Sunday, 25 April 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி - 1] : Chennai -Abu Dhabi - London


April 6-20, 2016

Etihad Airlines

Chennai - Abu Dhabi - London


மூன்றாவது அமெரிக்க பயணம் முடிந்து வந்த மூன்று மாதங்களில் ஐரோப்பா நோக்கிய பயணம் நடைபெற்றது.

அமெரிக்க பயணங்களை போல இல்லாமல் தொடர்ந்து பல நாடுகளுக்கும் பயணம் செய்ததால் பயண முன்னேற்பாடுகள் நிறையவே இருந்தன. அவைகளை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு பிறகு பயண அனுபவங்களை  ஆரம்பிக்கிறேன். 

தெரிந்த நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்த  நண்பர்களின் குடும்பங்கள் என 80 பேர் கொண்ட குழுவாகப் பயணித்தோம். ஆறு மாதங்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட பயணம் அது. ஒரு Travel Agency மூலம் பயணம் உறுதி செய்யப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளுக்கு எப்படி  செல்வது என ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கூடி கூடி பேசி பேசி, தேவையான பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு   பயண ஏற்பாட்டாளர்களால் விசா ஏற்பாடு செய்யப் பட்டது .

Great Britainக்கு ஒரு தனி விசா Shengen நாடுகளுக்கு தனி விசா. [The Schengen Area is an area comprising 26 European countries that have officially abolished all passport and all other types of border control at their mutual borders. The area mostly functions as a single jurisdiction for international travel purposes, with a common visa policy.]

(https://en.wikipedia.org/wiki/Schengen_Area)

Tata Consultancy யில் biometrics பதிவு செய்து ஆவணங்களை ஒப்படைக்க  இரண்டு முறை சென்றோம். (இரண்டு வேறு விசாக்கள் இல்லையா?). 15 நாட்களில் விசா கிடைக்கப் பெற்றோம். Shengen நாடுகளுக்கு சுற்றுலா செல்ல 20 நாட்களுக்கும் (மட்டுமே) பிரிட்டனுக்கு 2 மாதங்களும்  அனுமதி கிடைத்தது. Shengen நாடுகளில் பயணிப்பது என்பது நம் நாட்டின் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு தொடர்ச்சியாக பயணித்து செல்வது போல. நடுவில் ஒரு செக் போஸ்ட் மட்டுமே. ஐரோப்பிய நாடுகள் பரப்பளவில் சிறியவை என்பதே இதன் காரணம்.

என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லலாம், எத்தனை பெட்டிகள் கொண்டு செல்லலாம் என விதிமுறைகள் வேறுபட்டு இருந்தன .

[தென் அமெரிக்கா - இரண்டு பெட்டிகள்(23 kgs) , கைப்பெட்டி அல்லது கைப்பை (7/8 kgs)

ஐரோப்பா - ஒரே ஒரு பெட்டி (30 kgs), கைப்பெட்டி அல்லது கைப்பை (7 kgs)

** லேப்டாப் கணினியையும் சேர்த்து 7 கிலோவா அல்லது கணினியை தனியாக எடுத்து செல்லலாமா என்பதை விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் எடையின் அளவின் அடிப்படையில் முடிவு செய்கின்றன. மேற்கண்டவைகள் பொது அளவுகள்.]

அது நாள் வரை இந்தியா-அமெரிக்கா பயணங்கள் மட்டுமே என்பதால் நம்முடைய பணம், பாஸ்போர்ட் போன்றவற்றை முறையாக 24/7 பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. இம்முறை ஒரு ஸ்வெட்டரின் உட்பகுதியில் ஜிப்பா பைகள் போல இரண்டு பைகளை பாஸ்போர்ட் வைக்கும் அளவில்  தைத்து கொண்டேன்.  எந்த உடை அணிந்தாலும் மேலே இந்த ஸ்வெட்டர் அணியலாம். Light ஸ்வெட்டர்.  [பட்டு ஆடை அணிந்தால் வெயிற்காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் என்று என் பாட்டியார் சொல்வார். அதே போன்ற குணமுடையது இந்த ஸ்வெட்டர்]. எங்கள் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சுற்றுப்பயணம் சென்றிருந்த என் சகோதரர் குடும்பம் எங்கள் ஐரோப்பிய பயணத்திற்காக அன்புடன் வாங்கி வந்த பல அடுக்கு pouchகள் அடங்கிய தோளில் மாட்டிக் கொள்ளும் பையை என் கணவர் தன் பங்கிற்கு  பாஸ்போர்ட், பணம் போன்றவற்றை வைத்து கொள்ள எடுத்து வைத்தார்.

இங்கே முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு செய்தி உள்ளது. செக்யூரிட்டி செக்கிங்கிற்கு செல்லும் போது பணத்தை நம் ஆடையிலுள்ள pouch ல் வைத்துக் கொண்டு செல்ல கூடாது. அங்குள்ள இயந்திரம் நம்மை கடக்க விடாது. கடத்தல்காரர்களை போல நம்மை தனியாக நிற்க வைத்து தடவி சோதனை செய்வார்கள். [Human rights சட்டப்படி நம்மை தொட்டு சோதனை செய்வதற்கு முன் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும். நாம் No சொன்னால் சட்டப்படி தொட்டு சோதனை செய்ய கூடாது. அப்படி மீறி செய்தால் நாம் வழக்கு தொடரலாம். இது போன்ற பிரச்சினைகள் பயண நேரத்தில் தேவையா? எனவே ஆடையின் pouch ல் எந்த பொருளையும் வைத்து செல்லாதீர்கள்.

மருத்துவமனைகளிலும் நம்மிடம் அனுமதி பெற்றே பரிசோதனை செய்வதை கவனித்திருக்கலாம்.]

14 நாள் பயணத்தின் பிரதி தின Itinery,  பயணியரின் முழு முகவரி, எந்த நாட்டில் எந்த மொழியில் வணக்கம், நன்றி, Excuse me போன்ற வார்த்தைகளை கூற வேண்டும், முக்கியமான நபர்களின் (organisers) தொலைபேசி எண்கள், எந்தெந்த விடுதியில் தங்க போகிறோம்  போன்ற விவரங்களை  ஒரு கையேடு  போல அச்சிட்டு விமான டிக்கெட்டுகளுடன் தந்தார்கள்.

[ நன்றி : danhe - ஜெர்மன், merci - பிரெஞ்சு] கூடுதலாக அனைத்து நாடுகளில் அவசர உதவி எண்ணையும்  குறித்து வைத்துக் கொண்டேன் . (112 தான் அது)

நாங்கள் கீழ்ப்பாக்கம் அரசினர் குடியிருப்பில் இருந்த நாட்கள் அவை. அடுத்த தெருவில் வசிக்கும் சகோதரி ஒருவர் அந்த கையேட்டிலிருந்த எங்கள் முகவரியை படித்து விட்டு எங்களுடன் தொடர்பு கொண்டார். இன்றளவும் நட்பு தொடர்கிறது. இந்த சகோதரி இந்த பதிவில் ஆங்காங்கே வருவார். [அவரது பெயரை கலா என வைத்துக் கொள்வோம்.]

நாங்கள் ஏப்ரல் மாதத்தில் சென்றதால் சில நாடுகளில் வசந்த காலம் தொடங்கி இருந்தாலும் பல நாடுகளில் பனி, மழை, வெய்யில் என மாறி மாறி இருக்கும் என கூறப்பட்டதால் அதற்கேற்ற உடைகள் தேவைப்பட்டன. எங்களில் பெரும்பாலானோர் travel freaks?!  அல்லது பிள்ளைகள் வெளி நாட்டில் வசிப்பவர்கள் என்பதால் புதிதாக ஆடைகள் வாங்க தேவை இல்லாமல் அனைவருமே பல்வேறு பருவ நிலைகளுக்கும் ஏற்றாற்போல உடைகள் வைத்திருப்பதாக கூறினார்கள். [வெளிநாடுகளுக்கு செல்லும் போது முடிந்த வரை அடர் நிற உடைகளை தவிர்ப்பது நல்லது. நம் நாட்டில் அணிவது போல அடர் பச்சை, ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற வண்ணங்களை மேலை நாடுகளில் பொதுவாக அணிவதில்லை. கருப்பு, நீலம் மட்டுமே பொதுவாக அணிந்திருப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு pink, ஆண் குழந்தைகளுக்கு blue. Pencil box உட்பட அனைத்தும் பிங்க் அல்லது நீலத்தில் இருக்கும்.]

ஸ்வெட்டர்கள், light jacket, heavy jacket, layer dressingகிற்கு தேவையான உடைகள், வெயிலுக்கு தொப்பி, குளிருக்கு குல்லாய் , gloves, குடைகள்  என  30 கிலோ பெட்டி ஒன்றும்  கைப்பெட்டிகள் இரண்டும்  எடுத்து சென்றோம்.  [Layer dressing எனப்படுவது யாதெனில் குளிர் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது  உள்ளாடைகள், மேலே தெர்மல் உடைகள் அல்லது 2 synthetic சட்டைகள், light jacket , heavy  jacket , coat , gloves , குல்லாய் என அணிவது. சற்று நேரத்தில் வெயில் வரும் சமயம் உடலின் வெப்ப நிலை ஏற ஏற மேலே அணிந்திருக்கும் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளிர ஆரம்பிக்கும் போது ஒவ்வொன்றாக மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும். பனிப்பொழிவு இருக்கும் பகுதிகளுக்கு செல்லும் பொழுது அதை விட கனமான ஜாக்கெட் அணிய வேண்டும். -25 டிகிரி வரை குளிரை தாங்கக்கூடிய வகையில் தைக்கப் பட்டிருக்கும். (-10 டிகிரி அளவு வரை எங்களிடம் உள்ளன.)]

சகோதரி கலா அவர்களின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "நாம் 32 டிகிரி வெயிலுக்கு பழக்கப்பட்டவர்கள் 15 டிகிரி இருந்தாலே நமக்கு கடும் குளிர் தான்." ஏப்ரல் மாதத்தில் கடும் குளிருக்கு வாய்ப்பில்லையென்றாலும் தேவையான ஆடைகளை நம்முடன் எடுத்து செல்வது  நல்லது இல்லையா?

மூன்று கைபேசிகள் (mobile phones) ஒரு டிஜிட்டல் கேமரா (8 GB memory card), international adaptor   மற்றும் ஒரு பைனாகுலர் எடுத்துக் கொண்டோம். டிஜிட்டல் கேமரா வீடியோ எடுக்க மட்டுமே. புகைப்படங்களை சேமிக்க தேவை இல்லை. கூகிள் ஆப் மூலம் Wifi ஆன் செய்தவுடன் சுயமாக Cloudல் சேமித்து வைத்துக் கொள்ளும். பயணம் முடிந்து வீடு வந்தவுடன் தேவையான புகைப்படங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

குடும்பத்தினரை, அலுவலகத்தை  தொடர்பு கொள்ள விரும்பியவர்கள் International calling card [Maxis] இந்தியாவிலிருந்தே வாங்கி வர அறிவுறுத்தப் பட்டோம் . எங்கள் பிள்ளைகள் இரவு ஹோட்டல் அறைக்கு வந்த பிறகு செய்தி அனுப்பினால் போதும் நிம்மதியாக பயணத்தை அனுபவியுங்கள் என்று கூறியதால் நாங்கள் அது பற்றி கவலைப்படவில்லை. [கையேட்டில் organisers களின் உதவியை அவசியமெனில் பெற்று கொள்ளலாம் என்று இருந்தது. அதன் பொருள் அவசியமெனில் அவர்களின் தொலைபேசியை நாம் உபயோகித்துக் கொள்ளலாம் என்பதே] 

Sanitary items, ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருந்த ஏப்ரல் 14 ஆம் நாளின்   தமிழ் வருடப் பிறப்பு  பூஜைக்கான பொருட்கள், பாலைவனத்தில்உயரமான மலையில், பனி பொழிவு நேரங்களில், விமானத்தில் பயணிக்கும் போது மூக்கிலிருந்து ரத்தம் வர வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கேற்ற மருந்து (லாஸ் வேகாஸ் பாலைவன பயண அனுபவம்) , அவசர உதவி மருந்துகள் என எடுத்து வைத்துக் கொண்டோம். கைப்பையில் அவசர உதவி மருந்துகள் மட்டுமே வைத்து கொள்ளலாம். 100ml மட்டுமே திரவ நிலையில் (Perfumes, medicines) உள்ள பொருட்களை  எடுத்து செல்லலாம். தண்ணீர் எடுத்து செல்ல முடியாது. Security check போது தண்ணீரை உறை நிலையில் (Frozen water)  எடுத்துச் செல்லலாம். நடை முறையில்  அது சாத்தியமே இல்லை.

ஊரிலிருந்து கிளம்பும் முன்பே  ஒவ்வொரு நாளும் பார்க்கப் போகும் இடங்களை அந்த itineryயின் உதவியுடன் கூகுளை பார்த்து விவரங்களை எழுதி வைத்துக் கொண்டேன்.  வழிகாட்டியாக உடன் வருபவர் விவரம் தெரிந்தவராக இருப்பார் என்பது நிச்சயம் இல்லை. [ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில் திருப்பதி, எர்ணாகுளம், கொச்சி சென்ற போது என்னுடைய துணைப்பாடப் புத்தகத்தை உடன் எடுத்து சென்று அந்தந்த  ஊரின் சிறப்புகளை மீண்டும் படித்து உறுதி செய்து கொண்டேன் . திருப்பதி மலையில் இரவில்  சங்கு சக்கரம் நாமம் என ஒரு மலையுச்சியில் விளக்குகள்  தெரியும் இடத்திற்குப் பெயர் "முழங்கால் முறிச்சான்" . செங்குத்தான மலை என்பதால் அந்த பெயர். கொச்சியில் ஒரே தளத்தில் விமானம், கப்பல், ரயில், பேருந்து போக்குவரத்தினைக் காண முடியும். அது போன்ற பகுதியில் என் சித்தி குடியிருந்தார்.] அந்நாட்களில் கூகிள் இல்லையே!

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மற்றொரு பெயரே Shengen நாடுகள். பிரிட்டன் 2016ல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும் விசா, நாணயம் வெவ்வேறு தான். (என் வழி தனி வழி?!) ஐரோப்பிய யூனியன் நாடுகளில் EURO, பிரிட்டனில் POUND STERLING. உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் அமெரிக்க டாலர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதால் யூரோ, பவுண்ட், டாலர் என இந்திய பணத்தை மாற்றி எடுத்துக் கொண்டோம். விமான நிலையங்களில் அமெரிக்க டாலர்களை ஏற்று கொள்வார்கள் மீதி சில்லறை தரும் பட்சத்தில் அந்தந்த நாட்டின் நாணயங்களை / நோட்டுக்களை தருவார்கள். [Exchange loss]. **முடிந்த மட்டும் விமான நிலையங்களில் அந்தந்த நாட்டு currencyயையே உபயோகிக்கவும் அல்லது சில்லறை திரும்பப் பெறாத அளவுக்கு பொருட்களை வாங்குங்கள். [Swiss Franc குகளை செலவு செய்ய Lucerne நகரில் டீ குடித்தோம்.]

தங்குமிடங்கள் 4 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் விடுதிகள் தான். எல்லா ஊர்களிலும் தரமான அறைகள் வசதிகள் wifi, continental breakfast உண்டு. உலகெங்கும் 4/5 ஸ்டார் விடுதிகளில் உல்லாசப் பயணிகளுக்காக சற்றே குறைந்த விலையில் தரத்தில் குறைவில்லாத அறைகளை கட்டி வைத்திருக்கிறார்கள். ஆறு மாதங்கள் முன்கூட்டியே Bulk booking செய்வதால் குறைந்த விலைக்கு வாடகைக்கு தருகிறார்கள்.

மதிய, இரவு உணவுகள் பஞ்சாபி உணவு விடுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் சென்ற இடமெல்லாம் சிறப்பான சைவ உணவு கிடைத்தது.

தங்குமிடங்கள், உணவு, Entry fee, Ride fee, Toll போன்றவைகள் பயண ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. அதிகப்படியாக ஏதாவது ride, உணவு போன்றவைகள் தேவைப்பட்டால் மட்டுமே நாம் செலவு செய்ய வேண்டும்.

அவரவர் தனித்தனியாக இடையில் உண்பதற்கு snacks கொண்டு வந்திருந்தார்கள். நாங்கள் dried fruits மட்டுமே கொண்டு சென்றோம்

ஒரு வாரத்திற்கு முன்பாக பயண சீட்டுடன் பயணத்திற்கான இன்சூரன்சும் சேர்த்தே வாங்கி தந்தார்கள். 17/80 பயணிகள் மட்டும் சென்னை - அபுதாபி - லண்டன் மார்க்கமாகவும் மற்றவர்கள் சென்னை - மஸ்கட் - லண்டன் மார்க்கமாக செல்வதாகவும் ஏற்பாடு. நாங்கள் இருவரும் அபுதாபி குழுவில் இருந்தோம்.

பயணம் செய்த 2016 ஆம் வருடத்தில் நான் MA (English Literature படித்துக் கொண்டிருந்தேன். அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் "English literature is mainly Christian literature and that too European literature" என்று ஆரம்பித்து கற்றுத் தந்தார்கள்.  Brussels museum (‘Musée de Beaux Arts’- W.H Auden), London bridge, St. Paul's church (The Wasteland- T.S.Eliot) , பாரிஸ் நகரின் Champ de Elysse   (கவிஞர் பெயர் நினைவில்லை) , Arc de Triompe, William Wordsworth எழுதிய pastoral elegy போன்ற கவிதைகளின்  மூலம் லண்டன் புறநகரின் daffodil மலர்களின் அழகினையும், புல்வெளிகளையும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வாயிலாக அறிந்த இடங்களையும் மனக்கண்ணால் காண வைத்திருந்தார்கள் பேராசிரியர்கள்.

St. Paul's Basilica [London], St. Peter's Basilica [Vatican], Notre dame Basilica [Paris] ஆகிய மூன்றும் கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்கள். நமக்கு திருப்பதி, அமர்நாத், பத்ரிநாத் போல. Basilica என்பது ஒவ்வொரு Christian districtன்  தலைமையிடத்தில் அமைந்த பெரிய தேவாலயம். (சென்னையில் Santhome basilica).

(இவைகளும் பேராசியர்களால் சொல்லப்பட்டவைகளே) 

எனவே ஐரோப்பிய பயணம் என் வரையில் ஒரு கல்வி சுற்றுலா என்று தான் சொல்ல வேண்டும். மகிழ்ச்ச்ச்ச்சி.

ஏப்ரல் 6 - 20 பயணம் என்ற நிலையில் மார்ச் 22, 2016 அன்று பெல்ஜியம் நாட்டின் தலை நகரான பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இரண்டு, நகரின் மத்தியில் அமைந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்றுமாக மொத்தம் மூன்று suicide bombings. அச்சமயத்தில் உலகின் பரபரப்பான செய்தியாக  பேசப்பட்டது.

நல்ல விதமாக நம் பயணம் தொடங்குமா என்பதே சந்தேகமான நிலையில் இருந்தோம்.

ஏப்ரல் 6, 2016.

விடியற்காலை நான்கு மணிக்கே சென்னை பன்னாட்டு விமான
நிலையத்தில் 80 பேரும் கூடி அவரவர் விமானத்திற்கு செக் இன் செய்து விட்டு காத்திருந்த நேரத்தில் சுய அறிமுகம் செய்து கொண்டோம். அபுதாபியில் இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஏறினோம். அது A380 வகை AIRBUS இரண்டடுக்கு விமானம். முதன் முதலாக இந்த வகை விமானத்தில் பயணம் செய்கிறோம் என்ற மகிழ்ச்சியும் கூடியது. இம்முறை ABC DEFG HJK  என்ற வரிசையில் DEFGல் சகோதரி கலா, நான், என் கணவர் மற்றும் வேறொருவருக்கு இருக்கைகள் allot ஆகி இருந்தன.

A380 விமானத்தின் முன்புறம், வாலின் மேல் பகுதி மற்றும் கீழே என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டு காட்சிகள் திரையில் தெரிந்தன. அதற்கு முன்பு அது போன்ற வசதியை நான் கண்டதில்லை. எந்த கேமராவின் நிகழ்வு தேவையோ அதற்கு மாற்றி கொள்ளலாம். விமானம் கிளம்பி taxiway இல் பயணித்து எப்படி take off ஆகிறது என்று பார்த்தோம். Take off சமயத்தில் அருகிலுள்ள run way இல் விமானங்கள்தொம்” என்ற சத்தத்துடன் வந்து இறங்குவதும் நம்முடைய விமானம் செல்லும் பாதைக்கு குறுக்காக வேறு விமானங்கள் நிதானமாக கடந்து செல்வதுமாக சுவாரசியமான திக் திக் நிமிடங்கள்.

பயண நேரம் ஏழு மணி நேரங்கள். அமெரிக்க பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்த பயணம் சீக்கிரமே முடிந்து விடுவது போல தோன்றும். புதிதாக பயணம் செய்தவர்கள் என்னது ஏழு மணி நேரமா அந்த நேரத்தில் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பி கொண்டு இருந்தார்கள்.

பயண நேரங்களில் நம்முடைய உணவு நன்றாக இருந்தால் தான் பயணமே நன்றாக இருப்பது போல இருக்கும். பல விமான பயண அனுபவங்களின் காரணமாக Jain vegetarian meal கேட்டிருந்தோம். [இந்த வகை உணவில் பால் பொருட்கள், வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்க்க மாட்டார்கள்.]  விமானம் கிளம்புவதற்கு முன்பே 

பயணிகளின் இருப்பை   உறுதி செய்து கொள்வார் விமானப் பணிப்பெண்சற்று நேரத்தில் ஸ்பெஷல் வகை உணவுக்காரர்களின் இருக்கையில் (நம் தலைக்கு நேராக என வைத்துக் கொள்ளுங்கள்ஸ்டிக்கர் ஒட்டி செல்வார்கள்.தனிப்பட்ட முறையில் Jain, Indian Vegetarian, Child meal என special meal கேட்டிருப்பவர்களுக்கு நமக்கான உணவு பெட்டியின் மேலே அந்தந்த உணவு வகையின் பெயர் எழுதப்பட்டு முதலில் கொண்டு வந்து தருவார்கள்

ஸ்டிக்கர் பற்றி சொல்கையில் மற்றொரு விஷயம் உண்டு. நீண்ட பயணங்களில் socks, கண்ணை மறைக்கும் திரை(தூங்க வசதியாக), toothpaste , toothbrush , takeoff landing சமயங்களில் காதில் வைத்துக் கொள்ளும் earplugs, stickers என  எல்லாவற்றையும் ஒரு pouchல் வைத்து தருவார்கள் .  நமக்கு சாப்பாடு தேவை இல்லை தூங்கப் போகிறோம் என்றால் pouchல் இருக்கும் DO NOT DISTURB போன்ற ஸ்டிக்கரை ஒட்டி வைத்து விட்டு தூங்கி விடலாம். ஆனால் தூங்கி எழுந்ததும் பசிக்கும் அப்போது உணவு கிடைக்காது :) [என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறன்.]

Ethihadல் பயணித்தது அதுவே முதன்முறை. ஜெயின் உணவு தந்தார்கள். பார்லியை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து கொத்துமல்லி இலைகளை அரைத்து கலந்து ...இது தான் main dish. Bun, பழத் துண்டுகள், காய்கறிகள், Dessert, Juice என சாப்பிட்டு சமாளித்தோம்.

பயணம் இனிதாக தொடர்ந்தது. காமெராவில் தெரிந்த பனி படர்ந்த Alps மலைகளும், பாலைவனங்களும், வரைபடங்களில் மட்டுமே பார்த்திருந்த கடல்களும்  (Mediterranean sea , Caspian Sea ) தெரிய மகிழ்ச்சியுடன் பயணித்தேன்.

திடீரென  நெஞ்சை அழுத்துவது போல இருந்தது. சாதாரணமாக எனக்கு விமான பயண நேரத்தில் எந்த விதமான சங்கடமும் வந்ததில்லை. அதுவே எனக்கு அதிக மன அழுத்தமாகி  விட்டது. நிதானமாக யோசித்து பார்க்கையில் என் அருகில் அமர்ந்திருந்த சகோதரி கலாவுக்கு தான் அந்த பிரச்சினை. என் தோளோடு உரசிய படி (இருக்கைகள் நெருக்கமாக இருந்தன) அமர்ந்திருந்த அவருக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதை அறிந்தேன். Severe wheezing. 

 அவரது கைப்பையிலிருந்து மருந்து எடுத்து தந்து சாப்பிட வைத்தேன்.

லண்டன் நேரம் இரவு ஏழுக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கினோம். (IST 11.30 pm)

விமான பணிப்பெண்ணிடம் விமானத்தின் மேல் தளத்தை பார்க்க முன்பே விருப்பம் தெரிவித்திருந்தேன். லண்டன் வந்ததும் என்னை வந்து பாருங்கள் பயணிகள் அனைவரும் இறங்கியதும் அழைத்து செல்கிறேன் என்றார்.

எந்த நாடாக இருந்தாலும் விமானம் நின்றதும் Pilot நன்றி seat belt கழற்றலாம் என்று சொல்லும் வரை கூட யாரும் பொறுமையாக அமர்ந்து
இருக்க மாட்டார்கள். Town bus போல எழுந்து நின்று கொண்டு கேபின் உள்ளிருந்து அவரவர் பெட்டியை எடுத்து கொண்டு கைபேசியை on செய்து I have landed  .. ..என்று கத்தி கத்தி பேசிக் கொண்டு ரிலே ரேஸ் ஓடுவது போல ஓட காத்திருப்பார்கள். இதற்கிடையில் நான் விமானத்தின் பின் பக்கம் சென்று குறிப்பிட்ட பணிப்பெண்ணை கண்டு பிடித்தது பின் பக்க படிக்கட்டு வழியாக மேலே சென்று பார்ப்பது அசாத்தியம் என்று தோன்றவே அமைதியாக விமானத்தை விட்டு இறங்கும் முயற்சியை மேற்கொண்டேன்.

அனுபவங்கள் தொடரும்

 

 

 

 

 

 

 






WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...