Sunday, 2 August 2015

ஒரு மணி அடித்தால்.....

கிராமத்திலிருந்து நகரத்தில் உள்ள [எல் கே ஜி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒரே வளாகத்தில் தங்குமிடத்துடன் கூடிய பள்ளியில் [20 ஏக்கர் என்று சமீபத்தில் படித்தேன்] பதினொன்றாம் வகுப்பில் பதிவு செய்ய வந்த அன்று, நான் கண்ட முதல் காட்சி பேராசிரியைகள் அனைவரும் வாசலில் அமர்ந்து ட்ரிப்பிள் மேஜர் எனப்படும் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததைத் தான். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது

ஒரு வழியாக பள்ளி மற்றும் விடுதியில் இடம் பிடித்ததும் நாங்கள் சந்திக்க நேர்ந்த முதல் சவால் "ஒன் பெல்" என செல்லமாக அழைக்கப் பட்ட நேரம். காலை 8 மணி, இரவு 8 மணி, அவசர கூட்டத்திற்கு நேரம் காலம் கிடையாது என்பதே இதன் பொது விதி.

நான் அங்கு சேர்ந்த முதல் நாளே அனிதா என்ற பெண் வார்டன் உத்தரவு இல்லாமல் வளாகத்துக்கு வெளியே சென்று விட்டார். இரவு 8 மணி கூட்டத்தில் அவரை காணவில்லை என்பது தெரிந்து அல்லோலகல்லோலம். மறு நாள் காலை பள்ளி நேரத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு வார்டன்@தலைமை ஆசிரியை செல்வி ஹேமப்ரபா அவர்கள் நடத்திய மண்டகப் படியை இன்றும் மறக்க முடியவில்லை. 

ஒரே ஒரு முறை மணி அடித்ததும் பள்ளி விடுதி மாணவிகள் அனைவரும் அக்கா அவர்களின் அறைக்கு முன்பு கூட வேண்டும். ஒரு முறை அடிக்கப்பட்ட அந்த மணி அத்தனை மாணவிகளுக்கும் சிம்ம சொப்பனம். வளாகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஐந்தாவது நிமிடம் கூட வேண்டும். இல்லை என்றால் செம பரேடு. யாரும் இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

வருகைப் பதிவு முடிந்ததும் அறிவுரை, கதை, பாட்டு, அன்றைய தலைப்பு செய்திகள், நாட்டு நடப்பு என பல நல்ல விஷயங்களை கூறுவார். [எந்தப் பிரச்சினையும் இல்லாத நாட்களில் என்பதை இத்துடன் சேர்த்து படிக்கவும்]
ஒரு நாள் இரவு 10 மணி போல இருக்கும். என் அறைத் தோழிகள் சீக்கிரம் தூங்கும் பழக்கம் உள்ள என்னை எழுப்பினார்கள். காரணம் ஒன் பெல் அடிக்கப் பட்டிருந்தது.

சில அடிகள் நடந்து சென்றால் வார்டன் அறை முன் போய் விடலாம். அனேகரும் தூங்கி வழிந்த வண்ணம் போய் நின்றோம் 
தினமும் அக்கா அவர்கள் இரவில் மைதானத்தில் நடைப் பயிற்சி செய்வார். மாணவிகளும் மைதானத்தில் அமர்ந்து தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டு இருப்பார்கள். குறிப்பாக ஹாஸ்டல் கதவு பூட்டப்படும் வரை. அக்கா நடந்து வருவதை பார்த்த சுட்டிப் பெண் ஒருத்தி "ஏய்.. அது வருதுடி" என்று கத்தியது இவரது காதில் விழுந்து விட்டது தான் பிரச்சினை.

யார் அது மரியாதை இல்லாமல் பேசியது, எனக்கு தெரிந்தே ஆகணும் என்று கிட்டத் தட்ட நடு நிசி வரை நிற்க வைத்தே விசாரணை நடத்தினார். யாரும் ஒத்துக் கொள்ள முன்வரவில்லை. கல்லூரி மாணவியாகக் கூட இருந்திருக்கலாம்.

நாளை காலை மீண்டும் சந்திப்போம் என்று நள்ளிரவு தாண்டிய பிறகு அனுப்பி வைத்தார். மறு நாள் காலையும் இந்தப் பிரச்சினை தொடர்ந்தது.. ஏகப்பட்ட திட்டுக்களுடன் அறிவுரைகளுடன்…ஸ்ஸ்ஸ்ஸப்பா.....
இப்போ  மணி அடித்த சத்தம் கேட்டுதே...ஐயய்யோ.. ஒன் பெல்லா??

பின் குறிப்பு :
அக்காவின் கட்டுப்பாடுகள் துள்ளித் திரிந்த மாணவிகளுக்கு அந்தப் பருவத்தில் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமே இல்லை.அப்போது புரியாத பல விஷயங்கள் இப்போது புரிகிறது. 

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...