Tuesday, 20 December 2016

மின்சாரம் என் மீது பாய்கின்றது.....

ரமணன் அறிவிக்காத முதல் புயல்
ராப்பகல் கழிந்தது எதிர்பார்ப்புடனே
ஆழிப் பேரலையும் நினைவில் வந்தது - உடன்
ஆண்டுகள் முந்தைய ஊழிக் காற்றுடன்

பால் இல்லை தயிர் இல்லை
காய் இல்லை கறி இல்லை
அன்னம் செய்திட அரிசியும் இல்லையே
அவரவர் கவலை அவரவர்க்கு

மிதமாய் வீசும் காற்றின் வேகம்
மிகையாய் ஆகிப் போகும் முன்பே
வானம் இருண்டு மேகம் திரண்டு
இயற்கையின்  ஊழித் தாண்டவம்

மழை வலுக்க, மரங்கள் சரிய
உலகத் தொடர்பு அடியோடறுந்திட
நடப்பறிய செய்தித் தாள் படித்து
மரங்கள் விழுந்து இலைகள் குவிந்து
ஜுராசிக் பார்க்கான தெருக்களில் நடந்து

தண்ணீருக்காய் தவித்து, மற்றவர்க்கு உதவி,
கூடிப் பேசி, வார்த்தைகளால் விளையாடி
சிறு விளக்கொளியில்  உண்டு களித்து
இரைச்சலின்றிஅமைதியைக் கொண்டாடி
ஒருவருக்கொருவர் உதவி, ஊருக்கும் உதவி..

மின்சாரம் இல்லா மகிழ்ச்சி நாட்கள்
மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

ஆயிரம் யோசனைகள் இதற்கிடையில்......

அம்மா சின்னம்மா என்னவாகியிருக்கும்?
அய்யாவுக்கு நெஞ்சு சளி சரியானதோ?
இனியாவது புரியும்படி ட்வீட் செய்வாரா?
ஊருக்கு கிளம்பிய உறவினர் என்ன ஆனார்?

டிரம்ப் ஐயா என்ன புதுச் சட்டம் போட்டாரோ?
மும்பை நண்பர் எப்படி ஊருக்குத் திரும்புவார்?
நாளை பால் வருமா செய்தித் தாள் வருமா?
நாட்டின் பணத் தட்டுப்பாடு எப்போது சரியாகும்?

இதோ....மின்சாரம் வந்து விட்டது
எங்கும் ஒளிமயம் எங்கும் சத்தம்
தொலைத் தொடர்பு சாதனங்கள்

சிறிது நேரத்தில்....
நேற்று வரை நேரில் பேசிய நேரெதிர் வீட்டிலிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல்

Good evening ! Got cold?
Yes,Cold
Get well soon ( smileys)

ஸ்ஸ்ஸ்....ஆஆஆ..........வர்தா புயல் கடுமையாகத் தாக்கியது இம்முறை!!





































































Tuesday, 27 September 2016

தீபாவளி போனஸ் வந்தாச்சா??

சில தினங்களுக்கு முன்பு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த என் சகோதரரின் மகள், அத்தே.. எனக்கு சாந்து பொட்டு வேணும் வெச்சிருக்கீங்களா என்றார். பல நிறங்களில் சிறு குப்பிகளில் 12,16, 18 நிறங்களில் கிடைக்கும் வகை அவர் கேட்ட பொருள். அது தொடர்பான எங்கள் பேச்சுக்கள் என்னையும் ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பேன்சி பொருட்கள் விற்கும் கடைக்கு முன் கொண்டு நிறுத்தியது.

5-10 வயதிற்குட்பட்ட தீபாவளிப் பண்டிகை நாட்கள் . தீபாவளிக்கு முந்தைய அமாவாசை அன்று வீடு வீடாக மூட்டையில் துணிகளை எடுத்து வந்து விற்பவரிடம் , எனக்கும் என் இளைய சகோதரிகளுக்கும் புதுத் துணிகள் வாங்கி, எங்கள் தாயார் தானே தைத்து வைப்பார். அதற்கு மேட்சி மேட்சியாக வளையல் , தோடு, ரிப்பன், சாந்துப் பொட்டு எல்லாம் வாங்க வேண்டாமா? அப்படி அணியாமல் இருந்தால் எங்கள் தோழிகள் முன்னிலையில் தலைகுனிவு ஆகிடாதா??. அம்மாவை (நச்சரித்து) அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள மிகச் சில பேன்சி ஸ்டோர்களில் ஏறி இறங்கி எப்படியும் எங்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கி விடுவோம்.
பண்டிகை தினத்திற்குப் பல நாட்கள் முன்பே பலகாரங்கள் செய்யும் முயற்சியில் பெண்கள் ஈடுபட்டிருக்க, ஆண்கள் பட்டாசு வாங்குதல், காய வைத்துப் பாதுகாத்தல்(மழை , ஈரம் மட்டுமில்லைங்க..இந்த வரிசையில் நாங்களும் உண்டு). கோவாப்பரேட்டிவ் சொசைட்டியில் அப்பா 500 ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார். தாத்தா, மாமாக்கள் தனி.. 
தீபாவளியன்று அதிகாலை 2-3 மணியளவில் மாமாக்கள் ஆட்டம் பாம் எனப்படும் (சத்தம் அதிகம் வரக்கூடியது) வெடிச் சத்தத்தைக் கேட்டு எழுந்து, எண்ணை குளியல் ,பட்டாசு வெடித்தல் (மத்தாப்பூ தான், பட்டாசுன்னு கொஞ்சம் கௌரவமா சொல்லியிருக்கேன்). ஒவ்வொரு தீபாவளியன்றும் தவறாமல் தாத்தாவின் சில நண்பர்கள் வந்து செல்வார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் இரவு வரை. வேம்பு மாமாவும் அவர் பெண் ஜானகியும் காலை 6 மணிக்கே இட்டலி மற்றும் பல பலகாரங்களை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். (நாங்கள் 4 மணிக்கே பல காரம் இனிப்பு வகைகளை உண்டது தனிக்கதை.. கண்ணு பட்டுடும்ல முழுக்கதையும் சொல்ல மாட்டேன்பா)

அடுத்த கட்டத்தில், புளியம்பட்டி என்னும் சிற்றூரில் , வரிசையாக அமைந்த வீடுகள் , முன்னும் பின்னுமாய் பல இளம் பெண்கள். எங்கள் வீட்டில் 3, வலது இடது வீடுகளில் தலா 1 , அதற்கடுத்த வீட்டில் 3 என ... தீபாவளியன்று எப்படியும் 2,3 பெண்கள் வெளியே..மற்றவர்கள் உள்ளே..ஏறக்குறைய சமவயதினர்.
வெளியே இருக்கும் பெண்கள் ஓ..வென்று அழுது ஓய்ந்து ஒரு வீட்டில் ஒன்று கூடி விடுவார்கள் . தீபாவளி தினத்தன்று காலையில் பட்டாசு வெடித்து முடித்த கையோடு உள்ளே உள்ள பெண்கள் இட்டலிக்கு சட்னி, வடைக்கு மாவு, சாம்பாருக்கு மசால் என்று அம்மிக்கல், ஆட்டுகல் என மாற்றி மாற்றி ஆட்டியும், பட்டாசுக் குப்பைகளை பெருக்கியும் வீடு துடைத்தும் என அம்மாக்களுக்கு உதவிக் கொண்டிருக்க... (துணி துவைக்கும் படலம் அன்று இல்லை, ராக்கெட் வந்து விழுந்து துணி எரிந்து விபத்து நேரும், அந்த நாட்களில் இந்த வகை விபத்தெல்லாம்  ஜகஜமப்பா) வெளியே உள்ள பெண்களுக்கு பாவம் என்று இட்டலி பலகாரங்கள் என எல்லா அம்மாக்களும் உபசரிக்க, நன்றாக உண்டு விட்டு , பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பார்கள். (உள்ளே பெண்கள் வெளியே பெண்களைப் பார்த்து பொரும.. அவர்கள் இவர்களைப் பார்த்துப் பொரும..)
தீபாவளி அதிகாலையில் (6 மணிக்கே)  நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த தோழி சீதா வீட்டிற்குப் படையெடுத்து , அவளது தாயார் சூடாக செய்து தரும் இட்டலி, வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், அதிரசம் , சீப்பு சீடை, உக்காரை என ஒரு கட்டு கட்டுவோம். 

திருமணமாகி சென்னை வந்த சில வருடங்கள் (நினைவில் கொள்க.. அப்போது எனக்கு வயது 17) தீபாவளி காலையில் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் விஜயம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என முடிந்து வீடு வரும் போது மதியமாகி இருக்கும். அதற்கு பிறகு என்னத்த.... சமைக்கிறது என்று சாம்பார், ஒரு காய், ஒரு பாயசம் என முடியும் தீபாவளி விருந்து.
மகள் பிறந்த பிறகும் ஓரிரண்டு வருடங்கள் இதே கதை. பிறகு சுதாரித்துக் கொண்டு, காலை 10 மணியளவில் பூஜை முடித்து வடை பாயசம் என விருந்து சாப்பாடு. பிறகு தான் வீட்டை விட வேண்டும் என்று மாற்றிக் கொண்டோம்.
பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து செய்த வடை, பாயசம் ஆவி பறக்க 5.30 க்கு எங்கள் இல்லம் வந்து சேரும். 10 மணியளவில் நண்பர்கள் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவோம். [ ரத்னாம்மா வீட்டில் பாயசம் கண்டிப்பாக சாப்பிடுவோம். அவரது மகள் கேதார கௌரி விரதம் இருப்பார் அதிரசம் செய்வார். சில தினங்கள் முன்பு தான், அவர் ஒரு முறை கூட எங்களுக்கு அதிரசம்  தரவில்லை என்று தோன்றியது. ஏன் என்று சில தினங்கள் முன்பு அவரை தொலைபேசியில் அழைத்து சண்டையிட்டேன். அக்கா நாங்கள் மதியம் தான் விரதம் முடிப்போம் நீங்கள் காலை நேரம் இங்கே வருவீர்கள் , இந்த முறை தவறாமல் தரேன் என்றார்.]
சாலிக்கிராமம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குழந்தைகள் இருந்ததால் கொண்டாட்டம் தான்.[என் குழந்தைகளுக்கு எங்கும் எப்போதும் கொண்டாட்டம் தான்] நவராத்திரி நாட்களில் போனஸ் வரும் பிள்ளைகளுக்கும் அப்போது தான் விடுமுறை என்பதால் , தீபாவளிக்கு அந்த நாட்களிலேயே புதுத் துணிகள் வாங்கி விடுவோம்.  எங்கள் பிள்ளைகள் மிகவும் எதிர்பார்த்து செய்த ஒரு நிகழ்வு அது. 

கடந்த தீபாவளி அமெரிக்காவின் சான் ஹொசே நகரில். பார்க் லேன் என்னும் தெருவில் வாழும் இந்தியக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,சாப்பாடு, மத்தாப்பூ , குளிரோ குளிர் .
பேரன் படிக்கும் பள்ளியில் அனைவரும் இந்திய உடை அணிந்து வர, ஒரு ஆசிரியை அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பற்றி விளக்க அங்கும் கோலாகலம் தான்
தீபாவளி முடிந்த பின்னரும் பல வீடுகளில் விருந்துகள், கொண்டாட்டங்கள். [ டேய் .......பாட்டி வந்திருக்காங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு, ஏங்க ..அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம் இங்க வாங்க, பாப்பா விழுந்து கும்பிடு... ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கிட்டோம்ல]

வாட்ஸ் ஆப், ஸ்கைப்பில் வாழ்த்துச் சொல்லி, கூரியரில் பலகாரம் செய்து(வாங்கி) அனுப்பி,ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தாடையில் ஒன்றை அணிந்து, தொலைக் காட்சியைப் பார்த்தால்....ஸ்ஸ்ஸஸஸப்பாடா... தீபாவளி முடிந்தது. அடுத்தது ஆங்கிலப் புத்தாண்டு தினம் தான். 

தீபாவளிக்கென்றே புதுத் துணி வாங்கி, பண்டிகை கொண்டாடிய கடைசித் தலைமுறை நாம் தானோ??

Friday, 16 September 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா....

எனக்கு மகள் முறையிலான ஒரு இளம் பெண் கடந்த மாதத்தில் யூ டியூபில்( you tube) பல வருடங்களுக்கு முன்பு , ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றிநடை போட்ட ரமணி Vs ரமணி நாடகத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். (இரண்டாம் பாகம் என்னை மிகக் கவர்ந்தது :D, stress buster)

திரு ராம்ஜி மற்றும் திருமதி தேவதர்ஷினி முறையே கணவன் மனைவி பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பார்ட் 2இல் ஒரு எபிசோடில்,
கணவர் : ரமணீ.. உனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லவே இல்லையே.. மனைவி: நீங்க கேக்கவே இல்லையே, கல்யாணம் ஆன புதுசுல உங்களுக்குப் புடிச்சதெல்லாம் மட்டும் எனக்குத் தெரியுமான்னு கேட்டீங்க ஆனா எனக்கு என்ன தெரியும்னு நீங்க கேக்கவே இல்லையே

இது பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு. மிக மிக இயல்பான வசனங்களின் மூலம் சொல்லப் பட்ட முக்கிய செய்தி.

கடந்த வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரை சந்தித்த போது , பேச்சுக் போக்கில் நான் ஒரு பிரபல பள்ளியில் வேலை பார்த்தேன் என்று சொன்னபோது அவர் தன் மகன்களை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சென்ற போது , அப்ளிகேஷனைப் படித்த நிறுவனர் ஆசிரியப் பணியில் சேர அழைத்ததாகக் கூறினார். இவர் முறையான ஆசிரியப் பணிக்கான பயிற்சி பெற்றவர் என்பது எனக்கு செய்தி.(ஓ!!) பல வெளிநாடுகளில் வசித்தவர். மேலும் என்னென்ன திறமைகளுக்கு சொந்தக்காரர் என்று தெரியவில்லை.

மற்றொரு இளம் பெண்மணி நான் PHP யில் பயிற்சி பெற்று, அங்கேயே வேலையும் செய்து வருகிறேன் தற்சமயம் என்றார். இவர் படித்த துறையே வேறு. [php ன்னா என்ன?] சாலிக்கிராமம் பகுதியில் வீட்டு வேலைகளில் உதவும் மூத்த பெண்மணி ஒருவர் என்னுடைய நடுவயதிற்கான பிரச்சினைக்கு சுலபமான தீர்வு கூறினார்.

படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்மணிகள் மற்றும் சீனியர் சிடிசன்களுக்கு கம்பியூட்டர் , இண்டர்நெட் , ஆங்கிலம் எனப் பயிற்சி அளித்துள்ளேன். (ஆண்களுக்கும்) இந்த அம்மாக்கள் அந்த நாளிலேயே பல கலைகள் கற்றவர்கள். லவடேல் (Lovedele,Ooty) கான்வெண்டில் படித்து மிக அருமையான பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி , கற்றுத் தந்தவர்கள். சர்ச் பார்க் கான்வெண்ட், பிரசண்டேஷன் கான்வெண்ட்,பத்மா சேஷாத்ரி போன்ற பிரபல பள்ளிகளில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். ஒரு மாணவி (83 வயது) ஹிந்தி மற்றும் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 81 வயது வரை தானே கார் ஓட்டினாராம். மற்றொரு மாணவி (65 வயது) தான் அந்தமான் தீவிலிருந்து சென்னை வந்தது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியது , (5 அடி உயரம் உள்ளவர்களை அப்போது பணியில் அமர்த்த மாட்டார்கள், உயரம் ஒரு தடை இல்லை என்று போராடி சேர்ந்தாராம்), மத்திய சென்னை தொகுதியில் 19_ _ ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது, பி ஹெச் டி (உருது) பட்டம் பெற்றது என தினம் ஒரு தகவல் தந்து திகைக்க வைப்பார். என்னை அசர வைத்த Profile.

வார இறுதியில் சந்தித்த என் தாயாரின் தோழி திருமதி ஸ்ரீதேவி அரசரத்தினம் அவர்கள் இலங்கையிலிருந்து கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அங்கே இன்றளவும் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுத் தருகிறார். (கனடா எம் பி ஆக இருந்த ராதிகா சிற்சபையீசன் இவரின் மாணவி)

ஒரு தோழி, முறையாக தையற்கலை பயின்றவர். ஆசிரியப் பணியில் இருந்தவர். மற்றொரு சகோதரி பத்திரிக்கைகளுக்கு துண்டு செய்திகள், குறிப்புகள் என எழுதுவார். காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி நேற்று பச்சைப் பயறு மற்றும் ஆளி விதையில் லட்டு செய்து , எனக்கு படம் எடுத்து, செய்முறைக் குறிப்புடன் அனுப்பி இருந்தார். புதுப் புது உணவுப் பதார்த்தங்களை செய்து அசத்துவார்.

மேற்சொன்னவைகள் என்னிடம் அந்த அம்மாக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களே. (என் கற்பனை இல்லை)

இந்த அம்மாக்கள் மட்டுமில்லை... இது போல பலப்பல அம்மாக்கள்...

சில வருடங்களுக்கு முன்பு, என் மகள் தன் மகனிடம் பாட்டியிடம் கூட்டல் கணக்கு கற்றுக் கொள் என்றாள். உடனே குட்டிப் பையன் பாட்டிகள் ஆசிரியைகள் ஆக முடியாது(grandmothers cannot be teachers) என்றார். அதற்கு என் மகள், என் அம்மா தான் எனக்கும் என் தம்பிக்கும் பாடங்களைக் கற்றுத் தந்தார். அதைத் தான் நான் உனக்கு இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். குட்டிப் பையனிடம் நான் கேட்ட கேள்வி , Can a grandmother be a manager atleast?? No, Grandmothers can NEVER be managers .[ I was working as a General Manager then]. யார் இவருக்கு இப்படி சிந்திக்கக் கற்றுத் தந்தது?? யாரும் இல்லை. பிள்ளைகளின் மன அமைப்பு பொதுவாக இப்படித் தான் இருக்கிறது.

அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது, என்னம்மா மொக்கை போட்றே, இவ்வளவு நேரம் இதைத் தான் யோசிச்சியா, உன் மண்டைல மூளை இருக்க வேண்டிய இடத்துல வேற என்னவோ இருக்கு..... இதெல்லாம் இளைஞர்கள், வாலிப வயதினர் தன் அன்னையைப் பார்த்துக் கூறி.. நான் கேட்டவைகள். [எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு]

குடும்ப நலனுக்காக, பிள்ளைகளுக்காக அம்மாக்கள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்கிறார்கள். Low profileலில் இருக்கிறார்கள். அநாவசிய ஈகோ, வாக்குவாதங்கள் என சிலபல விஷயங்களைத் தவிர்த்து குடும்ப ஒற்றுமைக்காக இந்த low profile வேடம்.

படிக்காத அம்மாக்களாயினும் அவர்கள் அனுபவங்கள் உங்களை விட அதிகம் இளைஞர்களே! யாருக்கு என்ன தெரியும் என்றே நமக்குத் தெரியாது.

அம்மாக்களே.. பிள்ளைகள் நம்மைத் தாழ்த்தி உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் என்பதை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வப்போது. தப்பில்லை.

அம்மா என்பது இங்கே ஒரு குறியீடு மட்டுமே. அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும்.

அம்மான்னா சும்மா இல்லை மக்களே....

Wednesday, 10 August 2016

நானும் வரேன்... நானும் வரேன்..

ஆகஸ்டு திங்கள் 2015 . அமெரிக்காவின் சான் ஹொசே நகரம்.

"அம்மா.. இரண்டு மாதங்களுக்கு பிரதி வெள்ளிக் கிழமை சின்னப் பையனை காலையில் ஒரு மணி நேரம் உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா?" மகளின் கேள்வி.

என்ன காரணம் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.

அங்கே பள்ளி ஆரம்பிக்கும் நாளில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு மின்னஞ்சல் (ஈமெயில்) பள்ளியிலிருந்து அனுப்பப் படுகிறது. அதில் வகுப்பு ஆசிரியைக்கு பெற்றோர்களின் உதவி எந்தெந்த வேலைகளில், வேளைகளில் தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு , பெற்றோர்களின் சம்மதம் கேட்கப் படுகிறது.

[ஆசிரியர்கள் மாணவர்களின் பென்சிலைக் கூட கூர்மைப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியைக்கு நிறைய வேலைகள். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ முன்வருகிறார்கள். கணினி பயிற்சி, மதிய உணவு வேளை மேற்பார்வை, விளையாட்டு நேர மேற்பார்வை , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் எனப் பல விதத்திலும் உதவலாம். மகள் கணினி பயிற்சி வகுப்புக்கு செல்வார்.]

அதிலிருந்து நமக்கு வசதியான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்து சம்மதம் அளிக்கலாம். ஒப்புக் கொண்ட நேரத்திற்குத் தவறாமல் பள்ளிக்குச் சென்று , அலுவலகத்தில் அனுமதி பெற்று , வகுப்பறைக்குள் சென்று ஆசிரியைக்கு உதவி செய்துவிட்டு வரவேண்டும். செல்ல முடியாத நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள் பள்ளியில்.முக்கியமான ஒரு விஷயம், உதவி செய்ய போகும் பெற்றோர் , தாமும் ஒரு ஆசிரியரைப் போலவே செயல்பட வேண்டும். வீண் பேச்சுக்களுக்கு இடமில்லை. பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகள் வகுப்பறையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் , சரியாக சாப்பிடுகிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கும் இது சரியான தீர்வு.

பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்கள் ஒருவருக்கொருவர் இந்த வாலண்டியர் சர்வீஸ் நேரத்தில் உதவிக் கொள்வார்கள். குட்டிப் பாப்பா இருந்தால் பார்த்துக் கொள்வது, பெரிய பாப்பா இருந்தால் வகுப்பு முடிந்ததும் அழைத்து வருவது, கடைக்கு சென்றால் ஒரு கேலன் பால் வாங்கி வருவது, சின்னப் பாப்பாவை கூட்டி செல்ல வரும்போது 4 பச்சை மிளகாய் கொண்டு வந்து தருவது என.....

ஒவ்வொரு வாலண்டியர் சேவைக்குப் பின்னும் , மகளின் முகத்தில் ஒரு வித நிறைவைக் கண்டேன். (அம்மா... இன்னிக்கு என் பிரண்ட் .. என அம்மாவும் பையனும் அன்றைய வகுப்பு நிகழ்வுகளைப் பேசிக் கொள்வார்கள்).பள்ளிகளில் பெற்றோர்களின் பங்களிப்பை வெகுவாக விரும்பி அனுமதிக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம். படித்த , வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து பயனுள்ள செய்திகளைப் பகிர முடிகிறது. (அலுவலகத்தில் பணி புரிபவர்களும் சேவை செய்ய வருவார்கள், அங்கே பணி நேர சலுகைகள் நிறைய)

நிற்க.

இந்தியா. சென்னை மாநகரம்.

சம்பவங்களின் பாதிப்பில் பல மாதங்களுக்கு முன்பு, நூலகரை சந்தித்து , என்னைப் பற்றிய தகவல்களை அச்சடித்துக் கொடுத்து, இங்கே வரும் பள்ளிப் பிள்ளைகள் யாருக்கேனும் படிப்பில் உதவி தேவைப் படுமா எனக் கேட்டு சொல்லுங்கள் நான் இங்கே வந்து கற்றுத் தருகிறேன் என்றேன். பதில் இல்லை.

அடுத்த கட்டமாக, அருகில் உள்ள பள்ளியில் என்னை அறிமுகப் படுத்தி வையுங்கள் என்னால் ஆன உதவிகளை செய்து தருகிறேன் என்றேன்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் காலை நூலகர் தொலை பேசியில் அழைத்து தயாராக இருங்கள் அழைத்துப் போகிறேன் என்றார். சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்சமயம் ஆசிரியர்கள் சங்கத்தில் ஏதோ ஸ்டிரைக் பண்றாங்களாம் அதுக்கு போறாராம். 3 நாட்கள் ஆகுமாம் பள்ளி மீண்டும் இயல்புக்கு வர, அதன் பிறகு பார்ப்போம் என்றார்.

வாரங்கள் கடந்தன. நூலகரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. நான் நேரில் சென்று என்ன நடக்கிறது என்று விசாரித்ததில் இதோ நூலகரின் வார்த்தைகளில் :

நூலகர்: தலைமை ஆசிரியர் இருக்காரா?

பியூன்: (ஏற்கனவே அறிமுகமானவர்) என்ன காரணத்திற்காக அவரை பார்க்க போறீங்க?

நூலகர்: என் தோழி ஒருவர்......

பியூன்: அய்யய்யோ..அந்த ஆளு (என்ன மரியாதை பாருங்க) கொஞ்சமும் மரியாதை தெரியாதவன், யார் வந்தாலும் உட்கார சொல்லி கூட பேசுவதில்லை , குவார்டர்ஸ் ல குடியிருகறவங்கன்னா படிச்சவங்களா இருப்பாங்க, இங்கே அழைச்சுட்டு வந்தா ரொம்பவே மரியாதை குறைவா நினைப்பாங்க , தயவு செய்து அவங்களை இங்கே கூட்டிட்டு வராதீங்க

இந்த நிகழ்வை என் தோழி ஒருவரிடம் சொன்னேன். அவரின் வார்த்தைகளில் " நான் ஏற்கனவே ஒரு பள்ளியில் இது போல சேவை செய்ய விரும்பிச் சேர்ந்தேன். சும்மா தானே செய்யறே, இந்த வேலை செய் அந்த வேலை செய்ன்னு படுத்தி எடுத்துட்டாங்க.. பணம் வாங்காமல் வேலை செய்ய முன்வந்தால் இந்த கதி தான் இங்கே, அதன் பிறகு நான் அந்தப் பக்கம் செல்லவில்லை"

நான் இனிமேல் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா ...

Wednesday, 27 July 2016

கற்றது கையளவு!!

ஒரு திங்கட்கிழமை காலை 9. Monday Blueவுடன் Empty nest syndrome கலந்த உணர்வுடன் நான்.

பகல் நேரத்தில் வீட்டிற்குள் வந்து செல்லும் ஒரே ஜீவன் ( என் Helpmate cum  Soulmate என்று கூட சொல்லலாம்) வர 3 மணி நேரங்கள் இருக்கிறது என்று எண்ணியபடியே  தொலைக்காட்சிப் பெட்டியை காண எண்ணி TV5Monde என்னும் சானலை தேர்ந்தெடுத்தேன். இந்த தொலைக்காட்சி நிறுவனம் கனடா நாட்டு தொலைக்காட்சியுடன் இணைந்து பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

கனடாவின் Montreal நகரைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி படம் ஓட ஆரம்பித்திருந்தது. 1800 ஆம் ஆண்டிலிருந்து எப்படி பல்வேறு நாட்டு மக்கள் அங்கு குடியேறினார்கள் என்பது பற்றியது

முதலில் Native Americans குடியேறினார்கள். பிறகு பிரஞ்சுக் காலனியானது. முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியிலிருந்து யூதர்கள்  கப்பலில் அமெரிக்காவிற்குத் தப்பி வந்தவர்கள் குடியேறினார்கள். பிறகு, டிரான்ஸ் காண்டினெண்டல் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கனடா அரசாங்கம் முடிவு செய்த போது, சீனாவின் ஒரு மாகாணத்தில் உள்ள மக்களை (1400 பேர் மட்டும்) வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்

ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்ததும் கனடா அரசு  சீனர்கள் நாட்டுக்குள் வர $50 கட்டணம் விதித்தது. அவர்கள் இல்லாமல் ரயில்பாதை ஏது என்று உணர்ந்து பின் அந்தக் கட்டணத்தை ரத்து செய்தார்களாம். 1400  சீனர்கள் மட்டும் தான் இருக்க அனுமதி என்பதால், அவர்களது குடும்பத்தினரைப் பிரிந்தே அவர்கள் இருக்க நேர்ந்ததாம். எங்கள் கொள்ளுத் தாத்தா தனிமையில் இறந்தார் என்று சில பேரன்கள் சொன்னார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அந்தக் கடுமையான சட்டம் தளர்த்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினர் Montreal நகருக்கு வந்து சேர்ந்து கொண்டார்களாம்.அரசு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அடுத்த கட்டமாக இத்தாலியர்கள் குடியேறினார்களாம். மார்பிள் சிலைகள் செய்தல், உணவுக்கடைகள் இவர்களுடைய தொழில்.

காரணமே இல்லாமல் ஜப்பானியர்கள், சீனர்கள் மற்றும் இத்தாலியர்களை POW (Prisoners of war) ஆக ஒரு சிறிய கிராமத்தில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டார்கள். இத்தாலியர்கள் தாங்களே உணவு தயாரித்துக் கொள்ள விரும்பியதால் அவர்களது இல்லத்திலிருந்து பாஸ்தா மற்றும் தக்காளியை பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது அரசு. இன்று வரை என்ன காரணத்திற்காக அவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டார்கள் ஏன் விடுவிக்கப் பட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. அரசு இன்னும் இவர்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லையாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், கலைகள், விழாக்கள் பற்றியும் கூறினார்கள்.

தற்காலத்தில் இந்தியர்ளும் இலங்கைத் தமிழர்களும் கூட அங்கே புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.

இந்த நகரத்தின் நதி செயிண்ட் லாரண்ட். இந்த நதியை சுற்றியே பல்வேறு நாட்டு மக்களும் ஒற்றுமையாக இன்றளவும் வசித்து வருவதாகக் கூறி முடித்தார்கள். அருமையான தகவல்கள். இது பற்றி என் தோழிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்து??? முக நூலுக்குத் தாவினேன்.

முதல் அப்டேட் .. தோழியின் தோழி போட்டிருந்த பதிவு

Feeling Whattay!! புத்தகக் கண் காட்சியில் என் புத்தகம் 300 விற்றுப் போயிருப்பதாக அறிந்தேன்.

Whattay என்றால் என்ன அர்த்தம்?? திரு திரு.
கூகிள் ஐயனார் சொன்னது : எதிர்பாராத நிகழ்வால் ஏற்பட்ட மகிழ்ச்சி.

மேலும் சில நிமிடங்கள் முக நூலில் முகம் புதைத்துப் பொழுதைக் கழித்தேன்.

12.00 ..என் Helpmate வந்துவிட்டார்.  அவருக்கு கதவு திறந்து விட்டுட்டு வருகிறேன்...

அவர் வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள் இந்த Helpmate" என்ற வார்த்தை எப்படி வந்ததென்று பார்ப்போம்.

இதன் பின்னால் ஒரு குட்டி சரித்திரமே இருக்கிறது. 1611 ல் வெளியான பைபிள் பதிப்பில் ஏவாள் ஆதாமிற்கு "Helpmeet" என  இருந்தது. ஏவாள் ஆதாமின் வாழ்க்கைத் துணை என்பது பொருள். அது தவறுதலாகப் புரிந்து கொள்ளப் பட்டு Helpmate என மருவியது. Helpmate என்பதன் பொருள் "உதவி செய்பவர்" என்ற பொருளில் தற்காலத்தில் பயன்படுத்தப் படுகிறது. (ஆங்கில இலக்கியத்தில் வார்த்தைகள் எப்படி உருவாகின என்ற தலைப்பின் கீழ் வரும் "Popular Misunderstanding" என்னும் தலைப்பின் கீழ் அமைந்த உதாரணம் இது)

சரி Helpmate வேலை முடித்து விட்டார்.  படித்தவர். வாழ்க்கை அனுபவம் மிக்கவர். என்னை விட 3 வயது மூத்தவராயினும் மரியாதை நிமித்தம் அக்கா என்றே அழைப்பார். மற்றவர்களிடம் அம்மா என்றே குறிப்பிடுவார். Officerன் மனைவி என்பதால் கூடுதல் மரியாதை.

தினமும் தான் பத்திரிக்கையில் படித்த, தொலைக்காட்சியில் கேட்ட செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார். என் கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆரோக்கியமான விவாதங்கள் , கருத்துப் பரிமாறல்கள் மட்டுமே எங்களிடையே. இன்று என்ன தலைப்பு எடுத்து விவாதிக்கிறார் என பார்ப்போமா?

"அக்கா..இன்னிக்கு (ஜூலை 11, 2016) பேப்பரில் ஒட்டி பிறந்த இரட்டைப் பெண்களைப் (Conjoined twins) பற்றிய செய்தி படித்தேன். முதுகில் ஒட்டி இருக்கு, ஆபரேஷன் பண்ணி பிரிக்கணும்னா நிறைய பணம் கேக்கறாங்க என் கிட்டே இல்லை அப்படீன்னு அந்தப் பொண்ணுங்களோட அப்பா சொல்லி இருக்கார். பாவம் அக்கா.

ஏன் அப்படி பிறக்கறாங்க? பிரிக்க முடியாதா? பிரிச்சா என்ன ஆகும்? (நடிகர் சூர்யா மாற்றான் என்ற படத்துல  இப்படி நடிச்சிருக்கார், கண்டிப்பா பாருங்க, உங்களுக்குப் புரியும்)

கரு எப்படி உருவாகுது? செயற்கை முறையில் கருத்தரிப்பது என்றால் என்ன? இரட்டையர், மூவர், நால்வர்லாம் எப்படி சாத்தியம்?"

 (இது நாள் வரை நான் இந்தத் தலைப்பின் கீழ் படித்ததை எல்லாம் சொல்லும் வாய்ப்பு , செத்தாண்டா சேகரு..)

இன்னும் ஒரு சந்தேகம். கருவில் இருக்கும் குழந்தைக்கு உணவு எப்படி கிடைக்குது? (மனிதனின் ஜீரண மண்டலத்தின் பணிகளில்  ஆரம்பித்து ... )

கருவிலிருக்கும் குழந்தைக்குத் தாயுடனான தொடர்பு  தொப்புள் கொடி மூலம்தான் என்பதை அறிந்ததும் அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி ..அப்பப்பா!! ....  ஒரு கர்ப்பப் பைக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா என்று அதிசயத்துக் கொண்டே கிளம்பிச் சென்றார். இவ்ளோ படிச்சிருக்கீங்களா நீங்க என்ற பாராட்டையும் எனக்கு அளித்தார்.

நல்ல வேளை.. இதற்கு மேல் கேட்காமல் கிளம்பி சென்றார்மதியம் 1.30

2.00 மணி - மாமியார் காபி நேரம்.  5 மணிக்கு இரவு உணவு/இரண்டாம் உணவு நே.....ரம். இடைப்பட்ட 3 மணி நேரங்கள் எனக்கானது.

இடையில் தோழி ஒருவர் தொலைபேசிட, அவருக்கு  Counselling செய்தேன்.(அதிகமில்லை Gentlemen, அரை மணி நேரம் தான்)

தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்க ஆரம்பித்தேன்தெரசா மே அம்மையார் பிரிட்டனின் பிரதமராக புதன் கிழமை பதவி ஏற்பார் என்றது ஒரு சேனல்.(அச்சச்சோ.. அதுக்குள்ளே முடிவு பண்ணிட்டாங்களா , நான் நேத்து மட்டும் தான் செய்திகள் பார்க்கலை)

இன்று உலக மக்கள்தொகை நாள்(World Population Day) என்றது ஒரு சேனல்.

அடுத்ததாக குங்குமம் பத்திரிக்கையைக் கையில் எடுத்தேன். கூகிள் நிறுவனத்தின் அடுத்த Android version இன் பெயர் Nougat என்றது. [நெய்யப்பம் என தமிழரான திரு சுந்தர் பிச்சை பெயரிடுவார் என பரவலாக பேசப்பட்டது.  ]

இதையோட்டி சில சுவாரசியமான நிகழ்வுகள் உங்களுக்காக..(தெரிந்தவர்கள் அடுத்த பத்திக்குச் செல்லவும்) கூகிள் நிறுவனம் தன்னுடைய ஆண்டிராய்டு பதிப்பின் ஒவ்வொரு புதிய வெர்ஷனுக்கும்(Version) ஒரு இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். ஆங்கில எழுத்து வரிசையில் இருக்கும். A,B,C... கடைசியாக உள்ளது M- மார்ஷ்மெல்லோ(Marshmellow).

திரு சுந்தர்பிச்சை அவர்களின் இந்திய வருகையின் போது, செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள அடுத்த வெர்ஷனின் பெயர் இந்திய இனிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றாராம். என்ன பெயர் என்று கேட்டதற்கு " அம்மா கிட்டே கேட்கணும்" என்றாராம்பின்னர் சுதாரித்து, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என்று சொல்லி சமாளித்தாராம். (வழக்கமாக கூகிள் நிறுவனம் தான் பெயரைத் தீர்மானிக்கும்

நெய்யப்பம் Nல ஆரம்பிப்பதால், அதற்கு அதிக வாக்குகள் கிடைத்தும் Nougat என தீர்மானித்துள்ளது கூகிள் நிறுவனம் . காரணம் நெய்யப்பம் எல்லா நாட்டவராலும் உச்சரிக்க முடியாது என்பதே.. (கூகிள் போங்காட்டம் ஆடிவிட்டதாகப் பொருமுகிறார்கள் மக்கள்)

(நண்பர் ஒருவர் ஆல்ஃபா பீடாவில் ஆரம்பித்து நுகட் முடிய கடகடவென்று ஒப்பித்து அசத்தினார், மற்றொருவர் எனக்கு இது புதுத் தகவல், you surprised me என்றார்)

நடுவில் சில மணி நேரங்கள் இரவு உணவு  வேலைகள்.

இரவு 8.30 . மீண்டும் ஜப்பான் தொலைக்காட்சி சானல். 

அன்றைய தினம்  யமடோ கொரியாமா (Yamato koriyama)  என்ற ஊரைப் பற்றிய டாக்குமெண்டரி படம். ஒசாகா நகரிலிருந்து 45 கிலோ மீட்டரில் உள்ளது. அங்கு தங்க மீன் வளர்ப்பு தான் தொழில். வயல்களில் வளர்த்து ஏலம் விடுகிறார்கள். (அப்பப்பா... எத்தனை வகை தங்க மீன்கள்)


விடுதிகள், பாலங்கள், தூண்கள், வீடுகளின் ஜன்னல் கதவுகள், ரெஸ்டாரண்ட்கள் எங்கும் தங்க மீனின் படங்கள். அவ்வளவு ஏன் தின்பண்டங்களில் கூட தங்க மீன் டிசைன்கள்.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக வந்து செல்வதைக் காட்டினார்கள். ஊருக்கு நடுவில் குட்டி வாய்க்கால். அதில் கூடத் தங்க மீன்கள்.

NHK Newsline Channelலில் ஜப்பானில் உள்ள ஊர் ஏதாவது ஒன்றை சுற்றிக் காட்டி அதன் சிறப்பியல்புகளை சொல்லுவது போல டாக்குமெண்டரி படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 5 நிமிடங்கள் - வகாஷி என்ற இனிப்பு பற்றி சொன்னார்கள்,  72 மணி நேரங்கள் ஒரு உணவகத்தை, ரயில் நிலையத்தை, கடை வீதியை என தேர்ந்தெடுத்து அங்கு வரும் மக்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.

சோகமாக ஆரம்பித்த நாள், சுறுசுறுப்பாக , பலப் பல புது விஷயங்களைக் கற்ற நாளாக மாறியது.

மகிழ்ச்ச்ச்சி!!

பின் குறிப்பு : உங்களுக்காக சில links















WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...