April 12 & 13, 2016
பாரிஸ் நகரின் ஹில்டன் விடுதியின் சுவை மிக்க காலை உணவை உண்டு முடித்ததும் ஜெர்மனியின் Frankfurt நகரினை நோக்கிய 573 கிலோமீட்டர் பயணம் ஆரம்பம் ஆகும் முன்பாக…
மற்றவர்களுக்காகக் காத்திருந்த நேரத்தில் கண்ணில் தென்பட்ட சில விஷயங்களை பகிர்கிறேன்.

மிக நீண்ட ஆறு மணி நேரப் பயணம் என்பதால் வழிகாட்டி எல்லாரும் சீக்கிரம் ஏறுங்கள் “Let us move the hotel” என்று அவசரப்படுத்திக் கொண்டு இருந்தார். புரிந்தவர்கள் சிரிக்க மற்றவர்கள் திரு திருவென விழிக்க, காயத்ரி மந்திரம் சொன்ன பிறகு பேருந்து கிளம்பியது.
காயத்ரி மந்திரத்தைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என் கட்டுரைகளில். அந்த மந்திரத்தின் பொருளையும் தெரிந்து கொண்டு ஜெர்மனிக்குப் பயணிப்போம்.
இது அனைவருக்கும் பொதுவான மந்திரம். காயத்ரி மந்திரத்திற்கு “சாவித்திரி” என்று பெயர்.
இந்த செய்யுள் “காயத்ரி” என்னும் பெயருடைய மூன்று வரிகளில் 24 எழுத்துக்கள் என்ற அமைப்பை உடைய இலக்கணத்தில் [காயத்ரி சந்தஸ்] அமைந்துள்ள சமஸ்கிருத மொழி செய்யுள். [நன்றி: கூகிள்]
பாரிஸிலிருந்து கிளம்பி Autoroute/Autobahn எனப்படும் highway சாலைகளில் பயணத்தைத் தொடங்கினோம். அகலமான சாலைகள். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகப் பயணம்.
உட்புற சாலைகள் குறுகலாக இருந்தாலும் highway சாலைகள் அகலமாக உள்ளன.
பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுமே வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கோட்டை கொத்தளங்களைக் கொண்டவை என முன்பே குறிப்பிட்டிருந்தேன். வழியெங்கும் சிறு குன்றுகளின் மேல் கட்டப்பட்ட கோட்டைகள், தெரு முனை தேவாலயங்கள், சிறு வீடுகள் தென்பட்டன.
ஐரோப்பிய நாடுகளின் மற்றொரு சிறப்பான பச்சைப் புல்வெளிகள் (pastoral lands), பல வண்ணப் பூக்கள் (ஜெர்மனியில் செர்ரிப் பூக்கள், மஞ்சள் நிறப் பூக்கள், டுலிப் பூக்கள் ஆகியவை காணப்பட்டன. வழியெங்கும் ஏக்கராக் கணக்கில் Daffodil வயல்கள். புல்வெளியின் நிறத்துடன் ஒத்து காணக் கண்கொள்ளாக் காட்சி.
பேருந்தின் உள்ளே “தோழா” திரைப்படம் காண்பிக்கப் பட்டது. அந்த படத்தின் பல காட்சிகள் பாரிஸ் நகரில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. நாங்கள் பார்த்த இடங்களை மீண்டும் தொகுத்து எங்களுக்காக வழங்கப்பட்டது போன்ற உணர்வு தோன்றியது.
ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் ரெஸ்ட் ரூம்கள் பொது மக்களின் வசதிக்காக அமைக்கப் பட வேண்டும் என்பது உலகளவில் உள்ள விதி. இந்தியாவை தவிர நான் சென்ற மற்ற நாடுகளில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு இருந்தன.சுற்றிலும் பச்சைப் புல்வெளியுடன் மனதுக்கு இதமான இடமாக இருந்தது. அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
மழை நின்றதும் மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. இம்முறை பாஹுபலி 1 படம் திரையிடப்பட்டது.
ஏற்கனவே பலமுறை பார்க்க முயற்சித்து வசனங்கள் தெளிவாக கேட்கவில்லை என்று பார்க்காமல் நிறுத்தி வைத்திருந்தேன். பேருந்தில் வெளிப்புற சத்தம் உட்புறம் கேட்காது என்பதால் தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வு. பேருந்தின் உள்ளே audio & video systems இரண்டுமே அருமையோ அருமை. ஜன்னல் வழியே வேடிக்கையும் பார்த்துக் கொண்டே பயணித்தோம்.
ஜெர்மனிக்குள் பிரவேசித்து விட்டோம்.
ஒரு ஆறு, அதன் குறுக்கே ஒரு பாலம். பாலத்தை கடந்தால் ஜெர்மனி நாட்டின் எல்லை check post.
வழியெங்கும் Platz, hof/bourg/ berg, Strasse போன்ற வார்த்தைகள் தென்பட்டன. [City Square, பட்டி/பாக்கம்/மலை, சாலை]
பிராங்க்பர்ட் நகரை அடைவதற்குள் ஜெர்மன் தேசத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?
ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நாடு வனங்கள், ஆறுகள், நதிகள், மலைத் தொடர்களுக்கும், வடக்கு கடல்[North Sea] கடற்கரைகளுக்கும், Bread, Beer, Sausages, Culture, History, Black forest, Alps and Oktoberfest போன்றவைகளுக்கும் பிரசித்தி பெற்றது.
BMW கார்கள் [Munich, Bavaria], Thyssenkrupp Elevators [Essen] பற்றியும் நாம் அறிவோம். அவைகளும் இந்த தேசத்திற்கு உரியவையே.
இரண்டாம் உலகப் போருடன் தொடர்புடைய பல இடங்களையும் இங்கே காணலாம்.
இதன் தலைநகரம் பெர்லின். இங்கே தான் பிரசித்தி பெற்ற பெர்லின் சுவர் எழுப்பப் பட்டு பின்னர் இடிக்கப் பட்டது. கிழக்கு பெர்லின் நாட்டை
சேர்ந்த பிரமுகர் இந்த சுவரைத் தாண்டி செல்ல மேலும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன அதை பின்பற்றி மக்கள் கிழக்கு மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே சென்று வரலாம் என்று எழுதப் பட்டிருந்த உரையை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படிக்கும் போது அனைத்து தடைகளும் நீக்கப் பட்டு விட்டன என்னும் பொருளில் ஒரு வார்த்தையை மாற்றி தப்பாக படித்ததன் விளைவாக ஜெர்மன் சுவர் மக்களால் இடிக்கப் பட்டதாக வரலாறு. சிறு தவறால் மாறிய வரலாறு என்னும் தலைப்பில் இந்த நிகழ்வும் குறிப்பிடத் தக்கது [தவறான மொழிபெயர்ப்பால் ஜப்பானின் மீது அணுகுண்டு வீசப்பட்டது.]
ஜெர்மனி என்றாலே ஹிட்லர், பிஸ்மார்க், ஐன்ஸ்டீன், நீட்சே, கார்ல் மார்க்ஸ் & எங்கல்ஸ்(Das Capital) எனப் பலரையும் நம் நினைவுக்கு வராமல் போகாது. [John Boyne அவர்களால் 2006 ஆம் வருடம் எழுதப்பட்ட “The boy in the striped pajamas” என்னும் புத்தகத்தைப் படியுங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.]
ஜெர்மன் தேச மக்கள் தங்கள் நாட்டை “தந்தை நாடு” எனக் குறிப்பிடுகிறார்கள்.அவர்களின் தேசிய கீதம் “Flourish
in the radiance of this fortune, Flourish, German Fatherland! (Deutsches
Vaterland) என முடிகிறது.
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாரதியார் பாடி இருந்தாலும் சுதந்திரப் போராட்ட காலத்தில் “வந்தே மாதரம்”(தாயை வணங்குகிறேன்) என்ற பதம் பிரசித்தி பெற்று பாரதத்தை தாய் நாடு என்று குறிப்பிடுகிறோம்.
தாய் நாடு, தந்தை நாடு இப்போது நமக்கு தெரியும்…
இதன் Gender Neutral பதம் என்ன தெரியுமா?
Homeland (USA போன்ற நாடுகள் இப்படி கூறுகின்றன.)
பிராங்க்பர்ட் நகரை வந்தடைந்து விட்டோம்.
“காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி” என “நினைத்தாலே இனிக்கும்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் வரும். [Concorde விமான காலம் அது]
கிட்டத்தட்ட அதே போல காலை உணவு பிரான்சு(பாரிஸ்), மதிய உணவு (லக்சம்பர்க்), இரவு உணவு ஜெர்மனி(பிராங்க்பர்ட்) என மூன்று மாகாணங்களில் ஒரே நாளில் பயணித்தோம். அதற்கு காரணம் இந்தியாவில் அருகருகே மாநிலங்கள் இருப்பது போல அங்கே நாடுகள் இருக்கின்றன.ஐரோப்பிய நாடுகள் பரப்பளவில் சிறியவை.
பிராங்க்பர்ட் நகரில் Main என்னும் நதி பாய்கிறது. அதனால் அதன் பெயர் Frankfurt Am Main என்றழைக்கப் படுகிறது. நகரின் வளர்ச்சி பெருகப் பெருக அதன் அருகிலுள்ள ஊரான Offenbach Am Main உடன் இணைந்து இரட்டை நகரங்களாக உள்ளன. [சென்னை என்பது கூடுவாஞ்சேரியை தாண்டி செங்கல்பட்டு வரை தொடர்கிறது இல்லையா? இது போன்ற வளர்ச்சிக்கு “Conurbation” என்று பெயர்.]
ஐரோப்பாவில் இலவச Restroomகள் கிடையாது என்பதால் அதற்காக எங்களை அங்கே இறக்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் 2-3 யூரோக்கள் செலவு என்பதால் எங்கள் வழிகாட்டி இலவச restroomகள் இருக்கும் இடங்களில் தான் பேருந்தை நிறுத்த செய்வார்.
Restroomகள் இங்கே WC (Water Closet) என்று குறிப்பிடப்பட்டு ஆண், பெண், சக்கர நாற்காலி, சிறு குழந்தை ஆகிய படங்கள் வரையப்பட்டு இருக்கும்.
ஜெர்மனியின் Toilet Commodeகள் மற்றெந்த நாட்டையும் விட வித்தியாசமான அமைப்பில் இருக்கும்.
முற்காலத்தில் கழிவுகள் நன்னீர் ஏரி மற்றும் ஆறுகளில் கலக்கும் வண்ணம் அமைக்கப் பட்டு இருந்ததால் நீர் நிலைகள் மாசு படாமல் இருப்பதற்கான வழிமுறையாக மனிதனுக்கு வயிற்றில் ஏதேனும் பூச்சி (Ascaris – நாக்குப் பூச்சி என்பார்கள்), infection இருக்கிறதா என்பதை மலத்தை பார்த்து(?!) வைத்தியம் செய்வார்களாம். அதற்கு வசதியாக தான் மேற்சொன்ன Commode அமைப்பு.
தற்காலத்தில் அது போன்ற முறைகள் மாறி விட்டாலும் Commodeன் அமைப்பு.அதே தான். இந்த வகை Commodeல் திரவம்(Liquid) முதலிலும் திடப் பொருட்கள்(Solid) Flush செய்த பிறகும் குழாயின் உள்ளே செல்லும். தண்ணீரை Flush செய்வதற்கும் இரண்டு buttonகள் உண்டு. No.1ற்கு ஒன்றும் No.2ற்கு ஒன்றுமாக தனித் தனியாக இருக்கும். தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.
WC க்கு இவ்வளவு விளக்கமா என்று யோசிக்கிறீர்களா? ஜெர்மனியின் WC கூட Special ஆக இருக்கிறதே!
Frankfurt நகரம் Lufthansa Airlinesன் தலைமையகம். பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் செல்கின்றன என்பதால் கூட்ட நெரிசலான விமான நிலையம்.
அமெரிக்கா செல்பவர்கள் இந்த விமானத்தில் பயணித்தால் கண்டிப்பாக இந்த நகரை தாண்டித் தான் செல்ல வேண்டும். நம் கிராமத்து பேருந்து நிலையங்கள் போல மக்கள் தரையில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள் என்று என் சகோதரி முன்னொரு முறை கூறினார். உள்ளே சென்று காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் செக்-இன் பகுதி வரை பார்க்க முடிந்தது.ஜெர்மனியின் Hesse என்னும் மாநிலத்தில் அமைந்துள்ள இந்நகரம் வணிகம், கலை, கலாச்சாரம், கல்வி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மையமாக (Hub) உள்ளது. European Central Bank, Deutsche bank, DZ bank போன்ற பல வங்கிகளின் தலைமையிடமாக உள்ளது. Europe stock exchange இந்த ஊரில் தான் உள்ளது. கல்விக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் தான் புகழ்பெற்ற Goethe University, Goethe museum ஆகியவை உள்ளன.[Goethe புகழ்பெற்ற எழுத்தாளர்]
எந்த அளவுக்கு புராதனக் கட்டிடங்களைக் கொண்டதோ அதே அளவுக்கு நவீன அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் கொண்டது இந்த நகரம்.
மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல இந்த நகரமும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சேதமடைந்து, மீண்டும் புதுப்பிக்கப் பட்டது தான்.
மாலையில் அந்த நகரத்தை சுற்றிப் பார்த்தோம்.
வழியில் ஆங்காங்கே ரயில் நிலையங்கள் தென்பட்டன. (Bahnhof- Railway
station, Hauptbhanhof – Central Station)
முக்கியமான கட்டிடங்களை, தெருக்களைக் கடந்து அந்த நகரின் மையப் பகுதியில் உள்ள Altstadt (Old town) பகுதியை சென்று சேர்ந்தோம். இரண்டாம் உலகப் போரின் போது சிதிலமடைந்து மீண்டும் புதுப்பிக்கப் பட்ட பகுதி இது. தற்காலத்தில் நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
Romerberg என்னும் பெயருடைய அந்த வரலாற்று சிறப்பு மிக்க Squareல் தான் வருடாந்திர கிறிஸ்துமஸ் சந்தை நடைபெறுகிறது. மிகப் புராதனமான St Nicholas தேவாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
அரசாங்க அலுவலகமாக (City Hall) இந்த கட்டிடங்கள் பயன்படுகின்றன. மூன்றடுக்கு மாடி வீடுகளான இவைகள் 10 ஆயிரம் சதுர அடி அளவில் ஒன்பது வீடுகளுடன் உள்ளன. புராதன மற்றும் தற்கால கட்டிடக் கலைகளைப் பின்பற்றி கட்டப் பட்டுள்ளன.
முற்காலத்தில் ஒரு வணிகரிடமிருந்து அரசாங்கம் விலைக்கு வாங்கி பயன்படுத்த தொடங்கியது. அது இன்றளவும் தொடர்கிறது.
புகைப்படத்தில் பச்சை நிற கோபுரம் தெரிகிறதே அது தான் நிகோலாஸ் தேவாலயம். நாங்கள் அங்கே சென்ற நேரத்தில் அந்த கோபுரத்தின் மீது தோன்றிய வானவில் பச்சை நிறத்துடன் ஒத்துப் போய் அந்த தேவாலய கோபுரத்தின் (Altar) அழகினை பல மடங்கு அழகாக்கிக் காட்டியது.
மற்ற ஐரோப்பிய Squareகளைப் போல இந்த கட்டிடங்களும் பால்கனியுடன், நுணுக்கமான கலை வேலைப்பாடுகள், சிற்பங்களுடன் கூடிய அமைப்பாக இருந்தன. இந்த பகுதிக்கு வெளியே cobble stoneகளால் அமைக்கப் பெற்ற பகுதியில் தான் கிறிஸ்துமஸ் மார்க்கெட் நடைபெறும் என்று கூறினார் எங்கள் வழிகாட்டி.
ஐரோப்பிய நகரங்களில் வெய்யிலுக்கு தனி மதிப்பு தான். அங்கே நகரங்களில் எங்கெங்கும் சிறு உணவு விடுதிகள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டேன்.[கையேந்தி பவனை விட சற்றே sophisticated ஆனவை இவை] கடை வாசலில் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். பொதுவாக மாலை நேரத்தில் தான் மக்கள் வெளியில் உணவு உண்ண வருவார்கள் என்பதால் மேற்கு பார்த்த உணவகங்களுக்கு கூடுதலாகக் கூட்டம் வரும். அதனால் அந்த உணவகங்களில்
விலையும் கூடுதலாக இருக்கும் என்றார் வழிகாட்டி.
இந்த பகுதிகளை நிதானமாக வேடிக்கை பார்த்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறி கிளம்பினோம்.
ஜெர்மனியில் Audi, BMW, Volkswagen போன்ற கார்களை சாலைகளில் நிறையக் காண முடிந்தது. [சரியான உச்சரிப்பு: Audi -ஔடி, Volkswagen – Folkswagen]. ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருந்த BMW Vanகளை ஜெர்மன் சாலைகளில் கண்டேன். ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் அந்த வேன்களை பயன்படுத்துகிறார்கள். உலகின் மற்ற நாடுகளுக்கு சென்ற போது வேறெங்கும் இது போன்ற வேன்கள் காணப்படவில்லை. [புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அச்சமயம் ஏனோ தோன்றவில்லை]
அதே போல Fortis என்னும் பெயர்ப்பலகையும் ஆங்காங்கே தென்பட்டது.
இரவு உணவை இந்திய உணவகத்தில் உண்டு முடித்து விட்டு இரவு 11 மணியளவில் தங்கும் விடுதிக்கு சென்றோம். மீண்டும் மறுநாள் காலை 6.30 க்கு காலை உணவு 7 மணிக்கு புறப்பாடு என்பதால் முதல் நாளே சிறு கைப்பையில் தேவையான பொருட்களை எடுத்து வைத்திருந்தோம்.
மறு நாள் அவருடன் பேசுகையில் எங்களின் சுற்றுலாவுக்கு எவ்வளவு செலவானது என்று விசாரித்து விட்டு அதில் பாதிப் பணத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கலாம் என்றார். அடுத்த முறை வரும்போது அவரது இல்லத்தில் தங்கிக் கொண்டு அங்கிருந்தே ஒவ்வொரு ஊராக நிதானமாக சுற்றிப் பார்க்கலாம் என்று கூறினார். அந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறேன்.
மறுநாள் காலை 6.30 மணிக்கே காலை உணவை முடித்துக் கொண்டு விடுதியின் வாசலுக்கு வந்து பார்த்த போது 10 அடி தூரத்தில் எதிரில் நிற்பவரைக் கூட தெரியாத அளவுக்குக் கடும் பனி மூட்டம். இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்பே மற்ற ஐரோப்பிய நாடுகளை
ஓட்டமாக ஓடி பேருந்தில் அனைவரும் ஏறியதும் பிராங்க்பர்ட் நகருக்கு தெற்கில் 78 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைடல்பர்க் என்னும் நகரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பனிமூட்டத்தின் இடையே பயணித்தோம். பேருந்து எப்போதும் போல 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது.
ஆதி நாட்களில் ரோமப் பேரரசின் பகுதியான ஜெர்மனி கோட்டை கொத்தளங்களுக்கு சிறப்பு பெற்றது என்பதை நாம் முன்பே அறிவோம். Heidelberg castle தான் நாம் காணப் போகும் அடுத்த இடம்.
அந்த நகரம் ஜெர்மனியின் வடமேற்கில் சுற்றிலும் வனங்கள் [Black forestன் ஒரு பகுதி] சூழ்ந்த, நெக்கர் நதி (Neckar) பாயும் பகுதியில் அமைந்துள்ள நகரம். இது கல்விச் சாலைகளுக்கும், இயற்கைக் காட்சிகளுக்கும் பிரசித்தி பெற்ற சிறு நகரம். நெக்கர் நதியின் நிறம் மற்ற நதிகளிலிருந்து வேறு பட்ட பச்சை நிறமாக காட்சியளித்தது. நீர் நிலைகளுக்கு சுயமான நிறம் கிடையாது தம்மை சுற்றியுள்ள பொருட்களின் நிறத்தையே அவைகள் காட்டுகின்றன என்பது மனதுக்கு நன்றாகத் தெரிந்தாலும் வேறுபட்ட பச்சை நிறத்தில் இருந்தது என்று எண்ணுவதில் அல்ப மகிழ்ச்சி உண்டாவதை தடுக்க முடியவில்லை.
அரசாங்கம் பல ஆராய்ச்சி நிறுவனங்களையும் இந்த நகரத்தில் நிறுவி உள்ளது. City of Literature என UNESCOவால் பெருமைப்படுத்தப் பட்ட நகரம் இது.
இந்த ஊரின் சிறப்பம்சங்களாக ஹைடல்பர்க் கோட்டையின் (Heidelberg Schloss) இடிபாடுகள், இயற்கைக் காட்சிகள், பழமையான கட்டிடக் கலையுடன் கூடிய வீதிகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.
[Heidelberg என்றதும் அதே பெயரில் சிமெண்ட் உள்ளது நினைவுக்கு வருகிறதா?]
ஊருக்குள் சென்று இறங்கியதும் கோட்டையை background ஆக வைத்து Group photos எடுத்துக் கொண்டோம்.
வழிகாட்டி எங்களை அந்த ஊரின் முக்கியமான வீதிகளை சுற்றிக் காண்பித்துக் கொண்டே Kornmarkt ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்று, கையில் கோட்டை பற்றிய Brochureஐக் கொடுத்து போய் பார்த்து விட்டு வாருங்கள் இரண்டு மணி நேரங்களில் மீண்டும் உங்களை இங்கே சந்திக்கிறேன் என்று கூறி எங்களை ரயில் நிலையத்தில் விட்டு சென்றார்.
அந்த ரயிலானது Konmarkt (Old town) நிலையத்தில் ஆரம்பித்து ஹைடல்பர்க் கோட்டை வழியாக இன்னும் உயரத்திலுள்ள Molkenkur நிலையம் வரை செல்லும். நாம் பாதியில் இறங்கிக் கொள்ள வேண்டும். ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ரயிலில் நான்கு நிமிடங்களில் கடக்கலாம்.
நின்று கொண்டே பயணிக்கும் வகையில் அமைந்த ரயில் பெட்டி அது. Town bus போல கம்பியை பிடித்துக் கொண்டே பயணிக்க வேண்டும். கோட்டை வந்ததும் இறங்கி நடக்கத் தொடங்கினோம்.
Gothic கட்டிடக்கலையில் வடிவமைக்கப் பட்ட இந்த பழைய கால கோட்டை. என்ன தான் புதுப்பிக்கப் பட்டதாகக் கூறப்பட்டாலும் சிதிலமடைந்து உள்ளது. வித்தியாசமான வடிவில் கடிகாரம், சிற்பங்கள் தென்பட்டன. வாயிலில் ஆழமான அகழி இருக்கிறது, அந்த கால அரசர்களின் அரண்மனை தான் இது. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து, பல இடங்கள் பூட்டப்பட்டு இருந்தாலும் அதன் ஒரு பகுதியான Otteheinrich Buildingன் basementல் German Pharmacies museum [Deutsches Apotheken Museum] செயல்படுகிறது. மருத்துவத்தின் வரலாறை
பற்றியதாக பெயர் இருந்தாலும் ஹோமியோபதி மருத்துவத்தின் வரலாறைக் கூறும் வகையிலேயே இந்த அருங்காட்சியகம் உள்ளது.
ஜெர்மனி ஹோமியோபதி மருத்துவத்தின் தாயகம். Dr. Samuel Hahnemann தான் இந்த மருத்துவ முறையைக் கண்டு பிடித்தவர். இவரை சிறப்பிக்கும் வகையில் அங்கே புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய கருவிகள் போன்றவைகள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. மேற்சொன்ன அருங்காட்சியகத்தில் ஹோமியோபதி மருந்துகள் ஆரம்ப காலத்திலிருந்து தற்காலம் வரை எப்படி எந்தெந்த உபகரணங்களில் தயாரிக்கப்பட்டன/படுகின்றன எனக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாதிரி (model) ஆராய்ச்சி சாலையும் அதனுள்ளேயே உள்ளது. தக்க புகைப்படங்களையும் ஆங்காங்கே வைத்துள்ளார்கள்.
கோட்டையின் ஒரு பகுதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஆட்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை எந்த வித்தியாசமும் தெரியாமல் அதே நிறத்தில் பழுது பார்க்கப் பட்டதே தெரியாமல் புனரமைக்கிறார்கள்.ஐரோப்பாவின் எல்லாப் புராதன சின்னங்களும் இதே போலப் பாதுகாக்கப் படுகின்றன. [கோட்டை இடிபாடுகளுடன் இருந்தது என்று சொன்னேன் இல்லையா முன்பு இருந்தது போலவே அதே நிறத்தில், வடிவில் புனரமைத்து காட்சிப் படுத்துவதால் தான் புராதன சின்னங்கள் பழமையான தோற்றம் தருகின்றன.]
பல்வேறு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அங்கே வந்திருந்தார்கள். ஒவ்வொரு வழிகாட்டியும் கோட்டையின் வரலாறை ஒவ்வொரு விதமாகக் கூறிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது. கூகிளில் படித்ததற்கும் கையில் தரப்பட்ட brochureக்கும் சம்மந்தமே இல்லாமல் புள்ளி விவரங்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கேட்ட பிறகு எங்கள் வழிகாட்டி எங்களுடன் வரவில்லை என்ற குறையே தெரியவில்லை.
கோட்டையின் watch towerல் அமர்ந்து கொண்டு நகரின் தொன்மையான அழகையும் நெக்கர் நதியின் ஓட்டத்தையும் பழமையான அதன் பாலத்தையும் வேடிக்கை பார்த்தோம். புகைப்படங்கள் எடுக்க ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம். நதிக்கு இருகரையிலும் கண்ணெட்டிய தூரம் பழமையான கட்டிடங்களே தென்பட்டன.
மீண்டும் கீழிறங்கி அந்த ஊரின் மையப் பகுதியான marketplatz வழியாக நடந்து பேருந்தை அடைந்தோம். வழியில் பார்த்த Church of Holy Spirit,
Zum Ritter St.George hotel (400 வருடங்கள் பழமையானது) ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொண்டோம்.
கீழிறங்கியதும் இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு பேருந்தில் ஏறி Black Forestக்கு மத்தியில் அமைந்துள்ள Drubba Cuckoo Clock Factoryஐக் காண கிளம்பினோம்.
Black Forest என்பது அடர்த்தியான Pine மற்றும் Fir போன்ற ஊசியிலை மரங்கள் [Coniferous trees] நிறைந்த, ஏறக்குறைய 160 கிலோமீட்டர் பரப்பளவில் ரைன் நதி பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்த வனம் எனக் கூறலாம். [நாம் சாதாரணமாக இந்த வகை மரங்களை Christmas trees என்று கூறுவோம்] இது ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் Baden-Wurttemberg என்னும் மாநிலத்தில் அமைந்துள்ளது.
இந்த வனத்திலிருந்து தான் Rhine, Danube ஆகிய நதிகள் உற்பத்தி ஆகின்றன. இயற்கை அழகு கொஞ்சும் பள்ளத்தாக்குகளுக்கும்
(Valleys), சுவை மிகுந்த Black Forest pastryகளுக்கும் பிரசித்தி பெற்றது இந்த வனம்.
இதனிடையே ஆங்காங்கே சிறு ஊர்களும் உள்ளன. கடும் குளிர் நாட்களில் இந்த பகுதியில் மரங்கள், குன்றுகளின் மேல் பனி உறைந்து காணப்படுவது கறுப்பான கேக்கின் மேலே Icing இருப்பது போன்ற தோற்றத்தை தருவதால் இந்தப் பகுதியின் கேக்குகள் Black Forest Cakes எனப் பெயர் பெற்றதாக அறிகிறோம்.
ஹைடல்பர்க் நகரிலிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் Black Forest ஆரம்பம். நடுவில் ஓரிடத்தில் சாலை விபத்து காரணமாக போக்குவரத்து திருப்பி விடப் பட்டு மாற்றுப் பாதையில் எறும்பு ஊர்ந்து செல்வது போல சென்றது. மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. 4 மணி நேரங்கள் ஊறி ஊறி Titisee பகுதியில் அமைந்த Drubba என்னும் இடத்தில் அமைந்த Cuckoo Clock Factory/Showroom/Exhibitionஐ அடைந்தோம். நாங்கள் சென்ற தினத்தில் அவர்களுக்கு விடுமுறை தினம். அவ்வளவு சிரமங்களுக்கு இடையில் சென்றும் அந்த தொழிற்சாலையைக் காண முடியாதது வருத்தமே.
Cuckoo Clock என்பது நம் தாத்தா காலத்து பெண்டுலம் முறையில் இயங்கும் கடிகாரம் ஆகும். வீடு போன்ற அமைப்பில் இருக்கும் இந்த கடிகாரம் மரத்தால் செய்யப் படுகிறது. அதன் ஜன்னல் பகுதி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் திறந்து உள்ளே இருந்து ஒரு குயில் வெளியில் வந்து குரல் கொடுக்கும். நாம் இது போன்ற கடிகாரங்களை திரைப்படங்களிலோ நேரிலோ பார்த்திருப்போம்.
பொதுவாக காடுகள் வனங்கள் நிறந்த பகுதிகளில் Lumbering முக்கியத் தொழிலாக இருக்கும். Black forestன் மரங்களைக் கொண்டே குக்கூ கடிகாரங்களை உற்பத்தி செய்கிறார்கள்.
[இந்த இடத்தில் அந்த வகைக் கடிகாரங்களைக் காண முடியாவிட்டாலும் அடுத்தடுத்து சென்ற ஊர்களில் கண்டோம். Unaffordable price என்பதால் அதைப் போல Fridge magnet வாங்கி திருப்தி பட்டுக் கொண்டோம்.]
Drubba கடிகாரக் கடைக்கு அருகில் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Titisee ஏரியைக் காணப் புறப்பட்டோம். 1.3 சதுர கிலோமீட்டர்கள் அகலமும் 20 மீட்டர் ஆழமும் உடையது இந்த ஏரி. Feldberg glacierல் இருந்து உற்பத்தி ஆகிறது.
இதே பெயரில் அமைந்த ஊர் இதன் ஒரு கரையில் உள்ளது. Spa, Health centers, Physiotherapy centers என பலவற்றிற்கும் பிரசித்தி பெற்றது இந்த பகுதி. குளில் காலத்தில் ஏரி உறைந்து விடும். அச்சமயத்தில் Ski jumping போட்டிகள் நடைபெறும்.
எங்கள் பயணத் திட்டப்படி இங்கே இறங்கி சிறிது நேரம் செலவு செய்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்வது என்பது தான். Drubbaவிலிருந்து கிளம்பியதும் வெளியில் என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு கடும் மழைப் பொழிவு. எனினும் விடாமல் அந்த ஏரியை சுற்றி சுற்றி பேருந்தை ஓட்டினார் எங்கள் ஓட்டுநர். ஏரியின் பரந்த நீர்பரப்பு மட்டுமே கண்ணில் பட்டது. சுற்றிலும் அடர்ந்த வனம், கடும் மழை… என்ன பார்த்திருப்போம் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.
ஓய்வில்லாமல் பயணித்துக் கொண்டே இருக்க முடியாதே…சிறிது நேரத்தில் மழை நின்ற சமயத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஓய்வுக்காக பேருந்து நிறுத்தப் பட்டது. Black forestக்கிடையே பயணித்தோம். வனம் என்றாலும் இடையிடையே ஊர்களும் உள்ளன.
நாங்கள் இறங்கிய இடத்தில் இருந்த உணவத்திலோ அந்த ஊரிலோ பொதுக் கழிப்பிடங்கள் இல்லை. எங்கள் வழிகாட்டி எங்கெங்கோ தேடி யாரையோ கேட்டு அரை குறையாகக் கட்டி முடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்திருந்த ரெஸ்ட் ரூம்களை உபயோகிக்க அனுமதி வாங்கி வந்தார். கட்டுமானப் பொருட்களுக்கு மத்தியில் தட்டுத் தடுமாறி மேலேறி சென்று வந்தோம்.
சற்று நேரம் அந்த ஊரில் ஓய்வெடுத்தோம். மழை பெய்து ஓய்ந்த சமயம் என்பதால் சாலைகளில் ஈரம். சிறு தூறல் அவ்வப்போது இருந்தது. எங்களிடம் குடை கைவசம் எப்போதும் இருந்ததால் நாங்கள் சாலையில் சற்று தூரம் நடந்து சென்றோம். இந்த சிறிய ஊரின் பின்புலத்தில் black forest உள்ளது. ஒழுங்கான சாலைகள், குறைந்த மக்கள் தொகை உள்ள சுத்தமான ஊர் அது. அந்த ஊரின் பெயர் என் நினைவில் இல்லை. [புகைப்படத்தில் எழுத்துக்கள் தெளிவாக இல்லை. Google lensம் தெரியவில்லை என கை விரித்து விட்டது.]
ஸ்விட்சர்லாந்து நாட்டின் Zurich நகரின் bi-pass சாலை வழியாகத் தான் சென்றிருப்போம் என இப்போது தோன்றுகிறது. இருட்டு, அசதி, jet lag…
இரவு ஏழு மணியளவில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் எங்கல்பர்க் (Engelberg) என்னும் நகரினை சென்றடைந்தோம்.
அனுபவங்கள் தொடரும்…