கடற்கரையின் ஒரு பகுதியில் Surfing செய்வதற்கேற்ற காற்றும் அலைகளும் உள்ளதாக சமீபத்தில் படித்தேன்.பல விதமான கடல் சார்ந்த விளையாட்டுக்களும் இங்கே உண்டு.

https://rameswaramtourism.com/rameswaram-places/wind-surfing-send-wind-and-bend-water-sports-rameswaram)

இந்த சாலை உலகின் மிக பிரபலமான Scenic Route களில் ஒன்று. இது போன்ற Scenic route ல் பயணம் செய்த முன் அனுபவம் உண்டு.

கடலை ஒட்டிய சாலையில் பயணிக்கப் போகிறோம் என்றதும் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை (East coast road) போல கடலை ஒட்டி சாலை அமைந்திருக்கும் என நினைத்திருந்தேன். இந்தப் பகுதி கடலை ஒட்டிய பகுதியாக இருந்தாலும் மலையும் மலை சார்ந்த பகுதியாக உள்ளது. (குறிஞ்சியும் நெய்தலும் சேர்ந்த பகுதி) சாலை சற்று தொலைவு கடலை ஒட்டிய சம தளத்திலும் சற்று தொலைவு மலையிலும் அமைக்கப் பட்டுள்ளது.

சாலைக்கு ஒரு புறம் தெளிவான அடர் நீல வானமும் அந்த நிறத்தை பிரதிபலிக்கும் கடல் நீரும் தென்பட மறுபுறம் பச்சை புல்வெளியும் மரங்களும் செடி கொடிகளும் தென்பட்ட காட்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. பேருந்து ஓட்டுநர் ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் கூறிய செய்திகளை எங்கள் வழிகாட்டி இந்திய ஆங்கிலத்தில் கூறினார்.

(ஆங்கிலத்தில் அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இந்திய ஆங்கிலம் என பல வகைகள் உள்ளன. பேச்சு வழக்கில் மாறுபட்டாலும் உலகெங்கும் Academic books & Journal களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான ஆங்கிலம் தான் பின்பற்றப் படுகிறது)

ஆஸ்திரேலியாவில் புல்வெளிகள் அதிகமாக இருப்பதால் கால்நடை வளர்ப்புத் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. அதன் விளைவாக பால் பொருட்களின் உற்பத்தியும் கணிசமாக உள்ளது. வழியெங்கும் மாடுகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தொலைவு இது போன்ற காட்சிகளே.

பால் பொருட்களை சுமந்து செல்லும் லாரிகளும் சிமெண்ட் லாரிகளும் அந்த சாலையில் எதிரே வந்து கொண்டிருந்தன.

மதிய உணவுக்காக Apollo Bay என்ற ஊரில் இறங்கினோம். சைவ உணவுப் பிரியர்களுக்காக தனியாக உணவு ஏற்பாடு செய்யப்  பட்டிருந்தது. Garlic bread, French fries, மற்றும் சில உணவுகளும் இருந்தன.

எங்களுடன் பயணித்த ஒரு இளம் பெண் தீவிர சைவ பிரியை. எங்கள் எதிரில் அமர்ந்து கொண்டு அசைவ உணவுகளை தான் ஏன் எதனால் சாப்பிடுவதில்லை அவை எப்படி சமைக்கப் படுகின்றன போன்ற விவரங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிந்து (யாரும் கேட்காமலே) கூறி, அசைவ உணவுக் கூடத்திற்கே சென்று Garlic bread சாப்பிட்டிருக்கலாமோ என நினைக்க வைத்தார்.

உணவு விடுதியிலிருந்து கடல் தெரிந்தது. அமைதியான அலையில்லாத கடலை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் Campbell நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

இந்த பயண தூரம் சற்றே கடினமாக இருந்தது. மலைப் பகுதிகள் அதிகமாக இருந்தன. மலையை சுற்றி சுற்றி பேருந்து செல்ல செல்ல தலையை சுற்றி வாந்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டு , எப்போது பயணம் முடிவுக்கு வரும் என்ற நிலை.

Cattle on the way

இந்த பகுதியிம் கால்நடைகள் அதிகம் காணப் படவில்லை.

Port Campbell பகுதி சுண்ணாம்பு மற்றும் மணற் கற்களால் அமைந்த பாறைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பகுதியில் கடலில் சுண்ணாம்பு படிவங்களால் ஆன 12 மிகப் பெரிய பாறைகள் உள்ளன. பல மில்லியன் ஆண்டுகளாக இவைகள் இந்தப் பகுதியில் இருப்பதாக அறிகிறோம். தற்சமயம் எட்டு பாறைகளே மீதம் உள்ளன. மற்றவைகள் கடல் அலைகளின் அரிப்பாலும் காலநிலை மாற்றங்களாலும் தேய்ந்து மிக சிறிய பாறைகளாக ஆகி விட்டன.

Port Campbell National Parkல் அமைந்துள்ள இந்த பாறைப் படிவங்களை காண்பது தான் பயண நோக்கம்.

Apostles என்பவர்கள் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏசு கிறிஸ்துவின் 12 சீடர்களைக் குறிக்க பயன்படும் சொல் ஏசுவின் கொள்கைகளை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இவர்கள்.

இங்கும் 12 பாறைகள் உள்ளதால் இவைகளை Apostles என்று அழைக்கிறார்கள்.

Campbell National Park இருக்கும் பகுதி ஊருடன் சேர்ந்து இல்லை. இந்த பகுதியில் சில கடைகளும், restrooms மட்டுமே உள்ளன. பேருந்துகள் நிற்குமிடத்தில் இறங்கி பாறைகள் இருக்கும் பகுதியை நோக்கி நடந்து செல்ல வேண்டும். மாலை 4 மணி இருக்கும் அச்சமயம். சுள்ளென்ற வெயில். மரம் செடி கொடிகள் அற்ற பகுதி என்பதால் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

ஒற்றையடி பாதை போன்ற சாலையில் நடந்து ... சென்று கடலை அடைந்த நேரம் மேற்கு திசையிலிருந்து வெயில் கண்ணில் பட்டு Apostles இருப்பதே கண்ணுக்கு தெரியவில்லை. நாங்கள் இருந்த இடம் கடல் மட்டத்தை விட மிக உயரமாக இருந்தது.அப்படியும் இப்படியுமாக நடந்து சென்று கண்கள் கூச பார்த்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

"காதல் தேசம்" திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியை இந்தப் பகுதியில் படமாக்கி உள்ளார்கள்.

இந்த பாறைகளை பார்க்கவா 150 கிலோமீட்டர் பயணம் செய்து வந்தோம் என்ற புலம்பல்கள் அவ்வப்போது கேட்டன.

மிகப் பிரசித்தி பெற்ற சுண்ணாம்பு பாறைகள் இவை என்றாலும் சாமானிய மக்களுக்கு அதில் என்ன ஈடுபாடு இருக்க முடியும்?

எதிர் வெயில் இல்லாத நேரத்தில் வந்திருந்தால் தெளிவாக பார்த்திருக்கலாம் என தோன்றுகிறது. எந்த பகுதியில் நின்று பார்த்தாலும் சரியாக எதுவும் தெரியவில்லை என்பதே உண்மை.

தற்சமயம் எட்டு பாறைப் படிவங்களே உள்ளன என்றாலும் 12 Apostles என்றே அழைக்கப் படுகிறது.

எங்கள் குழுவில் சிலர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று அந்த பாறைகளை கண்டு வந்தார்கள். 

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடந்து பேருந்தை அடைந்தோம்.

திரும்பி செல்லும் போது மாற்றுப் பாதையில் குறைந்த நேரத்தில் Melbourne நகரை சென்றடைந்தோம். ஆஸ்திரேலியாவில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு விடுகின்றன. சிறு சிறு கிராமங்களை கடந்து செல்கையில் சாலைகளில் எங்கும் நடமாட்டமே இல்லை. இரவு ஏழு மணிக்கு வீடுகளில் விளக்குகள் எரியவில்லை சாலைகளில் வாகனங்களோ மக்களோ இல்லை. எங்கோ ஓரிருவர், சில வாகனங்கள் மட்டுமே தென்பட்டன.

உணவு விடுதிகளும் செயல் படுவதில்லை. Special Request காரணமாக Toddy உணவு விடுதியை எங்களுக்காக திறந்து வைத்திருந்தார்கள். சரி சரி சீக்கிரம் உண்டு முடித்து விட்டு கிளம்புங்கள் நாங்கள் கடையை மூட வேண்டும் என்ற தொனியில் செயல் பட்டார்கள்.

(இந்நகரில் இருந்த நாட்களில் ஒரு முறை தவிர எல்லா நேரமும் இதே உணவகத்தில் தான் உண்டோம்)

Melbourne நகரில் பசுமையான பூங்காக்கள், வண்ண மயமான புதுமையான கட்டிடங்கள், நேர்த்தியான சாலைகள் தவிர மனதை கவரும் வண்ணம் எதுவும் இருக்கவில்லை.

சிறிய ஊர். மீண்டும் மீண்டும் Flinders தெரு. பூங்காக்கள், ட்ராம்கள்

இந்நகரின் மற்றொரு சிறப்பு 200 நாடுகளிலிருந்து மக்கள் குடியேறியுள்ளார்கள் என்பது தான். 1850 களில் இந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கிறது எனக் கேள்விப்  பட்டு வந்தவர்கள் இவர்கள்.

கிரீஸ் நாட்டை தவிர வெளியில் இந்த நகரில் தான் மிக அதிக அளவில் கிரேக்க மக்கள் குடிபெயர்ந்துள்ளார்கள். 1850களில் தங்க வேட்டைக்காக குடி பெயர்ந்தவர்கள் இந்த மக்கள் . சுமார் 1,73,000 கிரேக்கர்கள் இந்நகரில் வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான தனிப் பகுதி, கடைகளும் உண்டு.

Warm summers and mild winters என்பது தான் இந்த ஊரின் வெப்பநிலை. ஆனால் இந்த ஊரின் தட்ப வெப்ப நிலை ஊகிக்க முடியாதது.

இரண்டு நாட்கள் குளிராகவும் ஒரு நாள் சாதாரணமாகவும் வெப்ப நிலை இருந்தது. மெல்போர்ன் நகரை சுற்றிய தினம் குளிர் தினமாக இருந்ததால் வியர்க்காமல் ஊரை சுற்றினோம். ஸ்வெட்டர் அணியும் அளவுக்கு குளிர் இல்லை.

இந்திய உணவு விடுதி முதலாளிகள் அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து இங்கே தற்போதைய trend என்ன என்பதை அறிந்து கொண்டு செல்லலாம் என தோன்றியது. Menu seemed outdated.

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிஸியான துறைமுகம் இந்நகரில் தான் உள்ளது. கல்விக்கு பிரசித்தி பெற்றது இந்த ஊர். பல பல்கலைக் கழகங்கள் இங்கே அமைந்துள்ளன

அருமையான சாலைகள், போக்குவரத்துக் கட்டமைப்புக்களை உடையது இந்த நகரம்.

எங்களை இந்தியர்கள் என அடையாளம் கண்டு கொண்டவர்கள் நட்புடன் புன்னகைத்தார்கள்.

மூன்று நாட்களில் ஒரு ஊரின் தன்மையை அறிந்து கொள்வதென்பது மிகக் கடினமே.

மறுநாள் Queensland மாநிலத்தின் தலைநகரான Brisbane அருகில் இருக்கும் Gold coast என்னும் ஊருக்கு பயணப் பட வேண்டும் என்பதால் இரவு உணவை முடித்துக் கொண்டு விடுதியை அடைந்தோம்.

Brisbane ...

அனுபவங்கள் தொடரும் ...































































 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...