Wednesday, 27 April 2016

லண்டன் முதல் பைசா வரை....


கடந்த ஏப்ரல் 6 - 20 ஐரோப்பிய விடுமுறைப் பயணம் . (வருடம் முழுவதும் உனக்கு விடுமுறை தான் அப்படீன்னு நீங்க சொல்றது கேக்குதே).

சென்னை - அபுதாபி - லண்டன் ஹீத்ரூ 

லண்டன் நகரை அந்த ஊரில் வசிக்கும் வழிகாட்டியின் ஆங்கில விளக்கத்துடன் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிஸ்டரி மியூசியத்தில் பிரிட்டிஷ் காலனிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட விலைமதிப்பில்லாத பொருட்கள் உள்ளன. டூசாட் மியூசியத்தில் கொலை , சதித் திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கும் சிலைகள் வைத்திருக்கிறார்கள். லண்டன் பிரிட்ஜ் என நாம் சொல்வதை அங்கே டவர் பிரிட்ஜ் என்கிறார்கள். அதற்கு அருகில் உள்ள பாலம்தான் லண்டன் பிரிட்ஜ். டெம்ஸ் நதிக் கரையோரம் அமையப்பெற்றிருக்கும் லண்டன் ஐ எனப்படும் ஜெயண்ட் வீல் வேகமாக சுத்தாமல் நிதானமாக 35 நிமிடங்களில் ஒரு சுற்று நகர்கிறது. நகரின், நதியின் அழகினைக் கண்டு களித்தோம். குறுகலான சாலைகள். அரசியாரின் ஆட்சியே இன்னும் இருப்பது போன்ற தோற்றம் [குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்] லண்டன் என்றாலே நினைவுக்கு வருவது 221 பீ, பேகர் தெருதான். [ஷெர்லாக் ஹோம்ஸ் வீடு] டூசாட் மியூசியத்திற்கு பக்கத்துத் தெரு.
ஊரை விட்டு வெளியே வந்ததும் அகலமான சாலைகள் வழியெங்கும் டஃப்போடில் மலர்கள், தொழிற்சாலைகள்.

ஆங்கிலக் கால்வாயை கடக்க ஹார்விக் துறைமுகத்திலிருந்து ஸ்டீனா லைன் கப்பலில் பயணம். பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல். 11 தளங்கள். கப்பலின் 7 ஆம் தளத்திற்கு நடந்து பயணியர் செல்லக் கூடிய பாலம் (ஏரோ பிரிட்ஜ் போல) பழுதாகி இருந்ததால் பேருந்தில் ஏற்றி எங்களை 4 ம் தளத்தில் கப்பலின் உள்ளேயே இறக்கி விட்டார்கள். மின் தூக்கி மூலம் மேலே சென்றோம். ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்தது. சாப்பாட்டுக் கூடம், தங்கும் அறைகள், லௌஞ்ச், பொழுது போக்கு பகுதி, மேல் தளத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பகுதி , வைஃபை என அருமை. கப்பல் நகர்ந்ததே தெரியவில்லை. இரவு 12 - காலை 7 பயண நேரம். வித்தியாசமான அனுபவம். [ நான் : சத்தமே இல்லை, அமைதியா இருக்கு மகள்: டைடானிக் போல ஆனால் மட்டும் தான் அம்மா சத்தம்]

ஹூக் ஆஃப் ஹாலண்ட் துறைமுகம். ஷெங்கென் விசா இங்கு மட்டும் குடியுரிமை அலுவலர்களால் சரி பார்க்கப்பட்டது. தி ஹேக் நகரின் பழமையான கடற்கரை, பின் ஆம்ஸ்டர்டேம் நகர். வழியெங்கும் காற்றாலைகள். டூலிப் தோட்டங்கள். வசந்தம் தொடங்கி சில நாட்களே ஆகி இருப்பதால் க்ரீன் ஹவுசின் உள்ளே மறந்து இருந்தன பூக்கள். [சங்கர் படத்தில் பார்த்திருப்பீர்கள்]. எதிர்பார்ப்பு இல்லை என்பதால் ஏமாற்றம் இல்லை. ஆயினும் எங்கும் உள்ள கால்வாய்களின் ஓரத்தில் தெருக்களின் ஓரத்தில் என எங்கெங்கும் டூலிப் பூக்கள். யாராலும் மறைக்க முடியவில்லை. 
அடுத்தது பிரஸ்ஸல்ஸ் நகர். இந்த நகரின் வழியாக அமெரிக்காவிற்கு முன்பே சென்றிருந்தாலும் ஊருக்குள் சென்றது இதுவே முதன் முறை. நகரின் அருகில் ஜெட் விமான நிலையம் ஒன்று உள்ளதால் வானில் வெண்புகை எங்கெங்கும். முன்பும் கண்டு மகிந்த காட்சிதான் அது. குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணமாக கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க சொன்னார்கள். ஊரின் மத்தியில் ஒரு மண்டபத்தில் இறந்தவர்களுக்காக பூங்கொத்து வைத்து சென்றார்கள். சில பேனர்கள் வேறு மொழியில் இருந்தன. மிக சிலர் அமர்ந்து இருந்தனர். வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று சொன்னார்கள். அங்கேயே தான் நின்று கொண்டிருந்தோம். ஒன்றுமே தெரியவில்லை. ஆச்சரியம். [நம்ம ஊரில் ஆர்ப்பாட்டம்னா எப்படி இருக்கும், கத்தி கலக்கிட மாட்டோம்?] குறுகலான கடைத்தெருக்களின் இடையில் பிரசித்தி பெற்ற குட்டிப் பையனின் சிலை. [மன்னெகின் பிஸ்]. ஊருக்கு வெளியில் அமைந்த ஒரு பொழுது போக்கு பூங்காவில் மினி யூரோப் என்ற பகுதியில் ஐரோப்பிய யூனியனின் தொன்மையான, முக்கியமான கட்டிடங்கள் மற்றும் தொழில்கள் பற்றிய மாடல்கள் 1:25 என்ற அளவில் செய்து காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். நுணுக்கமான வேலைப்பாடு. கண்ணைக் கவரும் வண்ணம் தக்க விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
பாரிஸ் நகரம். முதல் நாள் ஈபில் டவரின் மேலேறி நகரின் அழகினைக் கண்டோம். ஊரின் அழகினை அவ்வூரின் வழிகாட்டியின் விளக்கங்களுடன் கண்டோம். ஒவ்வொரு தெருவும் ஏதேனும் ஒரு அரண்மனை அல்லது ஒரு மியூசியத்தின் பெயரிலேயே அமைந்துள்ளது. எங்கெங்கு காணினும் நினைவுச் சின்னங்கள். நெப்போலியன் நினைவிடம், பதினாறாம் லூயி மன்னனும் அவன் துணவி மேரி அண்டாய்னெட்டும் கில்லடினால் கொல்லப்பட்ட இடம் என பாடத்தில் படித்தவைகள் பலவற்றையும் நேரில் கண்டோம். லூவர் மியூசியம் செல்ல நேரம் இல்லை. மோனாலிஸா .. ஐ மிஸ்ட் யூ....
மறு நாள் டிஸ்னி லேண்ட். வரைபடம் மற்றும் சாப்பாட்டினை கையில் கொடுத்து சுற்றிப் பார்க்க அனுப்பி விட்டார்கள். இடைவிடாத மழையில், குடையுடன், ஈரமான காகித சாப்பாட்டுப் பையுடன் குதிரை, குட்டி ரயில், பெரிய ரயில் , லேசர் ஷோ என..அல்ப சொல்ப ரைடுகளில் ஏறி இறங்கினோம்.  காகித பை நனைந்து பிய்ந்து... ஜில்லென்ற சாப்பாட்டை இளம்தூறலில் வெட்ட வெளியில் உண்டு முடித்து...
மழை சற்றே நின்றதும்... வெளியில் வரும் நேரம் வந்து விட்டது.
இரவு நேரம் ( 8.30 -9.30 ) சீன் நதியில் மேல் தளத்தில் முதல் வரிசையில் குளிரில் படகுப் பயணம். 9 மணிக்கு ஈபில் டவரில் மற்றும் பாலங்களில் விளக்குகள் போடப்பட்டன. பேருந்தில் சென்று காண முடியாத பல கட்டிடங்களைக் காண முடிந்தது. அலெக்ஸண்டர் பாலம், நாடிர்டாம் தேவலயம் என... அருமையோ அருமை. 
பாரிஸ் நகரின் ஆர்க் டீ ட்ரையாம்பையும் சாம்ப்ஸ் எலிசீ யையும் ஈபில் டவரையும் இரவிலும் பகலிலும் சுற்றி சுற்றி வந்தது மகிழ்ச்சியான எதிர்பார்க்காத அனுபவம். பிரான்சின் கிராமப் புறங்களில் நம் ஊரில் தெருக்குத்தில் பிள்ளையாருக்கு கோவில் அமைப்பது போல் ஊருக்குள் நுழையும் தெருவின் முடிவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைத்துள்ளதைக் கண்டேன். வேறெங்கும் அவ்விதம் இல்லை.

பிராங்க்பர்ட் நகரம். ஜெர்மனியில் விதம் விதமான தட்பவெப்ப நிலைகளை எதிர்பார்க்கலாம் என என் மகள் மூலம் பலகட்ட தகவல்கள் கிடைத்தன. எல்லா ஐரோப்பிய ஊர்களிலும் மையப் பகுதியில் ஒரு மார்க்கெட் ஸ்கொயர். அக்காலத்தில் பொது மக்கள் கூடும் இடம்.  கலை நிகழ்ச்சிகள் விழாக்கள் பிரார்த்தனைகளை மக்கள் நடத்த அரசர்கள் கண்டு களிப்பார்களாம். ஒரு தேவாலயம், ஒரு அரண்மனை, அரச குடும்பத்தினரின் வீடுகள் கண்டிப்பாக உண்டு. நடுவில் பெரிய சதுர மைதானம். இங்கும் அதுபோன்ற இடத்திற்கு சென்ற போது அழகான வானவில் தோன்றியது. 
கடும் பனிமூட்டத்துக்கிடையில் அங்கிருந்து கிளம்பி , நெக்கர் நதிக்கரையில் அமைந்த ஹைடல்பர்க் நகரம். ஜெர்மனி கோட்டை கொத்தளங்கள் நிறைந்த நாடு. மலை மேல் அமைந்த கோட்டையின் உள்ளே சென்று கண்டோம். ஹோமியோபதி மருந்துகள் பற்றிய மியூசியம் உள்ளே உள்ளது. ஒரு தேவாலயம், குடியிருப்புகள் என பல பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஊரின் அழகினையும் பழமையான கட்டிடங்களையும் கண்டோம். பிளேக் ஃபாரஸ்ட் எனப்படும் அடர்ந்த நிழலே விழாத காடுகளின் வழியே பயணம். வழியெங்கும் கடும் மழை 3-4 மணி நேரங்கள். போக்குவரத்து தடைகள். டிடிசி ஏரி, டிரூபா குக்கூ கிளாக் தொழிற்சாலை இரண்டையும் அடையும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஏரியை அதன் அருகில் சென்ற போது கண்டோம். ஒரு வழியாக சுவிட்சர்லாந்து நாட்டின் எங்கல்பர்க் நகருக்கு வந்து சேர்ந்தோம்.

ஹோட்டல் டெரஸ் என்னும் விடுதியுள் நுழைவதே ஒரு புதுமையான அனுபவம். மலைமேல் கட்டப்பட்டிருக்கும் அதன் உள்ளே செல்ல ஒரு குகை, ஒரு மின் தூக்கி, சில மீட்டர்கள் நடை மீண்டும் ஒரு குகை ஒரு மின் தூக்கி. அறையின் உள்ளிருந்து பார்த்தால் தெரிந்த டிட்லிஸ் மலை. பனி மூடிய ஆல்ப்ஸ் மலை சிகரங்கள். கேபிள் கார் (6 பேர் அமரக்கூடியது) ஏறி ஒரு சிகரம் சென்று மற்றொரு கேபிள் கார் மூலம் (80 பேர் நின்றபடி பயணம் செய்யலாம் 360 டிகிரி சுழன்று கொண்டே மேலேறும்) டிட்லிஸ் மலையின் உச்சியை அடைந்தோம் 10,000 அடி உயரம். பனி மழை பெய்தது. எங்கும் வெள்ளை. ஜில்லான அனுபவம். அங்கேயே அமைந்த ஐஸ் குகைக்குள் சென்று வந்தோம். மலை மேல் உள்ள உணவு விடுதியில் தென்னிந்திய உணவு வகைகளை உண்டோம். 
கீழிறங்கி லூசர்ன் நகரம் சென்று பார்த்து வந்த பிறகு சூரிச் நகரம் வழியாக ரைன் நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். படகில் பயணம் செய்து, ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அது அமைந்திருப்பதை கண்டோம். பச்சைப் பசேலென வெண் நுரையுடன் நீரின் வண்ணம். 

அடுத்து சென்றது ஆஸ்டிரியாவின் இன்ஸ்ப்ருக் நகரம் வரும் வழியில் வாட்டன்ஸ் நகரம். உலகப் புகழ் பெற்ற ஸ்வரொவ்ஸ்கி க்ரிஸ்டல் தொழிற்சாலையை கண்டோம். வழியெங்கும் பனி படர்ந்து ஆல்ப்ஸ் மலைத் தொடர். வெயிலுக்கு பனி உருகி சிற்றருவியாக, நதியாக , ஏரியாக எங்கெங்கும் நீர்...பசுமை.
இத்தாலியின் வெனிஸ் நகரம். என் நீண்ட காலக் கனவு. விசைப்படகில் வெனிஸ் தீவு. அங்கே கொண்டோலா எனப்படும் சிறுபடகில் அதன் குறுகிய தெருக்களில் பயணம். செயிண்ட் மார்க்ஸ் ஸ்கொயரில் நடந்து புறக்களைக் கண்டது, பாலங்களின் மீது நடந்து சென்றது , ஜெலாடோ எனப்படும் ஐஸ்க்ரீம் வாங்கி உண்டது, முரனோ கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பது எப்படி என்று கண்டது, கடலின் கரையில் அமர்ந்து இருந்தது என 4 மணி நேரங்கள் .. மீண்டும் படகில் வந்த பிறகு ஒரு குட்டி தெருவில் ஷாப்பிங். பொருட்கள் சகாய விலையில் உள்ளன இங்கே. படுவா என்னும் ஊரில் இரவு தங்கினோம். இந்த ஊரின் பல்கலைக் கழகத்தில் தான் கலிலியோ தலைவராகப் பணியாற்றினாராம்.

படுவாவிலிருந்து ரோம் நகரம். வழியில் பிளாரன்ஸ் நகரம். மைக்கேலேஞ்ஜலோ பாயிண்ட் என்ற பெயர் பெற்ற மலை உச்சியிலிருந்து நகரின் அழகைக் கண்டோம். மைக்கேலேஞ்ஜலோவின் மிகப் புகழ்பெற்ற சிற்பமான டேவிட்டின் நகலை செய்து வைத்துள்ளார்கள். அவர் ஒரு போர்க்காட்சியை அதுவும் ஒரு புராணக் கதையை இவ்விதம் கற்பனை செய்தார் என்பது புதுமை. கை நரம்புகள் கூட துல்லியமாகத் தெரிகிறது.  (டேவிட் கோலியாத் கதை பள்ளியில் படித்தது நினைவிருக்கிறதா? பைபிள் கதை. டேவிட் ஆயுதம் எதுவும் இல்லாமல் ஒரு கவணும் 5 கற்களும் கொண்டு கோலியாத்தை வெற்றி பெறுவார்) பைனாகுலர் உதவியால் அனைத்துக் கட்டிடங்களும் கண்முன்னால் வந்து நின்றன.

ரோம் நகரின் ஒரு பகுதியான, தனி நாடான வாடிகன் நகரின் மியூசியம், சிஸ்டைன் சேபல், செயிண்ட் பீடெர்ஸ் பேசிலிக்கா ஆகியவற்றைக் கண்டு களித்தேன். மைக்கேலேஞ்ஜலோ வடிவமைத்த தேவாலயம். உள்ளே பக்கவாட்டு சுவர்கள் மற்றும் கூரையில் அவரது ஓவியங்கள் நேற்று வரைந்தது போல உள்ளன. அருமையோ அருமை. [செயிண்ட் பீடெர்ஸ் பேசிலிக்கா வாசலில் தான் போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வாழ்த்து சொல்வார், பார்த்திருப்பீர்கள்]. ரோமானிய வழிகாட்டியின் வர்ணனைகள் சுவாரசியமாய் இருந்தது.

ரோம் முழுவதும் புராதனமான கட்டிடங்கள்.  எங்கெங்கும் குப்பை கூளங்கள். எங்கெங்கும் புகைபிடித்தல். பால்கனிகளில் கொடிகட்டி துணி உலர்த்தல், பகலில் வெப்பம் இரவில் லேசான குளிர் என நம் நாட்டின் சாயல் இத்தாலியில் நான் கண்ட பகுதிகளில். கொலோசியம் எனப்படும் மிகப் பெரிய மைதானத்தின் இடிபாடுகளை உள்ளே சென்று கண்டோம். ஜூலியஸ் சீசர் போன்ற பேரரசர்கள் வாழ்ந்த நாடு. நாங்கள் சென்ற அன்று வொர்ல்ட் ஹெரிடேஜ் டே. அதற்கான எந்த முனைப்பும் காணப்படவில்லை. வருத்தமாக இருந்தது. 

கடைசியாக , பைசா நகரம். பணம் கொடுத்து சென்று மிகவும் ஏமாந்து போகக் கூடிய இடம் எது என்று வலைத்தளங்களில் ஆராய்வார்கள். அதில் குறிப்பாக பைசா நகர சாய்ந்த கோபுரம். அப்படி என்ன தான் இருக்கிறது என்று நானும் வலைத்தளத்தை ஆராய்ந்ததில் அது பற்றிய அருமையான தகவல்கள் கிடைத்தன. நேரில் சென்று கண்ட போது அதன் தொன்மை புலப்பட்டது. தேவாலயத்தின் மணிக்கூண்டு அது. ஆரம்பத்திலிருந்தே சாய்ந்த ஒரு அமைப்பு அது. தேவாலயம் மற்றும் மணிக்கூண்டு முழுவதும் சலவைக் கற்களால் ஆனது. உச்சி வரை படிக்கட்டுகளில் சென்று பார்த்தோம். தேவாலயத்தின் உள்ளே இருந்த விளக்கின் அசைவை வைத்துத் தான் கலிலியோ பெண்டுலம் பற்றிய விதியைக் கண்டு பிடித்ததாகக் கூறுகிறார்கள். அதன் அருகில் ஏறக்குறைய 2 மணி நேரங்கள் அமர்ந்திருந்தேன். 

மிலன் - அபுதாபி - சென்னை 20 ஆம் தேதி இரவு 7.20.

பின் குறிப்பு : ஆங்கில இலக்கியம் படிப்பதாலும், பள்ளியில் படித்த வரலாறு புவியியல் பாடங்கள் நினைவில் இருப்பதாலும், கிளம்பும் முன்பாக இணையத்தில் பார்க்கப் போகும் இடங்கள் பற்றிப் படித்து குறிப்புகள் எடுத்து சென்றதாலும், ஆசிரியர்களாக இருக்கும் என் சகோதரர் திரு. முரளி ராஜகோபால் அவர்கள் மற்றும் சகோதரி திருமதி கல்யாணி அவர்களது ஊக்கத்தாலும், இந்த சுற்றுலாவை என்னால் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. உடன் வந்து கேட்டவர்களுக்கும் விளக்க முடிந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கு மிக்க நன்றி.

**எழுத்தாளார் ராஹுல் சாங்க்ருத்யாயன் ஸ்டைல் தலைப்பு இது. உன் மனத்தின் அங்கீகரமே எனக்கு சகலமும் என்று சொன்னவர் (வோல்கா முதல் கங்கை வரை)













WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...