Thursday, 25 June 2015

தொடர்பு எல்லைக்கு வெளியே ....

சில நாட்களுக்கு முன் ஒரு நீத்தார் நினைவு நாள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் சென்றிந்தேன். பிரார்த்தனை நானும் மற்றொரு மூத்த உறவினர் மட்டுமே வெளியாட்கள்.சாப்பிட இலை போட்டவுடன் திமு திமுவென்று பத்து பேர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.(அதே அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள்)

10 வயதான ஒரு பெண் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வேறு இலையில் அமர, அவரது தாயார் அங்கே வந்தார். அருகில் அமர்ந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி, ஏன் உங்கள் மகள் அங்கே சென்றாள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்ணின் தாயார், அவள் ஓல்டீஸ் கூட உட்கார மாட்டாளாம் என்றார். இதைக் கேட்டதும் அப்பெண்ணின் முகம் ஒரு கணம் சுருங்கியது. பின் சமாளித்து பேசினார். 

இந்த நிகழ்வு, அந்த குட்டி பெண்ணின் வீட்டு மூத்த உறவினர்கள் அவரது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பது தெளிவாகப் புரிந்தது.

பல வருடங்கள் முன்பு, ஒரு உறவினரின் 4 வயது மகனிடம் உங்க தாத்தா பாட்டி நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். அதற்கு அவரது பதில் "அவங்களை நேத்து தான் தனிக் குடித்தனம் வெச்சுட்டு வந்தோம்" 
அந்த பதில் தந்த அதிர்ச்சி பல வருடங்களாகியும் இன்னும் தீரவில்லை. இது போன்ற சூழலில் வளரும் குழந்தை, முதுமையிலும் தனியாகத் தான் வசிக்க வேண்டும் போல என்று எண்ணத்துடன் வளராதா?

எங்கள் இல்லத்தின் மூத்த உறவினர் ஒரு முறை, "மருமகள் தன்னால் மாமியாரை எதிர்த்துப் பேச முடியவில்லை என்பதால், தன்னுடைய சிறு பிள்ளைகள் பாட்டியை எதிர்த்துப் பேசுவதை ஊக்குவிக்கிறாள், தப்பு என்று கண்டிப்பதில்லை. பிற்காலத்தில் தனக்கு எதிராகத் தன் பிள்ளைகள் இதே வழியில் பேசப் போவது அவளுக்குப் புரியவில்லை" என்றார். உண்மை. இன்று அப்படித் தான் நடக்கிறது அந்த மருமகளுக்கு. 

பல பெண்மணிகள் தன்னுடைய பெற்றோரை மட்டும் ஆதரித்து, கணவரது பெற்றோரை தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். அதுவும் சரியன்று. அனைத்துத் தரப்பு மூத்த உறவினர்களையும் நாம் ஆதரித்து அன்பாக நடந்து கொள்வதைப் பார்த்தே, நம் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்துள்ள இந்த காலத்தில், வயதான உறவினர்களை பிள்ளைகளுக்கு பரிச்சயப் படுத்தல் மிக அவசியம்.
முதுமை பற்றி அவசியம் சிறு பிள்ளைகளுக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு நாள் நமக்கும் வயதாகும் தள்ளாமை வரும், இளமைத் தோற்றம் மாறும் என்ற புரிதல் மிக மிக அவசியம். பெற்றோர்கள் தான் இதை சொல்லித் தர முடியும்.

அதன் பயனாளிகள் நான் தான்..நாம் மட்டுமே தான். 

ஹலோ... தாத்தா, எப்படி இருக்கீங்க??

Wednesday, 3 June 2015

TEST OF ENGLISH AS A FOREIGN LANGUAGE

2014-2015

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் வாங்க ஆசைப்பட்ட சில நாட்களில், அந்த என் ஆசை [பேராசை??] என் கணவரால் நிறைவேற்றப் பட்டது. 

புத்தகங்களை கையில் வாங்கியதும் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததென்னவோ உண்மை. எப்படி படிக்கப் போகிறோம் என்பது தான் பிரச்சினையே. [12 வகுப்பிற்குப் பிறகு ஆங்கில மொழிப் பாடங்கள் படித்ததில்லை]

மே மாதம் தேர்வுகள் ஆரம்பம். நல்ல வேளையாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 தாள்கள். 

ஒரு வழியாக தேர்வு ஆரம்பம் ஆகியது. 

குரோம்பேட்டையில் ஒரு மாணவர் பள்ளி. கதவு மற்றும் ஜன்னல்கள், மின்விசிறி, தண்ணீர் என எந்த வசதியும்  இல்லாத, ஆனால் தூசியோ தூசி நிறைந்த வகுப்பறை. [மேசை நாற்காலிகளை இன்னும் சற்று அழுத்தி துடைத்திருந்தால் அலாவுதீன் பூதமே கிளம்பி வந்திருக்கும்.]

கேள்வித் தாள் கையில் கிடைத்ததும், பாடங்களைப் படிக்கும் போது நிறைய புது வார்த்தைகள் படிக்க நேர்ந்ததை அப்படியே பதிலாக மாற்றும் ஆர்வ(கோளாறில்)த்தில் எழுத ஆரம்பித்தால் Come, go, sit, stand போன்ற பழகிய, பழைய வார்த்தைகள் மட்டுமே நினைவுக்கு வந்தது.

அடுத்து பெயர்க் குழப்பம். The way of the world _By William Congreve என்று ஒரு கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் Mirabell, Millamant, Fainall (இதில்  Mr , Mrs வேறு), Mrs Marwood ,Lady Wishfort, Mr. Waitwell என பலப்பல. யார் யாருக்கு என்ன உறவு என்ன கதை என்றே குழப்பமோ குழப்பம். விடை எழுதும் நேரம் Mr. Waitwell, Mr. Witchcraft ஆகி விட்டார். (Monk, Mentalist நாடகங்கள் பார்த்ததன் விளைவு). 

பாடங்களை ஒரு flowchart போல வரைந்து கையில் வைத்திருந்து படித்து சென்றேன். [Hey, I am actually waiting for you. Can you please explain this topic என்று சில சக மாணவிகளின் அன்புத் தொல்லை வேறு. நம்ம நிலைமையை வெளில சொல்லிக்கவா முடியும்??]

எல்லாக் கதைகளிலும் ஒரு niece இருப்பார். ஒரு கதையில் நான் அவரது இரண்டாவது பெயரை நினைவில் வைத்திருக்க, கடைசி நொடியில்  அவரது முதல் பெயர் Ms. Neville எனக் கண்ணில் பட்டது. இந்த பெயரில் தான் மாதிரி வினாத்தாள்களில் கேள்விகள் இருந்தன. நல்ல வேளை நடுப் பெயரை [middle name] யாரும் பயன்படுத்துவதில்லை என்பதால்   நான் தப்பித்தேன்

Sailor என்ற தலைப்பில் ஒரு பாடல். படித்ததும் நான் புரிந்து கொண்டது , கடலில் பயணிக்கும் ஒருவரின் உணர்வுகள் பற்றி சொல்கிறார்கள் போல என்பதாக. அதன் விளக்கம் படித்ததில் கிட்டத் தட்ட நம்ம "ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே" போன்ற அர்த்தமாம். [நானெல்லாம் என்னிக்கு ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது ??]

மற்றொரு பாடத்தில் He is a man of letters என்று ஒரு வரி. நல்ல எழுத்தாளர் என்பது பொருள். நான் நினைத்தது, சில பாடங்கள் பல கடிதங்களின் தொகுப்பாக இருக்கும் அது போல எண்ணி, கடித அமைப்பில் பாடம் இல்லையே என்று யோசித்து கொண்டிருந்த போது, அதன் உண்மையான பொருள் விளங்க, என் அறியாமையை எண்ணி சிரிப்புத் தான் வந்தது.

பல்கலைக் கழகத்திலிருந்து அனுப்பப் பட்ட இரண்டு புத்தகங்களில் “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்” காணோம். அந்தப் பாடங்களில் இருந்து பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. “Google” அய்யனாரும் கைவிட்டு விட்டார். [என்னவென்று சொல்வேன்? ஒரு மருத்துவர் தம்மிடம் காது வலியுடன் வந்த ஒரு நோயாளியிடம் நான் இந்த கேள்வியை choice விட்டுட்டேன் வேற டாக்டர் கிட்டே போங்கன்னு சொன்னாற் போல் நானும் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்]

Annotations  கேள்விகளுக்கு விடை எழுதும் போது  கடுமையான சிக்கல். [இடம் சுட்டிப் பொருள் விளக்குதல்] பாடம், செய்யுள், நாடகம், கதைகள் என எல்லாப் பகுதிகளிலிருந்தும் கேட்கப்படும். 

அடுத்து யார் யாரிடம் சொன்னது, எந்தப் பாடம் , அதன் ஆசிரியர் யார் என்பதைக்  கண்டு பிடிப்பது.  ஒரு வழியாக எந்தப் பாடம் என்று கண்டு பிடித்த பிறகு, யார் ஆசிரியர்?? ஆசிரியர் பெயர் நினைவுக்கு வந்தால் பாடத்தின் பெயர் நினைவில்லை. இரண்டும் நினைவில் வந்தால், கதாபாத்திரங்கள் பெயர் நினைவில் இல்லை. ஐயகோ!! [Annotations  ஒழுங்கா படிச்சுட்டு போ, கேள்விகளுக்கு விடை எழுதறதை விட இது சுலபம் _ ஆங்கில இலக்கியம் படித்த அக்காவின் அறிவுரை. Shakespeare தங்கை இவர். நான் படும் பாடு அவருக்கு எங்கே புரிகிறது?]

பாடங்கள் அனைத்துமே அதன் ஆசிரியர்களால் செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டு, படிக்க உதவியாக சாதாரண வாக்கியங்களில் தரப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்வதற்குள் மூன்று தேர்வுகள் முடிந்து விட்டன.

Chaucer என்பார்தான் ஆங்கிலத்தில் முதன் முதலில் இலக்கியங்கள் படைத்தவர். அவரின்  Canterbury tales என்னும் பாடம் மூன்று தேர்வுகளில் வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்டது. [இது முன்பே தெரிந்திருந்தால் நன்றாகப் படித்திருக்கலாம் ... ஹ்ம்ம்ம்]

மிக அருமையான கவிதைகள். 16,17,18 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியுள்ள கவிதைகள் extraordinary. இக்காலத்தில் நினைத்தே பார்க்க முடியாது. [கொல்லன் பட்டரை சத்தம், போர் முரசு சத்தம்,நதியில் அன்னப்பட்சி அசைந்தாடி மிதந்து வரும் சத்தம் எல்லாம் பாடலைப் படிக்கும் போதே கேட்கும் வகையில்]

அந்நிய மொழியை படித்தல் சுலபமாக இருக்கவில்லை. தேர்வுகள் முடிவுக்கு வந்தன.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! 

மனசாட்சியின் குரல்: "ரொம்ப குதிக்காதே பரீட்சை முடிந்து விட்டதென்று, இரண்டாம் வருடப் பாடத்திட்டத்தில் Shakespeare என்றே ஒரு தாள் இருக்கே… அங்கே  இருக்கு உனக்கு ஆப்பு"


WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...