Saturday, 2 May 2015

வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா......[எம் ஜி ஆர் வீடு - 2]

 எம் ஜி ஆர் வீட்டில் எங்களின் வாழ்க்கை முறை அலாதியானது. காலை 6 மணிக்கு காவேரி விநாயகரின் கோவில் மணியோசையுடன் தொடங்கி இரவு 9க்கு அதே மணியோசையுடன் முடியும் . சித்திரை தொடங்கி பங்குனி வரை தினமும் ஒரு வைபவம் தான். நவராத்திரி 9 நாட்களும் கொலுவும் கலை நிகழ்ச்சிகளுமாக அமர்க்களப்படும். 



சதுர அடி ரூ 975/- அன்றைய விலையில். இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் ஒரு அறை நிரந்தரமாக மாமியார் வசம். வழக்கம் போல மீதி இடத்தில் எங்களின் வாசம் ஏப்ரல் 23, 2000 அன்று தொடங்கியது. என் கணவரது அலுவலக நண்பர்கள் பலரும் அருகருகே வசிக்கிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் என வந்து செல்வார்கள். 

குடியேறிய அன்று இரவு ஒரு திருடன் எங்கள் குடியிருப்பை தாண்டி பூங்காவில் குதித்து ஓட.. யாரோ பிடித்து போலீசில் ஒப்படைக்க.... விடிந்ததும் போர்க்கால அடிப்படையில் கதவு ஜன்னல்களுக்கு கிரில் கதவுகள் போட்டோம்.

பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகள் அனைவரும், காம்பௌண்டு சுவரை எட்டி குதித்து பூங்காவில் விளையாட சென்று விடுவார்கள் . என் மகள் 10 ஆம் வகுப்பு எனினும் அனைவரையும் ஒன்று சேர்ந்துக் கொண்டு விளையாடுவாள். வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா.......இந்த மா ..முடிவதற்குள் ஆள் காணாமல் போயிருக்கும்.

தென்னாட்டை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாடி முடிந்த பிறகு அன்று இரவு லட்சுமி பூஜையுடன் ஆரம்பித்து முதல் தள நண்பர் வீட்டில் (வட நாட்டவர்) கொண்டாடுவர். அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது புடவை அணிந்து செல்வோம். அவர்களே நம் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு , அழகான குட்டிப் பானையில் பொரி சக்கரை மிட்டாய் மற்றும் வெற்றிலை பாக்கினை நம் முந்தானையில் வைப்பார்கள்.

பக்கத்து வீடு [G1] எங்களின் 30 வருட நண்பரது இல்லம். எங்கள் வீடுகளின் கதவுகள் விசேஷ நாட்களில் திறந்தே இருக்கும். இரண்டு வீட்டிற்குள்ளும் எல்லாரும் புழங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.[G1  பாட்டி, பின்னாடி கதவை திறந்தே வையுங்க அப்ப தான் நான் வந்து போக வசதியா இருக்கும் என்று பேரன் கேசவ் வரை அதே பழக்கம் தான்] 

யார் வீட்டுக் குழந்தைக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்பதும் தெரியும். இன்னிக்கு என்ன சாம்பார், ரவா தோசையா, புளி சாதமா என்று பிள்ளைகள் தாங்களாகவே தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வருவார்கள். [என் மகனும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் தவறாமல் சங்கடஹர சதுர்த்திக்கு கோவிலுக்கு செல்வார்கள். பக்தி இல்லை..புளிசாதம்]



மதியம் பக்கத்து வீட்டினர் உறங்கும் வேளையில் கிரிக்கெட், டார்ட் எனப்படும் அம்பு விடுதல் போன்ற விளையாட்டுக்களை தீவிரமாக பொது சுவரில் என் மகன் பயிற்சி செய்வார் டேய்..வேணாம்டா என கதற கதற. தாத்தா செல்லம்.எந்த நேரமும் தாத்தா செய்தித் தாள் வாசிப்பதை காணலாம் வாசலில் அமர்ந்தவாறு.

மகளின் தோழி காயத்ரி, மகனது தோழன் திவாகர் தினமும் வருவார்கள். இல்லையென்றால் மகன் திவாகர் வீட்டில் இருப்பான். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது. மிக அருகில் பள்ளி இருந்தது இருவருக்கும் மிக வசதியாக இருந்தது. கடைசி நிமிடம் வரை வீட்டை விட்டு ந...க..ர மாட்டார்கள். [அம்மா வழி அனுப்பவெல்லாம் வர வேண்டாம் பொதிகைல படத்தோட கிளைமாக்ஸ் என்னன்னு பாத்து வை, வந்து கேட்டுக்கறேன்_ மகள்] 

கலைவாணரின் பாட்டு ஒண்ணிலிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் 21 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் என்று விதம் விதமாய் பாட்டுப் பாடி கிண்டல் செய்வார்கள்.

ஒரு முறை ஹெபடைடிஸ் பீ எனப்படும் காமாலை நோய் வராமல் இருக்க இருவருக்கும் தடுப்பூசி ரூ 1800 கொடுத்து போட்டு வந்த அடுத்த நாளே இருவருக்கும் ஹெபடைடிஸ் பீ தாக்கியது. தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்ணும் போன கதை தான் இருவர் மன நிலையும். ஒரு வாரம் அவர்களை சமாளிக்க நான் பட்ட பாடு...  

ஒவ்வொரு வீட்டையும் அதன் எண்ணை வைத்துக் குறிப்பிடுவது வழக்கம். என் பிள்ளைகள் எனக்கு வைத்த செல்ல பெயர் G2 அம்மன். கைல வேப்பிலை தான் இல்லை அம்மா... (ரெண்டும் சரியான வாலுங்க) 

பாட்டு, கட்டுரை, பேச்சு, பகவத் கீதை, திருக்குறள் எனப் பல போட்டிகளில் பிள்ளைகள் பங்கு பெற்று பரிசுகள் பெற்றார்கள். போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வோம். 

குடியிருப்பில் பொது சேவையும் அவ்வப்போது இடம் பெறும். 2 ஆம் தள பாட்டியாரை கோவிலுக்கு கைபிடித்து அழைத்து செல்லுதல், தெரு முனை வரை பைக்கில் அழைத்து செல்லுதல், பேருந்து நிலையத்தில் கொண்டு விடுதல், அலுவலகம் அழைத்து செல்லுதல் என யாரும் யாருக்கும் உதவுவார்கள். [S3 பாட்டியாருக்கு பாலாஜி -என் மகன் அமெரிக்கா போனது கை உடைஞ்சது போல இருக்காம்]

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், கடும் வறட்சி என எல்லா நிகழ்வுகளையும் சமாளித்திருக்கிறோம். 

ஆசிரியப் பணியின் போதும் சொந்தமாக சென்டர் நடத்திய போதும் விரிவானது நட்பு வட்டம். யார் என்ன பாடம் சொல்லி தருகிறார்களோ அவர்களிடன் அனுப்பி வைப்போம், எந்த வித போட்டி பொறாமையும் இல்லாமல்.அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

தனிமை என்ற உணர்வே தோன்றாது. காலை, மாலை வேளைகளில் வாசலில் வந்து நின்றாலே போதும். நண்பர்கள், உறவினர்கள், பழைய மாணவர்கள், அவர்கள் பெற்றோர்கள், அண்டை அயலார் என 10 பேரையாவது காணலாம். பக்கத்தில் கடைகள், வங்கிகள், தபாலாபீஸ், பேருந்து நிலையம், உணவகங்கள், வடபழனி பஸ் நிலையம், தியேட்டர்கள், தற்சமயம் மால்கள் என வசதிக்கு குறைவில்லாதது எங்கள் எம் ஜி ஆர் வீடு. 

இன்று எம் ஜி ஆர் வீட்டுக் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து பள்ளி கல்லூரி வேலை திருமணம் குழந்தைகள் என இருக்கிறார்கள். நட்புடன். 

காலம் மாறிப் போச்சு....

பின் குறிப்பு : முதல் பதிவு எம் ஜி ஆர் வீட்டை சினிமாத் துறை எந்த அளவுக்கு இரண்டறக் கலந்திருக்கிறது இருக்கிறது என்பதாக மட்டும் இருந்தது. இந்தப் பதிவில் எங்களின் வாழ்க்கை முறை உள்ளது. ஆட்டோக்காரரிடன் கோவிலையோ பூங்காவையோ அடையாளம் சொல்வதை விட விஜய் வீட்டு தெரு என்றால் வேலை சுலபம். 


WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...