Wednesday, 10 August 2016

நானும் வரேன்... நானும் வரேன்..

ஆகஸ்டு திங்கள் 2015 . அமெரிக்காவின் சான் ஹொசே நகரம்.

"அம்மா.. இரண்டு மாதங்களுக்கு பிரதி வெள்ளிக் கிழமை சின்னப் பையனை காலையில் ஒரு மணி நேரம் உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா?" மகளின் கேள்வி.

என்ன காரணம் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.

அங்கே பள்ளி ஆரம்பிக்கும் நாளில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு மின்னஞ்சல் (ஈமெயில்) பள்ளியிலிருந்து அனுப்பப் படுகிறது. அதில் வகுப்பு ஆசிரியைக்கு பெற்றோர்களின் உதவி எந்தெந்த வேலைகளில், வேளைகளில் தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு , பெற்றோர்களின் சம்மதம் கேட்கப் படுகிறது.

[ஆசிரியர்கள் மாணவர்களின் பென்சிலைக் கூட கூர்மைப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியைக்கு நிறைய வேலைகள். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ முன்வருகிறார்கள். கணினி பயிற்சி, மதிய உணவு வேளை மேற்பார்வை, விளையாட்டு நேர மேற்பார்வை , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் எனப் பல விதத்திலும் உதவலாம். மகள் கணினி பயிற்சி வகுப்புக்கு செல்வார்.]

அதிலிருந்து நமக்கு வசதியான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்து சம்மதம் அளிக்கலாம். ஒப்புக் கொண்ட நேரத்திற்குத் தவறாமல் பள்ளிக்குச் சென்று , அலுவலகத்தில் அனுமதி பெற்று , வகுப்பறைக்குள் சென்று ஆசிரியைக்கு உதவி செய்துவிட்டு வரவேண்டும். செல்ல முடியாத நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள் பள்ளியில்.முக்கியமான ஒரு விஷயம், உதவி செய்ய போகும் பெற்றோர் , தாமும் ஒரு ஆசிரியரைப் போலவே செயல்பட வேண்டும். வீண் பேச்சுக்களுக்கு இடமில்லை. பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகள் வகுப்பறையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் , சரியாக சாப்பிடுகிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கும் இது சரியான தீர்வு.

பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்கள் ஒருவருக்கொருவர் இந்த வாலண்டியர் சர்வீஸ் நேரத்தில் உதவிக் கொள்வார்கள். குட்டிப் பாப்பா இருந்தால் பார்த்துக் கொள்வது, பெரிய பாப்பா இருந்தால் வகுப்பு முடிந்ததும் அழைத்து வருவது, கடைக்கு சென்றால் ஒரு கேலன் பால் வாங்கி வருவது, சின்னப் பாப்பாவை கூட்டி செல்ல வரும்போது 4 பச்சை மிளகாய் கொண்டு வந்து தருவது என.....

ஒவ்வொரு வாலண்டியர் சேவைக்குப் பின்னும் , மகளின் முகத்தில் ஒரு வித நிறைவைக் கண்டேன். (அம்மா... இன்னிக்கு என் பிரண்ட் .. என அம்மாவும் பையனும் அன்றைய வகுப்பு நிகழ்வுகளைப் பேசிக் கொள்வார்கள்).பள்ளிகளில் பெற்றோர்களின் பங்களிப்பை வெகுவாக விரும்பி அனுமதிக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம். படித்த , வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து பயனுள்ள செய்திகளைப் பகிர முடிகிறது. (அலுவலகத்தில் பணி புரிபவர்களும் சேவை செய்ய வருவார்கள், அங்கே பணி நேர சலுகைகள் நிறைய)

நிற்க.

இந்தியா. சென்னை மாநகரம்.

சம்பவங்களின் பாதிப்பில் பல மாதங்களுக்கு முன்பு, நூலகரை சந்தித்து , என்னைப் பற்றிய தகவல்களை அச்சடித்துக் கொடுத்து, இங்கே வரும் பள்ளிப் பிள்ளைகள் யாருக்கேனும் படிப்பில் உதவி தேவைப் படுமா எனக் கேட்டு சொல்லுங்கள் நான் இங்கே வந்து கற்றுத் தருகிறேன் என்றேன். பதில் இல்லை.

அடுத்த கட்டமாக, அருகில் உள்ள பள்ளியில் என்னை அறிமுகப் படுத்தி வையுங்கள் என்னால் ஆன உதவிகளை செய்து தருகிறேன் என்றேன்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் காலை நூலகர் தொலை பேசியில் அழைத்து தயாராக இருங்கள் அழைத்துப் போகிறேன் என்றார். சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்சமயம் ஆசிரியர்கள் சங்கத்தில் ஏதோ ஸ்டிரைக் பண்றாங்களாம் அதுக்கு போறாராம். 3 நாட்கள் ஆகுமாம் பள்ளி மீண்டும் இயல்புக்கு வர, அதன் பிறகு பார்ப்போம் என்றார்.

வாரங்கள் கடந்தன. நூலகரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. நான் நேரில் சென்று என்ன நடக்கிறது என்று விசாரித்ததில் இதோ நூலகரின் வார்த்தைகளில் :

நூலகர்: தலைமை ஆசிரியர் இருக்காரா?

பியூன்: (ஏற்கனவே அறிமுகமானவர்) என்ன காரணத்திற்காக அவரை பார்க்க போறீங்க?

நூலகர்: என் தோழி ஒருவர்......

பியூன்: அய்யய்யோ..அந்த ஆளு (என்ன மரியாதை பாருங்க) கொஞ்சமும் மரியாதை தெரியாதவன், யார் வந்தாலும் உட்கார சொல்லி கூட பேசுவதில்லை , குவார்டர்ஸ் ல குடியிருகறவங்கன்னா படிச்சவங்களா இருப்பாங்க, இங்கே அழைச்சுட்டு வந்தா ரொம்பவே மரியாதை குறைவா நினைப்பாங்க , தயவு செய்து அவங்களை இங்கே கூட்டிட்டு வராதீங்க

இந்த நிகழ்வை என் தோழி ஒருவரிடம் சொன்னேன். அவரின் வார்த்தைகளில் " நான் ஏற்கனவே ஒரு பள்ளியில் இது போல சேவை செய்ய விரும்பிச் சேர்ந்தேன். சும்மா தானே செய்யறே, இந்த வேலை செய் அந்த வேலை செய்ன்னு படுத்தி எடுத்துட்டாங்க.. பணம் வாங்காமல் வேலை செய்ய முன்வந்தால் இந்த கதி தான் இங்கே, அதன் பிறகு நான் அந்தப் பக்கம் செல்லவில்லை"

நான் இனிமேல் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா ...

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...