சிறு வயது முதலே வீட்டிற்கு யார் வந்தாலும் , முதலில் பார்ப்பவர்கள் வரவேற்று , அமர சொல்லி, தண்ணீர் தந்து உபசரித்து விட்டு பின்பே பேச ஆரம்பிக்க வேண்டும் என்பதே நமக்கு சொல்லித் தரப்பட்ட நல்ல பழக்கம்.
அதன் தொடர்பான என் சில பல அனுபவங்கள் இங்கே இதோ ::
இது ஒரு வகை :
(1)சமீபத்தில் ஒரு உறவினர் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அனைவரின் நலம் விசாரித்து முடித்து (அவர்களது மகளுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்) எங்களின் பேச்சு கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் நீடித்து ஒரு வழியாக கிளம்பும் சமயம், உங்கள் மகள் தோழிகளுடன் படிக்க சென்றிருக்கிறார்களா என்று கேட்ட போது , இல்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றார்கள். (முதல் அதிர்ச்சி) கேட்ட பின்பும் அவரது தாயார் தம்முடைய மகளை பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியில் வரச் சொல்லவில்லை.
(2)மற்றொரு உறவினர் வீடு. பல மாதங்கள் முன்பு. அவரது மகன் (உயர்படிப்பு படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்பவர்) வந்திருப்பதாகக் கூறி பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்ததால், என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த மகனாரோ தம்முடைய கைபேசியை தடவுவதை நிறுத்தவும் இல்லை(டச் போன்) தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. அவரது தாயாரும் மகனிடம் எதுவும் சொல்லவில்லை.
(3)ஒரு இளம்பெண், தம்முடைய (இது அமெரிக்க அனுபவம்) ஒரு வயது மகளுக்கு தன்னுடைய பெற்றோருடன் தினமும் பல மணி நேரங்கள் பேச வைப்பார். தம்முடைய கணவரது பெற்றோருடன் அவர்களுக்கு கணினியை இயக்கத் தெரியாமல் இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் மகளை பேச வைக்கலாம். ம்ஹூம்... அப்படி உறவினர்கள் இருப்பது போன்ற பேச்சையே எடுக்க மாட்டார் மகளிடம்.
(4)பல வருடங்கள் முன்பு உறவினரது 4 வயது குட்டிப் பையன் அத்தை நாங்க நேத்து எங்க ..... தாத்தாவையும் பாட்டியையும் தனிக்குடித்தனம்
வைச்சிட்டு வந்தோம் என்றார். இவர்கள் அந்த குடும்பத் தலைவரது பெற்றோர்.
இது வேறு வகை :
(1)தோழியின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அவரது மகள் சற்று முன்பு தான் தோழியின் இல்லம் சென்று திரும்பி இருப்பதாகக் கூறினார். 5 நிமிடங்கள் ஆனதும் தோழி தம்முடைய கணவரிடம் மகள் இன்னும் ஏன் வெளியில் வரவில்லை, அழைத்து வாருங்கள் என்று மகளை வரவழைத்து பேச வைத்தார். (அதிகம் இல்லை நலம் நலமறிய ஆவல் தான்)
(2) 4 வயது ஹர்ஷா (சகோதரர் மகன் ) வாங்கத்தே உக்காருங்கத்தே தண்ணி குடிக்கறீங்களா அத்தே கிளம்பிட்டீங்களா அத்தே அப்ப போயிட்டு வாங்க அத்தே என்று கற்ற வித்தை முழுவதையும் ஒரு சேர அவிழ்த்து விட்டார் ஒரு முறை (தற்சமயம் 9 வயது)
எங்களின் வளர்ந்த பிள்ளைகள் சொல்வது "சின்ன வயசுல கட்டாயப் படுத்தி வெளில வர சொல்வீங்க அப்ப கோவமா வரும், ஆனால் இப்ப தான் அது
எத்தனை நல்ல பழக்கம்னு புரியுது"
வீட்டிற்கு வருபவர்களை சந்திக்கும் சில நிமிடங்களை மூலதனமாகக் நினையுங்கள். எல்லா உறவுகளையும் , நட்புகளையும் அறிமுகப் படுத்துங்கள். சிறு பிள்ளைகள் பதின்ம வயதில் யாருடனும் பழக விரும்புவதில்லை. சொல்லி புரிய வையுங்கள். அந்த வயதில் நான் ஏற்படுத்தும் இந்தப் பழக்கம் அவர்களின் பிற்காலத்தில் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. பிள்ளைகள் வர மாட்டார்கள் என்று பெரியவர்களே தங்கள் வசதிக்கு சொல்லிக் கொள்வதே அதிகம்..
நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து , வீட்டிற்கு ஒரிரு பிள்ளைகள் என்றாகி விட்ட இந்தக் கால கட்டத்தில் , பெற்றோரின் முக்கிய கடமை சொத்து சேர்ப்பது மட்டுமில்லை, பிள்ளைகளுக்கு உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தருவது தான்.
இது அம்மாக்களுக்கு மட்டும் இல்லை ... அப்பாக்களுக்கும் தான்...