April 14 & 15, 2016
ஸ்விட்சர்லாந்திற்குள் நுழைவதற்குள் அந்த நாட்டினைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?
எங்கள் அபுதாபி-லண்டன் விமானப் பாதை Mediterranean கடலைக் கடந்து, Mainland Europe முழுவதும் பயணித்து, வடக்குக் கடலைக் கடந்து லண்டனை அடைந்ததாக விமானத்தின் உள்ளே இருந்த TVயில் தெரிந்த flight tracker காட்டுகிறது. பயண நேரத்தில் விமானத்தின் பின் பகுதியில் வால் போல தூக்கலான பகுதியில் உள்ள கேமிரா கீழே அடுக்கடுக்காகத் தெரிந்த பனிமலைகளைப் படம் பிடித்துக் காட்டி எப்போது அவைகளை நேரில் பார்ப்போம் என்ற ஆவலைத் தூண்டியது.
ஐரோப்பா à ஆல்ப்ஸ் à ஸ்விட்சர்லாந்து àஎங்கல்பர்க்
ஐரோப்பியக் கண்டத்தில் தான்
ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. 1200 கிலோமீட்டர் பரப்பளவுள்ள
ஆல்ப்ஸ் மலைத் தொடர்ப் பகுதியில் பிரான்சு, ஸ்விட்சர்லாந்து, மொனாகோ, இத்தாலி,
Liechtenstein, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லொவேனியா ஆகிய எட்டு நாடுகள் மேற்கிலிருந்து
கிழக்காக அமைந்துள்ளன. அவைகளுக்கு Alpine Countries என்று பெயர்.
ஜெர்மனியும் Alpine நாடு தானே?
ஏன் ஆல்ப்ஸ் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று தோன்றுகிறதா? ஜெர்மனியின் தெற்குப் பகுதியில்
அமைந்துள்ள பவேரியாவில் தான் இந்த மலைத் தொடர்கள் உள்ளன. [BMW கார்களை நினைவிருக்கிறதா?]
ஆனால் நாங்கள் பயணித்த மேற்குப் பகுதியில் Black Forest தான் இருந்தது. ஆல்ப்ஸ் இல்லையே!
ஸ்விட்சர்லாந்து உயர்ந்த மலைப் பகுதிகள், பீடபூமிகள்(plateau) மற்றும் ஜூரா
மலைகள் என மூன்று விதமான நிலப்பகுதிகளாக அமைந்தது. உயர்ந்த மலைப் பகுதிகளில் பனியும்
மழை பொழிவும் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் இருப்பதால் பீடபூமிப் பகுதியில் தான்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள். பீடபூமி என்றாலும் இவைகளும் மலைப்பாங்கான
பகுதிகளே. இந்த நாட்டின் முக்கியமான பல நகரங்களும் இந்தப் பகுதியில் தான் உள்ளன.
Interlaken, Lake Geneva போன்ற புகழ் பெற்ற ஏரிகளும் இந்த நாட்டை சேர்ந்தவையே. [இரண்டு
பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைந்த ஏரி என்பதால் Interlaken]
இந்த நாட்டின் தொழில்களை உங்களின் புரிதலுக்காகக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்த
முயற்சித்துள்ளேன்.
Sl.No |
Resources [இயற்கை வளங்கள்] |
Industries [ தொழில்கள்] |
1 |
வனங்கள் அடர்ந்த மலைப்பிரதேசம் |
மரம் அறுத்தல், மரவேலைகள் [Lumbering] |
2 |
புல்வெளிகள் |
கால் நடை மேய்த்தல், சீஸ் உற்பத்தி, பால் பொருட்கள்,
சாக்லேட் தயாரித்தல் [Dairy & Dairy products] |
3 |
பீடபூமியில் ஆங்காங்கே சமதளம் |
காய்கறிகள், பழங்கள் உற்பத்தி [ Vegetables and
fruits cultivation] |
4 |
பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைகள் |
பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் (Ice Skiing,
Skateboarding) |
5 |
வெயிற்கால விளையாட்டுக்கள் |
மலையேறுதல் (Hiking), நீச்சல் (Swimming) |
6 |
Tax Haven |
வெளிநாட்டு முதலீடுகளை கவர்தல்[ Banking and
Finance] |
7 |
சுற்றுலா |
Skiing resorts and Hiking trails |
8 |
இதர தொழில்கள் |
கடிகார உற்பத்தி (Watch making), குறைந்த நீரில்
அதிக வருமானம் ஈட்டும் Daffodil மலர் போன்ற பணப்பயிர்களைப்(Cash crop) பயிரிடுதல்,
Swiss army knife |
பனி சூழ்ந்த மலைத் தொடர்கள், புல்வெளிகள் தவிர குறிப்பிடும் படியான இயற்கை வளங்கள் இல்லையென்றாலும் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அற்புதமான நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த நாட்டின் கொடி சிவப்பு கூட்டல் குறியுடன் கூடியது. பள்ளிப் பருவத்தில் நாம் Red cross, Scout போன்ற இயக்கங்களில் பங்கு பெற்றிருந்தோம் இல்லையா? Red cross இயக்கம் இந்த அந்நாட்டின் ஜெனிவா நகரில் தான் தோன்றியது. [சிறுவர்கள் – Scouts, சிறுமியர்கள் – Guides] உயர் நிலைப் பள்ளி நாட்களில் நான் Guide. Red crossல் சேர்ந்தால் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்ய சொல்வார்களே!]
ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராணுவம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாட்டின் ராணுவ வீரர்கள் (Swiss guards) மட்டுமே Vatican நகரின் காவலர்களாக இன்றளவும் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். [இவர்களைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவிலேயே மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.]
இரவு ஏழரை மணியளவில் தேவதைகளின் மலை என்னும் பொருளில் அமைந்துள்ள எங்கல்பர்க் நகருக்குள் நுழைந்து விட்டோம்.[Engel - Angel, Berg- Mountain]
இது Mount Titlis என்னும் ஆல்ப்ஸ் மலை சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள புகழ் பெற்ற சிறிய மலை வாசஸ்தலம். இங்கே இருந்து தான் டிட்லிஸ் சிகரத்தை அடைய வேண்டும். (10,000+ அடி உயரம்). இந்த ஊரானது Benedictine Monastryஐ ஒட்டி அமைக்கப்பட்டு முற்காலத்தில் கல்விக்கும் தற்காலத்தில் சுற்றுலாவிற்கும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
சுற்றுலாப் பயணியர் வருடம் முழுவதும் வந்து செல்லும் பகுதி என்பதால் புகழ் பெற்ற பல விடுதிகள் இந்த சிறிய ஊரில் உள்ளன. பேருந்து, கார் மற்றும் ரயிலிலும் இந்த ஊரை அடையலாம். Lucerne நகரிலிருந்து ரயிலில் 45 நிமிடங்கள் தான். Lucerne ஏரியில் படகுகள் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றன. அந்த நகருக்கு படகில் வந்து விட்டு ரயிலில் ஏறி எங்கல்பர்க்கை அடையலாம்.
இந்த ஊரில் நாங்கள் தங்கிய விடுதியின் பெயர் Hotel Terrace. தரை மட்டத்தில் நாங்கள் இறக்கி விடப்பட்டாலும் அந்த விடுதி மலை மேலே கட்டப் பட்டது என்பதால் அதன் உள்ளே செல்வதே Dramatic entry தான். முன்பே எங்களுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தாலும் அனுபவம் புதுமையே.
பெட்டிகளை வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ராலியில் ஏற்றிக் தள்ளிக் கொண்டே சிறிது தொலைவு நடந்தால் ஒரு குகை. அதனுள்ளே நடந்து சென்றால் ஒரு Elevator. இறங்கி மீண்டும் சிறிது தொலைவு நடந்தால் மற்றொரு குகை. அதன் முடிவில் மீண்டும் ஒரு Elevator. அப்பாடா… ஒரு வழியாக விடுதியின் ரிசப்ஷன் பகுதியை அடைந்து விட்டோம்.
குறுகலாக ஆரம்பித்து பின்பு அகலமாகும் பகுதி இது. அறை சாவி, WiFi password கையில் கிடைக்கும் வரை ரிசப்ஷன் பகுதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். [மேடம் நீங்கள் இன்று எடுத்த புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள், மேடம் நான் எடுத்த புகைப்படங்களை எப்படி attach செய்வது, WiFi password போட்டுக் கொடுங்கள்]
எங்களிடம் ஒரே ஒரு universal adopterதான் இருந்தது என்பதால் மூன்று கைபேசிகள், ஒரு கேமரா, ஒரு power pack ஆகியவற்றை ஒவ்வொரு இரவும் விடிவதற்குள் சார்ஜ் செய்து எடுத்து செல்ல வேண்டும் என்பதால் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. என்னுடைய கைபேசி புதியது, shutter speed அதிகம் என்பதால் எனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று நான் கூற என் கணவர் தன்னுடைய கைபேசியில் தான் புகைப்படங்கள் நன்றாக வருவதாக கூற தினமும் இரவில் எந்த கைபேசியை முதலில் சார்ஜ் செய்வது என விவாதம் நடக்கும். எனவே Universal adopter ஒன்று அதிகப் படியாக இருந்தால் ஸ்விட்சர்லாந்து நாட்கள் நிம்மதியாகக் கழியும் என்று தோன்றியது. எங்கே எப்படி வாங்குவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
காத்திருக்கும் நேரத்தில் Universal adopter பற்றித் தெரிந்து கொள்வோமா?
International அல்லது Universal adopter பற்றி ஐரோப்பிய பயணக் கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன், நினைவிருக்கிறதா?
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான plug அந்தந்த நாட்டின் மின்சார பயன்பாட்டிற்கு ஏற்றாற் போல தேவைப்படும். அதனால் ஒரே adopterலேயே எல்லா வகை plugகளும் இருக்கும்படி உள்ள adopterஐ கட்டாயமாக வெளிநாட்டுப் பயணங்களின் போது உடன் எடுத்து செல்ல வேண்டும். லேப்டாப், கைபேசி, power pack, கேமரா போன்றவைகளை சார்ஜ் செய்ய வசதியாக இருக்கும்.
USA - 110V (தட்டையான இரண்டு பின்கள்), India - 220V (உருண்டையான மூன்று பின்கள்), Australia, Germany, UK, Singapore - 230V ( உருண்டையான இரண்டு பின்கள்), Mexico 127 V, Australia – 230V( தட்டையான ஆனால் 45 டிகிரி கோணத்தில் இரண்டு பின்கள்) என எந்த நாட்டிற்கு சென்றாலும் பயன்படும் விதத்தில் பிளக்குகள் இது போன்ற adopterல் அமைந்திருக்கும். [மாதிரி புகைப்படம் இணைத்துள்ளேன்]
விடுதிகளில் தங்கி செல்பவர்கள் மறந்து விட்டு செல்லும் adopterகளை விடுதி நிர்வாகத்தினர் சேமித்து வைத்திருந்து வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். உலகின் எந்த விடுதியில் charger/adopter கேட்டாலும் தருவார்கள் என Quora.comல் ஒரு முறை படித்தது நினைவில் வந்தது. Front deskல் ஒரு adopterஐ 20 யூரோக்கள் டெபாசிட் கட்டி வாங்கிக் கொண்டேன். [இந்தியாவில் 150 ரூபாய்கள் தான் அதன் விலையே] நிம்மதிக்கு விலை 20 யூரோக்கள்.😊
காத்திருந்த நேரத்தில் விடுதியின் display boardல் டிட்லிஸ் மலையின் உயரம், அங்கே அந்த சமயத்தில் என்ன கால நிலை, காற்றின் வேகம், பனிப்பொழிவு இருக்கிறதா போன்ற விவரங்களை கண்டோம். இரவு எட்டரை மணியளைவ்ல் சிகரத்தில் (10,623 அடி உயரம்/ 3239 மீட்டர்கள்) -7 டிகிரி செல்சியஸ் என காட்டியது.
ரிசப்ஷன் ஜன்னல் வழியாக அந்த ஊரின் இரவுக் காட்சிகள் தெரிந்தன. பனி இருந்த பகுதிகள் சற்றே வெள்ளையாகத் தெரிந்தன. அறையில் பெட்டிகளை வைத்து விட்டு கீழிறங்கி சாப்பாட்டுக் கூடத்திற்கு வந்தோம்.
நாங்கள் இரண்டு இரவுகள் அங்கே தங்கி இருந்தோம். பகல், இரவு உணவு இரண்டுமே
அங்கேயே தான். இந்திய சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் இந்திய உணவகமும் அங்கே
உள்ளது. சுவை மிக்க தென்னிந்திய உணவினை இங்கே உண்டோம். ரசம், சாம்பார், பொரியல் என
அருமையான உணவு. நம் மக்கள் ரசத்தை கப்பில் ஊற்றி ஊற்றி குடித்து கடைசியில்
வந்தவர்களுக்கு மீதம் வைக்காமல் காலி செய்து விட்டார்கள். (பந்திக்கு முந்து
என்பதை மறந்தால் இப்படி தான் நடக்கும்).
இரவு மழை பெய்யத் தொடங்கியது. வெளியில் செல்ல வேண்டிய வேலை இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. கார் பார்க்கிங் முழுவதும் தேங்கியிருந்த தண்ணீர் சில நிமிடங்களில் வடிந்து மழையே பொழியாதது போல தோற்றமளித்தது.
எங்கல்பர்க் நகரில் இருந்த நேரம் மற்ற நகரங்களை போல பரபரப்பு இல்லாமல் மனதிற்கு இதமாக இருந்தது. அறைக்கு சென்றதும் இரண்டு அடாப்டர்களின் உதவியுடன் எங்கள் உபகரணங்களை சார்ஜில் போட்டு விட்டு நிம்மதியாக ஜன்னலில் தெரிந்த ஊரினையும் மங்கலாகத் தெரிந்த ஆல்ப்ஸ் மலையையும் வேடிக்கை பார்த்து விட்டு நிம்மதியாக உறங்கினோம். மங்கலாக = ஒன்றும் தெரியவில்லை 😊நானும் பார்த்தேன் என்ற ஆத்ம திருப்தி.
மறுநாள் ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்.
காலையில் எழுந்ததும் பெரிய கண்ணாடி ஜன்னலின் வழியாகக் கண்ட காட்சிகள் அற்புதத்திற்கும் அப்பாற்பட்டவை. பால்கனிக்கு சென்றும் காணும் வகையில் அறையின் அமைப்பு இருந்தது. எதிரில் தெரிந்த ஆல்ப்ஸ் மலைத் தொடரும் அதன் மேலே உறைந்த பனியும் கொள்ளை அழகு. சூரிய உதயம் என்பது பனி நாடுகளில் பளிச்சென்று இருக்காது என்றாலும் இருள் விலகி வெளிச்சம் வரும் நேரம் பனியின் பொன்னிற காட்சி கொள்ளை அழகாக இருந்தது. எங்கல்பர்க்கில் நாங்கள் சென்ற நாட்களில் மலையின் அடிவாரத்திலிருந்தே பனி உறைந்து காணப்பட்டது.
புகைப்படங்கள் எடுத்து உற்றார் உறவினருக்கு அனுப்பினோம். அமெரிக்காவில் வசிக்கும் பேரன்களை அழைத்து பனிமலைகளைக் காட்டினோம். வயதில் மூத்த உறவுகளை அழைத்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினோம்.
குளித்து இறைவனை வணங்கி விட்டு, டிட்லிஸ் சிகரத்தில் பனி காரணமாக
குளிரும் என முன்பே வழிகாட்டி கூறியபடி இரண்டு சாக்ஸ், இரண்டு ஸ்வெட்டர்,
குல்லாய், Gloves என தடபுடலான அலங்காரத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் உணவகத்திற்கு
சென்று அவல் உப்புமா, இட்லி, சட்னி, சாம்பார் என அருமையான காலை உணவை முடித்துக்
கொண்டோம். வெளியில் கிளம்பும் வரை மகளுடன் Whatsappல் பேசினோம். புத்தாண்டை
முன்னிட்டு எங்களுடன் வந்திருந்த பலர் பக்தி பழமாக நெற்றியில் விபூதியும்
குங்குமமாக காட்சியளித்தார்கள்.
Elevator, குகைகளைக் கடந்து மீண்டும் அடிவாரத்திற்கு வந்தோம். இந்த முறை கையில் பெட்டிகள் இல்லாததால் பொறுமையாக சுற்றுப்புறக் காட்சிகளை ரசித்தபடி கீழிறங்கினோம். சுற்றுலாப் பயணியர்கள் நிறைய பேர் இருந்தாலும் சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது சுற்றுப்புறம். சிறிய ஊர்களுக்கே உரித்தான அழகு.
ஐந்து நிமிட நடையில் உள்ள கேபிள் கார் நிலையத்தினை அடைந்தோம். [Valley cable car station]
வழிகாட்டி எங்கள் கைகளில் அனுமதி சீட்டை வழங்கி விட்டு எங்களின்
தோளருகில் Bar code stickerஐ ஒரு அட்டையிலிருந்து கிழித்துக் கிழித்து ஒட்டினார்.
எதற்காக அந்த ஸ்டிக்கர் என்று அப்போது புரியவில்லை.
டிட்லிஸ் Uri Alps என்னும் மலைப் பகுதியில் 10,623அடி/3239 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிகரம் ஆகும். அடிவாரத்திலிருந்து 2428 மீட்டர் உயரத்திலிருக்கும் Stand நிலையம் வரை எட்டு பேர் அமர்ந்து செல்லக் கூடிய கேபிள் கார்கள்(Titlis Xpress) செல்கின்றன. அங்கிருந்து மற்றொரு கேபிள் காரில் (Rotair Gondola) ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். ஒரே அனுமதி சீட்டே போதுமானது. பார்த்து பத்திரமாக செல்லுங்கள் என்று கூறினார் வழிகாட்டி. அவரும் உடன் வந்தார் என்றாலும் எட்டு பேர் தானே ஒரு கேபிள் காரில் செல்ல முடியும் என்பதால் எச்சரிக்கிறார் என்று நினைத்தேன். வேறு காரணங்களும் உள்ளன என அப்போது புரியவில்லை.
அந்த மலையைப் பற்றிய விவரங்களடங்கிய Brochureஐ கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றோம்.
கேபிள் கார்கள் என்பது கெட்டியான கம்பிகளுடன் இணைக்கப் பட்ட கார்கள் என்பது உங்களுக்கு தெரியும். Funicular பற்றி நாம் முன்பே அறிவோம். [Funicular என்பது கெட்டியான கம்பியுடன் இணைக்கப்பட்ட கார்கள்/ரயில் Looping முறையில் செயல்படும். அதாவது ஒரு வட்டம் போல முடிவில்லாமல் சுற்றி சுற்றி வரும்.]
கம்பியுடன் இணைக்கப்பட்டு, எட்டு பேர் எதிரெதிராக அமரும் வண்ணம் கண்ணாடி ஜன்னலுடன் கூடிய கார்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். ஏறும் இடம் வந்ததும் 30-60 நொடிகள் அதன் கதவு திறக்கும். இறங்குபவர்கள் இறங்கியதும் மேலே செல்பவர்கள் ஏற வேண்டும். இதை சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் இல்லையென்றால் தானியங்கிக் கதவு மூடிக் கொண்டு கார் நகர தொடங்கி விடும். அடுத்த காரில் தான் ஏற வேண்டும்.
அந்த பஞ்சாயத்தை சில நொடிகளில் முடிவுக்கு கொண்டு வந்த நண்பருக்கு நன்றி.
கேபிள் கார் கிளம்பிய சில நொடிகளில் லேசாக மழை பொழிய ஆரம்பித்து சில நிமிடங்களில் நின்று விட்டது. கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிந்த பனியில் உறைந்த ஊசியிலை மரங்களும், வெண்பனியும், எங்கல்பர்க் கிராமமும் கொள்ளை அழகாக தெரிந்தன.
முதலாவது நிறுத்தம் Trubsee Station. அங்கே இறங்கக் கூடாது
என்பதால் அமைதியாக உள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த ஊர்
Skiing, Snowboarding போன்ற பனி சார்ந்த விளையாட்டுக்களுக்குப் பெயர் பெற்றது
என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன் இல்லையா?
பத்தாயிரம் அடி உயரத்திற்கும் மேலே பனிப் பூங்கா(Glacier park) உள்ளது. அங்கே சென்று விளையாடும் வகையில் skis மற்றும் skate board போன்ற உபகரணங்களை கையில் எடுத்துக் கொண்டு அதற்கான ஆடைகளை அணிந்து கொண்டு கேபிள் கார்களில் பலர் ஏறினார்கள்.
உயரே செல்லச் செல்ல எங்கெங்கும் பனி மட்டுமே தெரிந்தது. வெள்ளைப் பின்னணியில் எடுத்த புகைப்படங்களில் முகம் கருப்பாகத் தெரிந்தது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. நாம் செல்லும் கேபிள் கார்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. வழியில் மின்சாரத் தடை ஏற்பட்டால் அங்கேயே அந்தரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டு இருக்க வேண்டியது தான் மின்சாரம் வரும் வரை.
2428 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Stand station வந்ததும் கீழிறங்கி அடுத்த கேபிள் காரில் ஏறத் தயாரானோம். இந்த கேபிள் கார் 2014 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 80 பேர் நின்ற வண்ணம் செல்லலாம். 360 டிகிரி சுற்றிக் கொண்டே மேலேறும் வண்ணம் அமையப் பெற்றது இந்த கேபிள் கார். இதன் பெயர் “Titlis Rotair.” Gondola என்று குறிப்பிடுகிறார்கள். புவியியல் பாடத்தில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என படித்திருக்கிறோமே, இங்கே தன்னைத் தானே சுற்றிக் கொண்டு மேலே செல்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.
Gondolaவில் செல்லக் காத்திருந்த நேரத்தில் கைபேசியில் செய்திகள் வந்து சேரும் “டிங் டிங்” ஒலி கேட்டது. விடுதியை விட்டு வரும் வரை பேசிக் கொண்டு இருந்தேன் இல்லையா? WiFi இணைப்பை வழக்கமாகத் துண்டிக்கும் நான் அன்று துண்டிகாமல் கைப்பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டேன் போல. கைபேசியை எடுத்துக் பார்க்கையில் WiFi இணைப்பின் பெயர் Hotel Terrace எனக் காட்டியது. மகிழ்ச்ச்ச்ச்சி. உடனே அந்த தகவலை அருகிலிருந்தவர்களுக்கும் கூறி விட்டு புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.
Hotel Terrace டிட்லிஸ் மலையில் தங்களுடைய டிரான்ஸ்மிட்டரை வைத்திருக்கிறார்கள். சுற்றுலா பயணியரைக் கவரும் தந்திரம் இது. மேலும் விடுதியின் லாபியில் மலையில் என்ன வெப்ப நிலை என காட்டுகிறார்கள் என்றும் கூறினேனே, இந்த டிரான்ஸ்மிட்டரின் உதவியுடன் தான் என்பதை அப்போது உணர்ந்தேன்.
வரிசையில் நின்று Gondolaவில் ஏறி கைப்பிடியைப் பிடித்துக்
கொண்டோம். ஐந்து நிமிடங்களில் 2400 -10600 அடி பயணித்து விட்டோம். பயணிப்பதோ கார்
சுற்றுவதோ எதுவுமே தெரியவில்லை. Smooth ride. 360 டிகிரி சுற்றிக் கொண்டே
செல்வதால் அனைவரும் எல்லா காட்சிகளையும் கண்டோம். மழை இல்லாததால் சுற்றுப்புறக்
காட்சிகள் (?!) தெளிவாகத் தெரிந்தன. Memorable ride.
Stand stationலிருந்து 2766 அடி உயரத்தில் Titlis Glacier உள்ளது. [Glacier என்பது நகரும் பனிப்பாறை. இந்த வகைப் பாறைகள் மில்லியன் ஆண்டுகள் கூட நகராமல் ஓரிடத்தில் நிற்கும். வெய்யில் அதிகமானால் உருகி வழிந்து விடும். கடலில் இருந்தால் நகரத் தொடங்கி விடும். மொத்தத்தில் உறங்கும் எரிமலை போல. நகரூ……ம் ஆனா நகராது….)
Summit Station எனப்படும் இடத்தில் இறங்கிக் கொண்டோம். இது தான் கடைசி நிறுத்தம்.
Summit Stationல் இறங்கி 178 மீட்டர் உயரத்தில் உள்ள Glacier Parkல் Ice skiing, Skate boarding செய்ய விரும்புபவர்கள் அங்கிருந்து கிளம்பும் Ice flyer/Chairliftல் ஏறி செல்ல வேண்டும். Ice flyer என்பது ஒரு benchஐ கேபிளில் இணைத்தது போல இருக்கும். முன்னால் ஒரு கம்பி இருக்கும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு தங்கள் உபகரணங்களை எடுத்துக் கொண்டு ஆறு பேர் செல்லும் வகையில் இருக்கும். Thrilling ride ஆக இருக்கும். பயப்படுபவர்கள் இதில் செல்லலாம்.
என்னுடியய ஸ்விட்சர்லாந்து பயணத்தின் Bucket list: 1. Titlis Cliff walk செய்வது 2. Movenpick ice cream சாப்பிடுவது.
Summit stationல் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் உள்ளது. அதன்
அமைப்பை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக.
ஐந்தாவது தளம் |
Exit to Glacier (பனிப்பாறைக்கு செல்லும் வழி), Ski Piste
(Slope), Cliff walk, Panorama terrace எனப்படும் திறந்த வெளி மற்றும் Swiss
Lion கடிகாரக் கடை, Snack bar, Ice flyer/Chairlift |
நான்காவது தளம் |
Photo Studio, Panorama Lounge, Waiting room |
மூன்றாவது தளம் |
Group restaurants, Ice cream bar, Titlis Chocalate shop, WC
(உங்களுக்கு தெரியுமே!) |
இரண்டாவது தளம் |
Restaurant / Pizzeria, Self-Service restaurant, First aid,
Toilets |
முதல் தளம் |
Glacier cave, Exit to Glacier and Cliff walk (இங்கிருந்தும்
செல்லலாம்), Souvenir Shop/ Kiosk, Arrival and Departure (Gondola cable car) |
கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அருகில் Cliffwalk செய்வதற்கு வசதியாக குறுகலான ஒரு suspension bridge உள்ளது. திட மனதுக்காரர்கள் அதில் நடந்து சென்று மீண்டும் திரும்பி வரலாம். 150 அடிகள் வைத்தால் மலையில் மறுபக்கத்திற்கு சென்று விடலாம். கீழே குனிந்து மட்டும் பார்க்கக் கூடாது. பாலத்தின் கீழே 10 ஆயிரம் அடிக்கும் மலைகளால் ஆன பகுதி. பகுதி அல்ல அதலபாதாளம். [பனியில்லாத சமயம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள brochureல் உள்ள படத்தை இணைத்துள்ளேன்.]
நாங்கள் சென்றது டிட்லிஸ் மலையுச்சியைப் பார்க்கத் தானே என்பதால் மற்ற தளங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எங்கள் வழிகாட்டியின் அறிவுரையை பின்பற்றி மே….லே சென்றோம்.
முதலில் படிக்கட்டுகளில்/Escalatorல் ஏறி நான்காவது தளத்திற்குச் சென்றோம். அங்கே உள்ள ஸ்டுடியோவில் ஸ்விட்சர்லாந்தின் traditional ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி சென்றோம். கூட்டமான கூட்டம். அதனால் அந்த ஆசையைத் துறந்து விட்டு ஐந்தாம் தளத்திற்கு சென்றோம். [ஆசையே துன்பத்திற்குக் காரணம், புத்தர் சிலை அதிக விலை—என்றோ படித்த கவிதை]
கட்டிடத்தின் மேல் தளத்தின் வெளியே சுற்றிலும் தடுப்பு சுவர்/வேலி போடப்பட்ட வராண்டா போன்ற பகுதி. அங்கிருந்து Cliff walk & Skiing செல்லலாம். எங்கும் வெண்பனி. தரையில் ஒரு அடிக்கும் அதிகமாகப், பனி இருந்தது. எங்களின் சாதாரண ஷூக்களுடன் சற்றே முன்னேறி நடந்து டிட்லிஸ் மலை பற்றிய பெயர் பலகைக்கு அருகில் தட்டுத் தடுமாறி சென்று சேரும் சமயம் திடீரென்று பனிப் பொழிவு ஆரம்பித்தது. பூத்தூறலாகப் பனி எங்கள் மேல் பொழிய ஆரம்பித்தது. Surprise ஆன அனுபவம். கையில் வைத்திருந்த குடையை பிடித்துக் கொண்டு பனிப் பொழிவில் நின்றிருந்தோம். [கடல் மட்டத்தை விட உயரம் குறைந்த பகுதிகளில் மேகத்திலிருந்து வரும் மழையானது நீராகவும், உயரமான பகுதிகளில் நீர் உறைந்து பனியாகவும் பெய்கிறது.]
அனைவருக்கும் உற்சாகம் அதிகரிக்க, அங்கும் இங்கும் நடந்து
மகிழ்ந்தார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அமெரிக்காவில் வசிக்கும்
மகளுக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்தேன். அவர் என் அழைப்பை ஏற்கவில்லை.
பனிப் பொழிவை உற்றார் உறவினர் நண்பர்களுக்குக் காட்ட எண்ணி WhatsAppல் அழைப்பு விடுத்தேன். ஐரோப்பாவில் அப்போது பகல் 12 மணி என்பதால் இந்தியாவில் மாலை 4.30 தான். யாரும் என் அழைப்பை ஏற்கவில்லை. புகைப்படங்கள் எடுத்து அனுப்பினேன். இருவர் மட்டும் பார்த்து பதிலனுப்பினார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என எண்ணினேன். இருவரைத் தவிர மற்றவர்களால் பெற முடியவில்லை.
பனியில் செல்ல விரும்புபவர்கள் அதற்கான பூட்ஸ் அணிந்து செல்ல வேண்டும். பொதுவாக சுற்றுலா பயணிகளின் உபயோகத்திற்காக வாடகைக்கு கிடைக்கும். ஸ்விட்சர்லாந்தில் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலிய மொழிகள் தேசிய மொழிகள் என்றாலும் ஜெர்மன் மொழியே பிரதானமாகப் பேசப்படுகிறது. எங்களுக்கு சரியானபடி வழிகாட்ட யாரும் இல்லை. முடிந்த வரை பனியில் கால் படாமல் கவனமாக இருந்தோம்.
பனியில் நடப்பது மிகவும் ஆபத்தானது. அதற்கேற்ற ஆடை அணிகளை அணிந்து கொண்டே செல்ல வேண்டும். பனி நம் உடம்பில் பட்டால் சமயத்தில் Frost bite எனப்படும் ரத்த உறைதல் ஏற்பட்டு கைகால்கள் செயலிழக்க நேரிடும். வெட்டி எடுக்கவும் (amputation) நேரிடலாம்.
இந்திய ராணுவத்தில் ஆண் செவிலியாக (male nurse) பணி புரிந்த என் தோழியின் கணவர் ஒரு சமயம் கடும் உறைபனியின் மேல் மயக்கமாகி சரிய, கால்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு அவசர கால மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் தேறினார். பனிக்கு ஏற்ற ஆடை, பூட்ஸ் அணிந்தவருக்கே அது போன்ற நிலை ஏற்பட்டது.
என்னுடைய Bucket listல் இருந்த Cliff walk suspension bridge அந்த வராண்டாவின் முடிவில் தானே இருக்க வேண்டும் என்று நினைத்து தேடினேன். அம்புக் குறியுடன் கூடிய பெயர்ப்பலகை இருந்தது. ஆனால் பாலத்தை காணவில்லை. இடப்பக்கத்தில் நம் ஊர்களில் சாலையின் நடுவில் பள்ளம் இருந்தால் ஒரு மரக்கிளையை/குச்சியை நட்டு வைப்பார்களே அது போல பாலம் இருக்கும் பகுதியை தெரிவிக்கும் வண்ணம் பனியில் குச்சிகளை நட்டு வைத்திருந்தார்கள்.
பாலத்தின் மேலும் கீழும் பத்தாயிரம் அடிக்கும் பனி. அதற்கான உபகரணங்கள் வைத்திருந்தவர்கள் அதில் சில அடிகள் நடந்து விட்டு திரும்பினார்கள். எங்களால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை.
☹ அந்த பெயர்ப் பலகையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து திருப்திப் பட்டுக் கொண்டோம்.எதிரில் தெரிந்த பனிமலைகளின் தோற்றம் பல கைலாய மலைகள் அருகருகில் இருப்பது போல காட்சியளித்தது. இறைவனை நேரில் கண்ட மகிழ்ச்சியும் நிறைவுமாக அன்றிரவு சகோதரி கலா அது பற்றி ஒரு கவிதை எழுதி மறுநாள் என்னிடம் காட்டினார். அதே காட்சியின் தூண்டுதலால் சென்னை வந்த பிறகு நான் எழுதிய கவிதையையும் இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
கைலாய சொர்க்கம் - ஆல்ப்ஸ்
பச்சைத் விரிப்பில் வெள்ளைப் பட்டுடுத்தி
பக்கம் உயர்ந்து நின்ற சிகரம் கண்டு மகிழ்ந்தேன்!
வானுயர்ந்த மலைமுகட்டின் உச்சிதனை
வாகாய்த் தொட்ட கருமேகம் கண்டு களித்தேன்!
ஒற்றைக் கம்பிதனில் உயரே சென்றபோதில்
ஒப்பற்ற அதன் விஞ்ஞானம் எண்ணி வியந்தேன்!
பனிபடர்ந்த மலைகளின் பாங்கு கண்டு
பரவசம் நான் மனதில் கொண்டேன்!
மலையுச்சிதனில் மகிழ்வாய் நிற்கையில்
மழையாய் பெய்த பனி கண்டு மயங்கினேன்!
இயற்கையின் வளமை கண்டேன்
இறைவனின் படைப்பை ரசித்தேன்!
பனிக்குகையில் செல்லும் போது
பரவசத்தில் கண்ணீர் விட்டேன்!
பனிமூடிய மலைமேல் பார்வை பட்ட நொடியில்
கைலாயம் உணர்ந்து கைகூப்பி தொழுது நின்றேன்!
பவழமல்லி வாசமும் உடன் இணையப்
பரமனே நான் உள்ளம் சிலிர்த்தேன்!!
அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தின் பின் பகுதியில் சூரியனை விரும்பும் மக்களுக்காக பெஞ்சுகள், சறுக்கு மரம் போன்றவைகளை வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன் இல்லையா? [Panorama terrace] நாங்கள் அங்கே சென்ற நேரம் வெய்யில் இருந்தது அதாவது அது பகல்தான் என்பதற்கு அடையாளமாக வெளிச்சம் இருந்தது. பனிப் பொழிவின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் சில அடிகளுக்குப் பனி.
அதன் ஒரு பகுதியில் பனியை சுத்தம் செய்யும் வாகனம் பனியை வாரி மலை போலக் குவித்துக் கொண்டிருந்தது. முழங்கால் அளவு பனியில் நடந்து சென்று சுற்றிலும் தெரிந்த மலைகளை வேடிக்கை பார்த்து விட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மூன்றாம் தளத்திற்கு சென்றோம்.
அங்கிருந்து பார்க்கையில் Icelift மற்றும் Iceflyerகளும் செல்வதைக் காண முடிந்தது. [வீடியோ இணைத்துள்ளேன்] Iceflyerல் மக்கள் யாரும் அந்த சமயத்தில் செல்லவில்லை. அதில் சென்றால் சில நிமிடங்களில் இன்னும் உயரத்திலிருக்கும் Iceparkற்கு சென்று பனி விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.
கால்கள் பனியில் புதையப் புதைய நடந்து சென்று வேடிக்கை பார்த்தது வித்தியாசமான அனுபவம்.
கேபிள் காரில் பயணித்தல், பனியில் நடத்தல் தவிர எங்களால் வேறு விதத்தில் பனியை அனுபவிக்க முடியாது.தெரியாது என்றும் கூறலாம். Skiing போன்ற பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட பயிற்சி தேவை. எல்லாரும் விளையாட முடியாது. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே skating கற்றுத் தர ஆரம்பித்து படிப்படியாக பலவற்றையும் கற்றுத் தந்து விடுவார்கள் பெற்றோர்கள்.
பனி மிகவும் ஆபத்தானது என்று முன்பே குறிப்பிட்டேன். மேலும் சுற்றுலா அமைப்பாளர்களுக்கு நம்மை நல்ல விதமாக திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பு உள்ளதால் குழுவாக செல்லும் போது நாமாக இது போல முயற்சிக்கவும் முடியாது.
சில வருடங்களுக்கு முன்பு கைபேசியில் Word game விளையாடுவேன். உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் விளையாடுவார்கள். ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்மணி நட்பானார். Pen friendship போல இது Virtual Word game friendship. அச்சமயம் அவருக்கு 65 வயது. பள்ளி ஆசிரியை. [ஆசிரியப் பணிக்கு அமெரிக்காவில் வயது வரம்பு இல்லை.] Ice Skiing அவருடைய முக்கிய பொழுதுபோக்கு. பல நாடுகளுக்கும் சென்று Ice Skiing செய்துள்ளதாகக் கூறினார். அவருடைய நண்பர்கள் அக்டோபர் மாதத்தில் ஐஸ்லாந்து சென்றார்கள் தானும் அவர்களுடன் செல்ல வேண்டும் என்பதற்காக வேலையை resign செய்து விட்டு சென்றார். டிட்லிஸ் மலைக்கும் இவர்களைப் போன்ற பனி விளையாட்டுப் பிரியர்கள் தான் அதிகம் வந்து செல்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதுடன் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
என்னுடைய ஸ்விட்சர்லாந்து Bucket listன் அடுத்த வேலை அந்த நாட்டின் பிரசித்தி பெற்ற Movenpick icecreamஐ சாப்பிடுவது. [Mo-fen-pick] என முடிவெடுத்தேன். அப்படி என்ன அந்த ஐஸ்க்ரீமுக்கு சிறப்பு என்று பார்ப்போமா?
தற்சமயம் Movenpick hotels & Resorts என அழைக்கப்படுகின்ற
Movenpick Restaurant 1948 ஆம் வருடம் ஸ்விட்சர்லாந்தில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த
ரெஸ்டாரண்டுகளின் உபயோகத்திற்காக மட்டும் என 1960களில் தயாரிக்கப்பட்ட இந்த
ஐஸ்க்ரீம் இன்று உலகெங்கிலும் விற்பனை செய்யப் படுகிறது. Nestle நிறுவனத்தால்
ஆரம்ப நாட்களில் தயாரிக்கப்பட்டு பின்னர் வேறு சில நிறுவனங்களும் அதனுடன் சேர்ந்து
கொள்ள விற்பனை பெருகி விட்டது.
ஸ்விட்சர்லாந்தில் கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழில் என்று நாம் அறிவோம். ஒவ்வொரு விவசாயியும் 20-25 மாடுகளை தன்னுடைய சொந்த பண்ணையில் வளர்த்து அவற்றின் பாலை நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறார். அப்படி சேகரிக்கப்பட்ட பாலிலிருந்து தான் இந்த ஐஸ்க்ரீம் தயாரிக்கப் படுகிறது. பிரதான தயாரிப்பு ஸ்விட்சர்லாந்தில் நடைபெறுகிறது.
ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீமை அங்கேயே வாங்கி சாப்பிட்டால் fresh ஆகவும் இருக்கும் விலையும் மலிவாக இருக்கும் என்பதால் மூன்றாவது தள ஐஸ்க்ரீம் கடையில் தேடினேன். Magnum தான் இருந்தது. Movenpick இல்லை. ☹ கொட்டும் பனியில் ஐஸ்க்ரீமையா தேடுகிறாய்?? _ என் கணவரின் கடுகடு.
https://en.wikipedia.org/wiki/M%c3%b6venpick_Ice_Cream
சென்னைக்கு வந்த பிறகு நுங்கம்பாக்கத்தில் ஜெமினி பாலத்திற்கு 400 மீட்டர் தொலைவில் Movenpick Ice Cream Boutique உள்ளதை அறிந்தேன். NSK சாலையும் உத்தமர் காந்தி சாலையும் கூடும் சிக்னலில் Board இருக்கிறது.
Movenpick brandல் பல விதமான flavourகள் உண்டென்றாலும் Lime &
Lemon புகழ் பெற்றது. விலை அதிகமில்லை ஜென்டில்மென்…ஒரு சிறிய ஸ்கூப் 200+, Sundae
700+, Desserts 1,300+. Vegan, Vegetarian வகை உணவு பழக்கம் உள்ளவர்களுக்காக சில
flavourகள் மட்டுமே உள்ளன. முட்டை சேர்க்கப்படுவதால் இந்த விதப் பாகுபாட்டை
குறிப்பிடுகிறார்கள். மேற்காசிய நாட்டு மக்களைக் கவர “ஹலால்” முறையில் அங்கேயே
ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் இந்த நிறுவனத்தார். [ஹலால் என்ற அராபிய
வார்த்தைக்கு acceptable என்று பொருள். Halal certified products என்பது இஸ்லாமிய
மதச் சட்டத்தில் குறிப்பிட்டபடி தயாரிக்கப்பட்ட பொருட்கள்]
ஸ்விட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டில்லியில் விற்பனை செய்கிறார்கள். ஐஸ்க்ரீமை தயாரித்து குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகி இருக்கும். Preservatives அதிகமாக இருக்கும். விலை அதை விட அதிகம். இங்கே பக்க்க்க்கத்தில் நேற்று மாதவரத்தில் தயாரித்து இன்று கடைகளில் விற்பனை செய்யப் படும் ஆவின் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிடுங்கள். ஆரோக்கியம், விலையும் குறைவு என்றார் என் சகோதரி.
நியாயமான கருத்து என்பதால் இன்றளவும் நுங்கம்பாக்கம் கடைப் பக்கம் செல்லவில்லை. எங்கள் வீட்டு வாசலில் உள்ள ஆவின் பார்லரில் விதம் விதமான flavourகளில் popsicles, cup, cone, cornetto என 10-20 ரூபாயில் கிடைக்கிறது.
மொத்தத்தில் என் இரண்டாவது ஆசையும் நிறைவேறவில்லை.
சமீபத்தில் ஒரு நாள் சகோதரி கலாவிடம் அது குறித்துக் பேசிக் கொண்டிருந்த போது என்னிடம் சொல்லி இருந்தால் நான் உனக்கு வாங்கி தந்திருப்பேனே என்றார். [Cho chweet]. விதம் விதமான currencyகள் என்னிடம் தானே இருந்தது. பிரச்சினை பணம் இல்லை Availability தான் என்று புரிய வைத்தேன்.
முதள் தளத்தில் பனிக் குகை (Glacier grotto) Round trip போல அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிவடைகிறது பனிக்குகையில் நுழைவதற்கு முன் நான்காவது தள Loungeல் சற்று ஓய்வெடுத்தோம். உடலின் வெப்ப நிலை ஏறி வியர்க்க ஆரம்பித்ததால் gloves, குல்லாய்களை கழற்றி ஸ்வெட்டர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். பனிக்குகையில் நுழைகையில் குல்லாயைக் காணவில்லை. மீண்டும் நான்காவது தளம் வரை தேடியும் கிடைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய பயணத்திற்காக என வாங்கி வந்த குல்லாய் தொலைந்து போனது வருத்தமே. கழுத்தை சுற்றியிருந்த சால்வையை தலையை சுற்றி அணிந்து கொண்டு குகைக்குள் நுழைந்தேன்.
என்னுடைய சாதாரண ஷூவை அணிந்து கொண்டு…. என மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அது பார்க்க சாதாரணமாக இருந்தாலும் ஒரு சிறப்பம்சம் கொண்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 900 ரூபாய்க்கு வாங்கிய அந்த பிளாஸ்டிக் ஷூவின் அடியில் “WALKER” என்ற எழுத்துக்கள் அமைக்கப் பட்டு பனி அல்லது ஈரத்தில் சறுக்கி விடாமல் grip ஆக இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
பனிக் குகை Titlis glacierல் இயற்கையாகவே அமையப் பெற்ற ஒரு குகை. அதை ஒட்டியே அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தைக் கட்டியுள்ளார்கள். இதனுள்ளே முற்றிலுமாக Sleetதான். [அப்போது பெய்த பனியில் (fresh snow) நடப்பது சுலபம். இறுகிய பனிக்கு Sleet என்று பெயர். அதில் காலை வைத்தாலே வழுக்கும்.] எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பனிப் பாறையினால் ஆன குகை என்பதால் இறுகித் தானே இருக்கும்?
பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே மெள்ள நடந்து சுற்றிப் பார்த்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தோம். நீல விளக்கொளியில் குகையின் பனியானது பளபளப்பாய்த் தெரிந்தது. ஆங்காங்கே பனியில் snowflakes போல செதுக்கி அதற்கு நீல நிற விளக்குகளை பொருத்தி இருக்கிறார்கள். Mesmerising.
அதே தளத்தில் உள்ள Souvenir கடைக்குள்ளே சென்று பொருட்களை/விலையைப் பார்த்து விட்டு வெளியில் வந்து விட்டோம். [கம்பெனிக்கு கட்டுமால் ஆகாதுங்கோ]
ஆரம்பத்தில் Sticker ஒட்டி பத்திரமாக அதை வைத்திருங்கள் என பல முறை சொல்லி எங்களை அனுப்பினார் வழிகாட்டி என்று குறிப்பிட்டேன் இல்லையா? அது ஏன் என அறிந்து கொள்ள ஆர்வம் காரணமாக உடன் வந்த ஒரு சகோதரியிடம் கேட்டேன். அவர் சொன்ன காரணங்களாவன:
1.மலை மேலே செல்பவர்கள் திரும்பி வரவில்லை என்றால் அதல பாதாளத்தில் போய் கண்டு பிடிப்பது முடியாது. ஸ்டிக்கரை வைத்து தொலைந்தது யார் என்று கண்டு பிடிப்பார்கள்.
2. கடைகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கினால் stickerஐ ஸ்கேன் செய்து எந்த ஏஜென்டின் ஆட்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து அவருக்கு கமிஷன் தரப்படும்.
முதல் காரணத்தை அறிந்ததும் மனதில் “திக்” என்று இருந்தது. எந்த அளவுக்கு நம் உயிரைப் பணயம் வைத்து வந்திருக்கிறோம் என்று தோன்றியது. ஒற்றைக் கம்பியை நம்பி 10 ஆயிரம் அடிகள் வந்திருக்கிறோம்.
மலையுச்சியிலிருந்து மாலை 5.15க்கு கடைசி கேபிள் கார் கிளம்பும் என அறிவிப்புப் பலகை கூறியது.
கீழிறங்கும் நேரம் நெருங்கியது. அனைவருக்கும் முதலாவது கேபிள் கார் நிறுத்தமான Trubseeயில் உள்ள இந்திய உணவகத்திற்கான Token அளிக்கப்பட்டது. மேலேறி வந்தது போலவே முதலில் Rotair Gondolaவில் பயணம் செய்து பின்னர் Titlis Xpress cable carல் பயணித்து Trubsee உணவகத்தை அடைந்தோம்.
அந்த இந்திய உணவகம் கேரளாவை சேர்ந்த ஒருவரால் நடத்தப் படுகிறது. எதிர்பார்க்காத விருந்து. சாம்பார், ரசம், பொரியல், நல்ல அரிசியில் சாதம், தயிர் வடை, பச்சடி, பாயசம் என அருமையான தென்னிந்திய உணவு. தயிர் வடையின் மேல் பூந்தி, கேரட் துருவல் இருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அனைவரும் திருப்தியாக உண்டு முடிந்து Trubsee Station முன்பு பனியை வாரிக் கொண்டிருந்த இயந்திரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சீக்கிரமாக வாருங்கள் என எங்களை விரட்டிப் பிடித்து மலையின் அடிவாரத்திற்கு கிளப்பினார் வழிகாட்டி.
கீழிறங்கும் சமயம் தெரிந்த ஏரியும் ஊரும் சுற்றிலும் தெரிந்த பனிமலைகளும் மனதிற்கு இனிமையாக இருந்தன. அப்பாடா…கீழிறங்கப் போகிறோம் என்ற இனம் புரியாத நிம்மதியில் கண்ணில் பட்ட காட்சிகள் கூடுதல் இனிமையாகத் தெரிந்தன. 😊
ஏரியின் நீல நிறமானது பனியின் வெண்மைக்கும் புல்வெளியின் பசுமைக்கும் ஒத்துக் போய் அற்புதமாகக் காட்சியளித்தது.
அந்த ஏரியின் பெயர் Trubsee lake. இந்த ஏரியில் வெய்யிற்காலத்தில் படகு விடுதல் (Rowing), நீச்சல் போன்றவைகள் நடைபெறுகின்றன. பனிக்காலத்தில் ஏரி முற்றிலும் உறைந்து விடுவதால் பனிக்கால விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. மேற்கண்ட தகவல்கள் எல்லாம் வழிகாட்டி கூறியவை மற்றும் Titlis Brochure ஐப் பார்த்துக் தெரிந்து கொண்டவைகளே.
மதியம் பன்னிரண்டு மணியளவில் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் சென்ற ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில் அடிவாரத்திலிருந்தே, இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சாலையோரத்திலிருந்தே பனியைக் காண முடிந்தது. இன்னும் சில நாட்கள் கடந்து சென்றிருந்தால் பனியைக் காண மலையுச்சிக்குத் தான் செல்ல வேண்டும் என்று வழிகாட்டி கூறினார்.
அந்தப் பகுதியில் நடந்து, எங்கள் அனுபவங்களை பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது என் மகள் ஒரு மணி நேரத்துக்கு முன் நான் விடுத்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தார். [இங்கே நடுராத்திரி. எதற்கு அம்மா கூப்பிட்டாய்?]
இந்தியாவில் இருந்தால் அமெரிக்க நேரத்திற்கு sync செய்து கொள்வோம் ஐரோப்பாவில் காலம் நேரம் எதுவும் பிடிபடவில்லை. எனக்கு மட்டும் இல்லை. பலருக்கும் இந்த பிரச்சினை இருந்தது. [சகோதரி கலா: மஞ்சு என் மகள் கனடாவில் இருக்கிறாள் அவளுடன் பேசப் போகிறேன். நான்: இப்போது இரவு 2 மணி அங்கே, பிறகு பேசலாம் அக்கா]
சில நிமிடங்களில் பேருந்தில் ஏறி அருகிலிருந்த பெரிய நகரமான Lucerneஐ நோக்கிப் பயணித்தோம்.
செல்லும் வழியெங்கும் பனி மூடிய மலைகள், அதன் கீழ்ப்பகுதியில் பச்சை பசேலென்ற புல்வெளிகள், ஆங்காங்கே ஏரிகள், சிறு மரவீடுகள், பண்ணைகளில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் என எங்கும் ரம்மியமான காட்சிகள். கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் அசைய அவைகள் மேய்வது அழகாக இருந்தது.
ஸ்விட்சர்லாந்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நகரம் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது. கலை, கலாச்சாரம், சுற்றுலா, போக்குவரத்து என பலவற்றிற்கும் சிறப்புப் பெற்றது இந்த நகரம்.
இந்த நகரிலிருந்து ரயிலில் எங்கல்பர்க் – 45 நிமிடங்கள், Zurich - 48 நிமிடங்கள், Zurich விமான நிலையம் – 60 நிமிடங்கள் என சென்றடையலாம். Zurich நகருக்கு தினமும் 40 ரயில்கள் செல்கின்றன.
மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல இந்த நகரின் மத்தியிலும் Reuss என்னும் நதி பாய்கிறது. அதனுடன் Lake Lucerneம் கலக்கிறது என்பதால் நகரில் எங்கும் நீர் பரப்பு தென்படுகிறது. ஊருக்குள் இந்த பாலங்களைக் கடந்து சென்ற போது நதியின் மறுகரையில் அமைந்த புராதனமான கட்டிடங்களும் இரண்டு ஊசி கோபுரங்களும் தெரிந்தன. நகரின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அவைகள் தெரிந்தன. [Church of St.Leodeger] துல்லியமான நீரில் மிதந்து கொண்டிருந்த வாத்துக்கள் கண்ணில் தென்பட்டன. நதி வித்தியாசமான பச்சை shadeல் காட்சியளித்தது.
ஒரு சிறிய பூங்கா, அதில் ஒரு குளம். பாறைகளால் ஆன சுவர். அதில் இறக்கும் தறுவாயில் உள்ளது போன்ற ஒரு சிங்கத்தின் தலையருகில் கேடயம் அம்புகளுடன் ஒரு சிலை. அதில் கல்வெட்டு போல எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவ்வளவே. எதிரில் உள்ள குளத்தில் மக்கள் நம் ஊர்களைப் போல காசுகளை போட்டிருக்கிறார்கள்.
1792ஆம் ஆண்டு நடைபெற்ற பிரஞ்சு புரட்சியின் போது பதினாறாம் லூயி மன்னனின் காவலர்களாக இருந்த நூற்றுக்கணக்கான Swiss Guardsம் அவருடன் சேர்த்து கில்லட்டினுக்கு இரையானார்கள். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்த நினைவுச் சின்னம் இது. இந்த சிலை டச்சு நாட்டை சேர்ந்த புகழ் பெற்ற Bertel Thorvaldsen என்பவரால் நிறுவப்பட்டது.
Swiss guards என்பவர்கள் முற்காலத்தில் பிரான்சு போன்ற தேசங்களின் அரசர்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப் பட்ட ராணுவ வீரர்களின் சிறிய குழு. இவர்கள் Regular Swiss Armyஐ சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் தனி. இன்றளவும் போப்பின் (Pope) பாதுகாப்பிற்காக இவர்கள் தான் நியமிக்கப் படுகிறார்கள். இவர்கள் புராதனமான ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளும் வைத்திருப்பார்கள்.
கூடுதலாக ஒரு தகவலும் இங்கே உண்டு. ஸ்விட்சர்லாந்து எல்லா திசைகளிலும் தரையால் சூழப்பட்ட நாடு என்பதால் இங்கே Navy எனப்படும் கடற்படை கிடையாது. மற்ற நாடுகளை ஒட்டிய பகுதியில் உள்ள ஏரிகளில் பாதுகாப்புக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையில் Coast Guards மட்டுமே உண்டு.
https://en.wikipedia.org/wiki/Swiss_Guards
பிரஸ்ஸல்ஸ் நகரின்
Manneken Piss சிலை போல இதுவும் நேரில் பார்க்கும் போது சிறப்பாக எதுவும் இல்லாதது
போலத் தோன்றியது. ஆனால் அதற்கென தனிச் சிறப்பு
உள்ளது. அங்கே சென்ற நினைவைப் பாதுகாக்க புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
முன்பொரு முறை ஒரு வெளி நாட்டு தொலைக்காட்சி சேனலில் Victorinox நிறுவனம் எப்படி Swiss army knifeகளை தயாரிக்கிறது என ஒரு டாக்குமென்டரி படம் பார்த்தேன். அது முதல் அந்த கத்தியை வாங்க வேண்டும் என்பது என் ஆவல். ஸ்விட்சர்லாந்திற்கே சென்ற போது அந்த கத்தியை வாங்க மிகவும் விரும்பினேன். பல ரகங்களில், தரங்களில், விலைகளில் இந்த கத்தி உள்ளது. ஆரம்ப விலையே 20+ யூரோக்கள்.
Officer’s knife என்னும் பொருளில் அமைந்த ஜெர்மன் வார்த்தை “Offiziersmesse” தான் இதன் பெயர். அமெரிக்க வீரர்களால் அந்த வார்த்தையை உச்சரிக்க சிரமமாக இருந்ததால் Swiss army knife என அவர்கள் அழைத்தனர். பின்னர் அதுவே உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்ட பெயராக மாறி விட்டது.
கத்திகளையும் சாக்லேட்டுகளையும் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வந்தேன். ☹பல வண்ணங்களில் சாக்லேட்டுகள் இருந்தன.
இரண்டு பேராக சேர்ந்து வாங்கினால் தான் 75 யூரோக்களுக்கு வாங்க முடியும் என்பதால் நண்பர் ஒருவருடன் சேர்த்து ஒரே invoice ஆகப் போட்டோம். விற்பனையாளர் வட இந்தியப் பெண். அப்படி போட முடியாது என சொல்லாமல் வேறு மாதிரியாகப் பேச, எங்களுக்கும் கோபம் வந்தது. சில வார்த்தைகள் மட்டும் எதிர்த்துப் பேசி விட்டு அமைதியானோம். வெளி நாட்டுப் பயணங்களில் அங்கு வசிப்பவர்கள் நம்மிடம் வம்பு சண்டைக்கு வந்தாலும் நாம் ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று முன்பே கூறியுள்ளேன் இல்லையா? அதை நினைவில் வைத்திருந்து ஒதுங்கிக் கொண்டோம்.
ஒரு வழியாக பேசி வியாபாரத்தை முடித்துக் கொண்டோம். நாங்கள் யூரோவை தந்தோம் மீதி சில்லரை ஸ்விஸ் பிராங்குகளாக தந்தார் கடைக்காரப் பெண்மணி. நாங்கள் சண்டையிட்டதற்கு பழிக்குப் பழியாக குக்கூ கடிகார பிரிட்ஜ் மேக்னட்டில் ஒரு பெண்டுலம் மட்டும் இருப்பது போல பழுதடைந்த ஒன்றை போட்டு விட்டார்.விடுதிக்கு வந்த பிறகு தான் கவனித்தோம்.
Casa grandeயில் 200 யூரோக்கள் தான் கடிகாரங்களின் ஆரம்ப விலை அதையே விலை அதிகம் என்று கூறிய எங்களுக்கு இந்த கடையில் ஆரம்ப விலை 2,000 யூரோக்கள் என்றதும் தலை சுற்றியது.
[20,000.00 என
நாம் எழுதுவது போல ஐரோப்பாவில் எண்களை எழுதுவதில்லை. Thousand seperatorsஐ குறிக்கையில்
Decimal dotஐயே பயன்படுத்துகிறார்கள். Decimal எண்களைக் குறிக்க Commaவை பயன் படுத்துகிறார்கள்.
பெட்ரோல் பங்குகளில் €130,00 என எழுதி இருந்ததை முதல் முறை பார்த்த போது வித்தியாசமாக
இருந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் கமா போடும் இடத்தில் அவர்கள் புள்ளி வைக்கிறார்கள்
அல்லது ஒரு இடைவெளி விடுகிறார்கள். நாம் புள்ளி வைக்கும் இடத்தில் அவர்கள் கமா போடுகிறார்கள்.]
USA and Other countries |
Europe |
$20,000.55 |
€20.000,55
or €20 000,55 |
முன்பே குறிப்பிட்டிருந்தேன் வெளிநாட்டு பயணங்களில் எங்கு பணத்தை செலவு செய்தாலும் சரியான அளவு பணத்தை (சில்லறை) தர வேண்டும் இல்லையென்றால் அவர்கள் நாட்டுப் பணத்தை தந்து விடுவார்கள் அதை செலவு செய்வது கடினம் என்று. Casa grande கடையில் மீதி சில்லறையாகக் கொடுத்த ஸ்விஸ் பிராங்குகள் இப்போது எங்கள் கையில்.
அதை எப்படி செலவு செய்வது என்று யோசித்தோம். தெரு முனையில் இருந்த ஒரு கடையில் ஒரு குழுவாக சென்று டீ வாங்கிக் குடித்து அந்தப் பணத்தை செலவு செய்தோம்.
சற்றே நிதானதிற்கு வந்து சுற்றுப் புறக் காட்சிகளைக் காண ஆரம்பித்த போது எதிரில் தெரிந்த ஏரியும், அதில் மிதந்து கொண்டிருந்த வாத்துக்களும், பின்புலத்தில் தெரிந்த பனி படர்ந்த மலைகளும், துல்லியமான நீல வானமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அற்புதமாகக் காட்சியளித்தன. நகரின் நடுவில் நீர்நிலை அதில் மிதந்து செல்லும் வாத்துக்கள் என்பதெல்லாம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத காட்சி.
வாத்துக்கள் அசைந்து அசைந்து நகர்ந்த போது Edmund Spencer என்னும் இங்கிலாந்து கவிஞரின் Prothalamion என்னும் கவிதை நினைவுக்கு வந்தது. [Prothalamion என்பது நிகழப் போகும் திருமணத்தை சிறப்பிக்கும் வகையில் பாடப்படும் கவிதை/பாடல் வகை. Spencerன் கவிதையை படிக்கும் போது ஆற்றில் அன்னப்பறவை அசைந்து அசைந்து நகர்வது போல ஒலிக்கும்.]
ஏரிக்கு சற்று தொலைவில் ஒரு குன்றின் மேல் தெரிந்த 1633 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இரட்டை ஊசிக் கோபுரங்களை உடைய Church of St.Leodeger என்னும் கத்தோலிக்க தேவாலயம் மிக அருகில் தெரிந்தது.
பேருந்து நிறுத்தம் அருகில் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. நாங்களே 80 பேர். 😊
முதல் நாள் Frankfurt நகரில் சந்திக்கத் தவறிய நண்பருடன் எங்கல்பர்க்கை அடைந்த பிறகு தொலை பேசியதில் அவரிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. ஸ்விட்சர்லாந்து நாட்டில் பால் பண்ணைகள் அதிகம் உள்ளதால் சுவையான சீஸ் மிக மலிவான விலையில் கிடைக்கும். 20 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அதே போல சாக்லேட்டுக்களை வீடுகளில் தயாரித்து கிலோ கணக்கில் தராசில் நிறுத்தி விற்பனை செய்வார்கள். Lucerne ரயில் நிலையம் அருகில் இவைகளை நடைபாதையில் வைத்து விற்பார்கள். அவசியம் ஊருக்கு வாங்கி செல்லுங்கள் என்று கூறினார் நண்பர்.
அங்கே பேருந்தை நிறுத்தினால் நம் வழிகாட்டிக்கு கமிஷன் கிடைக்காது என்பதால் எவ்வளவு கேட்டும் பேருந்தை நிறுத்தவில்லை.
எங்கல்பர்க்கை நோக்கி செல்லும் போது எங்கள் பேருந்து நகரின் முக்கிய கட்டிடங்கள், சர்ச்சுகள், Chapel bridge என கடந்து சென்றது. (Lucerne panoramic city tour)
Lucerne நகரின் பழமையான மற்றும் புதுமையான கட்டிடங்களைக் கண்டு களித்த படி ஏரிக்கரை ஓரமாகப் பயணித்து மீண்டும் மலைகளின் ஊடே பயணம் ஆரம்பம். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் இல்லையென்றாலும் திருப்பங்கள் கொண்ட சாலை என்பதால் தலை சுற்றி வாந்தி வருவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆயினும் ஜன்னலின் வழியே தெரிந்த குட்டி கைலாய மலைகளை கண்டு ரசித்த வண்ணம் எங்கல்பர்க் நகருக்குள் மீண்டும் நுழைந்தோம்.
விடுதியின் வாசலில் 4.15 மணியளவில் இறக்கி விடப்பட்டோம். 8 மணிக்குத் தான் இரவு உணவு அது வரை ஓய்வெடுங்கள் என்று கூறினார் வழிகாட்டி.
அறைக்கு சென்று
சில நிமிடங்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் நானும் என் கணவரும் மற்றொரு நண்பருடன்
எங்கல்பர்க்கை கால் நடையாய் சுற்றிப் பார்க்க
கிளம்பினோம். சூரியன் அப்போதே மறையத் தொடங்கி விட்டது. குளிர் தெரியவில்லை. இருட்டிய
பிறகு குளிரலாம் என்ற எண்ணத்தில் லேசான ஜாக்கெட்டை மட்டும் அணிந்து கொண்டோம்.
கிளம்பிய சில நிமிடங்களில் இருட்டி விட்டது. சிறிய ஊர் அதுவும் மலையடிவாரத்தில் உள்ள ஊர் என்பதால் வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லை. டிட்லிஸ் மலையுச்சிக்கு செல்லும் கேபிள் கார்கள் மாலை 5 மணிக்கு மேல் ஓடாது. 5.15 மணிக்கு மலையுச்சியிலிருந்து கடைசி Gondola கிளம்பும். ரயில்களும் ஓடவில்லை.
அந்த ஊரின் கடைவீதி
என்பது மிகச் சில கடைகளே. அவைகளில் மரத்தாலான கைவினைப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை
விற்பனைக்கு வைத்திருந்தார்கள். கடைகள் மாலை 5 மணியளவிலேயே மூடப்பட்டு விட்டன. அவற்றின்
கண்ணாடி ஜன்னல் வழியாகத் தான் வேடிக்கை பார்த்தோம். ஒரு கடையில் மலையில் கிடைக்கும்
கற்களை வகைப்படுத்தி விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கடையில் பல இந்திய மொழிகளில் வணக்கம் எனப் பொருள்படும் வார்த்தைகள் எழுதப்பட்ட கடை இருந்தது.
எங்கல்பர்க் ரயில் நிலையத்திற்குள்ளே நடந்து சென்று வேடிக்கை பார்த்து, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எஞ்சின் மேலே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அடுத்த ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு என Display board காட்டியது.
ஊருக்குள் நடந்து சென்ற போது வரிசையாக சிறிய கட்டிடங்கள் ஒட்டி ஒட்டி கட்டப்பட்டிருந்தன. அவைகள் அனைத்தும் பல வங்கிகளின் கிளைகள். ஸ்விட்சர்லாந்து வங்கித் தொழிலுக்குப் பெயர் பெற்றது என்று நாம் அறிவோம். ஒற்றை விளக்கொளியில் தெரிந்த அவைகளின் அருகில் நின்று, கண்ட போது எந்தெந்த வங்கியில் யார் யாருக்குக் கணக்கு இருக்கிறதோ ஒவ்வொரு வங்கியும் எத்தனை ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ என்று தோன்றியது.
ஸ்விட்சர்லாந்து நாடு Tax Haven என்று அழைக்கப் படும் நாடுகளில் ஒன்று. வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வட்டி கிடைக்கும் என்பதால் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் பல முக்கிய பிரமுகர்கள் ஸ்விஸ் வங்கிகளில் தங்களின் கருப்பு பணத்தை சேமித்து வைக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் தான் எப்படி ஒரு முக்கியமான இந்திய அரசியல் பிரமுகரின் “Lotus” என்னும் பெயருடைய ரகசிய வங்கிக் கணக்கைக் கண்டறிந்தேன் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அப்போது அது மிகவும் பரபரப்பாகப் பேசப் பட்டது. கட்டுரையை படித்த போது அதன் பொருள் புரியவில்லை. நேரில் அந்த வங்கிகளைக் கண்ட போது தான் அதன் பரிமாணம் புரிந்தது.
சற்றுத் தொலைவு நடந்ததும் சல சலவென நீரின் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்க்கையில் பனி உருகி நீராகி வாய்க்கால் வழியாக ஊரின் நடுவில் சென்று கொண்டிருந்தது.
மேலும் சில நிமிடங்கள் ஊரின் பல பகுதிகளையும் நடந்து சென்று பார்த்தோம். மலைப் பிரதேசம் என்பதால் சாலைகளில் நடக்க சிரமமாக இருந்தது. Elevationல் படிக்கட்டுகளில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக அருகில் இருந்தோம். குகையை கடக்காமலே மாற்றுப் பாதையில் எங்களுக்கே தெரியாமல் விடுதியை அடைந்து விட்டோம்.
முக்கியமான ஒரு செய்தியை சொல்ல மறந்து விட்டேனே! எங்கெங்கும் பனி இருந்தாலும் எங்கல்பர்க்கில் நாங்கள் இருந்த நாட்களில் குளிரவே இல்லை. இரவிலும் குளிர் இல்லை. செயற்கையாய் விடுதியில் ஏற்படுத்தப் பட்டிருந்த air conditionerன் குளிர் தான் இருந்தது. அவை centralized என்பதால் நம்மால் அறையில் உள்ள regulatorஐ உபயோகித்துக் குறைக்கவும் முடியவில்லை. [அநேகமாக எல்லா ஊரிலும் இந்த தொல்லை இருந்தது]
பல வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களில் கதாநாயகி மெல்லிதான உடை அணிந்து பனியின் மேல் படுத்து உருண்டு நடனம் ஆடும் போது குளிராதா என்று தோன்றும். மெல்லிய உடலை ஒட்டிய Thermal ஆடைகளை அணிந்து அதன் மேல் மற்ற ஆடைகளை அணிவார்கள் என்பது அப்போது தெரியாது. மேலும் வெய்யில் நேரத்தில் பனியின் மேல் நின்றாலும் உருண்டாலும் குளிர் தெரியாது.
[சாலிக்கிராமத்தில் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் பல வருடங்களுக்கு முன் ஒரு திரைப்பட நிறுவனம் இருந்தது. அவர்கள் காலி செய்து சென்ற பல மாதங்களுக்கு அவர்களுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து எங்கள் நாட்டிற்கு வந்து திரைப்படம் ஷூட்டிங் செய்யுங்கள் மற்ற நாடுகளை விட இங்கே படப்பிடிப்புக்கான செலவு மிகக் குறைவு என brochures வந்தன. அழகழகான இயற்கைக் காட்சிகள் அச்சிடப்பட்டு post card போல வரும். Sealed cover இல்லை என்பதால் அநாதையாய் தரையில் கிடந்த அவைகளுக்கு ஆதரவு தந்து படித்ததன் விளைவு தான் மேலே சொன்னவைகள்.]
விடுதி அறைகளில் மற்றொரு தொல்லை குடிதண்ணீர் குழாய் தனியாகக் கிடையாது. ஐரோப்பாவில் குடிதண்ணீருக்கான குழாய்கள் கிடையாது. எந்தக் குழாயில் வேண்டுமானாலும் பிடித்து அருந்துங்கள் என்று மிகப் பெருமையாக கூறுகிறார்கள். குளிக்கும் அறை குழாயில் தண்ணீரை பிடித்துக் குடிப்பது என்பது நம் மனநிலைக்கு ஒவ்வாமல் இருந்தது. சகோதரி கலா தினமும் ஒரு முறையாவது இது பற்றிக் குறிப்பிடுவார்.
ஆனால் தற்சமயம் பிரான்சு தேசத்தின் பாரிஸ் நகரில் நீர்நிலைகளில் உள்ள நீரை நூதனமான முறையில் சுத்திகரித்து (sparkling water) நகரெங்கும் குடிநீர் குழாய்களை நிறுவி உள்ளார்கள். இலவச குடிநீர் தான். ஆங்காங்கே Single use water bottleகளை வைத்திருக்கிறார்கள். அதை வாங்கி நீரை நிரப்பிக் குடிக்க வேண்டும். பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு நாளில் சுத்திகரிக்கப்பட்டு, செலவழிக்கப் படுகிறது. சுற்றுலாப் பயணிகள் புழங்கும் இடம் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு.
[“Down to earth with Zach Efron” என்னும் நிகழ்ச்சியின் மூலம் [Netflix] மேற்கண்ட விவரங்களை அறிய நேர்ந்தது. Noncoventional resources மூலம் எப்படி உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன என்பது பற்றிய டாக்குமென்டரி சீரியல் இது.
ஐஸ்லாந்தில் பனி மட்டும் தான் இருக்கும் என்பது நம் பொதுக் கருத்து. அந்த நாடு வென்னீர் ஊற்றுக்களுக்கும் புகழ்பெற்றது. கேக் செய்வதற்கான பொருட்களைக் கலக்கி வென்னீர் ஊற்றின் அருகில் மணலில் பாத்திரத்தோடு புதைத்து வைத்து விட்டு 24 மணி நேரங்கள் கழித்து எடுத்தால் கேக் தயார். அங்கேயே ஆம்லெட் மற்றும் பல உணவுகளை சமைக்கிறார்கள். இப்படி பல நாடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் இந்த சீரியலில் காணலாம்.]
இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்று மறுநாள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு உறங்கினோம்.
மறுநாள் காலை கிளம்புவதற்கு முன் மறக்காமல் Universal adopter ரிசப்ஷனில் திருப்பி கொடுத்து டெபாசிட்டை வாங்கிக் கொண்டேன். அம்மா adopterஐ மறக்காமல் கிளம்புவதற்கு முன்பு திருப்பி கொடு _ மகள். 150 ரூபாய்கள் மதிப்புள்ள அடாப்டருக்கு எதற்கு 1500 ரூபாய்கள்[75 * 20] என்பது அவர் கருத்து.
காலை உணவை முடித்துக் கொண்டு எங்கல்பர்க்கை விட்டுக் கிளம்பி Lucerne, Zurich வழியாக ஸ்விட்சர்லாந்து - ஜெர்மனி எல்லையில் அமைந்துள்ள Rhine fallsஐக் காணப் பயணப் பட்டோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.
எங்கெங்கு பேருந்து நிற்காதோ அங்கே Panoramic city tour என்று எங்கள் சுற்றுலா நிகழ்ச்சி நிரலில் அச்சிட்டிருந்தார்கள். 😊 அப்படிப்பட்ட ஒரு tour Zurich நகரில் எங்களுக்குக் கிடைத்தது.
Panoramic city tour சென்ற சமயங்களில் வழிகாட்டி செல்லும் இடத்தைப் பற்றிய தகவல்களை மைக்கில் சொல்லிக் கொண்டே வருவார்.
இந்த நகரம் ஐரோப்பாவின் பெரிய நகரம் ஆகும். Zurich Cantonல் அமைந்துள்ளது இந்த நகரம். [Canton = மாவட்டம்] இந்த ஊரின் ஏரி ஊரின் பெயரிலேயே Lake Zurich என அழைக்கப் படுகிறது. ஐரோப்பாவில் உள்ள ஊர்களின் ஆறுகள்/ஏரிகள் பெரும்பாலும் அந்தந்த ஊரின் பெயரிலேயே அழைக்கப் படுகின்றன.
மேலும் சிறிது நேரப் பயணத்தில் ரைன் நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் Schaffhausen என்னும் பெயருடைய ஊரில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. Upper Rhine நதியினை சேர்ந்தது என்பதால் ரைன் நீர்வீழ்ச்சி என்று பெயர் பெறுகிறது.
Zurich நகரிலிருந்து ரயிலிலும் இந்த நகரை சென்றடையலாம். இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பசுமையான விவசாய நிலங்கள் உள்ளன. திராட்சை தோட்டங்கள் நிறைந்த பகுதி இது.
நீர்வீழ்ச்சியின் அருகில் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டதும் படகில் சென்று நீர்வீழ்ச்சியை அருகில் காண விரும்புபவர்கள் சென்று வரலாம் என்று கூறப்பட்டது. பயணத் திட்டத்தின்படி “அதோ பாருங்கள் அது தான் ரைன் நீர்வீழ்ச்சி” என்று சொல்வதுடன் என் வேலை முடிந்தது. படகில் அழைத்து செல்ல மாட்டேன் விரும்பியவர்கள் அவரவர் சொந்தப் பணத்தில் சென்று பார்த்து வரலாம் என்பது அதன் பொருள்.
அங்கிருந்த படகுத் துறையிலிருந்து Short trip, Long trip எனப் பல விதமான படகு பயணங்கள் உள்ளன. நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் செல்லும் படகினை தேர்ந்தெடுத்து (10 யூரோக்கள்) அனைவரும் சென்றோம். நீர்வீழ்ச்சியை நோக்கிய பயணம் என்பதால் நீரின் ஓட்டத்திற்கு எதிராகப் படகு சென்றது. நுரையுடன் ஓடிய ஆற்றின் நீர் மற்றொரு பச்சை toneல் காட்சியளித்தது.
நீர்வீழ்ச்சியை
அருகில் காணும் வகையில் அதன் இருபக்கமும் 50+ படிக்கட்டுக்கள் அமைத்திருக்கிறார்கள். மலையில் ஏறுவது போல ஒவ்வொருவராக கேமரா சகிதம் அனைவரும்
மேலேறி நின்று அருவியினை பக்கத்தில் நின்று பார்த்தோம். அருவி விழும் இடம் ஸ்விட்சர்லாந்து
அதற்கு முன்பு ஜெர்மனி என்பதால் அந்தப் பகுதியிலுள்ள
கட்டிடங்களையும் காண முடிந்தது.
கீழிறங்கி மற்றொரு பகுதியில் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் உதவி விட்டு மீண்டும் படகில் ஏறி கரையை வந்தடைந்தோம்.
உலகளவில் பொதுவாக எங்கு நீர்வீழ்ச்சி இருந்தாலும் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் மின் நிலையம் அமைத்து மின்சாரம்(hydel electric power) உற்பத்தி திட்டத்தை பல வருடங்களுக்கு முன்பு ஸ்விட்சர்லாந்து பாராளுமன்றத்தில் முன் வைத்தார்களாம். எதிர் கட்சியினர் மறுத்து வோட்டு போட்டு அதை தடுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் பின்னாளில் ஆட்சிக்கு வந்த போது எதிர்காலத்தில் எப்போதுமே அங்கே மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றினார்களாம்.
மின்சாரம் உற்பத்தி செய்தால் வரும் வருமானத்தை விட சுற்றுலா பயணியரின் வருகை மூலம் அதிக வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைக்கிறது என்கிறார்கள்.
எங்கல்பர்க்கில் இருந்த போதும் ரைன் நீர்வீழ்ச்சியில் இருந்த போதும் மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. எங்கள் பயணம் கெடாமல் மழை பெய்தது. 😊
Schaffhausen நகரம் இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி அமைந்துள்ளது. அங்குள்ள Little India உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு அந்த ஊரில் சற்று நேரம் இளைப்பாறினோம். எதிரில் ஒரு மணிக்கூண்டும், சிறிய shopping complexல் பூக்கடையும் இருந்தன. வித்தியாசமான நிறங்களில் பல பூக்கள்அந்தக் கடையில் இருந்தன. அங்கிருந்த மற்றொரு கடையில் 2-3 யூரோக்கள் விலையில் கிடைத்த நல்ல சாக்லேட்டுகளை வாங்கினோம். உணவகம் இருந்த பகுதி அமைதியாக இருந்தது.
Trubsee-எங்கல்பர்க் வரும் போதே Schaffhausen நகருக்கு சென்று நீர்வீழ்ச்சியை பார்ப்பது தான் original பயணத் திட்டம். ஜெர்மனியின் பனி மூட்டம், தொடர்மழை, சாலை விபத்து போன்றவைகளால் திட்டமிட்டபடி நீர்வீழ்ச்சியைக் காண இயலவில்லை என்பதால் ஸ்விட்சர்லாந்திலிருந்து வெளியேறும் சமயம் நீர்வீழ்ச்சி வழியாக சென்றோம்.
அழகான ஸ்விட்சர்லாந்தை அருகில் கண்டு களித்த மகிழ்ச்சியுடன் பேருந்தில் ஏறி ஆஸ்திரியா நாட்டின் Wattens நகரை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.
அனுபவங்கள் தொடரும்…