Tuesday, 27 September 2016

தீபாவளி போனஸ் வந்தாச்சா??

சில தினங்களுக்கு முன்பு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த என் சகோதரரின் மகள், அத்தே.. எனக்கு சாந்து பொட்டு வேணும் வெச்சிருக்கீங்களா என்றார். பல நிறங்களில் சிறு குப்பிகளில் 12,16, 18 நிறங்களில் கிடைக்கும் வகை அவர் கேட்ட பொருள். அது தொடர்பான எங்கள் பேச்சுக்கள் என்னையும் ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பேன்சி பொருட்கள் விற்கும் கடைக்கு முன் கொண்டு நிறுத்தியது.

5-10 வயதிற்குட்பட்ட தீபாவளிப் பண்டிகை நாட்கள் . தீபாவளிக்கு முந்தைய அமாவாசை அன்று வீடு வீடாக மூட்டையில் துணிகளை எடுத்து வந்து விற்பவரிடம் , எனக்கும் என் இளைய சகோதரிகளுக்கும் புதுத் துணிகள் வாங்கி, எங்கள் தாயார் தானே தைத்து வைப்பார். அதற்கு மேட்சி மேட்சியாக வளையல் , தோடு, ரிப்பன், சாந்துப் பொட்டு எல்லாம் வாங்க வேண்டாமா? அப்படி அணியாமல் இருந்தால் எங்கள் தோழிகள் முன்னிலையில் தலைகுனிவு ஆகிடாதா??. அம்மாவை (நச்சரித்து) அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள மிகச் சில பேன்சி ஸ்டோர்களில் ஏறி இறங்கி எப்படியும் எங்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கி விடுவோம்.
பண்டிகை தினத்திற்குப் பல நாட்கள் முன்பே பலகாரங்கள் செய்யும் முயற்சியில் பெண்கள் ஈடுபட்டிருக்க, ஆண்கள் பட்டாசு வாங்குதல், காய வைத்துப் பாதுகாத்தல்(மழை , ஈரம் மட்டுமில்லைங்க..இந்த வரிசையில் நாங்களும் உண்டு). கோவாப்பரேட்டிவ் சொசைட்டியில் அப்பா 500 ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார். தாத்தா, மாமாக்கள் தனி.. 
தீபாவளியன்று அதிகாலை 2-3 மணியளவில் மாமாக்கள் ஆட்டம் பாம் எனப்படும் (சத்தம் அதிகம் வரக்கூடியது) வெடிச் சத்தத்தைக் கேட்டு எழுந்து, எண்ணை குளியல் ,பட்டாசு வெடித்தல் (மத்தாப்பூ தான், பட்டாசுன்னு கொஞ்சம் கௌரவமா சொல்லியிருக்கேன்). ஒவ்வொரு தீபாவளியன்றும் தவறாமல் தாத்தாவின் சில நண்பர்கள் வந்து செல்வார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் இரவு வரை. வேம்பு மாமாவும் அவர் பெண் ஜானகியும் காலை 6 மணிக்கே இட்டலி மற்றும் பல பலகாரங்களை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். (நாங்கள் 4 மணிக்கே பல காரம் இனிப்பு வகைகளை உண்டது தனிக்கதை.. கண்ணு பட்டுடும்ல முழுக்கதையும் சொல்ல மாட்டேன்பா)

அடுத்த கட்டத்தில், புளியம்பட்டி என்னும் சிற்றூரில் , வரிசையாக அமைந்த வீடுகள் , முன்னும் பின்னுமாய் பல இளம் பெண்கள். எங்கள் வீட்டில் 3, வலது இடது வீடுகளில் தலா 1 , அதற்கடுத்த வீட்டில் 3 என ... தீபாவளியன்று எப்படியும் 2,3 பெண்கள் வெளியே..மற்றவர்கள் உள்ளே..ஏறக்குறைய சமவயதினர்.
வெளியே இருக்கும் பெண்கள் ஓ..வென்று அழுது ஓய்ந்து ஒரு வீட்டில் ஒன்று கூடி விடுவார்கள் . தீபாவளி தினத்தன்று காலையில் பட்டாசு வெடித்து முடித்த கையோடு உள்ளே உள்ள பெண்கள் இட்டலிக்கு சட்னி, வடைக்கு மாவு, சாம்பாருக்கு மசால் என்று அம்மிக்கல், ஆட்டுகல் என மாற்றி மாற்றி ஆட்டியும், பட்டாசுக் குப்பைகளை பெருக்கியும் வீடு துடைத்தும் என அம்மாக்களுக்கு உதவிக் கொண்டிருக்க... (துணி துவைக்கும் படலம் அன்று இல்லை, ராக்கெட் வந்து விழுந்து துணி எரிந்து விபத்து நேரும், அந்த நாட்களில் இந்த வகை விபத்தெல்லாம்  ஜகஜமப்பா) வெளியே உள்ள பெண்களுக்கு பாவம் என்று இட்டலி பலகாரங்கள் என எல்லா அம்மாக்களும் உபசரிக்க, நன்றாக உண்டு விட்டு , பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பார்கள். (உள்ளே பெண்கள் வெளியே பெண்களைப் பார்த்து பொரும.. அவர்கள் இவர்களைப் பார்த்துப் பொரும..)
தீபாவளி அதிகாலையில் (6 மணிக்கே)  நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த தோழி சீதா வீட்டிற்குப் படையெடுத்து , அவளது தாயார் சூடாக செய்து தரும் இட்டலி, வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், அதிரசம் , சீப்பு சீடை, உக்காரை என ஒரு கட்டு கட்டுவோம். 

திருமணமாகி சென்னை வந்த சில வருடங்கள் (நினைவில் கொள்க.. அப்போது எனக்கு வயது 17) தீபாவளி காலையில் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் விஜயம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என முடிந்து வீடு வரும் போது மதியமாகி இருக்கும். அதற்கு பிறகு என்னத்த.... சமைக்கிறது என்று சாம்பார், ஒரு காய், ஒரு பாயசம் என முடியும் தீபாவளி விருந்து.
மகள் பிறந்த பிறகும் ஓரிரண்டு வருடங்கள் இதே கதை. பிறகு சுதாரித்துக் கொண்டு, காலை 10 மணியளவில் பூஜை முடித்து வடை பாயசம் என விருந்து சாப்பாடு. பிறகு தான் வீட்டை விட வேண்டும் என்று மாற்றிக் கொண்டோம்.
பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து செய்த வடை, பாயசம் ஆவி பறக்க 5.30 க்கு எங்கள் இல்லம் வந்து சேரும். 10 மணியளவில் நண்பர்கள் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவோம். [ ரத்னாம்மா வீட்டில் பாயசம் கண்டிப்பாக சாப்பிடுவோம். அவரது மகள் கேதார கௌரி விரதம் இருப்பார் அதிரசம் செய்வார். சில தினங்கள் முன்பு தான், அவர் ஒரு முறை கூட எங்களுக்கு அதிரசம்  தரவில்லை என்று தோன்றியது. ஏன் என்று சில தினங்கள் முன்பு அவரை தொலைபேசியில் அழைத்து சண்டையிட்டேன். அக்கா நாங்கள் மதியம் தான் விரதம் முடிப்போம் நீங்கள் காலை நேரம் இங்கே வருவீர்கள் , இந்த முறை தவறாமல் தரேன் என்றார்.]
சாலிக்கிராமம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குழந்தைகள் இருந்ததால் கொண்டாட்டம் தான்.[என் குழந்தைகளுக்கு எங்கும் எப்போதும் கொண்டாட்டம் தான்] நவராத்திரி நாட்களில் போனஸ் வரும் பிள்ளைகளுக்கும் அப்போது தான் விடுமுறை என்பதால் , தீபாவளிக்கு அந்த நாட்களிலேயே புதுத் துணிகள் வாங்கி விடுவோம்.  எங்கள் பிள்ளைகள் மிகவும் எதிர்பார்த்து செய்த ஒரு நிகழ்வு அது. 

கடந்த தீபாவளி அமெரிக்காவின் சான் ஹொசே நகரில். பார்க் லேன் என்னும் தெருவில் வாழும் இந்தியக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,சாப்பாடு, மத்தாப்பூ , குளிரோ குளிர் .
பேரன் படிக்கும் பள்ளியில் அனைவரும் இந்திய உடை அணிந்து வர, ஒரு ஆசிரியை அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பற்றி விளக்க அங்கும் கோலாகலம் தான்
தீபாவளி முடிந்த பின்னரும் பல வீடுகளில் விருந்துகள், கொண்டாட்டங்கள். [ டேய் .......பாட்டி வந்திருக்காங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு, ஏங்க ..அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம் இங்க வாங்க, பாப்பா விழுந்து கும்பிடு... ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கிட்டோம்ல]

வாட்ஸ் ஆப், ஸ்கைப்பில் வாழ்த்துச் சொல்லி, கூரியரில் பலகாரம் செய்து(வாங்கி) அனுப்பி,ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தாடையில் ஒன்றை அணிந்து, தொலைக் காட்சியைப் பார்த்தால்....ஸ்ஸ்ஸஸஸப்பாடா... தீபாவளி முடிந்தது. அடுத்தது ஆங்கிலப் புத்தாண்டு தினம் தான். 

தீபாவளிக்கென்றே புதுத் துணி வாங்கி, பண்டிகை கொண்டாடிய கடைசித் தலைமுறை நாம் தானோ??

Friday, 16 September 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா....

எனக்கு மகள் முறையிலான ஒரு இளம் பெண் கடந்த மாதத்தில் யூ டியூபில்( you tube) பல வருடங்களுக்கு முன்பு , ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றிநடை போட்ட ரமணி Vs ரமணி நாடகத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். (இரண்டாம் பாகம் என்னை மிகக் கவர்ந்தது :D, stress buster)

திரு ராம்ஜி மற்றும் திருமதி தேவதர்ஷினி முறையே கணவன் மனைவி பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பார்ட் 2இல் ஒரு எபிசோடில்,
கணவர் : ரமணீ.. உனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லவே இல்லையே.. மனைவி: நீங்க கேக்கவே இல்லையே, கல்யாணம் ஆன புதுசுல உங்களுக்குப் புடிச்சதெல்லாம் மட்டும் எனக்குத் தெரியுமான்னு கேட்டீங்க ஆனா எனக்கு என்ன தெரியும்னு நீங்க கேக்கவே இல்லையே

இது பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு. மிக மிக இயல்பான வசனங்களின் மூலம் சொல்லப் பட்ட முக்கிய செய்தி.

கடந்த வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரை சந்தித்த போது , பேச்சுக் போக்கில் நான் ஒரு பிரபல பள்ளியில் வேலை பார்த்தேன் என்று சொன்னபோது அவர் தன் மகன்களை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சென்ற போது , அப்ளிகேஷனைப் படித்த நிறுவனர் ஆசிரியப் பணியில் சேர அழைத்ததாகக் கூறினார். இவர் முறையான ஆசிரியப் பணிக்கான பயிற்சி பெற்றவர் என்பது எனக்கு செய்தி.(ஓ!!) பல வெளிநாடுகளில் வசித்தவர். மேலும் என்னென்ன திறமைகளுக்கு சொந்தக்காரர் என்று தெரியவில்லை.

மற்றொரு இளம் பெண்மணி நான் PHP யில் பயிற்சி பெற்று, அங்கேயே வேலையும் செய்து வருகிறேன் தற்சமயம் என்றார். இவர் படித்த துறையே வேறு. [php ன்னா என்ன?] சாலிக்கிராமம் பகுதியில் வீட்டு வேலைகளில் உதவும் மூத்த பெண்மணி ஒருவர் என்னுடைய நடுவயதிற்கான பிரச்சினைக்கு சுலபமான தீர்வு கூறினார்.

படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்மணிகள் மற்றும் சீனியர் சிடிசன்களுக்கு கம்பியூட்டர் , இண்டர்நெட் , ஆங்கிலம் எனப் பயிற்சி அளித்துள்ளேன். (ஆண்களுக்கும்) இந்த அம்மாக்கள் அந்த நாளிலேயே பல கலைகள் கற்றவர்கள். லவடேல் (Lovedele,Ooty) கான்வெண்டில் படித்து மிக அருமையான பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி , கற்றுத் தந்தவர்கள். சர்ச் பார்க் கான்வெண்ட், பிரசண்டேஷன் கான்வெண்ட்,பத்மா சேஷாத்ரி போன்ற பிரபல பள்ளிகளில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். ஒரு மாணவி (83 வயது) ஹிந்தி மற்றும் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 81 வயது வரை தானே கார் ஓட்டினாராம். மற்றொரு மாணவி (65 வயது) தான் அந்தமான் தீவிலிருந்து சென்னை வந்தது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியது , (5 அடி உயரம் உள்ளவர்களை அப்போது பணியில் அமர்த்த மாட்டார்கள், உயரம் ஒரு தடை இல்லை என்று போராடி சேர்ந்தாராம்), மத்திய சென்னை தொகுதியில் 19_ _ ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது, பி ஹெச் டி (உருது) பட்டம் பெற்றது என தினம் ஒரு தகவல் தந்து திகைக்க வைப்பார். என்னை அசர வைத்த Profile.

வார இறுதியில் சந்தித்த என் தாயாரின் தோழி திருமதி ஸ்ரீதேவி அரசரத்தினம் அவர்கள் இலங்கையிலிருந்து கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அங்கே இன்றளவும் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுத் தருகிறார். (கனடா எம் பி ஆக இருந்த ராதிகா சிற்சபையீசன் இவரின் மாணவி)

ஒரு தோழி, முறையாக தையற்கலை பயின்றவர். ஆசிரியப் பணியில் இருந்தவர். மற்றொரு சகோதரி பத்திரிக்கைகளுக்கு துண்டு செய்திகள், குறிப்புகள் என எழுதுவார். காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி நேற்று பச்சைப் பயறு மற்றும் ஆளி விதையில் லட்டு செய்து , எனக்கு படம் எடுத்து, செய்முறைக் குறிப்புடன் அனுப்பி இருந்தார். புதுப் புது உணவுப் பதார்த்தங்களை செய்து அசத்துவார்.

மேற்சொன்னவைகள் என்னிடம் அந்த அம்மாக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களே. (என் கற்பனை இல்லை)

இந்த அம்மாக்கள் மட்டுமில்லை... இது போல பலப்பல அம்மாக்கள்...

சில வருடங்களுக்கு முன்பு, என் மகள் தன் மகனிடம் பாட்டியிடம் கூட்டல் கணக்கு கற்றுக் கொள் என்றாள். உடனே குட்டிப் பையன் பாட்டிகள் ஆசிரியைகள் ஆக முடியாது(grandmothers cannot be teachers) என்றார். அதற்கு என் மகள், என் அம்மா தான் எனக்கும் என் தம்பிக்கும் பாடங்களைக் கற்றுத் தந்தார். அதைத் தான் நான் உனக்கு இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். குட்டிப் பையனிடம் நான் கேட்ட கேள்வி , Can a grandmother be a manager atleast?? No, Grandmothers can NEVER be managers .[ I was working as a General Manager then]. யார் இவருக்கு இப்படி சிந்திக்கக் கற்றுத் தந்தது?? யாரும் இல்லை. பிள்ளைகளின் மன அமைப்பு பொதுவாக இப்படித் தான் இருக்கிறது.

அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது, என்னம்மா மொக்கை போட்றே, இவ்வளவு நேரம் இதைத் தான் யோசிச்சியா, உன் மண்டைல மூளை இருக்க வேண்டிய இடத்துல வேற என்னவோ இருக்கு..... இதெல்லாம் இளைஞர்கள், வாலிப வயதினர் தன் அன்னையைப் பார்த்துக் கூறி.. நான் கேட்டவைகள். [எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு]

குடும்ப நலனுக்காக, பிள்ளைகளுக்காக அம்மாக்கள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்கிறார்கள். Low profileலில் இருக்கிறார்கள். அநாவசிய ஈகோ, வாக்குவாதங்கள் என சிலபல விஷயங்களைத் தவிர்த்து குடும்ப ஒற்றுமைக்காக இந்த low profile வேடம்.

படிக்காத அம்மாக்களாயினும் அவர்கள் அனுபவங்கள் உங்களை விட அதிகம் இளைஞர்களே! யாருக்கு என்ன தெரியும் என்றே நமக்குத் தெரியாது.

அம்மாக்களே.. பிள்ளைகள் நம்மைத் தாழ்த்தி உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் என்பதை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வப்போது. தப்பில்லை.

அம்மா என்பது இங்கே ஒரு குறியீடு மட்டுமே. அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும்.

அம்மான்னா சும்மா இல்லை மக்களே....

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...